Thursday, April 23, 2009

மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!



இடம்பெயர்ந்த நிலையில் ஓமந்தைக்கு வந்த மக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணம்!


புளொட் அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நேற்றையதினம் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை யுத்த பூமியிலிருந்து மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் சென்று குடியேறினால் தான் உண்மையான சுதந்திர வாழ்க்கையை அவர்கள் நெடுங்காலத்திற்கு பின்பு வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மற்றும் மதகுருமார் பலர் அகதி முகாம்களில் இருப்பதனால் அவர்களுடைய மத அனுஸ்டானங்களின் பிரகாரம் அவ்வாறு வாழமுடியாத நிலைமையில் உள்ளதாகவும், எனவே மதகுருமார் தனியான ஓரிடத்தில் வாழக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

பொதுவாகவே மதகுருமார்கள் உரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டிய புளொட் தலைவர் சித்தார்த்தன், இந்து மதகுருமார்க்கு விசேட பிரச்சினைகள் பல உள்ளதையும் குறிப்பிட்டார். குறிப்பாக அவர்கள் மற்றையவர்கள் சமைத்த உணவுகளை உண்ண முடியாத சில விசேட பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. எனவே சகல மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் அவர்களுக்கென ஒரு தனி இடத்தில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் புளொட் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்த நிலையில் ஓமந்தைக்கு வந்த மக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணம்!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் நேற்றையதினம் வவுனியா ஓமந்தைப் பகுதியை அடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பினர் உணவுப் பொதிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகள் என்பவனவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறு வன்னியிலிருந்து மிகவும் சோர்வடைந்து வந்த அம்மக்களுக்கு அவசரத் தேவையாகவும், அவர்களைத் தெம்பூட்டுவதற்காகவும் உடனடியாக 700 கிலோகிறாம் ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகளை புளொட் நிவாரணக் குழுவினர் விநியோகித்ததுடன், அவர்களுக்காக 5000; உணவுப் பொதிகளையும் விநியோகித்துள்ளனர்.

மேற்படி மக்கள் இடம்பெயர்ந்து வந்த இடமான ஓமந்தையில் வைத்து நேற்றுப் பகலும் பிற்பகலும் இவை வழங்கப்பட்டதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வன்னியில் காயமடைந்து மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தொடர்ச்சியாக புளொட் நிவாரணப் பிரிவினர் பழங்கள், ஊட்டச்சத்து மிக்க பால்மா வகைகள், அறுவைச் சிகிச்சைக்கான துணிவகைகள் என்பவற்றை வைத்தியர்களின் சிபார்சின்படி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றையதினம் காலையிலும் 5ஆயிரம் உணவுப் பொதிகளை அம்மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் புளொட் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கென வவுனியா மக்களின் உதவிகள் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com