Sunday, June 21, 2009

இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் வெற்றிவிழா ஜேர்மனியிலும் கொண்டாடப்பட்டது.

இலங்கையை 3 தசாப்தங்கள் பீடித்திருந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் வெற்றிவிழா நேற்று பிற்பகல் 7 மணியளவில் பிராங்போர்ட்டில் கொண்டாடப்பட்டது. ஜேர்மனிக்கான இலங்கை தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தூதுவர் திரு புத்தி அதாவுட உட்பட மூவினங்களையும் சேர்ந்த இலங்கை மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் போரில் உயிரிழந்த அனைவரினதும் ஆத்ம சாந்தி வேண்டி தீபமேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்குமுகமாக சிற்றுரையாற்றினர்.

தூதர் அதாவுடா அவர்கள் பேசுகையில், இன்று எம்முன் நிற்கின்ற பாரிய பணியாதெனில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்மக்களின் மறுவாழ்விற்கும் அபிவிருத்திக்கும் உழைக்கவேண்டும். கடந்த காலகசப்புக்களை மறந்து அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், இங்குள்ள நாம் எமது வளங்களை எம் தாய்நாடு நோக்கி நகர்த்த வேண்டிய காலத்திற்குள் வந்து நிற்கின்றோம் என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய லெஸ்லி பெரேரா அவர்கள், எம்நாட்டில் இத்தனை காலமும் இடம்பெற்ற இவ்யுத்தில் அதிகமான இழப்புக்களை தமிழர்கள் சந்தித்துள்ளதுடன் எனைய சமூகங்களும் கொடிய அனுபவங்களை பெற்றுள்ளன. வன்னியில் மூச்சுக்கூட விடமுடியாது தவித்த மக்கள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளதை நான் அவதானித்துள்ளேன் என்றார்.

அங்கு பேசிய சிறி-ரெலோ உறுப்பினர் நிமு எனப்படும் முருகுப்பிள்ளை நிர்மலன் அவர்கள், இலங்கை திருநாட்டில் அமைதியை கொண்டுவரும்பொருட்டு 3 தசாப்தங்களாக எம் நாட்டை ஆட்கொண்டிருந்த புலி பாசிசத்தை அழிக்கும் போரில் தம்முயிரை தியாகம் செய்த படையினருக்கும் அவ் யுத்தத்திற்கு துணைநின்ற அனைவருக்கும் அரசிற்கும் எமது கட்சி சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். எமது நாட்டிலே இனவாதம் தலைதூக்குவதற்கு மொழி பிரதான பங்கை வகித்திருக்கின்றது. இவ்விடயத்தில் நாம் அனைவரும் தவறிழைத்திருக்கின்றோம். இன்று புலம்பெயர்ந்து வாழுகின்ற நாங்கள் பல அந்நிய மொழிகளை காலத்தின் தேவைக்காக வலிந்து கற்றிருக்கின்றோம். ஆனால் நாம் இருசமூகத்தினரும் தமிழ்மொழியையும் சிங்களமொழியையும் கற்றிப்போமேயாக இருந்திந்திருந்தால் இனவாதம் கொழுந்து விட்டு எரிவதற்கு வாய்ப்பிருந்திருக்காது. இவ்விடயத்தில் மொழிகளை இருதரப்பாரும் கற்றுக்கொள்வதை எம்மிடம் இருந்த பல அரசியல்வாதிகள் தமது சுய லாபங்களுக்காக அனுமதித்திருக்கவில்லை. எனவே இனிவரும் காலங்களில் அந்த தவறு இடம்பெறாது இருதரப்பாரும் இரு மொழிகளையும் கற்று தமது கருத்துக்களை சுயமாக பரிமாறுகின்றபோது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட்டதாகிவிடும் எனவும் நாம் எம்மை தமிழர், சிங்களவர், முஸ்லிம் என அடையாளப்படுத்துவதை தவிர்த்து இலங்கையர் என எம்மை அடையாளப்படுத்த தயார்படுத்தி கொள்வோம் என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் இதே கருத்தை தெரிவித்ததுடன் எதிர்வருங்காலங்களில் இவ்விடயங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் முனையவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com