Tuesday, October 8, 2019

கண்களை மூடிக்கொண்டு விளக்கில் விழும் வண்டுகளாக தேசிய காங்கிரஸ் இருப்பதில்லையாம்! கூறுகின்றார் நூறுள் ஹுதா உமர்.

தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிங்களுக்கு எதிரியாக காட்டப்படும் கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க முனைவதாகவும், தேசிய பட்டியலை இலக்காக கொண்டு முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளிடம் காட்டிக்கொடுப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாற்றுக்கள் முட்டாள் தனமான ஒன்றாகும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ .எல். நூருல் ஹுதா உமர் தெரிவித்தார்.

இன்று (08) மாலை இடம்பெற்ற கிழக்கு சமூக அபிவிருத்தி இஸ்தாபன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த பல வருடங்களாக ஒரே அமைச்சரவையில் சக அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அவர்கள் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தால் கிழக்கில் தமது செல்வாக்கை தக்கவைக்கவேண்டிய தேவையில் இருந்த சுதந்திர கட்சி தேசிய பட்டியல் உறுப்புரிமை மட்டுமல்ல அமைச்சரவை அமைச்சர் பதவியும் வழங்கியிருக்கும். அப்படியான அதிகாரத்தை பெறவேண்டிய தேவை அவருக்கு இருந்திருக்கவில்லை. இந்த நாட்டையும் நாட்டில் வாழும் சகல சமூகத்தையும் பாதுகாக்க யார் பொருத்தமோ அவரே தேசியகாங்கிரஸின் தெரிவாக எப்போதும் இருந்திருக்கிறது.

முப்பது வருடங்களாக யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம் அடையாளங்களை அழிக்கும் சட்டமூலங்களை கொண்டுவந்து முஸ்லிங்கள் மனம் நோகும் எந்தவித சட்டங்களையும் அப்போதைய அரசாங்கங்கள் செய்யவில்லை. ஒரு மனிதாபிமானமில்லாதவர் செய்த காட்டுமிராண்டி செயலால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை உச்சகட்டமாக மனம் நோக செய்த செயலை செய்தவர்கள் இந்த நாட்டின் முள்ளந்தண்டு இல்லாத ஆட்சியாளர்களே. அந்த தாக்குதலில் ஈடுபட்ட யாரும் இஸ்லாமிய கலாச்சார ஆடைகள் எதையும் அணியவுமில்லை அப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல் அப்படியான தடைகளை கொண்டுவர வேண்டிய தேவை ஏன் இந்த அரசுக்கு ஏற்பட்டது ? திருமண சட்டம், புதிய யாப்பு திருத்தம், மத்ரஸா மீதான பார்வை என மேலைத்தேய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த அரசாங்கம் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.

தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்களை அடக்கி தமது கனவை நனவாக்க இலங்கையை சீரழித்துக்கொண்டு பாடுபட்ட ஒரு இயக்கத்தை அழித்து இந்த நாட்டில் சமாதானம் மலரவேண்டும். மக்களின் விருப்பம் இல்லாமல் இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படல் வேண்டும், சகல மக்களும் நிம்மதியாக வாழும்படியான ஜனநாயக யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் எனும் தேசிய காங்கிரசின் கோரிக்கைகளை ஏற்று அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றிகரமாக முடித்து இந்த நாட்டில் நிம்மதியான காற்றை சுவாசிக்க வழிசமைத்த மஹிந்த ராஜபக்சவுக்கு கிழக்கின் மக்கள் தலைவனாக நன்றியுடன் எங்களது தலைமை பயணித்துள்ளது.

அமைச்சுக்களையும், அரசின் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துவிட்டு முதுகில் குத்தும் எந்த ஒரு காரியத்தையும் இஸ்லாமிய மகனான அதாஉல்லா செய்யவுமில்லை. இனிமேலும் செய்யவும் மாட்டார். மேற்கத்தைய சக்திகளினால் கண்குத்தப்பட்டிருக்கும் எமது நாட்டின் இறையாண்மையையும், சொத்துக்களையும் பாதுகாத்து நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருந்து கொண்டு இருப்பதனால் சிறந்த நிர்வாக திறமையும் அதி உச்ச நாட்டுப்பற்றும் உள்ள மஹிந்த ராஜபக்ஸவை தலைமையாக கொண்ட பொதுஜன பெரமுண கூட்டமைப்புடன் நாங்கள் பயணிக்க ஆயத்தமாக உள்ளோம்.

ஏனைய முஸ்லிம் கட்சிகள் அவர்களது முதலாளிகளின் கட்டளைகளுக்கு இணங்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது போன்று அல்லாது எமது தேசிய காங்கிரஸ் இந்த நாட்டின் பிரஜைகள் அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் வாழ்வியலுக்கு தேவையான அம்சங்களை கோரிக்கையாக முன்வைத்து இணைத்துள்ளோம். அந்த கோரிக்கைகள் இறைவனின் உதவியுடன் நிட்சயமாக எங்களுடைய புதிய ஜனாதிபதியும், புதிய ஆட்சியும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.


எஸ்.அஷ்ரப்கான்

Read more...

பொய்யான தகவல் வழங்கிய கோட்டை பொலீஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யான மற்றும் உறுதிப் படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 02 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளில் தெரியவந்த விடங்களுக்கு அமைய பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்படும் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் செலவீனங்கள் எதிர்பார்த்தைவிட அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, வாக்குகளை எண்ணும் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை 70 இல் இருந்து 175ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குசீட்டின் மாதிரி, அரசாங்க அச்சகத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வாக்கெடுப்பு நிலையத்துக்கான ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து நீர் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

பாராளுமன்ற வளாகத்தில் மண் சரிவு

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது

சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகப் பெய்யும் பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் மண்சரிவிற்கான அபாயம் நிலவியுள்ளது.

Read more...

மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருகின்றது.

இவ்வாறு இலங்கை சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சிரேஷ்ட வழக்கறிஞர் நிஷாந்த ஜயரத்ன இதனை தெரிவித்தார்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இலங்கை தூதரகம் ஊடாக வெளிநாட்டு அமைச்சு அண்மையில் முறையாக அனுப்பி வைத்திருந்தது.

Read more...

அவசரகாலச் சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெற்றார் பாக்கியசோதி சரவணமுத்து.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழான சரத்துக்கள் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான வழக்கை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த தரப்பினர் அதனை விலக்கிக் கொள்வதற்கு முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மாற்றுக் கொள்கை கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்பொழுது அவசரகால சட்ட விதிகள் நாட்டில் அமுலில் இல்லாமையால் இந்த மனுவை விலக்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு மனுதாரர் தரப்பில் நீதி மன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு அமைவாக இந்த மனுவை விலக்கிக் கொள்வதற்கு உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

Read more...

நான்கு இலங்கையர்கள் லண்டனில் கைது

2019 ஒக்டோபர் 08 செவ்வாய்க்கிழமை, தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் லூட்டன் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 இன் கீழ் , குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத சட்டம் 2000இன் கீழ் தடுத்து வைக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39, 35 மற்றும் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read more...

Monday, October 7, 2019

கோத்தபாய எதற்காக சுமந்திரனை அழைத்தார்? ஐ.தே. கட்சியின் முகாமிலிருந்து சுமந்திரனால் வெளியேற முடியுமா? பீமன்

ஒரிரு தினங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வ வல்லமை கொண்டவர் என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் சுமந்திரனை அழைந்து எனது சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ சகிதம் உங்களுடன் பேசவிரும்புகின்றேன் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்ட சுமந்திரன் அவ்வழைப்பு தொடர்பில் அம்மக்களின் அல்லது அவர்களது சகபிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புக்களை பெற்றுக்கொள்ளாது : 'தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட – அவசர – நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் விளையாது' என நிராகரித்துவிட்டதாக தமிழ் தேசியவாதிகள் எனத் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்வோர் அல்லது சுமந்திரனின் செம்புதூக்கிகள் எக்காளமிடுகின்றனர்.

ஆனாலும் எமது யோசனைத் திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்காகவே நாம் உங்களை அழைக்கின்றோம் என கோத்தபாய ராஜபக்ச தனது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளபோதும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் என்ன முடிவைக்கொடுக்கப்போகின்றது என்ற விரிவான விளக்கம் தேவைப்படுகின்து.

இலங்கை அரசியல் வரலாற்றில் இருதரப்பினர் மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறுகின்றனர். இருவரில் எவரும் இதுவரை தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சரியான அணுகுமுறை ஒன்றை கொண்டிருக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் தமிழர் தரப்பின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானது? அக்கோரிக்கைகள் நிலையானதா? அது காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றுள்ளதா? அவற்றை அடைய தமிழ் தரப்பு நியாயமான வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்களா? பெற்றுக்கொள்ளக்கூடியவற்றை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களா? என்கின்ற கேள்விகளுக்கு இதுவரை தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படைத்தன்மையான எவ்வித பதில்களும் இல்லாத நிலையிலேயே போலித்தேசியவாதத்தின் பெயரால் போலித் தமிழ் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து தாங்கள் இராஜபோகம் அனுபவித்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களை விட நிகழ்கால அரசிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேரடியாக நிபந்தனைகளின்றி ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதைவிட அந்த அரசையே ஆட்சிக்கவிழ்பிலிருந்து காத்துவருகின்றார்கள். அதாவது தமிழ் மக்களின் வாக்குகளால் காக்கப்படும் ஆட்சி இது என்று வெளிப்படையாக கூறிக்கொள்ளமுடியும். இதற்காக தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை என்று கூறமுடியாது. அது தூநோக்குடன் செயற்படுகின்றது. தூரநோக்குடன் செயற்படுகின்றது எனும்போது தமிழ் மக்களுக்கான நிரந்தர நலனுக்கான நோக்கு என்று நோக்கலாகாது. மக்களின் உதிரத்தை உறிஞ்சி எடுக்கும் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கான அபிவிருத்தி என்று சொல்லப்படும் கம்பரெலி எனப்படும் திட்டத்தினூடாக மக்களுக்கான உதவி என்ற பெயரில் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிப்பார்வைக்கு கம்பரெலிய மக்களுக்கான அபிவிருத்தி திட்டமாக காணப்பட்டாலும் அதன்நோக்கம் கம்பரெலியவைக்காட்டி அடுத்த தேர்தலுக்கு மக்களை அபிவிருத்தியின் அடிமைகளாக்குவதாகும். அதாவது வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி அதனூடாக தனது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளல் அடுத்து பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியீட்டப்பண்ணி அடுத்த ஆட்சியிலும் தமக்கு பொதி சுமக்கும் கழுதைகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை வைத்திருத்தல்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதிசுமக்கும் கழுதைகளாக தொடர்ந்தும் இயங்குவதா அன்றில் சமவுரிமையுள்ள இலங்கை பிரஜைகளின் பிரதிநிதிகளாக சம அந்தஸ்துடன் மேசையில் உட்கார்ந்து கௌரவமான அரசியல் செய்வதா என நிர்ணயிக்கக்கூடியதோர் சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழித்து தமிழ் மக்களை தொடர்ந்தும் இந்நாட்டின் இரண்டாம்தர பிரஜைகள் அல்லது இந்நாட்டின் விசேட விருந்தாளிகள் என்ற மனநிலைக்கு கொண்டு செல்லப்போகின்றதா?

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தரப்பை ஆதரிப்பது அதற்கான நிபந்தனைகள் யாது என்ற விடயத்தில் சுமந்திரன் எனப்படும் தனிநபரின் முடிவுகள் ஒருபோதும் தமிழ் மக்களின் முடிவாக இருக்க முடியாது. அவ்வாறு சுமந்திரன் தன்னிச்சையாக எடுத்திருக்கும் முடிவுகளால் தமிழ் மக்கள் நிறையவே இழந்திருக்கின்றார்கள்.

நான்கு வருடகால நல்லாட்சி என்று கூறிக்கொண்ட ஆட்சியில் ஜனாதிபதி – பிரதமர் இடையே இழுபறியேற்பட்டபோது கவிழ்கப்பட்ட ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்மூடித்தனமாக தூக்கி நிறுத்தியதில் தமிழ் மக்கள் சாதித்துக்கொண்டது யாது என்ற கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பதிலளிக்கவேண்டும். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது மஹிந்த தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பகிரங்கமாகவே வேண்டி நின்றனர். ஆனால் அவ்வேண்டுதலை எட்டி உதைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தனர்.

இங்கு மிகவும் கண்டனத்திற்கும் அருவருப்பிற்கும் உரிய விடயம் யாதெனில், மஹிந்த தரப்பினர் தமிழ் மக்களுக்கு எதைத் தருகின்றோம் என தெரிவித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்துவோம் என சுமந்திரன் சிங்கள ஊடகங்கள் ஊடாக அத்தரப்பை பிளக்மெயில் பண்ணுமளவிற்கு சென்றிருந்தார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதப்படுகின்ற விடயங்களைக்கூட மஹிந்த தரப்பினர் கொடுப்பதற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள் என்பதனை இங்கு உணரவேண்டியுள்ளது. அவ்வாறாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை நட்டாற்றில் தள்ளிவிட்;டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவியிருக்கின்றது என்ற உண்மையை மக்கள் தங்கள் மனதில் நிறுத்தவேண்டும்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் சார்பான விடயங்களில் எத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் தகுதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் அதன் மீதான நம்பிக்கையும் தவிடுபொடியாகியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக எத்தரப்பு தமிழ் மக்கள் சார்பாக எதை முன்வைக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு நேரடியாக தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் மக்கள் சார்பாக பொது நலன்கருதும் நபர்களும் ஊடகங்களும் நேரடியாக கலந்து கொண்டு தரப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முன்மொழிவுகள் அல்லது உறுதிமொழிகள் ஆராயப்படவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து அவற்றில் எத்தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான பொது முடிவு ஒன்று எட்டப்படவேண்டும்.

Read more...

பல தசாப்த கால வலியைப் போக்க எங்களுடன் சேருங்கள்! யாழ் மக்கள் சபையில் அநுர குமார திஸாநாயக்க !!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் அக்கட்சியின் வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க யாழ் மக்கள் மத்தியிலாற்றிய உரையின் முழுவடிவம்.

இங்கு வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. சிங்கள மொழியில் நான் பேசுவதை தோழர் கோகிலன் மொழிபெயர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது . பொதுவாக, வடக்கில் உள்ள மக்கள் ஜனாதிபதித் தேர்தலை தங்கள் தேர்தலாக கருதுவதில்லை. தெற்கிலிருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்றே கருதுகின்றனர். மற்ற தேர்தல்கள் போல இந்த தேர்தல் சூடாக இல்லை. இது தெற்கு கட்சிகளின்தேர்தல் என்று ஏன் நினைக்கிறீர்கள்? ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிதான் உங்களை ஆளப்போகின்றார், உங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். எனவே, நாம் எங்கு வாழ்ந்தாலும், எந்த மொழி அல்லது கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டாலும், இந்த தேர்தலை நாம் நிராகரிக்க முடியாது.

இது எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் உங்களுக்கு மிக முக்கியமான தேர்தல் என்று நாங்கள் நினைக்கிறோம். தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன என்று நீங்கள் நினைக்காமல் , நீங்கள் தேர்தலில் பங்கு பெறுவது முக்கியம். எழுபது ஆண்டுகளாக நாட்டை ஆண்ட இரு கட்சிகளும் நாட்டில் போர்களை உருவாக்கியுள்ளன. பஞ்சத்தை உருவாக்கியது. மோசடி, ஊழல் மற்றும் வீணான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. பிள்ளைகள் கற்க பள்ளிக்கூடங்கள் இல்லாத சூழ்நிலையை அது உருவாக்கியது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகள் அனைத்தும் தெற்கில் இரண்டு கட்சிகளால் ஏற்பட்டன. நீங்கள் எங்களை தெற்கில் ஒரு அரசியல் இயக்கம் என்று அழைத்தால் அது பிழையான கருத்தாகும், நாங்கள் தெற்கின் அரசியல் கட்சி மட்டுமல்ல, வடக்கில் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இயக்கம்.

போர் முடிந்ததும், எங்கள் முழுநேர தோழர்கள் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டனர். வடக்கோடு ஒரு சிறந்த அரசியல் சம்பந்தம் எங்களுக்கு உள்ளது. அது இன்றும் தொடர்கிறது. நம்மிடையே ஏற்பட்ட தொடர்பு மற்றும் கலந்துரையாடலின் மூலம் பெறப்பட்ட புரிதலின் காரணமாக, தேசிய மக்கள் சக்தி வடக்கில் வலுவான அரசியல் சக்தியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தெற்கில் போட்டியிடும் கட்சிகள் , நாட்டையும் மக்களையும் படுகுழியில் ஆழ்த்திய பழைய, காலாவதியான, தோல்வியுற்ற, அரசியல் கட்சிகளுக்கு பதிலாக வடக்கு மக்கள் எங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த நாட்டை இந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் . இதற்காக நாம் ஒரு பொதுவான போராட்டம் செய்ய வேண்டும். எங்களைத் துன்புறுத்திய அழிவுகரமான அரசியல் முகாமில் இருந்து இந்த தலைமுறையை விடுவிக்க ஒரு ஐக்கியப் போர்செய்வதற்காக எங்களுடன் சேர உங்களை அழைக்கிறோம்.

வடக்கில் உள்ள மக்கள் பொதுவாக கூடுதலாக கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்கு காரணம் 30 ஆண்டுகால யுத்தம். தெற்கில் போர் பயம் மட்டுமே இருந்தது. வடக்கில் ஆயுதப்படைகளுக்கு இடையிலான மோதல்கள், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளால் ஏற்பட்ட பேரழிவு, கடந்த போரில் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக அதிர்ச்சி மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

முப்பது ஆண்டுகால யுத்தத்தின் முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள். எங்கள் வருத்தம் என்னவென்றால், ஒரு அரசியல் இயக்கமாக, வடக்கில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் எங்களால் அவ்வாறு செய்ய முடியாது போனது. ஆனால், நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்யும் ஒரு அரசியல் இயக்கம். எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று நாம் வருந்துகிறோம். அதைப் பற்றி இன்னும் எங்களுக்கு வலி இருக்கிறது.

நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வோம்? நீங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள், குறிப்பாக போர் காரணமாக. கணவர், உங்களது பிள்ளைகள் காணாமல் போன பிரச்சினை மிகவும் வேதனையானது. ஒருவரின் மரணத்தை விட இது மிகவும் வேதனையானது. எனது சகோதரரும் காணாமல் போயுள்ளார். எங்கள் பெற்றோர் அதைப் பற்றி அடைந்த வேதனை எனக்கு தெரியும். இன்று, நாளை வீட்டிற்கு வருவார் என்ற நம்பிக்கையில் பல தசாப்தங்களாக வாழ்கிறோம். எனவே, காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையை கண்டுபிடித்து நீதி தேடுவது குடிமக்களின் உரிமை. அவற்றைப் பற்றிய உண்மையை அறியும் வாய்ப்பை நாங்கள் உருவாக்குவோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

கைதுகள் இருபது அல்லது முப்பது ஆண்டுகளாக இன்னும் நடைபெறுகின்றன. நான் வெலிகடை சிறைக்குச் சென்று அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தவறு செய்திருந்தால் , அவர்கள் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் தண்டனை பெறுகிறார்கள். இருப்பினும், எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரிமாண்ட் செய்யப்பட்ட நபர்கள் உள்ளனர். இது எந்தவகையிலும் நீதியான செயல் அல்ல.

போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் குமரன் பத்மநாதன் தலைவரானார். அவர் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. ஒரு நாள் கூட நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை. ஏன் அப்படி? ஏனெனில் அவரிடம் கப்பல்கள் மற்றும் வங்கி கணக்குகள் இருந்தன. அப்படியானால், வங்கி கணக்குகளின் எடைக்கு சட்டம் சேவை செய்கிறதா? கப்பல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சட்டம் நடைமுறைபடுத்தப்படுகின்றதா ? இந்த நிலைமை நீடிக்க கூடாது . தயா மாஸ்டர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வைத்தைருந்ததற்காக எல்.ரீ.ரீ.ஈ. என்று ஒரு இளைஞன் சிறையில் உள்ளான். அதற்காக கையெழுத்திட்ட தயா மாஸ்டர் வெளியில் இருக்கின்றார் . அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

உங்கள் நிலத்தில் உங்களுக்கு கடுமையான பிரச்சினை உள்ளது. நம் கலாச்சாரத்தில், நிலம் என்பது ஒரு சொத்து மட்டுமல்ல! நிலம் எங்கள் உறவினர்களில் ஒன்று. அது உறவின் பிணைப்பு. யாழ்ப்பாண மக்களுக்கு சொந்தமான நிலத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இப்போது, இராணுவம் அதை விட்டு வெளியேறவில்லை. எனவே, நிலம் கையகப்படுத்துவது நியாயமில்லை. மக்களுக்கு தங்கள் நிலத்தை சொந்தமாக்க உரிமை உண்டு. அத்தகைய நியாயமான, சமமான அரசாங்கத்தை உருவாக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

வடக்கில் நாற்பதாயிரம் போர் விதவைகள் உள்ளனர். தாய், தந்தை இருவரையும் இழந்த சுமார் இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகள் உள்ளனர். இந்த மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க, உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

விவசாயத்தில் இருந்து வாழ்வாதாரத்தை மேற்கொண்ட ஏராளமான மக்கள் வடக்கில் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் முருங்கக்காய் , யாழ்ப்பாண பெரிய மிளகாய் மற்றும் சிவப்பு வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தெற்கில் விவசாயிகள் இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்துகையில், வடக்கில் விவசாயிகள் ஆட்டு எரு மற்றும் மாட்டு எருவைப் பயன்படுத்துகின்றனர். இந்த மக்களுக்கு நியாயமான வருமானம் கிடைப்பதில்லை. கிளிநொச்சியில் உள்ள விவசாயி ஒரு கிலோ நெல்லுக்கு குறைவான விலை பெறுகிறார். இந்த நிலைமையை நாங்கள் நிச்சயமாக மாற்றுவோம். விவசாயத்தை கொள்ளையடிக்கும் இந்த மாஃபியாவை நாங்கள் உடைத்தெறிவோம் . நியாயமான வருமானத்தை உறுதி செய்வதற்காக விவசாய கொள்கைகளை செயல்படுத்த நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.

வடக்கில் வளர்ச்சிக்கான முக்கிய பாதை கல்வி.இங்கு வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிராந்திய செய்தித்தாள்கள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகின்றன . கிராமங்களுக்குள் செய்தித்தாள் வாசிப்பு மையங்கள் உள்ளன. நான் இலங்கையில் உள்ள பல நூலகங்களுக்குச் சென்றிருந்தாலும், எனது காலணிகளை கழற்றி யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தேன். உங்கள் வாசிப்பும் கல்வியுடனான உங்கள் உறவும் அப்படித்தான்.1960 ல் நடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தெற்கிலிருந்து குண்டர்களைக் கொண்டு வந்து நூலகத்திற்கு தீ வைத்தனர். அமைச்சர்கள் காமினி லோகுகே, காமினி திசாநாயக்க, காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினர். அந்தத் தேர்தலின் போது பன்னாலா காவல்துறையில் சில பெட்டிகள் நிரப்பப்பட்டன. அவர்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒழித்தது மட்டுமல்லாமல், நூலகத்தையும் எரித்தனர்.

எங்கள் ஆட்சியில் எங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறது. முழு கல்வி பொறிமுறையும் அழிக்கப்பட்டுள்ளது. அதை கட்டடியெழுப்ப வேண்டும். உங்கள் பிள்ளை உங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் கல்வி பெறுவதற்காக நடக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் ஒரு பாட சாலை முறையை உருவாக்குவோம்.

இன்று, கல்வி பாடசாலைக்கு வெளியே உள்ளது. இது ஒரு பாதகமான நிலைமையாகும் . நமது உடல்நலப் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை. ஏராளமான கர்ப்பிணித் தாய்மார்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் இருபத்தி ஒரு சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எல்லா குழந்தைகளுக்கும் சத்தான உணவு மற்றும் நல்ல, சூழலை நாங்கள் உருவாக்குவோம். அவர்கள் எதிர்கால நாட்டைக் காப்பற்றுவார்கள்.

இந்தக் கதைகள் இப்படி இருந்தபோதிலும், ஆட்சியில் எவ்வாறு பங்காளிகளாக மாற வேண்டும் என்று எங்களிடம் கேட்கிறீர்கள். அதைப் பற்றியும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். நமது அரசியல் பாதையில் அடிப்படை வகுப்புவாதத்தை நிராகரிப்பதாகும். எந்தவொரு இனவெறி அரசியலுக்கும் இரையாக அனுமதிக்கக் கூடாது. இந்த வகுப்புவாத அரசியல் போர்களை உருவாக்கி. வடக்கு மற்றும் தெற்கில் உள்ள குழந்தைகள் போருக்கு பலியானார்கள். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எந்த எம்.பி.யின் குழந்தைகளும் இறந்ததில்லை.

ஆனால், வடக்கு மற்றும் தெற்கில் போரை தொடங்கியது நாட்டை ஆண்ட அரசியல்வாதிகள். ஆனால் தந்தை மற்றும் தாய்மார்கள் வடக்கு மற்றும் தெற்கில் இறந்தனர். எனவே, எந்த கடினமான சூழ்நிலையிலும் இனவாதம் அல்லது மத தீவிரவாதம் நம் நாட்டில் மோதல்களை உருவாக்க அனுமதிக்கக்கூடாது.

தேசிய ஒற்றுமையுடன் கூடிய அரசியல் எங்களிடம் உள்ளது. அதை எவ்வாறு உருவாக்க முடியும்? நம் நாட்டின் எந்த குடிமகனும் இரண்டாவது குடிமகனாக இருக்க . திரு. சம்பந்தனுடனான ஒரு சமீபத்திய பேட்டியில், அவர் என்னிடம், “நான் இலங்கையின் குடிமகன் என்று சொல்ல விரும்புகிறேன். ஆனால் நான் இலங்கையின் இரண்டாவது குடிமகனாக இருக்க விரும்பவில்லை.

அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். நம் நாட்டின் முதல் வகுப்பு குடிமக்களை இரண்டாம் வகுப்பு குடிமக்கள் என்று அழைக்கக்கூடாது. மத அடிப்படையில் எங்களிடையே வேறுபாடுகள் இருக்கக்கூடாது.

எனவே, சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்த நாட்டின் சம குடிமக்கள் என்பதை கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம். ஒவ்வொரு குடிமகனின் அடையாளத்தையும் மதித்து சட்டங்களை உருவாக்குகிறோம். மதம் என்பது உங்கள் நம்பிக்கை. எந்த மதமும் உயர்ந்தது அல்லது தாழ்ந்ததல்ல. கலாச்சாரம் உங்களுடையதாக இருக்க முடியுமா, நம்முடையதா? ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என வகைப்படுத்த முடியுமா? மொழியும் அப்படித்தான். உங்கள் மொழி தமிழ். எனது மொழி சிங்களம். ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்ததா? இந்த நிலைமை எங்களால் மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குள் உட்பட்ட அனைத்து குடிமக்களாலும் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு சட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம், அத்துடன் அதை உறுதிப்படுதி நடைமுறைபடுத்தப்படும்.

பாகுபாடு காட்டப்படாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம். நாங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள், இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்கிறோம். எங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? எந்தவொரு மாற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குவோம், எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்வதற்கான உரிமையுண்டு. ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்காளிகளாகவும் இருக்க உரிமை அளிக்கிறது. அரசியல் அதிகாரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆட்சியை எந்த சமூகமும் அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு குடிமகனும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, அரசியல் அதிகாரத்தின் சம பங்காளிகளாக இருக்க உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம்.

தோழர் லால் விஜேநாயக்க இப்போது இந்த குழுவின் தலைவராக இருக்கின்றார், இது குறித்த யோசனைகளைப் பெற்றுள்ளோம். யாழ்ப்பாணம், திருகோணமலைக்குச் சென்று பொதுக் கருத்துக்களை எடுத்துக் பெற்றுக் கொண்டனர். குழுவின் உறுப்பினராக டாக்டர் ஹரினி அமரசூரியவும் செயல்பட்டார். எனவே பொதுமக்களின் கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் அபிலாஷைகளைப் பற்றி நல்ல புரிதல் எங்களுக்கு உள்ளது.

டாக்டர் விஜிதா ரோஹான மற்றும் திரு. அசோகா பீரிஸ் சமீபத்தில் உங்களுடன் ஒரு பரந்த அரசியல் கலந்துரையாடலை நடத்தினர். அரசியலமைப்பிலும் சட்டத்திலும் செய்ய வேண்டிய மாற்றங்களைப் நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் . இலங்கையின் சம குடிமக்களாக நாம் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க இவை அனைத்தையும் நாங்கள் சேகரித்தோம்.

எங்கள் தலைமுறை போருக்கு பலியாகியது. எங்கள் சந்ததியினரின் இரத்தம் இந்த பூமியை மிகவும் ஈரமாக்கியது. எங்கள் தாய்மார்களின் கண்களில் நிறைய கண்ணீர் இருந்தது. நாங்கள் அனைவரும் பயந்தோம். இந்த சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது . இதுபோன்ற சூழ்நிலையை நாம் மீண்டும் அனுபவிக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.

தெற்கில் உள்ள இரண்டு வகுப்புவாத கட்சிகள் பல்வேறு வகையான வகுப்புவாதங்களை ஏற்படுத்தின. பாராளுமன்றத்தின் வழிநடத்தல் குழு எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் கூடி அரசியலமைப்பு குறித்து விவாதித்தது. ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

உண்மையான தேசிய ஒற்றுமை தொடர்பில் அவர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. நான் ஒத்திவைக்கப்பட்டேன். நீங்கள் வடக்கில் ஒரு குழந்தை மட்டுமல்ல, அவர்கள் தெற்கின் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இது இனி நடக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

மக்களை ஏமாற்றாத, மக்களுக்கு உண்மையைச் சொல்லும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு நாம் முன்வர வேண்டும். அனைவரின் அடையாளத்தையும் மதிக்க வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சிறந்த அரசியல் மாற்றம் இருக்கும் என்று நம்புகிறோம். இளைய தலைமுறையைச் சேர்ந்த தோழர் கோகிலன் மற்றும் வடக்கில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட தோழர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இப்போது இந்த மேடையில் உள்ளனர். இதுபோன்று, வடக்கில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாம் அனைவரும் ஒரே நிலையில் இருக்கிறோம், அனைவரும் ஒன்றாக கஷ்டப்படுகிறோம். பல தசாப்த கால துன்பங்கள் வருத்தத்திலிருந்து வெளியே வர உங்களை அழைக்கிறோம். இந்த நிலைக்கு வர யாருக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லை. நியாயமான அரசியல் காரணங்களுக்காக அவர்கள் முன்வந்துள்ளனர். எனவே, நீங்கள் எங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தீர்கள். இந்த வெற்றிகரமான பயணத்தை நாம் அனைவரும் தொடங்குவோம். இந்த பயணத்தை நாம் வெற்றியுடன் முடிக்க முடியும். எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். வலிமையையும் தைரியத்தையும் சேகரித்து கொண்டு எங்களுடன் சேருங்கள்.











Read more...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறிதரனின் சமாதான நீதவான் கைது

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவானும், சிறிதரன் எம்பியின் பெரியகுளம் வட்டார கிளை உறுப்பினருமான தீபன் உட்பட இருவரை கிளிநொச்சி பொலீஸார் கைது செய்யதுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு பேரூந்தில் வந்த சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்து சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சமாதான நீதவான் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் பிரிதொரு நபரும் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த சிறுமி கதறி கூக்குரல் எழுப்பிய போது இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரை தாக்கியுள்ளான்.

பின்னர் கிளிநொச்சி பொலீஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொலீஸார் இன்றைய தினம் குறித்த சமாதான நீதவான் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர் இருவரையும் நாளைய தினம்(செவ்வாய் கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளனர்.

குறித்த சமாதான நீதவான் அரசியல் கட்சி ஒன்றின் வட்டாரக் கிளையின் உறுப்பினர் என்பதோடு, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் சமாதான நீதவான் பதவிக்கும் சிபார்சு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Read more...

கன்னியா சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்க தடை

திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று பகுதியில் உள்ள தொல்பொருள் தினைக்களம் உரிமை கோரும் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில் அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

மேலும் வென்னீர் உற்று பகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கு மட்டும் டிக்கட் விற்பனை செய்யவும் தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுமதியும் நீதிபதியால் வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு இம்மாதம் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட உள்ளது.

Read more...

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், தமது சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு தெரிவித்து, ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களுக்காக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டை நிறைவு செய்துள்ளனர்.

இதேவேளை, இன்று (07) காலை முதல் 28 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவிக்கையில், வேலைநிறுத்தத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும்,
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பிய ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரால் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் இதுவென்பதால், தொடர் வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்றையதினம் (06) ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள், திணைக்களங்கள், சபைகள், வங்கிகள் போன்றவற்றின் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் நேற்று (06) தேர்தல் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அவர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதாக உறுதியளித்ததாக தேர்தல் ஆணையக தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.

Read more...

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம், ஊர்வலங்கள், பேரணிகள் நடத்த தடை

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதற்கமைய, இன்று (07) முதல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை வீதிப் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்தாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறான வீதிப் பேரணிகளை தடுக்கவும், அவ்வாறான சம்பவங்களை வீடியோ செய்து நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பொலிஸாரின் உரிய அனுமதி இன்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (07) ஆரம்பமானதைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஒழுக்கமாகவும், அமைதியாகவும் நடத்துமாறு கேட்டுக்கொள்வதாக, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு - பப்ரல் (PAFFREL) நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

Read more...

பிரேதக் குழியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு. ரெலோவுடையதா?

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் நல்லடக்கத்திற்காக குழியொன்றை வெட்டியபோது ஆயுதப்பெட்டி ஒன்று வெளிவந்துள்ளது. இவ்வாயுதங்கள் புலிகள் அமைப்பு அல்லது இந்திய இராணுவத்தினர் திருகோணமலையில் நிலைகொண்;டிருந்தபோது அவர்களுடன் சேர்ந்தியங்கிய த்றீஸ்டார் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களது ஆயுதங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஆ-17 யுடி-2 வர்க்க ரி 56 துப்பாக்கிகள் 5 , எஸ்.எம்.ஜி-1, ரி 56 துப்பாக்கி மகஸீன் 5, எஸ்.எம்.ஜி- மகஸீன் 3, ரி 56 துப்பாக்கி சன்னங்கள் 1700, 9 எம்.எம் துப்பாக்கி சன்னங்கள் 32 என்பன அடங்குகின்றன. இவையாவும் பாவிக்கக்கூடிய நிலையிலேயே காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய ரெலோ அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இந்திய இராணுவத்தினர் நாட்டைவிட்டு வெளியேறும்போது, ஆயுதங்களை வடகிழக்கின் பல பகுதிகளில் புதைத்து வைத்துவிட்டு தப்பியோடிய முன்னாள் த்றீஸ்டார் அமைப்பினர் அவ்வாயுதங்களை பின்னாட்களில் பாதாளக்குழுக்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுக்கும் விலைக்கு விற்றிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.





Read more...

35 பேர் வேட்பு மனுத்தாக்கல். தேர்தல் செலவு 400 கோடியையும் தாண்டுகின்றது.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவதற்கு இன்று காலை 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக 41 பேர் கட்டணம் செலுத்தியிருந்த நிலையிலேயே 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்ததுடன் அவற்றில் இரு வேட்பு மனுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்காக 400 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்த்திருந்தபோதிலும் செலவுகள் 400 கோடியை தாண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இச்செலவு அதிகரிப்பதற்கான பிரதான காரணம் வேட்பாளர் தேர்வுப் பத்திரிகை இலங்கை வரலாற்றிலேயே நீண்டதாக அமைந்துள்ளதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







Read more...

Sunday, October 6, 2019

இலங்கையர்கள் தங்கள் 'பேஸ்புக்' கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவும்

இலங்கையர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரும் பயனாளர்களின் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களின் கைகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத தரப்பினரால் போலியாக தயாரிக்கப்பட்ட சமூக வலைத்தளம் ஊடாக, பயனாளர்களை நுழைய வைத்து அதில் தங்கள் பெயர் மட்டும் கடவுச்சீட்டை பதிவிடுமாறு கோருகின்றனர். அதன் ஊடாக அந்த தரவுகளை திருடிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்டகே மெத்திவ் தெரிவித்துள்ளார்.

குறைந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் பயனாளர்கள் மிக இலகுவாக அடையாளம் தெரியாதவர்களின் கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் two factor authentication என்ற வசதியை பயன்படுத்துமாறும் அல்லது Google authenticator என்றதனை பயன்படுத்துமாறு இலங்கை சமூகவலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

விசேட பொலிஸ் வீடியோ வேவு அணிகள் நாளை கொழும்பில் களமிறங்குகின்றது.

ஜனாதபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது. வேட்பாளர்கள் தங்களுக்கான கட்டனங்களை செலுத்தவேண்டிய காலஎல்லை இன்று நண்பகலுடன் காலாவதியாகியுள்ளது. அதன் பிரகாரம் இன்று நண்பகல்வரை அரசியல் கட்சிகள் 22 ம் சுயாதீன வேட்பாளர்கள் 19 பேரும் பணம் செலுத்தியுள்ளனர். இலங்கை வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமையவுள்ளது.

சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா , குமார வெல்கம , மஹிபால ஹேரத்த , மில்றோய் பெர்ணான்டு , ஜயந்;த கொட்டகொட என பல அரசியல் பிரபலங்களும் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

நாளை காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை ராஜகிரிய தேர்தல்கள் திணைக்கள தலைமைக்காரியாலயத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் அதற்கு ஆட்சேபனை பத்திரங்களை பாரமெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் நாளை கொழுப்பிலுள்ள பிரதான பாடசாலைகள் சில இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல்கள் திணைக்கள சுற்றுவட்டார வீதிகள் பல மூடப்பட்டு மாற்று வீதி ஒழுங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வேட்பாளர்களுடன் வரும் சகல ஆதரவாளர்களும் 5 மேற்பட்ட முறை சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாளை வாகனங்களிலோ அன்றில் கால்நடையாகவே பேரணிகள் செல்வதும் துண்டுபிரசுரங்கள் பகிர்ந்தளிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகள் எதுவும் பயன்படுத்த முடியாது.

இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள பொலிஸார் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக வீசேட வீடியோ வேவுப்படை ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் விபரம் வருமாறு-

1. சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி
2. கோத்தாபய ராஜபக்ச – சிறிலங்கா பொதுஜன பெரமுன
3. அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி
4. றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
5. மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
6. ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
7. சிறிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிச கட்சி
8. சிறிபால அமரசிங்க – சுயேட்சை
9. சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
10. சமரவீர வீரவன்னி – சுயேட்சை
11. சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
12. அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
13. ஏஎஸ்பி லியனனே – சிறிலங்கா தொழிலாளர் கட்சி
14. ஜயந்த கேதாகொட – சுயேட்சை
15. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
16. அஜந்தா பெரெரா – சிறிலங்கா சோசலிச கட்சி
17. சமன்சிறி ஹேரன் – சுயேட்சை
18. அசோக வடிகமங்காவ – சுயேட்சை
19. ஆரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
20. வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
21. பத்தேகமகே நந்திமித்ர – நவ சம சமாஜ கட்சி
22. வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
23. பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
24. சமல் ராஜபக்ச – சிறிலங்கா சுமந்திர பொதுஜன கூட்டணி
25. அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
26. ஜயந்த லியனகே – சிங்களதீப ஜாதிக பெரமுன
27. குமார் வெல்கம – சுயேட்சை
28. ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
29. வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
30. இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
31. அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
32. பஷீர் சேகு தாவூத் – சுயேட்சை
33. விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
34. எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
35. எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
36. பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
37. நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
38. அகமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
39. குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
40. மஹிபால ஹேரத் – சுயேட்சை
41. சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி

Read more...

வேட்பாளர் மனுவில் கையெழுத்திட்டார் கோத்தபாய ராஜபக்ச!

இலங்கையின் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு கோத்தபாய ராஜபக்சவிற்கு ஏற்படுத்த முயற்சிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் தாண்டி நேற்று அவர் வேட்பாளர் மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெருமுனவின் வேட்பாளராக தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக மிரிஹானைப் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பௌத்த தேரர்களின் சமய அனுஷ்டானங்கள் மற்றும் ஆசீர்வாதத்துடன் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மட்டக்களப்பிலிருந்து வியாழேந்திரனுடன் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Read more...

மொட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க முன்வருகிறார் ஜனாதிபதி மைத்திரி!

பொதுத்தேர்தலில் ஸ்ரீசுகவும் ஸ்ரீபொபெ இரண்டும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்வரும் 09 ஆம் திகதி (புதன்கிழமை) இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைநடாத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப, ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒத்துழைப்பு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன்பின்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து கதிரைச் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இருதரப்பும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெயரில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

Saturday, October 5, 2019

செஞ்சோலை பிள்ளைகளை நிர்க்கதிக்குள் விட்ட சிறிதரன்

செஞ்சோலைக் காணியை பெற்றுத்தரலாம் என்றும் அதில் சென்று குடியேறுங்கள் எனவும் செஞ்சோலை பிள்ளைகளிடம் கூறி அவர்களை அக்காணிக்குள் குடியேற்றிவிட்டு தற்போது அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் எதுவும் செய்யாது கைவிட்டுவிட்டார் என செஞ்சோலைப் பிள்ளைகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் குறித்த காணியில் மீள்குடியேறியிருந்தனர். குறித்த காணி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களுக்காக 2009 க்கு முன் விடுதலைப்புலிகளால் காணி உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது குறித்த காணி உரிமையாளர்கள் காணி அனுமதி பத்திரம் ஆவணத்தை வைத்துக்கொண்டு குறித்த காணி தங்களுடையது எனவும் அதனை தங்களுக்கே மீளவும் வழங்க வேண்டும் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டினை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் சுற்று 2014 ஆம் ஆண்டு நிருபத்தின் பிரகாரம் காணி அதன் ஆரம்ப உரிமையாளர்களிடமே வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்கியதன் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளரினால் காணியை வெளியேறுமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் அரச காணியில் அதிகாரமில்லாது ஆட்சி செய்கின்றீர்கள் எனவும் எனவே அக் காணியை விட்டு 15-10-2019 க்கு முன் வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செஞ்சோலை காணிக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு செஞ்சோலை காணிகளுக்கு பதிலாக மாற்று அரச காணி வழங்கப்பட்டு அரச வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் பிரிதொரு காணிச் சட்டத்தின் படி காணியற்ற ஒருவருக்கு இலங்கையில் எப்பகுதிலாவது ஒரு ஒரு அரச காணி மாத்திரமே வழங்க முடியும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே செஞ்சோலை காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் செஞ்சோலை காணிகள் வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம் என அங்கு குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகள் கேள்வி எழுப்புகின்றனனர்.

தற்போது செஞ்சோலை காணியில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் இருந்த 54 பேர் குடும்பங்களாக பதிவு செய்துள்ளனர் அவற்றில் பலர் அந்தக் காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து குடியிருந்தும் வருகின்றனர்.

அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் பதினொறாம் திகதி (11-04-2019) அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் செஞ்சோலை காணிகள் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தார் ஆனால் அதற்கு பின் எதுவும் நடக்கவில்லை

Read more...

பொது வேட்பாளருக்கான கோரிக்கை. பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தாபாய மற்றம் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர்.

அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளும்கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என்பதையே இது வெளிப்படுத்தி உள்ளது.

இதனால் தேர்தலில் என்ன செய்வது, யாரை ஆதரிப்பது என்று தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்துக்கான சிந்தனையை கடுமையாக்கி உள்ளது. மிகவும் கடுமையாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாட்டின் அதி முக்கிய அரச தலைவராக – ஜனாதிபதியாகப் போகின்றவர் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார், அவர் தங்களுக்கு என்ன செய்யப் போகின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இதனைத் தட்டிக்கழித்;துவிட்டு, அவர்களின் ஆதரவை எந்தவொரு வேட்பாளரும் பெற முடியாது. இது தேர்தல் காலத்தின் பொதுவான யதார்த்தம்.

புறந்தள்ளிய செயற்பாடுகள்

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும், புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகிய பின்னர் வழங்கிய உறுதிமொழிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

தமிழ் மக்களைப் புறந்தள்ளியது போன்ற அவருடைய செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து, அரசியல் ரீதியாக நிம்மதி இழந்துள்ளார்கள். இந்த நிலையில் அந்த மக்கள் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் எத்தகைய கொள்கையை – நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளார்கள்.

கடந்த தேர்தல் கால படிப்பினையின் அடிப்படையில் அவர்கள் தங்களுக்காக உறுதியாகச் செயற்படுகின்ற ஒருவரையே தெரிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும், ஆட்சி நிர்வாகத்தில் கூடிய செல்வாக்கைச் செலுத்தக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எழுந்தமானமாக வாக்களிக்க முடியாது.

ஏனெனில் இந்தத் தேர்தலில் வாக்களிப்பது என்பது அவர்களுடைய அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற ஒரு முக்கிய கைங்கரியமாகும். அத்தகைய பொறுப்பான விடயத்தில் ஏனோ தானோ என்று அவர்களால் இருக்க முடியாது. செயற்படவும் முடியாது. எனவே, மிகவும் கவனமாகவும் மிகுந்த பொறுப்போடும் செயற்பட வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் பிரதான வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தாத நிலையில் தேர்தலில் வாக்களிப்பதா இல்லையா என்று சிந்திக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற வல்லமையைக் கொண்டுள்ள தமது வாக்குகளைப் பயனுள்ள வகையில் பிரயோகிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது.

ஆகவே தேர்தலை, மாற்று வழிகளில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாய நிலைமைக்கும் அதுபற்றி சிந்திப்பதற்கும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நடைமுறை அரசியல் நியதி

நாட்டின் அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரமராகவோ வருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. அத்தகைய ஒரு நிலையை உருவாக்குவதற்கு பேரின அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. அதற்கான சிந்தனையும் அவர்களிடம் எழுந்ததும் இல்லை.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் உரிய முறையில் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்தகைய தெளிவான ஆணித்தரமான உறுதிப்பாட்டைக் கொண்ட அம்சங்கள் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டும்.

பேரினத்தவராகிய சிங்கள மக்களை, அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடைய அரசியல் அதிகார உரிமைகளை மேன்மையான நிலையில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இலங்கையின் அரசியலமைப்பில் சிறுபான்மை இன மக்கள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றார்கள். நம்பிக்கை கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள்.

இத கால வரையிலான அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் குடியியல் நன்மை குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் அவர்களையும் பங்காளிகளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய அபிலாசைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவை பற்றிய கருத்துக்களும்கூட உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதற்கும் அப்பால் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவர் ஒருவரே – அதுவும் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற நியதி எழுதப்படாத அதேநேரம் மாற்றப்பட முடியாத ஓர் அரசியல் நியதியாக நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அக்கறை கொள்ளாத அரசியல் போக்கு

இத்தகைய ஒரு சூழலில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே அதுவும் பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக முடியும் நடைமுறை யதார்த்தம் இதுகால வரையில் இருந்து வந்துள்ளது.

ஆனால் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தில் அந்த நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தை பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி கைப்பற்றி கோத்தாபாய என்ற வலிமை மிக்க ஒருவரை தனது வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் அந்தக் கட்சிக்குள் எழுந்த போட்டி, பூசல்கள் காரணமாக அந்தக்கட்சி செல்வாக்கிழந்து போயுள்ளது.

அதன் முன்னாள் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் அரசியல் அரங்கில் மிகப் பலம்வாய்ந்த ஒருவராகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த பொதுஜன பெரமுன செயற்படத் தொடங்கி சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. இந்த அரசியல் செல்வாக்கு கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் முதன்மை நிலையில் வெளிப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்தக் கட்சியின் வேட்பாளராகிய கோத்தாபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பிலான கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பூதாகரமாக எழுந்து அச்சுறுத்தி உள்ள போதிலும் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தில் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. கோத்தாபாய வேட்பாளராகினாலும் சரி வேட்பாளராகா விட்டாலும்சரி தமிழ் மக்கள் தமக்கு சாதகமான ஒருவரைத் தெரிவு செய்வதில் சிக்கலான நிலைமைக்கே முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் உத்தி

பேரின அரசியல் தலைவர்கள் எவரும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் நலன்களில் அக்கறை கொள்ளாத ஓர் அரசியல் போக்கைக் கொண்டிருப்பதனால், அவர்களில் எவரையுமே நம்ப முடியாத நிலைமைக்கே தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுவே நாட்டின் அரசியல் செல்நெறியாக நிலைபெற்றுள்ளது.

சம்பந்தனுடனான சந்திப்பு


இந்த நிலையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாட்டை தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் அந்த விடயத்தில் அக்கறை அற்றவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியாசனம் ஏறுகின்ற பேரின அரசியல் தலைவர்கள் மீதும், அவர்களின் கட்சிகளின் மீதும் தாங்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய ஒரு நிலைமைக்குள் தமிழ் மக்கள் இப்போது தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் தங்களின் நம்பிக்கையற்ற நிலைப்பாட்டை சிங்கள மக்களுக்கும் பேரின அரசியல் கட்சிகளுக்கும் வெளிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி அவருக்கே வாக்களிக்கின்ற ஒரு தீர்மானத்திற்கு ஒரு சாரார் ஏற்கனவே வந்துள்ளார்கள்.

இந்த வகையில் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவையின் முன் முயற்சியில் சுயாதீன தமிழ்க்குழு ஒன்று இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது. இந்தக் குழு இதுவிடயம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தி பொது வேட்பாளராக அவரை நிறுத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தரப்பை இந்தத் தேர்தல்காலச் சூழலில் ஓரணியில் அரசியல் ரீதியாக ஓர் அணியாக ஒன்றிணைப்பது சிங்களத் தரப்பைத் தமிழ்த்தரப்புக்கு எதிராக ஒன்றிணைவதற்கு வழிவகுத்துவிடும் என்ற ஆபத்தான நிலைமை குறித்து சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது சுயாதீன தமிழ்க்குழுவினருக்குச் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகின்றது.

உத்தரவாதமற்ற பன்னாட்டு நிலைமை

சம்பந்தன் எடுத்துக் கூறிய ஒரு நிலைமையுடன், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தமிழர் தரப்பின் ஒன்றிணைவு, அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலிலும் சிங்களத் தரப்பு முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் செல்வாக்கு செலுத்த வல்லது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த செல்வாக்கு பொதுத் தேர்தலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் அல்லது உருவாகப்போகின்ற புதிய அரச தரப்பினருடைய ஆட்சிக் கொள்கைக்கான தீர்மானத்திலும் முக்கியத்துவம் பெறக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.

அதேநேரம் இந்தத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற தேர்தல் நடைமுறையில் வெற்றி பெறுபவரைத் தீர்மானிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் எந்த வகையிலும் அந்த வாக்குகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தேர்தல் கால உத்திகளையும் பேரின அரசியல்வாதிகள் கைக்கொள்ளத் தவறமாட்டார்கள்.

எனவே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுடைய அரசியல் நலன்கள் சார்ந்த தேவைக்காக, தங்களுக்குப் பயன்படாத வகையில் பிரயோகிக்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். இது ஒரு விடயம். தங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை மீறிய வகையில் தனிவழியில் செல்வதற்கான ஒரு சமிக்ஞையாக அதனைக் கருதி அவர்கள் அரசியல் ரீதியாகக் கோபமடையவும் கூடும்.

உணர்வு நிலை அரசியல் போக்கைக் கொண்டுள்ள பேரின அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இதற்காகத் தமிழ் மக்களைப் பழிவாங்குவதற்கும் முயற்சிக்கலாம். ஜேஆர் ஜயவர்தன காலத்தில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் ஒன்றிணைந்து வாக்களித்ததன் பின் விளைவாகவே 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த வரலாற்றுப் பாடத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அவற்றை அரசு வழங்க வேண்டும் என்றெல்லாம் பேச்சுக்களிலும், பொது அரங்குகளிலும் அறிக்கைகளிலும் ஐநாவும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தலாம். ஆனால் அவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக செயல் வடிவத்திலான அழுத்தத்தை அவைகள் இலங்கை மீது இதுவரையிலும் பிரயோகித்ததில்லை. இனிமேலும் அது நடக்குமா என்பதற்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

ஒன்றிணைவார்களா......?

தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓர் அணியாக ஒன்றிணைய வேண்டும் என்பதைப் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். இந்தப் பத்திகளிலும் அதன் அத்தியாவசிய தேவை, அதன் அரசியல் அவசியம் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய ஒன்றிணைவு இல்லாவிட்டால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டிருந்ததை மறக்க முடியாது.

தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் இறுக்கமான ஓர் அரசியல் கட்டமைப்பில் ஒன்றிணைகின்ற அதேவேளை, துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சமூக முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டல் குழுவொன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே, இங்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேர்தல் கால தேவைக்காக என்றில்லாமல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான அரசியல் பயணத்தை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுப்பதற்கு இந்த ஒன்றிணைவும் வழிகாட்டல் குழுவும் அவசியம். ஆனால் இது குறித்து ஆலோசிக்கப்படவுமில்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாவும் தெரியவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற மிகக் குறுகியதொரு காலப்பகுதியில் அந்த வழிகாட்டல் குழு போன்றதை ஒத்த சுயாதீன தமிழ்க்குழு உருவாக்கப்பட்டு ஒற்றுமைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. காலம் தாழ்த்திய செயற்பாடாகிய போதிலும், இது பாராட்டுக்குரியது. ஊக்குவிக்கப்பட வேண்டியது.

அதேநேரம் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் என்பதற்கும் அப்பால் தமிழ்த்தேசியத்தைத் தமது அரசியல் கொள்கையின் அடிநாதமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளாவது ஓரணியில் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுயாதீன தமிழ்க்குழு முன்வைத்த யோசனைகளைச் செவிமடுத்த சம்பந்தன் அது குறித்து தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். நானும் யோசிக்கிறேன். நீங்களும் யோசியுங்கள என்றவறாகப் பதிலளித்துள்ளதாகத் தகவல். அத்துடன் இந்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சிக்குள் கலந்தாலோசிக்க வேண்டும். அதற்கும் அப்பால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகின்றது.

அதேநேரம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ரீஎம்கே என்ற தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளுடனும் சுயாதீன தமிழ்க்குழு பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக அமைந்தன என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு விரல்விட்டு எண்ணுகின்ற நாட்களே இருக்கின்ற ஒரு குறுகிய கால வேளையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்குவதற்கான இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். அதேவேளை, இந்த முயற்சிக்கு செவிகொடுத்து அரசியல் கட்சிகள் உடனடியாக ஓரணியில் ஒன்றிணைவார்களா என்பதும் கேள்விக்குரியதே.

மொத்தத்தில் இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாட்டின் பிரதான கட்சிகள், தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களும்கூட குழப்பகரமான நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த குழப்பரமான நிலைமைகளில் இருந்து மீண்டு அனைவரும் எவ்வாறு இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் காண முடியும்.

Read more...

ரிசாட் பதியுதீனின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகி விட்டது. மயோன் முஸ்தபா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் சமகால விடயங்கள் தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை(4) மாலை 5 மணியளவில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபாவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடும் மக்கள் சந்திப்பும் கல்முனை வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறுகையில்:

2009 யுத்த வெற்றியின் பிற்பாடு வடக்கிலும் புத்தளம் மற்றும் வில்பத்து போன்ற இடங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு புதிய கிராமங்களை உருவாக்கி மீள்குடியேற வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆவார். எவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை அளித்திருந்தாலும் குறிப்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆதரவளித்திருக்க கூடாது என்பதுடன் அவரது உள்ளம் முழுமையாக பொதுஜன பெரமுனவை ஆதரித்தாலும் அவர் நடைமுறையில் ஐக்கிய தேசிய கட்சியியை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

இவரது இந்த நிலையானது ஆப்பிழுத்த குரங்கின் நிலை போல் ஆகிவிட்டது. அத்துடன் 2000 ஆண்டில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொறுப்பேற்றதன் பின்னர் முஸ்லீம் மக்களிற்கு செய்தது என்ன? இந்த தேசத்திற்கும் செய்தது எதுவும் கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கில் முஸ்லீம் மக்களை ஒருவித மயக்க நிலையில் வைத்துள்ளது. அந்த மயக்க நிலையினால் தான் இன்றும் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜீத் பிரேமதாசவை தகுதியற்றவர் என்ற குழப்பத்தின் மத்தியில் ஒருவித அழுத்தத்திற்கு ஆளாகிய பிற்பாடே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லீம் பங்காளி கட்சிகளின் ஒப்பந்தங்கள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுடன் இருட்டறை ஒப்பந்தங்களாக நடந்தேறி விட்டன.

இந்த ஒப்பந்தமானது முஸ்லீம் மக்களிற்கு தீர்வான ஒப்பந்தமா அல்லது தனி நபருக்கு இலாபமான ஒப்பந்தமா என முஸ்லீம் மக்கள் நன்கு அறிவர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமை பொறுத்தமட்டில் மத கருத்துக்களை கூறி சாணக்கியம் பேசி மக்களை ஏமாற்றும் பழைய புராணமாகவே அவரது அரசியல் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேண்டபாளர் ஒரு இனவாதி என்ற கருத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கும் இந்த முஸ்லீம் பங்காளி கட்சிகள் ஒரு விடயத்தை மறந்தவிட கூடாது. முஸ்லீம் மக்கள் மத்தியிலும் இனவாதம் காணப்படுகிறது. குறிப்பாக சொல்லப்போனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரால் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இனவாத கருத்துக்களாகவே காணப்படுகிறன.

முஸ்லீம்களின் பெயர்கள் கூட இன்று மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக போதைவஸ்து கடத்தல், பாதாள உலக செயற்பாடுகள், தீவிரவாத செயற்பாடுகள் போன்றவற்றிற்கு துணைபோகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான மோசமான நிலைகளை களையெடுக்கபட வேண்டும். இவ்வாறு களையெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு தகுதியான ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும். அதற்கு தகுதியானவர் பொதுஜன பெரமுனவின் பலம் பொருந்திய வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவே ஆவார் என்றும் எமது சமூகத்தின் நாசகார சக்திகள் கலையப்பட வேண்டும் மீண்டும் தேசிய கட்சில் இருந்து கொண்டு எமது அரசியல் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.





Read more...

Friday, October 4, 2019

மீண்டும் ‘பிரேமதாச யுகம்’ தோன்ற மக்கள் அனுமதிப்பார்களா?

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெற்று வந்த இழுபறி ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாச ஐ.தே.க. சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஒருமனதாக(?) அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுதி நிமிடம் வரை கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். கட்சியின் மூத்த தலைவர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இருந்தபோதும், கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் கொடுத்த பலமான அழுத்தம் காரணமாக ரணில் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலைமை ஏறத்தாழ ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாசவுக்கும் 1989 ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஏற்பட்டது போன்றது. அப்பொழுது ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்த ஜே.ஆர்., ஐ.தே.கவின் தலைவர் என்ற ரீதியில் தனது இடத்துக்கு புதியவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தார்.

அந்த இடத்துக்கு ஜே.ஆரின் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச வர விரும்பினார். ஆனால் அவர் வருவதை ஜே.ஆர். கொஞ்சமும் விரும்பவில்லை. அதற்குக் காரணம் பிரேமதாச ஒருமுறை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வந்துவிட்டால் ஐ.தே.கவின் தலைமை நிரந்தரமாகவே பிரேமதாச குடும்பத்திடம் சென்றுவிடும் எனப் பயந்தார்.

அதுமாத்திரமின்றி, 1978 இல் தான் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மதித்து இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்காது தான் ஒதுங்கிக் கொண்டது போல பிரேமதாச இருக்கமாட்டார். அரசியல் சட்டத்தை மாற்றி ஆயுள் பூராவும் தானே ஜனாதிபதியாக இருக்க பிரேமதாச முயற்சிப்பார் எனவும் ஜே.ஆர். அஞ்சினார்.

ஆனால், கட்சியின் கீழ்மட்டத்தினர் கொடுத்த பலத்த அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி இறுதியில் ஜே.ஆர். ஒதுங்கிக் கொண்டு பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டியதாயிற்று.

பின்னர் இந்திய அமைதிப் படைக்கு எதிரான போராட்டத்தில் புலிகள் பிரேமதாசவை பயன்படுத்திவிட்டு, தமக்கு அவர் தேவையில்லை எனக் கருதியபோது தற்கொலை குண்டுதாரி மூலம் 1993இல் பிரேமதாசவை கொலை செய்துவிட்டனர். அதனால் ஜே.ஆர். அஞ்சியது போல ‘பிரேமதாச யுகம்’ ஒன்று உருவாக வழியில்லாமல் போய்விட்டது.

பிரேமதாசவை புலிகள் ஒழித்துக்கட்டாமல் இருந்திருந்தால், ஐ.தே.கவிலும், நாட்டிலும் பிரேமதாசவின் குடும்ப ஆட்சி உருவாகியிருக்கும் என்பது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் ஜனாதிபதிகளாக வந்த சந்திரிகாவோ அல்லது மகிந்த ராஜபக்சவோ அல்லது பிரதமராக வந்த ரணிலோ ஒருபோதும் அவ்வாறு வந்திருக்கவும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

ஆனால் தற்போதைய நிலவரம் சற்று வித்தியாசமானது. தனது மாமனார் ஜே.ஆர். செய்தது போல ரணில் ஒதுங்கிக்கொள்ளப் போவதில்லை.

ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான போராட்டத்தை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. சஜித்துக்கு தேர்தல் சின்னமாக ஐ.தே.கவின் யானை சின்னத்தை வழங்காததின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

சஜித்துடனான ரணிலின் போராட்டம் வெறுமனே பதவி சம்பந்தமானது அல்ல. அது ரணிலைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற வகையிலான போராட்டம்.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வருவதைத் தடுக்க முடியாது எனக் கண்ட ரணில் தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில நிபந்தனைகளை முன்வைத்துப் பார்த்தார்.

அதாவது, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தானே தொடர்ந்தும் இருப்பதை ஏற்க வேண்டும் எனக் கூறினார். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதன் நோக்கம் தானே பிரதமராக இருந்துகொண்டு சஜித் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டால் பிரதமான தன்னிடமே எல்லா அதிகாரங்களும் வந்துவிடும், சஜித் வெறுமனே ஒரு பொம்மை ஜனாதிபதியாகவே இருப்பார் என்பதுதான் ரணில் போட்ட கணக்கு.

ஆனால் ரணில் விதித்த நிபந்தனைகள் எதற்கும் உடன்படாமலே சஜித் ஜனாதிபதி வேட்பாளராகிவிட்டார். இதை சஜித் பகிரங்கத்தில் பெருமையாகச் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்.

ஆனால் தனது மாமனார் ஜே.ஆரைப் போல குள்ள மூளை உள்ள ரணில் இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடப் போவதில்லை.

ஏனெனில், சஜித் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வந்துவிட்டால் எதிர்க்கட்சியினரில் கை வைப்பதற்கு முதல் தன்னிலேயே முதலில் கை வைப்பார் என ரணிலுக்கு நன்கு தெரியும்.

அதாவது, ஜனாதிபதி என்ற வகையில் கட்சியின் தலைமைப் பொறுப்பும் சஜித்திடமே சென்று சேரும். அதன் பின்னர் தனது பிரதமர் பதவியிலும் சஜித் கைவைக்கக்கூடும் என்ற அச்சம் ரணிலுக்கு இருக்கின்றது. அது மாத்திரமின்றி, தனது தந்தையார் செய்ய முடியாது போன ஆயுள்கால ஜனாதிபதி என்ற கனவை சஜித் அரசியல் சட்டத்தை மாற்றி ஏற்படுத்திக் கொள்ளவும் கூடும். எனவேதான் ரணிலுக்கு இது வாழ்வா அல்லது சாவா என்ற பிரச்சினையாக இருக்கின்றது.

சஜித் ஜனாதிபதியாக வருவது ரணிலுக்கு மாத்திரமின்றி, மற்றைய கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், சிறுபான்மை இனங்கள் உட்பட்ட நாட்டு மக்கள் அனைவருக்குமே வாழ்வா சாவா என்ற பிரச்சினைதான்.

ஏனைனில், சஜித் தனது தகப்பனார் ஆர்.பிரேமதாசவின் கொள்கைகளையே உறுதியுடன் பின்பற்றப் போவதாகக் கூறி வருகின்றார்.

அவரது தகப்பனார் ஒரு சாதாரண கீழ்மட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வன்முறை நடவடிக்கைகளின் மூலமே அரசியலுக்கு வந்தவர். அவரது வன்முறைக்காகவே கொழும்பு மாநகர சபையில் அரசியல் செய்த ஐ.தே.க. தலைவர்கள் அவரை அரவணைத்து பயன்படுத்தினர். அவ்வாறுதான் அவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்தை பிரேமதாச நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி பதவி வரை வளர்ந்தார்.

இன்னொரு பரிமாணமும் பிரேமதாசவுக்கு உண்டு. அவரது ஞானகுரு ஏ.ஈ.குணசிங்க என்பவர். பிரபலமான தொழிற்சங்கவாதியான இந்த குணசிங்கதான் முதன்முதலாக இலங்கையில் இனவாதத்தைத் தூண்டியவர். அந்தக் காலத்தில் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி துறைமுகத் தொழிலாளர்களே கூடுதலாக வேலை செய்தனர். இவர்கள் குணசிங்கவின் தொழிற்சங்கத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த குணசிங்க, “மலையாளிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும்” என கோசமெழுப்பியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியை “கொச்சிக் கட்சி” என விளித்தும் இனவாதம் பேசினார். அவரது சீடப்பிள்ளையாக பிரேமதாச இருந்தார்.

பின்னர் பிரேமதாச அரசியலில் மேல்நிலை அடைந்ததும், தான் பிறந்து வளர்ந்த கொழும்பிலுள்ள ‘வாழைத்தோட்டம்’ என்ற பகுதிக்கு தனது ஆசானுக்கு நன்றிக்கடனாக “குணசிங்கபுர” எனப் பெயர் இட்டதுடன், அந்தப் பகுதியின் நுழைவாயிலில் குணசிங்கவின் பெரிய அளவிலான உருவச்சிலை ஒன்றையும் அமைத்தார்.

பிரேமதாசவுக்குள் குணசிங்க மூலம் உருவாகியிருந்த இனவாத சிந்தனை காரணமாகவே அவர் இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியாவின் முன்முயற்சியால் 1987இல் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் (இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரேமதாசவின் சொந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர். தான் ஒப்பமிட்டபோதும்), பின்னர் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையை புலிகளுடன் சேர்ந்து திருப்பி அனுப்பியதுடன், அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவான ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையையும் கலைத்து முடமாக்கினார்.

பிரேமதாச வன்முறையாளர், இனவாதி என்ற பிம்பங்களுக்கு மட்டும் உரியவரல்லர். அவற்றுக்கும் அப்பால் தான் ஒரு சர்வாதிகாரவாதி என்பதையும் நிரூபித்தவர். அவர் அதிகாரத்தில் இருந்த 1988 – 89 காலப்பகுதியில் ஜே.வி.பியினர் நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கியவர். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களை மட்டுமின்றி, அதில் ஈடுபடாத இளைஞர்கள் உட்பட சுமார் அறுபதினாயிரம் பேரை கொன்று குவித்தவர்.

பிரேமதாசவின் இத்தகைய கொடூரத்தனங்களுக்கு மத்தியில் ‘தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு அடித்தது போல’, அரசாங்கப்பணத்தில் அவர் கிராமப்புற மக்களுக்கு அமைத்த வீடமைப்புத் திட்டங்கள் ஒரு பெரிய விடயமல்ல. (தமிழ் அரசியல்வாதிகள்தான் இதைச் சிலாகித்துப் பேசுவதுடன், அவர் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானதும் ஐ.தே.க. ஆதரவு பழக்கதோசம் காரணமாக தமிழ் பகுதிகளில் மட்டும்தான் சந்தோச ஆரவாரமும் நடைபெறுகின்றது)

இத்தகைய ஒருவரின் புதல்வாரன சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியாக வந்தால் தனது தகப்பனாரின் கொள்கைகளைத் தொடர்வேன் என்கிறார். அவர் தகப்பனாரின் எந்தக் கொள்கைகளைத் தொடரப் போகிறார் என்பது இதன் மூலம் புலனாகின்றது.

எனவே இன்றுள்ள சூழ்நிலையில் இத்தகைய ஒருவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதே மக்களுக்கும் நாட்டுக்கும் முன்னால் உள்ள அத்தியாவசிய கடமையாகும்.

இதற்கு இருக்கின்ற ஒரே வழி ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. நிறுத்தியுள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதாகும். இது மக்கள் சக்தியினாலேயே முடியும்.

யார் கண்டது? சில வேளைகளில் சஜித்துக்கு எதிரான தனது போராட்டத்தின் இரண்டாவது கட்டமாக ரணிலே உள்ளேயிருந்து கழுத்தறுப்புச் செய்து அவரைத் தோற்கடிக்கவும் கூடும்.

ஏனெனில், ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான தனது போரில் (War) ஒரு நடவடிக்கையைத்தான் (Battle) முடித்திருக்கிறார். ஆனால் போர் இன்னமும் முடியவில்லை.

‘தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழையாக அமைய வேண்டும்’ என்ற நிலையில் ரணில் எதற்கும் துணியக்கூடும்.

வானவில் இதழிலிருந்தது..

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com