Thursday, January 21, 2010

19 வருட சிறை வாழ்க்கை: நளினியை விடுதலை செய்ய சிபாரிசு.

தமிழக அரசுக்கு விசாரணை குழு அறிக்கை.
ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மனித வெடி குண்டால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இலங்கை வாலிபர் முருகன், சென்னையைச் சேர்ந்த அவரது மனைவி நளினி உள்பட 25 பேர் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

ராஜீவ்காந்தியை கொல்ல சதி திட்டம் தீட்டியது, உதவிகள் செய்தது என்று அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. தனிக்கோர்ட்டில் நடந்து வந்த விசாரணையில் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. நளினி உள்பட 25 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நளினி உள்பட 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினி இதை எதிர்த்து கருணை மனு தாக்கல் செய்தார். நளினிக்கு பெண் குழந்தை இருப்பதால் அவரது தண்டனையை குறைக்கலாம் என்று சோனியா கேட்டுக் கொண்டார். அதன் பேரில் நளினியின் தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதேபோல் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்ததால் தன்னை விடுதலை செய்யு மாறு ஐகோர்ட்டில் நளினி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தண்டனை காலம் முடிந்த நிலையில் தன்னை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யும் அறிவுரை கழகம் அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு நளினி மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து அறிவுரை கழகம் அமைத்து விசாரணை செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. முதலில் நளினியை விடுவிக்க அறிவுரை கழகம் மறுத்தது. இதனால் மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் நளினியை விடுவிக்க இயலாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நளினியை முன்னதாக விடுதலை செய்யும் விவகாரத்தில் தலையிட போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து நளினி சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை ஐகோர்ட்டு நளினியை முன்னதாக விடுவிப்பது தொடர்பாக மீண்டும் அறிவுரைக் குழு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் கலெக்டர் சி. ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர், மாவட்ட நீதிபதி கலையரசன், சிறைத்துறை மண்டல நன்னடத்தை அதிகாரிகள் கிருஷ்ணம்மா நாமகிரி, பியூலா, சிறைத்துறை அகாடமி விரிவுரையாளர் ஜூலி ஆகியோரை கொண்ட அறிவுரை கழகம் அமைக்கப்பட்டது.

அவர்கள் நேற்று மாலை வேலூர் ஆண்கள் சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் மேலும் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற 8 ஆயுள் தண்டனை கைதிகளிடம் விசாரணை செய்தனர்.

மாலை 4 ம ணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடந்த விசாரணையின் போது கைதிகளின் நன்னடத்தை மற்றும் எத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது உட்பட பல தகவல்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம் இக்குழுவினர் விசாரணை செய்தனர். இந்த விசாரணை சுமார் 15 நிமிடம் நடந்தது. அப்போது நளினி தன்னை சிறையில் இருந்து விரைவில் விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானும், என் கணவரும் சிறையில் உள்ள நிலையில் அவள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளாள். அவளுடன் சேர்ந்து, எனது எஞ்சிய வாழ்நாளை அமைதியுடன் கழிக்க விரும்புகிறேன். சிறையில் நான் 19 ஆண்டுகளாக இருந்து விட்டேன். தேவையான காலத்தை விட கூடுதல் நாள் தண்டனையை அனுபவித்து விட்டேன். சிறையில் நான் ஒழுக்கமாக இருந்துள்ளேன். எனவே என்னை விடுவிக்க வேண்டும் என்று நளினி கேட்டுக் கொண்டார்.

இதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

நளினியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து இன்று காலை வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 11 பேரிடம் விசாரணை செய்தோம். இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு விரைவில் அனுப்பி வைப்போம்.

அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளின் படியும், அறிவுரைகளின் படியும் தண்டனை கைதிகளிடம் விசாரணை செய்துள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதற்கிடையே வேலூர் மத்திய சிறை நன்னடத்தை அதிகாரியும் நளினி குறித்து தகவல்களை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தற் போது நளினியை விடுவிப்பது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. எத்தகைய அம்சங்களின் அடிப்படையில் நளினியை விடுதலை செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த சிபாரிசு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தெரிவித்தார். நளினிக்காக அனுப்பப்படுவது போன்று ஆண்கள் சிறையில் உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் முன்னதாக விடுவிப்பது தொடர்பான சிபாரிசு பரிந்துரை அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

அறிவுரை குழு தரும் தகவல்களின் அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகளை முன்னதாக விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும். இந்த சிபாரிசை ஏற்பதும், ஏற்காததும் தமிழக அரசின் விருப்பமாகும்.

ஈழத்தில் சூழ்நிலைகள் மாறி விட்ட நிலையில் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 3 பேரின் வேண்டுகோளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் விரைவில் விடுதலையாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

19 ஆண்டுகள் சிறையிலேயே வாழ்க்கையை கழித்து விட்ட ராஜீவ் கொலையாளிகள், இந்த தடவை எப்படியும் தங்களுக்கு விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

நளினியின் வக்கீல் துரைசாமியிடம் இது தொடர்பாக கேட்டபோது அவர் கூறியதாவது:-

கமிட்டியிடம் நளினி என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. என்றாலும் நளினி முன்னதாக விடுதலையாக வாய்ப்பு உள்ளது. கலெக்டர் தலைமையிலான அறிவுரைக்குழு தங்கள் அறிக்கையை அனுப்ப 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.

அதன் பிறகு அரசு இது பற்றி பரிசீலினை செய்யும். இதற்கு கொஞ்ச நாள் தேவைப்படும். உடனடியாக எதுவும் நடந்து விடாது. அது சுலபமும் அல்ல.

மார்ச் மாதம் 13-ந்தேதி புதிய சட்டசபையை திறந்து வைக்க சோனியா சென்னை வர உள்ளார். அதுவரை நளினி விஷயத்தில் எதுவும் நடக்காது என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்

இவ்வாறு நளினி வக்கீல் துரைசாமி கூறினார்.

என்றாலும் சில மாதங்கள் இடைவெளியில் நளினி விடுதலை செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி மாலைமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com