Tuesday, January 26, 2010

நண்பகலுடன் 60% வாக்குகளிப்புகள், 40 வன்செயல்களுடன் நிறைவு.

யாழில் குண்டு வெடிப்புகள்;
இடைத்தங்கல் முகாம், மன்னார் மக்களுக்கு பஸ் வசதிகள் இல்லை;
ஜேபிபி பா.உ வவுனியாவில் தடுத்து வைத்து விடுதலை.


இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை ஆரம்பமான தேர்தலில் நண்பல் வரை யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 60 – 65% சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் இன்று அதிகாலை பல இடங்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்புக்கள் யாழ் மக்கள் மத்தியில் பய மனநிலையை ஏற்படுத்தி அவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதை தடுப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ள சதி வேலைகள் என தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுயாதீன அமைப்புக்கள் பலவும் தெரிவிக்கின்றன. காலையில் யாழில் வாக்களிப்பில் காணப்பட்ட மந்தநிலை மதியத்திற்கு பின்னர் நீங்கியுள்ளதாகவும் குறிப்பிடத்தக்களவு மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் தெரியவருகின்றது. வல்வெட்டித்துறைக்கு அண்மித்த உடுப்பிட்டி – யாழ்பாணம் வீதியில் இரு பெற்றோல் குண்டுகள் வெடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை பூராகவும் நண்பகல் வரை இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் 40 வன்செயல்கள் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி வாக்களிப்பு நிலையங்களுக்கு தமது முகவர்களை அழைத்துச் சென்ற ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 3 மணித்தியாலயங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருபது பேருடன் கிளிநொச்சி சென்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரித்திருந்தார். இராணுவப் பேச்சாளரின் மேற்படி கூற்றினை நிராகரித்துள்ள பா.உ விஜித கேரத் இராணுவத்திலிருந்து தப்பியோடிய எவரும் தன்னுடன் இல்லை எனவும், பொலிஸார் தம்மை 3 மணித்தியாலங்கள் தாமதப்படுத்தியதால் தமது தேர்தல் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வாக்களிக்கச் செல்வதற்காக எவ்வித போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என பா. உ விஜித கேரத் தெரிவித்துள்ளார். இம்மக்கள் யாழ் செல்வதற்காக பஸ்கள் ஏற்பாடு செய்யப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் வாக்களிப்புக் செல்வதற்காக பஸ்வண்டிகளுக்காக காத்திருந்தபோதும் வாக்களிப்பை தடுக்கும் நோக்கிலேயே திட்டமிட்ட முறையில் பஸ்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மன்னார் பிரதேச மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கான பஸ் வண்டிகளுக்கு குறைபாடு காணப்படுவதாக பவ்வரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வழமையாக சேவையில் உள்ள மன்னார் , வவுனியா , மதவாச்சியை இணைக்கும் பஸ் சேவைகள் இன்று தடைசெய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைப்பு மக்கள் வாக்களிப்பை உறுதிப்படுத்தும் முகமாக அச்சேவைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வேண்டியுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com