Friday, February 5, 2010

வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை. ஜாதிக ஹெல உறுமய

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஆனால் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாண சபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது,

வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

வடக்கில் மாகாண சபை அமைக்கப்படுவதை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள எமது கட்சி வடக்கில் உடனடியாக மாகாண சபை அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவான மாகாண சபை முறைமையினை நாங்கள் எதிர்க்கின்றோம். ஆனால் தென் பகுதியில் மாகாண சபை முறைமை இருக்கின்ற நிலையில் வடக்கில் மட்டும் இயங்காமல் இருக்கின்றமைமயை அனுமதிக்க முடியாது. அது வடக்கு மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே அமையும். எனவே வடக்கில் மாகாண சபை அமைய நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

எனினும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் வடக்கு கிழக்கு பகுதிக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நிரூபித்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சம நிலைமையிலான அபிவிருத்திகள் மற்றும் வசதிகள் செய்யப்படவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com