Sunday, February 15, 2009

மாகாணசபைத் தேர்தல்களில் ஐ.ம.சு.கூ. வெற்றி


நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 650,203 வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களை வென்றுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 422,125 வாக்குகளைப் பெற்று 22 ஆசனங்களையும், ஜே.வி.பி. 15,416 வாக்குகளைப் பெற்றுள்ளபோதும் ஆசனங்கள் எதனையும் பெறவில்லை.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் பாரியளவு வாக்கு வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 24 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த மாவட்டத்தில் ஜே.வி.பி ஒரு ஆசனத்தை மாத்திரமே கைப்பற்றியது.

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலத்தில் இடம்பெற்ற வாக்கு மோசடிகளையடுத்து குறித்த தொகுதிக்கான தேர்தலை தேர்தல்கள் திணைக்களம் ரத்துச்செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்ற வாக்கு மோசடி குறித்து புத்தளம் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரினால் தமக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த தேர்தலை ரத்துசெய்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்தார். நாயக்கர்சேனைக்கான மறுதேர்தல் குறித்த திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தயானந்த திஸநாயக்க குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com