Wednesday, March 24, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -16,17)

ஒருநாள் மாலைப் பொழுதில் பத்துப்பதினைந்து புலி விலங்குகள் ஓர் குழியை நோக்கிச் சென்றனர். அந்தக் குழியில் புளொட் ஆதரவாளர் ஒருவர் இருந்தார். அவர் ஆறு ஏழு நாட்களாக வெளியே வராமல் இருந்தார். அவருக்கு ஏதோ உடல் பாதிக்கப்பட்டுள்ளது போலும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் புலிகள் அவரது குழியை நோக்கிச் செல்வதைக் கண்டு நானும் உன்னிப்பாகக் கவனித்தேன்.

உள்ளே இறங்கிய விலங்குகள் போர்வையால் சுற்றப்பட்ட உடல் ஒன்றை வெளியே கொண்டு வந்து ஓர் வாகனத்தில் ஏற்றி வெளியே கொண்டு சென்றனர். நான் இங்கு வருவதற்கு முன்னர் இதுபோன்று இருவரை போர்வையால் சுற்றி கிடங்கிலிருந்து வெளியே எடுத்துச் சென்றதாக எனக்கு அருகில் இருந்த அருமைநாதன் என்பவர் கூறினார்.

என்னை இவர்கள் பிடித்து வந்து 17 மாதங்கள் முடிந்திருந்தன. இந்தக் கால கட்டத்தில் தீபாவளி, நத்தார் மற்றும் ஓர் இவர்களது விசேச தினத்தில் மட்டுமே மாட்டு இறைச்சிக் கறி வழங்கினர். இவை போக இத்தனை மாதங்களிலும் அவர்கள் வழங்கிய இரண்டு நேர உணவான பாணும், சோறும்தான் எங்களது உணவாக இருந்தது.

நான் வரும் போது இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர். அந்த இடங்களுக்குப் புதியவர்களை கொண்டு வந்திருந்தனர். இந்த பழைய சகோதரர்களும் எடைகுறைந்து பலதரப்பட்ட நோய்வாய்களுடன் அவதியுற்று வந்தனர். அங்கு இருந்த மருந்து ஆஸ்பிரின், பனடோல், டிஸ்பிரின், மூவ், வின்ரோஜன் மற்றும் காயத்துக்குப் போடும் மருந்துகளைத் தவிர வேறு எந்தவித மருந்துகளும் அங்கு கிடையாது. தகுதியுற்ற மருத்துவர் ஒருவர் கூட அங்கு வந்தது கிடையாது. யாரும் மருத்துவர் வேண்டும் என்று கோரியதும் கிடையாது. காரணம் நோய்வாய்பட்டென்றாலும் இறந்துவிடுவது நல்லது என்று நினைத்துக்கொண்டனர் அங்கிருந்தவர்கள்.

இந்தப் பதினெட்டு மாதங்களில் எனது காலில் பூட்டப்பட்டிருந்த சங்கிலி விலங்கு தொடர்ந்து இரு கால்களிலும் உரசியதில் ஒருபக்கத்தில் புண்ணும், இன்னொரு பக்கத்தில் சங்கிலி அண்டியதில் தடித்தும் கறுத்தும் உனர்வின்றி இருந்தது. நான் உடுத்தியிருந்த சறம் நொந்து நூளாகி தனது தடிப்புத் தன்மையை இழந்து, பன்னாடை போல் தோற்றமளித்தது. இரவில் அதுதான் எனக்குப் போர்வை, காலையில் அதுதான் முகம் துடைக்கும் துவாய். குளித்தப்பின்னரும் அதுதான் ஈரத்தை உறுஞ்சி எடுக்கும் சாதனம். இப்படிப் பல வகையான உதவிகளைச் செய்து என் மானத்தையும் காப்பாற்றியது. ஒரு சறம் தனது வாழ்நாளில் இரவு பகலாக தொடர்ந்து 18 மாதங்கள் உழைத்தது என்றால் அந்த கிப்சறத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்போது கூட அந்தச் சறத்தை நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன். ஏனெனில் எனது கஸ்ர காலத்தில் எனக்கு அது துணையாக இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை.

நான் கிறிஸ்தவன், ஆனால் தீவிர கிறிஸ்தவன் அல்ல. பிடிக்கப்பட்டு இந்த மட்டத்துக்கு வந்த இரண்டு மாதங்களாக தினமும் நான் ஜேசுவை மிகவும் பயபக்தியோடு வணங்கி வருந்தி முறையிட்டு பல முயற்சிகளைச் செய்து விடுதலைக்காக மன்றாடி வந்தேன். என்னையும் என்னுடன் கூட இருப்பவர்களையும் உடற் சேதம் இல்லாமல் விடுதலை அடையச் செய்யும் ஜேசுவே என்று முழந்தாளிட்டு வணங்கி வந்தேன். எந்தப் பயனும் கிடைக்கவில்லை. சில மாதங்களில் முருகனை வழிபட ஆரம்பித்தேன். “தேங்காய் உடைத்துப் பொங்கல் வைப்பேன், நல்லூருக்கு விரதம் இருப்பேன்” என்றெல்லாம் வேண்டிப் பார்த்தேன், அதிலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. வினாயகர் சுத்தமான கடவுள் அவரை வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்று எனக்கு அருகில் திரு. ஈசன் என்ற பஞ்சலிங்கம் (நெடுந்தீவு) சொன்னார். நானும் அவரும் சேர்ந்து வினாயகரை வணங்கி வந்தோம். இதிலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. புலிகள் எங்களுக்கு ஏதாவது சமூகப் புத்தகங்கள் கொடுத்திருந்தால் சற்று நின்மதியாக இருந்திருக்கும். காலை முதல் இரவு வரை நாங்கள் தலையைக் குனிந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படிப் 18 மாதங்கள் என்றால் எவ்வளவு கொடுமை!

ஆயினும் 18வது மாதம் ஒருநாள் (திகதியை மறந்துவிட்டேன், காரணம் காலையும் மாலையும்தான் எங்களுக்குத் தெரியும், திகதிகளை உண்மையில் தொலைத்து விட்டிருந்தோம் அந்த நாட்களில்) காலை தீபன் என்ற விசாரணை செய்யும் நபர் வந்தார். நீண்ட பட்டியல் ஒன்றினைப் படித்தார். அந்தப் பட்டியலில் எனது இலக்கமான கே.87ம் இருந்தது. மொத்தம் நூறுபேரது பட்டியல் அது. வெளியே வரும்படி பணித்த அவர், விசாரணைக்குப் பிரிவுக்குச் செல்லும்படி உத்தரவிட்டார். வழக்கமாக 10பேர் வரைதான் விசாரணைக்கு என்று பூசை செய்வார்கள்! ஆனால் இன்று நூறு பேரை எடுக்கின்றனர். மரண குழிக்குள்தான் அனுப்பப் போகிறார்களோ என்று பயந்து கொண்டு கால்விலங்குடன் அணிவகுத்துச் சென்றோம்!

அனைவரையும் அமரும்படி கூறிவிட்டு முதலிருந்து 25வது நபர்வரை அழைத்தனர். நானும் அதில் அடங்கும்! எனது பெயர் முகவரியை குறித்துக்கொண்டு, உன்னை விடுவித்தால் எங்கே தங்கியிருப்பாய் என்று கேட்டார் ஜீவா என்ற புலி நபர். இதே முகவரியில்தான் இருப்பேன் என்று கூறினேன். பிறிதொரு வெள்ளைத் தாளில் அவர்களே அச்சிட்டு கொண்டு வந்திருந்தனர், நிபந்தனை அடங்கிய படிவம் ஒன்றினை. அதில், “ ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்துடன் தொடர்பு வைத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டாலோ, அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினாலோ நீங்கள் தரும் தண்டனையை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று அதில் ரைப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் காட்டிய இடத்தில் நான் கையொப்பம் இட்டேன். இதே போல் அனைவரிடத்திலும் எழுதிப் பெற்றுக் கொண்டு, கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்தனர். புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இவை எல்லாம் முடிய மதியம் இரண்டுமணியாகிவிட்டது. மீண்டும் எங்கள் கொட்டடிக்குச் சென்று அமரும்படி உத்தரவிட்டனர்.

விடுவிக்கப் போகிறார்கள் என்று மனதுக்குள் தோன்றினாலும், முளங்காவில்லுக்குக் கொண்டு போய் பரலோகம் அனுப்பப்போகிறார்களோ என்ற சந்தேகமும் மனதுக்குள் ஓர் மூளையில் உரசிக் கொண்டுதான் இருந்தது. மாலை உணவும் கிடைத்தது. தகவல் ஒன்றும் இல்லை! இரவு நித்திரை வரவில்லை. அப்பையா அண்ணன், தம்பி, “உன்னை விட்டினம் என்றால் என்ர வீட்ட போய் சொல்லும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று” இப்படிப் பலரும் என்னிடம் தங்களது வீடுகளுக்குச் சென்று கூறும்படி கேட்டுக்கொண்டனர். நானும் சம்மதித்து உறுதி அளித்தேன். ஆயினும் எனது மனம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.

எப்படியாவது அந்தக் குழிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த எங்கள் சகோதரர்களுடன் கதைக்க வேண்டும் என்று நினைத்தது நடக்காமல் போய்விட்டதே! எப்படி அவர்களுடன் கதைப்பது? அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று விடை தெரியாமல் செல்லப் போகிறோமே என்ற கவலை வாட்டியது. ஒரு தடவையாவது அந்தக் கிடங்குக்குள் நான் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர்கள் இத்தனை மாதங்கள் எப்படி அந்தக் குழிகளுக்குள் வாழ்ந்திருப்பார்கள், அந்தக் கஸ்ரத்தை நானும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். இவ்வளவு கொடுமைகளையும் சந்தித்துவிட்டேன் அந்தக் கொடுமையையும் ஏன் விட்டுவைப்பான் என்ற விபரித ஆசையும் இருந்தது. அவர்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தை கூட சொல்லாமல் போகவா காலையில் புலி நபர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்ற உறுதியுடன் உறங்கினேன்.

மறுநாள் காலைக்கடன் முடிந்ததும் புலி நபர் ஒருவர் வந்து மீண்டும் அதே இலக்கங்களைப் படித்தார். எழுந்து வரிசையாக நின்றோம். விசாரணைப் பிரிவுக்கு அழைத்தனர். எங்கள் கால் சங்கிலிகள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்டப் பின்னர் முதல் அடியை எடுத்து வைக்க மிகவும் சிரமமாக இருந்தது. இடுப்புப் பகுதி இறுகிப் போய் இருந்தது. 18 மாதங்கள் கால்கள் விலகாமல் இந்தததினால் ஏற்பட்ட குறைபாடு. சிரமப்பட்டு நடக்க நடக்க கால்கள் சுதந்திரம் அடைந்ததை உணர்ந்தேன்.

சுமார் 11மணியளவில் மூன்று லொறிகள் வந்து நின்றன. நான் மண்டபத்தினுள் சென்று என்னுடன் இருந்தவர்களிடம் விடைபெற்றேன். அப்பையா அண்ணன், குகன் அண்ணன், ஈசன், ராஜா, கண்ணன், காந்தன், ஜேக்கப் அண்ணன், ஜோதி, பாலசுப்பிரமணியம், ஜெகநாதன், தயாபரன், அன்ரனி, லூக்கா போன்ற அனைவரிடத்திலும் சொல்லிவிட்டு வரிசைக்கு வந்தேன். அப்போது மஞ்சு என்ற புலி விலங்கு நின்று கொண்டிருந்தார் அவரிடம், அண்ணே, “நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றேன். என்ன என்றார்,

(பாகம் -17)
அனைவரிடத்திலும் சொல்லிவிட்டு வரிசைக்கு வந்தேன். அப்போது மஞ்சு என்ற புலி விலங்கு நின்று கொண்டிருந்தார் அவரிடம், அண்ணே, “நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றேன். என்ன என்றார்,

அந்தக் கிடங்கில் இருக்கும் பெடியங்களப் பார்த்துச் சொல்லிவிட்டு வர வேண்டும் என்றேன், கெட்டவார்த்தையைப் பயன்படுத்தி, உடைப்பன் உன்னை, போடா மரியாதையா என்றார்.

சிறிது நேரத்தில் லொறியின் பின்கதவைத் திறந்து ஏறச் சொன்னார்கள். 35 பேர் வரை ஏறினோம். தார்ப்பாயால் பின் பகுதியை மறைத்தனர். லொறி புறப்பட்டது!

எந்தப் பாதையால் செல்கின்றனர் என்பது தெரியாது. வெளியில் பார்ப்பதற்கு முடியவில்லை. சுமார் ஐந்துமணி நேரம் லொறி பயனித்திருக்கும், மாலை நேரம் நெருங்கிய வேளை யாழ்ப்பாணம் தட்டாதெருவில் இருக்கும் இவர்களது முகாமுக்கு (பேஸ்) முன்நின்றது லொறி! இறங்குங்கள் என்றனர். இப்போது சற்று மரியாதையான வார்த்தைகள் எங்கள் காதுகளில் விழ ஆரம்பித்தன.

தட்டாதெரு முகாமில் பொன் மாஸ்டர் என்பவரும் வேறு சிலரும் இருந்தனர். இவர்கள் அரசியல் பிரிவு நபர்கள் என்று கூறிக்கொண்டனர். எங்களை உள்ளே அழைத்த அவர்கள், புன்சிரிப்புக்களை அள்ளி வழங்கினார்கள். இரவு ஏழு மணியளவில் ஆளுக்கு ஓர் பார்சல் கொடுத்தனர். அதில் புட்டும் மீன்குழம்பும் கலந்து இருந்தது. 18 மாதங்களுக்குப் பின் மாற்று உணவு வழங்கப்பட்டது. சங்கிலி காப்பு எதுவும் மாட்டப்படவில்லை! அதே சறம்தான். ஆயினும் என்னிடமிருந்து எடுத்திருந்த சேட்டை திரும்பவும் கொடுத்திருந்தனர். அதைச் சுருட்டி வைத்திருந்தபடியால் எனத உடலுடன் பொருந்தாமல் கசங்கி? முறைத்து? விறைத்து நின்றது. உடை எப்படியிருந்தாலும் பறவாயில்லை உடல் உருப்படியாக வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்தது.

எங்களுடன் வந்த ஏனைய இரண்டு லொறிகளும் எங்கு சென்றன என்பது தெரியாது. நாங்கள் முப்பத்தைந்து பேரும் இரண்டு அறைகளிலும் பிரிக்கப்பட்டு உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டோம். நாளைக் காலை டொமினிக் அண்ணன் வருவார் என்று கூறினர் அங்கிருந்தவர்கள்.

முதலில் ஏன்தான் விடிந்ததோ என்று நினைத்தநான், இப்போது இன்னும் ஏன் விடியவில்லை என்று சிந்திக்கலானேன்! விடிந்தது. கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவும்படி கூறினர். அங்கே சவற்காரம் இருந்தது. ஒன்றுக்கு நான்கு தடவை முகத்துக்கு சோப் போட்டு உரஞ்சிக் கழுவினேன். ஏனையோரும் அப்படித்தான் செய்தனர். காலை உணவாக இடியாப்பமும் சொதியும், சாம்பாரும் கொடுத்தார்கள். உண்டுவிட்டு டொமினிக் அண்ணன் வருகைக்காகக் காத்திருந்தோம்.

ஓன்பது மணியளவில் டொமினிக் அண்ணன் வந்தார். தடித்த உருவம் கொண்ட அவர்? வந்ததும், அனைவரையும் அழைத்தார். தனது உரையை ஆரம்பித்தார்:-

“நீங்கள் எல்லோரும் எங்களது சிறையிலிருந்து வந்துள்ளீர்கள், அங்கு சில சிரமங்களைச் சந்தித்திருப்பீர்கள், அவற்றையெல்லாம் நீங்கள் மனிதில் வைத்து கொள்ளக் கூடாது! உங்களை விடுதலை செய்ததும் மீண்டும் இயக்கங்களில் சேரக்கூடாது. எங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது,

நீங்கள் விரும்பினால் எங்கள் இயக்கத்தில் இணைந்து செயற்படலாம். நீங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை நான் செய்து தருகிறேன்? எங்கள் இயக்கம் பரந்து விரிவடைந்துள்ளது. சிங்கள அரசாங்ம் கூட எங்களுடைய அனுமதி இல்லாமல் யாழ்ப்பணத்துக்குள் வரமுடியாது இனிமேல் வேறு எந்த இயக்கத்தையும இயங்கவிட மாட்டோம். அப்படி இயங்கினால் முற்றாக அழித்துவிடுவோம். எனவே நீங்கள் எங்கள் இயக்கத்தில் இணைந்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டு ஒவ்வொருவராக கேட்க ஆரம்பித்தார்.

ஆனால் யாருமே இவர்களது இயக்கத்தில் இணையச் சம்மதிக்கவில்லை! ஏனெனில் இவர்களது மறுபக்கம் எப்படி என்பதைக் கண்டதுமட்டுமல்ல, அவற்றை அனுபவித்து வந்துள்ளனர். ஆதலால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவணத்தைக் கூறி அதனால் இயலாது என்று கூறினர். என்னுடைய முறை வந்ததும் நான் சொன்னேன், “ எனக்கு ஆறு பெண் சகோதரர்கள் அவர்கள் அனைவரையும் கரைசேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு, நான் வெளியில் சென்று உழைத்து எனது சகோதரர்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே நான் உங்கள் இயக்கத்தில் இணைய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று கூறிமுடித்து அமர்ந்தேன்.

இறுதியில் டொமினிக் அண்ணாவின் பேச்சு எடுபடவில்லை. ஒரு நபரை என்றாலும் சம்மதித்து விடலாம் என்று முயற்சித்தார் டொமினிக். இரண்டு மணி நேர வீண் பேச்சுக்குப் பிறகு நீங்கள் வீடுகளுக்குச் செல்லலாம் என்று கூறி வெளியேறினார் டொமினிக்.

11 மணியளவில் நீங்கள் போகலாம் என்று கூறினார் அங்கிருந்த புலி ஒருவர். ஓவ்வொருவராக வெளியேறினோம். யாருக்கும் போக்குவரத்துக்கான காசு கிடையாது. அதைப்பற்றி யாரும் கேட்கவும் இல்லை! இவர்ளிடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தனர் அனைவருமே! எனது வீடு தட்டார் தெருவிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் வரும். நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பகல் நேரம் தெருவில் வருவோர் போவோர் என்னைக் கீழும் மேலுமாகப் பார்த்துக் கொண்டு சென்றனர். காரணம் மொட்டைத்தலை, கசங்கிய சேட், நொந்து போன சறம், கறுத்த உருவம், மெலிந்துபோன உடல் இப்படிப் பல மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தைக் கண்டவர்கள் மிரண்டு ஒதுங்கி நடந்தனர்.

துணுக்காயில் இந்த விலங்குகளிடம் இருந்த போது மூன்று நான்கு மாதத்துக்கு ஒரு தடவை மொட்டை அடித்துக் கொள்வேன். குhரணம் சவற்காரம், சம்போ அங்கு கிடையாது. எனவே தலைமயிர் வளர்ந்தால் வியர்த்து அழுக்கேறிவிடும். இதனால் நான் மொட்டை போட்டுக்கொள்வேன். விடுதலைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அப்படி மொட்டை போட்டிருந்தேன். எனவே என்னை அந்தக் கோலத்தில் குழந்தைகள் பார்த்திருந்தால் பிள்ளை பிடிக்காரன் என்று கூச்சலிட்டு கல்லால் எறிந்திருப்பார்கள். நான் வேலையாக அப்படி எந்தக் குழந்தையும பார்த்துவிடவில்லை.

பலதரப்பட்ட சிந்தனையுடன் நடந்து கொண்டே இருந்தேன். நாள்பட்ட துன்பங்கள் தீர்ந்துவிட்டது என்று மகிழ்ந்தேன். வரவிருக்கும் நாள்களில் பட்டுவந்த கொடுமையை விட மிகவும் மோசமான கொடுமையைச் சந்திக்கப் போகிறேன் என்பது புலனுக்கு எட்டாமல் அப்போது இருந்தது.

துணுக்காய் சிறையை உருவாக்கி அதில் தமிழ் இளைஞர்களை வதைக்க வேண்டும் என்ற இந்தக் கொடிய சிந்தனையை உருவாக்கியவர் யார் என்று தெரியாது. ஆனால் பொட்டு அம்மான்தான் இந்தக் கொடுஞ்சிறையின் ஸ்தாபகர் என்று காவல் புலிவிலங்குகள் கதைத்துக் கொண்டனர். மனித நாகரீகத்துக்கு முற்றிலும் முரணான விசாரணை முறையை எங்கள் இனத்தின் மீதே பரீட்சித்துப்பார்த்தது யாராலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்தச் சிறையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் விலங்கிட்டு குழிகளுக்குள் இறக்கித் தண்டனை வழங்கினால்தான் தாங்கள் செய்துவிட்ட தவறை உணர்வார்கள் அதுவரை வரி என்பது பிறருக்குத்தானே!

நான் நடந்தேன் வீடு நோக்கி, தெருவில் வந்து கொண்டிருந்த எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க வில்லை. எனது கோலம் எனக்கே அருவருப்பை ஏற்படுத்தியது. தமிழர் நிலையை நினைத்து நொந்துகொண்டே எனது வீட்டு வாசலை அடைத்தேன்.

எனது தாயாரும், அக்காவும் என்னைப்பார்த்ததும் ஓடிவந்து கட்டி அனைத்து கதற ஆரம்பித்தனர். ஏனைய சகோதரிகளும் சூழ்ந்து கொண்டு எனது கோலத்தைக் கண்டு அழுவதற்கு ஆரம்பித்து விட்டனர். அடித்தார்களா, குத்தினார்களா, கொடுமைப்படுத்தினார்களா என்று பலவிதமான கேள்விகளைக் கேட்டுத் துளைத்து எடுத்தனர். நானோ எதுவும் நடக்கவில்லை, நல்லபடியாக அனுப்பிவைத்தனர் என்று உண்மைக்கு மாறாக விளக்கம் கொடுத்தேன் என் சகோதரிகளுக்கு!

முதலில் இரத்தச் சேட்டையும் சறத்தையும் கழற்று என்றார் என் அம்மா! நேராக கிணற்றுக்குச் சென்று குளித்தேன். அக்கம்பக்கத்து வீட்டார் நலம் விசாரிக்க வந்தனர். அவர்களும் கேள்விகளால் குடைந்தனர். அனைவருக்கும் என்னால் முடிந்த பொய்களைச் சொல்லி நல்ல முறையில் அனுப்பிவைத்தனர் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தேன்.

முதிய உணவை அம்மா கொடுத்தார். அதை நான் உண்ணும் போது அம்மா கேட்டார், தம்பி உண்மையைச் சொல். அவர்கள் உன்னைக் கொடுமைப்படுத்தவில்லையா? நான் சொன்னேன், “இல்லை அம்மா, அவர்கள் ஏன் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீ என்று கேட்டார், தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று சொன்னேன். அதுக்குப் பிறகு என்னை வவுனிக்குளத்துக்குக் கொண்டு போய் அங்கே இவ்வளவு நாளும் வைத்திருந்தனர். பிறகு இப்ப தட்டார்தெருவுக்குக் கொண்டு வந்து விடு;டுவிட்டினம்” என்று கூறி அம்மாவை நம்பவைத்தேன்!

அம்மா ஆரம்பித்தார்,,

தொடரும்…

2 comments :

ranish1@hotmail.fr ,  March 24, 2010 at 12:00 PM  

anna kiresiyan avarkalukku, unkal kaddurai thavaramal vasithu varukiren. thodarnthu eluthunkal. thamatham illamal tharunkal mikuntha avaludan vasikkiren. unkalai viduthalai seithathai vasitha pothu ennai viduthalai seitha mathiri unarkiren.nanri.

vivesthanan ,  March 24, 2010 at 7:09 PM  

தோழர் kirisdiyan . நொந்த மனத்தை இனி ஆறுதல்
படுத்துங்கள் விலங்குகள் அட்டைகள் பூண்டோடு
கைலாயம் அனுப்பி வைத்துள்ளார் எங்கள் நாட்டுத் தலைவர்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com