Sunday, February 21, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்க்கின்றது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட் டத்தில் புதுமுகங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தப் போவதாகச் செய்தி வெளியாகியிருந்தது. சிலரது பெயர்களும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன. புதுமுகங்களைத் தேர்தல் களத்தில் நிறுத்துவதொன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அதன் முன்னோடிக் கட்சிகளுக்கோ புதிய விடயமல்ல. காலத்துக்குக் காலம் பல புதுமுகங்களை இக்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. அறுபது வருடங்களுக்கு மேலாக எத்தனையோ புதுமுகங்கள் வந்து போயும் தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. எனவே, முகங்களை மாற்றுவதை விடத் தமிழ்த் தலைவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண் டும்.

அன்று முதல் இன்று வரை இனப் பிரச்சினை தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையாக இனங் காட்டப்பட்டு வருகின்றது. இதைத் தவிர வேறு பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இல்லை என்பது இதன் அர்த்தமல்ல. அபிவிருத்தியும் அவசியம். ஆனால் தமிழ்த் தலைவர்கள் எல்லாக் காலங்களிலும் இனப் பிரச்சினையையே முன்னிலைப்படுத்தி வந்திருக்கின்றனர். தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்திய பிரதேசங்களுக்கு அபிவிருத்தியைக் கொண்டு வரவேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கு இனப் பிரச்சினை அவர்களுக்குக் கைகொடுத்தது. குறுந் தேசியவாதக் கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையைக் கையாண்டதன் மூலம் அரசியலில் தங்கள் இருப்பை இன்று வரை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் முதல் இன்றைய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தமிழின் பெயரால் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட அதேவேளை தமிழ் மக்கள் காலத்துக்குக் காலம் இழப்புகளையும் பின்னடைவுகளையுமே கண்டு வந்துள்ளனர். உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போல, தமிழ் மக்கள் தங்கள் வளமான வாழ்க்கையை இழந்து இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் வாழும் நிலை ஏற்பட்டதற்கு அவர்களுக்கு அரசியல் தலைமை தாங்கியவர்கள் பதில்கூற வேண்டும். அடுத்தடுத்து இத் தலைவர்களைத் தெரிவு செய்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கை வீணாகிவிட்டது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்களின் இன்றைய அரசியலை நோக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இப்போதைய நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கக் கூடியதல்ல. ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கின்றது. பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவான சக்தியாகச் செயற்படுவதற்குக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள முடிவு அதன் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைப்பதை இலக்காகக் கொண்டதேயொழியத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொள்ள வில்லை.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று கூட்டமைப்பு கூறுகின்றது. இது அவர்களின் முதலாவது தவறு. பதின்மூன்றாவது திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வல்ல. அதேபோல, இத்திருத்தத்துக்குச் சற்றுக்கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வும் முழுமையானதாக இருக்காது. முழுமையான அரசியல் தீர்வை உடனடியாகப் பெறுவது சாத்தியமில்லை. படிப்படியாகவே முழுமையான தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தை முதற்படியாகக் கொள்வதால் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை. அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு இதனால் தீர்வு கிடைக்க இடமுண்டு.

பதின்மூன்றாவது திருத்தம் போதாது எனக் கூறி நிராகரிப்பவர்கள் அத்திருத்தம் அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொடுக்கின்றது எனக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி அங்கம் வகிக்கின்ற கூட்டணியை ஆதரித்தது வேடிக்கையானது.

பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வையே ஏற்க முடியும் என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படிக் கூறுவதோடு நின்றுவிடக் கூடாது. அவ்வாறான தீர்வைப் பெறுவதற்கேற்ற வகையில் செயற்படவும் வேண்டும்.

அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வைப் பெற முடியும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. இன்று தேர்தல் களத்தில் நிற்கும் பிரதான அணிகளில் எந்த அணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் வாய்ப்பு உண்டு என்பதன் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் அணுகுமுறை அமைய வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இந்த முன்னணி பற்றிக் கூட்டமைப்பினர் என்னதான் கூறினாலும் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சாதகமான அம்சங்கள் இம்முன்னணியில் உள்ளன. அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தலைமை வகிக்கின்றது. இனப்பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இடதுசாரித் தலைவர்களும் இம்முன்னணியில் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெறமுடியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதாரண பெரும்பான்மையைக் கூடப் பெற முடியாத நிலையிலுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் பக்கத்திலேயே நிற்கின்றது. அதே நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பகைமை பாராட்டுகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் மூலமே நிறைவேற்றக் கூடியதான கோரிக்கையை முன்வைத்து விட்டுச் சாதாரண பெரும்பான்மை கூடப் பெற முடியாத அணிக்கு ஆதரவாகச் செயற்படுவது தமிழ்த் தலைவர்களுக்கு வழக்க மாகிவிட்டது. அன்று முதல் இன்று வரை இதையே செய்து வருகின்றார்கள். மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களைக் கவரக்கூடிய கோரிக்கைகளைத் தேர்தல் காலத்தில் முன்வைப்பது. பின்னர் வேறு நலன்களை உறுதிப்படுத்துவதற்காக, அக்கோரிக்கையை எதிர்க்கின்ற அல்லது அதை நிறைவேற்ற இயலாத சக்திகளுடன் அணிசேர்வது. இது நம்பிக்கை வைத்துத் தெரிவு செய்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்தப் பாரம்பரியத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லை.

பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வு என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய கோரிக்கை. அரசாங்கத்திடம் இக்கோரிக் கையை முன்வைத்திருக்கின்றது. பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைப் பெறக்கூடிய வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உண்டு என்பதையும் கூட்டமைப்பினால் விளங்கிக் கொள்ள முடியும். அப்படியிருந்தும் இக்கோரிக்கை தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அணிக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. சாதாரண பெரும்பான்மை கூடப் பெற முடியாத நிலையில் அந்த அணி இருப்பது கூட்டமைப்புத் தலைவர்களுக்கு விளங்காமலிருக்காது. இது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான அணுகுமுறை என்று எவராலும் கூற முடியுமா?

மேடைபோட்டு வீரவசனம் பேசுவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேரம் பேசித் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே மக்கள் இவர்களைத் தெரிவு செய்தார்கள். ஆனால்இவர்கள் பேரம் பேசுவதை விட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு கொடுப்பதிலேயே கூடுதலான அக்கறை காட்டுகின்றார்கள்.

தமிழ்க் காங்கிரஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை தமிழ்த் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே நெருக்கமான உறவு இருந்து வருகின்றது. இந்த உறவு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. வேறு நலன்களை உறுதிப்படுத்துவதற்கான உறவு. இந்த உறவுக்காகத் தமிழ் மக்களின் நலன்களை விட்டுக் கொடுக்கவும் இத்தலைவர்கள் தயார் என்பதற்குக் கடந்த காலங்களின் பல உதாரணங்களை சுட்டிக்காட்டலாம்.

மொழிப் பிரச்சினை மற்றும் இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்த் தலைவர்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். இப்போராட்டங்களெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சிக் காலங்களிலேயே நடைபெற்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் எந்தவொரு போராட்டத்தையும் இத்தலைவர்கள் நடத்தவில்லை.

மாவட்ட சபை தருவதாக உறுதியளித்ததன் பேரில் 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சி ஆதரவளித்தது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அளித்த வாக்குறுதியை நிராகரித்து மாவட்ட சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தது. கட்சியின் சார்பில் திருச்செல்வம் கபினற் அமைச்சராகப் பதவியேற்றார். சிறிது காலத்தின்பின், மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று பிரதமர் டட்லி சேனநாயக்க கூறிய பின்னரும் தமிழரசுக் கட்சி அந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகித்தது.

பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை முதலில் ஆதரித்த தமிழர் விடுதலைக் கூட்டணி கடைசி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து எதிர்த்தது. அத்தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வரமுடியாமற் போனதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்பே பிரதான காரணம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டுக்காகத் தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நலன்களை விட்டுக் கொடுத்ததற்கு இன்னும் பல உதாரணங்களைக் கூற முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இனப்பிரச் சினையின் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை. ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பலம் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைக்கப் போவதுமில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணி சேர்கின்றதென்றால் தமிழ் மக்களின் நலன்களைத் தாரைவார்க்கின்றது என்பதே அதன் அர்த்தம்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com