வாதத்துக்காக பேசாமல், வாழ்க்கையை பேசுவோம். ( வருந்துகின்றோம் ) -யஹியா வாஸித் –
08-10-2009 நாம் வெளியிட்ட வாதத்துக்காக பேசாமல் வாழ்க்கையை பேசுவோம் என்ற கட்டுரையில் குறிப்பிட்ட, மிதிவெடிக்கு காலை இழந்ந அந்த இளைஞன் ஏற்புவலி காரணமாக நேற்று இறந்து விட்டார். அவரது உடலை இன்று கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு எடுத்துச் செல்கின்றார்கள் என்பதையும், இரண்டு தினங்களுக்கு முன் அவரது 16 வயது மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்ததென்பதையும் ரொம்ப மனவருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
அந்த இளைஞன் மே 14ம் திகதி, அரசின் அழைப்பை ஏற்று, அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் போது, விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த மிதிவெடியில் காலை இழந்ததாக பேசிக் கொள்கின்றார்களே. இது யார் குற்றம் இறைவா. யார் குற்றம். அரசின் குற்றமா. விடுதலைப்புலிகளின் குற்றமா. மூணு வேளையும் மூச்சுவிடுவோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த அந்த மகாத்மாக்களின் குற்றமா. யாமிருக்கப் பயமேன் என்று சொல்லி எங்களுடன் காலம், காலமாக திருவிளையாடல் நடாத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மாவான உனது குற்றமா. புரியலையே இறைவா.
பெண்குழந்தையை. விடுதலைப்புலிகள் பயிற்சிக்காக அழைத்து சென்றுவிடுவார்களே என்ற பயத்தில், அவசர அவசியமாக அந்த பாலகிக்கு 16 வயதில் திருமணம் நடாத்தி முடித்தார்களே. அய்யகோ. இது யார் குற்றம் கடவுளே. தாய் தந்தையரின் குற்றமா. உற்றார் உறவினரின் குற்றமா. வாழ்க்கையை தொலைத்துவிட்ட மொத்த தமிழனின் குற்றமா. எங்கள் அரசியல் வக்கற்ற தனத்தின் குற்றமா. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவழிப்போம் எனக்கூறிக் கொண்டு இன்னும் கல்லாகவே இருக்கும் அந்த வெங்கடாசலபதியான உனது குற்றமா. பொறுக்க முடியலையே நாயனே.
காலையிழந்த அப்பா பிணமாக, மூக்கை பிடித்தால் வாயை ஆ என்று திறக்கத் தெரியாத அம்மா 16 வயதில் அபலையாக, ஒண்ணுமே தெரியாமல், புரியாமல் மூன்று நாள் குழந்தையொன்று இந்த சூனியத்தை விறைத்துக்கொண்டு. என்ன கடவுளே இது. ஆழிக் கூத்து, ஊழிக் கூத்து, சுனாமிக் கூத்து, வன்னிக் கூத்து, என ஆயிரம் கூத்து நடாத்தியும் உனது நரபலி ஆசை முடியலையா. போதும் கடவுளே. போதும். மூச்சு முட்டுகின்றது தெய்வமே. உணவு தொண்டை குழியை கடக்க மறுக்கின்றது பிரம்மனே. அடிவயிற்றை யாரோ பிராண்டுகின்றார்கள் சக்தியே. அப்பா இல்லாத குழந்தைகள். அம்மாவைத் தொலைத்த குழந்தைகள். இரண்டும் இருந்தும் குழந்தைகளை தேடிக் கொண்டிருக்கும் முதியோர்கள். எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்துவிட்ட தமிழன். புரியலை. ஒண்ணுமே எங்களுக்கு புரியல. கோட் இஸ் கிறேட் என்கின்றார்கள். அதன் அர்த்தம் கூட தெரியாமல் செத்து விடுவோமோ என்ற ஆதங்கம் மொத்த புலம் பெயர் தமிழனின் இதயத்தை சம்மட்டி கொண்டு விளாசுகின்றது அப்பனே.
கடவுள் மனிதனைப் படைத்து பூமிக்கு அனுப்பும் போது, நான் உன்னை மனிதனாக பூமிக்கு அனுப்புகின்றேன். நீ திரும்பி இங்கு வரும் போது தெய்வமாக வர வேண்டும் என்று சொன்னாராம் என்று பெரியவர்கள் பேசிக்கொள்கின்றார்கள். கடவுளே, பரம்பொருளே, நீ இப்படி எங்களை வதைத்தால் எப்படி ஐயனே எங்களால் தெய்வமாக வர முடியும். சக்தியே உடனடியாக எங்களுக்கு, அந்த வாழ்க்கையை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தை கற்றுத்தா. இல்லையென்றால் நாங்கள் அங்கு மிருகமாகத்தான் வர வேண்டியிருக்கும் பிதாமகனே. பிளீஸ் வாழ்க்கையை வெற்றி கொள்ளும் அந்த சூட்சுமத்தை எங்களுக்கு கற்றுத்தா.
காட்சி - 1
அந்த சகோதரி முந்தா நாளுக்கு முதல்நாள்தான் சிறிலங்கா என்கின்ற அந்த கந்தக பூமியை தரிசித்துவிட்டு வந்திருந்தார். அவருடைய கணவரின் ஒரேயொரு சகோதரர் வன்னியில் ஏற்பட்ட மிதிவெடி மிதிப்பில் காலை இழந்ததால் அவரை கொழும்பு ஆசுபெத்திரியில் வைத்திருப்பதாக செய்தி கசிந்து “ சிங்களவன் கொன்றால் கொண்டு போடட்டும்” என்ற ஒரு மன அழுத்தத்தில் அண்ணனைப் பார்க்க கணவனும், மனைவியும் பதின் மூன்று வருடத்தின் பின், கைகுழந்தையுடன் சிறிலங்கா சென்று வந்திருக்கின்றனர்.
அக்கா எப்படி அக்கா சிறிலங்கா இருக்கின்றது. வவுனியாயில் சிங்கள இராணுவம் கொடுமை புரிகின்றதாமே ? எப்படி அக்கா போய் தப்பி வந்தீர்கள். கொழும்பு போய் ஆறுநாட்கள் தங்கியிருந்தோம். எயார்போர்ட்டில் எங்கள் பெட்டிகளை திறக்கவேயில்லை. நேரடியாக அங்கிருந்து கொழும்பு போய் ஒட்டலில் றூம் எடுத்து தங்கினோம். யாரும் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. ஆறுநாட்களும் தொடர்ந்து ஆசுபெத்திரிக்குப்போய் அண்ணனைப் பார்த்தோம். ஆட்டோவில்தான் சென்றோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஆட்டோவை ராணுவத்தினர் நிறுத்தி எங்கே போகின்றீர்கள் எனக்கேட்டனர். ஆசுபெத்திரிக் கென்றதும் பாஸ்போட்டுகளைக் கூடப்பார்க்காமல் போகச் சொன்னார்கள்.
( கொழும்பில் என்னன்னவோ கொடுமைகள் தமிழ்பேசும் தமிழருக்கு நடப்பதாக இங்கு பழைய பஞ்ஞாங்கக்காறர்கள் கூப்பாடு போடுகின்றார்களே என்ற வாதத்தை நான் அந்த தாயிடம் வைக்கவில்லை. அவர், அந்த தாய் வாழ்க்கையைப் பேசினார் )
14-10-2009
0 comments :
Post a Comment