Friday, January 2, 2026

டக்ளஸ் கைதின் உள்ளும் புறமும்.. ஜெகன்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கூறப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கடந்த சுமார் 30 வருடங்கள் இலங்கை அரசியலில் வடக்கு மக்களின் பிரதிநிதியாக, இலங்கை பாராளுமன்றின் 225 ஆசனங்களில் ஒரு ஆசனத்திற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா, கடந்த 26.12.2025 அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் சரத்துக்களை மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மஹர சிறைச்சாலையில் எதிர்வரும் 09.01.2026 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தேவானந்தா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, எந்தச் சட்டத்திற்கு ஆதரவாக டக்ளஸ் தனது பாராளுமன்ற காலம் முழுவதும் கை உயர்த்தி வரவேற்று அச்சட்டத்தினை நாட்டில் அமுல்படுத்த உறுதுணையாக இருந்தாரோ, அதே சட்டத்தின் கீழ் கைது செய்;யப்பட்டுள்ளார் என்று எக்காளமிட்டவர்களுக்கு விழுந்த முதலாவது அடி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளமையாகும்.

டக்ளஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை நீதியான முறையில் விசாரணை செய்யப்படவேண்டும். டக்ளஸ் தனது தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஆயுதத்தை அல்லது ஆயுதங்களை வன்செயல்கும்பல்களுக்கு வழங்கி இந்நாட்டு மக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தியிருந்தாலோ , அன்றில் அவ்வாயுதங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அதற்கான தண்டனைகளை அவர் அனுபவிக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இக்கைதினை தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் வலம்வருகின்ற பதிவுகளை – குறிப்பாக ஆதாரமற்ற சேறடிப்புக்களை கடந்து செல்வதென்பது – அநியாயம் ஒன்று இடம்பெறும்போது மௌனம் காத்து அடக்குமுறையாளர்களுக்கான பாதையை சீர் செய்து கொடுப்பதாக அமையுமென்பதால் டக்ளசின் கைதுக்கு பின்னர் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக பேச வேண்டியுள்ளது.

வுழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே தீர்பெழுதியுள்ள விட்டோடிகளும் தமிழீழ வியாபாரிகளும் டக்ளஸை துரோகி என்கின்றனர். டக்ளஸை துரோகி என்கின்ற தியாகிகளிடம் நான் கேட்கின்ற முதலாவது கேள்வி யாதெனில், நீங்கள் ஒருவனை துரோகி என்பதற்கும் தியாகி என்பதற்கும் பயன்படுத்துகின்ற பொதுவான அளவுமானி யாது?

இலங்கை அரசிடம் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை பெற்றுக்கொண்டதற்காக டக்ளஸ் துரோகி என்றால், பிறேமதாஸ அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பிரபாகரன் யார்? டக்ளஸை துரோகி என அளவீடு செய்த அளவுமானி பிரபாகரனின் ஆசனவாயினுள் நுழைய மறுப்பதேன்?

அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டமைக்காக டக்ளஸ் துரோகி என்றால் அவரை நான் ஒழுக்கமான துரோகி என்பேன், என்னென்றால் அவர் இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இவ்வாயுதங்களுக்கான சகல பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றேன் என நெஞ்சை நிமிர்த்தி துணிவுடன் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டிருக்கின்றார். ஆனால் பிரபாகரன் இவ்விடயத்தில் ஒர் ஒழுக்கமற்ற துரோகி. அவன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பின்கதவால் மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பான எவ்வித சாட்சிகளையும் விட்டுவைக்க வில்லை. காரணம் பிரபாகரன் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு தயாராக இருக்கவில்லை.

டக்ளசிற்கு , ஏன் சகல ஏனைய ஆயுதகுழுக்களுக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக ஆயுதங்களையும் சலுகைகளையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டது பிரபாகரனும் அவனது புலிகள் அமைப்புமேயாகும். ஆனால் குறிந்த ஆயுதங்கள் பெற்றுகொள்ளப்பட்ட நோக்கங்களை ஆய்வு செய்கின்றபோது, தனதும் சக தோழர்களதும் உயிர்களை தற்காத்துக்கொள்ள டக்ளஸினால் ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஆவணங்கள் ஊடாக தெளிவாகின்ற அதே நேரத்தில், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு முதற்படி என ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய – ஒப்பந்தத்தையும் (ஜேவிபி யின் மொழியில் தமிழீழத் தனியரசு) அதனூடாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கென அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கையில் இறங்கியிருந்த இந்திய படையினரை வெளியேற்றுவேன் என்ற பிறேமதாஸவின் தேர்தல் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கான கூலிப்படையாக பிரபாகரன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை களவாக பெற்றுக்கொண்டுள்ளார். அவை உலங்குவானூர்திகளிலும் பாரஊர்திகளிலும் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வந்திறங்கியமை யாவரும் அறிந்த இரகசியம்.

யார் துரோகி?

உயிர்வாழ்தல் ஒவ்வொரு ஜீவராசிகளினதும் பிறப்புரிமை. அரசியல் ஒவ்வொரு பிரஜைக்குமான யாப்புரிமை ( ஊழளெவவைரவழையெட சiபாவ) இந்த இரு உரிமைகளும் பிரபாகரனால் மறுக்கப்பட்டபோதுதான், டக்ளஸ் உட்பட பல்வேறு அரசியல் அமைப்புக்களும் தலைமைகளும் தனி நபர்களும் தங்களுக்குரித்தான பாதுகாப்பினை இலங்கை அரசிடம் பெற்றுக்கொண்டார்கள். தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்க ஆயுதங்களை பெற்றுக்கொண்டமை துரோகம் என்கின்ற மேதாவிகள், தமிழ் மக்களது அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவந்த இந்தியப்படையை விரட்டியடிக்க கூலிப்படையாக இலங்கை அரசிடம் பிரபாகரன் ஆயுதம் பெற்றுக்கொண்டதை தியாகம் என்கின்றனர்.

பிரபாகரனை பயங்கரவாதி, போதைப்பொருள் கடத்தல்காரன் என்று இலங்கை பாராளுமன்றிலே பேசியதற்காக டக்ளஸ் தேவானந்தா துரோகி என்கின்றனர். பாரத பிரதமர் ரஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததை தொடர்ந்து 1992ம் ஆண்டு புலிகள் அமைப்பு முதல்முறையாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா உட்பட உலகின் பலம்வாய்ந்த 32 க்கு மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்தது.

இந்நாடுகள் வெறுமனே ஆதாரங்கள் இன்றி புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யவில்லை. நாடுகள் அமைப்பொன்றை தடை செய்கின்றபோது, உலக அரங்கில் பயங்கரவாத செயற்பாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை, அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை சந்தேகங்களுக்கப்பால் உறுதிப்படுத்தியே தடை செய்யமுடியும். ஓவ்வொரு நாடும் அமைப்பொன்றை பயங்கரவாத அமைப்பென தடை செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை சட்டமாக்கி வைத்திருக்கின்றது.

அச்சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் கீழ்க்காணப்படும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை தடை செய்யும்:

மனித குலத்திற்கு எதிரான வன்செயல்கள் - (பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடல், சிவிலியன் மற்றும் நிராயுதபாணிகளை இலக்கு வைத்தல், மக்களை அச்சுறுத்துவதற்கு வன்செயலை பயன்படுத்தல்.) தமது இலக்கினை அடைவதற்காக பயங்கரவாக செயற்பாடுகளை மேற்கொண்டு அரசினை கட்டாயப்படுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தல், தமது அரசியல் கொள்கைகளை வலுக்கட்டாயமாக திணித்தல் கட்டளைக் கட்டமைப்பினை கொண்ட அமைப்பாக இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ளல், தொடர்சியான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதுடன், செயற்பாட்டு திட்டங்களை கொண்டிருத்தல்

பயங்கரவாத-நிதிச் செயற்பாடுகள் - பங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதியினை சேகரித்து அவற்றை பராமரித்தலும் பயன்படுத்துதலும். பினாமி அமைப்புக்களை இயக்குதலும் அவற்றினூடாக குற்றச் செயல்களை புரிதலும். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக மிரட்டி பணம் பறித்தல், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், கள்ளக்கடத்தலில் ஈடுபடுதல், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுதல்.

சர்வதேச ரீதியில் அவ்வியக்கம் செயற்படுகின்றதா என்பதையும் அதற்கு பல்வேறு நாடுகளில் செயற்பாடு உள்ளதா என்பதையும் புலிம்பெயர்ந்த மக்களின் வலையமைப்பை பயன்படுத்துகின்றதா என்பதையும் பிறநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றதா என்பதையும் நாடுகள் நுணுக்கமாக அவதானிக்கும்.

தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக செயற்பட்டு, இறையாண்மையை சீர்கெடுக்க முயல்வது, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிப்படைய செய்வது, ஆயுத கிளர்ச்சி அல்லது உள்நாட்டுப் போரை ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடல்,

புலனாய்வு அமைப்புக்களின் தகவல்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், நட்பு நாட்டு தகவல்கள் மற்றும் ஐநா வின் பாதுகாப்பு ஆய்வறிக்கை பயங்கரவாத செயற்பாடுகளில் குறித்த அமைப்பு ஈடுபடுகின்றது என்பதை உறுதி செய்தால் அரசுகள் அமைப்புக்களை தடை செய்வதற்காக சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த அடிப்படையில் மேற்கூறப்பட்டுள்ள சகல செயற்பாடுகளையும் கொண்டுள்ள அமைப்பான புலிகள் அமைப்பு உலகின் 32 க்கு மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பு என உலகப்புகழ் பெற்றிருக்கின்ற நிலையில், அவ்வமைப்பின் தலைவனை பயங்கரவாதி எனக் குறிப்பிடும் தனிநபர் ஒருவர் எவ்வாறு துரோகியாக முடியும்? அவ்வாறாயின் பிரபாகரனை துரோகி என்றதற்காக டக்ளஸை துரோகி என்போர், பிரபாகரனையும் அவனது அமைப்பையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள 32 க்கு மேற்பட்ட நாடுகளையும் அதன் தலைவர்களையும் மக்களையும் துரோகிகள் என்கின்றனரா? மாறாக அந்நாட்டு தலைவர்களின் பாதங்களை கழுவிக்குடித்து அவர்களுக்கு சேவகம் புரிகின்றனர்.

2019 ம் ஆண்டு டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னணி பாதாள உலக கோஸ்டி தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான மாக்காந்தர மதுஸ் என்பவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெலிவேரிய பிரதேசத்தில் 2019.05.16 ம் திகதி கைப்பற்றப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளில் ஒன்று டக்ளஸ் தேவானந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி என்ற வகையில் டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இலங்கையில் இயங்கும் இயங்கிய ஒரே ஒரு கொலைக்கும்பல், கொள்ளைக்கும்பல் மாக்காந்தர மதுஸ் அல்ல. இதற்கு முன்னரும் தற்போதும் நூற்றுக்கணக்கான கிறிமினல்கள் இயங்கினார்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட முதலாவது ஆயுதம் மாக்காந்தர மதுஸிடமிருந்து கைப்பற்றப்பட்டதுதான் என்பதும் இல்லை. ஆகையால் டக்ளஸ் மீது வழக்கு தொடரப்படக்கூடாது என்பதும் எனது வாதம் அல்ல மாறாக அவர் மீது கருணை காருணியம் இன்றி வழக்கு தொடர்ப்படவேண்டும் அவை நியாயமாக விசாரணை செய்யப்படவேண்டும் என்பதுதான் இங்கு மேலான விடயம்.

சட்டத்தின் முன் சகலரும் சமம் , சட்டத்தின் சம பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள் என இலங்கை அரசியல் யாப்பின் 12 சரத்து கூறுகின்றது. இதன் பிரகாரம் நாட்டு மக்கள் சகலரையும் சமமாக நாடாத்துவோம் சட்டத்தின் பாதுகாப்பை சகலருக்கும் சமமாக வழங்குவோம் என்ற உறுதி மொழியை வழங்கி ஆட்சியை கைப்பற்றிய அரசு அதன் பிரகாரம் அவ்வாக்குறுதியை பிசகாமல் பேணுகின்றதா என்பது அடுத்த கேள்வி.

சொத்தி உபாலி, நாவல நிஹால், ஹோனவல சுனில், தொட்டலங்க கனகு, பத்தேகான சஞ்சீவ வில் ஆரம்பித்து இறுதியாக மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்ற ஹெகெல்பத்தர பத்மே எனப்படுகின்ற ஹொரலாகமகே மன்டினு பத்மசிறி பெரேரா முதலான நூற்றுக்கணக்கான பாதாளஉலக புள்ளிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அவ்வாயுதங்கள் எவ்வாறு குறித்த நபர்களிடம் சென்றது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பின் 12ம் சரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.

அத்துடன் இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஜிஹாடில் ஆ ரம்பித்து இறுதியாக புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த குழுவினர் வரைக்கும் இலங்கை இராணுவம் ஆயுதங்களை வழங்கியிருக்கின்றது. அந்த ஆயுதப்பரிமாறல்களில் இன்றைய அரசின் பிரதான கட்சியான ஜேவிபி யினரும் பங்கெடுத்திருக்கின்றனர் என்ற அரசல்புரசலான விடயங்களும் உண்டு. எனவே அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் யாவும் அரசின் ஆயுதக்களஞ்சியத்தை வந்தடைந்து விட்டதா? எத்தனை ஆயுதங்கள் ஜனநாயகத்துடன் சங்கமித்து மக்களுடன் உரையாடுகின்றது என்பதையும் பரிசுத்தமான அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்கின்றனர்.

இறுதியாக இலங்கை அரசிடம் நான் முன்வைக்கின்ற கோரிக்கை யாதெனில், டக்ளஸ் தேவானந்தவிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றடைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்ற ஆயுதங்களைவிட பல நூறு மடங்கு ஆயுதங்கள் புலிகளிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றிருக்கின்றது. அவ்வாறு அக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய புலிகள் பலர் இன்றும் உயிருடன் நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்வதுடன் அவர்கள் இந்நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும் தங்கள் எதிரிகளை இலக்குவைக்கவும் இப்பாதாள உலகக்கும்பல்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்பதுடன் அவ்வாறன சில நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டும் உள்ளதை பாரதூமாக எடுத்து, புலிகளுக்கும் பாதாளக்குழுக்களுக்குமுள்ள தொடர்பினையும் விசாரணை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com