Sunday, November 24, 2019

பா.உ விலிருந்து நீக்கினால் வழக்குத் தொடர்வேன்! பெளஸி

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமற் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயன்றால், அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

தன்னைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கவுள்ளதாக கட்சியிலிருந்து தனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு தன்னை 'மந்திரி'ப் பதவியிலிருந்து விலக்குவதற்கு கட்சிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தன்னைக் கட்சியிலிருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மந்திரிப் பதவியொன்றை வழங்குவதற்கே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

திருடர்களும் குண்டர்களும் மீண்டும் பாராளுமன்றிற்கு வருவதாயின் 'பொதுபல சேனா' கலைக்கப்பட மாட்டாது! - ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசாரர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்து செயற்படும் எனவும், பொதுத் தேர்தலில் அதிகாரம் எவ்வாறு இருக்கும் என்பதில் மிகவும் கண்காணிப்புடன் இருக்கும் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

பெளத்தம் என்ற பேரில் போலி வேசம் போட்ட, அடிப்படைவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியோர் அவர்களுக்கு உடந்தையாக இருந்தோர், சிங்கள பெளத்த மக்களின் கெளரவத்தை இல்லாதொழித்தோர், மக்களின் உடமைகளைத் திருடியோர்.. அபகரித்தோர்...சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் ஆகியோர் பொதுத் தேர்தலில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதிலும் மிகவும் அவதானமாக இருப்பதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டு குண்டர்களைப் பாராளுமன்றிற்கு மீண்டும் சேர்த்துக்கொண்டால் பொதுபல சேனா அமைப்பினைக் கலைக்கவியலாது எனவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read more...

சஜித்தின் புதிய கட்சிக்கான முன்னேற்பாடு!

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைத் தராதுவிட்டால், மாற்றுச் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு வழிசெய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்பது சஜித் பிரேமதாசவின் எதிர்பார்ப்பாக உள்ளதுடன், பல மக்கள் சந்திப்பினை ஏற்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, எதிர்வரும்பொதுத்தேர்தலுக்கு முன்னர் 22 மாட்டங்களையும் உள்ளடக்கி சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளன.

தேசிய நாளிதழ் ஒன்றுக்குக் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெவிக்கும்போது: பெரும்பாலும் மாற்றுக் கட்சியொன்று உருவாவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பொதுமக்களைப் பாதுகாக்கும் உரிமை முப்படைகளுக்கு!

இலங்கையையும் இலங்கை கடல் எல்லையையும் பாதுகாக்கும் பொறுப்பை முப்படைகளின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைத்துள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கட்டளைச் சட்டத்திற்கேற்ப, இலங்கை முழுவதிலும், கடல் எல்லையிலும் மக்களின் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான பொறுப்பை இவ்வாறுமுப்படைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read more...

பொலிஸாரின் உதவிக்காக நாங்கள் இராணுவத்தைப் பயன்படுத்துவோம்!

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நாங்கள் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவோம் என பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஓய்வுபெற்ற மேஜருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் தொடர்பில் ஏற்படும் பிளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more...

Saturday, November 23, 2019

சீஐடி இயக்குனருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் சுமந்திரன்..

குற்றப்புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகர, புதிய அரசாங்கம் அரசினை பாரமெடுத்த மறுகணமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷாணி அபயசேகர இலங்கையின் குற்றப்புலனாய்வு வரலாற்றில் பதிவாகியுள்ள சிறந்ததோர் துப்பறியும் நிபுணன்.

இலங்கையில் இடம்பெற்ற மர்மமான குற்றங்கள் பலவற்றின் மர்மங்களைத்துலக்கிய அபார கெட்டிக்காரன் என்பது யாவரும் அறிந்த விடயம். மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் கவனம் செலுத்தும் பொலிஸ் அதிகாரியாக குற்றங்கள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு எக்காலத்திலும் தயங்கியதில்லை.

மஹிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்ட பல்வேறு கொலைச்சம்பவங்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான புலன்விசாரணைகளின் பிரதானியாகவும் அவர் செயற்பட்டுவந்ததும், ஷானி அபயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் ஏவலாளி என மஹிந்த தரப்பினர் குற்றஞ்சுமத்தி வந்தது யாவரும் அறிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தின்போது அரசியல் நோக்கம் கொண்ட பல்வேறு வழக்குகளுக்கு அவர் முன்னுரிமை வழங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.

இந்நிலையில் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் அரசியல்பழிவாங்கல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் இவ்விடயத்தில் எதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இத்தனை அழுத்தத்தை கொடுக்கின்றார்? சுயாதீன பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவிற்கு என்ன நடந்து விட்டது? பிரதான ஐக்கிய தேசியக் கட்சி எங்கு சென்றுவிட்டது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தவறு ஒன்று நடக்கின்றபோது, அதுவும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது எனக்கருதப்படுகின்றபோது குரல் எழுப்புவது பாராட்டத்தக்கதும் சிறந்த நல்லுதாரணமும்கூட. ஆனால் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கான தார்மீக உரிமை சுமந்திரனிடமுண்டா என்பதே இங்கே இலங்கைநெற் எழுப்புகின்ற கேள்வியாகும்.

நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசொன்றை இயக்கியது. அதன் நிழல் பிரதமராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வடகிழக்கில் செயற்பட்டார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அவ்வாறு செயற்பட்ட அவர் குறித்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட அரசியல் பழிவாங்கல்கள் பட்டியலில் அடங்காதவை.

வடகிழக்கெங்கும் அரச அலுவலகங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் , அரச இயந்திரத்தையே முடக்கியது என்று சொல்லுமளவுக்கு நிலைமைகள் காணப்பட்டது. பல அரச ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு கதிரைகளில் தகுதியற்ற தமது ஏவலாளிகள் அமர்த்தப்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பழிவாங்கல்களுக்கான சிறந்த உதாரணம் ஒன்றை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். 2015 இல் மைத்திரி அரசாங்கம் கையேற்றவுடன் கிழக்கு பல்கலைக் கழகத்தின் துணவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் கோபிந்தராஜா இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த கால நீடிப்பை ரத்து செய்வதற்காக சுமந்திரன் மிகுந்த சிரமம் எடுத்தாக அறியமுடிகின்றது. அவரது காலநீடிப்பு ரத்துச் செய்யப்பட்ட தருணத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அதனால் கிழக்குப் பல்கலைக்கழகம் பல இழப்புக்களைச் சந்தித்ததாகவும் அத்தருணத்தின் மாணவர்கள் கொந்தளித்திருந்தனர். ஆனால் மாணவர்களின் கொந்தளிப்பினையும் கருத்தில் கொள்ளாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டிருந்தது.

தமது அரசியல் தேவைகளுக்காக பல்கலைக்கழக நிர்வாகங்களிலேயே கைவைத்து தமிழ் புத்திஜீவிகளையே நாட்டைவிட்டு விரட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சிஐடி இயக்குனருக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதன் மர்மம் தேடியறியப்படவேண்டியதாகும்..

Read more...

மண்டை ஓடுகளை பெற பிரித்தானியாவுக்கு சென்ற ஆதிவாசிகள்..

பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைகழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்பது மண்டை ஓடுகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மண்டையோடுகள் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டையோடுகள், பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் உடற்கூற்றியல் ஆய்வாளர்களாலும் ஜேர்மனியில் அமைந்துள்ள மனித வரலாற்று விஞ்ஞானத்துக்கான மக்ஸ் ப்ளாங்க் நிறுவகத்தின் ஆய்வாளர்களாலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வேடுவ இனத்தவர்களே இலங்கையின் பழங்குடி மக்கள் என கருதப்படுவதால் அந்த ஒன்பது மண்டை ஓடுகளையும் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மண்டை ஓடுகளை பெற அவர் பிரித்தானியாவிற்கு சென்று அங்கு எடின்பர்க் பல்கலைகழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோவை வரவேற்பதில் பெருமை கொள்வதாகவும்அவர்களுக்கு உரித்தான மனித எச்சங்கள் அவர்களிடம் மீள கையளிக்கப்படும் எனவும் எடின்பர்க் பல்கலைகழககம் தெரிவித்துள்ளது.

Read more...

பெளத்த சிங்­கள அரசு; சிறு­பான்மை மக்­களை பாதிக்கும் - ஜே.வி.பி!

சிங்­கள பெளத்த அர­சாங்கம் ஒன்­றினை அமைக்கும் நோக்­கத்தில் ராஜபக்ஷக்கள் செயற்­பட்டால் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கே அதிக தாக்­கத்தை செலுத்தும். ஜனா­தி­பதி கோத்­தாபய தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்சப்படுத்தியுள்ளார். இந்த அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் தவ­றா­னவை என்­பதை மக்கள் இன்­னமும் உண­ர­வில்லை என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

பொதுத் தேர்­தலில் பல­மான எதிர்க்­கட்­சி­யாக உரு­வா­கவே முயற்­சிக்­கின்றோம் எனவும் ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­ன­ராக அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்ற நகர்­வுகள் குறித்தும் பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வாறு செயற்­படும் என்ற கார­ணிகள் குறித்தும் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிர்­பார்த்த அள­விற்கு மக்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. இதற்கு சில கார­ணிகள் உள்­ளன. பிர­தான இரண்டு வேட்­பா­ளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்ற நிலையில், மூன்றாம் நப­ருக்கு மக்கள் ஆத­ரவு கிடைப்­பது கடி­ன­மான ஒன்­றாகும். அதேபோல் ஊட­கங்­களும் பிரதான இரு வேட்­பா­ளர்கள் குறித்து மட்­டுமே கவனம் செலுத்­தின. எவ்­வாறு இருப்­பினும் தேர்­தலில் மக்கள் ஒரு ஆணையை கொடுத்­துள்­ளனர். அதற்கு அனை­வரும் கட்­டுப்­பட்­டாக வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்­களில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்­பெறும். இதில் ராஜபக்ஷ அர­சாங்கம் சகல விதத்­திலும் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி, ஐக்­கிய தேசிய கட்­சியின் அரை­வாசி பேரை­யா­வது விலை­கொ­டுத்து வாங்கி, தமது அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிப்­பார்கள். ஆகவே பல­மான எதிர்க்­கட்சி யார்? என்­பதே கேள்­வி­யாக அமையும். ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் பல­மான எதிர்­கட்­சி­யாக செயற்­பட முடி­யுமா? என்ற கேள்வி எழும். ஆகவே தேசிய மக்கள் சக்தி, பொதுத் தேர்­தலில் மக்­களின் ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக அடை­யா­ள­ப­டுத்த சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுப்போம்.

மூன்று மாத­கால இடை­கால அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் யார்? என்று பார்த்தால் இந்த அர­சாங்கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை தெரிந்­து­கொள்ள முடியும். கடந்த காலங்­களில் ஊழல் வாதிகள், பாரா­ளு­மன்­றத்தில் அரா­ஜ­க­மாக செயற்­பட்­ட­வர்கள், பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்கள், வழக்­குகள் உள்ளவர்களை ஜனா­தி­பதி அமைச்­சர்­க­ளாக நிய­மித்­துள்ளார். இவர்­களை கொண்டு ஊழ­லில்லா அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது.

மறு­புறம் இன­வாத மத­வாத அமைப்­புக்கள் அனைத்­துமே இன்று அமை­தி­யா­கி­யுள்­ளன. ஆகவே இவர்கள் அனைவரும் யாரு­டைய தேவைக்­காக செயற்­பட்­டனர் என்­பதும் தெளி­வா­கி­யுள்­ளது. எனவே மக்கள் இப்போதாவது உண்­மை­களை உணர வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஆனால், மக்கள் இன்றும் அவற்றை அறிந்துகொள்ள தயா­ரில்­லாத நிலையிலேயே உள்­ளனர்.

ஜனா­தி­பதி தனது பத­விப்­பி­ர­மாண நிகழ்வின் போதே, தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை, காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இவர்­களின் அர­சாங்­கத்­தையும் பெளத்த சிங்­க­ள­வாத அர­சாங்­க­மாக அமைக்­கவே முயற்­சி­களை எடுப்­பார்கள் என்­பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே, தமிழ் - முஸ்லிம் மக்களை புறக்கணித்த அரசாங்கம் உருவாகினால் அதில் அதிக பாதிப்பு சிறுபான்மை மக்களையே சென்றடையும். அதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். எனவே எதிர்க்கட்சியாக நாம் பலமடையவே சகல மக்களையும் சந்தித்து, எமக்கான ஆதரவை கேட்போம் என்றார்.

Read more...

சகல மாவட்டங்களினதும் பாதுகாப்பு இராணுவத்தினர் கையில்.. ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி வெளியானது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் ஊடாக 25 நிர்வாக மாவட்டத்தினுள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

கர்ப்பிணியான முஸ்லிம் பெண்மணி மீது அவுஸ்திரேலிய இனவெறியன் ஒருவன் தாக்குதல்..

சிட்னியின் உணவுவிடுதியொன்றில் முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ருசாஎலெஸ்மருடனும் அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் உதைப்பதையும் சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

இதனை தொடர்ந்து அங்கு காணப்பட்டவர்கள் அவரை அகற்றுகின்றனர்.

இந்த தாக்குதல் இனரீதியிலானதா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவி;த்துள்ள காவல்துறையினர் இருவரும் அறிமுகமாகாதவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முஸ்லீம்கள் குறித்து கருத்து தெரிவித்த பி;ன்னரே தாக்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தூண்டப்படாத எப்போவது இடம்பெறும் சம்பவம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் எலெஸ்மர் முகநூல் பதிவொன்றில் மனிதாபிமானமின்மை அதிகரித்துள்ளமையே தன் மீதானதாக்குதலிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினர் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வது வழமையாகிவிட்டது நான் சிட்னியில் பிறந்து வளர்ந்தவள் நான் ஒரு முஸ்லீம் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் வார்த்தைகள் மூலம்துஸ்பிரயோகங்களை அனுபவித்துள்ளேன் ஆனால் தாக்கப்படுவேன் என நினைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




.

Read more...

நீதியை அடைவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒரு நாட்டின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது.

முரண்பாட்டுக்கான காரணங்களுக்குத் தீர்வை ஏற்படுத்தி கடந்த கால துயர்களை நிவர்த்தி செய்து நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்பதான நீதியை அடைவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் ஒரு நாட்டின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாளர் கே.தங்கவேல் தலைமையில் நேற்று (22) கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சி பிரிவு மண்டபத்தில் இடம்பெற்ற உயர் அதிகாரிகளுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மனித உறவுகளில் மோதல் என்பது பொதுவாக முரண்பாடுகள் உள்ள திறத்தவர்களுக்கிடையே காணப்பட்டாலும், இது ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றது. முரண்பாடுகள் வளர்க்கப்படாமல் உடன்பாடுகளை வெளிப்படைத்தன்மைமிக்கதாக செய்வதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும்.

அண்மைக்காலமாக மோதல்களை தீர்த்துவைப்பதற்கு வன்முறைகளை வழிமுறைகளாகக் கையாளுகின்றனர். மோதல் தடுப்பு என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இது இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படணே்டும்.

மோதல் தோற்றம் பெறுவதற்கு முன்னரே அதன் அறிகுறிகளை அறிந்து அவற்றை தடை செய்வது மற்றயது மோதல் தோற்றம் பெற்றுவிட்டநிலையில் பக்கச்சார்பின்றி உடனடியாக சாதாரண நிலைமைக்குத் திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகும். இம்முறைமை எவ்வாறாயினும் சமூக நீதி என்பதுடன் எல்லாசந்தர்ப்பங்களிலும் ஏற்புடையதல்ல.

முரண்பாடு என்பது முரண்படு அக்கறைகளைக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களிடையேயான உறவு முறையாகும். ஆனால் வன்முறை என்பது உடல்சார், உளசார், சமூக அல்லது சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி தமது முழுமையான ஆற்றலை அடைவதனைத் தடுக்கின்ற செயல்கள், சொற்கள், மனப்பான்மைகள், கட்டமைப்புகள், முறைமைகள் என்பவைகளை உள்ளடக்குகின்றது.

இணக்கப்பாட்டினை நிரந்தரமாகப் பேணவேண்டுமாகவிருந்தால் இருபக்க பேச்சுவார்த்தை அவசியம். இரு தரப்பினரும் சாத்தியமான விருப்பத் தேர்வுகள் பற்றி நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டு தீர்வொன்றை அடைவதனை இயலச்செய்கின்ற செயற்பாடாகும். இது சமாதானத்திற்கு வழிவகுக்கும்.

சமாதானம் என்பதை ஒருவன் முறையில்லாத நிலை எனக் கூறினாலும் நிரந்தர சமாதானம் அடையப்படவேண்டுமாகவிருந்தால் அது சமுகத்தின் அடிமட்டத்திலேயே கட்டியெழுப்பப்படவேண்டும். முரண்பாட்டின் திறத்தவர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புதல் மற்றும் கலந்துரையாடல்களை இயலச் செய்தல், முரண்பாட்டின் திறத்தவர்களை நேரடி தொடர்பாடலில் ஈடுபடுத்தல் போன்ற செயற்பாடுகள் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பைஷல் இஸ்மாயில்

Read more...

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நிராகரித்தார் அட்மிரல் சரத் வீரசேகர.. தவராசாவின் விண்ணப்பம் நிராகரிப்பு..

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றத்தை தொடர்ந்து இலங்கையின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களும் மாற்றப்பட்டு பல மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வட-கிழக்குக்கான ஆளுனர்களை நியமிப்பதில் தொடர்ந்தும் முடிவுகள் எட்டப்படாத நிலை காணப்படுகின்றது.

கிழக்கின் ஆளுநராக ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரியும் முன்னாள் அமைச்சருமான அட்மிரல் சரத் வீரசேகர நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பை தெரிவித்திருந்தபோதும் அதனை சரத் வீரசேகர நிராகரித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்று கலைக்கப்பட்டு புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது. அத்தேர்தலில் போட்டியிட தயாராகிக்கொண்டிருக்கும் அவர் குறுகியகாலத்திற்காக அப்பதவியினை பெற்றுக்கொள்வதில் அர்த்தம் இல்லை எனக் கருதுவதாக அறியக்கிடைக்கின்றது.

அதன் அடிப்படையில் பெரும்பாலும் திஸ்ஸவித்தாரண அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றது.

இதேநேரம் வடக்கின் ஆளுநராக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் முக்கியஸ்தர் தவராசாவை நியமிக்குமாறு அக்கட்சியினர் வேண்டுதல் விடுத்தபோதும், ஈபிடிபி க்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஆளுநர் பதவியையும் வழங்கமுடியாது என நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

Friday, November 22, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் இறந்த தன் மகனுக்கு இழப்பீடு கோருகின்றனர் அமெரிக்கப் பெற்றோர்!

யிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த 11 வயதுடைய தனது மகனுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கப் பிரசைகளான பெற்றோர் நேற்று (22) உயர்நீதிமன்றத்திற்கு மனுவொன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.

எலக்ஸாண்டர் எரொவ் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த மனுவில், அதிகாரம்மிக்கோரின் கவனயீனக் குறைவினால் நிகழ்ந்த இந்த குண்டுத் தாக்குதல் மூலம் தனது மகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்ற விடயத்தை வெளியிடுமாறும் கோரியுள்ளனர்.

சென்ற ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு சினமன் கார்டன் ஹோட்டலின் ஏற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது மகன் கொலையுண்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பதில் கடமையாற்றும் பொலிஸ் மாஅதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பிரனாந்து உள்ளிட்டோரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

Thursday, November 21, 2019

புதிய ஜனாதிபதி வந்த கையோடு புதிய ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் நேற்றைய தினம் அறிவித்த அறிவித்தலின்படி, அனைத்து முன்னாள் ஆளுநர்களும் தங்கள் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்களாக கீழ்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல் மாகாணம் - சீத்தா அரம்பேபொல

சபரகமுவ மாகாணம் - டிக்கிரி கொப்பேகடுவ

வடமேல் மாகாணம் - ஏ.ஜே.எம். முஸம்மில்

மத்திய மாகாணம் - யலித் யூ. கமகே

ஊவா மாகாணம் - ராஜா கொல்லுரே

தென் மாகாணம் - கலாநிதி வில்லி கமகே


Read more...

Wednesday, November 20, 2019

நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலக மாட்டாராம் அனுர!

இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி ஒரு குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அது கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட மொத்தவாக்குகளின் பாதியையே பெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் தமது கட்சி பாரிய பின்னடைவை கண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியின் பின்னர் பத்தரமுல்லையிலுள்ள தமது கட்சித்தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில் :

"தேசிய மக்கள் சக்தி இயக்கமாக நாங்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோம். இலங்கையின் அரசியல் மேடைகளுக்கு இதுவரை வராத ஏராளமான அரசியல் குழுக்கள் எம்முடன் களத்தில் நிற்கின்றனர். எங்கள் பிரச்சாரத்தில் ஏராளமான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எம்முடன் இணைந்தனர். எங்களுக்கு ஒரு லட்சிய இலக்கு இருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இரண்டு பிரதான முகாம்கள் எதிராக நிற்கும்போது தேர்தல் பிரச்சாரம் எவ்வளவு கடினமானதாக இருந்தது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்த இக்கட்டான சூழலில்தான் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் நுழைந்தோம். இருவகையான தேர்தல் முடிவொன்றினை நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஆனால், எங்களுக்குத் தெரிந்தபடி, இலங்கையில் இதுவரை அபத்தமான மற்றும் முட்டாள்தனமான பிரச்சாரங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் உள்ள சிரமம், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கான பாதை ஆகியவற்றை மக்களுக்கு காட்டியுள்ளோம். விளைவு என்னவாக இருந்தாலும், நாடும் இந்த நாட்டு மக்களும் செல்லவேண்டிய பாதை இதுதான் என்று நாங்கள் நம்புகிறோம்.

தேசிய பாதுகாப்பிற்கான ஒரே வழி ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், ஒரு நல்ல கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், சிங்கள-தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்காகவும், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காகவும் ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின் வடிவம் என்னவாக இருந்தாலும், மக்கள் தேர்வு செய்ய வேண்டிய பாதையை நாங்கள் காட்டியுள்ளோம்.

தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு, நாட்டின் நிலைமையைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். பொருளாதார ரீதியாக நம் நாடு எந்த திசையில் செல்ல முடியும்? ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ? சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் சந்தேகம், அவநம்பிக்கை மற்றும் மோதலை நோக்கி செல்கிறார்கள் என்பது மிக நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நாட்டினதும் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தீவிரமாக போராடுவோம் என்று உறுதியளிக்கிறோம். இதற்காக இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

71 ஆண்டுகளாக, நம் நாட்டில் பின்பற்றிய அரசியல் கொள்கைகள் காரணமாக நம் நாடு எங்குள்ளது என்பதை நாம் அறிவோம், இந்த சூழ்நிலையில்தான் . ஜனநாயகம் அபிவிருத்தி செய்ய முடியுமா? இது சாத்தியமா என்பது எங்களுக்கு முன்னால் உள்ள முக்கிய சவாலாகும் தற்போதைய அரசிய சூழல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தெளிவாகக் காட்டியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, சிங்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நாட்டு மக்கள் முன்னோக்கி செல்லும் பாதை என்ன என்பது மிகவும் தெளிவாக உள்ளது. எனவே, இந்த நாட்டு மக்களின் நலனுக்காக போராடவும், மக்களின் உரிமைகளுக்காக போராடவும் அவர்கள் தயாராக இருப்பதாக மக்களுக்கு நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம்.

தேர்தல் பிரச்சாரத்தில் எங்களால் ஒரு பரந்த முன்னணியை உருவாக்க முடிந்தது. ஏராளமான அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், சிவில் ஆர்வலர்கள், கலைஞர்கள், இலக்கிய வல்லுநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் சந்தித்த ஆழ்ந்த நெருக்கடிகளிலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற அவர்கள் உண்மையிலேயே விரும்பினர். இந்த ஆர்வலர்கள் எங்களைப் போலவே இந்தத் நோக்கத்தை அடைவதற்கு நிறைய வேலை செய்தார்கள். இந்த தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அவர்கள் செய்த பங்களிப்புக்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்த அரசியல் பணியில் அவர்கள் இரவும் பகலும், கிராமங்களிலும் நகரங்களிலும் நடந்து, குடிமக்களைச் சந்திப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் அனைவருக்கும் தேசிய சக்தியாக நன்றி கூறுகிறோம்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இனவாத அடிப்படையில் ஒரு குழு செயற்பட்டது. இது தேர்தல் முடிவுகளிலும் காட்டப்பட்டுள்ளது. ஒரு குழு இனவாதத்தை தங்கள் தளமாக மாற்றி நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை காரணம்காட்டி தலைவரானார். தெற்கில் தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டின.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் ஒரு சமூகமாக தங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்டிருக்கும் அரசியல் வளர்ச்சியை உணர்ந்தனர். ஒரு சமூகமாக அவர்கள் அதைப் பாதுகாக்க ஒரு அரசியல் முடிவுக்கு வந்துள்ளனர். இது தேர்தல் முடிவிலிருந்து தெளிவாகிறது.

இத்தகைய தீவிரமான பிரிவில் கூட 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கை வாக்குகளை அளித்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அது மட்டுமல்ல. அவர்கள் எங்களை நம்புகிறார்கள், தேர்தலின் கௌரவத்தையும் மதிப்பையும் நாங்கள் மதிப்போம், பாதுகாப்போம் என்பதை நம் நாட்டு மக்களுக்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம் .
மீண்டும் இந்த நாட்டு மக்கள் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் .

எங்கள் வாழ்நாளில் ஏராளமான பின்னடைவுகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம் என்பதை இந்த நாட்டின் பொது மக்களுக்கு நாங்கள் அறிவிக்கிறோம், இந்த நாட்டின் மக்கள் எதிர்நோக்கும் சவாலில் இருந்து நம்மை மீட்பதற்கான பொறுப்பை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்.".

Read more...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்! ரீஎன்ஏயின் சூடு தணிகிறது!

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று வெகுவிரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள 'ரெலோ' அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது, இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புக்களினதும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்கவிருப்பதன் நோக்கம், தற்போதைய ஜனாதிபதியின் நம்பிக்கைதரும் சிறந்த பேச்சிற்கெனவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் என பா.உ. மேலும் தெரிவித்தார்.

Read more...

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார்.

அவருக்கு அந்தச் சலுகையை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக, இராஜினாமாச் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

Read more...

Tuesday, November 19, 2019

மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா பயணமாகிறார் ஜனாதிபதி கோட்டாபய!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை, உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு தங்களது நாட்டுக்கு வருகைதருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்குப் பிரயாணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜயசங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இன்று பிற்பகல் 4.20 மணிக்கு இந்தியாவில் புதுடில்லியிலிருந்து ஏ.ஐ. 281 விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Read more...

பாராளுமன்றம் கலைத்தல் பற்றிய தீர்மானம் நாளை!

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையின் கீழ் இன்று (20)நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றக் கட்டிடத் தொடரில் நேற்று (18) இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி நீண்ட உரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

பாராளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச ஆரதவு பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த வருடம் மார்ச் வரை அரசாங்கம் தொடர்ந்து இயங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தைப் புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைத்தல், மிக விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தனித்தனியாகவன்றி, குழுவாக அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான பிரேரணைகளில் பொருத்தமானதை செயற்படுத்துமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தினை ஆமாேதித்துள்ள பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்படவுள்ள முடிவின்படி செயற்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தை நடத்துவது குறித்து புதிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அந்தக் குழுவினரும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

62 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட உரையாடல் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது.

Read more...

ஜனாதிபதி கோட்டாபய இன்று கடமையேற்பார்!

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகலில் தனது கடமையேற்கவுள்ளார்.

அதற்கேற்ப, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கடமையேற்கவுள்ளார்.

மேலும் புதிய ஜனாதிபதியின் புதிய ஜனாதிபதிச் செயலாளராக கலாநிதி பீ.பீ ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பெரும்பாலும் புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Monday, November 18, 2019

எட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்! (படங்கள் இணைப்பு)

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more...

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரபூர்வ, இலச்சினை இதுதான்.

ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.

அரச அலுவலகங்களில் இனிமேல் தனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் நான்கு மூலைகளும் பௌத்தம் மற்றும் தேசத்தின் செல்வாக்கைக் குறிக்கின்றன. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உத்தனா சம்பதா , ஆரக்கா சம்பதா , கல்யாண சம்பதா மற்றும் சாம ஜீவிதா ஆகிய நான்கு பௌத்த சிந்தனைகளை சித்தரிக்கிறது:

நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு குறியீடுகள் சர்வதேச உறவுகளையும் விருந்தோம்பலையும் குறிக்கின்றன. ஒரேஞ் நிறம் தமிழ் மக்களையும் பச்சை நிறம் முஸ்லிம் சமூகத்தையும் குறிக்கிறது.

நான்கு அடி அகலமுள்ள வெள்ளை கோடுகள் அனைத்து திசைகளின் பாதுகாப்பையும் குறிக்கிறது.

சமமாக உள்ள மஞ்சள் துண்டு ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தின் ஒற்றுமையையும் குறிக்கிறது.மஞ்சள் என்பது வாழ்க்கையின் உயிர்ச்சக்தியைக் குறிக்கிறது.



Read more...

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்! பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..

தேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிடமிருந்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

தனது முறைப்பாட்டுக்கு ஆதாரமாக கருணாவின் பேச்சுக்களின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

Galle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள சஜித் பிறேமதாஸ ஆகியோர் தற்போது கொழும்பு Galle Face ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.

பேச்சுவார்த்தை இடம்பெறும் சுற்றுவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளோ அன்றில் ஹோட்டல் ஊழியர்களோ அனுமதிக்கப்படவில்லை என அறியக்கிடைப்பதுடன், இவர்கள் கோத்தபாய அரசுடன் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கான முன்மொழிவொன்றை செய்வதற்கே இவ்வாறு அவசரமாக கூடியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தமிழ் மக்களுக்கான கதவுகள் எப்போதும், மஹிந்த அரசில் திறந்திருந்தபோதும் அதனை தட்;டிக்களித்துவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு தனது அரசில் இடமில்லையென புதிய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அடிப்படைவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்து தமிழ் மக்களுக்கு புதியதோர் சிக்கலை உருவாக்க சுமந்திரன் முனைவது மிகவும் கண்டனத்திற்குரியதாகுமென ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

ஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..

தேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு தமைமைப்பதவியை அவரிடம் பாரமளிக்கும் என தெரியவருகின்றது. அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக இன்றைய ஒன்றுகூடலில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பொதுத்தேர்தலில்போது, கைச் சின்னத்தில் போட்டியிடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..

Read more...

பாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்கள் சாடுகின்றது. அங்கு சென்றிருந்த ஹிஸ்புல்லாவை கண்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோர் அருவருத்துள்ளதுடன் பாலில் விஷம் கலக்க அனுமதிக்க முடியாது என ஹிஸ்புல்லாவின் காதில் கேட்குமளவுக்கு அவரின் வருகைக்கு எதிர்ப்பைகாட்டியதாக அறியமுடிகின்றது.

அதேநேரம் எதிர்வரும் அரசாங்கம் எவ்வாறு அமையவேண்டும் என வடிவமைக்கும் செயற்பாட்டாளர்கள் எத்தருணத்திலும் அடிப்படைவாதிகள் எவருக்கும் புதிய அரசில் இடமளிக்கக்கூடாது என்ற ஒருமித்த முடிவில் உள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக்கப்பட்டுள்ளேன். வெற்றியில் தமிழ் முஸ்லிம் மக்களை இணையுமாறு அழைக்கின்றேன்.

மன்னர் ஆட்சிக்கு பெயர்போன பௌத்தர்களின் புனித பூமியாக கருதப்படும் அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில், இன்று முற்பகல் 11.48 மணிக்கு நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இந்த வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால் நினைத்தது போன்று எமக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. எனினும் நாட்டின் ஜனாதிபதியாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

மேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த விடயங்கள் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவேன்.

எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த எதிர்க் கட்சித் தலைவரும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்பதுதோடு அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கட்சியை உருவாக்கி இந்நிலைக்கு கொண்டுசென்ற கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

எனது வெற்றிக்காக கைகோர்த்த அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என அனைவருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பாதுகாப்பேன். பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எனது ஆட்சியில் இடமில்லை.

பாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன்.

எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.

நான் எனது நாட்டை அன்பு செய்கின்றேன். அதனால் எனது ஆட்சியின் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறாது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தமிழ், முஸ்லிம், மஹிந்த ராஜபக்ஷ,

Read more...

Sunday, November 17, 2019

கோத்தாவின் வெற்றியை உத்தியோக பூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. நாளை அனுராதபுரத்தில் பதவியேற்பு.

இலங்கையின் 7 வது ஜனாதிபதிக்காக நேற்று 16.11.2019 ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அவ்வறிவிப்பின் பிரகாரம்

கோத்தபாய ராஜபக்ச 6,924,255 (52.25%)
சஜித் பிறேமதாஸ 5,564,239 (41.99%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாளை அனுராதபுரத்தில் புதிய ஜனாதிபதி பதவிபிரமானம் செய்து கொள்வார் என பொதுஜன பெரமுனவின் உள்ளகவட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேநேரம் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான உடன்பாட்டை ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Read more...

பொலன்னறுவை முழுமையாக கோத்தாவுக்கு!

2019 ஜனாதிபதித் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் வாக்கெடுப்புக்கள் முழுமையாக முடிவடைந்துள்ளன. அதன் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.

அதற்கேற்ப, பொலன்னறுவை மாவட்டத்தில் 147,340 வாக்குகளைப் பெற்று அதாவது, 53.01% வீத வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தின்மின்னேரியா, மெதகிரிய, பொலன்னறுவை எனனும் அனைத்து தேர்தல் பிரிவுகளிலும் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 112,473 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 40.47% ஆகும்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 12,284 வாக்குகளையே பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். 4.42% வீதமே இவர் பெற்றுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 326,443 ஆகும். அதில் 280,487 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,563 ஆகும்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவே முன்னணியில் உள்ளார்.


Read more...

யாழில் வெற்றி சஜித்திற்கு!

யாழ்ப்பாண மாவட்ட யாழ்ப்பாணத் தொகுதி வாக்கெடுப்பு முடிவின்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாஸ - 20792

கோத்தபாய ராஜபக்ஷ- 1617
எம்.கே. சிவாஜிலிங்கம் - 466

Read more...

களுத்துறை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பின் வெற்றியும் கோத்தாவுக்கே!

களுத்துறை மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ- 22586

சஜித் பிரேமதாஸ - 9172

அநுரகுமாரா - 1912

Read more...

யாழ்ப்பாணம் - கைட்ஸ் வெற்றி சஜித்திற்கு!

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் கைட்ஸ் தேர்தல் பிரிவின் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாஸ- 11319

கோத்தபாய ராஜபக்ஷ - 2917

ஆரியவங்ச திசாநாயக்க- 382

Read more...

பதுளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பின் வெற்றியும் கோத்தாவுக்கே!

பதுளை மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ- 21772

சஜித் பிரேமதாஸ - 11532

அநுரகுமாரா - 2046

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com