Wednesday, March 20, 2019

நெடுந்தீவு வைத்தியசாலையில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் சேவையாற்றுவதற்கு மருத்துவர்கள் எவரும் முன்வராமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சுகாதார அமைச்சு கொழும்பு சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்யப்படும் நிலையில் வருடாந்தம் குறைந்தளவிலான மருத்துவர்கள் வடக்குக்கு நியமிக்கப்படுகின்றனர்.

வகுக்கில் பல வைத்திய சாலைகளில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் சில மருத்துவ மனைகள் இயங்கி வரும் நிலையில், தீவுப் பகுதியான நெடுந்தீல் சேவை புரிவதற்கு மருத்துவர்கள் முன் வருவதில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனால் அங்கு மருத்துவ சேவைகளை பெறுவதற்கு மக்கள் அல்லல் படுகின்றனர். இதனிடையே. இந்த மார்ச் மாதம் 141 மருத்துவர்கள் வடக்கில் நியமிக்கப்பட்டனர். அவர்களில் எவரும் நெடுந்தீவுக்கு நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற மருத்துவரே தற்போது மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆகவே சம்மத்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் அவத்தன்மை செலுத்த வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுகின்றார்கள்.


Read more...

நாட்டின் வளங்களை, வெளிநாட்டவர்களுக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் - கயந்த கருணாதிலக்க

நாட்டின் சிறிய காணித்துண்டையேனும் வெளிநாட்டவர்க்கு தாரைவார்க்க ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காதென காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டுள்ளார். காணி உறுதிப்பத்திரம் இல்லாத 10 இலட்சம் பேருக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை தற்போது மாவட்ட ரீதியாக நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். அந்தவகையில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத அரச நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றை இனங்கண்டு அவைகளுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றோம்.

மேலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வருகின்றாம். இந்நிலையில் எமது நாட்டின் வளங்களை, வெளிநாட்டவர்களுக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்' என கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கையில் குறைபாடு

இந்நாட்டின் சட்ட திட்டங்களில் போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது குறைபாடு தெரிவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read more...

இலங்கை குறித்த ஆணையாளரின் அறிக்கை இன்று

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தன. இந்தத் தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்போது மேலும் 2 வருடங்களால் குறித்த அவகாச காலம் நீடிக்கப்பட்டது.
இதற்கமைய, இந்தத் தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முழுமையான அறிக்கை ஒன்றை வௌியிடவுள்ளார். இன்று கொண்டுவரப்படும் அறிக்கைக்கு அமைவாக இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பிரேரணை ஒன்றை பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கவுள்ளன.

எவ்வாறான போதிலும் பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்படும் பிரேரணையை நிறைவேற்ற இலங்கை மீண்டும் 2 வருட கால அவகாசத்தை கோருவதற்குத் தயார் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

Read more...

Tuesday, March 19, 2019

மனித உரிமைகள் பேரவையில் புலிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? பீமன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு ஜெனிவாவில் கடந்த மாதம் 25ம் திகதி ஆரம்பமாகி 22 ம் திகதி முடிவுக்கு வருகின்றது. நாளை 20ம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை 30 / 1 தீர்மானத்திற்கு அரசு வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்நாட்டினை நேசிக்கும் சக்திகள் அரசிற்கு வழங்கிய அழுத்தங்களை கணகில் எடுக்காது தொடர்ந்தும் அனுசரணை வழங்க முன்வந்திருப்பதானது இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில், மேற்குலகுக்கு விரிக்கும் செங்கம்பளமாகவே பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்று பொறிமுறை ஒன்றை வரைந்து எல்லைகளை போட்டுள்ள மனித உரிமைகள் ஆணையகமானது, புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக அவ்வியக்கத்தினை நீதியின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதாக உணர முடிகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தில் சகல தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மையாகும். விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் ஆயுதம் தூக்கிய சகல அமைப்புக்களும் மனித நேயம் அற்றும் சட்டத்தை மதியாமலும் சக மனிதனின் உரிமைகளை மீறி காட்டு மிராண்டித்தனமாக செயற்பட்டார்கள்.

ஆனால் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்ட புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் எண்ணில் அடங்காதவை. இதன் காரணமாகவே அமெரிக்க ஐக்கிய ராச்சியம் புலிகள் அமைப்பை உலகிலுள்ள அதிபயங்கரமான காட்டுமிராண்டித்தனமான இயக்கம் என்று வரையறை செய்திருந்தது.

ஏகப்பிரதிநித்துவ மோகம் பிடித்தலைந்த புலிகள் அமைப்பு இலங்கையில் செயற்பட்ட சகல போராட்ட மற்றும் அரசியல் கட்சிகளையும் தடை செய்து அவர்களின் அரசியல் உரிமையை மாத்திரம் அல்ல வாழ்வுரிமையையே பறித்தது. இயக்ககங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொட்டு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வரை கொத்து கொத்தாக கொன்றொழித்தது.

புலிகளின் பாசிஸப் கொள்கைளை ஏற்க மறுத்த மற்றும் அவற்றை விமர்சனம் செய்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் கொன்றொழிக்கப்பட்டனர்.

மக்களின் அடிப்படை சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரம் புலிகளால் பறிக்கப்பட்டது. அவ்வமைப்பு ஒலி-ஒளி பரப்புகின்றவற்றையும் அவர்களது வெளியீடுகளையும் மாத்திரமே மக்கள் வாசிக்கவும் கேட்கவும் பார்க்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சுதந்திமான நடமாட்டத்திற்கு தடைபோடப்பட்டது. புலிகள் பலவந்தமாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த பிரதேசங்களுக்கு வெளியே மக்கள் செல்லவும், வெளியேயிருக்கும் மக்கள் உள்நுழையவும் பலத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதனால், பெற்றோர் உறவினர்கள் பிணை நிற்கவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. மேலும் அவ்வாறு வெளியேறுவோர் குறிக்கப்பட்ட காலத்தினுள் திரும்பாதவிடத்து பிணை நின்றவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சிறுவர்கள் படையில் பலவந்தமாக இணைக்கப்பட்டு யுத்தமுனையில் பலியிடப்பட்டார்கள். அவ்வாறு தமது பிள்ளைகள் பலியிடப்படுவதை எதிர்த்த பெற்றோர் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள்.

யுத்தம் ஆரம்பமானபோது தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்திருந்தும் புலிகள் மக்களை மனித கேடங்களாக பயன்படுத்தினார்கள். இலங்கை அரசினால் யுத்த சூனிய வலையம் பிரகடனம் செய்யப்பட்டது. அப்பிரதேசங்களினுள் மக்கள் பாதுகாப்பு தேடிச் சென்றபோது அப்பிரதேசங்களிலிருந்து படையினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் விளைவாக தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு படையினர் திருப்பி தாக்கியபோது பொதுமக்கள் பலியாவது தவிர்க்க முடியாததாகியது. எனவே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மக்கள் அழிவிற்கு புலிகளே காரண கர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை உண்மை.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட முற்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலிருந்து உயிர்தப்பிய மற்றும் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சாட்சியங்களை ஐ.நா ஏன் பதிவு செய்து கொள்ளவில்லை என்பதும் புலிகளின் கொடிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

புலிகள் கர்ப்பிணிப்பெண்களைக் கூட தற்கொலைகுண்டுதாரிகளாக உருமாற்றினார்கள்.

யுத்தத்தில் காயமடைந்து அவயங்களை இழந்து நடமாட முடியாதிருந்த புலிகளை மூளைச்சலவை செய்து கடலில் தற்கொலைப் படகுகளில் தற்கொலைதாரிகளாக பயன்படுத்தினார்கள்.

புலிகளியக்கத்திற்காக சண்டையிட்டு அங்கவீனர்களாகவிருந்த பலர் இறுதி நேரத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்கள், மற்றும் பயணிகள் பஸ், ரயில்களில் குண்டுகளை வைத்து பொதுமக்களை தாக்கினார்கள்.

இந்நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு விபூதி அணிவித்த இந்து சமய பூசகர் ஒருவரை சுட்டுக்கொன்றார்கள். இதன் ஊடாக புலிகள் மத சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்தார்கள்.

இஸ்லாமிய மற்றும் பௌத்த வணக்கஸ்தலங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை புலிகள் கொன்றொழித்தார்கள்.

பொதுமக்கள் யுத்த முடிவில் இராணுவத்தினரால் கைப்பற்றபட்ட பிரதேசங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, பொதுமக்களோடு பொதுமகள் போன்று உடையணிந்து சென்ற பெண்புலி ஒருத்தி உடம்பில் கட்டியிருந்த குண்டினை வெடிக்கவைத்ததில் உடன்சென்ற பல மக்கள் பலியாகினர்.

இவ்வாறு புலிகளின் மனித உரிமை மீறல்கள் பட்டியல் நீண்டு செல்லும். ஆனாலும் புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக இதுவரை எவரும் குரகொடுக்க முன்வரவில்லை. ஐ.நா இலங்கை அரசை பொறுப்புக்கூறலுக்கு நிர்பந்திக்கும் அதே பாணியில் புலிகள் தரப்பையும் நிர்பந்திக்காதவிடத்து அது பக்கசார்பாக நடந்து கொள்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது.

Read more...

''ரஞ்சன் ஒரு ஆண் பாலியல் தொழிலாளி'' - மஹிந்த அணி

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை, மஹிந்த ஆதரவு அணியினர், ''ஆண் பாலியல் தொழிலாளி'' என விமர்சித்தமையினால், இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோவே, ரஞ்சன் ராமநாயக்க குறித்து இவ்வாறு விமர்சனம் வெளியிட்டார்.

இந்த வருடத்துக்கான பாதீட்டின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கு கொண்டு, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டார்.

இதனை அடுத்து எழுந்த அருந்திக்க பெர்ணாண்டோ , வெளிநாடு ஒன்றில் ஆண் பாலியல் தொழிலாளியாக ரஞ்சன் ராமநாயக்க பணிபுரிந்ததாக கூறினார்.

இந்தக்கருத்தை அடுத்து, சபையில் கூடியிருந்த இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்கவை இவ்வாறு விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து மன்றில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் வெளியேற வலியுறுத்தி, மஹிந்த அணி கடிதம்

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து, இலங்கை உடன் வெளியேற வேண்டும் என, மஹிந்த தரப்பினரால் கடிதம் ஒன்று எழுதப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து, மஹிந்த ஆதரவு அணியினர், நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களுக்கும் இன்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தின் மூலம், தமது தரப்பு, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஒருபோதும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக்கூடாது என, என்பதை வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இலங்கையே ஆதரவு வழங்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான பிரேரணைகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் இலங்கை இராணுவத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய பிரேரணையே தற்போது ஐக்கிய நாடுகளில் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணை இலங்கை நாடாளுமன்றையும், இறைமையையும் பலவீனப்படுத்தும் தன்மை கொண்டது. இத்தகைய பிரேரணையை ஆதரித்த இலங்கை அரசாங்கம், தனது தீர்மானத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.

எனவே இது குறித்து ஜனாதிபதி மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என, குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Read more...

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான நிறுவனம்

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இவர் குறித்த விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் வரிஏய்ப்பு இடம்பெற்றுள்ளதாக, ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜெயதிஸ்ஸ இன்றைய பாராளுமன்ற அமர்வில் வைத்து இதனை குறிப்பிட்டார். மேற்படி நிறுவனம் இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு சுமார் 506 லட்சம்  ரூபாவை வழங்க வேண்டியிருந்தும், அந்த பணம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை.

அத்துடன் அதே நிறுவனம் களுத்துறையில் உள்ள 72 ஆயிரம் தென்னை மரங்களுடனான பாரிய காணிப்பரப்பை கொள்வனவு செய்ய கோரிக்கை முன்வைத்துள்ளது. அந்த இடத்தில் கள் உற்பத்தியை மேற்கொள்வதற்காகவே சின்ஹா கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அறிந்து கொண்ட பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றதாக, நளின் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Read more...

தளபதி பதுமனின் மேல்வீடு சிதைந்தது.

திருமலை மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர் கேணல் பதுமன். சிவசுப்ரமணியம் வரதநாதன் என்ற இயற்பெயர் கொண்ட பதுமன் இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து பின்னர் அவரின் முன்னாள் சகாவான கருணா எனப்படுகன்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் தலையீட்டில் விடுதலையாகியிருந்தார்.

விடுதலையான பதுமன் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட திடீர் தாக்கம் காரணமாக முற்றுமுழுதான ஞாபகத்தை இழந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இச்சம்பவமானது குறிப்பிடத்தக்க காலத்திற்கு முன்னர் இடம்பெற்றபோதும் புலிகள் விடயத்தை இரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பதுமனின் விசுவாசியான „அ----' தகட்டு இலக்கம் கொண்ட முன்னாள் புலி ஒருவர் இலங்கைநெட்டுக்கு தகவல் தருகையில் மிகுந்த வேதனையுடன் கீழ்கண்டவாறு கூறினார்.

பதுமன் அண்ணை அமைப்புக்கு என்றும் விசுவாசமாக இருந்தவர். கருணா பிரிந்தபோதும் சரியான முடிவு ஒன்று எடுக்க முடியாது மிகவும் மனவேதனை பட்டவர். இருந்தபோதும் பொட்டர் மிகவும் அவரை சந்தேகப்பட்டார். ஒரு கட்டத்தில் போட்டுத்தள்ளவே முயற்சி செய்தார். அண்ணை அதற்கு இடம்கொடுக்கவில்லை.

அமைப்பினால் உயிர் தப்பிய அவர் , கருணாவின் தயவில் இரண்டாவது தடவையாக உயிர் தப்பினார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்நிலையில் அவர் பிரித்தானியா சென்று அங்கு போலி தேசியவாதிகளாலும், போலிப்புலிகளாலும் அவ கௌரவப்படுத்தப்பட்டிருக்கின்றார். அவருக்குரிய கௌரவம் அங்கு வழங்கப்படவில்லை.

நேரடியாக சொல்வதானால், புலிகளினால் செல்வந்தர்களான ஒருவரின் கடையில் எடுபிடியாக வேலை செய்யவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் அவரை பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்தது. ஒருமுறை பேசும்போது அவர் கூறிய வார்த்தை „எம்மவர்களிடம் எடுபிடியாக வேலைசெய்வதை நினைக்கும்போது, இதற்குத்தான போராடினேன் என்றாகின்றது'

இது பதுமனுக்கு அண்ணைக்கு மாத்திரம் அல்ல 2009 மே மாதத்திற்கு பின்னர் உயிர் தப்பி புலம்பெயர்ந்த பலருக்கும் இடம்பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த முன்னாள் பெண் புலிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களினால் தாம் நடாத்தப்பட்ட விதம் தொடர்பில் மிகுந்த ஆத்திரமடைத்துள்ளனர். சிலர் இலங்கையில் பிச்சையெடுத்து வாழ்வோம் என சபதமெடுத்து நாட்டுக்கு திரும்பியுள்ள சம்பவங்களும் உண்டு என்றார்.

Read more...

வசந்த கரன்னாகொடவிடம் நான்கு மணி நேர விசாரணை - குற்றப்புலனாய்வு திணைக்களம்

11 தமிழ் இளைஞர்களின் கடத்தல் விவகாரம் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த விசாரணைகளின் ஒரு கட்டமாக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிடம், அண்மைய நாட்களில் பலமணிநேர விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்றைய தினம், மூன்றாவது தடவையாக அழைக்கப்பட்ட வசந்த கரன்னாகொடவிடம், முற்பகல் 9.30 முதல் தொடர்ந்து நான்கு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்களின் கடத்தல் விவகாரம் குறித்து, அப்போதைய கடற்படை தளபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புலிகளின் வன்செயல்களை எதிர்த்து ஜெனிவாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வுகள் இடம்பெற்று வரும் இந்நிலையில், நேற்று முன்தினம் ( ஞாயிற்றுக்கிழமை 17) ஐ.நா முன்றலில் புலிகளுக்கு எதிரான கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர்ந்து வாழும் பெருந்திரளான இலங்கையர்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கலந்து கொண்டு எல்ரீரீஈ யினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பில் விளக்கினார்.

உலக இலங்கையர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றவாளிகள் அல்லவென்றும் புலிகளே போர்க்குற்றவாளிகள் என்றும் வானுயரக் கத்தினர்.
















Read more...

அரச அமைச்சரான அப்பாவியான என்னை குறை கூறாதீர்கள் - அமைச்சர் மனோ

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போராடுவது போன்று அரசிற்குள் இருந்தும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். யாழ் நல்லூர் துர்க்காதே மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேஷன், தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராகவே இருக்கின்றேன். ஆகவே ஒரு அரச அமைச்சராக அப்பாவியான என்னை குறை கூறாதீர்கள். மொழி, கலை, கலாசாரம், பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் பேணி பாதுகாக்கப்பட்டு இழந்தவற்றை மீட்டெடுத்து உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இங்கு எனக்கு முன்னதாக உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூறியிருந்தார். குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளை விமர்சித்தும் இருந்தார். உண்மையில் அந்தத் திணைக்களம் தொடர்பில் நானும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் செயற்பாடுகள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பணிப்பாளரிடம் பல கேள்விகளையும் நேரடியாகவே கேட்டிருக்கின்றேன்.

அண்மையில் நாடளுமன்றக் குழுவாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தோம். குறிப்பாக வவுனியா வெடுக்குநாறி மலை, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நானும் நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் நேரடியாகவே பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்விகளையும் எழுப்பியிருந்தோம்.

அந்த திணைக்களம் தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு என்பது சிங்கள பௌத்த நாடு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான் இருக்கின்றது. அத்தகைய சிங்கள பௌத்த வரலாறு தான் நாட்டுக்கு இருப்பதாகவும் எண்ணுகின்றனர். அதனால் தமிழ் வரலாறுகளை அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை.

வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பௌத்த அடையாளங்கள் பௌத்த இடங்கள் என்ற தோரணையில் செயற்படுகின்றனர். ஆகவே அவ்வாறு பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை சிங்கள பௌத்த சின்னங்கள் அல்ல என்பதையும் தமிழ் பௌத்த சின்னங்கள் என்றும் நாம் சொல்ல வேண்டும்.

ஆகவே தான் இந்த நாட்டிற்கு சிங்கள பௌத்த வரலாறு இருப்பது போன்று தமிழ் வரலாறும் உண்டு என்று நாங்கள் கூறுகின்றோம். அத்தோடு சிங்கள பௌத்த வரலாறு மாத்திரம் தான் இந்த நாட்டிற்கு இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வொம் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு தமிழர்களுக்கு இந்த நாட்டில் வரலாறு இருக்கின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கமையவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது அமைச்சினூடாக இலங்கை வரலாறுகள் அடங்கிய ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றேன்.

அந்த நுாலை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , இரா. சம்மந்தன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டு அதன் பிரதிகளையும் அவர்களுக்கு வழங்கி வைத்திருக்கின்றோம். தமிழ் மக்களின் வரலாறுகளை உள்ளடக்கிய அந்த நூலை சம்மந்தனிடம் கொடுத்த பின்னர் அது தொடர்பில் அவர் என்னைப் பாராட்டி வாழ்த்துவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.

அவ்வாறு ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் நேரடியாகச் சந்தித்த போதும் கூட நூல் தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை. ஆக அவர் அந்த நூலைப் படித்தாரோ என்று தெரியவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் இந்த நூலை தற்போது சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு செய்கின்ற போது பாரிய எதிர்ப்புக்கள் வரலாம். அது பிரச்சினை அல்ல. எந்த எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.

சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை என்பது இன்று நேற்று வந்த சிந்தனை அல்ல. அது நீண்டகாலமாகவே அவர்களிடம் இருக்கின்ற ஒரு சிந்தனை தான். இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டிற்கு முழுமையான சொந்தக்காரர்கள் தாம் தான் என்ற ஒரே எண்ணப்பாடு அன்றில் இருந்து இன்றுவரை அவர்களிடத்தே இருக்கின்றது.

ஆக இதனை தற்போதைய அரசாங்கம் மாத்திரம் தான் உறுதிப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற பச்சை, நீலம், சிவப்பு என மைத்திபால அனைத்து ஆட்சியாளர்களும் இதனைத் தான் செய்கின்றார்கள். இதனையே இங்குள்ள பலரும் எதிர்கிக்னறனர்.

அது போன்றே அரசிற்குள்ளே இருந்து கொண்டு நானும் எதிர்த்து வருகின்றேன். நீங்கள் அரசின் அமைச்சர்கள் தான். ஆனால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்காக நீங்கள் வெளியே இருந்து போராடுகின்றீர்கள், நாங்கள் அரசிற்கு உள்ளே இருந்து போராடுகின்றோம். ஆகவே, எங்கள் இலக்குகள் ஒன்று தான். ஆகையினால் அரசிற்குள்ளே இருக்கின்ற அமைச்சர் வந்துவிட்டார் என்று அப்பாவியான என்னைக் குறை சொல்ல கூடாது.

இதற்காக நானும் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வெளியெ வரலாம். அவ்வாறு அரசில் இருந்து வெளியே வருவதற்குத் தயாராகத் தான் இருக்கின்றேன். ஆனால் அவ்வாறு வந்தால் அடுத்து என்ன செய்வது என்ற நிலையும் உள்ளது. ஆகவே எமது செயற்பாடுகள் அனைத்தும் கூட்டிணைக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது.

ஆகவே தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கட்சி பேதமில்லாமல் தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனுர்டாக இடைக்கால அறிக்கையும் வெளி வந்துவிட்டது. ஆனால் அந்த அறிக்கை எல்லாம் ஒரு ஆவணமாகவே இருக்கிறது. அதாவது பண்டா, செல்வா ஒப்பந்தம் முதல் டட்லி- செல்வா ஒப்பந்தம், முணசிங்க ஆவணம், சந்திரிகாவின் அரசியல் பொதி, என அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்களுடன் இன்றைக்கு ரணில் விக்கிரமசிங், மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் பேச்சுக்களும் ஆவணங்களும் என அனைத்தும் ஆவணங்களாக நூலகத்தில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனோடு சேர்ந்து இறுதியாக வந்த ஆவணம் தான் இடைக்கால அறிக்கையாகும். ஆகவே எங்களுடைய வேலைத் திட்டங்களை கட்சி பேதங்களுக்கு அப்பாற்றபட்டதாக முன்னெடுத்துச் செயற்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.

...............................

Read more...

அலுகோசு பதவி தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக நீதி அமைச்சு அறிவிதிருந்த நிலையில், அந்த திகதியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆகவே எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சையை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பிரஜை ஒருவரும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். நேர்முகப்பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அரசியல்வாதிகளை விட அரச அதிகாரிகளே ஊழலில் ஈடுபடுகின்றனர். மோசடி ஆணைக்குழு தகவல்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. ஆகவே இன்று மாலை 5 மணி வரை அரச நிறுவனங்களில் சுமார் நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை கிடைத்த முறைப்பாடுகளை நோக்குமிடத்து பெரும்பாலானவை அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மீதே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல மில்லயன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் உயரதிகாரிகள் மீது குறித்த முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறைப்பாடுகளை அவதானிக்கும்போது அரசியல்வாதிகளை விட அரச அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

கோட்டாபய ராஜபக்சவையே மக்கள் விரும்புகிறார்கள் - உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டிய தேவை சகல தரப்பிடமும் உள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார். ஜநாயக பிரவேசமாக கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவேண்டியது தங்களது பொறுப்பு என்று கூறிய அவர், மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்து செயற்படவேண்டியதே ஜநாயக நாடொன்றின் பிரதான குறிக்கோளாகும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


Read more...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கவில்லை - முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. உடுகம்பொல பிரதேசத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் இன்னும் எட்டப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியன இணைந்து, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேற்பாளரை தெரிவு செய்யும் என்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய தெரிவித்துள்ளார்.

Read more...

சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல் - இன்று திருகோணமலை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் விசேட கவனம்

இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை, வழமையை விட அதிகரிக்கவேண்டும் என்று, நீதிபதி மா இளஞ்செழியன் பொலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று கிழக்கு மாகாண கல்வித் பணிப்பாளர் தொடர்பிலான வழக்கு விசாரணை திருகோணமலை மேல் நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையிலே குறித்த உத்தரவை நேற்று நீதிபதி மா இளஞ்செழியன் பிறப்பித்தார்.

புதிய ஆளுநர் நியமனத்திற்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வித் பணிப்பாளராக MKM மன்சூர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது MT நிஸாம் புதிய ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டார். திடீரென தனது பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கல்வித் பணிப்பாளர் MKM மன்சூர் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் கடந்த 5 ம் திகதி இடைக்காலத் தடை வித்தித்திருந்தது.

இந்தநிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையாகும் சட்டத் தாரணி MC சபருலாவிற்கு மரண அச்ச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில், இன்று திருகோணமலை மேல் நீதி மன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

நாங்கள் எல்லாம் சரியாக செய்கின்றோம், அவர்கள் இல்லை. - ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன்

ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார்.

அரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாக,
அரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையே
என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ நா மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்ட ஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் எனவும் அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய மக்களும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார். மேலும் அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிப்பதாகவும் இது அத்தகைய பிரச்சினை அல்ல என்றும் மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன் அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையை சுட்டிக்காட்டினார். ஆனால் அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கினை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்ப்பது தலைவர்களின் கடமை என தெரிவித்த இரா.சம்பந்தன், அரசியல் விருப்பம் இல்லாமையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்கு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கிறார்கள் என்று தெரிவித்த இரா.சம்பந்தனுக்கு சரியானதை செய்வது தொடர்பில் சிங்கள தலைவர்கள் பின்வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள் என்றும் நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே என்றும் இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்பதனையும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஐநாவுக்கான அரசியல் துறை செயலாளர் நாயகத்தை இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.


Read more...

Monday, March 18, 2019

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி - தீவிரவாத தாக்குதலா என விசாரணை

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான துப்பாக்கிதாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது "தீவிரவாத தாக்குதல் போல தெரிகிறதாக" அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த 37 வயது கோக்மென் டானிஸ் என்னும் நபரை போலிஸார் தேடு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு, 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தின் தீவிரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பாளர், உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நெருக்கடி நேர குழு ஒன்றை அமைத்துள்ளார். நகரம் முழுவதிலும் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து "மிகுந்த கவலைக் கொள்வதாக" தெரிவித்த அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே, இந்த வாரத்தில் நடைபெற இருந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தார்.

காயமடைந்தவர்களுக்கு உதவ யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் உள்ள அவசர சிகிச்சை அறைகளை திறந்து வைக்குமாறு பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்து கட்டடங்களும் மூடப்பட்டுள்ளன. யூட்ரெக்ட் சென்ட்ரல் நிலையத்திற்கு எந்த ரயிலும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் நகரத்தில் உளள மசூதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

"ஒரு ஆள் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்" என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்தார்.

காயடைந்த பெண் ஒருவரை கைகள் மற்றும் அவரது ஆடைகளில் ரத்தம் வழியப் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் ஒருவர் கூறினார்.

"அவரை என் காருக்கு அழைத்து வந்து உதவினேன். போலீஸ் வந்தோது அவர் மயக்கத்தில் இருந்தார் " என அவர் குறிப்பிட்டார்.

எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் தெரிய வரவில்லை.




நன்றி பிபிசி தமிழ்

Read more...

நியுசிலாந்து கொலையாளி தனக்காக தானே வாதாடவுள்ளார். ஆயுதங்கள் இணையத்தினூடாக கொள்வனவு.

கிறிஸ்ட் சர்ச் பகுதியிலிருந்த இரு பள்ளிவாயல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி பிரெண்டன் டாரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ''டாரண்ட் மனதளவில் தடுமாறி இருக்கிறார். அவர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார்'' என்றார்.

அவ்வாறு நேர்ந்தால் அவர் தீவிரவாதக் கருத்துகளை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்று அச்சம் எழுந்துள்ளது.

இதேநேரம் சந்தேச நபரான் டாரன்ட் ஆன்லைனிலிருந்து துப்பாக்கி வாங்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனமான கன் சிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) கன் சிட்டி கூறும்போது, ''கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய டாரண்ட் ஆன்லைனிலிருந்துதான் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவர் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆன்லைனில் விற்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக்கு உரிமம் வைத்துள்ளனர். இதில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதற்கான ஆரம்ப வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சம்பிக்க, கருவுக்கு வெட்டு - ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில், பிரதமர் வேட்பாளர் சஜித்...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வேறு யாரும் இல்லை எனவும் அது ரணில் விக்ரமசிங்கவே எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பின் சார்பில் கோட்டபாய ராஜபக்ஸ முன்னிலையானால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை வெற்றிக்கொள்ள பிரதமருக்கு இலகுவாக இருக்கும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் எண்ணமாக உள்ளது.

கிராமத்து வாக்குகளை கவரும் வகையில் வாக்களார்களை வாக்குச் சாவடி நோக்கி இழுத்து வரும் நோக்கில் சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளராக பெயரிட ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த நிலமைகளுக்கு மத்தியில் கரு ஜயசூரிய, அதுபோல் சம்பிக்க ரணவக்க போன்றோரும் ''ஜனாதிபதி'' கனவுடன் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஜனாதிபதி பதவி குறித்து அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நகர்வு என்ன என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருவதாகவும், கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

சட்டத்தரணியாக செயற்படுவதற்கு நாகானந்த கொடிதுவக்குவுக்கு உச்ச நீதிமன்று 3 வருட இடைக்காலத்தடை!

நாகானந்த கொடித்துவக்கு இலங்கையில் ஊழல் அழிக்கப்படவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றார். இதன் பொருட்டு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தனிநபராக வழக்குகளை தாக்கல் செய்து போராடி வருகின்றார்.

அதேநேரம் அவர் இலங்கையின் நீதித்துறையான ஊழல் நிறைந்தது என்று பொது அரங்கில் விமர்தித்தும் வருகின்றார். சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான வழக்கொன்றின் வழக்குகளை விசாரணை செய்த உயர் நீதிமன்றில் நீதிபதிகளில் ஒருவரை அவர் மன்றில் நேரடியாக விமர்சித்திருந்தார். இதுவிடயமாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடைமையாற்ற இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் நாகானந்த கொடித்துவக்கு தன்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிலையிலேயே பிரமத நீதியரசர் நளின் பெரேரா, சிசிர டி ஆப்ரு ஆகிய நீதிபதிகளின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்த காலத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக கடமையாற்றிய விஜித் மலல்கொட முன்னிலையில் சுங்க வழக்கு ஒன்று விசாரணகை்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விஜித் மலல்கொடவை சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதமாக தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தமைக்கு எதிராக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த வழக்கின் குற்றவாளியாக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இனங்காணப்பட்டு அவருக்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read more...

நான் மனித உரிமைகளை மீறவில்லை. எனக்கு பின்னால் வந்தவர்கள் செய்திருக்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா

இலங்கையின் யுத்த காலப்பகுதியில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக, செய்திகள் வெளிவருகின்றன. எனினும் தமக்கு பின்னர் அதாவது, யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த காலப்பகுதியின் போது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஒருபோதும் ஈடுபடவில்லை. அதற்கான முதன்மையான காரணம், யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத் தலைமை மற்றும் அரசாங்கம் என்பன அனுமதியளிக்கவில்லை என்பதாகும்.

எனினும் முப்பது ஆண்டுகால யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், சில சட்டவிரோதச் செயல்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட சரத் பொன்சேகா,
அக் காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய குற்றங்களுக்கான தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுத்தார்.

எனினும் மேற்படி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான தீர்வுகள் சர்வதேசம் இன்றி, உள்நாட்டு நீதிமன்றத்தினூடாகவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார்.

Read more...

அர்ஜூன மகேந்திரன் விடயத்தில் சிங்கப்பூர் நேர்மையாக செயற்படவில்லை. சாடுகின்றார் மைத்திரி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக வகைகூற வேண்டிய முக்கிய நபரை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமாக நான் சிங்கப்பூரின் பிரத மந்திரியிடம் பிரத்தியேகமாக பேசியபோதும், இதுவரை அவர்கள் எமது வேண்டுதலுக்கு செவிசாய்ததாக தெரியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சாடியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதி 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தாம் அதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பல்வேறு தீர்மானங்கள் அடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கண்டறிவதற்கு தான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது ஆணைக்குழுக்கள் பற்றி அதுவரையில் மக்கள் மத்தியில் இருந்து வந்த நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலவேளைகளில் அவர்களுக்கெதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அதனை அரச நிர்வாகத்தில் இடம்பெற்ற பலவீனமான நிகழ்வாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி எண்ணக்கருவினுள் ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்குள்ள முக்கிய சவாலாக ஊழல், மோசடிகள் இருக்குமானால் அதனை ஒழிப்பதற்கு நாட்டை நேசிக்கின்ற அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பாதுகாப்பதன்றி நாட்டின் உண்மையான நிலைமை பற்றிப் பேசி அவற்றிற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அத்தகைய நிலைமையில் எவரும் இதுபற்றி வெளிப்படையாக பேசுவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு தெளிவான நிகழ்ச்சித்திட்டமொன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறந்த அரச சேவையின் மூலம் இலஞ்ச, ஊழல் இல்லாத சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராக தண்டனை வழங்குதல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டம் இதன்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இலஞ்ச, ஊழலை இல்லாதொழித்து அதன் மூலம் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றாடல் ரீதியான பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும். சுமார் ஒரு வருட காலமாக இலஞ்ச, ஊழல் சட்டத்தில் இலஞ்ச, ஊழலுக்கான தண்டனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு பலவீனமான சட்டதிட்டங்களுடன் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் திருத்தப்பட்டு அதற்கேற்ப இந்த புதிய திட்டங்கள் அடங்கிய ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நிறுவனக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழித்தல், தண்டனை முறைமைகள் மற்றும் சட்ட கொள்கைகளை திருத்துதல் ஆகிய முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சுமார் 40 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொள்வதற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூன்று நிக்காயாக்களின் சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சகல மத தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட சட்டத்துறை முக்கியஸ்தர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பீ டெப்லிட்டி, ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read more...

பிரிந்த வடக்கில் தமிழருக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவே இல்லை - கிழக்கு தேச விடுதலை இயக்கம்

கிழக்கு தேசத்துடன் இணைக்கப்படாத வடக்கில் தமிழர்களுக்கு அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை என்று கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார்.

இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இலங்கை ஒற்றையாட்சி நாடாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் கிழக்கு தேசத்தை வடக்கோடு இணைக்காமல் வடக்குக்கு அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கிழக்கு மக்களின் சுய நிர்ண உரிமை உதாசீனப்படுத்தப்பட்டு, வடக்கோடு கிழக்கு தேசம் இணைக்கப்படுவதில் கிழக்கு தேச விடுதலை இயக்கம் முரண்படுகிறது.

முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பது வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம்களினதும் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கின்ற பொறிமுறைகளையும், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த கூடிய வழிமுறைகளையும் அடையாளப்படுத்த கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு, நிதி, நிலம் போன்றவற்றின் மீதான பூரண அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட, சிற்றலகுகளின் பேரலகு ஒன்றை பெற்று கொள்வதற்கான முன்மொழிவையே கிழக்கு தேச விடுதலை இயக்கம் பரிந்துரைக்கின்றது.

கிழக்கு தேசத்தின் தலைநகரமாக கல்முனை உள்ளது. கல்முனையில் உள்ள பிரதேசங்களை ஒன்றிணைத்து கல்முனை நகர சபை 1987 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின் பாரபட்சங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றுக்கு உட்படுவதாக இணைப்புக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரம் கல்முனையின் சன தொகை விகிதத்தில் மாற்றம் ஏற்படாமல், எல்லைகள் மாற்றப்படாமல்தான் எல்லோருக்குமான நீதி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரேயொரு வழி 1987 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படுவதாகும். அதன் மூலம் கல்முனை மக்களின் அச்சத்தை தீர்க்க கூடிய விதத்திலும், சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களை சேர்ந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற கூடிய வகையிலும் தீர்வு கிடைக்க பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிட்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதன் மூலம் சுமூக தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிழக்கு தேச விடுதலை இயக்கம் கோருகின்றது. இது தொடர்பாக அவருக்கு விரிவாக கடிதம் எழுதி உள்ளது.

(எஸ்.அஷ்ரப்கான்).

Read more...

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளதாக, வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே, ஆளுநர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் அதேவேளை, ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக காணப்படுவதனால், வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியாக 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் 14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும், அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளதெனவும், அவர்கள் கூடியவிரைவில் பாடசாலைகளை தெரிவுசெய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி, மஹிந்தவிடம் விடுத்த ரகசிய கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த தரப்பிற்கு ஜனாதிபதி வேற்பாளர் தொடர்பில் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யா விஜயத்தை முடித்து நேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி, இந்த தகவலைத் தனது சகா ஒருவர் ஊடாக மஹிந்த தரப்புக்கு அனுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது. மஹிந்த தரப்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி சிறிசேன, மஹிந்த தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேற்பாளர் தொடர்பில் அறிந்த பின்னர் இரண்டு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது இவ்வாறு இருக்க, மஹிந்த தரப்புக்கு அழுத்தத்தை வழங்கும் வகையில் அரசியல் காய் நகர்த்தல்களை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன், மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளைத் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் மஹிந்த தரப்பின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழ்நிலையை காணக்கூடியதாக உள்ளது.

Read more...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வான் விபத்தில் 4 பேர் பலி

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வான் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது வான் ரக வாகனத்தில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் வானில் பயணித்த மூன்று பேரும், பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்கள். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். இந்த நிலையில் விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

இயக்கச்சி , மாத்தறை, மன்னார், ஜாஎல, கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற இடங்களில் பலர் கைது

யாழ்ப்பாணம் – இயக்கச்சி மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிக்கிடையில் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதாகியுள்ளார்கள்.
குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் 5 பொதிகளில் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே கடற்படையினர் மற்றும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று மாத்தறை – வல்கம இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 430 கிராம் கேரளா கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மன்னார் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 168 போதை வில்லைகளுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துளார்கள். 

இதனிடையே ஜாஎல பகுதியில் போலி இறப்பர் முத்திரிரை மற்றும் போலி ஆவணங்களை தயாரிப்பதற்கான பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த நிலையில் கைதாகினர்.

அவரிடம் இருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்கள் 40 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை

இன்று மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more...

இன்று இறுதி குழுநிலை விவாதம்

நடப்பாண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இலங்கை தூதுக்குழு இன்று பங்கேற்கும் ஐ நா மாநாடு - எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் தூதுக்குழு இன்று பங்கேற்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான தூதுக்குழு இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வுள்ளது. குறித்த குழுவில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களோடு ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸ், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜயசூரிய மற்றும் ஜெனிவாவிற்கான இலங்கைக் குழுவின் அதிகாரிகள் சிலரும் அமர்வில் கலந்துக் கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நடைபெற்றுவரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்திற்கு நான்கு யோசனைகளை முன்வைத்து ஜெனீவாவில் இலங்கை செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் தொடர்ந்தும் இணை அனுசரணை வழங்கக் கூடாது என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி வெளியிட்ட 30/60 அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுளார்.

அத்துடன், இலங்கையில் ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நீதிமன்றம் வெளிநாடுகள் நீதிபதிகள்,மற்றும் விசாரணை அதிகாரிகளின் பங்களிப்புடன் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்டத்தையும், 2018 இலக்கம் ஐந்து மற்றும் 24 ஆம் சட்டத்தையும் ரத்துச் செய்து, அதற்காக இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய சட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜெனீவாவில் இருந்து அவ்வாறான கண்காணிப்பு இடம்பெறுமாக இருந்தால், இலங்கையில் தேர்தல் மூலம் எதர்கான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2015 ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தில் பெரும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி 2012 ஆம் ஆண்டு முதல் மனித உரிமை பேரவையினால் இலங்கை தொடர்பில் பல பிரரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வசே நீதிபதிகள் உள்ளடக்கிய உள்ளக விசாரணை பொறிமுறை மூலம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் 2019 மார்ச் மாதத்துடன் அது நிறைவடைகின்றது. இந்த நிலையில் பிரத்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் மற்றுமொரு புதிய பிரேரணை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யும் அறிக்கை, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்பிக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டாம் திகதி அது பகிரங்கப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தில் உள்ளடங்கிய விடயங்கள், நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாட்டிற்கான இணைப்பு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டமை,காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தேசிய நல்லிணக்க செயலகம் ஆகிய நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் வௌியாகியுள்ள அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com