Monday, January 25, 2010

என் கண்முன்னே பசில் ராஜபக்ச புலிகளுக்கு பணம் வழங்கினார் ரிரான்.

2005 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக புலிகளுக்கு பசில் ராஜபக்சவினால் என் கண்முன்னே பணம் வழங்கப்பட்டது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) யின் செயலாளர் ரிரான் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

ரிரான் அலெக்ஸ் தனது வீட்டிற்கு நேற்று ஊடகவியலாளர்களை அழைத்து இது தொடர்பாக கூறுகையில், மங்கள சமரவீர அவர்கள் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த 2004ம் ஆண்டு காலகட்டத்தில் நான் விமான நிலையங்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது 2005ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ச இருந்தார். என்னை மஹிந்த ராஜபக்ச அலறி மாளிகைக்கு அழைத்து, தனக்கு புலிளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவேண்டிய தேவை உள்ளதாகவும், அந்தப்பக்கத்தில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகம் செய்யுமாறும் கூறினார்.

எமில் காந்தன் என்பவருக்கு பெரியதோர் சரித்திரம் உண்டு அதைப்பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை. 2002 ம் ஆண்டு டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன புனரமைப்பு அமைச்சராக இருந்தபோது, எமில் காந்தன் அவ்வமைச்சில் வேலை செய்துகொண்டிருந்தார். அத்தருணத்தில் அவர் எனக்கு அறிமுகமாயிருந்தார். மஹிந்தவின் வேண்டுதலை ஏற்று, எமில் காந்தன் கொழும்பில் உள்ள ஓர் வர்த்தகர், அவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டு எனவும் வேண்டுமானால் அவரை அறிமுகம் செய்ய முடியும் எனவும் கூறினேன். அப்போது பசில் ராஜபக்சவை அறிமுகமா என வினவினார் இல்லை என்றேன். பசிலை அறிமுகம் செய்து வைத்த மஹிந்த ராஜபக்ச, எமில் காந்தனை அவருடன் தொடர்பு படுத்துமாறும் கூறினார். அப்போதுதான் பசில் ராஜபக்சவை நேரடியாக சந்தித்தேன். அதன் பின்னர் எமில் காந்தனை பசில் ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

பசில் ராஜபக்சவும் எமில் காந்தனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். அப்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கியிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெறும் பொருட்டு வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் இதற்கான உதவியை புலிகளிடமிருந்து பெற்றுத்தாருங்கள், பிரதியுபகாரமாக எதை வேண்டுமானலும் செய்வோம் என பசில் ராஜபக்ச ஒருநாள் கூறியபோது, தமக்கு படகுகள் வாங்குவதற்கு பணம் வேண்டும் 180 மில்லியன்கள் (18 கோடி) தேவை எனக் கூறினார் எமில் காந்தன், பிரச்சினை இல்லை அப்பணத்தை தரமுடியுமென எவ்வித தயக்கமுமில்லாமல் கூறினார் பசில் ராஜபக்ச.

பிறிதொருநாள் எமில் காந்தனை சந்திக்க பசில் ராஜபக்ச வந்தார். நான் கனவில் கூட எதிர்பார்த்திராத சம்பவம் நிகழ்ந்தது. பசில் ராஜபக்ச பெரிய பயணப்பொதிகளுடன் வந்தார். பணம் பரிமாறப்பட்டது. வட மாகாண மக்களை வாக்களிக்காமல் தடுப்பதற்கு புலிகளுக்கு வழங்கப்பட்ட கப்பம் அது.

2007ம் ஆண்டு என்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து செய்து தடுத்து வைத்திருந்தபோது இவ்விடயத்தை அவர்களுக்கும் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் இவ்விடயத்தை எனது வாக்குமூலத்தில் பதிய மறுத்தனர். அவ்வாறு இவ்விடயத்தை எனது வாக்குமூலத்தில் பதியாவிட்டால் நான் எந்தவோர் வாக்குமூலத்திலும் கையொப்பம் இடமாட்டேன் என கூறினேன். பின்னர் என்மீது எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யாமல் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தார்கள்.

18 கோடி ரூபா பணத்திற்காக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்த பிரபாகரனுக்கு கோடாரியால் கொத்துவிழுந்தது சரியோ தவறோ என்பதை தீர்மானிப்பதற்கு இவ்விடயம் போதுமானது என மக்கள் பேசுகின்றனர். எதுவாக இருந்தாலும் இவ்விடயம் இன்று இலங்கையில் உள்ள பிரபல ஊடகங்கள் யாவற்றிலும் வெளிவந்துள்ளபோதும், தமிழ் ஊடகங்கள் எதுவும் இவ்விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்பது கேலிக்குரியது. இன்னும் சில நாட்களில் அது தமிழ் மக்களின் காதுகளில் விழும்போது எமில் காந்தன் இவ்விடயத்தை பயன்படுத்தி பசிலிடம் பணம் வாங்கிய விடயம் பிரபாகரனுக்கு தெரியாது என்று கதைவிடவும் தயங்கமாட்டார்கள் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com