யுத்த அபாய எச்சரிக்கை
இன்ரர்நெஸ்னல் கிரைசிஸ் குருப் என்கின்ற சர்வதேச நிறுவனம் ஒன்று இலங்கை நிலமைகள் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையின் தமிழாக்கம்.
இலங்கையின் வடக்கின் வன்னிப் பகுதியில் மனித அவலத்தின் நெருக்கடி வேகமாக மிகப் பாரதூரமான நிலைமையை எட்டி வருகின்றது. ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் அளவில் மிகச் சிறியளவு நிலப்பரப்பில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் இந்தப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக மறித்து வைக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இலங்கை இராணுவம் இவர்கள்மீது பாரபட்சமற்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. ஏற்கனவே ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கும் அதிகமான எண்ணிக்கையினர் காயப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தினாலும் அங்கு நிலவுகின்ற உணவு, தண்ணீர், மருத்துவம் ஆகியவற்றின் தட்டுப்பாட்டினாலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாவையோ அல்லது காயப்படுதலையோ எதிர்நோக்குகின்றார்கள். சர்வதேசத் தலைவர்கள் - குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் - உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்திடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேசத் தலைவர்கள் அரசாங்கத்தின் நிர்மூலமாக்குதல் கொள்கையைக் கைவிடும்படி வற்புறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அங்கிருந்து வெளியேற விரும்புகின்ற பொதுமக்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்கும் ஏதுவாக இறுதித் தாக்குதலை ஒத்தி வைக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டும். விடுதலைப் புலிகளின் தலைமையின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொதுமக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். அவர்கள் பொதுமக்களைக் கவசமாகப் பாவிப்பதனை நிறுத்தும்படி வற்புறுத்த வேண்டும். சரணடைவது குறித்த பேச்சுவாரத்தைகளில் ஈடுபடும்படியும் அப்படியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பட்சத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு சர்வதேச சமூகத்தினால் உறுதிப்படுத்தப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தாங்கள் யுத்தத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விடுதலைப்புலிகள் சரணடைய மறுப்பதை ஒரு சாட்டாக இன்னும் இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதேவேளை விடுதலைப் புலிகளும் அரசியல் பேச்சுவார்த்தையை நோக்கி நகர்த்தும் போர்நிறுத்தக் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளும்வரையும் பொதுமக்களைப் பணயமாக வைத்திருப்பதைத் தொடரவும் முடியாது.
கள நிலவரம்
களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மற்றும் சற்றலைற் மூலமான படங்கள் என்பன குறைந்த பட்சம் ஒரு இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையைவிட இது மிகவும் அதிகமானது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் கரையோர நிலப்பரப்பிலோ அல்லது அதற்கு அருகிலோதான் இவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இந்த வலயத்தில் அரசாங்கம் தினமும் குண்டுகளைப் போடுகிறது. பொதுமக்களை வெளியேறவிடாது தடுத்து வைத்திருப்பதன்மூலம் விடுதலைப்புலியினரும் இந்தப் பொதுமக்கள் பாரிய அவலத்தை எதிர்கொள்வதற்கு உடந்தையாகிப் போகிறார்கள். வன்னியில் மருத்துவ வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுகாதார வசதிகள் அங்கு முற்றாக இல்லை. இடம்பெயர்ந்து வந்திருப்பவர்களிடையே தொற்றுநோய்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. வறுமையினால் இறப்புகள் நிகழ்ந்துவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதை அரசாங்கம் கடுமையாக மறுத்து வருகின்றது. மார்ச் மாதம் 8ம் திகதி அங்கு 500 மெற்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்துக்குப் பின் இப்போதுதான் முதலாவதாக மனிதாபிமானரீதியான உதவி சென்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் ஜனவரி மாத இறுதியில் இருந்து இன்றுவரை 2300க்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதாகவும் 6500 பேர்கள் வரையிலாவது காயமடைந்திருப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டும் 1400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தும் இருக்கிறார்கள். வன்னியில் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சுழற்சி முறையிலான மருத்துவ சேவை நிலையங்களிற்கு ஒவ்வொரு நாளும் நுhறுக்கும் அதிகமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் அங்கிருந்து வெளிறேுவதற்கு முன்பாகவே இறந்து விடுகிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது கடந்த சில வாரங்களில் 2000 காயம்பட்டவர்களையும் நோயுற்றவர்களையும் வெளியேற்றியுள்ளது. மிகச் சிறிய அளவிலான பொருட்கள் மட்டுமே உள்ளே எடுத்துச் செல்லப்படக் கூடியதாக இருந்தது.
இருதரப்பினரும் சர்வதேசரீதியான மனிதாபிமான சட்டத்தை மிகமோசமாக மீறுவதென்பது இந்த யுத்த நெருக்கடி நிலைமையின் மையப்புள்ளியாகின்றது. விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்து வைத்திருக்கின்றனர். அப்படி இருந்தும் நிலைமையைச் சமாளித்து 35000 பேர்வரையில் அங்கிருந்து வெளியேறி வந்துள்ளனர். அப்படி வெளியேறிய பொதுமக்கள்மீதும் அவர்கள் சுட்டிருக்கிறார்கள். இதனால் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் பொதுமக்களை, சிறுவர்கள் உட்பட, பலவந்தமாக யுத்தத்தில் பங்குகொள்வதற்காக இணைத்துக் கொள்கிறார்கள். பொதுமக்களைப் பலவந்தப்படுத்தி அவர்களைக் கேடயமாக வைத்து அவர்களுடன் கலந்து நின்று தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.
அரசாங்கம் தன்னுடைய பங்குக்கு, பொதுமக்கள் இருக்கும் பிரதேசத்தின்மீது - அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட நிலப்பரப்புட்பட - குண்டுகளைப் பொழிகின்றது. எந்தவிதமான ஓய்வும் இன்றி கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து தாக்குதல்ளை நடத்தி வருகின்றது. இராணுவமானது புலிகள் அழிக்கப்படும்வரையும் அல்லது அவர்கள் நிபந்தனையற்று சரணடையும்வரையும், என்ன விலை கொடுத்தாவது அவர்களை என்றைக்குமில்லாதவாறு மிகச்சிறிய பகுதிக்குள் நசித்து வைக்க விரும்புகின்றது.
இத்தாக்குதல்களினால் மிகமோசமாக அல்லலுறும் பொதுமக்கள் பற்றிய எந்த அக்கறையும் இராணுவத்திற்கு இல்லை. பொதுமக்களுக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தாமலும், ஆயுதப் போராட்டத்தின் சட்டங்களை மோசமாக மீறாமலும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைய முடியாது. அரசாங்கத்தினால் ‘பாதுகாப்பான பாதைகள்’ என்று அறிவிக்கப்பட்ட பாதைகள் இலங்கை இராணுவத்தினரால் மட்டுமே பாவிக்கப்படுபவை. அடர்ந்த சனங்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் நிலைகளினூடாக செல்லுதல். தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி இவற்றைப் பாவிப்பது முடியாதது. உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகளுக்காக பாதைகள் திறக்கப்படுவது முடியாதது.
பொதுமக்களுக்கான மனிதாபிமானமுள்ள ஒரு பிரதேசம் அங்கு நடைமுறையில் இல்லாமற்போய்விட்டது. போராளிகளையும் போராளிகள் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து தங்கள் ஆயுதங்களைப் பாவிப்பதற்கு முடியாமல் உள்ளது. அரசாங்கம் இந்த இடத்தில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தனது தாக்குதலை வெகு இயல்பாகச் செய்து வருகின்றது.
என்ன செய்யப்பட வேண்டும்?
இலங்கை அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகளினாலும் பின்வரும் நடவடிக்கைகள் எந்த முன்நிபந்தனைகளும் இன்றி எடுக்கப்படவேண்டும்.
இலங்கை இராணுவம் தன்னுடைய இராணுவ இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது. அடிப்படையில் அது யுத்தத்தில் வென்றுவிட்டது. அது நிர்மூலமாக்கும் ஒரு பொறிமுறையைத் தொடரக்கூடாது. இலங்கை அரசாங்கமானது தனது கடைசித் தாக்குதலைத் தள்ளிப் போடவேண்டும். அங்குள்ள பொதுமக்களிற்குப் போதியளவு உணவு, நீர், மருத்துவ உதவிகள் சென்றடைவதற்கும், அங்கிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களிற்கு வழிவிடுவதற்காகவும் இந்தத் தாக்குதலைத் தள்ளிப்போடவேண்டும். சர்வதேச உதவியுடன் பொதுமக்களைக் கடல்வழியாக வெளியேற்றுவது ஒரு சாத்தியமான தப்பித்தல் வழியாகத் தெரிகின்றது. இது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தன்மையுடைய இராணுவத்தின் தொடர் தாக்குதல்கள் மேலும் பல்லாயிரக்கணக்குக்கும் அதிகமான பொதுமக்களின் மரணத்தைக் கொண்டு வரும் அபாயம் இருக்கின்றதென்பதில் சர்வதேசத் தலைவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கவேண்டும். அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் சரணடையவேண்டும். எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று விடுதலைப்புலிகள் சொல்கிறார்களோ அந்தத் தமிழ்மக்கள்பற்றி எந்தவித அக்கறையும் இல்லாதிருப்பதையே அவர்களுடைய தற்போதைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. அவர்கள் ஒரு சரணடைவதற்கான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளுக்கு கடுமையான செய்திகளை அனுப்பவேண்டும். இந்தச் சரணடைதலைக் கண்காணிப்பதில் முக்கியமான சர்வதேசத் தரப்பினர் தங்களை ஈடுபடுத்த வேண்டும். சரணடைந்த போராளிகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்திற்கு அவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். யுத்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறி வருபவர்களை ஏற்று முதல் கட்டமாக அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் செயற்படலாம். மறுபுறத்தில், விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதையும், சிறுவர்களையும் வயதுவந்தவர்களையும் பலவந்தமாக படையில் சேர்ந்துக் கொள்வதையும் தொடர்ந்து செய்யும் என்றால், பாரிய போர்க் குற்றங்களிற்காக அதனுடைய தலைமையானது சர்வதேச நீதிமன்றத்தைச் சந்திக்க வேண்டி ஏற்படும்.
சர்வதேசத் தலைவர்கள் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், இந்தியப் பிரதம மந்திரி, அமெரிக்க அதிபர் ஆகியோர் உடனடியாக இவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், அங்குள்ள பொதுமக்களின் அவலங்கள் எவ்வளவுக்கு இருக்கின்றதென்பதுபற்றியும் சேதங்கள் பற்றிய அவர்களுடைய சொந்த கணிப்பையும் பற்றி பகிரங்கமாகப் பேசவேண்டும். இவ்வாறு ஒரு சர்வதேசரீதியான பலம்வாய்ந்த பிரதிபலிப்புக்கு வழிவகுக்க வேண்டும். அங்குள்ள தேவை மற்றும் நிலவரங்களை அறிவதற்கு> இவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களை உடனடியாக, பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டும். இந்த மனித அவலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து இந்தப் போருக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான சகல வழிமுறைகளையும் எடுக்கவேண்டியும் இலங்கை அரசாங்கத்துடனும் இது சம்பந்தமான சகல தரப்பினருடனும் வேலைசெய்வதற்கான ஒரு விசேட பிரதிநிதி ஒருவரை இவர் உடனடியாக நியமிக்க வேண்டும்.
இந்த மூலாதாரப் பிரேரிப்புகள் நடைமுறைப்படுத்துவதற்கு கடினமானதாக இருக்கும். புலிகளின் தலைமை இப்போது ஒரு தீவிர கெரில்லா சக்தி என்பதைவிட ஒரு வழிபாட்டு சின்னமாக வந்துவிட்டது. இது சரணடைவதை பெரியளவில் வெறுக்கும். அரசாங்கமானது தன்னுடைய பங்குக்கு> இன்றைக்கும் என்றைக்குமாக விடுதலைப்புலிகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாதளவு கங்கணம் கட்டியுள்ளது. இராணுவத்தை பாவிப்பதில் அரசாங்கம் எவ்விதமான தடைகளையும் உக்கிரமாக எதிர்கொள்ளும்.
இருந்தும், விடுதலைப்புலிகளை சரணடையும்படி சரவதேசரீதியிலான அழைப்புகள் - புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் விடுதலைப்புலிகளுக்கான தங்கள் ஆதரவை நிறுத்தும்படியும் - இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச முனைப்புகளின்மீதான சந்தேகங்களை சமனப்படுத்துவதற்கு உதவமுடியும். விடுதலைப்புலிகளின் சரணடைவை சர்வதேசம் கண்காணிக்கும் என்று வாக்குக் கொடுப்பது அவர்கள் தங்கள் படைகளின்மீதும் பொதுமக்கள் மீதுமான பிடியைத் தளர்த்தத் தொடங்கலாம். முக்கியமான வெளிநாட்டு அரசாங்கங்கள்> முக்கியமாக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு பாதுகாப்பிற்கான உறுதிகளை வழங்க வேண்டும். ஒருவேளை, விடுதலைப்புலிகள் கடலினூடாகத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு கரையோரப் பிரதேசங்களில் கடற்படை கண்காணிப்புகளை அதிகரிக்கலாம்.
சர்வதேச சட்டவிதிகளின்படி இலங்கை அரசாங்கமானது தனது பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல்களிற்கு எதிராகச் செயற்படுவதற்கு உரிமையுடையது. ஆனால் அதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரை விலை கொடுத்து விடுதலைப்புலிகளை அழிப்பது என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களை மோசமான அந்நியப்படுத்தலுக்கும், உலக முழுவதும் உள்ள தமிழர்களை தீவிரவாதிகளாகவுமாக்குவதற்கான வழிவகையாகும்.
இலங்கைப் பிரச்சினையை ஒரு நிரந்தரத் தீர்வுக்கு இட்டுச் செல்லும் அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தவும் சமூகங்களிற்கிடையில் தீர்மானமான நல்லிணக்கத்தைப் பேணவுமான முயற்சிகளில் தனக்கு முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்கான கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு.
International Crisis Group
மொழி பெயர்ப்பு: புகலி
http://www.crisisgroup.org/home/index.cfm?id=5974&l=1
...............................
0 comments :
Post a Comment