Tuesday, June 23, 2009

யாழ், வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனு ஏற்பு நாளையுடன் பூர்த்தி

ஐ.ம.சு.மு முதற்தடவையாக வெற்றிலைச் சின்னத்தில் குதிப்பு

* மு.கா. தனித்து போட்டி
* கூட்டமைப்பு இன்று தாக்கல்
* ஐ.ம.சு.மு. நாளை தாக்கல்
* கூட்டமைப்பு, மு.கா., ஐ.தே.க.வின்

முதன்மை வேட்பாளர்களும் அறிவிப்பு


யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைகின்றன. ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன வவுனியா மாநகர சபைக்கு நேற்று (23) வேட்பு மனுத்தாக்கல் செய்தன. யாழ்.

மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (24) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளை (25) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதற்தடவையாக வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட உள்ளது.

இம்முறை தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பல கட்சிகள் யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றியைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் ஈ.பி.டி.பி. உட்பட பல கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாகவும் ஐ.ம.சு. கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறினார். முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்தும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதோடு நாளை வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மஹாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் பெரு வெற்றியீட்டும் எனவும் தமிழ் மக்கள் அரசாங்கத்தையே ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். மாநகர சபைக்கான ஐ.தே.க.வின் வேட்பு மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதோடு வவுனியாவுக்கான வேட்பு மனுவை ஐ.தே.க. செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜெயலத் ஜெயவர்தன எம்.பி.யும் நேற்று தாக்கல் செய்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று (23) தாக்கல் செய்ததோடு கட்சியின் பதில் செயலாளர் நிசாம் காரியப்பர், முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூர் ஆகியோர் வேட்பு மனுக்களை கையளித்தனர். மு.கா.வின் முதன்மை வேட்பாளராக சுல்தான் முகைதீன் அபுல்கலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதோடு யாழ். மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளராக சிவஞான சுந்தரமும் வவுனியா நகர சபைக்கான முதன்மை வேட்பாளராக எஸ். என். ஜி. நாதனும் நியமிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஏனைய தமிழ் கட்சிகள் மற்றும் பிரதான கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.

கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பில் கட்சிகளிடையே தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அந்தந்த கட்சி வட்டாரங்கள் கூறின.

வவுனியா நகர சபைக்கு இதுவரை 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு யாழ். மாநகர சபைக்கு 4 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று (23) சுயேச்சைக்குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியதாகவும் இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் ஏற்கப்படும் எனவும் யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் கூறினார்.

தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com