Saturday, February 6, 2010

தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது தலைமைப் பண்பாகாது.

தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை முக்கிய இடம் வகிக்கின்றது. காலங்காலமாகத் தமிழ் மக்கள் கூட்டாக முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது தேசிய இனப் பிரச்சினையே. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனை இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாக இருப்பதால், இப்பிரச்சினை பற்றிப் பேசும் அரசியல் தலைவர்களே தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர். இவ்வாறு நிலைத்து நிற்பவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்கு இனப் பிரச்சினை அத்தியாவசியமானது எனக் கருதுவதனாலோ என்னவோ, பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. இத் தலைவர்களின் தவறுகளே பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்குப் பிரதான காரணம் எனக் கூறினால் அது தவறாகாது.

இனப் பிரச்சினையின் தீர்வை முன்னெடுப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்தத் தவறியமை பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளில் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருப்பதால் மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திக் கூற வேண்டிய அவசியமில்லை. ஒரு விடயத்தை வலியுறுத்திச் சொல்லலாம். தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தலைவர்கள் நிரந்தரமான ஒரு கொள்கையைக் கொண்டிருக்காததையும் தீர்வுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை ஏதேனுமொரு காரணம் கூறி நிராகரித்ததையும் போல வேறெந்த நாட்டிலும் எந்தவொரு பிரச்சினைக்கும் நடந்திருக்காது.

தமிழ்த் தலைமை முதலில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் செயற்படவில்லை. சமஷ்டித் தீர்வைப் பெறுவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமானது. கட்சிக்குத் தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்தார்கள். இது சமஷ்டிக் கோரிக்கை பற்றிய சந்தேகத்தை ஆரம்பத்திலேயே சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது. பின்னர் சத்தியாக்கிரகத்தின் போது தனியான தபால் சேவை ஆரம்பித்து முத்திரையும் வெளியிட்டார்கள். அதுபோதாதென்று காணிக் கச்சேரியும் நடத்தினார்கள். சமஷ்டிக் கோரிக்கைக்குப் பின்னால் தனிநாட்டுச் சிந்தனை இருக்கின்றதென்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே தோன்றிய சந்தேகம் இச் செயல்களால் மேலும் வலுவடைந்தது.

சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தவர்களே அதை வென்றெடுப்பதற்குச் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும் வகையில் செயற்பட்டதைப் பார்க்கும் போது, கருத்தீடுபாடு இல்லாமல் ஏனோதானோவென்று அக் கோரிக்கையை முன்வைத்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதன் பின் தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றியே வந்திருக்கின்றார்கள். தனிநாடு, மாவட்ட சபை, பிராந்திய சுயாட்சி, மீண்டும் தனிநாடு என்று காலத்துக்குக் காலம் அவர்களின் நிலைப்பாடு மாறியது.

புலிகளுடன் சேர்ந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இப்போது அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே அலகாக இணைக்கப்பட வேண்டும் என்பதும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்பதும் அரசியல் தீர்வுக்கு இவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள். இத்தலைவர்கள் அரசியல் தீர்வுக்குத் தயாராக இல்லை என்பதையே இந்த நிபந்தனைகள் புலப்படுத்துகின்றன.

ஒவ்வொரு கட்டத்திலும் முன்வைக்கப்பட்ட தீர்வு ஆலோசனைகளைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தார்கள். அந்த ஆலோசனைகளிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்தியே அவற்றை நிராகரித்தார்கள். அன்றைய யதார்த்தத்தின் படி எது சாத்தியமில்லையோ அதைப் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தி ஆலோசனைகளை நிராகரித்த நடைமுறை மேலோட்டமான பார்வைக்கு இனப் பற்றின் வெளிப்பாடாகத் தோன்றினாலும் உண்மையில் தீர்வைத் தவிர்ப்பதற்கான தந்திரோபாயமே. படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்கு முயற்சிப்பது என்ற அடிப்படையில் அவ்வாலோசனைகளை ஏற்றிருந்தால் தமிழ் மக்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட பல பாதிப்புகளைத் தவிர்க்க முடிந்திருக்கும். கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலையும் உருவாகியிருக்கும். பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளையும் உதாரணமாகக் கூறலாம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வும் உடனடியாக நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த நிலை உருவாகியதற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். இவர்களின் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுகள் தமிழர் தரப்புக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையைத் தோற்றுவித்தன.

வடக்கு, கிழக்கின் இணைப்பை வலியுறுத்தும் தலைவர்கள் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதில் தங்களுக்குள்ள பொறுப்பை மறைக்கப் பார்க்கின்றனர். இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு சட்டரீதியாகத் தற்காலிகமானது. வருடா வருடம் விசேட பிரகடனத்தின் மூலம் நீடிக்கப்பட வேண்டியது. இந்த இணைப்பு மாகாண சபையுடன் தொடர்புபட்டது. மாகாண சபை இல்லாத நிலையில் இணைப்புக்கு எதிரான சிந்தனை வளர்வதற்கு இடமுண்டு என்பதைத் தமிழ்த் தலைவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த வகையில், இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டதில் தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பும் உண்டு.

பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்க முடியாது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி யதார்த்தபூர்வமாகப் பார்ப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. ஆதரித்தார்கள். இத் தலைவர்கள் மீண்டும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு இந்த ஒப்பந்தமே வழிவகுத்தது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமும் அதன் கீழான மாகாண சபை முறையும் இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கங்கள்.

இந்திய - இலங்கை ஒப்பந்தமோ பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமோ இலங்கையின் இனப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வல்ல. எனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையிலேயே தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தத்தை வரவேற்றார்கள். மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று இதே காரணத்துக்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்த் தலைவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்கும் எது காரணமாக அமைந்ததோ அதே காரணத்துக்காகப் பதின்மூன்றாவது திருத்தத்தை இப்போது ஏற்கலாம். அதாவது இனப்பிரச்சினைக்குப் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான தீர்வல்லவெனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையில் ஏற்கலாம்.

பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கும் தமிழ்த் தலைவர்கள் அதனிலும் மேலானதாகத் தாங்கள் முன்வைக்கும் தீர்வையும் அதை வென்றெடுப்பதற்கான வழிவகைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இப்போது தீர்வுத் திட்டம் எதுவும் இல்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்காக அரசாங்கத்துடனோ தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுடனோ இணைந்து செயற்படும் நோக்கமும் இல்லை. இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவும் நிலைப்பாடல்ல.

தென்னிலங்கையின் சமகால யதார்த்தம் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குச் சாதகமானதாக இல்லை என்பதை மேலே கூறினோம். எனவே, பதின் மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது எவ்வித தீர்வுமற்ற இன்றைய நிலை தொடர்வதற்கே வழிவகுக்கும். தீர்வை நோக்கிச் செல்லாமல் தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது சிறந்த தலைமைப் பண்பாகாது.

உடனடித் தீர்வாகப் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதால் தமிழ் மக்கள் பல விதத்தில் நன்மை அடைவர். மக்களின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் மாகாண சபைக்குக் கிடைக்கும். இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இட ங்களில் குடியேற முடியும். கொழு ம்பை எதிர்பார்த்திராமல் மாகாண மட்டத்திலேயே பல கருமங்களை நிறைவேற்றலாம்.

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்டு முழுமையான தீர்வை நோக்கி முன்னேறிச் செல்லலாம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்திருக்கின்றார். அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் அக்கறையுடன் தமிழ்த் தலைவர்கள் செயற்படுவார்களேயானால் முழுமையான தீர்வை அடைவது சிரமமானதாக இருக்காது.

தினகரனுக்காக சுரேஷ் நாகேந்திரா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com