Tuesday, February 2, 2010

இலங்கையில் சில இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனக் கூறி சில இராணுவ அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பபடுகிறார்கள். இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷமன் ஹுலுகல்ல இந்தத் தகவலை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படியாக எவ்வளவு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்கிற தகவல் கிடைத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

நாட்டின் முப்படைகள் மற்றும் காவல்துறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கையே இது எனவும் லக்ஷமன் ஹுலுகல்ல கூறுகிறார்.

இந்த இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது : கோத்தபாய ராஜபக்ஷ
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.

இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com