Sunday, January 31, 2010

இலங்கை அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

முதல்வர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர மேனன் இன்று சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றார் மேனன். இதையடுத்து இன்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்த தாக்குதல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் என்றார் மேனன்.

ராஜபக்சே 2வது முறையாக அதிபராகியுள்ள நிலையில், தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாக தெரிகிறது.

இதுதொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் அவர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com