Friday, October 2, 2009

ஹிலாரியின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு அரசு வன்மையான கண்டனம்

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முதன்முதலாக இராணுவத்தினர் மீது இப்படி ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார்களெனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ள கூற்றை நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இந்தக் கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டார்.

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை (கற்பழிப்பை) யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்ளார்களென்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளமை ஓர் அப்பட்டமான கட்டுக்கதையாகுமென்று கூறிய அமைச்சர் கெஹலிய, பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி கூறியது கவலை தருவதாகக் குறிப்பிட்டார். புலிகள் இயக்கப் பெண்களும், வேறு பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஹிலாரி கிளின்ரன் இவ்வாறு கூறுகையில், புலிகள் இயக்கத்தினருக்குச் சட்ட ரீதியான எந்த ஆதரவும் வழங்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒரு விடுதலைக்கான நடவடிக்கையையே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com