Wednesday, March 13, 2019

தொழில் பெற்றுதருவதாக கூறி, கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட 13வயது சிறுமி கர்ப்பம்

தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்ட பகுதி ஒன்றில் வசித்து வந்த 13வயது சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபர், அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கபட்டுள்ளதாக பேலியகொட
பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி சந்தேக நபரை, கடந்த திங்கள் கிழமை கொழும்பு அலுத்கடை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு அலுத்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சிறுமியை கொழுப்பில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி ஏமாற்றிய 40 வயதானவர், அச்சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அச்சிறுமி, கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்க்கு வந்த சிறுமியின் உடல் நிலை குறித்து சந்தேகம் கொண்ட அவரது தாய், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கர்ப்பம் தரித்த 13வயது சிறுமி தற்போது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

ரயிலுடன் காரொன்று மோதி ஒருவர் பலி - தெல்தெனிய Bus விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

மாத்தறையில் ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மாத்தறை பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் ரயில் குறுக்கு வீதியில், இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் விபத்துக்குள்ளாகிய காரில் பயணித்துள்ளார்கள். இந்தநிலையில் ரயில் போக்குவரத்து நடைபெறுவதற்கான அபாய சமிக்ஞை ஒலித்தபோதிலும் காரை ரயில் பாதையூடாக செலுத்துவதற்கு முற்பட்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காரில் பயணித்த 53 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, தெல்தெனிய பகுதியில் கண்டியிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று விபத்துக்குள்ளாக்கியத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமைடந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ள நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Read more...

36 பிரதான காரணங்களை முன்வைத்து ஆசிரிய அதிபர்களின் சேவை புறக்கணிப்பு போராட்டம்

அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆசிரியர் – அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு, 3 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட்ட 36 பிரதான காரணங்களை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதிபர் மற்றும் ஆசிரியர் துறையின் சங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சில ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து இன்று பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்கள். இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இன்று காலை 10 மணியளவில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் யோசனைத் திட்டமானது, அரச தரப்பின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலான விசேட ஆணைக்குழுவிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை, எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை, விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதன் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்திற்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரியவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி அமைச்சர்களுக்கு பிறப்பித்த உத்தரவு - இனி கையடக்க தொலைபேசிக்கு வேலை இல்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்களுக்கு புதிய தடை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்ற அமைச்சர்கள்கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தின்போது தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது மற்றும் அழைப்புக்களுக்குப் பதிலளிப்பது போன்ற காரணத்துக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை அங்கீகரித்து கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மத்திய, தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


Read more...

Tuesday, March 12, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினுள்ளும், தமிழ் பிரிவினை- வாதத்தினுள்ளும் சிக்குண்டுள்ள கல்முனை பிரதேச செயலகம். பீமன்.

கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் 1987 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் பிரிவுகளாக பிரிக்கப்பட்டபோது, அங்கே திரு காலித் (அல்லது காலிதீன் சரியாக நினைவில்லை) உதவி அரசாங்க அதிபராக இருந்தார். ஒரு சோனி பாரபட்சம் காட்டுகின்றான் என, அவர் காலத்தில் பேசப்பட்டதாக ஞாபகம் இல்லை. அந்த அலுவலகத்திலே அன்று 90 விழுக்காடு உத்தியோகித்தர்கள் தமிழர்களாகவே இருந்தனர்.

சிரங்குகளை உருவாக்கி அந்த சிரங்கினை உரசி, பெருப்பித்து வாழும் பிச்சைக்காரர்களான அரசியல்வாதிகள் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, வாக்குகளை அபகரிக்கும் நயவஞ்சக
சிந்தனையிலேயே குறித்த உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தை பிரித்துள்ளார்கள் என்பது இன்றைய நடைமுறையை பார்கின்ற போது தெளிவானாலும், நிகழ்காலச் செயற்பாடுகள பிரிந்து தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பலவந்தமாகவே தள்ளுகின்றது.

1993 ம் ஜூலை மாதம் 28ம் திகதி கூடிய அமைச்சரவை, கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) உட்பட்ட 28 உப பிரதேச செயலர் அலுவலகங்களை தரமுயர்த்த அங்கீகாரம் வழங்கியது. (அன்றைய உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சின் ராஜாங்க செயலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.) இருந்த போதும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்லது கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) என்று அறியப்படுகின்ற பிரதேச செயலகம் இன்று வரை தரமுயர்த்தப்படவில்லை.

அது தரமுயர்த்தப்படாமைக்கான காரணம் தெட்டத் தெளிவாகியுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரடியாகவே அதற்கான தடையை போடுகின்றனர். தமிழ் மக்கள் தமது அரச கருமங்களை செய்து கொள்ளக்கூடிய அந்த காரியாலயத்தை தமது விருப்பிற்கேற்றவாறு அமைத்துக் கொள்வதால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள், பின்னடைவுகள், பாதிப்புக்கள் யாது என்று கேட்கின்ற போது நொண்டிச் சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், அரச நிர்வாக திணைக்களங்கள் இன, மத ரீதியாக பிரிக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின், ஓட்டமாவடி , காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் காணப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளை எவ்வித நிலத் தொடர்பு அற்ற முறையில் இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலையம் என்றதோர் வலையம் உருவாக்கப்பட்டமை, திருக்கோயில் கல்வி வலயத்திலிருந்து பிரித்து பொத்துவில் கல்வி வலையத்தை அமைத்துக் கொண்டமை, கல்முனையிலிருந்து பிரித்து சாய்ந்தமருது தனி பிரதேச சபைக்கான கோரிக்கை, கோறளைப்பற்று பிரதேச செயலகத்திருந்து ஓட்டமாவடி தனி பிரதேசம் உருவாக்கியமை தொடர்பான நியாயப்பாடுகள் யாது என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், கடைந்தெடுத்த இஸ்லாமிய அடிப்படை வாதியாக அடையாளம் காணப்படுகின்ற வை.எல்.எஸ் ஹமீத் கூறுகின்ற நியாயம் யாதெனின், புலிப் பயங்கரவாதிகள் தொடர்சியாக முஸ்லிம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அவர்களின் பள்ளிவாசல்களில் கூட அம்மக்களை கொன்றொழித்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என்கின்றார்.

சட்ட முதுமானியான ஹமீத்திடம் நான் கேட்கின்ற கேள்வியாதெனில் இலங்கையின் எந்த சட்டம் இவ்வாறான கோரக்கைக்கு இடம் விடுகின்றது என்பதாகும்.

மேலும் புலிகள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தார்கள், அவர்களை மனித நேயம் அற்று கொன்று குவித்தார்கள் என்பதெல்லாம் நியூட்டனின் 2ம் விதியான , ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கம் உண்டு, என்பதற்கு உட்பட்டது தான். புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களை கொன்று குவிக்கும்போது, அவர்களுக்கு முஸ்லிம்கள் அனுசரணையும் அடைக்கலமும் கொடுத்ததன் பிரதிபலனையே நீங்கள் அனுபவித்தீர்கள்.

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த போது, சகோதரப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அச்சந்தர்ப்பங்களில் துருக்கி தொப்பியணிந்தே புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களையும், மக்களையும் சக இயக்க உறுப்பினர்களையும் கொன்றொழித்தார்கள். அச்சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கிராமங்களில் எவ்வாறு பயங்கரவாதிகளுக்கு செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது என்பதனை சற்று மீட்டிப்பாருங்கள் ஹமீத்.

புலிப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட வன்செயல்களுக்காக முஸ்லிம்களோ, சிங்களவர்களோ ஒட்டுமொத்த தமிழ் மக்களை பழிவாங்க நினைப்பார்களாயின் அல்லது அவர்கள் அதற்கு பொறுப்பாளிகள் என்று கூறுவார்களாயின் அதைப்போல் அறம்கெட்ட செயல் இருக்கமுடியாது. புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையை (படையினரின் எண்ணிக்கையை தவிர்த்து) ஒப்பீடு செய்து பார்ப்பீர்களாயின், புலிகளால் பாதிக்கப்பட்ட முதலாவது இனம் தமிழினம் என்பது எவருக்கும் புரியும். அவ்வாறான நிலையில் புலிகள் செய்த தவறுக்காக தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு குறுக்கே நிற்பது எவ்வாறு நியாயமாகின்றது?

புலிகள் மேற்கொண்ட வன்செயல்களை சுட்டிக்காட்டி தமிழ் மக்களை நோகடிக்க அல்லது பழிவாங்க எத்தனிக்கும் அல்லது தொடர்ந்தும் முஸ்லிம் - தமிழ் மக்களின் உறவில் விரிசலையே ஏற்படுத்த முனையும் ஹமீத் போன்றவர்களே! உங்கள் மனச்சாட்சியை (இருந்தால்) தட்டிக் கேளுங்கள், எத்தனை அப்பாவித் தமிழர்களை முஸ்லிம்கள் கொன்றொழித்தார்கள்?

புலிகள் எங்காவது ஓர் முஸ்லிம் மீது கை வைத்துவிட்டால் உங்கள் கிராமங்களில் தொழிலுக்காக நுழைந்திருந்த எத்தனை அப்பாவி தொழிலாளிகளை கொன்றொழித்தீர்கள். காலை 6 மணிக்கு கூலித் தொழிலுக்கு வந்தவனுக்கு 8 மணிக்கு காலை உணவை கொடுத்து விட்டு மதிய உணவுக்காக தனது உதிரத்தை வியர்வையாக உங்கள் வாசற்படியில் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேரை வெட்டி
கடலில் வீசியிருக்கின்றீர்கள்? இவர்கள் உங்களை நம்பி உழைக்க வந்த பாட்டாளி வர்க்கம். உழைத்து உண்ணும் வர்க்கம். உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற வந்த அப்பாவிகள் கூட்டம்.

அவர்களை தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கொன்று குவித்தீர்களே! அதில் என்ன நியாயம் இருந்தது? புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலிகள் செய்த அராஜகங்களுக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் சீண்ட நினைப்பது அறமற்றது.

அதேநேரம் தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எத்தனை தமிழ் மக்களை எவ்வாறு கொன்றொழித்தீர்கள் என்பதனை, இங்கு பட்டியலிட விரும்பவில்லை. மனச்சாட்சியை தட்டிக்கேழுங்கள்.

மேலும் ஹமீத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கல்முனை நகரம் முஸ்லிம்களின் இதயம் என்றும் அங்குள்ள அரச அலுவலகங்கள் தமது முன்னோர்கள் வழங்கியவை என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்முனை நகரம் கல்முனை வாழ் மக்களின் இதய பூமியாக இருக்கலாம், எவ்வாறு முஸ்லிம்களின் இதயம் மாத்திரமானது?

கல்முனைக்குடி , சாய்தமருது, சம்மாந்துறை , நிந்தவூர் , மாளிகைக்காடு அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை, ஒலுவில் என அத்தனை கிராமங்களில் இருந்தும் வந்தவர்களுக்கு வியாபாரத்திற்காக கடைகள் தமிழர்களால் வாடகைக்கு வழங்கப்பட்டன. சிலர் விலைக்கே வாங்கினர். தற்போது அந்த நகரத்தில் பெரும்பான்மையான வியாபாரிகள் முஸ்லிம்களாகவுள்ளனர். நிலங்களையும் கொள்வனவு செய்துள்ளனர். அந்த நிலங்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டன? என்ற கதை யாவரும் அறிந்த பரகசியம்.

இலங்கையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யாத நகரம் ஒன்று கூற முடியுமா? காலியில், மாத்தறையில், அம்பநாந்தோட்டையில் கொழும்பில், கண்டியில் என சகல நகரங்களிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். எனவே இந்த நகரங்களில் அமைந்திருக்கின்ற பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களின் ஆழுகைக்குள் இருக்க வேண்டும் என்ற கோஷத்தை ஏன் முன்வைக்கவில்லை.

கல்முனையில் அரச அலுவலகங்களை முஸ்லிம்களின் முன்னோர்களே அமைத்தார்கள் என்றால், அதனூடாக ஹமீத் சொல்ல வருவது யாது? யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் தங்களுடைய தாயக காணியில் அரச அலுவலகங்களை அமைத்துக் கொடுத்தார்களா? இவ்விடத்தில் அரச அலுவலகங்களை அமைத்து கொண்டதன் நோக்கம், இன்றைய உங்களுடைய நோக்கம் தானா?

இல்லை. அன்றிருந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கம் அவ்வாறிருந்திராது. கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வடக்கே பெரியநீலாவணைக்கும் தெற்கே மாளிகைக்காட்டுக்கும் மையமாக கல்முனை நகர்ப்பகுதி இருந்தது. அந்த காரியாலங்களை கல்முனைக்குடிக்கு கொண்டு செல்வதால் இரு அசௌகரியங்களை அவர்கள் கணக்கில் எடுத்திருக்கலாம்.

ஒன்று மருதமுனை மற்றும் பெரியநீலாவணை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் அரச கருமங்களுக்காக பயணிக்க வேண்டி வரும் என்ற நியாயமான நோக்கமும், இரண்டாவது கல்முனைக் குடியிலுள்ள அரச காணிகளை அரச திணைக்களங்களுக்கென எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பற்றாக்குறை நிலவலாம். ஆகையால் தமிழர் பிரதேசத்திலுள்ள காணிகளிலேயே அதனை அமைத்துக்கொள்வோம் என்ற, சற்று தமது சமூகம் சார்ந்த நோக்கமாகவும் இருந்திருக்கலாம்.

எனவே அக்காலத்தில் செயற்பட்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை தமது அரசியல் வங்குரோத்து தனங்களுக்காக நயவஞ்சகர்களாக மாற்ற முனைவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அவமானமாகும். குறிப்பாக அஹமட் மற்றும் மன்சூர் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களாலேயே பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதும், அவர்கள் இறுதி வரை தமிழ் மக்களுக்கு தங்களால் முடிந்தவரை விசுவாசமாக இருந்தார்கள் என்பதும் வரலாறு.

அவர்கள் கல்முனையில் அரச அலுவலகங்களை அமைத்தது, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் தமிழரை அடக்கி ஆட்சி செய்தவதற்கான அத்திவாரமாகவே என்று ஹமீத் நியாயப்படுத்துவாரானால், தமிழ் மக்கள் தங்களை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்று முயற்சிப்பதில் தவறு எங்கே இருக்கின்றது?

மேலும் தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் முடியாது என்றும், கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி அமைத்த போதும், அந்த முஸ்லிம் முதலமைச்சர் ஒரு தெருவின் பெயரைக்கூட மாற்றுவதற்கு கையாலகாதவராக காணப்பட்டார் என்றும், ஹமீத் தனது வக்கிரத்தை கக்குவதன் ஊடாக முன்னாள் முதலமைச்சர் நஸீர் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு வரலாற்றை திணிக்க முற்பட்டிருக்கவில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கின்றார்.

ஹமீத் குறிப்பிடுகின்ற 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்ற தெருவின் பெயர் என்ன? தரவை பிள்ளையார் கோயில் வீதி
என்ன பெயர் வைக்க முற்படுகின்றார்கள் ? கடற்கரை பள்ளிவாயல் வீதி.
100 வீத முஸ்லிம்களும், தரவை பிள்ளையார் கோயில் வீதிக்கு எப்போது வந்தார்கள்? எவ்வாறு வந்தார்கள்? என்பது கிழக்கு மாகாணத்தின் எட்டுத் திசையிலுமுள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 90ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் தமிழ் மக்களின் எல்லை கிராமங்கள் மீது முஸ்லிம்கள் எவ்வாறு அரச படைகளின் அனுசரணை பாதுகாப்புடன் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதும் அதன் நோக்கம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களை அண்மித்து வாழ்ந்த தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து அவர்களை உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தி அவர்களது சொத்துக்களை அபகரிப்பதே மேற்படி தொடர் தாக்குதல்களின் நோக்கமாக இருந்தது. அந்த வகையில் கல்முனை தமிழ் மக்களின் எல்லையாக காணப்பட்ட பிரதேசங்கள் மீது, முஸ்லிம் மக்கள் அரச படைகளின் துணையுடன் தாக்குதல்களை மேற்கொள்ளுவர்.

சமைத்த உணவை சாப்பிட்டுக் கொள்ள முடியாது தமிழ் மக்கள் ஓட்டமெடுப்பர். பின்னர் பள்ளிவாசல்கள், ஆலயங்கள் இணைந்து சாமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்வதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தது.

ஆனாலும் அழிவுகள் கணக்கெடுக்க முடியாதவையாக இருக்கும். வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் அவற்றிலிருந்து மக்கள் மீண்டெழுவர். மீண்டெழுந்த அடுத்த இரு மாதங்களில், அதே தொடர் தாக்குதல்.

இவ்வாறு நிலைமைகள் தொடரும் போது, உடைத்து எரித்து நாசமாக்கப்பட்ட குடிமனை பொருட்களை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கான பொருளாதார வசதியையும் மன தைரியத்தையும் இழக்கும் மக்களிடம், ஒரே தெரிவுதான் இருக்கும். அந்த தெரிவு யாதெனில் வீடு வாசலை விற்றுவிட்டு தமக்கு பாதுகாப்பென கருதுகின்றதோர் இடத்தில் குடியேறுவது. இவ்வாறான நிர்ப்பந்தத்தை வன்செயல் ஊடாக உருவாக்கி தமிழ் மக்களை விரட்டி விட்டுத் தான் இன்று தரவை பிள்ளையார் கோயில் வீதியில் 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள்.

தரவை பிள்ளையார் கோயிலில் இருக்கும் பிள்ளையார் அனுபவித்த துயரம் மக்கள் அனுபவித்த துயரத்திலும் கோரமானது. தமிழ் மக்கள் மீது வன்செயலை கட்டவிழ்த்து விட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வன்செயலாளர்கள் பிள்ளையாரை தூக்கி கொண்டு முன்னே இருந்த குளத்தினுள் போடுவார்கள். அதன் பின்னர் குடியேறும் மக்கள் பிள்ளையாரை தேடிப்பிடித்து ஆலயத்தில் வைத்து வணங்குவார்கள். இறுதியாக கொங்கிறீட் போட்டு கம்பியால் பிள்ளையாரை பிணைத்து கட்டி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக கட்டிக்காக்கப்பட்ட ஆலயத்தின் வீதியைத் தான் மாற்றக் கேட்கிறார் ஹமீத். ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் முஸ்லிம் அடிப்படை வாதிகளின் மதவெறிக்கு இவ்விடத்தில் துணை போகாது
உயர்ந்து நிற்கின்றார் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

இறுதியாக இஸ்லாமிய அடிப்படை வாதம் பிரிவினைவாதத்திற்கான அத்திவாரத்தை பலமாகவே போட்டுள்ளது. எனவே தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் அரசியல் தளங்களிலிருந்து இணைந்து வாழவே முடியாது என்ற முடிவு முற்றானது.

தமிழ் அரசியல் தலைமைகள் தமது எதிர் அரசியல் வியூகத்தை மாற்றி ஆழும் கட்சியில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் பலாபலன்களையும் கோடிட்டுக் காட்டுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் காலாகலமாக மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட சகல அரச வளங்கள் மற்றும் வாய்ப்புக்களை தாங்களே அனுபவித்து வந்த நிலையில், தமிழர் தரப்பானது அரசுடன் இணைந்து சென்றதன் ஊடாக அரச வளங்கள் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் தவித்த முயல் அடித்துப் பழகிய முஸ்லிம் அரசியல் தலைமைகள், தங்களுக்கு தேவையானவற்றை நிபந்தனையாக்குவர். தமிழர் தரப்பானது அரசிற்கு ஆதரவு வழங்காத வெறும் எதிர் கட்சியாக இருந்திருந்தால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வேண்டுமானால், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மூடுவதற்கான வர்தமானி அறிவித்தலை வெளியிடு என்ற நிபந்தனையை முஸ்லிம் தலைவர்கள் விதித்திருப்பார்கள்.

ஆனாலும் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அரசினால் முஸ்லிம்களின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழர் தரப்பு அரசுடன் இணைந்திருந்தே இவ்வாறான விடயங்களை சாதிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தினை அரசியல்வாதிகளின் வாக்குகளுக்கான பிச்சை பாத்திரமாக தொடர்ந்தும் பயன்படுத்தாது உடனடியாக இதற்கான தீர்வு காணப்பட வேண்டும். பிரித்தாளும் சக்திகள் தொடர்ந்தும் இவ்விடயத்தை தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்விடயம் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து சகல அரசியல் மேடைகளிலும் பேசப்பட்டிருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இவ்விடயம் தீர்க்கப்படவேண்டும்.

1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கபினெட் தீர்மானத்தை அடுத்து ராஜங்க செயலாளரின் அறிவித்தல் பிரதி.




Read more...

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது

இந்த ஆண்டுக்கான பாதீட்டின், இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில், இந்த ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிராகவும் வாக்களித்திருந்தன.

இலங்கையின் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது பாதீடு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள், கடந்த தினங்களில் ஆரம்பமாகி காரசாரமாக இன்று வரை நடைபெற்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாதீட்டுக்கான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, நாளை முதல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையிலான 19 நாட்கள், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதங்களின் நிறைவில், ஏப்ரல் ஐந்தாம் திகதி மாலை பாதீட்டுக்கான இறுதி நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Read more...

கையூட்டல் பெற்ற உப காவல்துறை அதிகாரிக்கு, 4 வருட சிறைத் தண்டனை

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி 20,000 ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஹவத்த – ஆந்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரியே, இவ்வாறு சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக, குறித்த காவல்துறை உப அதிகாரி, 20,000 ரூபாவை கையூட்டலாக பெற்றுள்ளார்.

எனினும் காவல்துறையினர் கையூட்டல் பெற்றுக்கொண்ட அதிகாரியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சி உத்தரவு பிறப்பித்தார்.

Read more...

மஹிந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, மீளப்பெறப்பட்டது - நீதிமன்றம்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால், இலங்கை முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதனை அடுத்து ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ மற்றும் 48 பேர் உள்ளடங்கலான அமைச்சரவை உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என அறிவித்து, அவர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, இந்த மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய தினம் மனுதாரர்களால், குறித்த மனு மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிபதி அர்ஜூன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரியிருந்த விடயங்கள் தற்போது நிறைவேறியுள்ளதால், மனுவைத் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மஹந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

Read more...

சர்வதேச நாடுகளிடம் ஒருபோதும் தலைகுனியவில்லை - ஐக்கிய தேசிய கட்சி

சர்வதேச சமூகத்திடம் இலங்கை ஒருபோதும் தலைகுனியவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியால் நாட்டில் ஒரு வரவு - செலவு திட்டம் இல்லாத நிர்வாகம் நடைபெற்று வந்தது.

எனினும் தற்போது அரச ஊழியர்கள் உள்ளிட்டவர்கள், நாட்டில் பல சலுகைகளுடன் நிம்மதியாக வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு, ஐக்கிய தேசிய கட்சி, மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. இதன் காரணமாக இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை தலைகுனியவில்லை.

இலங்கை மக்களுக்கும் நாம் சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதேபோல் தான் இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திலும் மக்களை ஏமாற்றாத பல்வேறு திட்டங்களை இந்த அரசாங்கம் முன்வைத்துள்ளது.

எனவே இந்த வரவு - செலவு திட்டத்தை தந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Read more...

நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம் - அனுர பிரியதர்ஷன யாப்பா

தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் ஸ்திரமற்ற கொள்கையே பிரதான காரணம் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தின் மூலம் பெறப்பட்ட கடனால் தான், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.

எனினும் குறித்த கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, இந்த நாடு 2 ஆயிரத்து 222 பில்லியன் ரூபாய் கடனாளியாக இருந்தது.

மஹந்த ராஜபக்ச, 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து, பல்வேறு அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, 2014ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை இந்த அரசாங்கத்திடம் பொறுப்பளித்தார். அப்போது, இலங்கை 7 ஆயிரம் பில்லியன் ரூபாய் கடனாளியாக இருந்தது.

அதாவது, இந்த தொகை வெறுமனே 5 ஆயிரம் பில்லியன் ரூபாயால் தான் அதிகரித்திருந்தது. ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை வருடங்களில் 12 ஆயிரம் பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தவருடம் மீண்டும் 2 அரை பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக் கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்தது.

இது நாட்டின் எதிர்க்காலத்துக்கே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் மக்கள் மீதான வரிச்சுமையையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனால், இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Read more...

முஹமட் சியாம் கொலையின் மரண தண்டனை குற்றவாளிகள் எதிர்வரும் 21ம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்குஎதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்தஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வர்த்தகர் முஹமட் சியாம் கொலை தொடர்பில் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட 6 பேர் தமது மேன்முறையீட்டு மனுவில் கூறியுள்ளனர்.

Read more...

500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை

மொறட்டுவ ராவதாவத்த பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களான தம்பதிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மொறட்டுவை – ராவதாவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 167 கிலோகிராம் நேற்று ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன்பெறுமதி சுமார் 1,800 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீடானது, தம்பதிகளால் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே பன்னிப்பிட்டி வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி – அருவ்வல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல்போன சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான வைரம், கடந்த 5 ஆம் திகதி பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் கெலும் இந்திக எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த வைரத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறான போதிலும் கைப்பற்றப்பட்ட வைரத்தை மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையிடம் பொலிஸார் நேற்று கையளித்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அந்த நடவடிக்கை இடம்பெறவில்லை.

Read more...

மரண தண்டனை நிறைவேற்றாளர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் - நீதி அமைச்சு

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக, அமெரிக்க பிரஜைஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், பொருத்தமான 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார். ஆகவே நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சையில் இரண்டு பேரை தெரிவு செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Read more...

வரவு செலவுத்திட்டத்தை மட்டும் தோற்கடிக்காது, நம்பிக்கை இல்லா பிரேரணையையும் கொண்டு வரவேண்டும் - மேர்வின் சில்வா

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியாலேயே ஜனாதிபதி ஆசனத்தை பெற்றவர். ஆனால் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு தகுந்த பாடத்தைத் புகட்ட வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்றால் வெறுமனனே வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை மாத்திரம் தோற்கடிப்பதால் முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

Read more...

நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் - ஹக்கீம்

வட, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால், சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்படி தெரிவித்தார். இது தேர்தல் வருடமாகும். இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்காவது நாம் முகம்கொடுக்க தயாராகவேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தல் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டதாக அமையப்போகின்றது. இதன்போது மீண்டும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். இதனை மக்களாகிய நீங்கள் செயற்படுத்த வேண்டும். முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் தனித் தனியே செயற்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும், முஸ்லீம் சமூகம் தோற்கக்கூடாது என்ற ஒருமித்த நிலையே எல்லோருடைய அவா ஆகும்.

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். இதன்போது தமிழ் மக்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டால் இன்னும் ஒருபடி மேலே செல்லலாம். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். ஆனால் நாட்டிலோ இப்போது சில்லறைப் பிரச்சினைகள் பல தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் ஆவேசப்பட்டு பேசுவதினால் இரு சமூகங்களும் பிரிந்துவிடக்கூடாது.

ஆகவே பிரச்சினைகள் என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அததைவிடுத்து தனிப்பட்ட முறையில் யாரும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணமுடியாது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


Read more...

எரிபொருள் விலையில் மாற்றம் இடம்பெறவில்லை

நிதி அமைச்சு நேற்று வெளியிடும் என்று எதிரிபார்க்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் வெளியாகவில்லை. நிதி அமைச்சிடம் இருந்து எரிபொருள் தொடர்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக்குழு நேற்றுக் கூடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவுமுதல் எரிபொருள் விலையில் மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரக் குழு கூடி, எரிபொருள் தொடர்பில் புதிய விலை குறித்து தீர்மானத்தை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் கடந்த 10 ம் திகதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைச்சூத்திரம் அமுலாகும்வகையில் அறிவிக்கபடும் என்று எதிரிபார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த விலை மறுசீரமைப்பு நேற்று இடம்பெறவில்லையென நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

1800 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபாஎன பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அண்மையில் 500 கோடி பெறுமதியான வைரத்தைத் திருடியதாகக் கூறப்படும் கெலும் இந்திக்க என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இந்த ஹெரோயின் தொடர்பில் தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர் ஹெரோயின் மீட்கப்பட்ட அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் டுபாயில் கைது செய்யப்பபட்டுள்ள பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷ், குறித்த வீட்டை தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறையில் 24 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த
கஞ்சா போதை பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்கேதநபர்கள், களுத்துறை தெற்கு மற்றும் தர்கா நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

நாட்டின் அரசியல் நிலை குறித்து JVP - TNA கட்சிகளுக்கிடையே சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் அரசியல் நிலை குறித்து கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கே. கோடீஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள்.

அதேபோன்று, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ. லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Read more...

Monday, March 11, 2019

மார்ச் 13 வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை நடத்தினர். ஆசிரியர்களின் இக்கோரிக்கைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கம் காவல்துறையினரை கொண்டு ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் குண்டாந்தடி தாக்குதல் மூலம் ஆசிரியர்கள் ரத்தம் சிந்தி கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி இன்றைய கல்வி அமைச்சரின் சோற்றுப் பார்சல் கூட்டத்தினரால் குப்பைகளை கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான மற்றும் பைத்தியக்கார தனத்திற்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 22 வருடங்களாக ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் உரிய சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை 1994 ஆம் ஆண்டு ஓரளவு சமந்தா சம்பளத்தை பெற்ற ஆசிரியர்கள் 1994 ஆம் ஆண்டு B.C பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பிரகாரம் பாரிய முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது இதன் மூலம் நம் நாட்டில் அரசு ஊழியர்களில் மிக குறைந்த சம்பளத்தை பெறுபவர்கள் ஆசிரியர் அதிபர்களாவர், கடந்த 22 வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விபரம்
முதலாம் வகுப்பு ரூபா 1498/=,
தரம் 2.1 ரூபா 1305/=
தரம் 2.2 ரூபா 1110/=
தரம் 3.1( பட்டதாரி) ரூபா 1073/=
தரம் 3.1 (விஞ்ஞான பீடம்) ரூபா 1010/=
தரம் 3. 1 (இரண்டு வருட டிப்ளோமா) ரூபா 924/=
தரம் 3.11 ரூபா 924/=
அதிபர்களின் ஒரு நாள் சம்பளம்
முதலாம் வகுப்பு ரூபா 1544/=, இரண்டாம் வகுப்பு ரூபா 1334/=
மூன்றாம் வகுப்பு ரூபா 1176/=

அதுமட்டுமல்லாது 2014 10 22 ஆசிரியர் சேவை யாப்பு மற்றும் அதிபர் சேவை யாப்பு ஆகியவற்றின் ஊடாக 30 மாத நிலுவை சம்பளத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள் இதன் மூலம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பள தொகையான ரூபா 22500/=, முதல் ரூபா90000/= வரையான தொகை அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றது இது அதிபர் ஆசிரியருக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

எனவேதான் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்த நாட்டின் அதிபர் ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றது. தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிய ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் முக்கிய கோரிக்கைகளான

• 22 வருட பிசி பெரேராவின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரிக்கவும்
• புதிய துணைவிதிகள் ஊடாக கொள்ளையடித்த 30 மாத கால நிறுவத் சம்பளத்தை வழங்கக்கோரியும்
• சகல ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்கும் படியும்
• 2016க்கு பின்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவும்
• பாடசாலைக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும். பாடசாலை நிர்வாகத்திற்கு இடையூறாக இருக்கும். ஆவணங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட மேலதிக வேலையை விட்டு நீக்கி கொள்வதற்காகவும்
• பாடசாலை பராமரிப்புக்காக., பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கி கொள்வதற்காகவும்

மார்ச் மாதம் 13ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளினதும் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து விட்டு தங்களது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொள்ளும்படியும், போராட்டத்தை சீர்குலைக்க அரசியல் மட்டங்களிலும் இனவாத தொழிற்சங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே ஆசிரியர்கள் எச்சரிக்கையாகவும் தெளிவோடும் போராட்டத்தை வெற்றி பெற செய்ய ஒன்றிணைய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்.




Read more...

சாய்ந்தமருதில் மு.கா கூட்டம் குழப்பப்பட்டது ஏன் ? இது அல்லாஹ்வின் தண்டனையா ? அங்கு கட்சியில் இணைவதற்கான தகுதி என்ன ?

சாய்ந்தமருதில் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் வட்டார புனரமைப்பு என்ற போர்வையில் ஓர் கூட்டம் நடந்ததாகவும், அது குழப்பபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நான் பிறந்து வாழ்கின்ற குறித்த எனது வட்டாரத்தில் நடைபெற்ற குறித்த கூட்டம் குழப்பப்பட்ட செய்தி வெளியானதன் பின்புதான் இவ்வாறான கூட்டம் நடைபெற்றதை அறியக்கூடியதாக இருந்தது.

அவ்வாறாயின் இந்த கூட்டம் யாருக்கு ? இதுக்கு பெயர்தானா கட்சி புனரமைப்பு ?

அண்மையில் சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் அவரது கட்சி புனரமைப்பு கூட்டங்கள் நடைபெற்ற போது அதனை யாரும் குழப்பவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசின் கூட்டம் நடைபெற்றால் மட்டும் ஏன் குழப்பப்படுகின்றது ?

சாய்ந்தமருதில் மு.கா அதிகாரிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனரஞ்சகம் இல்லாத சுயநலவாதிகளின் கைகளில் கட்சி அதிகாரம் இருக்கின்றதுதான் இதற்கு காரணமாகும்.

அத்தோடு இந்த கூட்டத்தை குழப்பியவர்களும் முஸ்லிம் காங்கிரசின் தீவிர போராளிகளாக இருந்து ஓரம்கட்டப்பட்டவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.

சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் எழுதப்படாத ஓர் சட்டம் உள்ளது. அதாவது குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று குறித்த ஒரு சிலரது கைகளில் கட்சியின் அதிகாரம் உள்ளது.

இவர்களது விருப்பத்தை மீறி முஸ்லிம் காங்கிரசுக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு தலைவர் மூலமாக யாராவது கட்சிக்குள் உள்வாங்கப்பட்டால் எப்படியாவது வெட்டிக் குத்தி குதறி வெளியேற்றி விடுவார்கள்.

அவ்வாறாயின் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசில் இடம் கிடைப்பதென்றால் என்ன தகுதி வேண்டும் ?

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களது குடும்ப உறவினர்களாக இருக்க வேண்டும் . அவர் தூரத்து சொந்தமாக இருந்தாலும் பருவாயில்லை.

அத்தோடு தலைவருடன் தொடர்பு இருக்க கூடாது. அரசியல் அறிவு இருக்க கூடாது. நியாயத்தை தட்டிக்கேட்டு விவாதிக்க கூடாது. மார்பை நிமிர்த்தி நடக்க கூடாது. அதிகாரிகள் எதனை பேசினாலும் வாய்மூடி மௌனியாக இருப்பதுடன் “ஆமாம் ஆமாம்” என்று கூறுவதற்கு மட்டும் வாயை திறக்க வேண்டும்.

தாங்கள் கட்சியின் மூலமாக எதனை அனுபவித்தாலும் அதனை யாரும் கண்டுகொள்ளக்கூடாது. சுருக்கமாக கூறப்போனால் ஓர் அடிமயாக அல்லது பாமரமகனாக மட்டும் இருத்தல் வேண்டும். அதாவது பிரமுகராக இருக்க கூடாது.

எனவேதான் இவர்கள் அல்லாஹ்வை மறந்ததுடன், எப்போதாவது மரணிக்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் துளியளவும் இவர்களிடம் இல்லை. அதனால் தாங்கள்தான் கட்சியின் காவலர்கள் என்று போலி வேஷம் போடுகின்ற இவர்களை அல்லாஹ் தண்டிக்கின்றான்.

அதாவது நாங்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும். வேறு திறமையானவர்கள் யாரும் இந்த கட்சியில் வந்துவிட கூடாது என்று நினைத்து கட்சியை அழித்து வருகின்ற இவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் தண்டனைதான் தொடர்ந்து கூட்டம் குழப்பப்படுவதாகும்.

மற்றவர்களுக்கு இவர்கள் சதி செய்ய, இவர்களுக்கு அல்லாஹ் சதி செய்கின்றான்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Read more...

வாக்குறுதி வழங்கியபடி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் - அரசாங்க தரப்பு

தாம் வாக்குறுதி வழங்கியபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படும் என, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்த விசேட கொடுப்பனவு எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல், பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அமைச்சரவைப் பத்திரம், அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக நவீன் திஸாநாயக்க கூறினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் விசேட கொடுப்பனவுக்கான எந்த ஒதுக்கங்களும், அண்மையில் தயாரிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும் தாம் வாக்குறுதி வழங்கியபடி 50 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என, அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விசேட கொடுப்பனவு, ஒரு வருடத்திற்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முன்னாள் கடற்படை தளபதியிடம், எட்டுமணிநேர விசாரணை - குற்றப்புலனாய்வு திணைக்களம்

கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் நிமித்தம், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட இன்றைய தினம் குற்றப்புலனாவு திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9 மணியளவில் கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வசந்த கரன்னகொடவிடம், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் எட்டுமணிநேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2008 முதல் 2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டனர். கடத்தப்பட்டவர்களில் 5 தமிழ் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த வழக்கின் 14ஆவது சந்தேக நபராக தமது பெயர் இடம்பெற்றதை அடுத்து,, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எந்த நேரத்திலும் தம்மை கைது செய்யக்கூடும் என்பதால், வசந்த கரன்னகொட தலைமறைவாகியிருந்தார்.

எனினும் திடீரென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்து சரணடைந்தார்.

இந்த நிலையில் முன்னாள் கடற்படை தளபதி கரன்னகொடவைக் கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணை விடுத்தது.

நீதிமன்றத்தின் மேற்படி அழைப்பாணையை அடுத்து, இன்றைய தினம் குற்றப்புலனாவு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொ, அங்கு எட்டுமணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

விசேட மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம் - தலதா அத்துகோரல

மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோடி தொடர்பில் ஆராய்தவற்கான விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றங்கள் மூன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதலாவது விசேட நீதிமன்றம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறி;பிடத்தக்கது.

Read more...

ரயில்களில் யாசகம் பெற்று மூன்று வீடுகளைக் கட்டிய குருடர்.

கம்பஹா - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று, மூன்று வீடுகளைக் கட்டிய கண்பார்வையற்ற யாசகர் ஒருவர் குறித்த உண்மைச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கம்பஹாவைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த யாசகர், மாத வருமானமாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேலாக சம்பாதித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு கோட்டை நிலையத்தில் வைத்து குறித்த யாசகர், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். "பொது இடங்களில் பிச்சை எடுக்கக்கூடாது" என்று தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றது.

அங்கு அவரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அதிர்ச்சியான தகவல்கள் குறித்த யாசகர் மூலமாக வெளிவந்துள்ளன.

கடந்த 25 வருட காலமாக, கம்பஹா - கொழும்பு ரயில் நிலையங்களுக்கிடையில், தான் யாசகம் பெற்று வருவதாகவும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நான்கு, ஐந்தாயிரம் ரூபா வரையிலும் சம்பாதித்து வருவதாகவும் யாசகர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், இவ்வாறு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, மூன்று வீடுகள் கட்டியுள்ளதுடன், அவற்றில் இரண்டினை மகள்மாருக்கு சீதனமாக எழுதிக் கொடுத்துவிட்டு, மற்றொரு வீட்டில் தான் வசித்து வருவதாகவும் யாசகர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாசகரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ருபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், யாசகம் பெறுவதற்காக தினமும் முச்சக்கரவண்டியிலேயே ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் அதிர்ச்சி மாறாத கண்களோடு கேட்டுக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், யாசகரை அழைத்துச் செல்வதற்காக அவரது மகள் ஒருவரை அங்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதன்படி, யாசகரது மகள் கார் ஒன்றில் வந்து இறங்கியுள்ளதுடன், அவருடன் அவரது தந்தையாரான குறித்த யாசகர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தனக்குக் கண்பார்வை தெரியாமல் போனமையானது, தான் தனது வாழ்வில் பெற்ற பெரும் ஆசீர்வாதமாகவே அமைந்துள்ளதாக, அந்த யாசகர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இலங்கை 2020 இல், கண்ணிவெடி அற்ற நாடாக மிளிரும் - மகேஷ் சேனாநாயக்க

இலங்கை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாறும் என, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சாமானத்தை நிலைநாட்டுவதற்கு தம்மை அர்ப்பணித்து பணியாற்றியவர்கள், இராணுவத்தினராவர். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் தற்போது இலங்கையின் அபிவிருத்திக்காக மீண்டும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்

இராணுவத்தினரால் வழங்கப்படும் உன்னதமான சேவைகளில் கண்ணிவெடி அகற்றலும் ஒன்றாகும். இலங்கை இராணுவத்தினரின் முயற்சியால், இலங்கை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட நாடாக மிளிரும்.

தற்போது உருவாகிவரும் புதிய தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு செல்கிறது. அதற்கு ஏற்றவகையில் நாமும் வளர வேண்டும். ஆனால் அதனை அழிவுப் பாதைக்கும் நாம் கொண்டு செல்வது தவறானதாகும்.

அத்துடன் இங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப வள மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விழாவில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜனநாயகத்தை பாதுகாக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரிதும் உதவியது - ஐக்கிய தேசிய கட்சி

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரிதும் உதவியதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துலா மஹ்ரூப் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம், இன்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அப்துலா மஹ்ரூப், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயகத்திற்கான பங்களிப்பை நினைவூட்டினார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்த பல அரசியல் கட்சிகள் போராடின.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயகத்தை வெற்றி கொள்ள கடுமையாக போராடின. இக்கட்சிகள் தமது மக்களுக்காக நீதிமன்றம் வரை சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தின.

இதற்காக நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மையின கட்சிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று சிறுபான்மையின மக்களின் ஆதரவின்றி எவராலும், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என, ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துலா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Read more...

மூன்று வயதுக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மூன்று வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான 19 வயதான சிவானந்தம் ஜனு என்ற இளம் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீட்டிக்கு சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இளம்தாயின் இறப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

மஹிந்த ராஜபக்ஷவை எந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவர யோசிக்கிறார்கள் - டிலான் பெரேரா

எவராக இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ ல.சு.க.யின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள மஹிந்த ராஜபக்ஷவையும், மைத்திரிபால சிறிசேனவையும் இணைத்துக் கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்றே அவசியமானது. சிலர் மஹிந்த ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதாக கூறிவருகின்றனர். இப்படி கூறுகின்றவர்கள் எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவேயில்லை.

எனக்கு தெரிந்த சட்டத்தின்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

Read more...

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் - நிதி அமைச்சு

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப புதிய விலைகள் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை நாள் என்ற காரணத்தினால், இன்றைய தினம் எரிபொருள் விலை சூத்திரம் நடைபெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பின்னால் ஓடக்கூடாது - யாழில் பிமல் ரத்னாயக்க

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் ஒரு கட்சி என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக்கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என்றும், யாழில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்குஆதரவு அளிக்கப்போவதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்து வினவியபோது பிமல் ரத்னாயக்க மேற்படி தெரிவித்தார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பு விவாதம் நடைபெற்றபோது, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக கலந்து கொண்டிருந்த நான் நேர்மையாக செயட்பட்டேன்.

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். நாட்டின் சமத்துவத்தைப் பேணும், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என்ற நிலையிலேயே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவோ இனவாத ரீதியாக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். மறுபுறத்தில், ரணில் விக்ரமசிங்க கரட்டைக் காட்டி, தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கவனித்துக்கொண்டார்.

எனவே, நாட்டின் புதிய அரசியலமைப்பு ஒன்று வரக்கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருக்கின்றார். அந்த நிலையைத்தான் தற்போதும் பிரதமர் கைக்கொண்டு வருகின்றார். எனவே இதில் இருந்து அறிவது யாதெனில், இனியும் புதிய அரசியலமைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே.

இன்றும்கூட அரசியல் சாசனம் பற்றிப் பேசப்படுவதும் இல்லை, அரசியல் சபை கூடுவதும் இல்லை. அதற்கான எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்காத நிலை இருக்கின்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் எந்த அடிப்படையில் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிக்கின்றீர்கள்? என்றுதான்.

அதனால், நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கும் தயார். ஆனால், ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்துவிட்டு, மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுகிறோம். முக்கியமாக, ஒரு சில தேசிய பிரச்சினைகளை தீர்க்கின்ற செயற்பாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நல்ல முன்மொழிவுகளை வைத்திருக்கின்றார். அவற்றை, பிரதமர் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

அண்மைய நாட்களில் நாட்டில் சதி ஏற்பட்ட போது, அதை முறியடிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அமைப்புக்கள் இவற்றிற்கு எதிராக செயற்பட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித் திட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், முன்னையவை போன்று ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கும், ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள். அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளை அணிதிரட்டிய புதிய பாதையில் அணிதிரள்வதற்கான காலம் உருவாகியுள்ளது என்று நாங்கள் கூறுகின்றோம்,.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பின்னால் ஓடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more...

போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் - டொக்டர் ராமதாஸ்

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற வெளிநாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் குறித்த விசாரணைக்கு இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, ஆகிய நாடுகள் தமது வலியுறுத்தலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மேற்குறித்த நாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று டொக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விளக்கமளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை தண்டிக்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அசமந்த போக்கிற்கு அப்பால் ஐ நா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு சாதகமான திருப்பமாகும். அத்துடன், போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, ஆகிய நாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர் வரும் 20ஆம் திகதி விவாதம் நடத்தப்பட்டு 21ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com