நிவாரணக் கிராமங்களில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் தற்போது எட்டு நிவாரணக் கிராமங்களே இயங்குகின்றன. இவற்றில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி (வலயம் 1), இராமநாதன் (வலயம் 2), அருணாசலம் (வலயம் 3), வலயம் 4, வலயம் 5, வலயம் 6, தர்மபுரம் ஆகிய நிவாரணக் கிராமங்களிலேயே தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம சேவகர் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 300 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். பரந்தன் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் மற்றும் மதியாமடு கிராமங்களிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட ஏனைய நிவாரணக் கிராமங்களிலிருந்து 300 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் அடுத்த வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். பரந்தன் உமையாள்புரம் குமரபுரம் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்த துரித நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment