Friday, February 26, 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது : பாதுகாப்பு செயலர்.
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது :- குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

ஹைக்கொப் நிறுவனத்தினூடாக இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பில் மோசடி செய்தல், மோசடி செய்ய உதவி ஒத்தாசை அளித்தல், மோசடி செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது தவிர இராணுவத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயன்றது தொடர்பாகவும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவ ர்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தனியார் வங்கியில் 75 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதோடு இராணுவ நீதிமன்றத்தினால் தனியாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சரியானதே என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறை தொடர்பில் எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்த தவறான பிரசாரங்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறுகோரி இதற்கு முன்னரும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால், இராணுவ சட்ட திட்டங்களுக்கு அமைவாக சரத் பொன்சேகா கைதாகியுள்ளதால் அவரை விடுதலை செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

சிவில் சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் சில நாடுகள் கோரியுள்ளன.

இந்தக் கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் போக்குமாறியுள்ளது எனவும், எனவே இலங்கையுடன் சர்வதேச நாடுகள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரசிடா செபர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளை அரசாங்கம் நிராகரித்தது குறித்து ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பி கேள்விக்குப் பதிலளித்த அவர்,

ஒவ்வொரு நிறுவனமும் தமக்குரிய பணிகளையே செய்ய வேண்டும். அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டால் குழப்பமே ஏற்படும். நீதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உரியதாக இருக்கையில் பெற்றோல் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும். பெற்றோல் விலைகளை நிர்ணயிப்பதும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதும் நீதிமன்றத்தின் பணியல்ல.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது.

எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகார பூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com