Sunday, January 31, 2010

பிரபாகரன் மரண சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை சி.பி.ஐ. தகவல்

ராஜீவ்காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கடைசி வரை கைது செய்யப்படவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலையும் காட்டினார்கள். ஆனால் ஒரு தரப்பினர் பிரபாகரன் சாகவில்லை. இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததால் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ. அவருடைய மரண சான்றிதழை இலங்கை அரசிடம் கேட்டது.

இலங்கை அரசு பிரபாகரன் மரண சான்றிதழை இந்திய அரசிடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்திய அரசு தரப்பில் இது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.

இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சி.பி.ஐ.யிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தெரிவிக்கும்படி அதில் கூறி இருந்தனர்.

இதற்கு சி.பி.ஐ. சூப்பிரண்டு பி.என்.மிஸ்ரா பதில் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தர வில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுதந்த ராஜா, ஸ்ரீஹரன் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் ஜெயிலில் உள்ளனர். மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை ஜெயிலிலும் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com