மகின்த சகோதரயாவுக்கு ( பாகம் – 2 ) - யஹியா வாஸித் –
ஐரோப்பாவில் பெல்ஜியம் என்ற ஒரு குட்டி நாடு இருக்கின்றது. பிறஸ்ஸல்ஸ் இதன் தலைநகரம். இந்த நாடு சில வருடங்களுக்கு முன் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு குட்டி திட்டம் தீட்டியது. ஆம். வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், உலகில் ஆங்காங்கே பரவியுள்ள பெல்ஜியம் நாட்டவர்களையும் அழைத்து நமது நாட்டில் முதலிடச் செய்வோமே என கங்கணம் கட்டினார்கள். சரி எவ்வாறு இவர்களை தொடர்பு கொள்வது. எவ்வாறு இவர்களை அழைப்பது. உடனே தங்கள் நாட்டிலுள்ள புத்திஜீவிகளையும், வியாபார ஆர்வலர்களையும் அழைத்தார்கள். பேசினார்கள். திட்டங்கள் ஏதும் இருந்தால் தாருங்களேன் என்றார்கள். ஈஸி வே. வெரி, வெரி ஈஸி வே அங்கு சொல்லப்பட்டது.
ஆம். உலகெங்கும் நமக்கு எத்தனை தூதுவராலயங்கள் இருக்கின்றது. அந்த தூதுவராலயங்களில் கொமர்ஷியல் டிவிஷன் இருக்கிறதா. ஆம் இருக்கின்றது. சரி அந்த கொமர்ஷியல் டிவிஷனை கொஞ்சம் முடுக்கி விட வேண்டியதுதானே. அது எப்படி கொமர்ஷியல் டிவிஷனை முடுக்கி விடுவது, என்ற மறு கேள்வி கேட்காமல் கொமர்ஷியல் டிவிஷன்களை முடுக்கி விட்டார்கள்.
பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட். பெல்ஜியத்தின், கடற்கரை அருகில் அமைந்த ஒரு பகுதியில் யாரும் எவரும், இன்வெஸ்ட் பண்ணலாம். 18300 யுரோ உங்களிடம் இருக்கின்றதா. வாருங்கள் வந்து முதலிடுங்கள் என கதவுகளை திறந்தார்கள். ஒரே நாளில் வங்கிகணக்கு, முதலீட்டுபத்திரங்கள், கம்பனி ரெஜிஸ்ரேஷன் என செய்து கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள். பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மில்லியன், பில்லியன் யூரோ என முதலிட்டாளர்கள். சிக்கன் சொப், ரெஸ்ட்ரூரண்ட் தொடக்கம் கப்பல் கட்டும் கம்பனி, பாரிய ஜெனரேட்டர் கம்பனி என பல ஆயிரம் கம்பனிகள் தொடங்கப்பட்டன. இன்று பெல்ஜியம் சீனா, இந்தியாவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் கொடிகட்டிக் கொண்டிருக்கின்றது.
கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக என்ன மந்திரம், மாயவித்தை செய்தார்கள்.
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெல்ஜியம் எம்பஸிக்கு வரும் வாடிக்கையாளர்களின் ( விஸா, கடவுச் சீட்டு, வர்த்தகம், அரசியல், பொருளாதார கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் ) விலாசம், டெலிபோன், ஈமெயில் அட்ரஸ்களை தொகுத்து, தினமும், அல்லது வாரத்துக்கொரு முறை பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சம்பந்தமான தகவல்களை அனுப்பினார்கள்.
கொமர்ஷியல் டிவிஷனூடாக அவ்வவ் நாடுகளிலுள்ள பத்திரிகைகளில் சிறு, சிறு விளம்பரங்கள் செய்தார்கள். அத்துடன் சிறு, சிறு கருத்தரங்குகள் வைத்தார்கள்.
தங்கள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களை இனம்கண்டு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தங்களது கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக கண்காட்சிகள் நடாத்தி, தங்களது நாட்டில் இப்பொருட்களின் உற்பத்தி செலவு மிகமிக குறைவு என நிரூபித்தார்கள்.
அந்தந்த நாட்டிலுள்ள தங்கள் நாட்டவர்களை அழைத்து, நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், தலைமையதிகாரியை தொடர்பு கொண்டு எங்கள் நாட்டில், இப்பொருளை உற்பத்தி செய்வது இலகு, அப்பொருளுக்கு வரிவிலக்கு இருக்கின்றது, அழகான ஈஸீயான கப்பல் துறையிருக்கின்றது என்பதை புரிய வையுங்கள். அப்படி அவர்கள் முதலிட்டால் உங்களுக்கு சன்மானங்கள் வழங்கப்படும் என ஒரு ஆலோசனையை வழங்கினார்கள்.
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தூதுவராலயங்களில், பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என ஒரு பிரிவை அமைத்து, அந்த நாட்டிலுள்ள முதலீட்டாளர்களை கவர வழிஅமைத்தார்கள். ( சிறிலங்காவில் கொழும்பு ஹைலெவல் ரோட்டில் இதற்கென அலுவலகம் திறந்துள்ளார்கள் )
பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டுக்கென ஒரு அலுவலகத்தை பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் திறந்து துடிப்பான நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களை வேலைக்கமர்த்தினார்கள்.
அத்துடன் சைனாவைச் சேர்ந்த பல இளைஞர்களை வேலைக்கமர்த்தி சைனாவிலிருந்தே முதலீட்டாளர்களை பெல்ஜியத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
சிறிலங்கா பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நமது நாட்டின் அபிவிருத்தியை 2011 ஆகும் போது 5வீதத்தால் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியதாக, அந்நிதியத்தின் சிறிலங்கா விவகார தலைவர் பிரயன் எயிட்கென் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் கடந்த வருடம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், 50க்கு அதிகமான ஆடைஉற்பத்தி, கட்டுமானத்துறை, வெப்ப ஆடை, சீமெந்து உற்பத்தி, இரத்தினக் கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
இவற்றையெல்லாம் நோக்கும் போது யுத்தத்தில் செலுத்திய கவனத்தினால் பொருதாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது. இராணுவம்தான் அந்த வேலையை பார்த்துக் கொண்டதே. அப்படியானால் பொருளியல் நிபுணர்கள் என்ன செய்தார்கள். அவர்களுக்கு அதற்குரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அல்லது கஜானா காலி.
இனியாவது ஒரு விதி செய்வோம். உலகம் முழுதும் கிட்டத்தட்ட 53 தூதுவராலயங்கள் சிறிலங்காவுக்காக இயங்குகின்றன. அவைகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன் ஊழியர்களை யுத்த முஸ்தீபுகளுடன் இயக்க வேண்டும். எமது கொமர்ஷியல் டிவிஷன் அதிகாரிகள் ரொம்ப வீரியமானவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இயங்குவதற்குரிய பண பலம் போதாது என்பதை பல நாட்டிலுமுள்ள கொமர்ஷியல் டிவிஷன்களையும் பார்க்கும் போது புரிகின்றது. அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். யுத்தகாலத்தில் இராணுவத்துக்கு எவ்வாறு சுதந்திரம் வழங்கப்பட்டதோ அதைவிட ஒரு படி மேலே போய் அவர்களுக்கு உதவிகளும், ஆலோசனைகளும், ஆலோசகர்களும் வழங்கப்பட வேண்டும்.
இன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள எம்மவர் டுபாய், கட்டார், பஹ்ரெய்ன் என அரபு நாடுகளிலும், நைஜீரியா, தன்சானியா, மடகாஸ்கார் போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் போய் முதலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏன். அவர்களால் நமது நாட்டில் முதலிட முடியாதா. விளம்பரம் போதாது. அதற்கு முதல் வேலையாக அரசு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தனது கொமர்ஷியல் டிவிஷன்களுக்கு கொஞ்சம் பணத்தை அள்ளி வீசி முதலில் நம்மவர்களை கவர்வதுதான் ஒரே வழி.
அரபுநாடுகளில் உள்ள நம்மவர்களுக்கும், அங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கின்றது. ஆனால் இந்திய தூதுவராலயமோ, கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக அரபிக்களை தட்டி எழுப்பி பெங்களூர் ஐரி பார்க்கிலும், கல்கத்தா இன்டஸ்ரியல் எஸ்டேட்டுகளிலும் முதலிட வைத்துள்ளார்கள். ஏன் இது எம்மால் முடியாதா. முடியும். ஆனால் நாட்டின் இன்றைய தளபதியான நீங்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
தடம் பார்த்து நடப்பவன் மனிதனல்ல.
தடம் பதித்து நடப்பவன்தான் மனிதன்.
( தொடருவேன்....)
17-10-2009
0 comments :
Post a Comment