Tuesday, March 30, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!– கிறேசியன்! (பாகம் -22)

இரண்டு நாட்கள் தொடர்ந்து காலையில் வந்து அனைவருக்கும் அடித்தார்கள். மூன்றாவது நாள் புதிதாகச் சில சகோதரர்களைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ சேர்ந்த 4பேர் ஈ.என்.டி.எல்.எப். ஐ சேர்ந்த ஒருவரும், ஆதரவாளர் ஒருவரும், டெலொ இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். இவர்கள் தவிர போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நடராஜ் என்பவரும் இருந்தார்.

நடராஜ் அவர்கள் நடக்கும் போது தனது வலது கையை முழுங்காலில் ஊன்றி அந்தக் காலை அதே கையால் தூக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குப் பயன்படுத்துவார். வலது கையை வலது காலால் இறுகப் பிடிக்காமல் அவரால் நடந்து போக முடியாது. வலது காலில் சதை எதுவும் இல்லை. வெறும் எலும்பும் தோலும்தான் இருக்கும். அவரால் நிமிர்ந்து நிற்கவோ, நிமிர்ந்து நடக்கவோ முடியாது! இவர்கள் அனைவருக்கும் விலங்குகள் இடப்பட்டிருந்தன. நடராஜ் அவர்களுக்கு மட்டும் கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. கால்களில் போட்டால் அவரால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

இப்படி கொண்டுவரப்பட்டவர்களில் எனது இயக்கத்தைச் சேர்ந்த ஜோன்சன் முக்கியமானவர் இவர் கிளிநொச்சி ஈ.என்.டி.எல்.எப் முகாமின் மருத்துவப் பொறுப்பாளராக இருந்தவர். படித்த புத்திசாலியான சகோதரர் ஆவார். எம்மவரைப்பற்றி விசாரிப்பதில் இருந்த ஆவலை விட அந்த போலியோவால் பாதிக்கப்பட்ட நடராஜ் அவர்களை ஏன் பிடித்து வந்தார்கள் என்பதை அறியவே எனக்கு ஆவல் மிகுதியாக இருந்தது. அன்றைய தினம் யாருடனும் கதைக்க முடியவில்லை. மறுநாள் மதிய உணவுக்குப் பின் கதைக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தேன்.

மறுநாள் பத்துப் பேர் கொண்ட புலி விலங்குகள் வந்தனர். புதிதாக வந்த அத்தனை பேரையும் வெளியே வரும்படி பணித்தனர். ஒவ்வொருவராக வெளி செல்ல வாசலில் வைத்தே அடிக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடியுடன் அனைவரும் கீழே விழுந்தனர். காரணம் காலில் விலங்கு இருந்தபடியால் அனைவரும் கீழே வீழ்ந்தனர். புலி விலங்குகளுக்கு இது சுலபமாக இருந்தது அடிப்பதற்கு அவர்களும் வியர்த்துக் களைப்படையும் வரை அடித்தார்கள்.

இறுதியாக நடராஜ் அவர்கள் தாங்கி தாங்கி கதவோரம் நின்றுகொண்டிருந்தார். அவரை ஒரு விலங்கு பிடித்து இழுத்துத் தள்ளியது. அவர் கீழே விழுந்ததும் ஓர் கட்டையால் அடிக்கத் தொடங்கினார் அந்தப் புலி விலங்கு. அவரது உடலில் சதைப் பிடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இதனால் அவரது பின்புறம் மற்றும் மார்பு பகுதியில் தான் அடித்தார் அந்தப் புலிவிலங்கு! நடராஜ் அவர்கள் வலி தாங்காமல் அலறத் தொடங்கினார். ஏனடா அடிக்கிறாய் நாயே! என்று திரும்பத் திரும்ப சத்தமாகக் கத்தினார்.

அவர் ஓர் வலது குறைந்தவராக இருந்தாலும் மன உறுதி மிக்கவராக இருந்தார். இவருக்கு வயது ஏறக்குறைய 45க்கு மேல் இருக்கும். எங்களால் கேட்க முடியாத, கேட்கத் தோன்றாத கேள்விகளைக் கேட்டார் நடராஜ் அவர்கள். “வம்பில் பிறந்த நாயே ஏனடா அடிக்கிறாய்” என்று இவர்களது முகாம் அதிருமளவுக்கு நடராஜ் அவர்கள் கேட்டார். இந்தக் கொலைக்கள முகாமில் பொறுப்பாக இருந்த கௌதமன் காதில் இது விழுந்தது. வந்தார் கௌதமன். அவர் ஓர் கால்சட்டையும் பெனியனும் அணிந்து கொண்டு ஓர் ஒஸ்லோன் பைப்பைக் கையிலெடுத்தார். கூடவே துணைக்கு மஞ்சு என்ற விலங்கையும் அழைத்தார்.

வேட்டித்துண்டு கொண்டு வா என்று ஒருவரிடத்துக் கூறினார் கௌதமன். துணி வந்ததும், ஒரு தடியை எடுத்து நடராஜ் அவர்களின் வாயினுள் சொருகினார். பின்னர் எடுத்து வந்த துணியின் பகுதியைக் கிழித்து நடராஜ் அவர்களின் வாயினுள் திணித்தார். அதன் மேல் மறு துணியால் வாயைச் சுற்றிக் கட்டினார்.

பின்னர் ஒஸ்லோன் பைப்பால் அடிக்கத் தொடங்கினார். மஞ்சுவையும் அடிக்கச் சொன்னார் கௌதமன். நடராஜ் அவர்கள் உருண்டு உருண்டு கத்துகிறார். அவரது அலறல் ஓசை இப்போது மூக்கு வழியாக வருகிறது. துணியால் அடைத்திருந்தாலும் அதனையும் மீறி வாய் ஓரமாக சத்தமிடுகிறார் நடராஜ் அவர்கள்.

கௌதமன் சத்தம் போடுகிறார், “டே, சத்தம் போடாதே! டே சத்தம் போடாதே” என்று அடிக்கும் போதும் நடராஜ் அவர்கள் நிறுத்தவில்லை. இவர்கள் அடிக்கும் போது அவர் கீழே கிடந்து சுழன்று இவர்களைத் திட்டுகிறார். என்ன சொல்லித் திட்டுகிறார் என்பது விளங்கவில்லை. மூச்சுத் தினறுவதைப் போன்ற சத்தம் மட்டும் எங்களுக்குக் கேட்கிறது.

அவ்வளவு அடிகளை வாங்கியும் நடராஜ் அவர்கள் சத்தமிடுவதை நிறுத்தவில்லை. புலி விலங்குகளாலும் அவரது ஒலியை நிறுத்த முடியவில்லை. நடராஜ் அவர்களிடம் புலிகள் தோற்றனர். கௌதமன் களைப்படைந்து விலகிச் சென்றார். புதிதாக வந்தவர்களில் மிக அதிகமாக அடிவாங்கியவர் நடராஜ் அவர்கள்தான்.

நேரம் மதியத்தைத் தாண்டியது. உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. அப்போது நடராஜ் அவர்களின் வாய்கட்டும் அவிழ்க்கப்பட்டது. நடராஜ் கத்தினார், டேய், பெனியன் போட்ட நாயே, பினந் தின்னி நாயே, வாய்க்குள்ள துண்டுவைச்சா அடிக்கிறாய்! சொறி நாயே! ஒரு அப்பன் ஆத்தைக்குப் பிறந்திருந்தால் எனக்கு இந்த வேலை செய்வியா? இப்படியாக பலதரப்பட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார் நடராஜ் அவர்கள். இதைக் கேட்ட கௌதமன் மீண்டும் ஓர் தடியுடன் ஓடிவந்து நடராஜ் அவர்களின் முதுகில் அடித்தார். நடராஜ் அவர்கள் விடவில்லை!

நாசமாப் போறவனே ஏன்ரா அடிக்கிறாய்! நடராஜ் அவர்களின் கேள்வி நியாயமானது ஏன் அடிக்கிறீர்கள்? எதையாவது கேட்டிருக்க வேண்டும் அவரிடத்தில்! எதுவுமே கேட்கவில்லை! அப்படியாயின் ஏன் அடிக்கிறீர்கள்! இந்தக் கேள்விக்குப் பதிலும் அடிதான்! எனவே நடராஜ் அவர்கள் தனது கேள்வியை நிறுத்தவில்லை! நடராஜ் அவர்களின் கால் மட்டும் தான் ஊனம், அவரது மனது உறுதியானது, புலிகளுக்கு மனம் ஊனமானது, உடல் பலமானது.

துணுக்காயிலும் சரி, யாழ்ப்பாணத்திலும் சரி இவர்களது கொடுமைகளை நேரில் பார்த்துள்ளேன். நடராஜ் அவர்கள் கேட்ட கேள்விகள் போன்று பாதிக்கப்பட்ட யாரும் கேட்கவில்லை! இதனால் அவர் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. இவர்கள் செய்துவிட்ட சித்திரவதையை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இயற்கை அவருக்கு ஓர் விசித்திர மன உறுதியை வழங்கியிருக்கிறது.

நடராஜ் அவர்களின் கேள்விகளால் புலி விலங்குகள் பெரிதும் அவமானப்பட்டிருந்தனர். மூன்று நாட்களாக புலி விலங்குகள் எங்களை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தனர். ஒரு முடவன் இப்படிக் கேள்வி கேட்டுவிட்டானே! அதிலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்தி விட்டானே என்பது இவர்களது வருத்தமாக இருந்தது. அதிலும் தலைவரான கௌதமனாலும் முடியாமல் போனது பெருத்த அவமானம் என்றும் நொந்து போயிருந்தனர்.

பிற்பகலில் அனைவரையும் வீட்டினுள் போட்டுப் பூட்டினர். இப்போது எங்கள் பகுதியின் ஹீரோ நடராஜ் அவர்கள்தான். உள்ளே இருந்தவர்கள் நடராஜ் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவரது உடல் முழுவதும் வின்ரோஜன் போட்டுத் தேய்த்துவிட்டனர். “சரியாத்தான் அடிச்சுப் போட்டாங்கள்” என்று கூறினாரே தவிர இந்தச் சித்தரவதையால் அவர் மனம் தளர்ந்தவராகத் தோன்றவில்லை! இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்பதுதான்.

தொடர்ந்து மூன்று நாட்களாக எங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லை. நான்காவது நாள் காலையில் இருபது பேர்வரை வந்தனர். புதிதாக வந்தவர்களையும், பழையவர்களையுமாக 10பேர் வரை வெளியே எடுத்தனர். கௌதமனது விசாரணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். வாசலில் வைத்தே கைகளுக்கும் விலங்குகளைப் பூட்டினர். விசாரணைப் பகுதிக்குச் சென்ற சிறிது நேரத்தில் சகோதரர்களது அபயக்குரலும் அலறல் சத்தமும் கேட்டது.

இருபதுபேர் கைகால்களுக்கு விலங்கிட்டவர்களைத் தாக்குகின்றனர். அவர்களது அலறல் சத்தம் என்னை மீண்டும் கடவுள் பக்கம் இழுத்துச் சென்றது. “ஆண்டவரே இந்தச் சகோதரர்களைக் காப்பாற்றும். இந்த மிருகங்களுக்கு நல்லதோர் அறிவினைக் கொடும்” என்று மீண்டும் மீண்டும் வேண்டுதல் வைத்தேன். எங்களது நிலையில் இந்த வேண்டுதலைத் தவிர வேறு யாரும் துணைக்கு வரப்போவதில்லை.

எனக்கு அடிவிழும் போது ஏற்படும் வலியைவிட ஏனைய சகோதரர்களுக்கு அடிக்கும் போது அவர்கள் வலியால் துடித்து எழுப்பும் வலியின் ஒலியைச் சகித்துக்கொள்ளவே முடியாது. எனவேதான், “இறைவனே எம் சகோதரர்களைக் காப்பாற்றும்” இந்த விலங்குகளுக்கு தண்டனையுடன் புத்தி புகட்டும் என்று வேண்டிக்கொண்டேன். இந்த வேண்டுதல்களால் இறைவன் உடனடியாக இறங்கி வந்து இந்த இளைஞர்களைக் காப்பாற்ற வில்லை. ஆயினும் “தெய்வம் நின்று கொல்லும்” என்பதை பின்நாளில் நாம் கண்டோம்! வாழ்க்கை என்பது மரணத்தின் தயவில் நடப்பது!

பிற இயக்க அங்கத்தினரை அடிப்பது ஓர் கலை என்று நினைத்துக் கற்று வந்தனர் புலிவிலங்குகள். அவர்கள் கற்றுக்கொள்வதற்கான உபகரணங்கள்தான் ஏனைய தமிழ் இளைஞர்கள் ஆவர். கொடுமையினாலும் கோரக் கொலைகளினாலும் தமிழ் மக்களுக்கு விடுதலையைக் காண்பிக்கப் புறப்பட்டவர்கள்தான் புலிகள். புலிகளைக் கண்டு அனைவரும் அச்சமடைய வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு பெருமை அடைய வேண்டும், அவை மூலம் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளை வந்தடைய வேண்டும். இந்தக் கொள்கைக்கு எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் முன்டியடித்து ஆதரவு கொடுத்தனர். இந்த ஆதரவு அவர்களை மேலும் மேலும் கொடுமையை செய்யத் தூண்டியது!

இருபது புலிவிலங்குகளால் அடித்துத் துவைக்கப்பட்ட அத்தனை பேரும் மீண்டும் நாங்கள் இருந்த வீட்டுப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டனர். சிலருக்கு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சிலர் நடக்க முடியாமல் வந்தனர். மதியம் என்றபடியால் சிறிது நேரத்தில் உணவுப் பார்சல் வந்தது. வின்ரோஜன் தீர்ந்திருந்தபடியால் அடிபட்ட இடங்களுக்குத் தண்ணீர் ஊற்றி கண்டிப்போன இடங்களைத் தேய்த்துவிட்டனர் ஏனையவர்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த விலங்குகள் அந்தப் பத்துப் பேரின் கைவிலங்குகளைக் கழற்றி விட்டனர். ஆயினும் அவர்கள் யாரும் மதிய உணவு உண்ணவில்லை. வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

ஒரு சகோதரருக்கு இடது காலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடராஜ் அவர்கள் தவழ்ந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் புலி விலங்குகளைப் பார்த்து, “நாசமாய் போவாங்கள், கட்டையில போவாங்கள், பாம்பு கடித்துச் சாவாங்கள், பனையால விழுந்து சாவாங்கள்” என்று தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். புலி விலங்குகளின் காதுகளில் இந்த வசைச் செய்திகள் விழுந்தும் யாரும் நடராஜ் அவர்களைத் தாக்குவதற்கு உள்ளே வரவில்லை! காரணம் தலைவர் கௌதமனால் முடியாத காரியத்தை தங்களால் எப்படி முடியும் என்ற தன்நம்பிக்கைக் குறைவுதான்.

அன்று இரவு உறங்குவதற்கு முடியவில்லை, தாக்குதலுக்கு உள்ளான சகோதரர்கள் முனகிக் கொண்டே இருந்தனர். வின்ரோஜன் தடவியிருந்தால் வலி குறைவாக இருந்திருக்கும். தண்ணீர் ஊற்றி தேய்த்த இடங்களில் வலி அதிகரித்pருக்கும் என்று தோன்றியது!
அடுத்த இரண்டு நாட்களும் காலையில் வந்து அனைவருக்கும் ஒரு றவுண்டு கட்டையினால் அடித்துவிட்டுச் சென்றனர். எனக்கு முதுகில் மட்டுமே அடித்தார்கள். அன்றைய தினம் விசாரணைக்கென்று யாரையும் வெளியே எடுக்கவில்லை என்றதால்தான் இந்த மாதிரி உள்ளே வந்து அனைவரையும் தாக்கிவிட்டுச் செல்வார்கள். இப்படி அடித்துவிட்டுச் சென்றால் இனிமேல் இன்றைக்கு யாரையும் எடுத்துச் சித்திரவதை செய்யமாட்டார்கள் என்று அனைவரும் நிம்மதி அடைவோம்.

இரண்டாவது நாள் பூசை (அடி) முடிந்ததும், நடராஜ் அவர்களை அழைத்தேன்.

தொடரும்…

2 comments :

ranish1@hotmail.fr ,  March 30, 2010 at 12:11 PM  

anna kiresiyan unkal kasrathilum vidivevu pakidium ganpakam varuthu. athavathu marupadium muthalil iruntha. enathu sakotharin makanum ltte siththiravathai seithuthan seththavar.yalppana melathikkam than untha naikalai intha alavukku valarthathu.

yaalavan March 31, 2010 at 12:49 AM  

நீங்கள் 87-90 வரை இந்திய இராணுவதுடன் சேர்ந்து அப்பாவி பொதுமக்களுக்குசெய்த சித்திரவதய விடவா புலிகள் உங்களுக்கு தண்டனை தந்தார்கள்? எனியும் சொந்த இனத்தை காட்டி கொடுத்தா இத விட மோசமா தண்டிக்க படுவீர்கள் கவனம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com