Wednesday, March 11, 2009

யாழ். உற்பத்தி பொருட்களுடன் 11 லொறிகள் இன்று கொழும்பு வருகை

யாழ். குடா உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 11 லொறிகள் இன்று காலை யாழ். நாவற்குழி களஞ்சியசாலையிலிருந்து புறப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு நாவற்குழியை சென்றடைந்த லொறிகளிலிருந்த பொருட்களை இறக்கிய பின்னர் யாழ். உற்பத்திப் பொருட்களை நேற்று ஏற்றினர்.வெங்காயம், மரக்கறி வகைகள் மற்றும் மீன், கருவாடு வகைகளும் ஏற்றப்பட்டன.

யாழ். குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டுவர விரும்புவோர் யாழ். அரச அதிபர் அலுவலகத்தில் இயங்கும் விசேட செயலணி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்தில் சென்று யாழ். உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்வோர் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அத்துடன் கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு பொருட்களை கொண்டு செல்லும் தனியார் வர்த்தகர்க ளும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை களஞ்சிய சாலையில் வைத்து லொறிகளில் ஏற்றப்படும் பொருட்கள் யாழ். நாவற்குழி களஞ்சியசாலையில் வைத்தே இறக்கப்படும். அதேபோன்றுஅங்கு ஏற்றப்படும் பொருட்கள் வெலிசறை களஞ்சிய சாலையிலேயே இறக்கப்படும்.

கடந்த திங்கட்கிழமை புறப்பட்ட லொறிகள் வவுனியா வில் தரித்து நின்று அங்கிருந்து ஏ-9 ஊடாக நாவற்குழியை நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்றடைந்தது.
யாழ். அரச அதிபர் கே. கணேஸ், செயலக அதிகாரிகள் நாவற்குழி களஞ்சிய சாலையில் இரவு லொறிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று காலை புறப்படும் 22 லொறிகளில் 11 லொறிகளில் யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com