Thursday, March 12, 2009

ஐரோப்பிய அரசுகள் கவனிக்குமா ! இது “சத்யம்” அ.விஜயகுமார்.

"ஊரோடில் ஒத்தோடு, ஒருவரோடில் கேட்டோடு" என்று எமது கொள்ளு தாத்தாக்கள் சொல்வார்கள். ஆனால் இந்த பங்கு வர்த்தகர்கள் இதை தலைகீழாக மாத்தி செய்ததனால்தான்
இந்த வினை. எல்லா ஓட்டத்தையும் ஒருவரே ஓடி மொத்த ஊரையும் லபுக்கடீர் ஆக்கியுள்ளனர்.

ஹர்ஸத் மேத்தா என்ற ஒருவர் பல வருடங்களுக்கு முன் இந்தியாவில் 70 ஆயிரம் கோடி ரூபாவை இந்த பங்கு வர்த்தகத்தின் மூலம் ஏப்பம் விட்டார். அதை கண்டு கொள்ளாததன் தாற்பரியம்தான் இப்போது சத்யத்தில் வந்து முடிந்திருக்கின்றது. பண்டமாற்று முறையில் இருந்த வியாபார உலகை பணப் பரிமாற்றம் என்ற நிலைக்கு மாற்றி, அப்புறம் காசோலை, வங்கி முறிப் பத்திரம், வங்கி ஆணை (டிபன்ஞர்) எனக் கொண்டு வந்து இறுதியில் “பங்கு பத்திரம்” என்ற மாய உலகுக்குள் கொண்டு வந்து சாதாரண குடிமகனையும் சாப்பாட்டுக்கில்லாத குடிமக்களாக்கிய மகாத்மியம் இந்த மேற்குலகையே சாரும்.

யாழ்பாண வாழைப்பழத்துக்கு நுவரெலியா தேயிலை,களுதாவளை வெத்திலைக்கு கடுகண்ணாவ கொட்டப்பாக்கு, சிறிலங்கா கிராம்புக்கு இந்திய பழையகாட் சாறம், துருக்கி கோதுமை மாவுக்கு சிறிலங்கா ஏலம், கறுவா, சாதிக்காய் என இருந்த உலகை, பணம் என்ற ஒன்றை உருவாக்கி குட்டிக் குட்டி வங்கிகளையும் திறந்து பணத்தை படடுவாடா பண்ணி, அதை கடனாகவும் கொடுத்து, பணத்துக்கு பதிலாக காசோலையும் உபயோகிக்கலாம். அது ஈக்கிவள் ரூ இது (பணம் சமன் காசாலை ) என ஆரம்பித்தவர்கள்தான் இப்போது வேலையின்மை சமன் முதலாளிமார்களிடம் பணமில்லை. முதலாளிகளிடம் பணமில்லை சமன் வங்கியில் பணமில்லை. வங்கியில் பணமில்லை சமன் மத்தியவங்கி கஜானாவில் பணமில்லை. மத்திய வங்கி கஜாணாவில் பணமில்லை சமன் அரசிடம் சரியான திட்டமிருக்கவில்லை. வருமுன் காக்கும் திட்டமிருக்கவில்லை என நம்ம தலைவர் பிரபாகரன் கணக்காக ஆய்வாளர்களை காய்ச்சிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களையெல்லாம் திரட்டி மகியங்கணை காட்டில் இருக்கும் வேடுவர் தலைவன் படிக்காத மேதை “ஊரி வரியகே வன்னியா”விடம் “வேர்க் சொப்” புக்கு அனுப்ப வேண்டும்போல் இருக்கின்றது. அடுத்த 15 வருடத்துக்கு உண்ணத் தேவையான சோளமும், தேனும், மையிறு கிளங்கும், மலேரியா, அம்மை, கொண்டைகட்டுவானுக்குத் தேவையான கருஞ்சீரகம், சித்தாமட்டி வேர், குந்திரிக்கம் என்பனவும் எங்களிடம் தாராளமாகவே உண்டு முடியுமானால் மகியங்கண டவுணுக்குப் பக்கத்தில் ஏழரை கோடி ரூபாவுக்கு வீடுகட்டியுள்ள எஸ்.பி.திசாநாயக்காவுக்கும், பங்கு வர்த்தகர்களிடம் ஆயுதம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் கண்டி மந்திரி கெஹலிய ரம்புக்கனவுக்கும் போய் ஆலோசனை சொல்லுங்கள் என பேட்டி கொடுத்துள்ளார்.

உண்மையான சமூக நோக்குள்ளவர்களும், உண்மையான வியாபார நோக்குள்ளவர்களும் என பத்தோ பதினைந்தோ நபர்கள் ஒன்று சேர்ந்து தமது கைக்காசைப் போட்டு வியாபாரத்தை ஆரம்பித்து, வியாபாரம் நன்கு சூடு பிடித்து தமது வியாபாரத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக்க நினைக்கும் போது அவர்களுக்கு பணமுடை(பணத்தட்டுப்பாடு)ஏற்படும். அப்போது அவர்கள் நண்பர்கள் உறவினர்களிடம் “எக்ஸ்ட்ரா பணமிருந்தால் தாருங்களேன்.நீங்கள் தரும் பணத்திற்கேற்ப அடுத்த வருடங்களில் கிடைக்கும் இலாபத்தில்பங்கு தருகின்றோம்” என்பர்.

நண்பர்களும் இவர்களது நாணயத்தை மதித்து(உண்மை.நேர்மை) கடன் கொடுப்பர். வியாபாரம் இன்னும் பெருகி நண்பர்களிடமும் போதியளவு பணமில்லை எனும் போது தமது கம்பனியின் விபரங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி “எங்கள் கம்பனியை விரிவு படுத்த பணம் தேவைப் படுகின்றது. பணமிருப்பவர்கள் எங்களிடம் முதலிட்டால் ஒவ்வொரு 100ரூபாவுக்கும் இலாபம் தருவோம்” என பங்கு பங்காக பணம் சேர்ப்பர். ஒருவர் பத்தாயிரம் கொடுப்பார். இன்னொருவர் பத்து லட்சம் கொடுப்பார், கம்பனி விரிவடையும், இலாபம் பெருகும், முதலிட்டவர்கள் இலாபம் அடைவர். இதில் பத்தாயிரம் முதலிட்டவருக்கு ஒரு இரண்டு வருடத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் அவர் அந்த பத்திரங்களை இன்னொருவருக்கு விற்கலாம். விற்பார்.

என்னிடம் பத்தாயிரம் பெறுமதியான பங்கு இருக்கின்றது. வருடத்துக்கு மூவாயிரம் ரூபா இலாபம் கிடைக்கும். பதின் ஓராயிரம் ரூபா தந்தால் தருவேன் என விற்பார். இதுதான் பங்கு வர்த்தகத்தின் குறுக்கு வெட்டுமுகம். இப்டித்தான் ஆரம்பத்தில் பங்கு வர்த்தகம் எவருக்கும் பங்கமில்லாமல் துளிர்த்து, பூத்து, பிஞ்சாகி, பழுத்து பல பேருக்கு சுவை தந்தது.

இப்படித்தான் உலக பொருளாதாரம் ஆடிக்காற்று, பருவக்காற்று, கோடை மழை, கோடை
வெயிலுக்கெல்லாம் தாக்குப் பிடித்து நன்றாக, நிலையாக வளர்ந்து வந்தது. விடுவார்களா குறுக்கு மூளைக்காறர்கள். ஆள், அடியாள், அம்பு என வைத்துள்ள இந்த குறுக்குப் புத்திக்காறர்கள் களத்துக்கு மொத்தமாக வந்து, உலக பொருளாதாரத்துக்கும் மொட்டை போட்டுள்ளனர்.

இந்தக்குறுக்குப் புத்திக்காறர்களிடம் எப்போதுமே ஒரு தொகைப் பணம் கையில் இருக்கும்.
40மில்லியன் 50 மில்லியன் அமெரிக்கன் டொலர் என கையிருப்பில்வைத்திருப்பார்கள். இவர்கள் வேறு யாருமல்ல பிரபுக்கள் என்று சொல்லப் படுகின்ற முன்னாள் கடல் கொள்ளைக்காறர்களும் அவர்களது பேரப்பிள்ளைகளும்தான், நம்மையெல்லாம் 200 ,250 வருடங்கள் ஆண்டவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் பாரிய கம்பனிகளை படாடோபமாகத் திறந்து, விளம்பரங்கள் செய்து தங்கள் கம்பனிகள் மற்ற கம்பனிகளுக்கு சளைத்தவைகள் அல்ல என கணக்குகளை வகுத்து இலாபத்தை பெருக்கி காட்ட இவர்களது கம்பனிகளில் முதலிட, பங்கு வாங்க உலகம் முழுதும் உள்ள மாதச் சம்பளக்காறர்களெல்லாம் வரிசை கட்டி நின்றனர். சாதாரண மக்களை விடுங்கள் பல பொருளியல் வல்லுனர்களையும், பொளிஸி மேக்கர் (சட்டம் வகுப்போர்)களையும் கொண்ட பாரிய வங்கிகள் கூட இவர்களது பங்குகளை வாங்கி வங்கி லாக்கர்களில் குவித்து வைத்தனர். பொது மக்களுக்கு கடன் கொடுத்தால் வருட இலாபம் ஏழு வீதம்தான். பங்கு பத்திரம் மூலம் 20 வீதம் இலாபம் உழைக்கலாம் என்ற நப்பாசையில் வெற்றுக் காகிதங்களை வகை தொகையில்லாமல் சேகரித்தனர்.

அது சரி இவர்கள் திறந்த நட்டக் கம்பனிக்கும், வங்கி லாக்கர்களில் பணமில்லாததற்கும்,
வேலையின்மைக்கும் என்ன தொடர்பு. லாஜிக் உதைக்குதே என யோசிக்கின்றீர்களா ? அங்கு
தான் இருக்கிறது ஆப்பு. பங்குகள் விற்ற பணத்தில் பாரிய தொகைகளை வேறு வேறு நாடுகளில், வேறு வேறு இடங்களில் முதலிடுவதுடன் ஆடம்பர செலவுகளிலும் ஈடுபடுவர். தங்களிடம் உள்ள பொருட்களும் மார்கட்டில் விற்பனையாகவில்லை,அதனால் சம்பளம் கொடுக்க முடியவில்லை,அதனால் ஆட்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம் என்ற நிலையை
உருவாக்கி பாரிய நட்டமடைந்து விட்டோம் என்றும் சொல்லி “வேங் றொப்சி” (வங்கு ரோத்து அல்லது திவால்)ஆகிவிட்டது என்ற போர்வையில் கோர்ட் ஊடாக பறைசறைந்து ஜாலியாக வீட்டில் உட்கார்ந்து விடுவர்.

ஒருவர் வங்குரோத்து அடைந்து விட்டால் அவர்,அவரது கம்பனி டைரக்டர்கள்,கம்பனி அமைப்பாளர்கள் அனைவரும் பிச்சைக்காறர்களாகி சோத்துக்கு லாட்டரி அடிக்கின்றார்கள் என்றுதான் அர்த்தப்படும். ஆனால் இங்கு ஆட்டமே வேறாக இருக்கும் கம்பனி முறிந்து விட்டது, திவாலாகிவிட்டது என்பதைக் கூட “பைவ் ஸ்டார்”ஹோட்டலில் “சம்பைன்”பார்ட்டி
வைத்துத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் மகனின் இங்ஜினியரிங்காலேஜ் அட்மிஷனுக்கென சேர்த்த பணத்தில் பங்கு வாங்கிய அந்த அப்பாவி அப்பாக்கள் அடுத்த வேளை கஞ்சிக்குஅலைமோதுவார்கள். இந்த திருகுதாளக்காறர்கள் ஒரு கம்பனியுடன் நிற்கமாட்டார்கள் இவ்வாறுஆயிரம் கம்பனி. ஆயிரம் பெயர்களில் திறந்து மொத்தமாக அட்டையைப் போட்டுவிட்டு அம்பேல் ஆகிவிடுவார்கள். யுரோப் முழுவதும் உலாவரும் “போன் கார்ட்”கம்பனிகளில் 90 வீதமானவை இவ்வாறு அமைந்தவைதான். அதிலும் ஐ.ரி.நிறுவனங்கள் ரொம்ப சமர்த்தாக இதை செய்கின்றன.

வங்கிகள் கூட இப்படித்தான். தனியார் வங்கி என்ற பெயரில் இந்த “மாதாக்கள்” கம்பனிகளை திறந்து ஒரு கசமுசா பண்ணுவார்கள். உதாரணமாக “லொய்ட்ஸ்” வங்கியை எடுத்துக் கொண்டால் ஊருக்கொரு வங்கியைத் திறந்து வாங்கோ வாங்கோ என வெத்திலை வைத்து அழைத்து கிரடிட் கார்ட்டுகளும், குட்டிக் குட்டிக் கடன்களும் ஊர்மக்களுக் கெல்லாம் அள்ளிக்
கொடுப்பார்கள். ஆனால் பாரிய,லம்சம் ஆன கடன்களை எல்லாம் அவர்களுக்கு வேண்டிய, எட்டு மாதத்தில் இழுத்து மூடிவிட்டு வங்குரோத்துக் கணக்கு காட்டக் கூடிய தங்களதுபினாமிகளுக்கு வழங்குவார்கள். அப்புறம் என்ன. மொத்தக் கடன்காறன் சட்டப்படி தப்பி விடுவான். இந்தக் குட்டிக் கடன்காறர்கள் எல்லாம் வங்கிக்கு தோப்புக் கறணம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு உதாரணமாக யு.கே.யில் உள்ள “பார்க்ளேஸ்”வங்கி அமெரிக்கா போய் கடை திறந்து, கிளைபரப்பி தமக்கு வேண்டிய சில பேருக்கு மொத்தமாகவும்,வேண்டாத பல பேருக்கு சில்லறையாகவும் வீட்டுக்கடன் என்ற பெயரில் ஜிகினாக் காட்டிவிட்டு “சீச்சீ இந்த அமெரிக்க மக்கள் ரொம்ப மோஸம்” வாங்கின கடன திருப்பித் தாறாங்கள் இல்லப்பா. இனி அறவிடவே முடியாத கடன் என போன வருடத்துக்கு முந்திய வருடம் ஒரு பெரிய பம்மாத்து காட்டினார்கள்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிது. அதை சட்டம் போட்டு தடுக்கிற
கூட்டமும் திருடிக் கொண்டே இருக்கிது. இல்லையே ஈராக்குக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஆயுதம் அனுப்பின வகையில்தான் இவ்வளவு வங்குறோத்து எனச் சொல்கின்றார்களே ! ஆம் உண்மைதான். இந்த ஆயுதக் கம்பனிகளின் உரிமையாளர்களும் இந்த திருகு தாளக்காறர்களே. அதில் இலாபம் இந்த கொள்ளைக் காறர்களுக்கு. நஷ்டம் மொத்த அமெரிக்கர்களுக்கும், யுரோப்பியர்களுக்கும். இவர்கள் தமது கம்பனிகளை இழுத்து மூடியதும் பாரிய வேலையின்மை ஏற்பட்டது. அதனால் மக்களிடம் பணம் இல்லை. இதனால் மக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லவில்லை. தொடர் கடைகள், ஒரே கூரையின் கீழ் இயங்கிய பல வர்த்தக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. பல லட்சம் மக்கள் லேலை இழந்தனர். இழந்து கொண்டு இருக்கினர்.

வங்கியில் போய் கடனோ கடனட்டையோ பெறும் நிலையிலும் மக்கள் இல்லை.காரணம் ஏற்கனவே எடுத்த 500.ஆயிரம் டொலர் கிறடிட் கார்ட்டுக்குரிய பணத்தை ஒழுங்காக கட்டாததனால் அந்தக் கதவுகளும் மூடப்பட்டே உள்ளன. சரி இதை எவ்வாறு இந்த அரசுகள்
சமாளிக்கப் போகின்றன !?

500 டொலர் கிறடிட் கார்ட் அட்டையைக் கொடுத்து விட்டு அதை அறவிட 800 டொலர் செலவு செய்யும் வழி முறையை முதலில் நிறுத்த வேண்டும்.அதாவது கடன் அட்டை பெற்றவர் கடனை கட்டா விட்டால் அவருக்கு 200 முறை போன் பண்ணி,50 லெட்டர் போட்டு,அதற்கும் பதில் இல்லை என்றவுடன் அதை “பேலீப்”(அறவிட முடியாக்கடன்களை அறவிடும் கம்பனி)இடம் ஒப்படைத்து என 800 டொலர் செலவு செய்து விடுவார்கள்.இப்படி ஒவ்வொரு கடனும் இப்படியே சுமை கூலி முக்காப்பணம் கணக்காக செல்லும்.இதை மூன்றே மாதத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியாதா ?

தனியார் வங்கிகள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நியமித்து வீட்டுக்கடன்,
வியாபாரக்கடன்,வாகனக் கடன் என போட்டி போட்டுக் கொண்டு அள்ளி வழங்கின. நிறைய பேருக்கு கடன்கொடுத்து பதவி உயர்வுகளைப் பெற தஸ்தாவேஜூகளை ஒப்புக்குச் சப்பாணியாக பார்த்து விட்டு கடன்களை அள்ளி வழங்கினர். இப்போது தலைகளை விட்டுவிட்டு வால்களைப் பிடிக்க பாராளுமன்றங்களில் அவசர குறைநிரப்புப் பிரேனை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

இதில் நிறைய பணம் உழைத்தவர்கள் இந்த குறுக்குப் புத்திக்காறர்களும், ஐ.ரி.நிறுவனக்கா
றர்களும், சில தீவிரவாத அமைப்புக்களுமே. விடுதலைப் புலிகளை எடுத்துக் கொண்டால் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக யுரோப் முழுதும் வீடுகள், வீட்டுத் தொடர்கள், கடைகள், சிக்கன் சொப், கேஸ் அண்ட் கரி, பெற்றோள் நிறுவனங்கள, போன் கார்ட் கம்பனிகள்; என வாங்கிக் குவித்தனர் வீடுகள் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து பாரிய கடன்களை இலகுவாக பெற்றதுடன்,கடைகளிலும்,பெற்றள் நிலையங்களிலும் கள்ள அட்டை மூலம் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர். இது மட்டுமல்லாமல் தமது கப்பல் கம்பனிகள் மூலம் பொருட்கள் அனுப்புவது போல் அனுப்பி பாரியளவில் இன்ஸ்யுரன்ஸ்(காப்புறுதி) உம் பெற்றிருந்தனர். இவைகளைத்தடுக்க இங்குள்ள அரசுகளுக்கு வலு இல்லையோ அல்லது அவர்களுக்கும் இதில் பங்குண்டோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்போது நடக்கும் ஊர்வலங்களுக்கு செலவுசெய்ய,வாடகை பஸ்களுக்கு பணம் கொடுக்க,
ரி.வி.ரேடியோ நிலையங்களுக்கு வேறு பெயர்களில் முதலிட,வை.கோ.வும்,சீமானும் அணிதிரள எங்கிருந்து பணம் மொத்தமாகவும்,சில்லறையாகவும் பட்டுவாடா செய்யப்படுகின்றது என யுரோப்பியர்கள் உட்கார்ந்து யோசித்தால் போதும் விட்ட பணத்தில் 20 வீதத்தையாவது விரட்டிப்பிடிக்கலாம்.கருணா பிரிந்தவுடன் சிறிலங்காவில் தமது பினாமிகள் பெயர்களில் உள்ளசொத்துக்களை விற்றதுபோல் இப்போது யுரோப்பிலும் கே.பி.அண்ணாவின் ஆலோசனையின் பேரில் சொத்துக்களை விற்பதாக(அதிலும் பல டபுள் கேம்.அதாவது ஒரே வீட்டை இரண்டு முறை விற்பது) உண்மைச் செய்திகள் உலாவருகின்றன. தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. இதை சரியான முறையில் இந்த யுரோப்பியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால்.

தமிழனுக்கென்றொரு நாடில்லை என வீதிக்கு வீதி கோஷம் போடும் எமக்கு, கோஷம் போட வீதிகளும் இல்லாமல் போய்விடும்.

12-03-2009 VIII




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com