Sunday, February 7, 2010

ஐக்கிய தேசிய முன்னணியை பதிவு செய்ய தேர்தல் ஆணையாளர் மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்வதை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டமூலத்திற்கமையவே அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்யும் அதிகாரம் தனக்கு இல்லையென தேர்தல் ஆணையாளர் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் வெஹெரகொடவிற்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும், ரவூப் ஹக்கீம் மனோ கணேசன் போன்ற தலைவர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதை நிராகரிக்காத போதிலும் பொதுக்கட்சியொன்றின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேக்கா, மங்கள சமரவீர ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுவதை நிராகரித்துள்ளனர்.

எனினும், அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அவர்கள் அனைவரும் யோசனை முன்வைத்துள்ளனர். இந்த நிலைமையின் கீழ் அன்னப்பறவைச் சின்னத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கிய அனைத்துக் கட்சிகளும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷட உறுப்பினர்கள் பலர் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரைத்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் பொதுத் தேர்தலில் பொது இணக்கம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று முற்பகல் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் அந்தப் பேச்சுவார்த்தை சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும் மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com