Tuesday, September 8, 2009

தூண்டில்முள், தங்கூசி, தற்காப்பு அங்கிகளுடன் ஜே.வி.பி சபையினுள் வந்ததால் அமளிதுமளி

பாராளுமன்ற வளவிலிருந்து வெளியேறவிடாது ஜே.வி.பியை சோதனையிட பி. சபாநாயகர் உத்தரவு

மீனவர்களின் உயிர் காப்புக் கவசம் உட்பட பல மீன்பிடி உபகரணங்களைச் சபைக்குக் கொண்டுவந்து விளக்கமளித்த ஜே. வி. பி. எம்.பி.யின் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து எழுந்த சர்ச்சையையடுத்து சபையில் நேற்று பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டன.

அச்சமயம் சபைக்குத் தலைமை தாங்கிய உடவத்த நந்த தேரர் எம்.பி. மேற்படி பொருட்களை சபையிலிருந்து அகற்றும் படி உத்தரவிட்டதுடன் அச்சமயம் எழுந்த சர்ச்சைகளையடுத்து சபையை முதலில் 10 நிமிடங்கள் இதன் பின்னரும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போதும் சபையில் குழப்பம் ஏற்பட்டதால் ஐந்து நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்களின் பின்னர் பிரதி சபாநாயகர் தலைமையில் சபை கூடியது. அப்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஜே. வி. பி. எம்.பி. பேமிசிறி மானகே தற்காப்பு அங்கி, தூண்டில், நைலோன் நூல் போன்றவை உயிராபத்து ஏற்படுத்தக்கூடியவை. அவ்வாறான பொருட்களை சபைக்கு எடுத்துவந்தவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கிணங்க சபாநாயகரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாத உறுப்பினரொருவரை தற்காலிகமாக பதவி நீக்கலாம். அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான விவாதம் சபையில் நடந்து கொண்டிருந்த போதே மேற்படி சர்ச்சைகள் ஏற்பட்டன.

ஆளும் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எதிரொலித்தன.

இந்த வேளையில், சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியே சென்றுவிட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடுமாறு அரசாங்க தரப்பு பிரதம கொறடா பிரதி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சபைக்குள்ளிருந்து வெளியேறிச் சென்ற ஜே. வி. பி. உறுப்பினர்கள் அனைவரையும் பாராளுமன்ற வளவிலிருந்து வெளியேறிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தி சோதனையிடுமாறும், அவர்களது அலுவலகங்களை சோதனையிடுமாறும் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பாராளுமன்ற பொலிஸாருக்கும், படைக்கல சேவிதருக்கும் உத்தரவிட்டார்.

பாராளுமன்றத்தினுள் உயிர்காப்பு அங்கி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை ஜே. வி. பி. உறுப்பினர் பிரேமசிறி மான்னகே கொண்டுவந்து காண்பித்து அரசாங்கம், வரி மூலம் பெருந்தொகை பணத்தை அறவிடுகிறது என குற்றம் சுமத்தினார்.

சபைக்குள் உயிர் காப்பு அங்கி மற்றும், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் தூண்டில் முட்கள், கூரிய முட்கள் போன்றவற்றை கொண்டுவந்தது எப்படி? என்றும் உடனடியாக அவர்களை சோதனையிட வேண்டும் என்றும் அரசாங்க தரப்பு பிரதம கொரடா பிரதி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

ஜே. வி. பி. உறுப்பினர்கள் ஆளும் தரப்பினரை நோக்கியும், பிரதி சபாநாயகரை நோக்கியும் தகாத வார்த்தைகளால் பேசியவாறு வெளியேறினர்.

வெளியேறிச் செல்லும் ஜே. வி. பி. உறுப்பினர் பேசிய வார்த்தைகளை வாபஸ்பெற வேண்டும் என்றும் பிரதி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். எனினும் செவிமடுக்காது வெளியேறிச் சென்றனர்.

இதேவேளை, அரசாங்க தரப்பு பிரதம கொறடா ஜே. வி. பி. உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத்திலிருந்தும், வளவிலிருந்தும் வெளியேறிச் செல்லாதவாறு நுழைவாயில்களை மூடி சோதனையிட வேண்டும் என்றும் பாராளுமன்றத்திலுள்ள அவர்களது அலுவலகங்களை சோதனையிட வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை பிரதி சபாநாயகர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய பாராளுமன்ற பொலிஸாருக்கும், படைக்கல சேவிதருக்கும் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பணிப்புரை வழங்கினார்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com