Friday, October 11, 2019

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 75% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 75% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சேமரத்ன விதான பதிரண தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் சுமார் 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்த தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் அதில் 72 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இரவு 10 மணி அளவில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இதுவரை 269 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதியில் இருந்து இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகள், விதிமீறல்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (10) இரண்டு வன்முறை சம்பவங்கள், 109 சட்டமீறல்கள் மற்றும் இரண்டு வேறு விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

Read more...

மதுமாதவ மீண்டும் கட்சியினுள் இணையவந்தால் அதுபற்றிச் சிந்திப்போம்! - கம்மன்பில

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவராகச் செயற்பட்ட மதுமாதவ அரவிந்த பகிரங்கமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக காெடூர வார்த்தைகளைக் கக்கியதன் காரணமாக, பின்னர் அதன் விளைவை எண்ணி கட்சியிலிருந்து விலகினார் எனவும், இதற்கு முன்னரும் இவ்வாறான விடயங்கள் ஏனையோர்களால் நடைபெற்றிருக்கின்றன எனவும், அவ்வாறு நடந்துகொண்டவர்கள் ஒருபோதும் கட்சியிலிருந்து விலகிச் செல்லவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று (10) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கும்போது,

அவர் சீரிய முறையில் தன்னால் ஏற்பட்ட குறையை எண்ணி வருந்தி, அதன் முழுப்பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டு எங்களுடன் வாத விவாதங்களில் பங்குகொள்ளாது, தேர்தல் காலத்தில் கட்சிக்கு ஏற்பட்டு களங்கம் தொடர்பில் கவலை காெண்டுள்ளார். எனவே, அவர் தொடர்பில் மீண்டும் மீண்டும் கருத்துக்களை முன்வைத்து அவர்மனதைப் புண்படுத்த நாம் விரும்பவில்லை.

என்றும் நாங்கள் அவருடன் ஒன்றிணைந்தே இருந்தோம்... அவர் மீண்டும் கட்சிக்குள் இணைய வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதனைத் தட்டிக்கழிக்க மாட்டோம். அதுதொடர்பில் சிந்தித்து நல்ல முடிவை எடுப்போம்... எனவும் கூறினார்.

Read more...

ஸ்ரீசுகவின் தலைமைப்பதவி பேராசிரியரிடம் சென்றதால் கட்சியினுள்ளே உட்பூசல்....

பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சியினுள்ளே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

அக்கட்சியின் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தத் தேர்வு தொடர்பில் தங்களது பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

கட்சியினுள்ளே பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கும்போது, ரோஹண லக்ஷமன் பியதாஸவுக்குத் தலைமைப் பதவி வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்பது பலரதும் கருத்தாக உள்ளதாகத் தெரியவருகின்றது.

Read more...

மங்களவுக்கும் ஐதேகவுக்கும் எதிராக மைத்திரி வழியில் சஜித்....

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தான் ஜனாதிபதியான பின்னர், போதைப் பொருள் வியாபாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என நேற்று (10) காலி முகத்திடலில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சிகூட, மரண தண்டனைக்கு எதிராக கட்சி என்ற முறையில் எழுந்துநிற்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளார்.

Read more...

நான் ஜனாதிபதியானால் பீல்ட் மார்ஷல் பதவி சரத் பொன்சேக்காவுக்கே! - சஜித்

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும்பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்த பொறுப்புக்களை நான் சரத் பொன்சேகாவிடம் கையளிக்கவுள்ளேன் எனவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

'இதுவரையில் எந்த தரப்புடனும் இணையாத நாம் எவ்வாறு சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்?' விளக்குகிறார் பசில் ராஜபக்ஷ

தெற்காசியாவில் மாத்திரமன்றி உலகிலேயே கட்சியொன்று தோற்றம் பெற்ற குறுகிய காலத்தில் இந்தளவிற்கு பிரசித்தி பெற்றிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (10) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது:

'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், சுதந்திர கட்சியின் ஆலோசகர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்கள் இருவரும் இந்த தீர்மானத்தில் உறுதியாக இருந்திராவிட்டால் இன்று இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்திருக்க முடியாது.

இதுவரையில் எந்த தரப்புடனும் இணையாத நாம் எவ்வாறு சுதந்திர கட்சியுடன் இணைந்தோம் என்று பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சிலர் எம்மிடம் கேள்வியெழுப்பினர். எமது தனிப்பட்ட கொள்ளைகளை ஒதுக்கி நாட்டையும் மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை அவ்வாறு கேள்வியெழுப்புபவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தெற்காசியாவில் மட்டுமன்றி, உலகிலேயே பொதுஜன பெரமுன போன்று தோற்றம் பெற்று மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த வேறு கட்சிகள் கிடையாது. அதேபோன்று முதல் முறையாக முகங்கொடுத்த உள்ளுராட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுக் காண்பித்தோம். இவ்வாறு எமது வெற்றிக்காக மக்களே வழிகாட்டினர்' எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Thursday, October 10, 2019

தேர்தலில் வாக்களிக்கும்போது லஸந்த விக்கிரமசிங்க போன்றோரை மறக்க வேண்டாம்! ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

'நாட்டின் அரசியல்வாதிகளும், பலம்பொருந்தியவர்களும், பெரியோர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொள்வோரும் குறிக்கோளுடனும் குறிக்கோளின்றியும் விமர்சனம் செய்து, அவற்றை வெளிக்கொணர முடியும் என்பதை யாரும் மறக்கக் கூடாது.' என இன்று ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய இலங்கை எனும் தொனிப்பொருளில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

'உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். உண்மையை வெளிக்கொணரச் சென்று உபாலி தென்னகோனுக்கு நடந்த கதி... லசந்த விக்கிரமதுங்கவுக்கு நடந்தகதி... கீத் லோயர் ஊடகவியலாளருக்கு நடந்த கதி.. எக்னெலிகொடவுக்கு நடந்த கதி....போத்தல ஜயந்தவுக்கு நடந்த கதி... ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களிடம் ஒரு விடயத்தைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும்போது ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க பற்றி மறக்க வேண்டாம்.

அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி, மரணங்களைத் தழுவி நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல்கள் பற்றி யாரும் மறந்துவிட வேண்டாம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் காவல் தெய்வங்கள்... அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும் யுகம் எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. நாங்கள் இன்னுமின்னும் மனித வளங்களைப் பலப்படுத்த வேண்டும். தகவலறியும் உரிமை இன்று நாட்டின் சட்டமாக மாறியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்ற நான் அதில் வெற்றிபெறச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு கூறுவதற்குக் காரணம் நாட்டைச் சீரிய முறையில் கட்டியெழுப்புவதற்காகவேயாகும்' எனவும் குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி மைத்திரிக்கு...

ஜனாதிபதித் தேர்தல் காலப் பிரிவுக்கு மாத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்தியஸ்தம் வகித்தாலும், பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்சி பலம் பொருந்தியதாக ஆவதற்குப் பங்களிப்பு நல்குவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜெயசேக்கர குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைப் பதவியிலிருந்து முழுமையாக நீங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது, கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலான முடிவுக்கு ஜனாதிபதி தனது முழு விருப்பையும் தெரிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் அதனையும் வாசித்துப் பார்த்து, அதற்கும் அனுமதியளித்தார் எனவும், ஜனாதிபதித் தேர்தலின்போது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரவைத் தலைவராகவும், ஜனாதிபதி சுயேட்சையாகச் செயற்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

தனிப்பட்ட தேவைக்காக கட்சியை சீரழிக்க வேண்டாம்: தயாசிறிக்கு சந்திரிக்கா தெரிவிப்பு

தனிப்பட்ட தேவைகளுக்குள் மட்டுப்பட்டு, பெறுமதியான கட்சி சீரழிய இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு அனுப்பிய பதிவு, முன்னாள் ஜனாதிபதியின் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அமைப்பாளர்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மொட்டுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டமை கட்சியை முழுமையாக தாரைவார்க்கும் செயற்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் பதவியைக் கைவிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்திருந்தால், கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்று கட்சியை மீளக் கட்டியெழுப்ப தயாசிறி ஜயசேகரவிற்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கு குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடனான கூட்டணியின்றி, கூட்டணிக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கான சக்தியும் தொலைநோக்கும் தலைவரிடம் இருக்காமையே கட்சியின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இடமளித்து, கொலை மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் நாடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது வலுவான நிலையை அடைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கோட்டாபய நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.மஹிந்த ராஜபக்ஸவுடன் இந்த விடயம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடியுள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அடுத்த கட்ட கலந்துரையாடலை, தான் நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ள முடியும் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

நேற்று முன்தினம் (08) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் போது, எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் உறுப்பினர்களுக்கு இதனை அறிவித்ததாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.மருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

Read more...

ராஜபக்சக்களுக்கும் தனக்கும் எவ்வித கள்ளத் தொடர்பும் இல்லவே இல்லை என்கின்றார் அனந்தி..

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், மாறாக நான் எந்தவொரு ராஜபக்ஷ ஆட்களையும் சந்திக்கவில்லையெனவும் தான் ராஜபக்ஷ தரப்புகளை சந்தித்தேன்; அவர்களின் பின்னணியில் தான் இயங்குகிறேன் எனக் குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.

நல்லூரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Read more...

ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்

ஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.

“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.

“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

Read more...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மாயை என்ற புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது - அநுர குமார திசாநாயக்க

மாயை என்ற புதியதொரு அரசியல் கலாசாரம் அரசியலில் ஒரு புதிய பிரிவாக மாறிபோயுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற பேராசிரியர் காலோ பொன்சேக்காவின் நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, ஶ்ரீ லங்கா பகுதித்தறிவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பூசாரி ஒருவரின் மூலம் தெய்வத்திடம் முறையிடுவார்கள் எனவும் அவ்வாறு பூசாரியின் மூலம் தெயவத்திற்கு முறையிடபடுவதாக மக்கள் நம்புவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி மக்கள் தமது குறைப்பாடுகளை பூசாரிக்கு சொல்வதாகவும் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை மக்களிடம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், ஆனால் தேவேந்திர ஆலயத்தின் பிரதான பூசாரிக்கு மக்கள் பக்கத்திற்கு வர முடியாதளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு பூசாரிக்கு தமக்குரிய ஆலயத்திற்கு செல்ல முடியாவிட்டால் அவர் எங்கு செல்வார் எனவும் அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

எனவே, பல விடயங்கள் இவ்வாறு மாயையாக மாற்றமடைந்து பிரதான அரசியல் செயற்பாடுகளில் ஒரு பிரிவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

155 வேட்பாளர்கள் போட்டியிடும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நாளை!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (10) முற்பகல் எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபை முன்றலிலிருந்து ஆரம்பமானது.

நாளை (11) நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்களர்களின் எண்ணிக்கை 53, 384 ஆகும்

17 தேர்தல் வலயங்களில், 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 5 தேர்தலில் போட்டியிடவுள்ளன.வேட்பாளர்கள் 155 பேர் போட்டியிடும் இத்தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்காக 28 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

Read more...

சிங்கப்பூருக்குப் பயணிக்கிறார் கோத்தபாய!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

மருத்துவச் சிகிச்சைக்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை சிங்கப்பூருக்குப் பயணிப்பதற்கு கோத்தபாய ராஜபக்ஷ மூவர்கொண்ட மேல்நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

Read more...

அபிவிருத்தி எனும் மதுவில் மயங்கிய தமிழர் தலைமை குளத்தில் போட்டதை ஆற்றில் தேடலாமா? சிவா குருபரன்

UNP கட்சி தமிழர் பிரச்சனையில் பலவிதமான முயற்சிகளை முன்னெடுத்திருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது இவ்விடயத்தில் UNP ஒரு தோல்வி கட்சி ஆகும், இந்த தோல்வி சிலவேளைகளில் ரணிலின் நேர்மையற்ற தன்மையால்கூட நிகழ்ந்திருக்கக்கூடும். தமிழர் பிரச்சனையை தீர்க்கும் படிமுறையை புறப்புலன் இலக்காக முன்னிறுத்தி தமிழரை சிறுக்க சிதைத்து அழிக்கும் உண்மையான இலக்கை அவர் கொண்டிருப்பதை ஏனையோர் அவரது செயற்பாட்டின் இடைகாலங்களில் முறியடிப்பதாலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

சந்திரிக்கா காலம், புலிகள் காலம், அண்மைய புதிய அரசியலமைப்பு என சகல காலங்களிலும் தொடர்தோல்விகளை பெற்றமை உதாரணங்களோடு உள்ள வெளிப்படை ஆகும்.

ஆனால் மகிந்த தலைமை அல்லது கூட்டானது பெரும்பாலான முயற்சியளில் வெற்றிகளை, இலக்குகளை நடைமுறைப்படுத்தி இலகுவாக அடைந்துகொள்கிறது. இங்கு யுத்தம் , கொலைகள், கடத்தல்கள் என்பனவற்றை ஒருபக்கமாக வைத்துக்கொண்டு இலக்கை அடைதல் என்ற கருப்பொருளை நோக்குமிடத்து மஹிந்த தலைமை அல்லது கூட்டு மிகவும் செயற்பாடு அடைவுகளை இலகுவாக அடையும் அணி, உதாரணமாக ரணிலில் புலிகளுக்கு ஏற்பட்ட கசப்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு புலிகளுக்கே லஞ்சம் கொடுத்து ஆரம்பத்தில் மஹிந்த ஜனாதிபதியானதும், பின்னர் உலகநாடுகள் அனைத்தினதும் அழுத்தங்களை சமாளித்து இறுதிப்போரை நிகழ்த்தியமை, போரின்போது ஐநாவின், மனிதநேய முகவரகங்கள், அரசசார்பற்ற வெளிநாட்டு உதவு அமைப்புக்கள், வெளிநாட்டு ஊடகங்களை வெளியேற்றியமை அதன் பின்னர் ஐநாவின் செயலாளர்நாயகத்தை வரவேற்று அவர்களோடு உடன்படிக்கை செய்து அவர்களது முகவரகங்கள் ஊடாக போரில் பாதிக்கப்பட்டோரை மீள்கட்டமைக்க ஆரம்பித்தமை, அந்த திட்டங்களை ஜனாதிபதி செயலணி மூலம் கட்டுப்படுத்தியமை, சரணடைந்த கீழ்மட்ட புலி உறுப்பினர்களை வைத்து புனர்வாழ்வுக்கு என இரட்டை மும்மடங்கு பணத்தினை ஐரோப்பியஒன்றியம், ஐக்கியராச்சியம் என்பவற்றிடம் பெற்றுக்கொண்டு சிங்கள மக்கள், பௌத்த மகா சங்கங்களின் எதிர்ப்பையும் தாண்டி படிப்படியாக அவர்களை சமூகத்தில் இணைத்தமை, ஐநாவின் செயலாளர்நாயகத்தின் வருகையில் செய்துகொண்ட அல்லது கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கைக்கு அமைவாக அரசியல் தீர்வு நோக்கிய படிமுறையாக வடமாகாண தேர்தலை நாடாத்தியமை என பல அளவீட்டு முறையில் எண்ணிக்கையடிப்படை பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மஹிந்த தரப்புக்கு தமிழரின் ஆதரவு தேவையில்லை என அவர்கள் கூறினாலும் கூட எதிர்கால தேர்தல்களில் JVP ஒரு கருதத்தக்க போட்டியாளராக உருவாக்கி வருவதனால் மகிந்த தரப்புக்கு நிச்சயம் தமிழரின் ஆதரவு தேவை. அதுவும் UNP JVP ஆகிய கட்சிகள் வெறும் கட்சி வேட்பாளர்களை கட்சியை நோக்கி முன்னிறுத்தி நகருகிறார்கள் ஆனால் மஹிந்த தரப்பில் கோத்தாவின் பின் நாமல் ராஜபக்ச என்ற ஒரு வலுவான குடும்பத்தேவை அவர்களுக்கு உள்ளது எனவே மஹிந்தராஜபக்ஷ கூட்டணியை தமிழர்கள் தங்களுக்கான அர்ப்பணிப்புள்ள தமிழ்த் அரசியல்தலைமைகளூடாக தமிழருக்குரிய அரசியல் சமவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது கணிப்பு

மஹிந்தவும் அவரது கூட்டும் சிறந்தவர்கள் நல்லவர்கள் என நியாயப்படுத்துவது இந்த எழுத்தின் நோக்கமல்ல ஆனால் அந்த கூட்டு எவ்வளவு வினைத்திறனானனது, திட்டங்கங்களில் எத்தனை வீதத்தை நடைமுறைப்படுத்தினார்கள் எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள் அடைவுமட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்துவதே ஒரே நோக்கமாகும்.

மேற்கூறிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தமிழரசியல் சிக்கல்களை பிரச்சனைகளை ஏன் அவர்களிடம், அவர்கள் மூலம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த கட்டுரை முடிந்தளவில் ஆராய்கிறது. இங்கு வெற்றியை இலகுவாக அடையும் பெற்றுகொள்ளும் ஒரு குழுமம் அல்லது நிறுவனத்திடம் வேலையை கொடுத்து அதன்மூலம் தமிழர்களது அரசியல் தேவையை வெற்றிபெற செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும், தொலைத்த இடத்தில் தேடினால் தான் இழந்த பொருள் கிடைக்கும், சேதம் விளைவித்த நபரிடம் தான் இழப்பீடு அல்லது பரிகாரத்தை எடுத்துக்கொள்ள முடியும் அதேபோல மஹிந்த தலைமையை கூட்டை எதிர்க்கும் மேற்குலகின் அழுத்தங்களையும் இலகுவாக எமக்கு சாதகமாக பயன்படுத்தவும் முடியும் என்பது மேலே நிகழ்த்தப்பட்ட போரின் பிந்தைய அடைவுகளை உதாரணமாக கொண்ட ஒரு கணிப்பு ஆகும்.

உண்மையில் அபிவிருத்தி என்பது மஹிந்த காலத்தில் வெளிநாட்டு அழுத்தங்களை போர்க்குற்றங்களை சமாளிக்க வெளிநாட்டு மற்றும் இலங்கையின் நிதியில் பாரியளவில் நிகழ்ந்தது, ஆனால் TNAஆதரவு UNP அரசில் போரின் பிந்தைய வழமையான அடிப்படை முறைமைகள் ஊடான நிபுணத்துவ பொறிமுறை மீள்கட்டுமானங்கள் (standardized methodological reconstruction) கூட நிகழவில்லை அதேவேளை அடிப்படை அலகுகளை பிரதான இன அடையாளங்களை தெளிவாக இனங்கண்டு அவற்றை அழிப்பதனூடாக இனத்தை சிறுக சிதைத்து அழிக்கும் செயற்பாடுகள் வீரியமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அந்த கட்டமைக்கபட்ட அழிப்பு நடவடிக்கைகள் மக்கள் உயர்வடைந்த அல்லது அபிவிருத்தி பெற்ற மாயை ஒன்று கடன்கள் ஊடாக அல்லது பகட்டு போலி வாழ்க்கையூடாக ஏற்படுத்தப்பட்டு மக்கள் இலகுவாக நம்பவைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீதி செப்பனிடலை TNA என்ற UNP முகவரகத்தின் தலைவரான சுமந்திரன் அபிவிருத்தி என்ற சொற்பதத்தில் அழைக்கத் தொடங்கியிருக்கிறார். ஊடகங்களும் அதன் தாற்பரியம் தெரியாமல் அதே சொற்றொடரையே பாவித்து ஏமாற்றுகிறார்கள்.

சில இடங்களில் ஒழுங்கைகளை வெறும் 100 200 மீட்டர்கள் மட்டுமே தார் ஊற்றி மீதி பின்னர் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அறியக்கிடைக்கிறது, தவிர வீதி செப்பனிடல் போன்றன ஒரு அரசு தனது மக்களுக்கு செய்யவேண்டிய வழமையான சாதாரண கடமைகளில் ஒன்றாகும். ஆனால் அதையே UNP TNA கூட்டரசு அபிவிருத்தியாக காட்டி நிற்கிறது அப்படிப்பார்த்தால் மஹிந்த காலத்து புகையிரத மீள் கட்டுமானம், பெருந்தெருக்களின் புனரமைப்பு போன்றவற்றை எவ்வாறு அழைப்பது?

மஹிந்த காலத்து பெறுகைகள் அடைவுகள் அனைத்தும் கநதியானவை நீள அகல கால நிலைபேறு பரிமாணம் கொண்டவை.

UNP ஆட்சியில் அவ்வாறு அல்ல ஒரு தந்தை தன்குடும்பத்துக்கு வழங்கவேண்டிய மூன்றுவேளை உணவையும் அபிவிருத்தி என்ற சொல்லாடலில் அடக்குகிறார்கள், தாங்கள் செய்யவேண்டிய மக்களுக்கான சாதாரண கடமையை எங்களுக்கு மேலதிக ஆடம்பர விடயமாக காண்பிக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் அவரை நினைத்திக்கொண்டு வாழ்வை அல்லது பிள்ளைகளின் கல்வியை திருமணத்தை பிறந்தநாளை சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களை செய்யாமலிருப்பதில்லை, அதுபோலவே முள்ளிவாய்க்காலை சொல்லி மிகுதி காலங்களை தோற்றுப்போகும் குழுவான அல்லது ராசி இல்லாத குழுமமான UNPயிடம் மீள ஒப்படைக்காமல், மாயையில் போலி வாகுறுதிகளில் தொலைக்காமல் எப்போதும் வெற்றிபெறும் மகிந்த குழுமத்தில் ஒருமுறை முயன்று பார்ப்பதில் தவறெதுமில்லை ஆனால் எவ்வகையான எங்களுக்கான கோரிக்கையை யாரூடாக வைக்கிறோம் என்பதிலும் கேள்வி அடங்கி உள்ளது அத்தோடு அழித்த ஒருவனூடாக மீள்கட்டுமானத்தை மறுவாழ்வை பரிகாரத்தை செய்யவைப்பதும் செய்விப்பதும் ஒருவகை வீரமும் இறுதிப்போரில் உயிரீர்ந்த மக்களின் ஆன்ம சாந்திக்கு நாங்கள் செய்யும் கைமாறும் ஆகும்.

சர்வதேசம் ஒருபோதும் தீர்வை பெற்றுதரப்போவதில்லை, போர்க்காலத்தில் மக்களை கூட காப்பாற்றாமல் விட்டோடிய சர்வதேசம் அரசுக்கு எதிராக இனிமேலும் எதையும் செய்யாது சர்வதேசத்துக்கு இசைவான UNPஐ எப்படியாவது மீள் கொண்டுவருவது மட்டுமே அவர்களுக்கு ஒரே இலக்கு அது தவிர ஒரு பட்டம் அல்லது விமானம் பறக்க எதிர் காற்று மிக அவசியமாகும் அத்தோடு இயந்திர பொறிமுறையில் எதிரெதிர் திசைகளில் பற்கள் கொண்ட சக்கரங்கள் முட்டி மோதிக்கொண்டு சுழல்வதால் தான் அதிக விரைவான விசை கொண்ட வெளியீடு கூட கிடைக்கிறது.

இந்தக்கட்டுரை பிரதானமாக "வெற்றி பெற்றுத்தரும் குதிரை"யிடம் எங்கள் வேலையை செய்விக்கலாமா அல்லது எவ்வளவு விரைவாக ஓடினாலும் "இறுதியில் தோற்றுப்போகும் குதிரை"யிடம் நாம் தொடர்ந்து வேலையை ஒப்படைத்து தொடர்ந்து தோற்றுப்போக வேண்டுமா என்பதை ஆராய விளக்க முற்பட்டுள்ளது.

Read more...

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலக்கு! சவேந்திர சில்வா

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவுவிழா இன்று (10) காலி முகத்திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. அதன் நிமித்தம் ஒழுங்குசெய்யப்பட்ட விழா, இராணுவத் தளபதி லுதினன் ஜனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இன்று காலை காலி முகத்திடல் விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.

அங்கு இராணுவத்தளபதி உரையாற்றும்போது, இராணுவத்தின் மிக முக்கியமானசெயற்பாடாக அமைவது நாட்டினதும் சமூகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதேயாகும். அதற்காக முழுமையாக பாடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அவ்வாறு செயற்படுவதனூடாக பயம் மற்றும் சந்தேகமற்ற ஒரு சமுதாயம் உருவாகும் எனக் குறிப்பிட்டார். தற்போதைய உலகிற்கு ஏற்றாற்போல தற்போது நாட்டில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றுக்கு முகங்கொடுக்கத்தக்கவாறு பலம்பொருந்திய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதனூடாக இராணுவத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கு தான் முக்கிய கவனம் செலுத்திவருவதாகவும், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 70 ஆவது சேவைக் காலத்தினுள் முதன் முதலாக ஆண்டு நிறைவு விழாவுக்கு அமைவாக, 210 அதிகாரிகளுக்கும் பல்வேறு படிநிலைகளில் உள்ள அதிகாரிகள் 7000 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த அளவு பதவி உயர்வுகள் இரு மடங்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் அனைத்து இராணுவனத்தினரும், அதிகாரிகளும் குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Read more...

திரிசங்கு நிலைமை. பி.மாணிக்கவாசகம்

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்ற ஒரு தேர்தல் அனுபவத்தை இந்தத் தேர்தலின் மூலம் நாடு சந்திக்கின்றது. இ;வ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பது ஜனாதிபதித் தேர்தலில் இதுவே முதற் தடவை.

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது. இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. இவை தவிர்ந்த ஏனைய அனைத்தையும் சாதிக்க வல்ல அதிகார பலம் கொண்டது என வர்ணிக்கப்படத் தக்க வகையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை வடிவமைக்கப்பட்டது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாட்டு மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கின்றார்கள். ஆனாலும் நிகரில்லாத அதிகார பலத்தைக் கொண்ட இந்த ஜனாதிபதி பதவியை நாடளாவிய ரீதியில் நன்மையளிக்கத்தக்க வகையில் எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரையில் கொண்டு நடத்தவில்லை.

பல்லினத்தன்மை கொண்ட அரசியல் செல்நெறி உருவாக்கப்படவில்லை

இந்த ஆட்சி முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, அதன் மூலம் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவில்லை. பல ஆண்டுகளாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிறைவேற்று அதிகார பலத்தை, அந்த அரசியல் பிரயோக அதிகாரத்தை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

ஒற்றை ஆட்சியை அடிநாதமாகக் கொண்ட இந்த ஆட்சி முறைமையை, பேரின மக்களாகிய சிங்கள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தினாரே தவிர, பல்லினத்தவர்களும் நன்மை அடையத் தக்க வகையில் பன்முகத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் நாட்டு மக்கள் அனைவருக்குமான நல்லாட்சியை நிலைநாட்டவும் அவர் பயன்படுத்தவில்லை.

பல மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு மதங்களைக் கடைப்பிடிக்கின்ற நாட்டின் அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என்ற ரீதியில் தனித்துவமான உரிமைகளைக் கொண்டவர்களாக ஐக்கியப்படுத்துவதற்கு தனது நிறைவேற்று அதிகார பலத்தைப் பிரயோகிக்க அவர் தவறிவிட்டார்.

இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களையும், அனைத்து மத சமூகங்களையும் அந்நியோன்னியம் மிக்க புரிந்துணர்வுடைய மக்களாக உருவாக்குவதற்கும் அவர் தவறிவிட்டார். இந்தத் தவறு அவருடன் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆட்சிபீடம் ஏறிய அத்தனை பேரும் இந்தத் தவறையே செய்துள்ளனர்.

இதுகால வரையிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் பல்லினத்தன்மை கொண்டதோர் அரசியல் செல்நெறியை உருவாக்கி அதன் ஊடாக இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு முயற்சிக்கவில்லை.

தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதி என்ற வகையில் அதிகார பலமுள்ளதோர் அரசியல்வாதியாகவுமே கடந்த கால ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் திகழ்ந்தனர்.

இந்த அதிகார பலத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரையும் தனித்துவமான உரிமைகளைக் கொண்டவர்களாகவும், இலங்கையர்கள் என்ற தேசிய அடையாளம் கொண்ட குடிமக்களாக்கவும் அவர்கள் தவறிவிட்டார்கள்.

பேச்சளவில் மட்டுமே நிலைத்த ஆட்சி மாற்றக் கொள்கைகள்

ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியல் நலன்களிலும் தனி நபர் என்ற வகையில் சுய அரசியல் நலன்களிலுமே குறியாக இருந்து செயற்பட்டிருந்தனர். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு யுத்தத்தை ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். அவர் வகித்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியே அதற்கான செயல் வல்லமையை அவருக்கு வழங்கி இருந்தது.

ஆனால் யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் வெற்றிவாதத்தில் அவர் மூழ்கிப் போனார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சூட்டோடு சூடாக நாட்டின் அனைத்து இன மக்களையும், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களையும் உரிமைகளுடன் கூடிய இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஐக்கியப்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுவூட்டி, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக ஜனநாயக வழிமுறைகளின் அனுகூலங்களைப் பயன்படுத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தி இருந்தார்.

பௌத்தத்தை முதன்மைப்படுத்தி பேரின மக்களை இந்த நாட்டின் ஏகபோக உரிமை வாய்ந்த குடிமக்களாக்குவதிலும் அவர் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய இந்த அரசியல் நோக்கங்களுக்கு யுத்த வெற்றிவாதமும், அதனுடன் இணைந்த இராணுவமயமாக்கல் கொள்கைச்செயற்பாடுகளும் உறுதுணையாகின. இதனால் அவருடைய ஆட்சி எதேச்சதிகாரப் போக்கில் பயணிக்கத் தொடங்கியது. ஊழல்களும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

இந்த பின்னணியிலேயே ஜனநாயகத்துக்கு உயிரூட்டி நல்லாட்சியை நிறுவுவதற்கான ஆட்சி மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தொடங்கி பொதுத் தேர்தலில் நடந்தேறியது. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அந்த ஆட்சி மாற்றக் கொள்கை நிலைப்பாடுகளைப் பேச்சளவில் கொண்டு சென்றாரேயொழிய நடைமுறையில் எதனையும் அவரால் செயற்படுத்த முடியவில்லை.

அதிகாரப் போட்டி வலைக்குள் சிக்கிய அரச தலைவர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவும் இந்த ஆட்சி மாற்றத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய உறுதியான நடைமுறைச் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார வல்லமையைக் குறைத்து பிரதமரின் அதிகாரக் கரங்களைப் பலப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் அவையாகிய நாடாளுமன்றத்தின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான மாற்றத்தை இருவரும் இணைந்து ஏற்படுத்தி உள்ளார்கள். இதற்கு அவர்கள் கொண்டு நிறைவேற்றிய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாமல் செய்யப்போவதாக உறுதியளித்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டு வந்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலைமையை மாற்றி இரு தடவைகளுக்கு மேல் அந்தப் பதவியை ஒருவர் வகிக்க முடியாது என்ற முந்திய அரசியலமைப்பின் நிலைப்பாட்டை 19 வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிலைப்படுத்தி உள்ளார்.

உலகில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பதவியில் இருக்கும் போது குறைத்த ஒரேயொரு அரசியல்வாதி தானே என்று அவர் அப்போது பெருமையாகக் கூறியிருந்தார். ஆனாலும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆவல், பேராசை அவரை ஆட்டிப்படைத்திருந்தது. இதனால் பெரும் அரசியல் குழறுபடிகள் நடந்தேறியதையும் மறக்க முடியாது.

நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தின் நோக்கங்கள் மறைந்து, ஜனாதிபதியும் பிரதமரும் சுய அரசியல் இலாபம் கருதிய அதிகாரப் போட்டி என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மையான மாற்றங்கள் பலவற்றை எதிர்பார்த்திருந்த நாட்டு மக்கள் அவைகள் இடம்பெறாத காரணத்தினால், அதிருப்தியடைந்தார்கள். ஏமாற்றத்திற்கு உள்ளாகினார்கள்.

எஞ்சியிருக்கும் அரசியல் தீர்வுக்கான ஏக்கம்

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை இழந்து தள்ளாடி தடுமாறி எந்தவேளையிலும் கவிழ்ந்து நாடு ஓர் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்படலாம் என்ற நிலைமைக்குள் இழுத்துச் செல்லப்படுவதற்கே இந்த அரச தலைவர்களின் செயற்பாடுகள் வழிவகுத்திருந்தன. ஆயினும் ஆட்சிக் காலத்தை ஒருவாறு கடந்து வந்துள்ள நிலையில் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? யாருக்கு வாக்களிக்காமல் விடுவது? - என்ற கேள்விகள் நாட்டு மக்கள் மனங்களில் உரமாக எழுந்து நிற்கின்றன. வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளவர்களில் கோத்தாபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாசா மற்றும் அனுர குமார திசாநாஙக்க ஆகியோரே முன்னணி வேட்பாளர்களாக, பெரும்பாலான மக்கள் தெரிவுக்கு உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்துடன் இவர்களில் கோத்தாபாய மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அநேகமாக இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்ற கருத்துக் கணிப்பும் உள்ளது.

அதேநேரம் இந்தத் தேர்தலுக்கான முடிவுகளில் இவர்களில் ஒருவர் முதல் படியாகக் கருதப்படுகின்ற அறுதிப் பெரும்பான்மைக்கான 51 வீத வாக்குகளைப் பெற முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், இந்த இருவருக்கும் வெற்றிவாய்ப்பு கைநழுவி மூன்றாவதாகக் கருதப்படுகின்ற அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுகின்ற ஒரு நிலைமையும் உருவாகக் கூடும் என்று தேர்தல் தொடர்பிலான அனுபவம் கொண்ட ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

இது பொதுவான நிலைப்பாடு. இனப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு அரசியல் ரீதியான ஒரு விடிவுக்காகக் காலம் காலமாக ஏங்கிக்கொண்டிருக்கின்ற சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் தங்களுக்கு இந்தத் தேர்தலினால் எந்தவிதப் பயனும் கிட்டப் போவதில்லை என்ற மன நிலையிலேயே காணப்படுகின்றார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நெருக்கடிகளை அதிகரித்த நடவடிக்கைகள்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையில் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதுடன், மேலும் மேலும் நெருக்கடிகளை உருவாக்கத்தக்க அரச நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் இடமளித்திருந்தனர். இதனால் பிரச்சினைகள் தீர்க்கப்படும் நன்மைகள் விளையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் ஏற்படுகின்ற நிலைமையே ஏற்பட்டது.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்க ஆட்சியாளர்களினாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. இந்த நிலையில் கோத்தாபாய மற்றும் சஜித் பிரேமதாசா மற்றும் அனுர குமார திசாநாயக்க போன்ற தேர்தலில் முன்னணி நிலையில் காணப்படுகின்ற வேட்பாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கத்திற்காகக்கூட சாதகமான முறையில் உத்தரவாதம் எதனையும் அளிக்கவில்லை.

அதேவேளை, யுத்த காலத்தில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு அப்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கோத்தாபாய ராஜபக்ச கொண்டிருந்த கடும் போக்கும் கடுமையான இராணுவ செற்பாடுகளுமே காரணம் என தமிழ் மக்கள் உணர்கின்றார்கள். இதனால் அவர் மீது அவர்கள் அரசியல் ரீதியான அச்சத்தைக் கொண்டுள்ளார்கள்.

இக்கட்டான நிலைமை

முன்னரிலும் பார்க்க அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்ட செயற்பாடுகளினால் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கோத்தாபாய ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நிலைமைகள் மேலும் மோசமாகும் என்ற அரசியல் ரீதியான அச்சத்தையே தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள்.

வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள கோத்தாபாய தமிழ் மக்களின் இந்த அச்சத்தைப் போக்குவதற்கு உரிய உறுதிமொழிகளையோ உத்தரவாதத்தையோ இன்னும் அளிக்கவில்லை. தன்னைக் கண்டு தமிழ் மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் கூறியிருந்தாலும், அவருடைய கூற்று அந்த அச்சத்தைப் போக்கக்கூடிய நம்பிக்கைக்குரியதாகக் காணப்படவில்லை.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவராகவும் விளங்கிய ரணிசிங்க பிரேமதாசாவின் புதல்வர் என்ற அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசாவை, நம்பிக்கைக்குரிய தமிழ் மக்களினால் நோக்க முடியவில்லை. ஏனெனில் அவருடைய அரசியல் செயற்பாடுகளில் அவர் வெளிப்படையாகத் தமிழ் மக்கள் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கவில்லை.

தேசிய மட்டத்தில் எரியும் பிரச்சினையாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில் அவர் எப்போதுமே அக்கறை கொண்டிருந்ததாகத் தமிழ் மக்கள் அறிந்திருக்கவில்லை. அத்துடன் இன முரண்பாட்டுப் பிரச்சினையில் அதிக ஈடுபாடும், ஆழ்ந்த விடயதானம் உடையவராகவும் அவர் தமிழ் மக்களுடைய அகப்புறக்கண்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசா மீது நம்பிக்கை வைத்துத் தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்களாகவே தமிழ் மக்கள் உள்ளனர். ஆனாலும் அவர் சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள மென்மையான போக்கு சிறிது ஆறுதல் அளிக்க வல்லதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் அந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பதற்கு அது போதிய அரசியல் ரீதியான வலுவைக் கொண்டிருக்கவில்லை.

இதனால் இந்தத் தேர்தலில் என்ன செய்வது, யாரை ஆதரிப்பது, யாரை ஆதரிக்காமல் விடுவது என்பது குறித்து முழுமனதோடு தீர்மானம் மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைக்கே தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக்கபூர்வமான முடிவுக்கு வழிவகுக்குமா....?

அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெறுபவரே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது தேர்தல் விதி. அதற்கமைய வாக்குகளைப் பெற்று எவரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதே பொதுவான கணிப்பாகும். ஏனெனில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள சிங்கள மக்களின் வாக்குகளிலேயே இந்த வெற்றி வாய்ப்பு அடிப்படையில் தங்கி இருக்கின்றது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என்ற பிரதான கட்சிகளிலும் மூன்றாவது அரசியல் சக்தியாகத் திகழும் ஜேவிபி ஜனதா விமுக்தி பெரமுனவிலும் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிந்து கிடக்கின்றன. ஆகவே சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற சக்தியாகத் திகழ்கின்றன.

இத்தகைய அரசியல் யதார்த்தத்தில் முக்கியத்துவம் மிக்க வாக்குகளைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் தங்களுக்குப் பயனுள்ள வகையில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்க முடியாத அரசியல் சூழலில் சிக்கி இருக்கின்றார்கள்.

தீர்மானிக்கும் சக்தியைக் கொண்ட தமது வாக்குகளின் மூலம் வெற்றியடைகின்ற வேட்பாளர் தங்களுக்கு சாதகமாகச் செயற்படுவார் என்பதற்கான உத்தரவாத அரசியல் நிலைமையை அவர்களால் காண முடியவில்லை. அதேவேளை, தேர்தலைப் புறக்கணித்தால் அல்லது தமிழ் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்து பேரின அரசியல் கட்சிகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தவதன் ஊடாக அவர்கள் ஏதேனும் நன்மை அடைய முடியுமா என்பதிலும் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது.

இந்தத் திரிசங்கு நிலைமையில் ஆக்கபூர்வமான முடிவெடுப்பதில் தமிழ் அரசியல் கட்சிகளும் தடுமாறிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் மூலம் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்கான ஒரு பொது வெளியும் சந்தர்ப்பமும் கிட்டியிருக்கின்றன. இந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும்.

Read more...

Wednesday, October 9, 2019

கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு....? சஜித் போட்டியின்றி வெற்றியீட்ட முனைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்வை மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றில் முன்வைப்பதற்கு மனுதாரர் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஆவன செய்யப்பட்டுவரும் இத்தருவாயில், கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தடையுத்தரவொன்றைப் பெற்றுக்கொள்ள மனுதாரரான சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட இருவரும் தீர்மானி்த்துள்ளனர்.

அவ்வாறான தடையுத்தரவினைப் பெற்றுக்கொண்டால் சஜித் பிரேமதாச போட்டியின்றி வெற்றியீட்டுவார் என அவர்கள் நம்பியுள்ளனர்.

Read more...

'முஸ்லிம்கள் பற்றித் தப்பாகப் பேசினேன்... என்னை மன்னித்துவிடுங்கள்!' பகிரங்க மன்னிப்புக்கோரும் மதுமாதவ

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, தனது பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமை தொடர்பில், அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில்,

'முஸ்லிம்களுக்கு எதிராக நான் முன்வைத்த கருத்துக்கள் கட்சிக்குப் பெரும்பாதிப்பை விளைவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தெளிவு எனக்குக் கிடைத்தது. நான் தவறே செய்துள்ளேன். அதற்காக நான் வருத்தமடைகின்றேன். அதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோருகிறேன்.

எனவே, நான் கட்சியின் பிரதித் தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்கின்றேன்.' என மதுமாதவ அரவிந்த குறிப்பிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

சந்திரிக்காவிடம் முறையிடுவோம் -மஹிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியவுடன் அவருடன் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கோத்தாபயவுக்கு ஆதரவளிப்பதற்கு சு.கவின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சந்திரிகா குமாரதுங்கவும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறாரா என்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றார். எனினும் அவர் எமது இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ இது வரையில் கூறவில்லை என்றும் அவர் கூறினார்

Read more...

ஹபரணையில் விசம் காரணமாகவே 7 யானைகள் உயிரிழந்தன

ஹபரணை, ஹிரிவடுன்ன வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளினதும் மரணம் விஷம் உடலில் கலந்ததால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் இது தொடர்பில் தெரிய வந்துள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

குறித்த குழுவின் அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் குறித்த பெண் யானைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை நாளைய தினம் (10) அறிவிக்கக்கூடியதாய் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹிரிவடுன்ன வனப்பகுதியில் மர்மமான முறையில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட மிருக வைத்தியர் ஒருவர், உதவி பணிப்பாளர் ஒருவர் மற்றும் பூங்கா பொறுப்பாளர் ஒருவர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்று வனவிலங்கு திணைக்களத்தால் கடந்த 28 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை கடந்த திங்கட் கிழமை வனவிலங்கு திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், விஷம் உடலில் கலந்ததால் குறித்த யானைகளின் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்த வகையான விஷம் உடலில் கலந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என வன விலங்கு பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Read more...

கொத்மலையில் 7 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர் விளக்கமறியலில்

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பாடசாலையின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு வந்ததாக குறித்த மாணவிகள் தமது பெற்றோர்களிடம் அறிவித்ததை அடுத்து அவர்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான அதிபர் நேற்று (08) கைது செய்யப்பட்டு ஹெல்பொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியேரை நேரடியாக சந்தித்து குறித்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த அதிபருக்கு இடமாற்றம் வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more...

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.

நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதெனிய விமான நிலையில் வரவேற்றார்.

அதன்பின், மாலைதீவு உயர் கல்வி அமைச்சர் கலாநிதி இப்றாஹிம் ஹஸனை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவும் கலந்துகொண்டார்.

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தகுதியான மாலைதீவு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழங்களில் உள்ளீர்ப்பது குறித்தும், எதிர்காலத்தில் உயர் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

அதனையடுத்து இன்று (09) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடலொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ்ப்பாணத்தில் 38.8 கிலோ ஆமை இறைச்சியுடன் பெண் கைது

யாழ். மாதகல் பகுதியில் ஆமை இறைச்சியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று (09) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆமை இறைச்சியுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

வட கடற்படை கட்டளைப் பிரிவினரும் இளவாலை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 38.8 கிலோகிராம் ஆமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாதகல் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆமை இறைச்சியுடன் சந்தேகநபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்

Read more...

கைது செய்யப்பட்டுள்ள சகல படையினரையும் விடுதலை செய்வேன்.. கோத்தா

நாட்டுக்காக தமது உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவத்தினர் நல்லாட்சி என்று சொல்லப்படும் ஆட்சியில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தான் வெற்றிபெற்றால் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச.

பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் தற்போது அனுராதபுரத்தில் இடம்பெற்றுவருகின்றது. மாலை 3 மணிக்கு ஆரம்பமான குறித்த பிரச்சார மேடையில் பேசியபோதே அவர் மேற்கண்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் 22 வருடங்களுக்கு மேல் சிவில் பாதுபாப்பு சேவையில் ஈடுபட்டுவந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்டிருந்த முன்மொழிவை ஆட்சிக்கு வந்தவுடன் தாமதமின்றி செயற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற இவ்வாரம்ப தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

பௌத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்பணிப்புடன் செயற்படுவேன். தேரர்களின் பாதங்களை தொட்டு உறுதியளித்தார் சஜித் !

ஒருமித்த நாட்டினுள் பெளத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன செயற்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்கிஸ்ஸ ஶ்ரீ தர்மபாலாராம விகாரையில் ஶ்ரீலங்கா மகா நிகாய மகா நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாஸவை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் ஒருமித்த நாட்டினுள் செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல், புத்த சாசனத்தை பிரகாசமடையச் செய்ய மதக் கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்திருந்தார்.

Read more...

கழிவு நீர் வாய்கால் அமைப்புக்காக ஒதுக்கிய பணத்தில் மோசடி. வவுனியா மக்களுக்கு உயிராபத்து!

வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதற்கு காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வவுனியா நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இறம்பைக்குளம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு 2019ம் ஆண்டுக்குரிய வருடாந்த பாதீட்டின் மூலம் இறம்பைக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட ஜோசப்வாஸ் ஒழுங்கையின் இருமருங்கிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்காக வவுனியா நகர சபையால் 1499686.40 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.இவ் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்கால் செயற்திட்டமானது பூரணப்படுத்தப்படாமல் இடை நடுவில் வேலையை முடிவுறுத்தி அதற்கான ஒப்பந்த தொகையும் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலை முழுமையடையாமல் அரைகுறையில் விடப்பட்ட கழிவு நீர் வாய்க்காலில் மழை நீர்தேங்கி நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளன இதன்காரணமாக அப் பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கும் அப்பிரதேச மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் இவ் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட முழுமையான நிதிக்கும் இங்கு வேலை நடை பெறவில்லை என்பதோடு இவ்வேலையின் ஒப்பந்தகாரர்களான சகாயமாதாபுரம் சனசமூக நிலையத்தின் பெயராலும் குறித்த நகரசபை உறுப்பினராலும் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ் செயற்திட்டம் முடிவடையாமல் எவ்வாறு வேலையின் திருப்தி சான்றிதழை (Satisfaction Report) வவுனியா நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் வழங்கினார் எனவும் நகர சபை உறுப்பினரதும் அரச அதிகாரியினதும் பொறுப்பற்ற செயல் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவர் நடவடிக்கை எடுப்பாரா? எனவும் அப் பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் மக்களின் வரிபணத்தை இவ்வாறு மோசடி செய்யும் ஊழல் பேர்வழிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Read more...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி முடிவு வெளியானது. கோத்தாவிற்கு ஆதரவு.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தமது ஆதரவினை வழங்குவது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில்லை என அக்கட்சி ஆரம்பத்திலிருந்து அறிவித்துவந்தபோதும் பொதுஜன பெருமுனவுடன் இணைவது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியிருந்தது. இப்பேச்சுக்களின்போது வேட்பாளரின் சின்னம் தொடர்பாக இருதரப்பும் இணங்க மறுத்திருந்த நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்விடயத்தில் தொடர்ந்தும் முரண்டு பிடிக்க முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் இருகட்சியினரும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தத்தில் கைப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவுடன் முற்றுமுழுதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உடன்படவில்லை என்றும் அதன் பிரகாரம் அவர் கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து சற்றுகாலம் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் தலைவரே தேர்தல்காலத்தில் கட்சிக்கான தலைமைத்துவத்தை வழங்குவார் என அறியமுடிகின்றது.

தமது முடிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தமது ஆதரவு கோத்தாவுக்கானதே அன்றி பொதுஜன பெரமுனவுக்கானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சிறிபால டி சில்வா அவர்கள் தமது கட்சி முழுமனதுடன் கோத்தாவின் வெற்றிக்காக செயற்படும் என்றும் கூறியுள்ளார்.

Read more...

பூஜித மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலரின் பிணை ரத்து. விளக்க மறியலில் அடைக்கப்பட்டனர்.

போதிய ஆதாரங்களுடன் முன்னெச்செரிக்கை விடுக்கப்பட்டபோதும் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்றினால் இன்று (09) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பினை இன்று (09) வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

அதன்படி, குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் போது கொழும்பு பிரதான நீதவான் தனக்கு அற்ற அதிகாரம் ஒன்றினை உருவாக்கி சட்டத்தை மீறி பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜனாதிபதி மைத்திரி இறங்குகிறார்.... சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி ரோ.ல. பியதாஸவிடம் செல்கிறது...

பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் கடமையாற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜயசேக்கர இதுதொடர்பில் குறிப்பிடும்போது, ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவுக்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என நேற்று பி.ப இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள வாக்குவாதங்களே இதற்குக் காரணம் எனவும் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்துழைப்பு நல்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com