Thursday, February 4, 2010

சமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி சுதந்திர தினச் செய்தி.
”வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் சமத்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று கொண்டாடப்படும் இலங் கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட் டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியி ருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

அறுபத்தி இரண்டு வருடங் களுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இப்போது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவுள்ளது.

காரணம் எமது சுதந்திரத்தின் அரைவாசிக்காலப் பகுதியை ஆட்கொண்டு, எமது நாட்டின் இறைமைக் கும் ஆள்புல எல்லைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து நாம் முழுமையாக விடுதலை பெற்றுள்ளோம்.

சுதந்திர போராட்டத்தில் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிய நாட்டுப்பற்று டையவர்களை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைவு கூருகின்றோமோ அதேபோன்று பயங் கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த எமது வீரமிக்க படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இன்னும் முழு நாட்டிலும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் மீளக்கட்டியெழுப்பும் இந்த போராட்டத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் முழு அளவில் நன்றிகூறுவது பொருத்தமானதாகும்.

நாட்டுக்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய அதேவேளை பயங்கரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்களது நோக்கங்களுக்கு ஏற்றவகையில் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த வெளிச் சக்திகளை எதிர்த்து நிற்பதில் தமது தைரியத்தை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் குறிப்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு, எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எல்லா வழிகளிலும் உதவிய எமது நட்புநாடுகளுக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது நாட்டில் சமாதானத்திற்கான புதியதோர் யுகத்தில் காலடி எடுத்துவைக்கும் நாம், எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங் கொடுக்க தயாராகவுள்ளோம்.

தேசிய நல்லிணக்க இலக்குகளுக்கும், நாட்டில் வாழும் எல்லா மக்கள் பிரிவினர்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், அதேபோன்று தேசங்களுக்கு மத்தியில் எமக்கான சரியான இடத்தை பெற்றுத்தரவல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் நாம் சமமான முக்கியத்துவத்தை வழங்குவது அவசியமாகும்.

சமாதானத்தின் விளைவுகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மத்தியிலும்கூட கைவிடப்படாத அபிவிருத்தி அம்சங்களையும் மின்சார, சக்திவலு துறைகளில் ஆரம்பிக் கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களினூடாகவும் உட் கட்டமைப்பு அபிவிருத்திகளின் ஊடாகவும் ஏற்கெனவே காணக்கூடியதாகவுள்ளது.

நீங்கள் தற்போது எங்களுக்கு வழங்கியுள்ள பலமான இந்த மக்கள் ஆணை இலங்கை தேசம் எமது கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமான மனித உரிமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேசமாகவும் எமது பிராந்தியத்தில் பொருளாதார கேந்திர நிலையமாகவும் திகழும் வகையில் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு மிகுந்த பலத்தைத் தந்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டத் தின்போது, ஆசியாவிலேயே மிகவும் பழைமைவாய்ந்த ஜனநாயக தேசம் என்றவகையில் எமது தேசம் பேணிப் பாதுகாத்துவரும் சமாதானம், சகிப்புத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் ஆகிய ஜனநாயக பாரம்பரியங்களுக்காக நாம் எம்மை மீளவும் அர்ப்பணிப்போம். இவ்வாறு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com