Monday, July 27, 2009

கருணாவின் சுவிஸ் சுற்றுலா ரத்து.

சிறிலங்கா அரசின் தற்போதைய அமைச்சரும் முன்னாள் புலிக்கேணலுமாகிய விநாயக்கமூர்த்தி முரலிதரன் தனது பரிவாரங்களுடன் சுவிஸ் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தநிலையில் இப்பயணத்திற்கான சுவிற்சர்லாந்து வீசா மறுக்கப்பட்டுள்ளதாக கருணாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கான வீசா மறுக்கப்பட்டமை சுவிற்சர்லாந்து நாடு எவ்வாறு மனித உரிமைகளை, மக்களின் மனஉணர்வுகளை மதிக்கின்றது எனும் விடயத்தில் மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பேசிக்கொள்கின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அகதி முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து நிற்கும் நிலையில், கருணா குழுவின் பயணம் தொடர்பாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருந்ததாக அங்கு வாழும் மக்களுடாக அறிய முடிந்துள்ளது.

கருணாவின் பயண இரத்து விடயம் அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கருணா கட்சி உறுப்பினர்களின் சம்பளப்பணத்தை சுருட்டிக்கொண்டு சுவிற்சர்லாந்து சுற்றுலா செல்கின்றார் எனவும் இப்பயணத்திற்கான முழுச்செலவு கருணாவினுடையது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை முறியடிப்பதற்காக கருணாவின் ஆட்களால் இயக்கப்படும் இணையங்களில் கருணாவின் சுற்றுப்பயணம் அரசின் முழு அனுசரணையுடன் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசின் அனுசரணையில் இடம்பெறும் இராஜதந்திரிகளுக்கான பயணமொன்றிற்கு எந்த நாடும் மறுப்பு தெரிவிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். எது எவ்வாறாயின் அரசின் அனுசரணையில் கருணாவின் பயணம் ஏற்பாடாகியிருந்தால், அரசின் சிபார்சிற்கும் அப்பால் அக்குழுவிற்கான விசா மறுக்கப்பட்டிருக்கின்றதாயின் கருணா இவ் உலத்தினால் ஏவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பதை ஊகித்துக்கொள்வதற்கு விசேட அளவு மானிகள் எதுவும் தேவையில்லை.

அத்துடன் கருணா பயணம் செல்லும் போது தனது குழுவுடன் மூவைரை அழைத்துச் சென்று அவர்களை லண்டன் அனுப்ப திட்டமிட்டிருந்தாகவும், அதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 35 லட்சங்கள் பெறப்பட்டிருந்தாகவும் தெரியவருவதுடன் அவர்கள் தற்போது தமது கடவுச்சீட்டுக்களையும் தாம் வழங்கிய முற்பணத்தையும் கேட்டு அலைந்து திரிவதாகவும் கதைகள் உலாவுகின்றன.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கிய கருணாவின் சுவிற்சர்லாந்து பிரதிநிதி அவர்களுக்கான விசா இன்னும் 15 நாட்களில் கிடைக்கப்பெறும் என தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com