புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது; புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது என்று புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தி சானல் ராணுவ நிருபரும், பிரபல கட்டுரையாளருமான நிதின் கோகலே இலங்கையில் இறுதி கட்ட போர் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
“பிரம் வார் டூ பீஸ்” என்ற புத்தகத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று இந்தியா கூறி வந்தது. ஆனால் அது சரியான தகவல் அல்ல. இந்தியா ஏராளமான உதவிகளை இலங்கைக்கு செய்தது.
இந்திய கடற்படை ஏராளமான தகவல்களை இலங்கை ராணுவத்துக்கு கொடுத்து வந்தது. இதனால் விடுதலைப்புலிகளின் 12-க்கும் மேற்பட்ட ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை தகர்த்தது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வருவது தடைபட்டது.
2006-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா 5மி-17 ஹெலி காப்டர்களை இலங்கைக்கு கொடுத்தது. அவை இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் போல வர்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது. விடுதலைப்புலிகள் கடலிலேயே மிதக்கும் ஆயுத குடோன்களை அமைத்து இருந்தனர். அதை இந்தியா அடையாளம் கண்டு இலங்கையிடம் கூறியது. இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட குடோன்களை இலங்கை ராணுவம் தகர்த்தது. விடுதலைப்புலிகள் கப்பல்கள், படகுகளை தகர்க்க இந்திய கடற்படை முழு உதவி செய்தது.
ராமநாதபுரத்தில் இந்திய கடற்படை சக்தி வாய்ந்த ரேடாரை பொருத்தி இருந்தது. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் படகு, கப்பல் நடமாட்டத்தை கண்டு பிடித்து இலங்கையிடம் கூறியது.
இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடிந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக மன்மோகன் சிங் அரசு வெளிப்படையாக உதவிகள் செய்யாவிட்டாலும் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்ததாக கோகலே கூறியுள்ளார்.
இந்தியா மறைமுகமாக உதவிகளைப் பெருமளவில் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் வெளிப்படையாக ஆயுதங்களை அளி்த்ததும்தான் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என கோகலே தனது புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா என்னென்ன உதவிகளைச் செய்தது என்ற விவரங்களை கோகலே தனது புத்தகத்தில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment