Monday, May 27, 2019

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் திசைதிருப்பப்படும் சமூகமும் - வை எல் எஸ் ஹமீட்

கைதுசெய்யப்பட்ட எத்தனையோ அப்பாவிகள் விடுதலையின்றி தடுத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பெரும் வன்செயலில் ஈடுபட்ட, சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 32 பேர் இவ்வளவு வேகமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதான் இந்த நாட்டின் நிலையா? இதைப்பற்றிப்பேச நம் தலைமைத்துவங்களால் முடியாதா? “ஒரு முஸ்லிம் என்றால் எந்தக் காரணத்திற்காகவும் கைதுசெய்யமுடியும்” என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். அந்தளவு பட்டதொட்ட காரணங்களுக்காகவெல்லாம் முஸ்லீம்கள் கைதுசெய்யப்பட்டு வாடுகின்றார்கள்.

அவர்களது விடுதலைக்காக குழுபோட்டதாக சொல்லியே நாட்கள் பல தாண்டிவிட்டன. தகவல் சேகரிக்க பல நாட்கள், அதை அரசிடம் கொடுக்க அவகாசம், அதன்பின் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான கால அவகாசம்.

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை என்ன செய்தாலும் அதைப்பற்றிக்கவலையில்லை. ஆனால் ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டு, அதுவும் இந்த புனித ரமளானில் - சிறையில் முடிவு இன்றி வாடுவது அவருக்கு, அவரது குடும்பத்திற்கு எவ்வளவு வேதனையானது. இப்படி எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில், தடுப்புக்காவில் வாடுகின்றார்கள். காலம் ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஏன் இந்தத்தலைமைகளால் விரைந்து செயற்பட முடியவில்லை?

மினுவாங்கொடையில் அத்தனை சொத்தழிப்புக்கள், உயிரிழப்பு என்பவை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 32 பேர் எவ்வளவு விரைவாக விடுதலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள்தான் சந்தேகநபர்களாயின் அவர்கள்மீது ஏன் PTA, ICCPR, அவசரகாலச்சட்டம் என்பன பாயவில்லை? எவ்வாறு இவ்வளவு இலகுவாக விடுதலை செய்யப்பட்டார்கள்?

சரி, அவர்கள் உண்மையான சந்தேக நபர்கள் இல்லை, அப்பாவிகள் என்றால் இந்த அப்பாவிகளுக்காக காட்டப்பட்ட வேகம் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் அப்பாவிகளுக்காக ஏன் காட்டப்படவில்லை? எப்பொழுது உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்?

இதை ஏன் நமது அரசியல் தலைவர்கள் அரசிடம் கேட்கவில்லை? குண்டுவெடித்து ஒரு மாதமாகிவிட்டது. பிடிபட்ட அப்பாவிகளுக்கு இன்னும் விடுதலையில்லை. சுனந்த தேசப்பிரிய அவர்களே, முஸ்லிம்கள் எதற்காகவும் கைதுசெய்யப்படலாம்- அதாவது நீங்கள் சட்டப்படி கைதுசெய்யப்பப்படக்கூடிய குற்றமொன்றைச் செய்துதான் கைதுசெய்யப்பட வேண்டுமென்பதல்ல. அவ்வாறு செய்யாமலும் கைது செய்யப்படலாம்- என்று கூறுகின்ற அளவு நிலைமை இருக்கின்றது.

ஒரு பெண் அப்பாவித்தனமாக கப்பலின் சக்கரம் போடப்பட்ட ஆடையை அணிந்ததற்காக சிறையில் வாடுகின்றாள், நமது வீரத்தலைமைகளைக் காணவில்லை . ஆனால் அவர்களது 32பேர் அவ்வளவு இலகுவில் வெளியில் வந்துவிட்டார்கள்.

அன்று அளுத்கமயில், கிட்தோட்டையில், திகனயில், அம்பாறையில் அடித்தபோது இந்தத் தலைமைகள் சரியாக செயற்பட்டிருந்தால், தம் கடமையைச் செய்திருந்தால் இவர்கள் விரக்தி ஏற்பட்டு இந்த பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பார்களா? திகன தாக்குதலிற்குப்பின்தான் அதிகமானவர்கள் பயங்கரவாதி சஹ்ரானுடன் இணைந்தார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

நமது உரிமைகளைப் பாதுகாப்பதில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நமது தலைமைகள், பிரதிநிதித்துவங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் இளைஞர்கள் ஏன் விரக்தியடைகிறார்கள். நமது தலைவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்; என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்.

அன்றும் தம் கடமையைச் செய்யவில்லை; இன்றும் தம் கடமையைச் செய்யவில்லை. ஏதோ சமூகத்திற்காகப் போராடியதற்காக, பேசியதற்காக இலக்கு வைக்கப்படுகின்றோம்; என்றெல்லாம் கூறுகிறார்கள்.

அப்படிப்பேசி, போராடி சாதித்ததென்ன என்று மட்டும் சொல்கின்றார்களில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் திசைதிருப்பப்படும் சமூகமும்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு சுமார் பத்து நாட்களாகின்றன. இத்தனை நாட்களும் சமூகவலைத்தளங்களின் பெரும்பகுதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றியே இருக்கின்றது. கட்டுரை, கட்டுரைகளாக அதற்கென்று நியமிக்கப்பட்டவர் எழுதிக்குவிக்கிறார்கள். முகநூல்களும் வாட்ஸ்அப்களும் நிரம்பி வருகின்றன; தலைவர்களைக் காப்பாற்றச்சொல்லி.

சமூகத்தைக் காப்பாற்றுவது யார்? என்று தெரியாமல் சமூகம் அழுகின்றது.

பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை ஒரே இரவில் அழித்துவிட்டு சென்றுவிட்டார்கள்; என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

இன்னுயிரை கொன்றுவிட்டான்; இனவாதி என்று கண்ணீர் வடிக்கின்றார்கள் தந்தையை இழந்த தனையன்களும் குழந்தைகளும் குடும்பங்களும்.

சொத்துக்களை அழித்ததனால் இத்தப் புனித ரமளானிலே உண்ணுவதற்கு, நோன்பு பிடிக்க, துறக்க எதுவுமில்லையே! என்று ஏங்குகின்ற ஏழை மனசுகள்! ஆனால் முகநூலெல்லாம் தலமையை காப்பாற்றுங்கள் என்ற புலம்பல் ஒருபுறம், தலைமையின் வீரதீர சாகசங்கள் என்று மறுபுறம். மனச்சாட்சியே இல்லையா நமக்கு?

இந்தப்புனித ரமளானிலும் மனச்சாட்சியை அடகுவைத்து வெறும் விளம்பர அரசியல் செய்யமுற்பட்டால் இறைவனின் உதவி நம்மை எவ்வாறு வந்துசேரும்?

நம்பிக்கையில்லாப்பிரேரணை வந்தால் என்ன?

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது குற்றப்பிரேரணை அல்ல. It’s just a number game. அது ஒரு எண்ணிக்கை விளையாட்டு. அவ்வளவுதான். சட்டரீதியான விளைவு எதுவும் கிடையாது.

எதிர்க்கட்சியிடம் பிரேரணையை வெல்ல பெரும்பான்மை இருந்தால் அவர்கள் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்திருப்பார்கள்.

இது வெறுமனே ஒரு அரசியல் விளம்பரத்திற்காக கொண்டுவருகிறார்கள். பிரேரணை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் வருகின்றபோது அவர்களது குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலை வழங்க முடியும்.

அவர்கள் எதிர்க்கட்சி, எண்ணிக்கை குறைந்தவர்கள். நீங்கள் ஆளுங்கட்சி, எண்ணிக்கை கூடியவர்கள். அவர்களைவிட உங்களுக்காக பேசுவதற்கு பாராளுமன்றில் அதிகம்பேர் இருக்கிறார்கள். பிரேரணை பாராளுமன்றத்திற்கு விவாதத்துக்கு வரும்போது அதனைப் பார்த்துக்கொள்ளமுடியும்.

அதற்காக மக்களின் இன்றைய அவலநிலை மறக்கடிக்கப்பட்டு, மக்களுக்கான தீர்வுகள் பற்றிப்பேசுவதற்குப் பதிலாக இரவும் பகலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றியும் காப்பாற்றுங்கள் என்ற அவலக்குரலும் யாருக்கும் தெரியாத சாதித்த சாதனைகள் பற்றியும் எழுதி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பாதீர்கள்.

சரி, எதிர்க்கட்சி பிரேரணையில் வெற்றிபெறுகிறது; என வைத்துக் கொள்வோம். என்ன நடந்துவிடும். யாரையும் சிறைக்கு அனுப்பி விடுவார்களா? அல்லது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் நாட்டைவிட்டு துரத்திவிடுவார்களா?

மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த அமைச்சுப் பதவியைத் துறக்கவேண்டிவரும். அதுவும் சட்டப்படி கடமையில்லை. ஆனாலும் தார்மீக ரீதியில் துறக்கலாம். அவ்வளவுதான். அதற்காக இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கிவைத்து இதையே இரவு பகலாக பேசிக்கொண்டிருக்கப் போகின்றீர்களா? அந்த அமைச்சுதான் முஸ்லிம் சமூகமா?

இவ்வளவு பெரிய அவலத்தை நமது மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணயை வைத்து அதையெல்லாம் எவ்வளவு இலகுவாக மறக்கடிக்கச் செய்கிறார்கள். இதுதான் நமது பிழை.

அன்று திகன சம்பவத்தில் பாராமுகமாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க நாம் நமது அரசியல் தலைமைகளை தொடர்ந்து வற்புறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்கு முன்னாலே நமது பிரதேசங்கள் மீண்டும் எரிந்திருக்குமா?

இரண்டு வாரங்களுக்குள் திகனயை மறந்தோம். அதைவிட விரைவாக குருநாகல்லையும் மினுவாங்கொடையையும் மறப்பதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கிறது.

ஏமாந்த சமூகம்!!!.

Read more...

Sunday, May 26, 2019

பயங்கரவாதிகளையும் ஞானசார தேரரையும் ஒப்பிட முடியாது. புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது. மைத்திரி

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம்” என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுத்துள்ளார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். விடுதலையானவுடன் அவர் தனது தாயாருடன் என்னை வந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரின் தாயாரும் எனக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது பல விடயங்களை நான் தேரரிடம் கூறியுள்ளேன். பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் குற்றமிழைத்தால் அது மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகக் கருதப்படும் என்று அவரிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன்.

ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.

தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர்; சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இவர்களுக்குத் தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். அதேவேளை, இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம். ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...

திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான ஊடக செய்திகள் பற்றிய உண்மைநிலை விளக்கம்-மௌலவி சுபியான்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் மனிதர்கள் என்றவகையிலும் தமிழ் பேசும் மக்கள் என்றவையிலும் இலங்கையர் என்ற வகையிலும் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றாக எழுந்து நிற்கவேண்டும் என்றும் இதன் மூலமாக மட்டுமே இலங்கை நாட்டை அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அபிவிருத்தியும் சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்காக நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையவேண்டும் என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர் அஷ்-ஷெய்க் பி .ஏ .எஸ் சுபியான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஊடகவியலாளர் மாநாடு மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலில் சனிக்கிழமை(25) நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

நமது நாட்டை சாந்தியும் ,சமாதானமும் , அபிவிருத்தியும் , சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்புவதில் சமூகங்களுக்கிடையிலான சுமூகமான உறவு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது, என்பதை நாம் அறிவோம். ஆனால் நமது நாட்டில் சில ஊடகங்கள் தினமும் இன விரிசலையும், சமூகங்களுக்கிடையிலான இன, மத முரண்பாடுகளையும் ஊக்குவிக்கும் விதமாக மிகைப்படுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதன் மூலம் இனவாதத்தையும் ,மதவாதத்தையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பரப்புரை செய்து சமூகங்களுக்கிடையிலான இன, மத மோதல்களுக்கும் அதன் மூலம் நாட்டின் அழிவுக்கும் வித்திடுகின்றன. குறிப்பாக தென்னிலங்கை ஊடகங்கள் சில இதை தம் முதல்பெரும் கடமையாக செய்திவருகின்றன, இந்த விஷமத்தனத்தை சமூக ஆர்வலர்களும் , கல்வியாளர்களும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மறுபுறம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்களும் , தமிழ் மொழி இணைத்தளங்களும் மிகைப்படுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள்களை பயங்கரவாதத்துடன் தொடர்படுத்தி வெளியிட்டுள்ளமை எமக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நாட்டின் மற்றைய மொழி ஊடகங்களுக்கு முன்னூதாரணமாக செயல்படவேண்டிய தமிழ் மொழி ஊடகங்கள் சிலவும் இப்படியான மிகைப்படுத்தப்பட்ட .திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றமை கவலைக்கும் கண்டனத்துக்குரியதாகும்.

அண்மைக்காலமாக தமிழ் மொழி இணைத்தளங்கள் அடங்கலாக சில யாழ் ஊடகங்களில் வெளிவந்துள்ள சில உண்மைக்கு புறம்பான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு உதாரணமாக இங்கு இரு செய்திகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும், முதலில் ஒஸ்மானியா கல்லூரி வீதி / ஆசாத் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர் மற்றும் வர்த்தகரின் வீட்டில் காணப்பட்ட நிலக்கீழ் அறை தொடர்பில் கடந்த 13, 14, ஆம் திகதிகளில் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும் செய்தி மிகைப்படுத்தியும் ,திரிபுபடுத்தியும் பொய்யை கலந்தும் வெளிவந்திருந்தன.

, அப்படி வெளிவந்த ஒரு செய்தியில் '' யாழ்பாணத்துக்குள் புகுந்துள்ள ஐ.எஸ் பயங்கரவாதம் பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல்'' என்ற தலைப்பில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி வெளிவந்திருந்தது, குறித்த செய்தியில்'' பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனையின் போது அந்த சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது'' என்றும் '' குறித்த பதுங்குகுழி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடைப்படைவாத குழுவொன்றின் கோரிக்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது '' என்றும் '' வீட்டின் உரிமையாளர் தப்பியோடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் '' என்றும் ''அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு சுரங்க அறையை நிர்மாணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது '' என்றும் ''நிலக்கீழ் அறை மற்றும் சிறைச்சாலை ஒன்றை அமைக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர் எனினும் தங்களுக்கு பிடித்த முறையில் நிர்மாணித்துள்ளதாக சந்தேகநபரான வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார் '' என்றும் உண்மைக்கு புறம்பான திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இது பற்றி குறிப்பிடும் வீட்டின் உரிமையாளர் முஹம்மட் நஜாத் உண்மையில் குறித்த வீடு நாட்டின் ஏற்றப்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் வீடுகளில் இடம்பெரும் பொதுவான சோதனை நடவடிக்கையின்போது குறித்த நிலக்கீழ் அறை விசேட அதிரடிப்படையினரால் கண்டுகொள்ளப்பட்டதாகவும் குறித்த வீட்டை தான் 2014 ஆம் ஆண்டு கொள்வனவு செய்தபோது அந்த நிலக்கீழ் அறை அங்கு அமைத்திருந்தது என்றும் அந்த நிலக்கீழ் அறையை தான் நிர்மாணிக்கவில்லை என்றும் , இது நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு கருதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பில் தான் கைது செய்யப்படவும் இல்லை, தடுத்துவைத்து விசாரிக்கப்படவும் இல்லை என்றும் ஊடகங்களில் தன்னையும் தனது வீட்டையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றார்.

இதேவேளை தான் கொழும்பில் வசிக்கும் வீடு சோதனையிடப்பட்டதாகவும் அதன்போது தான் வீட்டில்தான் இருந்ததாகவும் எங்கும் தலைமறைவாகவேண்டிய தேவை தனக்கு இருக்கவில்லை என்றும் ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுடன் தனக்கும் தனது வியாபாரத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைத்துள்ளது என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் வீட்டில் அமைத்துள்ள நிலக்கீழ் அறையின் உண்மை நிலை தொடர்பில் இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இது தொடர்பில் சாதாரண வழக்கு ஒன்று இடம்பெறுவதாகவும் இது இப்படி இருக்க ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக யாழ் மாணிப்பாய் வீதியில் அமைத்துள்ள முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஷரபுல் அனானும் , அந்த மஸ்ஜித்தின் இமாமும் கைதான விடயத்தை குறிப்பிடலாம். குறித்த மஸ்ஜித்துக்கு சொந்தமான காணியில் அமைத்துள்ள வாடகைக்கு விடப்பட்ட அறைகளில் ஒன்றில் இருந்து, அதில் தங்கியிருந்த வெளியூர் வியாபாரி ஒருவர் தரமற்ற தேயிலையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஸ்ஜித்தின் இமாமும், மஸ்ஜித்தின் நிர்வாகசபை தலைவரும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது பற்றி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸார் தம்மை உடனடியாக விடுவித்தாக ஷரபுல் அனான் குறிப்பிடுகின்றார்.

ஆனால் இந்த விடயத்திலும் தமிழ் பேசும் ஊடகங்கள் உண்மையை தேடிப்பார்க்காமல் உண்மைத் தகவலை மக்களுக்கு கொண்டுசெல்லாமல் மஸ்ஜித்தின் இமாமையும் ,அதன் தலைவரையும் மையப்படுத்தி ஏதோ அவர்கள் இருவரும் வெடிகுண்டுகள் வைத்திருந்ததை போன்று பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட விடையம் போன்று செய்திகளை வெளியிட்டிருந்தன , இந்த பிரச்சினையை நோக்கும்போது மஸ்ஜித்தின் இமாமும் , மஸ்ஜித் தலைவரும் கைது செய்யப்பட்டிருக்கவேண்டியதில்லை என்பதுடன் இது முற்றிலும் குறித்த அறையில் தங்கியிருந்தவருடன் தொடர்புபட்ட சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய விடயமாகும் , இந்த விடயத்துக்கும் பயங்கரவாதத்துக்கு, மஸ்ஜித்தின் இமாமுக்கு அதன் தலைவருக்கும் இடையில் தொடர்பை காணமுடியாது ஆனால் சில ஊடகங்கள் இந்த சம்பவத்தையும் பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டதைப் போன்று செய்திகளை வெளியிட்டிருந்தன. மேலும் இது போன்ற சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டும் , திரிபுபடுத்தப்பட்டும் வெளியிடப்பட்டுள்ள என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

ஊடகங்கள் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களையவும் நாட்டில் ஒற்றுமை , அபிவிருத்தி , சுபிட்சம் ஆகிய உயர்த்த விழிமியங்கள் எட்டப்பட பங்களிப்பு வழங்கவேண்டும் என்றும் நீதியை நிலைநாட்ட உழைக்கவேண்டும் என்றும் குறிப்பாக தமிழ் மொழிமூல ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்றப்படுத்த உழைப்பது அதன் தார்மீக பொறுப்பது என்பதை நாம் நினைவுபடுத்தும் அதேவேளை ஊடகங்கள் தகவல்களை வெளியிடும்போது ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா -யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட கிளை ஊடகங்களை பொறுப்புடன் வேண்டிக்கொள்கின்றது என குறிப்பிட்டார்.

பாறுக் ஷிஹான்




Read more...

Friday, May 24, 2019

சுயபரிசோதனை- பாகம் 2 எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்? வை எல் எஸ் ஹமீட்

உலகம் உருண்டை

இருளில் நிலவாகப் பிறந்து வையகத்தை ஒளிரவைத்து விண்ணும் மண்ணும் வியந்துரைக்க வாகுடன் தௌஹீத் ஏந்தி வாழ்க்கைக்கோர் வரலாறு படைத்து சாதனைக்கோர் சரித்திரம் படைத்த சர்தார் நபி ( ஸல்) அவர்கள் மீதுகொண்ட உகப்பின் வெளிப்பாடாக அவர்களது மீலாதில் தெருக்களை கொடிகளால் அலங்கரித்ததை பித்அத், ஹறாம் என்றார்கள். இன்று அடுத்த சமய விழாவுக்கு ஜுப்பாவும் தொப்பியும் போட்டு கொடியும் கட்டி, கட்டியதற்கு ஆதாரமாக அதனை முகநூலிலும் போடும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இறைவனின் நேசர்களை அவனது அடியார்களும் நேசிப்பதில் தவறேது? அவர்களின் நினைவு தினங்களில் தம் காலச்சார முறையில் கொடியேற்றி மகிழ்ச்சி தெரிவிப்பதை ஹறாம், பித்அத் என்றார்கள். இன்று அடுத்த சமய கொடிகளை தன்வீட்டிலேயே ஏற்றும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அன்று தன் தந்தையின் விடுதலைக்காக ஆசாத்சாலியின் மகள் பதட்டத்தில் பல இடங்களுக்கும் ஓடினார். அப்பொழுது பூத்தட்டு ஏந்தவேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. எத்தனைபேர் எத்தனை பத்வாக் கொடுத்தார்கள். ஒரு பெண்பிள்ளையென்றும் பாராமல் விமர்சனக் கணைகளால் குருரமாகக் குதறினார்கள். ஆனால் இன்று ...........?

அன்று இறைத்தூதரின், இறைநேசர்களின் மேல் நமக்கிருந்த அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்காக, நமது கலாச்சாரப் பின்னணியில் நாம் செய்த சில செயல்களை மார்க்கத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எள்ளிநகையாடியவர்களை, அதே செயல்களை அடுத்த சமயத்தின் பெயரால் செய்யவைத்தானே அந்த வல்ல இறைவன்! இது நமக்கு படிப்பினைக்காக என்பதை சிந்திப்போமா? இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா?” என்று கேட்கிறானே! சிந்திப்போமா?

திருந்தமாட்டோமா?

அண்மையில் கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு சகோதரி முகத்திரை அணிந்து சென்றதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சற்று முகத்தை திறப்பதற்கு மறுத்து சிறையில் அந்த சகோதரி முகமும் மூடாமல் மஹ்றமும் இல்லாமல் வாடும் நிலைமை எவ்வளவு வேதனையானது.

அதே தினத்தில் ஒரு மௌலவியின் பயானை சமூகவலைத்தளத்தில் கேட்டேன். மௌலவியின் பெயர் தெரியவில்லை. அதில் அவர் உமர் ( ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். துருக்கித் தொப்பிக்காக நம்மவர் நடாத்திய போராட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, எது நடந்தாலும் தலையைத் திறக்கவேண்டாம், முகத்திரையைக் கழட்டவேண்டாம்... என்று மிகவும் உணர்ச்சியாகப் பேசுகின்றார். பயந்தவர்கள் எங்காவது நாட்டிற்கு சென்று வாழுங்கள். நாங்கள் இங்கு வாழுகின்றோம்; என்று கூறுகின்றார்.

இதைக் கேட்ட இன்னும் எத்தனை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தெருவால் செல்வார்களோ! அல்லது எத்தனை கணவன்மார் அப்படிச் செல்ல வற்புறுத்துவார்களோ!!

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது:

தலையை மூடுவது தொடர்பாக மார்க்கத்தில் கருத்துவேறுபாடே கிடையாது. தலையை மூடுவதற்கு சட்டரீதியான தடையும் கிடையாது.

முகமூடுதல்: பெரும்பான்மையான உலமாக்கள் முகம் மூடுவது கட்டாயம்; என்று கூறவில்லை. அது கட்டாயமாக இருந்திருந்தால் தலையைமூட முக்காட்டை அறிமுகப்படுத்திய முன்னோர் அதனையும் அறிமுகப்படுத்தியிருப்பர். ஒருவர் விரும்பி மூடுவது வேறுவிடயம்.

குறிப்பாக அண்மைக்கால கடும்போக்குவாத இஸ்லாமியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட ஆரம்பித்த பின்னர்தான் முகம் மூடுவது கட்டாயம் என்ற கருத்தும் மிகக்குறைந்த ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது.

இங்கு சிந்திக்க வேண்டியது:

(1)இந்த மௌலவி முன்னோர்களால் கட்டாயம் என்று கூடப்படாத, தற்போதும் மெரும்பான்மையான உலமாக்களால் அவ்வாறு கட்டாயம் என்று கூறப்படாத, இதுவரை காலமும் பழக்கத்தில் இருக்காத ஒரு நடைமுறை அவரது அறிவுக்கு கட்டாயமாகப்படுகிறது; என்பதற்காக அதனை அவர் மக்களிடத்தில் திணிக்கின்றார். அதாவது தனது தலைக்கு தட்டுப்படுவதெல்லாம் இஸ்லாம்; என்று நினைக்கின்றார். அதைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று திணிக்கின்றார். இதற்கு குர்ஆன், ஹதீசை பாவிக்கின்றார்.

(2)அதுவும் நாட்டுச் சட்டம் அதனைத் தடைசெய்து இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் திணிக்கின்றார்.

(3) போராடவேண்டும்; என்கின்றார். அதற்கு கடந்தகால நிகழ்வுகளை ஆதாரமாக காட்டுகின்றார்.

போராடுவதென்றால் எப்படி? அப்பாவிப் பெண்கள் சட்டத்தைமீறி முகத்தைமறைத்து சிறையில் வாடுவதன்மூலமா?

முகத்தை மூடுவது மார்க்கத்தில் கட்டாயம்; என்பது ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒரு எடுகோளுக்கு வைத்துக்கொள்வோம். எப்படிப்போராடுவது? அரசியல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகளூடாக போராட வேண்டும்; அல்லது மக்கள் நேரடியாக வெகுஜன போராட்டம் நடாத்தவேண்டும்; அல்லது நீதித்துறை ஊடாக போராட வேண்டும், அவ்வாறு ஒரு போராட்டத்தைச் செய்து அந்த உரிமையைப் பெற்றதன்பின் பெண்களை முகத்தை மூடச்சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து அப்பாவிப்பெண்களை சட்டத்தை மீறச்சொல்லி சிறையில் வாடவைப்பது போராட்டமா? அப்பெண் சிறைக்குச் சென்றால் இஸ்லாம் சொன்ன மஹ்றத்தை இந்த மௌலவி வழங்குவாரா? அப்பெண்ணிற்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருந்தால் அதற்கு இந்த மௌலவி தீர்வு தருவாரா? அல்லது அப்பெண்ணின் ஏனைய குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு இந்த மௌலவி ஆறுதல் கூறுவாரா?

சிறை சென்றதால் அப்பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைக்கு இந்த மௌலவி தீர்வு வழங்குவாரா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் என்ன காரணத்திற்காகவென்றாலும் சிறைசென்று மீண்டால் இந்த சமூகம் அவளை எப்படிப் பார்க்கும்; அவளுடைய, அவளது குழந்தைகளுடைய எதிர்காலத்தை அது எவ்வாறு பாதிக்கும்; என்பவற்றிற்கு இந்த மௌலவி பதில் கூறுவாரா?

சரி, இவரது சொல்லைக்கேட்டு சட்டத்தைமீறி முகத்திரை அணிந்ததனால் அப்பெண் சிறை சென்றுவிட்டார், போராடச்சொன்ன இவரது பங்கிற்கு இவர் செய்யப்போகும் போராட்டம் என்ன ? இவரும் ஒரு புர்க்காவை அணிந்து தெருவால் சென்று இவரது பங்கிற்கு சிறைக்குப் போவாரா?

நிர்ப்பந்தம்

முகம் மூடுவது சட்டவிரோதமாக்கப்பட்ட நிலையில் முகம் மூடத்தான் வேண்டுமென்றால்கூட மூடமுடியாத ஒரு நிர்ப்பந்தம் இருக்கின்றதா? இல்லையா? நிர்ப்பந்த சூழலில் மார்க்க சட்டம் என்ன?

செத்த பிராணியின் அல்லது பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடைசெய்த இஸ்லாம் உயிர்பிழைப்பதற்காக இக்கட்டான சூழ்நிலையில் உண்பதை ஆகுமாக்கியது மட்டுமல்லாமல் சில சூழ்நிலையில் வாஜிபாகக்கூட இஸ்லாம் கூறியிருக்கின்ற சட்டம் இந்த மௌலவிக்குத் தெரியாதா? சஜதா ஆயாக்கள் என்பது ஏன் என்பதை அறியாதவரா இந்த மௌலவி? ஏன் இந்த மௌலவி இவ்வாறான இக்கட்டான நிலையில் முகத்திரையை கழட்டவேண்டாம்; என்று பயான் பண்ணினார்?

அவர் நினைப்பது அவருக்கு மார்க்கம். போராட்டமும் தெரியாது. இவர்களும் மௌலவிகள் என்று சமூகத்தைக் குழப்பி இன்று சமூகம் அனுபவிப்பது போதாதா? எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில் வாடுகிறார்கள்! இவர்களைப் போன்றவர்களால் வந்தவினையில்லையா? சட்டத்தைமீறும்படி பெண்களுக்கு பயான் செய்யும் இவர்களைப் போன்றவர்கள் ஏதோவொரு விதத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், இல்லையா? இவர்களைப் போன்றவர்களை இவ்வாறே தொடரவிட்டு சமூகம் இவ்வாறான அழிவுகளை சந்திக்க வேண்டுமா?

ஒருவழி சிந்தனையாளர்

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். ஒரு விடயத்தை ஏதோ ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள். அந்தக் கோணத்தில் அவர்களுக்கு அது எவ்வாறு தெரிகின்றதோ அதுதான் நிஜம் என்று நம்புவார்கள்.

குருடர்கள் யானை பார்த்த கதை கேள்விப்பட்டிருப்போம். காதைத் தொட்டுப் பார்த்தவன் யானை “சுழகைப்போல” என்றான். அவன் சற்று பின்னோக்கிச் சென்று வாலையும் தொட்டுப்பார்த்திருந்தால் யானை சுழகைப்போலவா? அல்லது தும்புத் தடியைப்போலவா? ஒரே நேரத்தில் இரண்டு விதமாகவும் இருக்கமுடியாதே! அல்லது இரண்டும் இல்லாத வேறுஒரு வடிவமா? எதற்கும் நம்மைவிட யானையை சிறப்பாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுப்பார்ப்போமே என்று சிந்தித்திருப்பான்.

இவ்வாறுதான் இன்று சமூகத்தைக் குழப்பும் மார்க்க இயக்கங்களும் சில மௌலவி என்பவர்களும் இருக்கின்றார்கள். தமக்கு புரிவது அல்லது தாம் நினைப்பது மாத்திரமே சரியென நினைக்கிறார்கள். அதற்குப் பின்னால் சில ஒற்றைவழி சிந்தனையாளர்கள் செல்கின்றார்கள்.

விளைவு சமூகத்திற்குள் பிரிவுகள். பல நாட்கள் பெருநாள். ஊருக்குள், குடும்பத்திற்குள் குழப்பம். ஒரு வீட்டிற்குள் தாய் இந்த மகனுக்கு பெருநாளைக்கு ஒரு நாள் சமைக்கவேண்டும். அடுத்த மகனுக்கு பெருநாளைக்கு அடுத்த நாள் சமைக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் குழப்பி, குழப்பி இறுதியில் இன்று எங்கே நிற்கின்றோம்?

எதிர்காலம்

இப்பொழுது கூறுகின்றார்கள்.

எங்களைப்போல் வாழுங்கள்; இல்லையெனில் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.

தனியார் சட்டமெல்லாம் சரிவராது; எல்லோரும் பொதுச்சட்டத்தைப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு தனிக்கட்சி சரிவராது. தேசியக்கட்சிகளில் இணையுங்கள்.

சமூக ரீதியான பாடசாலை கூடாது. பொதுப்பாடசாலையில் படியுங்கள்; என்கிறார்கள். ஆமாம், பொதுப்பாடசாலையே சரி; என்று நம்மவர்கள் சிலரும் கூறுகின்றார்கள்.

எல்லாம் நமக்கிருந்தது. ஒரு கூட்டம் மார்க்கத்தின் பெயரால் செய்த பித்தலாட்டங்கள் எல்லாவற்றையும் இழந்த ஒரு சமூகமாக நம்மை மாற்றிவிடுமோ? என்கின்ற ஒரு அச்ச நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கின்றது. ஆனாலும் நமது சில இயக்கங்களுக்கும் சில மௌலவிகளுக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை.

பெருநாள் வந்தால் தெரியும். நம்மவர்கள் திருந்துவார்களா? என்று.

எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்?

எனவே, சமூகம் சிந்திக்கவேண்டும்.
( தொடரும்).

Read more...

அல்லாஹ் அக்பர். வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 2 ( யஹியா வாஸித் )

1983 க்கு முதல் எங்கள் கதையே வேற டைப், ஒரு குட்டி கட அல்லது மூன்டேக்கர் வயல்காணி, நாலு மாடு, பத்து ஆடு, ஒரு மீன்பிடி வல, ஒரு தோணி, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பதினாலடி பைபர் கிளாஸ் போட்டு. கொஞ்சம் டீச்சர்ஸ். இது கிழக்கில்.

வடக்கிலோ ஒரு பழைய ஓட்டை பைசிக்கிள், குட்டி குட்டி பழைய இரும்பு கடைகள், மெல்லிதா ஒரு இறைச்சிக்கடை, ரெண்டே ரெண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய தையல் மசின் கடை அத்துடன் இந்தியாவுக்கு தொண்ணூறு நிமிடத்தில் போகக்கூடிய அதிசக்தி வாய்ந்த ( 3 இஞ்சின் ) பைபர் கிளாஸ் போட்டு.

இந்தியாவின் ராஜா பீடி அதனுடன் போட்டிபோட்டுக்கொண்டு தானா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி, பழையகாட் சாறன் என யாழ்ப்பான சோனவன், வல்வட்டிதுறையானின் துணையுடன் கொண்டு வந்து அசத்துவான். யாழ்ப்பாணத்து முபீன் காக்கா எண்டா, எங்களுக்கெல்லாம் ஒரு கெத்து ஏறும். அவர் ஒரு குட்டி எம்ஜீஆர்.

ஒரு குட்டி லொறி, அம்பாசிடர் கருப்பு கார் அல்லது ஒரு மைனர் கார், கொஞ்சம் பேன்சி பொருட்கள், அந்த ஓட்டை வண்டிகளில், இந்த பேன்சி பொருட்களை ஏற்றிக்கொண்டு வடகிழக்குக்கு கொண்டுவந்து, விற்றுவிட்டு செல்பவர்கள்தான் வடகிழக்கிட்கு வெளியே உள்ள முஸ்லிகள்.

வடகிழக்கு முஸ்லிம்களுக்கும், தென்மேற்கில வசித்த முஸ்லிம்களுக்கும் இருந்த இன்னொரு தொடர்பு அரச உத்தியோகத்தர்கள், குறிப்பாக ஆசிரியர்கள். இவர்கள் அவர்களின் வீடுகளில் கூலிக்கு இருப்பதும், அவர்கள் இவர்களின் வீடுகளில் கூலிக்கு இருப்பதும், அங்கிருந்து மரக்கறி, தேன் போத்தல், இங்கிருந்து அரிசி, அவல் பார்சல் என ஒரு மெல்லிய தொடர்பு எப்போதும் இளையோடிக்கொண்டிருக்கும்.

நாங்கள் அனைவரும், இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், எங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் என அழைத்து கொள்வோம், அழைத்துக்கொண்டோம்.

இதையெல்லாம் தாண்டி இன்னும் மூன்று வகையான முஸ்லிம்கள் ஸ்ரீலங்காவின் சில பகுதிகளில் ரொம்ப கெத்தாகவும், சிங்கள அரச இயந்திரங்களுக்கு பாரிய சொத்தாகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போறா முஸ்லிம்ஸ், இவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள், கொழும்பு பிட்டகொட்டுவ மார்க்கெட்டின் அன்றாட வியாபாரத்தையும், யாழ். பெரிய ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் உள்ள அணைத்து வாசனை திரவியங்கள் ( கறுவா, ஏலம்,மிளகு,சாதிக்காய் ) இந்தியாவில் இருந்து வள்ளங்களில் போகும், வரும் சரக்குகளின் தலை விதிகளையும் இவர்களே தீர்மானித்தார்கள்.

எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள், கொழும்பு சிங்கள அரசியல் தலைவர்கள் இவர்களின் ஜோல்னா பைகளுக்குள் இருந்தார்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் எங்களை இவர்கள், அய்ந்து சல்லிக்கும் கணக்கெடுப்பதில்லை. ஆம் இவர்கள் பாணியில் சொல்வதானால், வீ ஆர் நாட் அ ப்ரோபர் முஸ்லிம்ஸ் ??????

ஜாவா முஸ்லிம், தங்கல்ல, ஹம்மான்தொட்டே, கொழும்பு ராஜகிரிய, வத்தள இதுதான் இவர்களது இருப்பிடம். கம்பீரம், நடையில் ஒரு மிடுக்கு, கூடியவரை நுனிநாக்கு ஆங்கிலம், வெஸ்ட்ரன் டைப்பில் உடை, சிங்களமும் தமிழும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்களில் தொண்ணூற்றி அயிந்து சத விகிதம்பேர் பாதுகாப்பு தரப்பில் பணி புரிவார்கள். புரிந்தார்கள், புரிகின்றார்கள்.

இவர்களுக்கும் இந்த சிறிலங்காவில் வாழும் எங்களுக்கும் எந்த தொடர்புமே கிடையாது, எங்களை இவர்கள் மனிதனாக மதிப்பதே இல்லை, அவர்கள் ஒரு தனி ரகம். இவர்களில் பலர் பயங்கர பக்திமான்கள்.

நம்ம வன்னி ராஜாக்கள் காலத்தில், பிடி பட்ட அனைவரையும் விசாரித்தது தொடக்கம், வன்னிக்காட்டுக்குள் நுழைந்து உயிர்களை பணயமாக வைத்து உளவு வேலை செய்தவர்கள் இந்த ஜாம்பவான்களே.

இந்த விபரம் தெரியாமல் நம்ம இளவல்கள், சோனவன் காட்டிக்கொடுத்துட்டான், சோனவன் வெடி வைச்சிட்டான் என சொல்லி, சாறன் விற்க போனவன், லாம்பெண்ணை விற்க போனவன், அரிசி யாவாரத்துக்கு போனவன் எல்லோரையும் போட்டு தள்ளி, நாங்க வேற நீங்க வேறடா என சொல்லாமல் சொல்லி, எங்களுக்கு லாடம் அடித்தார்கள்..

மாக்கீன் மார்க்கார், ஜாயா, நைனார் மரைக்கார், பதியுடீன் மஹ்மூத், அலவி மௌலானா குரூப். புல்லுக்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நடந்து, எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு, தங்களது புள்ள, குட்டி, குட்டிட குட்டிகளுக்கு, வெளி நாடுகளிலும், உள்நாட்டிலும் சொத்துக்கள் சேர்த்து வைத்து விட்டு, வேடிக்கை காட்டிய வள்ளல்கள்.

செல்வாக்கு மிக்கவர்கள், சொல்வாக்கு தவற மாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை நாங்கள் கிட்டதட்ட தேர்ட் கிளாஸ் பீப்பிள். ஒரு அரச உத்தியோகம் எடுப்பதற்காக தேனும், திணை மாவும் கட்டிக்கொண்டு இவர்கள தேடிச் சென்றால், வீட்டுக்கு வெளியே உட்கார வைத்து, சிங்கள மந்திரிக்கு ஒரு ரெக்கமெண்டேசன் லெட்டர் எழுதி தருவார்கள். இவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு அவ்வளவுதான்.

ஆனால், வட கிழக்கு முஸ்லிம்களுக்கும், தென் மேற்கு முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி புரையோடிப்போயிருந்தது, ஆம் அது திருமண, சம்பிரதாய சடங்குகள்.

இங்கு வடகிழக்கில், எவ்வளவுதான் இஸ்லாம் பேசினாலும், எவ்வளவுதான் அவர் உலக நாகரீகம் தெரிந்தவராக இருந்தாலும், எவ்வளவுதான் சொத்துபத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும், சீதனம், பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுவது, தாலி கட்டுவது, திருமண சடங்கை ஊரையே கூட்டி, வெடில் கொளுத்தி, ஆர்ப்பாட்டமாக செய்வது என்பது ஒரு விதியாகவே இருந்தது.

இதே சம்பிரதாயத்தை, "எங்களுக்கு ஒன்றுமே வேண்டாம், ஒங்குட புள்ளைக்கு குடுக்கிறத நீங்க குடுங்க, எங்களுக்கு ஒண்டும் வேணாம்" என்ற இந்த வார்த்தைகளை, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை, மாட்டுத்தாவணி, கல்லல், காரைக்குடி, பேராவூரணி, தூத்துக்குடி, குளிகைமாற்று பட்டினம், காயல்பட்டினம் போன்ற இடங்களில் வசிக்கும் ஹிந்து, தமிழ் மாப்பிள்ளை வீட்டார் , திருமணத்துக்கு முதல் நாட்களில் பெண் வீட்டாரிடம் உரிமையுடன் சண்டையிட்டு பெறுவதை எண்ட கண் குளிர கண்டு, காது குளிர கேட்டிருக்கின்றேன். சம்தின்க் ரோங், சம் வெயார். என யோசித்தும் இருக்கின்றேன்.

இத போய் நம்முட வாப்பா, உமாக்கிட்ட கேட்டு வேலல்ல, சாச்சியிடம்தான் போய் கேட்கலாம், அவதான் நம்முட கேர்ல் பிரெண்ட் அண்ட் வில்லி, உம்மா வாப்பாக்கிட்ட போட்டுக்கொடுக்கிரதுல கில்லி, But, still i love her, அந்த சாச்சி மட்டும் இப்ப உயிரோடு இருந்திருந்தால், நான் இப்படி ரோட்டு ரோட்டா, தெரு தெருவா, நாடு நாடா, அகதியாக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன், அவட மடியில படுத்துக்கிட்டு, அவக்கிட்ட பால் குடிச்சிக்கிட்டு, ஒரு குட்டி வாழ்க்கை வாழ்த்திருப்பேன்.

போய் கேட்டேன், வாய பொத்திக்கி இரிடா நாயே, நீயே ஒழுங்கா பள்ளிக்கு தொழப் போறேல்ல அதுக்குள்ள நியாயம் பேச வந்துட்டார், என்று சொல்லி என் வாயை ஒரே அடியாக லாக் பண்ணி விட்டார். யெஸ் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்க எனக்கு எந்த ரைட்ஸ் உம் இல்லை. கிட்டதட்ட நான் ஒரு ????

தென் மேற்கிலோ திருமண சடங்குகள் நோ சீதனம், நோ தாலி கட்டுதல், பள்ளிவாசல்களில் மகர் கொடுத்து கல்யாணம், மாப்பிள்ளைதான் எல்லாமே என்ற தோரணையில் நடந்தது, நடக்கின்றது. அயிந்து சதமும்
பெண்வீட்டாரிடம் வாங்க மாட்டார்கள்.

இது இந்த திருமண முறை எனக்கு தெரிந்த இஸ்லாத்தில் கூறப்பட்டாலும், கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம், பீமா மசூதியை அண்டிய பகுதிகள்,கொச்சின், காலிகட், கண்ணனூர் பகுதிகளில் வாழும்
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்.

என்ன கூத்திது, நாங்க முஸ்லிம்கள் என்று சொல்கின்றோம், எங்கிட பூர்வீகம் எது எண்ட ஒரு எழவும் வெளங்கிதில்ல. வந்தவன், வாறவன், போறவன் குறிப்பாக அரசியலில் வந்தவன், வாறவன், போறவன்,
திண்டவன், குடிச்சவன், (சொத்து / பேர் / புகழ் ) சேர்த்தவன் எல்லாரும், ஏய் !டேய் !! நீங்கள் இந்த நாட்டில சப்ஜெக்ட்டே கிடையாதுடா என்கின்றான்.

மகியங்கனையில இருக்கின்ற ஊரி வரியகே வன்னியா ( வேடுவர் தலைவர் ) வாயே தொறக்க காணோம்.

1983 வரை தாயும் பிள்ளையுமாக , வாயும் வயிறுமாக, தீ மிதிப்புகளும், கொடியேற்றங்களுமாக, புரியாணிகளும், வட்டிலாப்பங்களுமாக, வெசாக் கூடுகளும், கந்தூரிக்களுமாக, வாழ்ந்து, வளர்ந்து, கழித்து, மகிழ்ந்த சமூகங்கள் கிழித்தெறியப்பட்ட காகித சிதறல்கள் போல் !!!!!!!!

எல்லா, ஸ்ரீலங்கா முழுக்க உள்ள மொத்த பள்ளிவாசல் தலைமை பீடங்கள், மெளலவிக்கள், அவ்லியாக்கள், அம்பியாக்கள், ஹாபீஸ்கள், ஹஸ்ரதுக்கள், சேகுக்கள் எல்லோரிடமும் கால்ல உளுந்து, கெஞ்சி கேட்கின்றேன் ? Who am i please ?

அயிந்து நேரம் தொழுது, காலை ஏழுமணி முதல், மாலை ஆறுமணிவரை கூலிவேலை செய்து, கிடைக்கின்ற ஆயிரத்து நூறு ரூபாயில், தொள்ளாயிரம் ரூபாய்க்கு கறி புளி வாங்கிக்கொண்டு வந்து, பொண்டாட்டியை ஆக்க சொல்லிவிட்டு, ஸ்கூலுக்கு போற ரெண்டு புள்ளைகளைகளுக்கும் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு, மீதி நூறு ரூபாவை யாருமே துணையில்லாமல் இருக்கும் அடுத்த வீட்டு பெரியம்மாவுக்கு கொடுத்து விட்டு
நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கும் நான் ? யார் ? நான் ஒரு முஸ்லிமா ?

என்னை, இந்த பாவியை, உங்களது இஸ்லாம் அரவணைத்து கொள்ளுமா ?

1983 ஜூலை கலவரத்துக்கும், முந்தாநாள் 2019 ஏப்ரல் 2 1 இல் வெடித்து சிதறிய, மொத்த சோனவனின் மானம் மரியாதைக்கும், முழி முழியென முழிக்கும் நமது அரசியல் வஸ்தாதுகளுக்கும் என்ன தொடர்பு ????

( அல்ஹம்துலில்லாஹ், எண்ட அல்லாஹ் நாடினால் தொடருவேன்................ )
22-5-2019

Read more...

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றால் பயங்கரவாதச் செயல்களை செய்த பிரபாகரன் யார் ? கேட்கிறார் அதாவுல்லாஹ்

மாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.எனவே அமைச்சர் றிசாட் பதவி விலக வேண்டும். சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

இணையத்தளம் ஒன்றின் ஏற்பாட்டில் சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்' எனும் கருத்துரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பு இப்தார் நிகழ்வும் புதன் கிழமை (22) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில்

முஸ்லீம் காங்கிரஸ் நாங்கள் வளர்த்த கட்சி. அதற்காக நிறையவே தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். எங்களுடன் கூட இருந்த பல உடன்பிறப்புகளை இழந்திருக்கின்றோம். அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்த கட்சி எங்களுடையது என சொல்கின்ற போது எவரும் குறுக்கே நிற்க முடியாது. ஆனால் தற்போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் நாம் உட்பட பலரும் வெளியேற தற்போது இடம்பெறுகின்ற காரணங்களை கூற முடியும். குறிப்பாக நாட்டின் நிலைமையினை எடுத்துக்கொள்ளலாம்.

நாட்டைப்பற்றியும் சமூகத்தை பற்றியும் அன்றி முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவரது அரசியலை முன்னெடுக்கவில்லை.இந்த நாட்டை பற்றி அறிந்த அவர் முஸ்லீம் காங்கிரஸை காலப்போக்கில் அக்கட்சியை கைவிட்டு நாட்டை பற்றி சிந்தித்ததுடன் நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு புதிய கட்சி ஒன்றினை சிந்தித்தார். பல கட்சிகள் இருந்தும் கூட எல்லா மக்களும் தத்தமது பிரச்சினையை தீர்க்கக்கூடிய வகையில் ஒரு கட்சி ஒன்றினை உருவாக்கியதை நினைவூட்ட விரும்புகின்றேன். அவரது அரசியல் வாழ்வில் குறிப்பாக அவர் கூறியதாவது ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருக்கின்ற வரை அந்த பஸ்ஸில் தானும் சமூகமும் ஏறமாட்டாது என்று சொன்னார். ஏன் அதனை சொன்னார் என்றால் ரணில் விக்கிரம சிங்கவின் வெளிநாட்டு கொள்கை தான் காரணம் என கூறினார். இவரது வெளிநாட்டு கொள்கை என்பது உலக நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வது சூதுகளை செய்வது ஆயுதங்களை செய்வது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக யுத்தங்களை உருவாக்குவது மருந்துகளை விற்பனை செய்வதற்காக நோய்களை உருவாக்குதல் உள்ளிட்ட சில நாடுகளின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராக செயற்படுவது தொடர்பாகவே தலைவர் அஸ்ரப் சிந்தித்தார்.

தற்போது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர் இந்த நாட்டுக்கு தலைவர் யார் என்பதே தெரியாமலுள்ளது.நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறும் என புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாக அறிக்கை வழங்கியிருந்தும் அதுபற்றி தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி சொல்கிறார். இதே வேளை பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதில்லை என்று பிரதமர் கூறுகிறார். அதனால்தான் கேட்டேன் இந்த நாட்டுக்கு தலைவர் யார்? என்று நான் கேட்டேன். பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி இந்த நாட்டில் இருக்கத் தக்கதாக அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசி மூலம் பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசினாரே அதற்குரிய நியாயம் என்ன என்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் கேட்டேன். நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்பு தொடர்புபட்டிருக்கிறது என்றவுடனேயே இதனை அமெரிக்காதான் செய்தது என்பது புரிகிறது. அதற்கு இந்தியாவும் துணை போகிறது.அந்தத் தாக்குதலுக்கு அரை வேக்காட்டுத்தனமான சஹ்ரான் போன்றோர் காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான பயங்கரவாதச் செயல்களுக்கு சிங்களவர்கள் தமிழர்கள் என்று பலரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று தற் போது ஐ.எஸ் அமைப்பு என்கிற பெயரில் இரண்டு மூன்று நாடுகள் நமது நாட்டை ஆக்கிரமிக்கப் போகிறது என்று அந்த அனைத்துத் தலைவர்கள் கூட்டத்தில் நான் கூறிய போதிலும் அதை புரிந்து கொள்ளாமல் சஹ்ரானைப் பற்றியும் இப்றாகிம் ஹாஜியாரைப்பற்றியும் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டேன்.மாகந்துர மதுஷ் என்பவர் முஸ்லிமா? இல்லையே. அவர் செய்த அநியாயத்துக்காக அவர் பௌத்தர்தான் என்பதற்காக யாரும் விகாரைகளை உடைத்தோமா? இல்லையே. மதுஷ் என்பவர் தேவைப்பட்டவரைக் கொல்லலாம் வேண்டிய இடங்களுக்கு போதைப் பொருள் கடத்தலாம். ஆனால் அதுபற்றி கேட்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய நிலையை வைத்து முஸ்லிம்களைப் பார்த்து தமிழர்களும் பயங்கரவாதிகள் என்கின்றனர். பயங்கரவாதச் செயல்களைப் பிரபாகரன் செய்யவில்லையா? யார் செய்தாலும் பிழைதான்.கேவலமான மனிதாபிமனாத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளை பிரபாகரன் செய்தார். குழந்தைகள் கர்ப்பிணிகள் தொழுது கொண்டிருந்தவர்கள் என்று கொன்று குவித்தார். அப்போது நாங்கள் சொன்னோம். இது நீதியற்றது இந்தப் போராட்டம் வெற்றி பெறாது சண்டியனின் வாழ்வு சந்தியிலேதான் முடியும் என்றோம். அதுவே நடந்தது.மனிதனை இப்படிக் கொன்று குவிக்குமாறு இந்து சமயத்தில் இஸ்லாத்தில் பௌத்தத்தில் சொல்லப்பட்டுள்ளதா? இல்லை.இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள்.இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள்.

இந்த அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்கவே உள்ளவர்கள் பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்க்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். எப்படி என்றால் பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகனஇ அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்துஇஅங்கு தொழுத மக்களை கஷ்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்து கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன். இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும் ? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். திகன கலவரத்தை பொலிஸ் திணைக்களத்தை கொண்டு நடத்திய கயவர்கள் நீங்கள் என தெரிவித்தேன்.இங்கு முட்டாள்கள் போன்று ஹக்கீம் போன்றோர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போகி இருக்கிறார்கள். மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு,கடத்தல்,மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும், வியாபாரம் செய்வதற்க்குமான அமைச்சு. கடந்த காலத்தில் அவருடைய அமைச்சின் பிரிவு ஒன்றில் போதைவஸ்து கடத்தல் இடம்பெற்றது. அப்போது நான் அவரிடம் இந்த அமைச்சை ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறாய், உன் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகளில் பாரிய பின்னடைவு இருக்கிறது அதனை நிவர்த்தி செய்யும் அமைச்சை ஏன் பெறவில்லை. அதனால் தான் உன்னை கடத்தல்காரன் என அடையாளப்படுத்துகிறார்கள் என்றேன். இப்போது அவரை கூடவே பயங்கரவாதி என்கிறார்கள்.அத்தனை குண்டுதாரிகளும் உன்னுள்ளையே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போன்று பயங்கரவாதியாக நீ இருந்துவிட கூடாது உன்னை பாதுகாக்க வேண்டும். ஆனால் செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒழிந்துகொள்ள முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த வேண்டாம் பாராளுமன்றத்தில் றிஸாத்தின் கட்சிக்காரர்கள் கூறுகின்றார்கள் முஸ்லிம் சமுகத்துக்கு குரல்கொடுப்பதால் தான் இவ்வளவு சிக்கல் என்கிறார்கள்.

அதற்க்கு சிங்கள எம்.பி சொல்கிறார் எத்தனையோ முஸ்லிம் எம்பிக்கள் இருக்கிறார்கள் அவர்களை நாங்கள் சொல்கிறோமா இல்லையே என்கிறார். பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டியதாக சொல்வது போன்றே இருக்கிறது இவர்களின் கதை. அமைச்சுப்பதவிக்கு பின்னால் கட்டுப்பட்டுக்கொண்டு முஸ்லிங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். முஸ்லிங்களாகிய நாங்கள் சொல்ல வேண்டும் இந்த அமைச்சு பதவியை தூக்கி வீசு என்று. இந்த அமைச்சினால் இப்ராஹிம் ஹாஜிக்கு பித்தளை கொடுத்த கதையும் வருகிறது. நாட்டுக்கும் அதேபோல முஸ்லிங்கள் யாருக்கும் இந்த அமைச்சினால் நன்மையில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக இராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும். அஸ்ரபிற்க்கு பின்னர் இவர்தான் மற்றைய அஸ்ரப் ஆக சில முகப்புத்தகங்களில் பிரச்சாரம் வேறு. எனவே ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு செய்த அநியாயங்கள் அவர்களுக்கே இப்போது திரும்பி வந்துள்ளது. ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.

பாறுக் ஷிஹான்.





Read more...

Tuesday, May 21, 2019

நீர்கொழும்பிலிருந்து விரட்டப்பட்ட வெளிநாட்டு அகதிகளை வவுனியாவிலிருந்தும் விரட்டக்கோரும் தேரர்கள்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600 இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானகத்தில் தங்களை பதிவு செய்துள்ள அவர்கள் நீர்கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றினர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட அவர்கள் அங்கிருந்த பொது இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

அந்த நபர்கள் அவ்வாறு பொது இடங்களில் தங்கவைக்கப்படுவதற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் 35 வெளிநாட்டு அகதிகள்; குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அவர்களை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,

இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐஎஸ் மற்றும் தௌபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சனை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.

இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச்செயற்பாடானது முற்றிலும் மனித உரிமைகளை மீறுகின்ற மிலேச்சத்தனமாகும். குறித்த நபர்கள் பயங்கரவாதிகளாக இருந்தால் அவர்களை கண்காணிப்பதற்கும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பதற்கும் இலங்கையில் போதியளவு பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கான வளங்களும் உண்டு. அவ்வாறானவர்களை அவர்களின் செயற்பாடுகளை கண்டறிவது படையினரின் கடமையாகும். மாறாக தஞ்சம் கோரி வந்தவனை விரட்டியடிப்பது, ஒட்டுமொத்த இலங்கையையும் உலக அரங்கில் நிர்வாணமாக்கும் என்பதை குறிப்பிட்டேயாகவேண்டும்.

Read more...

பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை, ஆனால் புலனாய்வு சேவை தொடரும். இலங்கை விடயத்தில் சீனா உறுதி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்தார். அதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் கைச்சாந்தானது. இவ்வொப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்குள் ஊடகங்களில் வெளிவந்தன.

இக்கருத்துக்கள் தொடர்பாக கருத்துரைத்துள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது:

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் தொடர்ந்து தெரிவிக்கையில், கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள் இரகசியமாக மூடி மறைக்கப்படவில்லை. சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கை நிலையானது. அதே கொள்கைளைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.

இந்த பாதுகாப்பு உடன்பாடுகளின் அடிப்படையில் சிறிலங்காவில் சீனா தனது புலனாய்வு சேவைகளை நிறுத்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.


'சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, நீதியமைச்சர்தலதா அத்துகோரள, அமைச்சர் தயா கமகே ஆகியோர் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.



Read more...

சஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளின் மூலம் அவர்கள் யாவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை அவர் ஊடகங்களுக்கு அறிவிக்கையில் :

கொழும்பு சின்னமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் எனவும், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் அஹமட் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இப்ராஹிம் என்பவரின் மகன்மார்களாவர்.

இவர்கள் இருவருடைய மரபணு மாதிரிகளும் இப்ராஹிம் என்பவரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது அச்சி மொஹமது மொஹமது அஸ்துன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தற்கொலைக் குண்டுதாரியின் பெற்றோர்களின் குருதி மாதிரிகளைப் பெற்று மரபணு சோதனை நடத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த அலாவுதீன் அஹமட் முவாதினின் மரபணுவும் அவருடைய பெற்றோர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.

இதேவேளை, தெஹிவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அப்துல் லதீப் ஜமில் மொஹமட் என்பவருடைய மரபணு சோதனை அவரின் பிள்ளையின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவரே மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது அவரின் தாயாரின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பது அவருடைய மனைவி மற்றும் பிள்ளையின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தெமட்டகொட பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்த பெண், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் என்பவரின் மனைவி மொஹமட் பாத்திமா ஜிப்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெமட்டகொட வீட்டில் தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த மூன்று பிள்ளைகளும் இவர்களுடையவை என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் அவருடைய பிள்ளையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட குருதி மாதிரிகளூடாக மரபணு சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.


Read more...

Monday, May 20, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்

நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.
ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம்.

ஆம், ஏப்ரல் 2 1 - 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம். எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம்.

எமக்கு கால்கள் இருக்கின்றது அவைகளால் நடக்க முடியல, எமது வாய்கள் நன்றாகவே இருக்கின்றது ஆனால் பேச முடியல, கண்கள் ரொம்பவும் ஹெல்த்தியாகத்தான் இருக்கின்றது, ஹ்ம் கண்களை திறந்து பார்க்க முடியல. காதுகள் நன்றாகவே கேட்கின்றது ஆனால் அந்த காதுகளுக்குள் யாரோ ஒரு பத்தாயிரம் பேர் வந்து இரும்பை காய்ச்சி ஊற்றிக்கொண்டே இருப்பது போல் இருக்கின்றது.

நாடி நாளங்கள் அனைத்துமே ஓடிக்கொண்டிருக்கின்றது ஆனால் ...ஆனால் அந்த இதயம் இருக்கும் இடத்தில ஒரு பாரிய பாறாங்கல் வந்து தடார் தடார் என முட்டி மோதிக்கொண்டிருக்கின்றது.

யா அல்லாஹ், யார் நாங்கள் ..???? நாங்கள் யார்....???? நாங்கள் இந்த சிறிலங்காவிற்கு ஏன் வந்தோம், எதற்காக வந்தோம்.

என்னை பெத்த வாப்பா சொன்னார், மகனே அய்ந்து நேரம் தொழனும், ஹெல்தியா இருந்தா நோன்பு புடிக்கொனும், கொஞ்சம் வெல்த்தியா இருந்தா மக்காஹ் போகணும், மிஞ்சிப்போனா, ஒனக்கு மிஞ்சிப்போனா தர்மம் கொடுக்கோணும், மொத்ததில கலிமா சொல்லோனும் அதுதான் உனது கவசம். கலிமாதான் உனது கவசம்.

அதைதானே செய்தேன், செய்தோம் !!!!!! ?????
எங்கே பிடித்தது சனியன்,
எப்படி பிடித்தது முசிபது
எவ்வாறு வந்தது பலாய்
எங்கே ஆரம்பித்தது சைய்தானியம் ????
ஆம் சனியனும், சங்கடங்களும் சந்தோசமாகவே வந்தன.

கிளீன் சேவுடன், ஒரு குட்டி வெள்ளை தொப்பி போட்டுக் கொண்டு, பள்ளிக்கு தொழப் போன எண்ட காக்கா, மெதுவாக ஒரு குட்டி தாடி வைக்க தொடங்கினார். எண்ட காக்காவுக்கு அது அழகாகவே இருந்தது.
ரொம்ப கம்பீரமாகவும் இருந்தது. நாள் போகப் போக, காக்காவின் தாடி நீண்டது, அத்துடன் காக்காவின் நடவடிக்கைகளும் எங்களை மிரள வைத்தது. கிட்டதட்ட நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்றார்,
தூக்கிவாரி போட்டது.

அப்படியானால் நாங்கள் யார் ???? நான் யார் ??? தமிழ் மக்கள் சொல்கின்றார்கள் நீங்களும் தமிழர்களே. நீங்கள் முஸ்லிம்களே அல்ல என்கின்றனர். சிங்கள மக்களோ, உங்களுக்கு நாடே கிடையாது, நீங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள், ஓடிடுங்கோ என்கின்றனர், எண்ட சொந்த காக்கா சொல்கின்றார் நீ எல்லாம் முஸ்லீமே கிடையாதுடா போடா என்று !!!!! Pleas who am i ?

அவரது உடையும் மாறியது, ஜுப்பாக்களும், விசுவாக்குச்சிகளும் வீட்டுக்குள் குடி வந்தன, நன்றாக எங்களது சில்லறை கடையை நடத்திக்கொண்டு வந்த எங்கள் மூத்த காக்கா, மூன்று நாள், ஏழு நாள், நாற்பது நாள் என்று திடீர் திடீர் என்று மறைந்து மார்க்கப் பணி செய்து கொண்டிருந்தார். நாங்கள் இங்கு சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருந்தோம்.

பதினோரு பிள்ளைகளை பெற்ற வாப்பா தடுமாறினார், உம்மா வெம்பி வெடித்தார், நான் காக்காவை தேடி பள்ளி பள்ளியாக அலைந்தேன், எனக்கு என்ர காக்காவ நன்றாகவே பிடிக்கும், காக்கா அங்கு பள்ளிகளில் கிடாரங்களில் சோறு சமைத்து உண்டு கொண்டிருந்தார். எனக்கு அந்த மாட்டிறைச்சி வாசனை மூக்கை தட்டியது, அதை தட்டி கேள் என ம(ன)ணம் சொன்னது. ஆனால் I am not a muslim ?

காலி, பேருவளை மதரசாக்களில் படித்து, இஸ்லாத்தை கரைத்து குடித்து, அதில் புலமை பெற்று இந்தியாவுக்கு மொளலவி பட்டம் பெறப்போன எங்க அடுத்த ஊர் காசிம் காக்காட மகன், பள்ளிகளில் அழகாக கொத்பா பிரசங்கம் செய்வதாகவும், இது அங்குள்ள பழைய மொளலவிமாருக்கு புடிக்காததால் அவர பள்ளிகளுக்குள் எடுப்பதில்லை என தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஊருக்குள் புசு புசு என பேசிக்கொண்டார்கள்.

ஒரு ஆறுமாதம் போயிருக்கும், ஊருக்கு நடுவில், வாட்டசாட்டமான ஒரு இடத்தில் தாஜ் மஹால் கணக்காக ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டது. பணம் எங்கிருந்து வருகின்றது, ஏன் இதை இந்த சிங்கள தேசத்தில்
கட்டுகின்றார்கள், இந்த பள்ளி வாசலை சுற்றி மூவாயிரத்துக்கு மேற்பட்ட முப்பத்தி ஐந்து வயதை தாண்டிய, திருமண வயதை தாண்டிய ஏழை பெண்பிள்ளைகள் இருக்கின்றார்களே என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை. கேட்க எனக்கும் நாதியில்லை, Yes i am not a muslim.

ஒரு சில வருடங்களுக்கு அப்புறம் சகோதரியின் வீட்டுக்கு போகின்றேன், அன்று மகரிபுக்கு பாங்கு சொல்கின்றது, பள்ளிக்கு போக தயாராகின்றேன், எனது மச்சான் அவசர அவசரமாக பள்ளிக்கு போக தயாராகின்றார், மச்சான் பொறுங்க நானும் வாறன் என்கின்றேன், இல்ல நீங்க போங்க, நான் மற்ற பள்ளிக்கு போகின்றேன் என்கின்றார் ? ஆம் புதிதாக கட்டிய பள்ளிக்கு ??????

பழைய பள்ளியில் தொழ வைக்கின்ற முறை இஸ்லாத்துக்கு புறம்பானதாம், இஸ்லாத்தில் அப்படி ஒரு தொழுகை முறை இல்லையாம். எண்ட மச்சானும் என்னை தூக்கி வீசி விட்டார். யெஸ் ஐயாம் நாட் அ ஜெனுவின் முஸ்லிம்.

திடீரென ஒருநாள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பரகஹாதெனியாவில் முஸ்லிம்களுக்கிடையில் மோதலாம், இரண்டு பள்ளிவாசல் தர்மகர்தாக்களுக்கிடையில் அடிபிடியாம் என்று செய்திகள் வந்தன.
இதை பார்த்துவிட்டு எனது தமிழ் நண்பர்கள் " நாங்கள் ஜாதி சண்டை புடிப்பதாக பெரிதாக அலட்டுவாயே இது என்ன சண்டை மச்சான்" என்றனர். அதன் பின்னர்தான் தெரியும் ஏற்கனவே அங்கேயும் ஒரிஜினல் முஸ்லீம்கள் பிறந்து விட்டனர் என்ற சங்கதி.

1982 க்கு பின் இவ்வாறு ஆயிரம் பள்ளிகள் முளைத்தன, வளர்ந்தன, வேர் விட்டு பரவின. அதிசயம் என்னவென்றால் வட கிழக்குக்கு வெளியே தென்மேற்கில், முழுக்க முழுக்க சிங்கள, தமிழ் மக்கள் 95 வீதம் வாழும் பிரதேசங்களில் 3 ஸ்டார், 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்கள் கட்டுவது போல் பள்ளிவாசல்களை பிரதான வீதி ஓரங்களில் கட்டித் தள்ளினார்கள்.

ஆம், நாங்கள் பெரிய ஆக்கள், எங்கள் அல்லாஹ் ரொம்ப பெரியவன், எங்களை ஆட்டவே முடியாது என்ற கணக்காக பள்ளிகளையும், வீடுகளையும், பங்களாக்களையும் கட்டி கொண்டாடினர். ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையின் பின்னும், பள்ளிக்கு வெளியே கைக் குழந்தைகளுடனும், சோத்துக்கு வழியில்லாமலும் நின்ற நூற்றுக்கணக்கான் அந்த தாய்மார்களை , அந்த பள்ளி வாசல்களுக்குள் அழைத்து இந்த உத்தமர்கள் இதுவரை, பசியாற்றவே இல்லை. இவை ஏதும் தமிழர் தரப்பாலோ, சிங்கள அரசாலோ கண்டு கொள்ளப்படவுமில்லை. கணக்கில் எடுக்கப்படவும் இல்லை.

முழுக்க ஆயுத மோகம் கொண்ட தமிழர் தரப்பு இவர்களை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டி கொண்டிருந்தது. சிங்கள தரப்போ, தூத்துக்குடி, நாகர் கோயில் , கல்லல், காரைக்கால், திருப்பரங்குன்றம், கொச்சின் , காலிக்கட், கண்ணனூர் போன்ற இடங்களில் இருந்து வந்த இந்த வியாபாரிகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று நன்றாகவே கணக்கு போட்டு கொண்டது. வியாபாரமும் நன்றாகவே நடந்தது.

2 1 ஏப்ரல் 2 0 1 9 பிறக்கும் வரை ............( தொடரும் ).

Read more...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா? சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்ரி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வுக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஞானசார தேரரை சந்தித்திருந்தார். சுpறைச்சாலை அத்தியட்சகரின் அiறியில் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினர்.

இதன்போது நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார். அவ்வாறு சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.

சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

இவ்வாறு ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என தான் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா தொலைகாட்சி நேரடி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருகின்றது ஜேவிபி!

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முற்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுத்துநிறுத்தத் தவறிய ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்றது.

இந்தப் பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனப் புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர். வெளிநாட்டு அமைப்புகளாலும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கை இந்த அரசால் எடுக்கப்படவில்லை.

அதேபோல் இம்மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசின் நிர்வாகப் பொறிமுறையும் தோல்வி கண்டுள்ளது என்பது உறுதியாகிவிட்டது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது.

எனவே, இந்த நாட்டை ஆள்வதற்கான தார்மீக உரிமையை, தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது. எனவே, அரசை விரட்டியடிப்பதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளோம். அது நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படும். இதற்கு ஆதரவு வழங்குமாறு நாம் அனைத்துக் கட்சிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றவாளியெனில் அவர் தண்டிக்கப்படவேண்டும். இராணுவத் தளபதிக்கு அவர் அழுத்தம் கொடுத்திருந்தால் கைதுசெய்யப்பட வேண்டும். பயங்கரவாதிகளையும், கொலையாளிகளையும் பாதுகாக்கும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் கொள்கை ரீதியிலேயே அரசியல் நடத்தி வருகின்றோம். கொள்ளையடித்து நாம் அரசியல் நடத்தவில்லை” – என்றார்.

Read more...

சுயபரிசோதனை- பாகம்-1 வை எல் எஸ் ஹமீட்

அது ஒரு ரம்மியமான காலம். நமக்கென்று தனியான இஸ்லாமிய கலாச்சாரம். இஸ்லாமிய இலக்கியம். இஸ்லாமியக் கலை. பொல்லடி, கிராமியக்கவி, குரவை, ஆராத்தியெடுத்தல்....அப்பப்பா, எத்தனையோ கலை அம்சங்கள்.

மீலாதென்றால் ஊரெல்லாம் களைகட்டும். ஒரு கந்தூரி என்றால் அந்த நார்சாவிற்காக அந்த ஊரே அன்று எதிர்பார்ப்புடன் இருக்கும். திருமண நிகழ்வுகள் கலாச்சார பாரம்பரியங்களால் கலகலக்கும். நினைக்கும்போதே இனிமையாக இருக்கிறது. அந்தக்காலத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க முடியாதா? என்ற ஏக்கம் பிறக்கிறது.

மார்க்கம் என்பது வேறு. கலாச்சாரம் என்பது வேறு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை கலாச்சாரம் மார்கத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மார்க்கம் ஒன்றுதான். ஆனால் மாறுபட்ட கலாச்சாரம் உண்டு. இலங்கையில் நம் தாய்வழி பெரும்பாலும் தமிழ்ப்பரம்பரை. சில இடங்களில் சிங்களப் பரம்பரை.

நமது கலாச்சாரம் தமிழ்த்தாய் வழியின் கலாச்சாரத்தை ஒட்டியது. நமது தந்தைமார் இஸ்லாத்திற்கு நேரடியாக முரணில்லாத தமிழ்ப்பண்பாட்டுக் கலாச்சார மரபுகளைத் தடுக்கவில்லை. அதனால்தான் இன்றும் தாலி கட்டும் மரபு இருக்கின்றது.

சில மரபுகள் வழக்கொழிந்துவிட்டன. உதாரணம் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண் வீட்டிற்கு சென்று மணப்பெண்ணுக்கு மருதாணி இடல். இதில் மார்க்க முரண் ஏதுமில்லை.

இவ்வாறு தமிழ்க்கலாச்சாரப் பின்னணியில் சில இஸ்லாமிய நடைமுறைகளும் இணைந்து நமக்கென்று தனித்துவமான இஸ்லாமிய கலாச்சார நடைமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் வழக்கிலிருந்தது.

அடுத்த சமூகங்கள் நமது கலாச்சாரத்தை மதித்தார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது கொண்டாட்டங்களில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

திசை மாறியது


நவீன கொள்கைகளுடன் குர்ஆன், ஹதீஸ்களுக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டுவந்த வியாக்கியானங்கள், தொகுக்கப்பட்ட சட்டங்கள் தூக்கிவீசப்பட்டு எப்பொழுது புதிய வியாக்கியானங்கள், சட்டங்களுடன் இயக்கங்கள் உருவாகினவோ அப்பொழுதே அனைத்தும் திசைமாற ஆரம்பித்துவிட்டன.

அதுவரை இஸ்லாமாக அல்லது கலாச்சாரமாக இருந்தவையெல்லாம் சிர்க்குகளாகவும் பித்அத்களாகவும் மாறின. அப்போதெல்லாம் ரமளான் வந்துவிட்டால் காலையில் ஆண்கள் தொழிலுக்கு செல்ல, மத்தியானம் சமையல் வேலையும் இல்லாமல் ஓய்வாக இருக்கும் பெண்மணிகளுக்காக காலையில் பயான்கள் பள்ளிவாசல்களில்இடம்பெறும். சில இடங்களில் வெட்டை வளவுகளில் கொட்டில் கட்டி பயான் நடைபெறும்.

பயான் ஆரம்பமாகமுதல் சிறுவர்கள் பைத்துப் படிப்பார்கள். அதேபோல் தறாவீஹிற்கு முன்னும் பைத்துப் படிப்பார்கள். இனிமையான நாட்கள். அவைகளெல்லாம் ஒழிந்தோடின.

அக்காலத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியில்லை. எல்லோருடைய வீடுகளிலும் வானொலிப் பெட்டிகளும் இல்லை. ‘அலாம்’ மணிக்கூடுமில்லை. பல இடங்களில் மணிக்கூடே இல்லை. சஹருக்கு மக்களை எழுப்புவதற்கு பக்கீர் பாவா மார்கள் றபான் அடிப்பார்கள். இனிமையான நாட்கள். அதில் என்ன தவறு கண்டார்களோ? ராப்பிச்சைக்காரன் என்றார்கள். எப்படியெல்லாமோ கேவலப்படுத்தினார்கள். அவையெல்லாம் இன்று வழக்கொழிந்துவிட்டன.

புதிய கலாச்சாரம்

இயக்கங்கள் தொழுகைக்கு அழைப்போம்; என்றார்கள். நல்லதுதானே என மக்களும் நினைத்தார்கள். அவர்கள் படிப்படியாக பள்ளிவாசல்களைப் பிடித்தார்கள். பள்ளிவாசல்களைப் பிடிக்கும்வரை மௌலிது ஓதும் பள்ளிகளில் மௌலிதுக்கு ஒத்துழைப்பார்கள். கந்தூரி கொடுக்கும் பள்ளிகளில் கந்தூரிக்கும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பள்ளிகளைப் பிடித்ததும் அவற்றை மெதுமெதுவாக நிறுத்துவார்கள். அவ்வாறு ஒரு ராஜதந்திரம்.

பள்ளிகளை lodges ஆக மாற்றினார்கள். சமைத்தார்கள். உண்டார்கள். தங்கினார்கள். காலையிலும் மாலையிலும் கஸ்துபோனார்கள். அவையெல்லாம் பரவாயில்லை. தோப்பு, ஜுப்பா என்று ஆண்களுக்கும் கறுத்த ஹபாயா, முகத்திரை என்று பெண்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அந்நியவர்க்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கே அவை புதிதாகத்தான் இருந்தன.

பொதுவாக உலமாக்களை ஹஸ்ரத் என்று மரியாதையாக அழைப்பதுண்டு. இப்பொழுது யார் உலமா? யார் உலமா இல்லை; என்று தெரியாது. சில நேரங்களில் தோப்புப்போட்ட பாமரனையும் ஹஸ்ரத் என்று அழைக்கின்ற நிலை.

காலப்போக்கில் இந்த ஆடைகள் கணிசமான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வரித்துக்கொண்ட புதிய கலாச்சார ஆடையாக மாறத்தொடங்கியது. அந்நியவர்கள் சந்தேகப்பார்வை பார்க்கத் தொடங்கினார்கள். இது இலங்கையா? அரேபியாவா? இது என்ன புதிய ஆடைக் கலாச்சாரம்; என்று. ஆனாலும் அவர்களின் உணர்வை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம்களையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கடும்போக்குவாதம்

எது எவ்வாறிருந்தபோதிலும் மேற்சொன்ன தரப்பினர் ஒரு மிதவாதப்போக்கைக் கைக்கொண்டனர். யாருடனும் முட்டிமோதிக்கொள்வதில்லை. ஆனால் கடும்போக்குவாத இயக்கங்களின் தோற்றம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பட்டது, தொட்டதெல்லாம் சிர்க், பித்அத் என்று பட்டம் சூட்டுவதில் கில்லாடியாக இருந்தார்கள்.

அவர்கள் மாத்திரம்தான் இஸ்லாத்தை அறிந்தவர்கள்; என்கின்ற ஒரு உணர்வு அவர்களுக்கு. இப்பொழுதுகூட முகநூலில் அவர்களுக்கு மாறாக எழுதுகின்றவர்களை “ நீங்கள் இஸ்லாத்தைப் படியுங்கள், உங்களுக்கு இஸ்லாம் தெரியாது’ என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

அவர்களின் இஸ்லாத்தைப் படிக்கவேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. அல்லாஹ், அவனது திருத்தூதர் ( ஸல்) அவர்கள் மூலமாக இறக்கிவைத்த இஸ்லாத்தைத்தான் படிக்கவேண்டும்; இவர்கள் கூறுகின்ற அல்லது புரிந்துவைத்திருக்கின்ற இஸ்லாத்தையல்ல; என்பது அவர்களுக்குப் புரியாது.

அவர்கள் அவர்களது தலைக்குத் தட்டுப்படுவதையெல்லாம் வியாக்கினமாக கூறுவதை ஏற்கவேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. மாறாக, பலநூறு ஆண்டுகளாக இமாம்கள், உலமாக்கள் கொடுத்துவந்த வியாக்கியானங்களின்படி நடப்பதுவே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது; என்பதை உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இல்லை.

இவர்களைப் பின்பற்றுவோர் குர்ஆன், ஹதீசைப் பின்பற்றுகின்றோம் என்று எண்ணிக்கொண்டு இந்த இயக்கங்கள் அல்லது சில தனிப்பட்ட மௌலவிகள் குர்ஆன், ஹதீசின் பெயரால் கூறுவதையெல்லாம் இஸ்லாமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் சத்தியத்தை எவ்வாறு புரிவார்கள். தான் பின்பற்றும் மௌலவி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்ந ஒரு ஹதீசை மறுத்தாற்கூட அது சரியென ஏற்றுக்கொள்ளும் இவர்கள் தங்களுக்குத்தான் மார்க்கம் தெரியும்; என நினைத்தால் அந்த மார்க்கத்தை முஸ்லிம்கள் எதற்காக தெரிந்துகொள்ள வேண்டும்?

ஒரு முஸ்லிம் எப்பொழுது குர்ஆன், ஹதீசிற்கு காலங்காலமாக இமாம்கள், உலமாக்கள் கொடுத்துவந்த ஏகோபித்த வியாக்கியானங்களை தூக்கிவீசிவிட்டு இந்த இயக்கங்கள் அல்லது தனிப்பட்ட சில மௌலவிக்கள் கொடுக்கும் வியாக்கியானத்தை உண்மையென்று நம்ப ஆரம்பிக்கின்றானோ அந்தக்கணமே அவன் குர்ஆன், ஹதீசின் உண்மையான பொருள்கோடலில் இருந்து தூரமாகிவிட்டான்.

சுருங்கக்கூறின் குர்ஆன், ஹதீசுடன் இருப்பதாக எண்ணிக்கொண்டு குர்ஆன், ஹதீஸை விட்டுத் தூரமாகிவிட்டான். இப்பொழுது அவனை அதே குர்ஆன், ஹதீசின் பெயரைக் கூறி பயங்கரவாதியாக மாற்றுவது கடினமல்ல.

குர்ஆன், ஹதீசிற்கு வெளியே, குர்ஆன், ஹதீசின் பெயரால் வழிகேட்டில் இருப்பவர்களை இன்னுமொரு வழிகேட்டிற்கு திருப்புவது கடினமல்ல. குர்ஆனைக்கொண்டு நல்வழி பெறுபவர்களும் உண்டு, வழிகெட்டுப் போகின்றவர்களும் உண்டு; என்று குர்ஆன் கூறுவது இவர்களைத்தானோ என்னவோ!

மட்டுமல்லாம் மார்க்கத்தைப் பேசுவார்கள், அது அவர்களின் தொண்டைக்குழியைத் தாண்டாது; என்றதும் இவர்களைத்தானோ தெரியவில்லை.

இவர்கள் ஊருக்கு ஊர் பள்ளி கட்டத்தொடங்கினார்கள். ஒரு ஊருக்குள் பல ஜும்ஆக்களை உருவாக்கினார்கள். ஒரு ஊரில் இரண்டு ஜும்ஆ நடந்தால் முதல் நடக்கின்ற ஜும்ஆதான் செல்லுபடியாகும்; என்பது கற்றறிந்த உலமாக்களின் அபிப்பிராயம். இவர்களுக்கு அது எதைப்பற்றியும் கவலையில்லை.

அந்நியவர்கள் பார்த்தார்கள், ஒரு புறம் நாளுக்கு நாள் பள்ளிவாசல்கள் முளைக்கின்றன; மறுபுறம் இலங்கை முஸ்லிம்களெல்லாம் அரேபிய முஸ்லிம்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்; இந்த பௌத்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கிவிடுவார்களோ! என்ற ஓர் அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டது.

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. தமிழர்கள் நாட்டின் ஒரு பகுதியைத்தான் தனிநாடாக கேட்டார்கள். முஸ்லிம்கள் மொத்த நாட்டையையுமே ஒரு இஸ்லாமிய நாடாக்கிவிடமுன் யுத்த வெற்றியோடு இவர்களையும் ஒரு கை பார்த்துவிடவேண்டுமென்ற உணர்வு அவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்பட்டது.

சுதந்திர இலங்கையின் தொடர் அரசியலே இனவாதத்தின்மேல் கட்டியெழுப்பப்பட்டதுதான் வரலாறு. அதனால்தான் 30 வருட யுத்தத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. ஐம்பதுகளில் இலங்கையையைப்போல் சிங்கப்பூரை கட்டியெழுப்ப லீகுவான்யூ ஆசைப்பட்டார். நாம் அதற்குமேல் எங்கேயோ சென்றிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றோம். ஆனாலும் இதிலிருந்து எந்த அரசியல் பாடத்தையும் படிக்க நம் நாட்டுத் தலைமைகள் தயாரில்லை.

எனவே, முஸ்லிம்கள் தங்களை இலங்கை முஸ்லிம்கள் என்ற நிலையில் இருந்து அரேபிய முஸ்லிம்களாகமாற்றி நாட்டைக்கைப்பற்றப்போகிறார்கள் என்ற சிலரது உணர்வுகளுக்கு சில அரசியல்வாதிகள் அவர்களது அரசியல் ஆதாயத்திற்காக நன்றாகத் தீமூட்டினார்கள். அது ஹலால் பிரச்சினை, அபாயாப் பிரச்சினை, மாடறுக்கும் பிரச்சினை என்று விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.

ஹலால் பிரச்சினையில் நாம் விட்டதவறு

ஹலால் சான்றிதழ், பொதிசெய்யப்பட்ட உணவுகளுக்குத்தான் முக்கியம். அதை நிறுத்தினால் நமது வர்த்தகர்கள் ஹலால் உணவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்கள். ஆனால் அடுத்த சமூக ஏற்றுமதியாளர்கள் தொழிற்சாலைகளை மூடவேண்டி ஏற்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கான அவர்களது தொழிலாளர்கள் தொழில் இழந்திருப்பார்கள்.

விளைவு; மீண்டும் ஹலால் சான்றிதழை வழங்குங்கள் என்று நம் காலடிகளுக்கு வந்திருப்பார்கள். எனவே, சிறிது காலமாவது நாம் ஹலால் சான்றிதழை நிறுத்தியிருக்க வேண்டும். சகோதரர் ஆசாத் சாலி அந்தக்கருத்தை முன்வைத்தார். ஆனால் ஜம்மியத்துல் உலமா தவறிழைத்துவிட்டது.

இந்தப் பின்னணியில் பேரினவாதம் முஸ்லிம்களுக்கெதிரான தனது பிடியை இறுக்கிக்கிக் கொண்டுவந்து முதலாவது அரங்கேற்றத்தை அளுத்கமயில் நிறைவேற்றியது.

அது கின்தோட்டை, திகன என்று தொடர்ந்து இன்று குருநாகல், நீர்கொழும்பு என்று அதன் இன்னுமொரு கட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய இந்த நிலைமைகளுக்கு நம் அரசியல் தலைமைகளின் பலவீனங்களும் பாரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. அது வேறாக ஆராயப்படவேண்டும்.

இன்று நமது அரசியல் பிரதிநிதித்துவங்களிடமிருக்கின்ற மிகப்பெரிய பலவீனம் முஸ்லிம்களுடைய நியாயங்களை தெட்டத்தெளிவாக பேசும் ஆற்றல் இல்லாமையாகும். நமது தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கு பாராளுமன்றம் ஒரு முக்கிய தளமாகும். ஆனால் அதை ஓரளவு பயன்படுத்துகிற ஒரேயொருவராக அமைச்சர் ஹக்கீம் மாத்திரமே இருக்கின்றார்.

கடந்தகாலங்களைவிட இம்முறை அவரது பாராளுமன்ற, ஊடக மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான உரைகள், பேட்டிகள் ஓரளவு திருப்திகரமாக இருந்தன. ஆனாலும் இன்னும் பேசவேண்டிய, தெளிவுபடுத்தவேண்டிய எவ்வளவோ நியாயங்கள் தேங்கிக்கிடக்கின்றன. அவற்றைப்பேசும் ஆற்றல் நமது ஏனைய பிரதிநிதிகளிடம் இல்லை; என்பது மிகவும் கவலையானது.

அமைச்சர் ஹக்கீமுக்கு சிறிய ஓர் ஆலோசனை: அவரது பேசுகின்ற, எழுதுகின்ற style ஆனது euphemism ஆகும். இது ராஜதந்திரிகளுடன், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசுவதற்கு சிறந்த style ஆகும். சிலர் ஹக்கீமினுனைடைய பேச்சுக்கள் diplomatic என்று கூறுவார்கள். ஆனால் அது diplomatic அல்ல. மாறாக அது Euphemistic.

Euphemistic language உம் diplomatic language உம் அண்ணளவாக வெளிப்பார்வையில் ஒரே தோற்றத்தில்தான் இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் euphemistic style பிரயோசனமளிக்காது. சாதாரண பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குக்குப் போய்ச்சேரவேண்டுமானால் அது plain language ஆக இருக்க வேண்டும்.

இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இன்று முஸ்லிம்களுக்காக அர்த்தமுள்ளதாக ஓரளவாவது பேசக்கூடிய ஒரேயொரு மக்கள் பிரதிநிதியாக அவர் மாத்திரம்தான் இருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க ஐ நா வில் பேசுவதை கிராமப்புற தேர்தல் மேடைகளிலும் பேசி தோல்வியடைவதுபோல் ஹக்கீமினுடைய பேச்சும் இருந்துவிடக்கூடாது. இடத்திற்கு பொருத்தமான style ஐ அவர் கைக்கொள்ள வேண்டும்.

( தொடரும்).

Read more...

ரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்களில் வைத்துக்கொண்டு காண முடியாது என்றும் அவர்கள் உடனடியாக அப்பதவிகளிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது என்றும் அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது செவ்வியின் முழுவடிவம் :

கேள்வி:- இலங்கையில் அடிப்படைவாதம் பாரிய அளவில் பரவியுள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானை எடுத்துக்கொண்டால் அவருக்கு மனைவி, அழகான குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அவர் அனைத்தையும் மறந்து தனது உயிரை மாய்க்கும் அளவிற்கு சிந்தித்திருக்கின்றார். இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதக் கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். இதனை விட இந்த தற்கொலை தாக்குதலில் உயிர்களை மாய்த்தவர்கள் தமது குடும்பத்தார், சிறு குழந்தைகள் என அனைவரையுமே மாய்க்கும் அளவிற்கு முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள். பெண்ணே உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கின்றார்.

ஆகவே இவ்வாறான பாரதூரமான அடிப்படைவாதம் எவ்வாறு வேரூன்றியது என்று சிந்திக்க வேண்டும். உலகத்தில் இஸ்லாமிய வஹாப் வாத நிலைப்பாட்டினால் அடிப்படைவாதம் உருவெடுக்கின்றது. இந்த வஹாப் வாதம் கடந்த 20 வருடங்களாக இலங்கையினுள் பாரிய அளவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கல்வியின் பெயரில் பாடசாலைகளில், மத்ரஸாக்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் இவ்வாறு அடிப்படைவாதத்தை நோக்கிய கற்பித்தல் நடைபெற்றுவருகின்றது. ஆகவே, இந்த விடயங்களை தடுப்பது பற்றிச் சிந்திக்காது அடிப்படைவாதத்தினை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதில் பயனில்லை.

கேள்வி:- அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் முன்கூட்டியே கிடைத்ததாக கூறியுள்ளீர்களே. அவை எந்தகாலப்பகுதியில் கிடைத்தன? எவ்வாறான தகவல்கள் கிடைத்திருந்தன என்பதை கூற முடியுமா?

பதில்:- ஆம், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக என்று கருதுகின்றேன். ஆபத்தான அடிப்படைவாதக்குழுக்கள் எமது நாட்டினுள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த தகவல்கள் அரசாங்கத்திடத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தருணத்தில் நானும் அவ்வகையான குழுக்கள் பற்றிய சில தகவல்களை அரசாங்கத்திடத்தில் விரிவாக கூறியிருந்தேன்.

அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு அடிப்படைவாதிகள் சம்பந்தமான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தன. எனவே, அரசாங்கம் எதுவும் தெரியாது என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது.

கேள்வி:- ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தவல்லவர்கள் இருக்கின்றார்கள் உள்ளிட்ட தகவல்களும் கிடைத்திருந்தனவா?

பதில்:- ஐ.எஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்றில்லை. ஆனால், அடிப்படைவாதிகள் மற்றும் உலக தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் ஆகவே, ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற அளவிற்கே தகவல்கள் கிடைத்திருந்தன. அத்தகவல்களே அரசாங்கத்திடத்தில் கையளிக்கப்பட்டன.

கேள்வி:- இந்த தகவல்கள் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டதாக பொதுப்படையாக கூறுகின்றீர்கள். ஆனால் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் யாராவது இதன்போது இருந்தார்களா?

பதில்:- ஆம், ஜனாதிபதியிடத்தில் தான் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

கேள்வி:- தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்னர் அந்தச்சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லையா?

பதில்:- தகவல்கள் விளக்கமாக ஜனாதிபதியிடத்தில் முன்வைக்கப்பட்டன. அதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. அதற்கு அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று என்னால் பதிலளிக்க முடியாது.

ஆனால் அடிப்படைவாதக்குழுக்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டிருந்தன என்பதை தான் என்னால் கூற முடியும்.

கேள்வி:- அடிப்படைவாதக்குழுக்கள் சம்பந்தமாகவும், தாக்குதல்கள் சம்பந்தமாகவும் முன்கூட்டியே அறியப்பட்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லையே?

பதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம். கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை உட்பட முழு பாதுகாப்புத் துறையையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் செய்துள்ளது. அதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றோம். இன்னமும் ஆறுமாதங்களில் நாட்டை பாதுகாக்கின்ற - நேசிக்கின்ற புதிய தலைமைத்துவத்தினை நாம் கொண்டுவருவதே ஒரே தீர்வாக அமையும்.

கேள்வி:- தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று மூன்று வாரங்களின் பின்னர் இனமுறுகலை ஏற்படுத்தும் சம்பவங்கள் தோற்றுவிக்கப்படுகின்றவே?

பதில்:- இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பாரிய பொறுப்பாகின்றது. ஆட்சியாளர்கள் அரசியல், சமய தலைவர்களை ஒருங்கிணைத்து இனமுறுகல்களை தோற்றுவிக்காத செயற்றிட்டமொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை செய்வதாக இல்லை. அரசியல் இலாபத்தினை ஈட்டுவதற்கே விளைகின்றார்கள்.

மேலும், பொதுமக்கள் ஒருவிடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றம் பெறுவதால் சர்வதேசத்தின் தலையீட்டிற்கே அது வழிவகுக்கும். ஆகவே கூடிய வரையில் அதற்கான தூண்டல்களை வழங்கினாலும் அதிலிருந்து விலகியிருந்து நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டும். உடலால் மோதுவதைவிடவும் மூளையால் சிந்திப்பதே மிக முக்கியம்.

இதனைவிடவும், தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு பாராளுமன்றக் குழுவிற்கு அனுமதிபெறப்பட்டுள்ளது. யாரின் தேவைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை கொண்டுவருவதை விடவும் அரசியல் தலைமைத்துவங்களின் பங்கேற்புடன் தேசிய செயற்பாட்டு சபையை உடன் நிறுவ வேண்டும். இதுவே நாட்டின் நல்லிணக்கத்தினை பாதுகாப்பதற்கு உதவும். மேலும் முஸ்லிம் தலைமைகளும் வெளிப்படையாக முன்வந்து செயற்பட வேண்டும்.

கேள்வி:- அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள்?

பதில்:- தற்கொலை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடன் காணப்படும் தொடர்புகள் உட்பட பல விடயங்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த தகவல்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் அவர் மீது பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆகவே அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

அதேபோன்று மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பாரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆகவே, அவர்களிடத்திலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே அமைச்சுப்பதவியிலும், ஆளநர் பதவியிலும் இவர்களை தொடர்ந்தும் நீடித்திருக்கும் வகையில் பேணிக்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேட முடியாது.

ஆகவே, அவர்களை உடனடியாக அரச அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும். அதன் பின்னர் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி:- அரசாங்கத்தில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு காணப்படுகின்ற நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- ஆம், தற்போது அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 64 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் பல உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக என்னிடத்தில் கூறியுள்ளார்கள். குறிப்பாக, ஐ.தே.கவின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள்.

கேள்வி:- ஐ.தே.க தரப்பில் அவ்வாறு ஆதரவளிப்பது பற்றிக்கூறப்படவில்லை என்று உறுதியாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்:- இரண்டு உறுப்பினர்கள் ஊடக சந்திப்பில் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஐ.தே.க.உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள். நாட்டின் எதிர்காலத்தினை சிந்திப்பவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆகவே, அதுபற்றி தற்போது குழப்பமடைய வேண்டியதில்லை.

Read more...

Sunday, May 19, 2019

வன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.

வடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களை சந்தித்ததோடு வன்னிப் படையினரினால் பயங்கரவாத தாக்குதலுக்கெதிராக பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சட்டம் ஒழுங்குகளுக்காக தனது பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போதய கடின சூழ்நிலைகளில் வன்னி மக்களின் பாதுகாப்புக்காக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட உச்சகட்ட முயற்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பினைப்பற்றியும் எடுத்துக் கூறி மெச்சியுள்ளார்.

வன்னி இராணுத் தளத்திற்கு சென்று படையினரை பாராட்டியுள்ள குறித்த எம்பி அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பேசும்போது மேற்படி கருத்தக்கு எதிரான கருத்துக்களையே முன்வைப்பார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

எவ்வாறாயினும் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது குண்டுவெடிப்புகளை இல்லாதொழிக்க படையினர் தொடந்தும் தங்களது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அங்கு ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் படையினர் அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோது, படையினரின் பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் கெடிபிடிகளை அரசு நிறுத்தவேண்டும் என தமிழ் மக்களை உணர்ச்சி ஊட்டுவற்காக பாசாங்கு செய்வார் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.



Read more...

அடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ச.

“ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கையில் வேரூன்றி இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்கு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலுடன் என்னையும் தொடர்புபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் விஷமத்தனமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் வாக்கு வங்கிக்காக அவர்கள் இந்தப் போலிப் பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர். உண்மையில் எனக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் குறிவைக்க விரும்புகின்றேன்.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் பலர் இலங்கையில் இன்னமும் மறைந்திருக்கின்றார்கள். பெரும் தாக்குதல்களுக்கு அவர்கள் திட்டம் தீட்டுகின்றார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசால் இஸ்லாமியத் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க முடியாது. ஏனெனில், அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகின்றார்கள். ஆனால், குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், இஸ்லாமியத் தீவிரவாதிகளை இந்த அரசு எப்படி இல்லாதொழிக்கும்? ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்காக இருக்கின்றது” – என்றார்.

Read more...

ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டங்கள் சம்பந்தமாக பென்டகன் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது. By Alex Lantier

ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான திட்டங்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கும் இடையிலான நேட்டோ கூட்டணியின் பொறிவுக்கு இட்டுச் செல்லும் என்று அச்சுறுத்தி, மே 1 அன்று, அமெரிக்க பாதுகாப்புத்துறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது. பாதுகாப்புத்துறைக்கான அமெரிக்க துணை-செயலர்கள் ஏலன் லார்ட் மற்றும் ஆண்ட்ரியா தாம்சனால் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கை தலைவி பெடிரிகா மொஹிரினிக்கு அனுப்பப்பட்ட அக்கடிதம் ஸ்பானிஷ் நாளிதழ் El Pais க்கு கசியவிடப்பட்டது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் நகர்வுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்படாமலேயே வந்திருந்த போதே, மே 13 இல் அக்கடிதத்தை El Pais வெளியிட்டது.

ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தின் தொழில்நுட்ப பெயரான நிரந்தர கூட்டுறவு கட்டமைப்பு (PESCO - Permanent Structured Cooperation) என்பதை மேற்கோளிட்டு, “ஐரோப்பிய பாதுகாப்பு நிதி அமைப்புக்கான விதிமுறைகள் மற்றும் PESCO இன் பொது நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதன் மீது அமெரிக்கா ஆழமாக கவலை கொள்கிறது,” என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது. அக்கடிதம் தொடர்ந்து குறிப்பிடுகையில், "மூன்று தசாப்தங்களாக அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொழில்துறையின் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பில் ஒரு வியத்தகு பின்னடைவுக்கு" ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் இட்டுச் செல்வதாக குறிப்பிடுகிறது. அது "நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தேவையற்ற போட்டியின்" அபாயம் குறித்து எச்சரித்தது.

“அமெரிக்கா போன்ற வெளியிலுள்ள நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ஐரோப்பிய ஆயுத திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உள்நோக்கங்களைப் புரூசெல்ஸ் தொடருமேயானால், அரசியல் அல்லது வர்த்தக பழிவாங்கும் நடவடிக்கைகள் உண்டாவதற்கான அச்சுறுத்தல்கள் அப்பட்டமாகவோ அல்லது சற்று மூடிமறைத்தோ" அந்த "மிகவும் கடுமையான" கடிதத்தில் இருப்பதாக El Pais குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஆயுத அமைப்புமுறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மீது ஐரோப்பிய நிறுவனங்களின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய பாதுகாப்பு நிதி அமைப்பின் வழிவகைகளை பென்டகன் கடிதம் ஆட்சேபிப்பதுடன், ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை நீக்குவதற்கு அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் பென்டகன் அச்சுறுத்துகிறது. “இதேபோன்று எதிர்முனையிலிருந்து அமெரிக்க கட்டுப்பாடுகள் திணிக்கப்படுவதை நமது ஐரோப்பிய பங்காளிகளும் கூட்டாளிகளும் வரவேற்க மாட்டார்கள் என்பது தெளிவானது, அவை குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று குறிப்பிட்டது.

அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பை பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையிலான ஐரோப்பிய சக்திகள் எதிர்த்தபோது வெடித்த மோதல்களைச் சுட்டிக்காட்டி, அக்கடிதம் குறிப்பிடுகையில், தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய திட்டங்கள் "நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுகளைப் பாதிக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய பாதுகாப்பு முன்முயற்சிகள் மீது 15 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட நமது ஒப்பந்தங்களில் மேலோங்கி இருந்த பதட்டமான விவாதங்களையும் சாத்தியமானளவில் மீட்டுயிர்ப்பிக்கக்கூடும்,” என்று குறிப்பிடுகிறது.

அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியின் முறிவு குறித்த அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் எந்தளவுக்கு தீவிரத்தன்மையுடன் எடுத்துக் கொண்டன என்பதை சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான இலண்டன் சிந்தனைக் குழாம் (International Institute of Strategic Studies – IISS) இவ்வாரம் வெளியிட்ட ஓர் ஆய்வில் பிரதிபலித்தது. “ஐரோப்பாவை பாதுகாப்பதில்: நேட்டோவின் ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற தகைமை அவசியப்படுகிறது" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கை, அமெரிக்கா அந்த கூட்டணியை விட்டொழித்தால் நேட்டோவின் இராணுவ தகைமை அளவுக்கு மறுகட்டமைப்பு செய்ய ஐரோப்பாவுக்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆவணம் பாரியளவில் 110 பில்லியன் டாலர் கடற்படை கட்டமைப்புக்கும் மற்றும் ரஷ்யாவுடன் ஒரு போருக்குத் தயாராக 357 பில்லியன் டாலருக்கும் அழைப்பு விடுத்தது.

இத்தகைய ஆவணங்கள் வெளியாவது, தசாப்தங்களாக உலக முதலாளித்துவத்தின் சர்வதேச உறவுகளை ஆட்கொண்டிருந்த கூட்டணிகள் மற்றும் ஏற்பாடுகளின் பொறிவு முன்னேறிய நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ செலவுகள் மற்றும் நடவடிக்கைகளை பெரியளவில் தீவிரப்படுத்துவதற்கான அவற்றினது திட்டங்களை, நேட்டோவுக்கு உதவியாக உத்தேசிக்கப்பட்ட குறைநிரப்பும் நடவடிக்கையாக சித்தரிக்கும் அவற்றின் முயற்சிகளாக அந்த ஆவணம் முன்வைக்கிறது. பென்டகனோ அந்த திட்டங்களை, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே நடந்த இரண்டு உலக போர்களுக்குப் பின்னர் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.

ஈரான் உடனான போருக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு, அமெரிக்காவுக்கு ஈரானின் இராணுவ அச்சுறுத்தல் என்ற ஆதாரமற்ற மற்றும் நம்பவியலாத குற்றச்சாட்டுக்களை வாஷிங்டன் நியாயப்படுத்துகையில், அதன் அடியிலிருக்கும் மூலோபாய நோக்கம் அந்த எண்ணெய் வளம் மிகுந்த பிரதேசத்தையும் கடந்து செல்கிறது. வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவில் தேய்ந்து வரும் அதன் இராணுவ மேலாதிக்கத்திற்காக மட்டும் ஒரு வெறித்தனமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவில்லை. அதன் பெயரளவிலான ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட அதன் வல்லரசு போட்டியாளர்களிடம் இருந்து வரக்கூடிய சவாலின் அபாயத்தை நீக்குவதும் அதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

மாலியில் பிரெஞ்சு-ஜேர்மன் ஆக்கிரமிப்பு போன்ற இரத்தந்தோய்ந்த சூறையாடல் போர்களை நடத்துவதற்கும் மற்றும் அவற்றின் இராணுவங்களுக்கும் ஐரோப்பிய சக்திகள் பில்லியன் கணக்கான யூரோக்களைப் பாய்ச்சுகின்ற நிலையில், ஐரோப்பாவில் கட்டமைக்கப்படும் பாரியளவிலான இராணுவ ஆயத்தப்பாடானது, இத்தகைய மோதல்களின் வர்க்க இயல்பை அடிக்கோடிடுகின்றன. இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உலகப் பொருளாதார கொள்ளைகளை பங்கிட்டு கொள்வதன் மீதான போட்டாபோட்டி கடுமையாக உள்ளது.

ஈராக்கில் இருந்திராத பாரிய பேரழிவு ஆயுதங்கள் (WMD) குறித்த பொய்களைக் கொண்டு நியாயப்படுத்தி ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான 2003 சட்டவிரோத படையெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையில் பேர்லின், பாரீஸ் மற்றும் மாஸ்கோ எதிர்த்த போதே, வாஷிங்டன் அவற்றுக்கு இடையே ஒரு தற்காலிக கூட்டணியைக் கண்டது. இப்போதோ வாஷிங்டனின் சார்பாக ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைத் தடுப்பதற்கான வீட்டோ அதிகார சக்தியை பிரெக்ஸிட் இலண்டனிடம் இருந்து பறித்து விட்டிருக்கும் நிலையில், இந்த மோதல்கள் பரந்தளவில் தீவிரப்பட்டுள்ளது. இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிக்க அனைத்து நேட்டோ அதிகாரங்களும் உடன்பட்டிருக்கின்றன என்ற மூடிமறைப்பின் கீழ், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கும் இடையே மூலோபாய மற்றும் வர்த்தக போட்டிகள் தொடர்ந்து அதிகரிக்க உள்ளன.

மே 13 இல், அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் மற்றும் ஜெனி ஷாஹீன், ரஷ்யா மற்றும் ஜேர்மனியை இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்தில் செயல்பட்டு வருகின்ற ஐரோப்பிய மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மீது தடைவிதிக்க இருகட்சிகள் சார்பாக சட்டமசோதா அறிமுகப்படுத்தினார்கள். ஐரோப்பிய அணுகுமுறைகளுக்கு விரோதமாக பயன்படுத்தி வாஷிங்டன் முன்னதாக ஈரான் மற்றும் ரஷ்யாவை இலக்கில் வைக்க பயன்படுத்திய அந்த மசோதா, அக்குழாய் அமைப்பு திட்டத்தைக் கட்டமைக்கும் நிறுவனங்களின் ஸ்தூலமான சொத்துக்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக அதன் மீதான நிதியியல் பரிவர்த்தனைகள் மற்றும் அதைச் சார்ந்த பயணங்கள் மீது தடை விதிக்கக்கூடியதாகும். அந்த குழாய் அமைப்பு திட்டத்தை ட்ரம்ப் கடந்தாண்டு சாடியிருந்தார். ஜேர்மனியின் BASF, பிரிட்டிஷ்-டச் ராயல் டச் ஷெல், மற்றும் பிரான்சின் ENGIE உள்ளடங்கிய நிறுவனங்கள் இலக்கில் வைக்கப்படலாம்.

ஒரு பரந்த யுரேஷிய உள்கட்டமைப்பு திட்டமான பெய்ஜிங்கின் பாதை ஒருங்கிணைப்பு திட்டத்தை (BRI) ஆமோதித்த இத்தாலி அமெரிக்காவின் ஆட்சேபணை இருந்த போதும் மார்ச்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திட்ட பின்னர், சீனா உடனான ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் சம்பந்தமாகவும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வாஷிங்டன், அப்போதிருந்து, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் அவற்றின் தொலைதொடர்பு வலையமைப்பைக் கட்டமைப்பதில் சீன நிறுவனமான ஹூவாயை அனுமதிப்பதற்காக உளவுத்தகவல் கூட்டுறவை நடவடிக்கைகளை நிறுத்தி அவற்றை அச்சுறுத்தி உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் நிர்வாகம் 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகி ஈரான் மீது அமெரிக்க தடையாணைகளை மீண்டும் திணித்ததால், இது ஐரோப்பிய எண்ணெய் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் ஈரானில் கையெழுத்திட்டுள்ள பல பில்லியன் டாலர் உடன்படிக்கைகளைக் குறுக்காக வெட்டுகின்ற நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளால் அப்போதிருந்தே கடுமையான மோதல் தூண்டிவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஈரானுக்கு எதிராக வாஷிங்டனுக்காக இலண்டனின் ஆதரவைக் கோர பொம்பியோ பிரிட்டனுக்கு விஜயம் செய்த பின்னர், "அதிஅவசர பிரச்சினைகளை" மேற்கோள்காட்டி, பேர்லினுக்கான விஜயத்தை திடீரென இரத்து செய்தார், அதற்கு பதிலாக அவர் பாக்தாத் விஜயம் செய்தார். அங்கே, அமெரிக்க எண்ணெய் உடன்படிக்கைகளை ஊக்குவித்ததுடன், 2003 போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஈராக்கிய கைப்பாவை அரசிடம் குற்றஞ்சாட்டப்படும் ஈரானிய அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க நலன்களைப் பாதுகாக்குமாறு கோரினார். பொம்பியோ பேர்லினை அலட்சியம் செய்ததைக் குறித்து ஜேர்மனியின் Süddeutsche Zeitung குறிப்பிடுகையில், “நீண்டகாலமாக ஜேர்மன்-அமெரிக்க நட்புறவு என்று புகழப்பட்டு வந்ததில் பெரும்பகுதி இப்போது சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கிறது,” என்று எழுதியது.

அதேபோல, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா முறித்ததைக் குறித்து குறைகூறினார். கடந்த வாரம் ரோமானியாவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஒன்றில் மக்ரோன் கூறுகையில், “முதலாவதாக, இந்த உடன்படிக்கையில் இருந்து ஈரான் வெளியேறவில்லை. இரண்டாவதாக, ஈரான் இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறினாலும், அதுவும் அமெரிக்காவின் பொறுப்பாக தான் இருக்கும்,” என்றார்.

ஈரானை அச்சுறுத்துவதற்காக பாரசீக வளைகுடாவுக்கு சென்று கொண்டிருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் அப்ரகாம் லிங்கன் நங்கூரமிட்டிருந்த அமெரிக்க தலைமையிலான கப்பற்படை போர்க்குழுவில் இருந்து, நேற்று, ஸ்பெயின் அதன் சிறிய போர்க்கப்பலான Méndez Núñez விலக்கிக் கொண்டது. ஸ்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Margarita Robles சாந்தமாக குறிப்பிட்டார்: “ஸ்பெயின் ஒருபோதும் உடன்பட்டிராத ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்காக விமானந்தாங்கி போர்க்கப்பல் அப்ரகாம் லிங்கனை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்ப வட அமெரிக்க அரசு உத்தேசிக்கிறது என்றால், நாங்கள் தற்காலிகமாக அந்த போர் குழுவிலிருந்து விலகிக் கொள்கிறோம்,” என்றார்.

ஈரானுக்கு எதிராக அந்த கடற்படை போர்க்குழு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் என்ற நிஜமான அச்சங்களைச் சுட்டிக்காட்டி மாட்ரிட் ஒரு நகர்வு எடுத்திருந்தாலும் கூட, அந்த முடிவை குறைத்துக் காட்டவும் மற்றும் மக்களிடம் இருந்து அதன் முக்கியத்துவத்தை மறைக்கவும் முனைந்தது. ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் பொரெல் கூறுகையில் இந்த சம்பவம் சம்பந்தமாக மாட்ரிட்டிடம் இருந்து வாஷிங்டனுக்கு "உத்தியோகபூர்வ குறைகூறல் எதுவும் இல்லை" என்று தெரிவித்ததுடன், “இது நிறைய கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com