Thursday, January 21, 2010

எட்டுபேரைச் சுட்டுக் கொன்றவன் சரண் : அமெரிக்காவில் பீதி, பதட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் துப்பாக்கி ஏந்திய ஒரு நபர், பொதுமக்களை சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாபமாக பலியாயினர். போலீசார் சுற்றிவளைத்ததை அடுத்து, அவன் தானாக முன் வந்து சரண் அடைந்தான். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், வெர்ஜினியா மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் காரின் கெல்லர் கூறியதாவது: வெர்ஜினியா மாகாணத்தில் உள்ளது அப்பொமெட்டக்ஸ் என்ற நகரம். இங்கு உள்ள ஒரு தெருவுக்குள் நேற்று புகுந்த ஒரு நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் சிலர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தகவலறிந்த போலீசார் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்த நபர், ஹெலிகாப்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
இதனால், ஹெலிகாப்டரின் சில பாகங்கள் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க வேண்டியதாகி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். அந்த தெருவில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் இருந்து, ஏழு உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு உடல், சம்பவம் நடந்த தெருவில் கிடந்தது.

பலியானவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். தப்பி ஓடிய அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக, அவன் பதுங்கியிருந்த காட்டுப் பகுதியை ஏராளமான போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, அந்த நபர், தானாக முன்வந்து போலீசாரிடம் சரண் அடைந்தான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் கிறிஸ்டோபர் ஸ்பெயிட் (39) என, தெரியவந்துள்ளது. என்ன காரணத்திற்காக கிறிஸ்டோபர் இந்த கொலைகளை செய்தான் என, தெரியவில்லை. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு காரின் கெல்லர் கூறினார். இந்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதவை பூட்ட வலியுறுத்தல் : இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, வெர்ஜினியா மாகாண போலீசார், பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,"பொதுமக்கள், வீட்டில் இருக்கும்போது, கதவை உள்பக்கம் பூட்டிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால், தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com