Wednesday, March 24, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -18)

அம்மா ஆரம்பித்தார், தம்பி நானும் உன்ர அக்காவும் அவங்கட ஒப்பீஸ் வாசலுக்குச் சென்று நிக்காத நாளே கிடையாது. உன்னை கூட்டிச் சென்ற அன்றே நாங்கள் எல்லாரும் அவங்கட ஒப்பீசுக்கு ஓடிச் சென்றோம். தொடர்ந்து ஒரு வருசமாக காலம்பிற சாப்பாட்டுடன் போனால் இரவு ஏழுமணிக்குத் தான் வீட்டுக்கு வருவோம். ஒருத்தன் ஒரு கதை சொல்வான். பொய் சொல்லி ஏமாற்றுவதற்கென்றே அங்க ஆக்கள வச்சிரிக்கினம்.

ஊரில் ஒருவர் பாக்கி இல்லை! ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரை கூட்டிக்கொண்டு போவேன். இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் உங்களையும் சுட்டுப்போடுவேன் என்று ஒரு பொடியன் பயமுருத்தினான். உங்களையும் சுட்டுப் போடுவேன் என்று சொன்னபடியால், தம்பி உன்னையும் சுட்டுப்போட்டாங்களோ என்று அக்கா கத்தத் தொடங்கிவிட்டாள். என்ர மகன் செத்திருக்கமாட்டான். உயிருடன்தான் இருப்பான், நீ சத்தம் போடாத என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன் என்று கூறி அழுவதற்கு ஆரம்பித்தார்.

ஒரு வருடம் தினமும் அவர்களது அலுவலகத்துக்குச் சென்று வந்த எனது தாயார், பின்னர் வாரம் ஒருமுறை அவர்களது அலுவலகம் சென்று என்னைப்பற்றி விசாரித்து, நான் இருக்கிறேனா இல்லை இறந்துட்டேனா என்பதைக் கூறும்படி வற்புறுத்திக்; கேட்டுள்ளார். ஆயினும் அந்த விலங்குகளிலிடமிருந்து எந்தவிதப் பதிலையும் அம்மாவால் பெறமுடியவில்லை.

ஆயினும் எனது குடும்பத்தார் பல வழிகளிலும் புலி விலங்குகளுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அதுவுமல்லாமல் எனது ஊராரும் தங்கள் பங்குக்கு புலிகளின் அலுவலகம் சென்று பல்வேறுபட்ட தொல்லைகள் கொடுத்தன் விளைவாகத்தான் நான் விடுவிக்கப்பட்டேன். என்னைக் கொன்று விட்டதாகத் தகவல் தெரிந்தால் புலிகள் எங்கள் ஊருக்குள் வந்து செல்வது சிரமமாக இருந்திருக்கும். இதை உணர்ந்துதான் விடுவிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

நான் இரண்டு நாட்களாக வெளியில் எங்கும் செல்லவில்லை. மூன்றாம் நாள் சைக்கிள் ஒன்றினை எடுத்துக்கொண்டு அப்பையா அண்ணன் வீட்டுக்குச் சென்றேன். கொட்டடியில் அவரது வீடு, வீட்டைச் சுலபமாகக் கண்டுபிடித்தேன். எனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும் உள்ளே அழைத்தார், அப்பையா அண்ணனின் மனைவி.

வீட்டின் உள்ளே சென்றதும் அப்பையா அண்ணனின் உருவப் படத்தின் மேல் மாலை போட்டு விளக்கேற்றி வைத்திருந்தனர். அதைப்பார்த்ததும் எனக்கு எந்தவித அதிர்ச்சியும் எற்படவில்லை. காரணம் பல இளைஞர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை புலி விலங்குகள் கொன்று விட்டனர் என்று நம்பி இருந்தனர். அப்பையா அண்ணன் உயிருடன்தான் இருக்கிறார். உங்களிடம் கூறும்படி என்னிடம் சொன்னார். 18 மாதங்கள் நான் அவருடன் தான் இருந்தேன் என்றெல்லாம் கூறியும் அவர்கள் நம்புவதற்கு சிரமப்பட்டார்.

காரணம் அப்பையா அண்ணனைப் பிடித்துச் சென்ற மறுநாள் இரண்டு புலி விலங்குகள் வீட்டுக்கு வந்து அவரது சறம் மற்றும் சேட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றனராம். அதனால் புலிகள் அவரைக் கொன்று விட்டனர் என்று நம்பி அவரது இறப்புக்கான அனைத்துச் சடங்குகளையும் முடித்திருந்தனர்.

இவ்விதம் பலரது வீடுகளுக்கும் சறம், சேட் அனுப்பி அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை புலி விலங்குகள் பரப்பி வந்தனர். துணுக்காயில் பலர் வெறும கால்சட்டையுடன் இருந்தனர். எனவே அவர்களது சறங்களை உருவி அவர்களது வீடுகளுக்குக் கொடுத்து அந்த இளைஞரது பெற்றோரை மரண வீடு கொண்டாட வைத்துள்ளனர் புலிகள் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் இது போன்றதோர் பழக்கத்தினை ஏற்படுத்திய புலிகள், இதன் மூலம் பொதுமக்கள் அழுது புரண்டு துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ந்துள்ளனர். பிறரது துன்பங்கள் இவர்களை மகிழ்வித்துள்ளது. இது போன்ற மகிழ்ச்சி மனநோயாளிகளுக்குத்தான் ஏற்படும். புலிகளும் கொலை வெறிகொண்ட மனநோயாளிகள்தான் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை!

அப்பையா அண்ணனின் வீட்டில் அவரது மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் இருந்தனர். அவர்களது வேதனையில் பங்குகொண்டுவிட்டு நேராக ஜேக்கப் அண்ணனது வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவரது மனைவி இரண்டு மகள்கள் மட்டும் இருந்தனர். இவரது வீட்டில் புகைப்படம் எதுவும் மாட்டபட்டிருக்கவில்லை. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது விபரங்களைக் கூறினேன். நான் சொல்வதை அவர்கள் நம்பினார்கள். அவர்களது வீட்டுக்கு ஏதாவது உதவி செய்யக் கூடிய அளவு எதுவும் என்னிடம் இருக்கவில்லை. அவரது மகள் ஒருவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவராகக் காணப்பட்டார். நான் அவர்களது வீட்டைவிட்டு வெளியேறும் வரை அவர் அழுது கொண்டே இருந்தார்.

இங்கிருந்து நேராக செட்டிவீட்டுக்குச் சென்றேன், யாழ்ப்பாணம் கெனடி வீதியில் இருந்தது. இப்படித் தொடர்ந்து மூன்று நாட்களாக என்னுடன் இருந்த அந்தச் சகோதரர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஆறுதல் கூறிவந்தேன். அனைத்து வீடுகளிலும் கண்ணீர் கரை புரண்டது. அந்த மக்கள் விடுதலையை விரும்பினர். புலிகளோ பதவியையும் அதிகாரத்தையும் விரும்பினர். அதிகாரம் சிலகாலம் ஆட்சி செய்தது. மக்கள் அங்கே அடிமையானார்கள்.

ஒரு வாரம் கழிந்தது. என்னைப் பார்ப்பதற்காக எனது உறவினர் ஒருவர் வந்தார். அவர் ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டுச் செல்லும் போது, தம்பி நீ எங்கும் செல்ல வேண்டாம், எனது வியாபாரத்தைக் கவனிக்க சரியான ஆள் யாரும் இல்லை. கணக்கு வழக்கு எழுத காசுகளைக் கையாள நீ வந்தால் நல்லாயிருக்கும். நல்லா யோசித்துவிட்டு திங்கள் கிழமை காலையில் சந்தைக்கு வா என்று கூறிவிட்டுச் சென்றார்.

நானும் அம்மா, அக்காவிடம் கதைத்துவிட்டு, அவர் கூறிய திங்கள் கிழமை யாழ்ப்பாண மீன் மொத்த வியாபாரச் சந்தைக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் என்னை அழைத்து கணக்குகள் எழுதவும், ஏலம் விட்டு வரும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார். தொடர்ந்து மூன்று மாதங்கள் அவர் கொடுத்த வேலையைச் சரிவரச் செய்து வந்தேன். சம்பளம் எதுவும் நான் பெறவில்லை. ஆயினும் எனக்கு வேண்டியவற்றை அவர் செய்து கொடுத்தார். ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஒன்றரைப் பவுணில் ஓர் தங்கச் சங்கிலி வாங்கிக் கொடுத்தார். எனக்கும் அவர் மீது மதிப்புக் கூடியிருந்தது.

நான்காவது மாதம் ஒரு நாள் யாழ். சந்தையில் மீன் மொத்தமாக ஏலம் கூறப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பகல் பதினொரு மணியளவில் இரண்டு நபர்கள் இரண்டு சைக்கிளில் வந்தனர். சற்றுத் தள்ளிநின்று என்னைக் கவனித்தனர். அவர்களைப் பார்த்ததும் கணக்கிட்டேன். வந்திருப்பவர்கள் புலி விலங்குகள் என்று! ஏனென்றால் பொதுமக்களின் முகங்களுக்கும் புலி விலங்குகளின் முகங்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. புலிகளின் முகங்களில் கொலை வெறியும் கொடூரமும் தாண்டவமாடும். தீய செயல்களைச் செய்து அவர்களது முகங்கள் சமூகத்திலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிக்கும். அதிலும் உளவுத்துறையில் இருந்தவர்களது முகங்கள் பளிச் சென்று காட்டிக் கொடுத்துவிடும். ஏனென்றால் திருடர்கள் போன்று ஒவ்வொருவரையும் பார்ப்பது, பின்னர் அவர்களைச் சித்திரவதை செய்வது, அதன் பின்னர் அவர்களை கொடூரமாகக் கொலை செய்வது இதுவே அவர்களது தொழிலானதால் அவர்களது முகங்கள் மாறுபட்டுக் காணப்படும்.
எனவே வந்திருந்து நோட்டம் விடும் நபர்களை நானும் கவனித்துக்கொண்டு, வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அரைமணி நேர ஒட்டு வேலைக்குப் பிறகு அருகில் வந்தனர் இருவரும். வந்தவர்கள் “அண்ண உங்களுடன் கதைக்க வேண்டும், கொஞ்சம் தள்ளி வாருங்கோ” என்று மரியாதையாகக் கேட்டனர். சந்தையில் சத்தம் அதிகமாக இருந்ததால் நானும் சற்றுத் தள்ளிச் சென்றேன்.

அவர்கள் தொடர்ந்தனர், “ அண்ண, உங்களுக்கு குமார் என்று யாரையும் தெரியுமா? என்றனர். முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றேன். நாங்கள் நல்லூரடியில் இருந்து வருகிறோம். குமார் என்று ஒருவரைப் பிடித்துவைத்துள்ளோம், அவர் உங்களைத் தெரியும் என்கிறார். அதனால் நீங்கள் வந்து அவரைப் பார்த்துச் சொன்னால் நாங்கள் விட்டுவிடுவோம். ஒரு மணித்தியாலத்தில் வந்துவிடலாம் என்றனர். அதற்கு, அப்படி குமார் என்று யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறினேன். அவர்ள் மறுபடியும், இல்லை, அவருக்குத்தான் உங்களைத் தெரியுமாம் நீங்கள் அவரைப்பார்த்து தெரியும் என்று சொன்னால் அவரை விட்டுவிடுவோம். ஆப்படி இல்லை என்றால் அவரை வீணாகக் கொல்லத்தான் வேண்டும் என்றனர்.

நாம் இப்படித் தனியாக நின்று பேசுவதைக் கவனித்த எனது உறவினரான முதலாளி என்னருகில் வந்து விபரம் கேட்டார். இவர்களது கூற்றை அப்படியே சொன்னேன். அவரும் நீங்கள் போய் பார்த்துச் சொல்லிவிட்டு வாருங்கள் என்றார்.

என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்றால் அதை நான் கண்டிப்பாகச் செய்வேன். எனவே கையிலிருந்த அறுபதினாயிரம் ரூபாயை முதலாளியிடம் கொடுத்தேன். அவரோ வேண்டாம், நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நானோ வற்புறுத்திக் காசை அவரிடத்தில் திணித்துவிட்டு புறப்பட்டேன்.

தொடரும்…......

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com