Friday, February 19, 2010

மக்களின் இன்றைய தேவை சமாதானமும் அபிவிருத்தியும்.

தேர்தல் காலங்களில் அளவுகணக்கின்றி வாக் குறுதிகளை வழங்குவது வழமையாகிவிட்டது. தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறும் வாக்குறுதிகளுக்கு மேலதிகமாக வேட்பாளர்கள் பிரசார மேடைகளிலும் தனிப்பட்ட முறையிலும் மனம் போனபடி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிடுகின்றார்கள்.

இவற்றுள் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற் றப்படுகின்றன என்பதை ஒருகை விரல்களால் எண்ணிவிடலாம். விஞ்ஞாபனங்களில் இடம்பெறும் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் அறவே நிறைவேற்றப் படுவதில்லை.

கடந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவம் இது. ‘மஹி ந்த சிந்தனை’ இதற்கு விதிவிலக்கு எனக் கூறலாம். முதலாவது ‘மஹிந்த சிந்தனை’யில் இடம்பெற்ற வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன. நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் சாதகமான சூழ் நிலை அதன் மூலம் உருவாகியிருக்கின்றது.

இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான தேர்தல் கோஷம் அபிவிருத்தியும் சமாதானமும் என்பதாகும். இன்றைய நிலையில் இது நாட்டுக்குத் தேவை யான கோஷம். விசேடமாக, சிறுபான்மையின மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கோஷம்.

சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழ க்கு மாகாணங்கள் நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டிருந்தன. கிழக்கு மாகாணத்தில் இப் போது கணிசமான அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் முழுமை யாக விடுவிக்கப்பட்ட பின் ஆரம்பமாகிய அபிவிரு த்திச் செயற்பாடுகள் இப்போது கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன.

வட மாகாணம் இப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வட பகுதி மக்களைத் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப் படுத்திய தலைவர்கள் விட்ட தவறுகளின் விளைவே இந்தநிலை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக இத் தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளித்தார்கள்.

இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் இவர்களைத் தெரிவு செய்தார்கள். அறுபது வருட காலமாக இத் தலைவர்களின் சாதனை வாக்குறுதியாகவே இருக்கின்றது. தீர்வைப் பெற்றுத் தரு வது ஒருபுறமிருக்க, இவர்களின் செயற்பாடுகளால் இனப் பிரச்சினை நாளுக்கு நாள் சிக்கலடைந்திருக்கின்றது. மறுபுறத்தில் அபிவிருத்தியைப் பற்றி இவர் கள் பேசுவதே கிடையாது. இனப் பிரச்சினைக்கான தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி பற்றிய பேச்சு என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்கள்.

இனப் பிரச்சினைக்கான தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. பதின்மூன்று பாராளுமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றியீட்டிய தமிழ்த் தலை வர்களின் சேவை சமாதானமும் அபிவிருத்தியும் இல்லை என்ற நிலையில் முடிந்திருக்கும் பின்னணியிலேயே சிறுபான்மையின மக்கள் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை நோக்க வேண்டியுள்ளது.

இனத்துவ உரிமையும் பிரதேச அபிவிருத்தியும் ஒன்றுக்காக மற்றதைப் பின்தள்ள முடியாதவாறு சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறுபான்மையின மக்கள் இதைச் சரியாக விளங்கிக்கொண்டு சமாதான த்துக்கும் அபிவிருத்திக்கும் சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்வார்களென நம்புகின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com