Thursday, January 28, 2010

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல...

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை உணர்த்தி நிற்கும் 6வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள். – புன்னியாமீன்.
நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன், 06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.

இதுகாலவரை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலை எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் தற்போதைய மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலையிருப்பதை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால், இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிவந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள், முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் நோக்குவது அவசியமானதாக இருக்கும்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வட மாகாணம்:
யாழ்ப்பாண மாவட்டம்

ஊர்காவற்துரை தேர்தல் தொகுதி


மஹிந்த ராஜபக்ஸ 4, 611 (46.19%)
சரத்பொன்சேக்கா 3,976 (39.88%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 53,111
அளிக்கப்பட்ட வாக்குகள் 10,321

வட்டுக்கோட்டை

சரத்பொன்சேக்கா 11,712 (62.68%)
மஹிந்த ராஜபக்ஸ 4,247 (22.73%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 63,991
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,436

காங்கேசந்துறை

சரத்பொன்சேக்கா 8,216 (56.90%)
மஹிந்த ராஜபக்ஸ 4,559 (31.57%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 69,082
அளிக்கப்பட்ட வாக்குகள் 14,933

மானிப்பாய் தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 13,390 (62.01%)
மஹிந்த ராஜபக்ஸ 5,749 (26.62%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 71,114
அளிக்கப்பட்ட வாக்குகள் 22,475

கோப்பாய் தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 13,151 (64.13%)
மஹிந்த ராஜபக்ஸ 4,538 (22.13%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 65,798
அளிக்கப்பட்ட வாக்குகள் 21,133

உடுப்பிட்டிய தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 8,974 (67.20%)
மஹிந்த ராஜபக்ஸ 2,545 (19.06%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 56,426
அளிக்கப்பட்ட வாக்குகள் 13,955

பருத்தித்துறை தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 8,585 (69.30%)
மஹிந்த ராஜபக்ஸ 2,361 (19.06%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 48,613
அளிக்கப்பட்ட வாக்குகள் 12,828

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 11,599 (62.39%)
மஹிந்த ராஜபக்ஸ 4,567 (24.57%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 65,141
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,450

நல்லூர் தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 11,543 (70.42%)
மஹிந்த ராஜபக்ஸ 3,554 (21.68%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 72,588
அளிக்கப்பட்ட வாக்குகள் 16,948

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 7,914 (66.17%)
மஹிந்த ராஜபக்ஸ 3,296 (27.56%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 64,714
அளிக்கப்பட்ட வாக்குகள் 12,414

கிளிநொச்சி தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 4,717 (75.11%)
மஹிந்த ராஜபக்ஸ 991 (15.78%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 90,811
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,566

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877 இது 63.84வீதமாகும். மஹிந்த ராஜபக்ச ஒரு தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்துடன் அவர் மாவட்ட ரீதியில் பெற்ற மொத்தவாக்குகள் 44,154 இது அளிக்கப்பட்ட வாக்குளில் 24.75 வீதமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72. 2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல.

எதுஎவ்வாறாக இருந்தாலும் இம்முறை யாழ் மக்கள் முற்றாக வாக்களிக்க முடியாதவாறு திட்டமிட்டமுறையில் சில குண்டுவெடிப்புச் சம்பவங்களும் , பொது பஸ் சேவை நிறுத்தங்களும் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சி மற்றும் சுயாதீன தேர்தல் கண்காணிப்புக் குழுக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கதாகும்.

தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வன்னி மாவட்டம்

மன்னார் தேர்தல் தொகுதி


சரத்பொன்சேக்கா 20,157 70.19 %
மஹிந்த ராஜபக்ஸ 6,656 23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 85,322
அளிக்கப்பட்ட வாக்குகள் 29,172

வவுனியா தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 31,796 66.02 %
மஹிந்த ராஜபக்ஸ 13,742 28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 112,924
அளிக்கப்பட்ட வாக்குகள் 49,498

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 6,882 73.47%
மஹிந்த ராஜபக்ஸ 1,126 18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 68,729
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,625

வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367 ஆகும் இது 66.86வீதமாகும். மஹிந்த ராஜபக்ச சகல தேர்தல் தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளதுடன் அவர் மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 28,740 ஆகும். இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 27.31 வீதமாகும்.

வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

அம்பாறை தேர்தல் தொகுதி

மஹிந்த ராஜபக்ஸ 73,389 (67.94%)
சரத்பொன்சேக்கா 32,895 (30.45%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 145,479
அளிக்கப்பட்ட வாக்குகள் 108,634

சம்மாந்துறை தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 27,003 (55.95%)
மஹிந்த ராஜபக்ஸ 19,991 (41.42%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 71,442
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,818

கல்முனை தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 32,946 (75.76 %)
மஹிந்த ராஜபக்ஸ 9,564 (21.95 %)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 66,135
அளிக்கப்பட்ட வாக்குகள் 44,030

பொத்துவில் தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 54,374 (59.69%)
மஹிந்த ராஜபக்ஸ 33,979 (37.42%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 131,779
அளிக்கப்பட்ட வாக்குகள் 91,862

திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105 இது 49.94 வீதமாகும். மஹிந்த ராஜபக்ச ஒரு தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்துடன் அவர் மாவட்ட ரீதியில் பெற்ற மொத்தவாக்குகள் 146,912. இது அளிக்கப்பட்ட வாக்குளில் 47.92 வீதமாகும்.

திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 306,562 ஆகும். இதில் 309,474 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 மூ வீத வாக்குப் பதிவுகளாகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 69,975 (68.74%)
மஹிந்த ராஜபக்ஸ 28,090 (27.59%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 155,537
அளிக்கப்பட்ட வாக்குகள் 103,685

கல்குடா தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 35,608 (60.45%)
மஹிந்த ராஜபக்ஸ 20,112 (34.14%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் (97,135)
அளிக்கப்பட்ட வாக்குகள் 60,186

பட்டிருப்பு தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 36,776 (80.12%)
மஹிந்த ராஜபக்ஸ 5,968 (13.00%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 80,972
அளிக்கப்பட்ட வாக்குகள் 47,065

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057. இது அளிக்கப்பட்ட வாக்குளில் 68.93 வீதமாகும். மஹிந்த ராஜபக்ச சகல தேர்தல் தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளதுடன் அவர் மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 55,663 ஆகும். இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 26.27 வீதமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு

மூதூர் தேர்தல் தொகுதி


சரத்பொன்சேக்கா 32,631 (51.09%)
மஹிந்த ராஜபக்ஸ 21,002 (38.03%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 85,401
அளிக்கப்பட்ட வாக்குகள் 55,915

திருகோணமலை தேர்தல் தொகுதி

சரத்பொன்சேக்கா 35,887 (69.42%)
மஹிந்த ராஜபக்ஸ 13,935 (26.9%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 86,685
அளிக்கப்பட்ட வாக்குகள் 52,748

சேருவில் தேர்தல் தொகுதி

மஹிந்த ராஜபக்ஸ 27,932 (63.10%)
சரத்பொன்சேக்கா 15,260 (34.47%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 69,047
அளிக்கப்பட்ட வாக்குகள் 44,832

திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது 54.09 வீதமாகும். மஹிந்த ராஜபக்ச ஒரு தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்துடன் அவர் மாவட்ட ரீதியில் பெற்ற மொத்தவாக்குகள் 69,752. இது அளிக்கப்பட்ட வாக்குளில் 43.04 வீதமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ் முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா.

சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால், ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம். பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை வழங்கப்பட்ட வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ பெற்ற மேலதிக வாக்குகள் அதிகமானவை. 160 தேர்தல் தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்த 130 தேர்தல் தொகுதிகளில் சிங்கள மக்கள் சார்பான தேர்தல் தொகுதிகளே அதிகம். அவர் தோல்வியடைந்த 30 தேர்தல் தொகுதிகளுள் சிறுபான்மை செரிவு அதிகம்.

இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.

இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட, ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின் எதிரொலியினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் அவதானிக்க முடியும். மஹிந்தவின் இலக்காகக் காணப்படுவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதே. தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அந்நிலை உருவாகக் கூடிய சாத்தியம் கணிசமான அளவிற்கு இருக்கின்றது. இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்த சிங்கள வாக்காளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதைவிட ஒரு ஒன்றிணைப்பைக் காட்டலாம்.

யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும் சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்துகொள்ளா விடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம் ஆனாலும், இவர்களின் குரல்களுக்கு வாக்காளர் மத்தியில் ஒரு மதிப்பு உண்டு என்பதை எம்மால் ஒரே அடியாக நிராகரித்துவிட முடியாது. எனவே இக்கட்சியினரும் தமது சுயநல நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு தமது சமூக நலனின் பால் உண்மையானதும், யதார்த்தபூர்வமானதுமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் நன்கு ஆலோசித்து சமூகத்தின்பால் உண்மையான நோக்குடன் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும்.

1 comments :

aaa January 28, 2010 at 8:04 PM  

“இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம்” என்னை பொறுத்த வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ,முஸ்லிம் காங்கிரஸினையோ தற்போதுள்ள சூழலில் விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை என்றே கூறுவேன் காரணம் பல இருந்தாலும் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் எடுத்த முடிவு சரியானதே என்றுதான் நான் நினைக்கிறேன் தங்களது சுயநலம் பார்க்காமல் மகிந்தவை எதிர்த்து எதுவித உடன்பாடுமில்லாமல் எதிர்கட்சியினுடன் சேர்ந்து அவரவர் பகுதிகளில் வெற்றியும் பெற்று உலகத்திற்கு காட்டியும் இருக்கிறார்கள்.
இதன் மூலம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய உலகத்தின் அழுத்தம் பேரினவாதிகளுக்கு கூடிக்கொண்டே போகலாம்.
அடுத்து நோக்குமிடத்து மகிந்தவின் வெற்றிக்கு 100% வீதம் பெரும்பான்மை சமூகம்தான் காரணம் என்றும் கூற முடியாது காரணம் வடக்கு,கிழக்கில் உள்ள சிறு பான்மை இனத்தவரைக்காட்டிலும் மற்ற ஏனைய பகுதிகளில் தான் சிறு பான்மையினர் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலானோர் பேரினவாதிகளின் கைப்பொம்மைகளாக செயல் படுவதனாலும்தான் மகிந்த வெற்றி பெற்றுள்ளார் என்பதும் நிதர்சனம்.

எப்படிப்பார்த்தாலும் அனைத்து பகுதி சிறு பான்மை அரசியல் தலைவர்களும் ஒன்று பட்டால் ஆலும் கட்சியாக முடியா விட்டாலும் எதிர்கட்சி ஆசனத்தையாவது பெற்று சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்தி என்பதை நிரூபித்து காட்ட முடியும் ஆனால் சுயநல அரசியல் செயும் சிறுபான்மை அரசியல் வாதிகள் திருந்தாவிட்டலும் கூட மக்கள் திருந்துவார்களா என்பதுதான் இன்று கேள்வியாகவுள்ளது.
இனிவரும் தேர்தல்களிலாவது அற்பசொற்ப லாபங்களுக்காக பேரினவாதிகளிடம் விலை போகாமல்,கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து சிறுபான்மை மக்களுக்கு சரியான வழியை காட்டக்கூடியவர்களாக ஒவ்வொருத்தரும் மாறவேண்டும் அப்போது தான் சிறுபான்மையினருக்கு விடிவு பிறக்கும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com