Friday, October 23, 2009

கப்பலில் கனடா சென்றுள்ள சிலரின் உடலில் புலிச் சின்னம் (பச்சை) பொறிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கம்போடியாவில் பதிவுசெய்யப்பட்ட Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) என இனங்காணப்பட்டுள்ளது.
76 இலங்கையர்களுடன் கனடா கடற்பரப்பைச் சென்றடைந்த கப்பல் கடந்த மாத முற்பகுதியில் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளமை சர்வதேச கப்பல் போக்குவரத்து பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. Ocean Lady (ஓசியன் லேடி) எனும் பெயருடன் கனடியக் கடற்பரப்பை அடைந்த குறிப்பிட்ட கப்பலின் உண்மைப் பெயர் Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) எனவும், இக்கப்பல் தனது கடற்பயணத்தின் போது கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மும்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றுள்ளதுடன், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவின் வடமேற்கேயுள்ள முந்திரா (Mundra) எனும் துறைமுகத்தை செப்படம்பர் மாதம் 8ம் திகதி அடைந்த இரு பதிவுகளே சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதன் பின்னர் எவ்வித தரவுகளும் பதிவாகவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் கப்பல் எங்கிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் இதுவரை புலனாக வில்லை.

Lloyds MIU (The world's premier source of maritime information)எனப்படும் கப்பல் நகர்வுகளை பதிவு செய்யும் கம்பனியின் தகவல்களின் அடிப்படையில் பிரின்சஸ் ஈஸ்வரி கம்போடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், 2008 ம் ஆண்டில் குறிப்பிட்ட கப்பல் இந்தோனேசியா, தாய்வான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கப்பல் கம்பனியின் பதிவில் பதியப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் விலாசங்களும் பாவனையில் இல்லை என தெரியவருகின்றது.

குறிப்பிட்ட கப்பல் விடயத்தில் கடல் பிரயாணம் தொடர்பான சகல சர்வதேச நிறுவனங்களையும் ஆர்சிஎம்பி (Royal Canadian Mounted Police) யினர் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டிவருகின்றனர். திரட்டப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆர்சிஎம்பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட கப்பல் எவ்வாறு கடத்தல் காரர்களின் கைகளில் வீழ்ந்தது என்ற விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள 76 பயணிகளும் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை அரசினால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தேடப்படும் கார்த்தீபன் மாணிக்கவாசகர் அடையாடம் காணப்பட்டுள்ளார். 26 வயதுடைய இவரது பெயர் சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) தேடப்படுவோர் பெயர்ப்பட்டியலில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பலில் காணப்பட்ட 76 பேரில் சிலரது உடலில் புலிகளின் சின்னம் குத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக கனடிய பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் புலிகள் இயக்கத்தின் உண்மையான உறுப்பினர்கள் முடிந்தவரை தமது அடையாளத்தை வெளிகாட்டாமல் பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பது பொதுவான விடயம்.

அதேநேரம் கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர்களின் ஒருவரான Jason Kenney அவர்கள், குற்றச் செயல்களில் தொடர்புடையதாக பதிவுகளைக் கொண்டுள்ளோர் மற்றும் கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தரப்படுத்தப்பட்டுள்ள புலிகளியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவர் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புலிகளின் எல்லை கடந்த நவீன ஆட்கடத்தல் தொடர்பாக சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் தமது முழுநேர பார்வையை திருப்பியுள்ளதுடன், இக்கட்டமைப்பில் உள்ள பலருக்கும் வலை விரித்துள்ளனர். அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா, துருக்கி, பர்மா போன்ற நாடுகளில் இருந்து செயற்படும் பலர் குறிப்பிட்ட நாடுகளின் உள்ளுர் புலனாய்வு நிறுவனங்களினதும், அங்கு செயற்படக்கூடிய சர்வதேச புலனாய்வு நிறுவனங்களினதும் வலைகளில் மாட்டியுள்ளதுடன் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.

புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நவீன ஆட்கடத்தல் வியாபாரம் சர்வதேச சமுகத்தின் பார்வையை ஈர்த்துள்ளதுடன், இவ்வியாபாரம் மேற்குலகின் பாதுகாப்புக்கு கூட அச்சுறுத்தாலாக அமையும் என நம்பப்படுகின்றது. சர்வதேசம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டுவருகின்ற நிலையில் சகல பயங்கரவாத அமைப்புக்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிவரும் புலிகள் தமது இராணுவப் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள தற்கொலைதாரிகளை மேற்குலக நாடுகளுக்குள் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அந்நாடுகள் தமது எச்சரிக்கை மணியை அசைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது எனலாம். அவ்வாறான ஓர் நிலை தோன்றும் போது கடந்த காலங்களில் புலிகளின் உள்நோக்கம் புரியாமல் அவ்வியக்கத்தின் செயற்பாடுகளுடன் தங்களை இணைந்து தம்மை இனம் காட்டிக்கொண்ட பலரும் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்வர் என்பது கவலைதரும் விடயமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com