Tuesday, October 9, 2018

தெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.

முகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான்.

கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன யாழ்பாணம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நடமாடும் சேவைகள் மற்றும் அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு இரு நாட்கள் தங்கியிருந்த அமைச்சருக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பிரர் சரவணபவான் தனது வீட்டில் பிரமாண்டமான விருந்துபசாரம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்விற்கு வடமாகாணத்தை சேர்ந்த அரச உயர் அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவரான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவராஜா கஜன் என்பவர், தெற்கிலிருந்து வந்திருந்த அமைச்சருக்கு மது விருந்துபசாரம் கொடுத்தது சரியா- தவறா என தனது முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இவ் ஒன்றுகூடலின்போது தனது வீட்டில் இடம்பெற்ற நிகழ்வை கட்சியின் உறுப்பினர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக அம்பலப்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார் சரவணபவான்.

முகப்புத்தகத்தில் சரியா-தவறா என்ற கேள்வியை எழுப்புவது குறிப்பிட்ட நபரின் கருத்துச்சுதந்திரம் எனக் கூறப்பட்டபோது, மது விருந்துபசாரம் வழங்குவது தனது தனிப்பட்ட விவகாரம் என்றும், அது தொடர்பாக கருத்துரைப்பது தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் வாதிட்ட சரவணபவான், கட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், தான் குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறையிடவுள்ளதாக மிரட்டியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் மது விருந்துபசாரங்களை மேற்கொள்ள முடியாது என்றும் , அதன் அடிப்படையில் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றபோது, சரவணபவான் விவாதத்தை கைவிட்டதாக தெரியவருகின்றது.

இதேநேரம் குறித்த கேள்வியை எழுப்பிய சிவராஜா கஜன் என்பவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி கள உத்தியோகித்தராகவும் கடமையாற்றி வருகின்றார். குறித்த கேள்வியை எழுப்பி மறுநாள் அந்த முகநூல் பதிவு பிரதியை அமைச்சரிடம் எடுத்துச் சென்ற பா.உ சரவணபவான், உங்கள் அமைச்சின் கீழ் வரும் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் நபர் ஒருவர் தங்களுக்கு விருந்துபசாரம் வழங்கியதை விமர்சிக்கின்றார் என்றும் அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் கோரியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும பாராளுமன்ற ஒழுக்கவியல்கோவை மற்றும் அரச உயிரதிகாரிகளின் ஒழுக்கவியல் கோவை யின் பிரகாரம் குறித்த விருந்துபசாரமானது தண்டிக்கத்தக்கதாகும்.

Read more...

தெற்காசியா முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா வில் இந்தியா காட்டம்.

தெற்காசியா முழுவதும் அல் கய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்பு களால் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய பிரதிநிதி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில், ‘சர்வதேச தீவிர வாதத்தை ஒழிப்பதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கைகள்’ விவகாரங் களைக் கவனித்து வரும் 6-வது கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய முதன்மை செயலர் மற்றும் சட்ட ஆலோசகர் எட்லா உமா சங்கர் பேசியதாவது:

இந்த தீவிரவாத அமைப்புகளுக்குள் அதிகரித்து வரும் தொடர்புகள், எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள், தீவிரவாத கொள்கை களைப் பரப்புதல், நவீன தொழில் நுட்பங்களை நாசவேலைகளுக்குப் பயன்படுத்துதல் போன்றவை அதிகரித்து வருகின்றன.

தீவிரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் (பாகிஸ்தான்) ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருகின்றன. தீவிரவாதம் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்.

‘‘சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப் பதற்கு, சட்டப்பூர்வமாக தீர் மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வால் முடியவில்லை’’

சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். அப்போதுதான் தீவிர வாதத்துக்கு எதிரான நடவடிக்கை களை பலமாக செயல்படுத்த முடியும். தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு தஞ்சமளித்து ஆதரவளிப்பவர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பகிரங்கப்படுத்த சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இதுகுறித்து ஒன்றாக கூட்டம் நடத்தி விவாதித்து சட்டரீதியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதி, அவர்களுக்கு தஞ்சம் அளிப் பவர்கள், உதவி செய்பவர்கள் என ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் அழிக்க வேண்டும். ஆனால் அதற் கான சட்டப்பூர்வ தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற ஐ.நா.வால் முடியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக சர்வ தேச தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை கள் குறித்து ஐ.நா. சபையில் பல முறை விவாதங்கள் நடைபெற் றுள்ளன. ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. ஐ.நா.வின் பொருளாதா தடை கமிட்டியின் செயல்பாடுகள், முடிவுகள் எதிர்பார்க்கும் பலனை கொண்டுவரவில்லை.

இவ்வாறு எட்லா உமாசங்கர் பேசினார்.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் அசார் மசூத்தை சர்வ தேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதை சீனா தடுத்து வருகிறது.

இதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய எட்லா உமாசங்கர், ‘‘தீவிர வாதத்தின் தீவிரத்தை உறுப்பு நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டரீதியிலான தீர்மானத்தை விரைவில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியம்’’ என்றார்.

Read more...

20வது அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஏதுவாக ஜேவிபி யினரால் தனிநபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் அதில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, October 8, 2018

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் 5000 உள்ளதாக கருத்து வெளியிட்டவர் சீஐடி விசாரணையில்.

முன்னாள் புலிகள் மற்றும் புலிகளிலிருந்து விலகியோர் முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் தங்கள் ஆயுதங்களை விற்றுள்ளதாகவும் அவ்வாறு விற்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் 5000 வரை முஸ்லிம்களிடம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கடந்த 20ம் திகதி ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு எதிராக முறைப்பாடுகளும் செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்பராச இன்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டள்ளார். விசாரணைக்கென சிஐடி யினரின் தலைமையகத்திற்கு சென்ற அவர் பல மணி நேரம் சென்றும் திருப்பவில்லை என்றும் தடுத்துவைத்து விசாரிக்கப்படலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

Read more...

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஆசிரியரின் உடலம்.

ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கலாச்சாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் இவர் சம்பவதினமான இன்று வழமை போல கலாச்சாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் காலை 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் குறித்த நபர் விடுதியில் சென்று அங்குள்ள மின்சார விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த அறையில் தங்கிருந்த ஆசிரியர் ஒருவர் குவளை ஒன்றை எடுக்க சென்றபோது, இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையினை கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தனர்.

இவர் காதல் பிரச்சினையினால் தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Read more...

சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கான தடயங்களும். பகுதி 2

எதிர்பாராதமுறையில் தலைவர் அஸ்ரப் அவர்கள் மரணமடைந்ததனை தொடர்ந்து கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டது. ரவுப் ஹக்கீம் அவர்களும், இத்தா அனுஷ்டித்து கொண்டிருந்த தலைவரின் மனைவி பேரியலும் முஸ்லிம் காங்கிரசின் இணைத்தளைவர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள்.

ஒருசிலர் பேரியல் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக வரவேண்டும் என்றும், சிலர் இணைத் தலைமைத்துவம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினாலும், பெரும்பாலான கட்சி முக்கியஸ்தர்களும், போராளிகளும் ரவுப் ஹக்கீம் அவர்களே கட்சிக்கு ஏக தலைவராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இதில் ரவுப் ஹக்கீம் அவர்களை தலைவராக்குவதில் எல்லோரையும்விட அதாஉல்லா அவர்களே மிகவும் தீவிரமாக செயல்பட்டார். அவரது செயல்பாடுகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது.

ஒவ்வொரு மேடையிலும் அதாஉல்லா அவர்கள் பேசும்போது மறைந்த தலைவரை நினைத்து விம்மி விம்மி அழுவார். அவரது அழுகையை கண்டு போராளிகளும் அழுவார்கள். அந்தளவுக்கு தன்னை தலைவர் அஸ்ரபின் தீவிர விசுவாசியாக காட்டிக்கொண்டார்.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக வர முயற்சி செய்கின்ற பேரியல் அஸ்ரபோடு பேச்சுவார்த்தைகள் நடாத்தி, ஓர் இணக்கப்பாட்டுடன் தலைவருக்கு அடுத்த அதிகாரம் உள்ள பதவியினை பேரியலுக்கு வழங்குவதன் மூலம், கட்சிக்குள் ஏற்பட இருக்கின்ற பிளவுகளை தடுக்க முடியும் என்று இணைத் தலைவராக இருந்த ரவுப் ஹக்கீம் அவர்கள் விரும்பினார்.

அதற்காக பேரியல் அணியினரோடு பேசுவதற்கு தயாரானபோது அதனை அதாஉல்லா அவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டார். அதாவது முஸ்லிம் காங்கிரசில் பேரியலுக்கு எந்த ஓர் இடமும் வழங்கக்கூடாது என்பதுதான் அதாஉல்லாவின் எண்ணமாக இருந்தது.

அப்போது அதாஉல்லா அவர்களின் எதிர்கால திட்டத்தினை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரங்கள் அனைத்தும் பேரியலை மையமாக கொண்டதாகவே இருந்தது. அதில் ஒவ்வொரு மேடைகளிலும் பேரியல் அஸ்ரப்பை “பேய்க்குழந்தை” என்றும், அவளது “புடவையை” உரியப்போவதாகவும் அதாஉல்லா அவர்கள் பகிரங்கமாக மேடைகளில் பேசிய பேச்சுக்கள் அன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றது.

ரவுப் ஹக்கீம் அவர்கள்மீது இவ்வளவு அதிகமான பாசமும், அதேநேரம் பேரியல் அஸ்ரப்மீது இந்தளவுக்கு வெறுப்பும் அதாஉல்லா அவர்களுக்கு ஏற்ப்பட காரணமென்ன ?

ரவுப் ஹக்கீம் அவர்கள் கண்டியை சேர்ந்தவர் என்பதனால் அவரை பொம்மை தலைவராக வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் கிழக்கின் அதிகாரமுள்ள தலைவராகவும், பின்பு ரவுப் ஹக்கீமை அகற்றிவிட்டு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவராகவும் வரவேண்டும். அதாவது படிப்படியாக தலைமைத்துவத்தை கைப்பேற்ற வேண்டும் என்பதுதான் அதாஉல்லாவின் திட்டமாகும்.

அதற்காக கிழக்கில் இருந்து எந்த சக்தியையும் கட்சிக்குள் தன்னைவிட வளர அனுமதிக்காமலும், அதேநேரம் தன்னைவிட சக்தியுள்ளவர்களை கட்சிக்குள்ளிருந்து ஓரம் கட்டுவதிலும் அதாஉல்லா அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்.

காலப்போக்கில் கட்சி சில பிழையான தீர்மானங்களை எடுப்பதற்கு உடந்தையாக இருந்துவிட்டு பின்பு அவைகள் விமர்சிக்கப்பட்டபோது அதனை தலைவர்மேல் பழியைப் போடுகின்ற நிலைமை அவ்வப்போது நிறைவேறியது.

பேரியல் அஸ்ரப் கல்முனையை மையமாக கொண்டவர் என்பதனால், அஸ்ரப்போடு அழிந்துபோன கல்முனையின் அரசியல் அதிகாரம் மீண்டும் எழுச்சி கண்டுவிடும் என்பதனாலும், பேரியல் முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்தால் தனது எதிர்கால தலைமைத்துவ கனவும், முழு அமைச்சர் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும் என்பதனாலேயே பேரியல் திட்டமிட்டு அதாஉல்லா அவர்களினால் ஓரம்கட்டப்பட்டார்.

அன்று பேரியல் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசுக்குள் தொடர்ந்து இருந்திருந்தால், கட்சிக்கு ஏற்ப்பட்ட பாரிய பிளவுகள் தடுக்கப்பட்டிருக்கும். அதேநேரம் பின்னாட்களில் கட்சி பல வழக்குகளை எதிர்கொண்டிருக்காது. தாருஸ்ஸலாம் பிரச்சினையும் வந்திருக்காது.


தடயங்கள் தொடரும்.............. முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Read more...

உங்கள் தந்தை ரணசிங்க பிறேமதாஸ ரொம்ப நல்லவர். சுமந்திரன் சஜித்திடம் புகழாரம்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி - மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட 'நாவலர் கோட்டம்' எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டிருந்தார்.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பா.உ சுமந்திரன், அமைச்சர் சஜித்தின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச, வீடமைப்புத் தொடர்பில் ஆற்றிய சேவைகளை ஞாபகப்படுத்தியதுடன் அவரின் சேவையை பாராட்டும் நிமிர்த்தம் அவரை நினைவு கூருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியதுடன், அமைச்சர் சஜித்தை, 'செயற்றிறன் மிக்க அமைச்சர்' எனவும் புகழ்ந்துள்ளார்.

அதேபோன்று, அமைச்சர் சஜித் போன்ற இளந்தலைவர்கள், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு கை கொடுக்க வேண்டும் எனவும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சு என்றோர் அமைச்சு உள்ள போதிலும், வடக்கிலும் கிழக்கிலும் வீடுகளை அமைப்பதற்கு, மூன்று, நான்கு அமைச்சுகளுக்கு அந்தப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஆறு வித்தியாசமான நிறுவனங்கள், வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றன என்றார்.

'ஆகையால், வீடமைப்பாக இருந்தால், அதை வீடமைப்பு அமைச்சிடத்தே அதை விட்டுவிடுங்கள் என்று நாங்கள், பல தடவைகள், பல இடத்திலேயே சொல்லியிருக்கின்றோம். அதற்கு, வடக்கு அபிவிருத்தி என்று ஓர் அமைச்சு, நல்லிணக்க அமைச்சு என்று இன்னோர் அமைச்சுத் தேவையில்லை. வௌ;வேறு அமைச்சுகளிடத்தே அதைக் கொடுத்து, இதுவரைக்கும் எதுவித வீடுகளும் அமைக்காத சூழ்நிலை தான் இருந்துகொண்டிருக்கிறது' என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கக் காலத்தில், வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தபோது, அதற்கான நிதியில்லை என்ற பதில் வழங்கப்பட்டது எனவும், அதன் காரணமாகவே, இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று, புதிய அரசாங்கத்திடமும் கோரிக்கையை முன்வைத்திருந்தாலும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சால் மாத்திரமே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.



Read more...

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போல் தலைவர் பெய்ஜிங் சிறையில்! ராஜனாமா கடிதம்.

சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல்அமைப்பான இண்டர்போல் தலைவர் பற்றியே மர்மமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இண்டர்போல் தலைவர் பொறுப்புவகித்து வந்த மெங் ஹாங்வெய் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல் அமைப்பான இண்டர்போலுக்கு முதன்முறையாக சீனாவிலிருந்து மெங் ஹாங்வெய் என்பவர் பொறுப்பை ஏற்றார். அவர் ஒரு முறை சீனாவில் பொது பாதுகாப்பு துணை அமைச்சராகப் பணியாற்றினார். குற்றவியல் நீதி மற்றும் காவல் ஆகிய துறைகளில் 40 ஆண்டுகால அனுபவம் அவருக்கு உண்டு.

செப்டம்பர் 28 வெள்ளியன்று பிரஞ்சு அதிகாரிகள் அவரது காணாமல் போன செய்தியை வெளியிட்டனர்.

உயிருக்கு ஆபத்து

அதேநாளில் சமூக வலைதளம் வாயிலாக தனது கணவர் தனக்கு ஒரு தகவல் பரிமாறிக்கொண்டதாக மெங்கின் மனைவி தெரிவித்துள்ளார். அதில் ''பிறகு தொலைபேசி செய்கிறேன்'' ஒரு பதிவு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகவல் வருவதற்கு முன்பு ஆபத்தைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக சமையலறையில் இறைச்சிவெட்ட பயன்படுத்தும் கத்திப்படத்தை அனுப்பியதாக தெரிவித்த அவரது மனைவி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து என்று தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர் காணாமல் போன செய்தியை இண்டர்போல் வெளியிட்டதிலிருந்து எதுவும் பேசாமல் இருந்த பெய்ஜிங், பின்னர் மெங்கை சிறையில் அடைத்துள்ளதாக ஒப்புக்கொண்டது.

நேற்று ஒரு வரி அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள பெய்ஜிங் அதில் ''அவர்மீது நடைபெற்று வரும் விசாரணையின்படி அவர் சட்டத்தை மீறியுள்ளதாக தாங்கள் சந்தேகிக்கிறோம்'' என்று தெரிவித்தது.

சீனாவின் பொது பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராக இருக்கும் மெங், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இண்டர்போல் அமைந்திருக்கும் ஃபிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

அவசர நடவடிக்கையாக தலைமையிடத்திலிருந்து அவரின் ராஜிநாமா கடிதம் வந்ததாக இண்டர்போல் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உட்பட அனைத்து ஊழல் விவகாரங்களை கவனித்து வரும் சீனாவின் தேசிய மேற்பார்வைக் குழு மெங்கை தாங்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக தங்களின் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

பல உயர்மட்ட அரசு அதிகாரிகள், பில்லியனியர்கள், மேல்நிலை நட்சத்திரங்கள் என பலர் சமீபத்தில் சீனாவில் காணமல் போயுள்ளனர் அந்த வரிசையில் மெங்கும் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சட்டத்தை மீறிய வகையில் அவர் தொடர்ந்து இண்டர்போல் பதவியில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்புகளும் எழுந்தன.

விலகாத மர்மம்

அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதம் இண்டர்போல் அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்துள்ளது. அவர் எப்படி காணாமல் போனார் யார் அழைத்துச் சென்றனர். பெய்ஜிங் எதற்காக அவரை கைது செய்து விசாரணை செய்துவருகிறது போன்ற தகவல்கைள் மர்மமாகவே உள்ளன.

புதிய தலைவர்

இந்நிலையில் தற்போதுள்ள பதவிக்காலத்தின்படி மீதமுளள இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு புதிய இண்டர்போல் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் துபாயில் வரும் நவம்பர் 18லிருந்து 21 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

புலிகளின் ஆட்சி வேண்டுமென்ற விஜயகலாவுக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது. நீதிமன்று கட்டளை.

யாழ்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது புலிகளின் ஆட்சி வேண்டப்படுகின்றது என கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் இன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு , கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் விஜயகலா கருத்து தெரிவித்தமையால் சிக்கலுக்குள் தள்ளப்பட்டார்.

ராஜங்க அமைச்சு பதவி பறிக்கப்பட்ட விஜயகலா மீது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது. அதன் பிரகாரம் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பெயரில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்ட விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளதோடு, குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகலாவை ஆஜர்படுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கமால் சில்வா, பிணை வழங்கலுக்கு ஆட்சேபனை தெரிவித்தபோதும், பிணை மறுப்பதற்கான போதிய காரணங்கள் இல்லை என பிணை வழங்கிய நீதவான், விஜயகலா நாட்டை விட்டு வெளியேற முடியாது என்ற நிபந்தனையும் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வார்களா? வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகிறது. ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக முடியாதா? என்கின்ற ஆசை இல்லாமலில்லை. மகிந்த தரப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் இடைக்கால அரசாங்கம் அமைத்து 19 ஐத் திருத்தி மீண்டுமொருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாதா? அல்லது ஆகக்குறைந்தது ஜனாதிபதித் தேர்தலில் தான்சார்ந்த ஒருவரை நிறுத்தினாலும் ஆட்சியில் இருந்துகொண்டு தேர்தலை முகம்கொடுப்பது சாதகம்தானே! எனவே, எப்படியாவது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துவிட வேண்டும் என்கின்ற எண்ணம்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியும் மஹிந்தவும் மற்றும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் மாத்திரமே கலந்துகொண்டு பேசியிருக்கின்றார்கள். முன்னாள் அமைச்சர் S B திசாநாயக்கவின் வீட்டில் இவர்கள் சந்தித்தாகவும் ரணிலுடன் இனியும் பயணிக்கமுடியாது; என ஜனாதிபதி கூறியதாகவும் இன்றைய Sunday Times பத்திரிகை கூறுகின்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் விரைவில் ஜனாதிபதி வெளிநாடு சென்று திரும்பியதும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அப்பத்திரிகை கூறுகின்றது.

ரணிலுக்கோ, முடிந்தால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவியை ஒழித்து விடவேண்டும். முடியாவிட்டால் தானே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும்.

இம்முத்தரப்பினருக்கும் ஜனாதிபதி தேர்தலாயினும் சரி, இடைக்கால அரசாங்கமானாலும் சரி, த தே கூ இன் ஆதரவு தேவை.

இதுவரை ஜனாதிபதி த தே கூ இன் ஆதரவை வெளிப்படையாக கோரவுமில்லை. த தே கூ வாக்குறுதி எதனையும் வழங்கவுமில்லை. ஆயினும் த தே கூ இனரிடம் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் வகையில் ராணுவம் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் சகல காணிகளையும் டிசம்பரிற்கு முதல் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா காணிகள் விடுவிப்பது தேசியப்பாதுகாப்பிற்கு குந்தகமானது; என எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். ஆயினும் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

இக்காணி விடுவிப்பு உத்தரவு சிங்கள மக்களின் உணர்வைத் தூண்டுவதற்கு எதிரணிக்கு நல்லதோர் வாய்ப்பு. ஆனாலும் மௌனம் காக்கிறார்கள் த தே கூ ஐ இக்கட்டத்தில் பகைக்கக்கூடாது; என்பதற்காக.

இத்தனைக்கும் அவர்களும் த தே கூ இடம் இன்னும் ஆதரவு கோரவுமில்லை. த தே கூ வாக்குறுதி வழங்கவுமில்லை. எதிர்கால ஆதரவு தொடர்பாக எதுவித பேச்சுவார்த்தையும் நடத்தாமலேயே அவர்கள் சாதிக்கின்றார்கள்; என்றால் அதுதான் த தே கூ அரசியல்.

அதேநேரம் ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீ சு க அரசை விட்டு வெளியேறினாலும் த தே கூ தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் காணி விடுவிப்பிற்கு முழு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

நம்மவர்கள்

நமது மொத்த 21 பாராளுமன்ற அங்கத்தவர்களும் அரசில் இருக்கிறார்கள். அவற்றில் சொந்தக்காலில் நிற்க, சுதந்திரமாக பேச, சுயமாக முடிவு எடுக்க என புறப்பட்ட இரண்டு தனித்துவக்கட்சிகளும் அதே அரசில் இருக்கின்றன.

நமக்கும் காணிப்பிரச்சினை இருக்கின்றது. திருகோணமலையில் காணிப்பிரச்சினை இருக்கின்றது. அம்பாறையில் இருக்கின்றது. மட்டக்களப்பில் புலிகளின் காலத்தில் பறிகொடுத்த பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்கட்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

முசலியில் கடந்த ஆட்சியில் பன்னிரண்டாயிரம் ஏக்கர் பறிபோயின. இந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கர் கபளீகரம் செய்யப்பட்டது. இவைகள் மக்களின் காணிகளில்லையா? இவர்களுக்கு கட்சிகள் இல்லையா? இந்தக்கட்சிகளின் ஆதரவு மைத்திரிக்கு தேவையில்லையா? மகிந்தவுக்கு தேவையில்லையா? ரணிலுக்குத் தேவையில்லையா?

எதிர்க்கட்சியில் இருப்பவர்களைக் கவர்வதற்காக அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட முடியுமென்றால் ஆளும் கட்சியில் இருப்பவர்களின் காணிகள் ஏன் விடுவிக்கப்பட முடியாது? அவ்வாறாயின் இவர்களைக் கவரத்தேவையில்லை; என்பதுதானே பொருள்.

ஏன் தேவையில்லை? அவர்கள்தான் காலைச் சுற்றிய பாம்பாய்க் கிடக்கிறார்கள்; எப்போதும் கிடப்பார்கள்; என்கின்ற நம்பிக்கையைத்தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?

நமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா?

கரையோர மாவட்டம் கிடைத்துவிட்டதா?

ஒலுவில் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

கல்முனை மாநகரசபை பிரிக்கப்பட்டுவிட்டதா?

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினை தீர்கப்பட்டுவிட்டதா?

கல்முனை புதிய நகரத்திட்டம் தொடங்கிவிட்டதா?

கல்முனை மார்க்கட் கட்டப்பட்டு விட்டதா?

சந்தாங்கேணி அபிவிருத்தி செய்யப்பட்டுவிட்டதா?

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டுவிட்டதா?

வடபுல மக்கள் முழுமையாக மீட்குடியேற்றப்பட்டு விட்டார்களா?

குடியேறியவர்களுக்கெல்லாம் வீடுகள் கொடுக்கப்பட்டுவிட்டதா?

சிலாவத்துறை வைத்தியசாலை சீர்செய்யப்பட்டு விட்டதா?

வடபுல அகதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுவிட்டதா?

தெகிவளை, கொலன்னாவையில் புதிய முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு விட்டனவா?

கண்டியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை உருவாக்கப்பட்டு விட்டதா?

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீள கொணரப்பட்டு விட்டதா?

கண்டி- திகனயில் துவம்சம் செய்த பொலிசாருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா?

கிந்தோட்டைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா?

எது நடந்திருக்கிறது? எதற்காக அரசின் பங்காளியாக இருக்கிறோம்? எதற்காக பங்காளியாக இருந்தும் உதாசீனப் படுத்தப்படுகிறோம்.

ஒரு பெருந்தலைவர் கூறுகிறார் “ அரசாங்கம் எதுவும் செய்யவில்லையாம்; அடுத்த தேர்தலில் மக்கள் அரசுக்கு பாடம் புகட்டுவார்களாம்”. இதனைச் சொல்வதற்காக மக்கள் இவர்களைத் தெரிவுசெய்தார்கள். அவ்வாறாயின் மக்கள் நேரடியாகவே தேசியக்கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு கட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் அக்கட்சிக்கு பாடத்தைப் புகட்டிவிட்டு மறு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவார்கள். இடையில் தரகர்களாக நீங்கள் எதற்கு?

தேர்தல் மேடைகளில் நீங்கள் சாதிப்போம்! சாதிப்போம்!! என்றவை எங்கே!

இன்னுமொரு தலைவர் கூறுகிறார்: “ அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் ஆதரவளிப்பார்களாம். ஏனாம் கடந்த தேர்தலில் ஒப்பந்தம் செய்யவில்லை? அவ்வாறாயின் இந்த ஆட்சியின் எஞ்சியிருக்கின்ற காலப்பகுதியிலும் எதுவும் செய்கின்ற நோக்கமில்லை. அடுத்த தேர்தலுக்கு ஒரு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு ஒரு புதிய கதையுடன் வரப்போகிறார்கள்.

இன்னும் சிலர் போராட மக்களை அழைக்கிறார்கள். மக்கள் போராடுவதென்றால் உங்களுக்கு வாக்களித்ததெதற்கு? நீங்கள் ஆட்சியில் பங்கெடுத்ததெதற்கு? இவ்வாறு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் மக்களை மடையர்களாக்கப்போகிறார்கள். மக்களும் மடையர்களாகப்போகிறார்கள்.

அன்புள்ள சகோதரர்களே!

‘மீனும் தேனும் கண்ட இடத்தில்’ என்பார்கள். ஜனாதிபதி ஒரு பக்கம். ஆட்சி மறுபக்கம். ஆட்சி சிறுபான்மைக் கட்சிகளில் தங்கியிருக்கிறது. காலைவாரும் படலமும் ஆரம்பித்துவிட்டது. இது வரலாற்றில் ஓர் சந்தர்ப்பம் சாதிப்பதற்கு. இம்முறை சாதிக்காதவர்கள் இனி என்றுமே சாதிப்பார்களா? என்பது சந்தேகமே!

ஜனாதிபதித் தேர்தலுக்கு 14 மாதமும் பொதுத்தேர்தலுக்கு 22 மாதமுமே இருக்கின்றன. இப்பொழுதாவது நமது கட்சிகள் நமது பிரச்சினைகளை பட்டியலிட்டு அரசுக்கு ஆறுமாத காலக்கெடு கொடுத்துச் செய்யசொல்லவேண்டும். அல்லது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ அமர்ந்து ஆளுக்கட்சிக்கு நிபந்தனாயுடனான ஆதரவை வழங்கி நமது பிரச்சினைகளைத் தீர்த்துத்தர சொல்லட்டும். அதன்பின் அடுத்த தீர்மானத்தை எடுக்கலாம்.

இதனை இக்கட்சிகள் செய்வதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் எவ்வகையில் அழுத்தம் கொடுக்கப்போகிறீர்கள்? போராடப்போகிறீர்கள்?

வருகின்ற வரவுசெலவுத் திட்டத்தில் அரசைத் தோற்கடிக்க ஜனாதிபதி திட்டமிடுவதாக Asian Mirror தெரிவிக்கின்றது. அப்பொழுது முஸ்லிம்கட்சிகளும் அச்சதியில் இணைந்து அரசைத் தோற்கடித்து அடுத்த ஆட்சியைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் மௌனமாக தற்போது இருந்துவிட்டு அரசை வரவுசெலவுத் திட்டத்தில் காப்பாற்றுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பத்திலும் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. இதனால்தான் நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பாவிக்கப் படுகின்றோம்.

நாம் சாதிக்கவேண்டும். எனவே உடனே செயலில் இறங்க வேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். எனவே, மக்கள் இவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்போகிறீர்கள்?

ஊடகவியலாளர்களே! முகநூல் வேங்கைகளே! போராளிகளே! ஆதரவாளர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?

ஊடகவியலாளர்களே! உங்கள் பேனாக்கள் எழுதட்டும்: சாதிக்கப்பிறந்த சமூகத்தின் சாபக்கேடாய் நீங்கள் இருந்ததுபோதும். இப்போதாவது சாதித்துவிட்டு வாருங்கள்; என்று

போராளியே! அடுத்த கட்சி ஏசும்போது பொங்கியெழத் தெரிந்த உனக்கு உன் எதிர்கால சந்ததிக்கு வாழ்வளிக்க உன் சமூகம் முகம்கொடுக்கும் தடைகளை உடைத்தெறிய, இழந்தவற்றை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கோழையாய் எதுவும் செய்யாமல் குத்துக்கல்லாட்டம் இருந்துவிட்டு தேர்தலுக்கு வந்து தேர்இழுக்கச்சொன்னால் உன்னை ஏற்றி இழுக்கமாட்டேன் அந்தத்தேரை! மாறாக உன்னைத் தெருவில் கிடத்தி உன்மேல் அத்தேரை இழுப்பேன் இதுவரை உனக்காக கோசம் எழுப்பிய குற்றத்திற்காக என்று சொல்வாயா?

ஆதரவாளனே! இவர்களுக்காக வாக்களிக்க எத்தனை தடவை உன் விரல்களில் மை பூசியிருப்பாய்! இந்த சந்தர்ப்பத்திலாவது சாதித்துவிட்டு வரச்சொல். இல்லையெனில் தூக்கு மைவாளியை அவர்கள் மீது மொத்தமாக பூச.

அன்புள்ள சகோதரர்களே! இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள். இவ்வாறான சந்தர்ப்பம் எல்லா நேரமும் கிடைக்காது.

இல்லையெனில் இந்தக்கட்சிகள் அத்தனையும் தூக்கிவீசிவிட்டு பொதுமக்கள் வீதிக்கு இறங்குங்கள்; அரசிடம் நேரடியாக கேட்போம்; போராடுவோம். அரசும் திரும்பிப் பார்க்கும்.

இவர்கள் தரகர்களாக இருக்கும்வரை அரசு நம்மைத் திரும்பிப்பார்க்காது.

எனவே, ஒன்றில் அவர்களை செய்யவை! அல்லது அவர்களைத் தூக்கிவீசிவிட்டு நீ செய்யத்தயாராகு!

நல்ல காற்று வீசுகிறது. தூற்றத் தவறிவிடாதே! அது உன் எதிர்கால சந்ததிகளுக்கு நீ செய்யும் துரோகம்.

Read more...

Sunday, October 7, 2018

போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்' அமையப்போகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம் பாலகியான வைஷ்ணவியின் கொலையை திசைதிருப்பி, அவருக்கான நீதிக்கு இன்றுவரை தடைக்கல்லாக நின்றுவருகின்ற செத்தவீட்டு இணையம், போதாநாயகியின் கொலையாளியையும் நீதி மற்றும் மக்கள் தீர்ப்பிலிருந்து தப்ப வைக்க தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

„திருமலையில் கர்பிணி விரிவுரையாளர் கொலையில் அதிரடி திருப்பம்!! வெளியான மற்றுமொரு தகவல்'



எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது ஜேவிபி இணையம்.




போதாநாயகி மூன்று மாத கற்பிணியாகையால் தலைசுற்றில் கடற்கரைக்குச் சென்று „இடிவித்தானுள்' வீழ்ந்து தவறுதலாக இறந்து விட்டார் என மக்கள் மனங்களை மாற்றி விசாரணையை திசை திருப்ப முடியும் என்ற நயவஞ்சகத்திட்டத்தில் இறங்கியுள்ளது ஜேவிபி நியுஸ். அந்த இழிசெயலுக்காக ஊர் பெயர் இல்லாத ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் என்று „வேலிக்கு ஓணான் சாட்சி' என்ற கதை சொல்ல முனைகின்றது செத்தவீட்டு இணையம்.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பதிவாளராக கடமையாற்றுகின்ற திரு. கனகசபாபதி வாசுதேவா அவர்கள் உடற்கூராய்வு பரிசோதனை தொடர்பான விளக்கமொன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of dead) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermined) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது.

உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்
1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


மனிதநேயம் கொண்டோர் இவ்வாறு போதாநாயகிக்கு நீதிவேண்டும் எனக் கோருகின்றபோது, ஜேவிபி நியூஸ் கொலை விசாரணையையும் கொலைக்கு நீதிகோருவோரையும் திசை திருப்ப முனைவதற்கான காரணம் யாது என்று சற்று வினவுவோமானால், விடை நிலாவைப் பார்ப்பது போன்று தெட்டத்தெளிவானது. ஜேவிபி இணையத்தளக்காரனின் தம்பி சிறிதரன். பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர் தற்போது வட மாகாண முதல்வராக போட்டியிடுவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். போதாநாயகியின் கொலையாளி என அவரது குடும்பம் மற்றும் சுற்றத்தாரால் குற்றஞ்சுமத்தப்படுபவரான செந்தூரன் சிறிதரனின் சகா. அவர் தேர்தல்காலங்களில் சிறிதரனுக்காக நேரடியாக பிரச்சார வேலைகளில் இறங்குபவர். இப்போது வாசகர்களுக்கு ஜேவிபி நியூஸ் இன் நோக்கம் விளங்கியிருக்கவேண்டும்.



போதாவின் (தற்)கொலை தொடர்பில் அவரது தாயாரால் நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போதாவின் கணவரான செந்தூரன், தனது மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரை ஒரு முழுநாளும் அறையொன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தாகவும் , அவருடைய பணத்தை சூறையாடியதாகவும் ஊடகங்கள் முன்னிலையில் குற்றஞ்சாட்டினார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் நீதித்துறை இவனை கண்டு கொண்டதாக இதுவரை இல்லை.

தாயாரின் கூற்றுப்படி செந்தூரன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். குறைந்தது விரிவுரையாளர் போதாநாயகி இறந்ததிலிருந்து இருவாரங்களுக்கு அவரது உள்-வெளி அழைப்புக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும். கடந்த இருவாரங்களில் போதாவுடன் செந்தூரனுக்கிருந்த தொடர்பு மற்றும் அவன் அவரை துன்புறுத்தியுள்ளானா என்பதை உரையாடல்களை ஆய்வுசெய்வதன் ஊடாக கண்டறியப்படவேண்டும்.

மேலும் செந்தூரன் 19, 20 ம் திகதிகளில் தனது அலுவலகத்தில் விடுமுறை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறாயின் அவன் எங்கிருந்தான். திருமலைக்கு வந்திருந்தானா என்பதை அவனது தொலைபேசி இருந்திருக்கக்கூடிய கோபுரங்களை வைத்து கண்டறியவேண்டும். சிலவேளைகளில் இக்கொலைக்கு அவன் திட்டமிட்டிருந்தானாக இருந்திருந்தால் தனது தொலைபேசியை தன்னுடன் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் வேறு ஒரு தொலைபேசியை நிச்சயமாக பயன்படுத்தியிருக்கவேண்டும். அது எந்த தொலைபேசி என்பதை போதாவின் இறுதி இருநாட்கள் அழைப்பு விபரங்களினூடாக கண்டு பிடிக்க முடியும்.

அவ்வாறு கண்டு பிடிக்கின்றபோது, போதாநாயகியை யார் கடலுக்கு அழைத்துச்சென்றது என்றும் அவர் எவ்வாறு ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெளிவாகலாம். மிகவும் சனநடமாட்டம் உள்ள ஓர் கடற்கரையில் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் விடயம் நடந்தேறியிருக்கின்றது என்றால் அது ஒரு விபத்தாக நடைபெற்றதாக தீர்ப்பாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது மாத்திரம் தெளிவு.

அதேநேரம் கொலையில் சந்தேகம் உள்ளதாக செந்தூரன் தெரிவித்தது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும், திசைதிருப்பும் நோக்கத்திற்காக அவ்வாறான யுக்தியை பயன்படுத்தியிருந்தால் அதற்காகவும் அவன் தண்டிக்கப்படவேண்டும்.

மறுபுறத்தில் மேற்குறித்த கயவன் தன்னை ஓர் உணர்சிக்கவிஞனாகவும் தமிழ் தேசியவாதியாகவும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் குற்றவியல்கோவை , அரசியல் யாப்பு மற்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இனவாதத்தை தூண்டுகின்ற கருத்துக்களுக்கு எதிரான சட்டம் என்பவற்றை மீறும்வகையில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்துள்ளான்.

இவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைச்சுப்பதவியை பறிகொடுத்த விஜயகலா தெரிவித்த கருத்துக்களிலும் பாரதூரமானவை. அவை பிரிவினையை தூண்டுபவை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவை, இனங்களிடையேயான சகவாழ்வுக்கு குந்தகமானவை. ஆனால் செந்தூரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. அவ்வாறு பார்க்கின்றபோது, இவ்வாறான போலித்தேசியவாதிகளை இலங்கை அரசே இயக்கி வருகின்றது என்பதும் அவர்களின் பாதுகாவலர்களாக பொலிஸ்துறை செயற்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.

செந்தூரன் மீது நடவடிக்கை வேண்டுமென அவரது குடும்பத்தினர் வேண்டினர். பல்கலைக்கழக சமூகம் தெருவில் இறங்கி நின்று வலியுறுத்தியது. இவ்விடத்தில் இலங்கை அரசின் அரவணைப்பு அல்லாத சாதாரண நபர் ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை சற்று கற்பனை பண்ணி பார்கின்றபோது, இலங்கையில் தேசியம் பேசுகின்றவர்களுக்கு இலங்கைப் பாதுகாப்புத்துறை பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதுடன் தமிழ் தேசியத்தின் யோக்கியமும் புரிகின்றது.

தமிழ் தேசியபோர்வையால் தமிழ் ஊடகங்கள் குற்றவாளிகளை மறைக்க முற்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக திரு இளஞ்செழியன் உள்ளார் என்றும் குற்றவாளிகள் இலகுவாக அவரிடம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதும் போதாநாயகிக்காக நீதி கோருவோரது நம்பிக்கை. ஆனால் இலங்கை காவல்துறை குற்றவாளி சார்பாக செயல்படுமாக இருந்தால் இக்குற்றத்தை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலைக்கு கொண்டு செல்லுமா என்பதும் கேள்வியே.

Read more...

பொலிஸ் காவலிலிருந்த இராணுவ கொமாண்டோ படையைச் சேர்ந்தவர் ஆற்றினுள் குதிச்சிட்டாராம்.

கட்டானை பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முன்னாள் இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்த நபர் ஆற்றினுள் குதித்து மரணடைந்து விட்டார் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலிஸ் நிலையத்திலிருந்து குற்றச்சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்கையில், தடுகம்ஓயா விற்கு அண்மையில் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி கேட்ட சந்தேக நபர் , அவ்வாறு அனுமதிக்கப்பட்டபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி வீழ்த்திவிட்டு ஆற்றினுள் குதித்துள்ளதாக கூறுகின்றனர் பொலிஸார்.

ஆற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாதாள குழுவொன்றின் முன்னணி உறுப்பினர் என்பதுடன் இவர் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவருகின்றது.

கட்டானை பகுதியில் கடந்த மாதம் 30ம் திகதி கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர், கைது செய்யப்படும்போது ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான நிரந்தர தீர்வுடன் கூடிய திட்ட வரைபை வழங்குவார்களாம் மஹிந்த தரப்பு. ஜி.எல்

சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம் என்றும் அத்தீர்வானது ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.

வீரசேகரியின் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெளியிடுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் :

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்கும் ?

எதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு பொதுஜன பெரமுன தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது. தேர்தல்களை வெற்றிக்கொள்வது மாத்திரம் எமது நோக்கமாக அமையாது . தற்போதைய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சித்ததே தவிர அடுத்த கட்ட ஆட்சிக்கான கொள்கைகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.

ஆட்சி முறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்று கூட அவர்கள் சிந்திக்க வில்லை. ஆகவே நாங்களும் புதிய கட்சி என்ற வகையில் அந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனவே தான் நாங்கள் இன்றிலிருந்தே தேசிய பிரச்சினை , பொருளாதாரம் , அரசியல் ,தேசிய வளங்களை பாதுகாத்தல் , சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இதில் உள்ளடக்கமாக நாட்டின் அனைத்து இன மக்களும் உள்ளனர். அவர்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடில்லை . குறிப்பாக அனைத்து இன மக்களுக்கான உரிமைகள் குறித்து ஆழமாக கவனத்தில் கொண்டு செயற்படுகின்றோம். ஆனால் இதனை முழுமையாக்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன.

தற்போதைய அரசாங்கத்திடமிருந்து உறுதிமொழிகளை பெற்றுக்கொள்ளல் மிகவும் எளிதான விடயமாகும். ஆனால் அந்த உறுதிமொழிகளை வழங்குவதில் அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலுமே தோல்விக்கண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்ற முடியாத உறுதி மொழிகளை வழங்கியதில்லை.

எனவே தான் சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம். ஆகாயத்தில் மாளிகைகள் கட்டுவதாக அல்ல. நடைமுறையில் சாத்தியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்ட வரைபை வெளியிடுவோம். தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதிமொழிகளை வழங்கி பின்னர் ஏமாற்றுவதாக எமது செயற்பாடுகள் அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனி இடைநடுவில் கைவிட அனுமதிக்கப் போவதில்லை.

தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தற்போதைய தேசிய அரசாங்கம் நிறைவேற்ற வில்லையென்றா குற்றம்சாட்டுகின்றீர்கள் ?

இந்த கேள்விக்கு அரசியல் நோக்கமற்று நேர்மையாகவே பதிலளிக்கின்றேன். உறுதிமொழிகளை வழங்கி ஏமாற்றியது மாத்திரமன்றி இருப்பவற்றையும் ஆக்கிரமித்துக்கொண்ட நிலையே தேசிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன கூறியது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. எனவே மேலும் அதிகாரங்கள் தேவை . அவற்றை பெற்றுக்கொள்வதற்காக முழு மூச்சுடன் செயற்படுவதாகவே அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. தற்போது என்ன நடந்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவுடன் வட மாகாண சபை கலைக்கப்பட போகின்றது. அன்றைய தினம் வட மாகாண சபை முழுமையாக இல்லமால் போய் விடும் . 5 வருடங்கள் கடந்த பின்னர் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மாகாண சபை தேர்தலை நடத்தாது காலம் கடத்தும் .

மாகாண சபை இல்லையென்றால் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வட மாகாண சபையின் அமைச்சர்களும் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக இருந்தவற்றை மீண்டும் மத்திய அரசு தன்னகப்படுத்திக்கொண்ட நிலையே ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு தனது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டளைகளின் பிரகாரமே செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும். அதாவது ஜனாதிபதி ஆளுநருக்கு கூறுவார். கிழக்கு மாகாண சபைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடகாலமாக கிழக்கு மாகாண சபை இல்லை. ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் ஆளுநர் செயற்படுகின்றார். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த நிலையே எதிர்வரும் 23 ஆம் திகதிற்கு பின்னர் வடக்கிற்கு ஏற்பட போகின்றது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாகியது. இதனூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பின் 9 ஆவது உப பிரிவில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. அதாவது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் , மத்திய அரசிற்குறிய அதிகாரங்கள் மற்றும் இருதரப்பிற்கும் உரிய சமநிலை அதிகாரங்கள் என்பனவே அந்த பகுதிகளாகும்.

இவை அனைத்துமே இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு முழுமையான பொறுப்பையும் கூற வேண்டும். ஐந்து நட்சத்திர ஜனநாயகம் குறித்து அரசாங்கம் வீர வசனம் பேசுகின்றது. ஆனால் ஜனநாயகத்தின் அளவுகோலான தேர்தலை நடத்துவதில்லை. இனி ஜனநாயகம் குறித்து எவ்வாறு பேச முடியும்.

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பே பெற்றுக்கொடுத்தது. கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்காவிட்டால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு இல்லை. இதனை பயன்படுத்தியே அரசாங்கம் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றது.

கடந்த முன்றரை வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்ன? தமிழ் மக்களுக்காக என்ன செய்தது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மிகவும் நெருக்கமாக தேசிய அரசாங்கத்தை பாதுகாத்ததை தவிர தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு ஒன்றும் செய்ய வில்லை. இதனால் பாராளுமன்றத்தில் உள்ள கூட்டமைப்பின் 16 பேருக்கும் நன்மைகள் இருந்திருக்கலாம் . ஆனால் வடக்கு மக்களுக்கு எவ்விதமான பலனும் இல்லை.

ஆசியாவிலேயே மிக மோசமான மோசடியாக இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியே பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து டொலரின் விலை அதிகரித்துள்ளது. சிங்கள - தமிழ் புத்தாண்டு வருகையில் டொலரின் விலை 200 ரூபாயை தாண்டும். இந்த மோசடி தொடர்பான உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது என்ன நடந்தது ?

சிங்கள - தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை என கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விவாதத்தை நடத்த விடாது குழப்பினார். மோசடியின் உண்மையை மறைக்கும் பொருட்டே அன்று அவர் அவ்வாறு செயற்பட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் மோசடிகளை மூடி மறைத்து அவர்களை பாதுகாப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமையாக உள்ளது. இதனையா தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு குறைந்த மட்டத்திலேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதா ? அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியை மிக சிறப்பாக கூட்டமைப்பு செய்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தினீர்கள் . அவ்வாறானால் மாற்று அணியொன்றை தமிழ் மக்களுக்காக உருவாக்குவீர்களா ?


உறுதியாகவே கூறுகின்றோம். வடக்கு மக்களின் உணர்வுகளை புரிந்த ஒரு அணியை அறிமுகம் செய்வோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தென்னிலங்கை மக்களை மாத்திரம் பிரதிநிதித்தும் செய்யும் கட்சியல்ல. பொறுப்புணர்வுடனேயே கூறுகின்றேன். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் எம்முடன் எதிர் காலத்தில் இணைவார்கள். எந்த தேர்தல் வந்தாலும் சிறந்த வேட்பாளர்களை நிறுத்துவோம்.

ஒரே நடென்ற வகையில் வடக்கு - கிழக்கு என்று இரு மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களுடன் சேவையை தொடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. செய்ய கூடியவற்றை கூறுவோம். தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையாது.

அதே போன்று பிரதமரின் குழு மேலும் இரண்டு மாதகால அவகாசம் கேட்டப்போது சபாநாயகர் வழங்கினார். இவர்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை கிடையர்து. எதிர்வரும் திங்கட்கிழமையுடன் மத்திய மாகாண சபையின் ஆயுட் காலமும் முடிவடைகின்றது. அதே போன்று எதிர்வரும் புதன் கிழமை வடமேல் மாகாணத்தின் ஆயுட்காலமும் முடிவடைகின்றது. தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் நீங்கள் கலந்துக் கொண்டிருந்தீர்கள். அதே போன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் வழங்குவதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் இருந்தீர்கள். இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் காலாகாலமாக இழுத்தடிப்புகளே இடம்பெறுகின்றன ..

இந்த விடயத்தில் நியாயமாக பேச வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கில் தேர்தல் இடம்பெற்றது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் வடக்கில் தேர்தலை நடத்துகின்றீர்கள் என்று அன்று அமைச்சரை கூட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

30 வருட கால போரில் அனைத்தையும் இழந்தவர்கள் வடக்கு மக்கள். எனவே முதலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக தேர்தலை முதலில் நடத்துவோம் என்று ஜனாதிபதி அன்று கூறினார். மனித வாழ்வில் பொருளாதாரம் மற்றும் முக்கியமானதல்ல. அதற்கு அப்பால் சென்ற பல விடயங்கள் மனித வாழ்விற்கு அவசியமாகும்.

இதனுள் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். வாக்குரிமை மற்றும் தேர்தல் என்பன அவசியமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்தே அன்று வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஜனநாயகத்தை வழங்கி வெற்றிக்கண்டோம்.

எனவே வடக்கு மக்களுக்கு அன்று மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஜனநாயக உரிமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இல்லாதொழித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றீர்கள் . அவ்வாறானால் பொதுஜன பெரமுனவின் 2020 ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியவராக இருப்பரா?

இல்லாத பிரச்சினையை மேலெடுத்து உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடாகவே கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார் . பொது எதிரிணியின் அனைத்து தரப்பினரும் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இன்னும் 14 மாதங்கள் உள்ளன. தற்போதே வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது. 1994 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கின்றேன். நாட்டில் என்றும் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. அவை குறித்து பேசாது வேட்பாளர் குறித்து அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்கின்றது.

இதனால் மிக குறுகிய காலத்தில் மக்கள் நம்பிக்கையிலிருந்து தேசிய அரசாங்கம் நீக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வருடகாலமே உள்ளது. இந்த ஒரு வருடத்தில் நாட்டிற்கு மீள முடியாத அழிவை ஏற்படுத்த முடியும். இதனை தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

ஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கியவர்களின் தேவைக்காக தேசிய சொத்துக்கள் விற்கப்படுகின்றன. இவற்றிக்கு எதிரான செயற்பாடுகளே அவசியமாகும்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் என்ற வகையில் வேட்பாளர் தெரிவு குறித்து உறுதிபட கூற முடியுமா ?

மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவே இறுதியானதாகும். அதற்காக காத்திருக்க வேண்டும்.


கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதன் உண்மை நிலை என்ன ?

அவ்வாறு யாரும் எமக்கு கூற வில்லை. உள்ளக விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்ததில்லை. இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் அதுல் கேஷாப் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று கூற வில்லை.

டில்லிக்கு சென்றிருந்த போதும் கூட பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஏதும் பேசவில்லை. அந்நாட்டு முன்னான் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்தோம். அவர்கள் யாரும் இலங்கையின் உள்ளக விவகாரங்கள் குறித்து பேச வில்லை.

Read more...

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம். மனோ கணேசன்

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டவர் அரங்கில் நேற்று (06) நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை எனவும், இலங்கையில் வாழும் சுமார் 12,000 முன்னாள் போரளிகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் இன்று ஜேவீபியை போல் ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டார்கள் எனவும் எவரும் வாதிட முடியும். அதனால் இந்நாட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு இருக்கின்ற முக்கியமான தடையையும் கணிசமாக தளரும்.

புலிகளின் தலைவருக்கு சமனமாக தம்மை இன்று உருவகித்துக்கொண்டு, புலிகளை பற்றி மறைமுகமாக பேசி பேசியே, அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், முதலில் இந்த புலித்தடையை நீக்க தம் சட்ட அறிவை பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இதை எவரும் இதுவரை செய்ய முன்வரவில்லை. உண்மையில், புலிகளை பற்றி மக்கள் மன்றத்தில் பேசிய அப்பாவி பெண் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு இருக்கும் தைரியம், இன்று சட்டத்தரணி தமிழ் தலைவர்களுக்கு இல்லையோ என்றும், முன்னாள் போராளிகளை முன்னிலை படுத்தி வழக்கு பேசினால், அந்த முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலில் எழுச்சி பெற்று விடுவார்கள் என எவரும் அஞ்சுகிறார்களோ என்று எனக்கு இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது.

சிங்கள தரப்பில் புலிகள் என்ற பெயர் இன்னமும் அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. அதுவே இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர்கள் உடன்படுவதை தடுத்து வருகிறது.

ஆகவே புலிகளை பற்றிய அபிப்பிராயத்தை மாற்ற, நமது சட்டத்தரணி அரசியல்வாதி தலைவர்கள் சட்டப்படி முயல வேண்டும். இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை என்பதை கூறி, ஜேவீபியை போன்று, ஜனநாயக வழிமுறைக்கு வந்துவிட்ட இலங்கையில் உள்ள முன்னாள் போராளிகளை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த வேண்டும்.

ஜேவீபியை போன்று தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் தூக்கியதன் பின்னணியில் இருந்த காரணத்தை எடுத்து தர்க்கரீதியாக கூற வேண்டும். 1972ம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட, “ட்ரயல்-அட்-பார்” வழக்குக்கு சமனமாக இந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டும். “ட்ரயல்-அட்-பார்” வழக்கில் தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம், திருச்செல்வம் ஆகியோர் முன்வைத்த வாதங்களை போல், இன்றைய சட்டத்தரணி தமிழ் தலைவர்களும் வாதங்களை முன் வைக்க வேண்டும்.

ஜேவிபியை போன்று விடுதலை புலிகள் இயக்கமும், இலங்கை மண்ணில் செயற்பட்ட ஒரு அரசியல் இயக்கம். அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் இந்த இரண்டு இயக்கங்களும் ஈடுபட்டன. இரண்டும் தடை செய்யப்பட்டன.

ஜேவிபியின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் இன்று பாராளுமன்றம் வந்து, ஜனநாயகம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் அதேபோல், இந்த முறையில் யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆன நிலையில், புலிகளை பற்றியும் நாம் பார்க்க வேண்டும். புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள், செயற்பட்டார்கள் என்ற 12,000 மேற்பட்ட ஆண், பெண் தமிழர்கள் நம் நாட்டிலேயே இன்று வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுகிறார்கள். பலருக்கு கை, கால்கள், அவயங்கள் இல்லை.

ஆகவே புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் தூக்க போகிறார்கள் என்ற தோற்றப்பாடு உண்மையா, இல்லையா என்பதை பற்றி எடுத்துக்கூற இந்த 12,000 மேற்பட்ட , கை, கால்கள், அவயங்கள் இழந்த, சிறைகளில் வாழ்கின்ற, இன்று தம் சொந்த ஊர்களில் துன்புற்று வாழ்கின்ற முன்னாள் போராளிகளுக்குதான் முடியும்.

“தாங்கள்தான் புலிகள்” என்று கூறி புலம்பெயந்த நாடுகளில் வாழும் சில குழுக்களை விட, இந்நாட்டில் இன்று வாழும் இந்த முன்னாள் போராளிகளுக்கு தான் இந்த தார்மீக உரிமை இருக்கிறது. ஆகவே இவர்களது ஆயிரக்கணக்கான, வாக்குமூலங்களை, சத்திய கடதாசிகளை, நமது சட்டத்தரணி தலைவர்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கலாமே!

தமிழ் இளைஞர்களை அன்று ஆயுதம் தூக்க வைத்தது, தமிழ் இளைஞர்களது மனநோய் அல்ல. அதன் காரணம், பேரினவாத இராணுவ அடக்குமுறையே ஆகும். இது வரலாற்று உண்மை. ஆனால், இவற்றின் அர்த்தம், புலிகள் பிழையே செய்யாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, அணியினர் என்பது அல்ல. தமிழுலகில் மட்டுமல்ல, முழு உலகிலும் அப்படி யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

இன்று புலிகளை மீண்டும் உயிர்பிக்க சொல்லிவிட்டார் என்று எம்பி விஜயகலாவை போட்டு சட்டம் இறுக்குகிறது. உண்மையில் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதால், அதை மீண்டும் உயிர்பிக்க சொல்வது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால், புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரலாம்.

அது தொடர்பில், உலகின் பல நாடுகளில் நடப்பது போல் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம். சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ் தேசியவாத தலைவர்கள், அதை ஏன் இன்னமும் செய்யாமல் இருக்கிறார்கள்? இப்போது தேர்தல் காலம் நெருங்க நெருங்க திடீரென பல தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய புலிகளை பற்றி அடிக்கடி பேசுவதை ஊடகங்களில் வாசிக்கிறோம். பார்க்கிறோம். கேட்கிறோம்.

ஆனால், பகிரங்க மேடையில் பேசிய அப்பாவி பெண் எம்பி விஜயகலாவுக்கு இருக்கும் தைரியம், புலிகளின் தலைவருக்கு சமானமாக தம்மை இன்று உருவகித்துக்கொள்ளும் வீரர்களுக்கு இல்லையா? நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடிகூட வாதிட முடியாதா? இது எனக்கு ரொம்ப நாளாக விளங்காத ஒரு புதிர்.

நான் இன்று ஒரு அமைச்சராக இல்லாமலிருந்தால் இதை நானே செய்வேன். நான் அட்டைக்கத்தி வீரன் அல்ல. இதைபோன்ற பல்வேறு விடயங்களை நான் நெருக்கடி மிக்க களத்தில் இருந்தபடி துணிந்து செய்துள்ளேன். அது மக்களுக்கு தெரியும். இன்று நான் வகிக்கும் பாத்திரத்தில் இருந்தபடி இதை செய்வது உசிதமானதல்ல. அப்படியானால், நான் இதிலிருந்து வெளியேற வேண்டும். அப்புறம் நான் உள்ளே இருந்து இன்று செய்து வரும் பாத்திரம் காலியாகிவிடும். இந்த அரசியல் பரப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. நானே பல பாத்திரங்கள் வகிக்க முடியாது. அது சினிமாவில் மாத்திரமே முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

"Demons in Paradise " மீதான தடை கருத்துச்சுதந்திரத்திற்கு விழுந்த கல்லெறி. சுப்ரமணிய பிரபா

இயக்குனர் Jude Ratnam தயாரிப்பில் வெளியாகிய Demons in Paradise ஆவணப்படம் இம்மாதம் 3 தொடக்கம் 8 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என பட்டியலிடப்பட்டு பின் ஒரு சிலரின் அழுத்தத்தினால் விழாவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

அது ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தினை இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்காதபோதும் அப்படம் இலங்கையின் இனப்படுகொலைகளை பேசுவதோடு ஈழப்போராட்ட அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட உட்கட்சி படுகொலைகளையும் ஆவணமாக்கி இருக்கிறதென்பதால் யாழ்ப்பாணத்தில் அது தடைசெய்யப்பட்டதென்று கருத்து தெரிவிக்கின்றனர்.

புலிகள் அமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் ஒரு படத்தை யாழ்மண்ணில் வெளியிடுவது அம்மண்ணிற்கு ஏற்படும் அவமானமாக கருதுவதாக சிலர் நினைக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக அப்படத்தில் கூறப்படும் துன்பியல் சம்பவங்கள் அதே மண்ணில் வைத்து அதே மண்ணின் மைந்தர்களால்தான் மாறி மாறி மேற்கொள்ளப்பட்டதென்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

அப்படத்தை யாழில் தடை செய்தமை சரிதானென்று கூறுபவர்களில், அன்று தொட்டு இன்று வரை தீவிர புலி எதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்படும் சிலரும் இருப்பதுதான் வேடிக்கையானது. அவர்களைப்பொறுத்தவரை தீவிர புலி எதிர்ப்பு பேசுவதாயினும், இன்றுவரை அவ் அமைப்புக்கு எதிராக செயற்படுவதாயினும் அதன் ஏக போக உரிமை தங்களுக்கு மாத்திரமே உரித்தானது, இடையில் புதிதாய் எமக்கு போட்டியாய் யாரும் வெளியில் இருந்து வந்துவிடக்கூடாதென்று நினைக்கின்றனர். அதனால் இனத்திற்கு எதிரான படம் இதுவென்று அவர்களும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க இலங்கையில் இடம்பெற்ற போரில் ஒரு தரப்பு மாத்திரம் என்றில்லாமல் எல்லாத்தரப்பினருமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர், படுகொலைக்கு ஆளாகி இருக்கின்றனர். வலிகளை அனுபவித்தவர்கள் அதை சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது உச்சகட்டவன்முறையாகும். கடந்த காலத்தில் உள்ளக முரண்பாடுகளால் பலியானவர்களுக்கும், படுகொலையானவர்களுக்கும் குரல்கள் உண்டு குடும்பங்கள் உண்டு அவர்களின் குரல்களை அவர்களைச்சேர்ந்த யாரோ ஒருவர் வெளிப்படுத்த நினைப்பது எவ்வாறு தவறாக முடியும்? இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகளுக்கு எம் குரல்கள் உலக அரங்கில் ஒலிப்பதுபோல் அவர்கள் குரல்களும் எமக்கு மத்தியில் எம்மிடையே ஒலித்துவிட்டுப்போகட்டுமேம். அதையேன் ஒடுக்க நினைக்கிறீர்கள்?

ஒரு சிலர் அப்படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினம் இறுதிப்போரில் என் மக்கள் படுகொலையாவது கவலை அளித்தாலும் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் விருப்போடிருந்தேன், இனியும் படுகொலைகள் தொடரக்கூடாதென்று நினைத்தேன் என பி.பி.சி யின் பேட்டியில் கூறினார். அதனால் அப்படமும் அக்கருத்தைத்தான் சொல்கிறது. எனவே அப்படம் திரையிடப்படாமை மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் நாம் பெருமை அடைகிறோம் என்றெல்லாம் எழுதுகின்றனர். அவர்களிடம் ஒரு கேள்வி..

யாழினை மையமாக கொண்ட மாற்று இயக்கத்தினை சேர்ந்த எவர்கள் புலிகள் அழிக்கப்படக்கூடாதென்று நினைத்தார்கள்? ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என அனைத்து மாற்றுக்குழுக்களும் இலங்கை இராணுவத்தினரோடு இணைந்து இராப்பகலாய் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று தீயாக வேலைசெய்யவில்லையா? அவர்கள் எதற்காக இராணுவத்தோடு சேர்ந்தியங்கினர் புலிகளையும் மக்களையும் காக்கவா?

சித்தார்த்தனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும், சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கும், சிவசக்தி ஆனந்தனுக்கும், டக்லஸ் தேவாநந்தாவுக்கும் புலிகள் அழிக்கப்பட்டதில் பங்கில்லையா? அவர்கள் புலிகள் அழிக்கப்படவேண்டும் என நினைக்கவில்லையா? மூச்சுக்கு முன்னூறு தடவை பாசிச புலிகள் பாசிச புலிகள் என்று இதயவீணையில் கீதம் பாடிய டக்லஸ் தேவானந்தாவின் நோக்கம் புலிகள் நீடூழி வாழவேண்டும் என்பதா? புலிகள் அழிய வேண்டும் என்று நினைத்ததோடு மாத்திரமல்ல, அழிக்கவும் நேரடியாக துணைபோன மேற்குறித்த அத்தனை பேரையும் வெட்கமின்றி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் வாக்களித்து நாடாளுமன்றம், மாகாணசபைகள் என்று அனுப்பிக்கொண்டு இருக்கும் ஒரு சமூகம், புலிகளை தவறாக நோக்கினார் என்று "ஜூட் ரத்தினத்தை" புறக்கணித்து தம்மை புனிதர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது வேடிக்கையானது.

மடிந்துபோனவன் எவனாக இருப்பினும் அவனுக்காய் குரல்கொடுப்பது அவன் சார்ந்தவர்களின் ஆத்மார்த்த கடமை. அதிலிருந்து விலகியிருப்பது இறந்துபோனவர்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம். கொன்றவனுக்கு ஒரு நியாயம் இருப்பதுபோல் கொலையானவனுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அதை அவனும் கூறட்டும் சமூகம் சரி பிழைகளை சரிபார்த்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும். உள்ளிருந்து வரும் எதிர்க்குரல்களை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், உங்களுக்கு வெளியே இருந்துவரும் குரல்களை ஒடுக்க நினைப்பது தனிநபர் காழ்ப்புணர்வே...

Demons in Paradise யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதிக்கணத்தில் தடை செய்யப்பட்டது தனிப்பட்ட காழ்ப்புணர்வேயன்றி இனநலன் சார்ந்த முடிவு அல்ல.. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்கும் நாமே இன்னொரு குரலை ஒடுக்க நினைப்பது நியாயம் அல்ல மாற்றுக்குரல்களுக்கும் செவி கொடுப்போம். மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிப்போம். "No Fire Zone" ஆவணப்படத்தினை இலங்கை அரசு தடைசெய்தமையும் Demons in Paradise ஆவணப்படத்தினை யாழில் திரையிட மறுக்கின்றமையும் ஒரே மனநிலை சார்ந்ததே....

Read more...

Saturday, October 6, 2018

சௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு.

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி அரேபியா, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சௌதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

அமெரிக்காவில் தனது மேற்படிப்பை பயின்ற ஒலயன், போர்ப்ஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌதி அரேபியாவை நவீனமயமாக்கும் அதன் பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மானின் 'சௌதி விஷன் 2030' என்ற கருத்தாக்கத்தின்படி, அந்நாட்டில் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்கை ஒன்றிணைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த வங்கி, 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.

நன்றி பிபிசி

Read more...

உடைந்த கதிரைக்குக் கீழ் முறிந்த பனைமரம்- கீர்த்தி வீரசூரியா

1946ல் இருந்தே ஐரோப்பாவில் ஐக்கிய நாடுகளின் தலைமையிடமாக ஜெனிவா உள்ளது, இதில் தர்க்கரீதியான ஒரு தேர்வாக தோல்வியுற்ற உலக நாடுகள் சங்க நிறுவனத்தின் (உலக யுத்தத்தை தடுக்க முடியாத ஆரம்பகால நிறுவனங்களில் ஒன்று) கட்டிடங்கள்,வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் என்பன ஐக்கிய நாடுகள் சபையிடம் உள்ளன. பலயிஸ் டெஸ் நேஷனின் (தேசங்களின் அரண்மனை) முன்பாக உள்ள மிகப்பெரிய திறந்தவெளி சதுக்கத்தை ஒரு உடைந்த கதிரையின்( ஒரு 12 மீற்றர் உயரமான ஒரு கால் நொறுங்கிய நிலையிலுள்ள ஒரு கதிரை) நினைவுச் சின்னச் சிற்பம் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆரம்பத்தில் நிலக்கண்ணிவெடிகள் தொடர்பான ஒட்டவா உடன்படிக்கையை நாடுகளிடம் இருந்து கையெழுத்துப் பெறுவதற்கான ஒரு வாதிடும் கருவியாக அது பயன்பட்டது. அந்த உடன்படிக்கை 1999ல் நடைமுறைக்கு வந்தது மற்றும் தற்போது அதில் ஸ்ரீலங்கா உட்பட 162 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் அதில் குறிப்பிடத்தக்கதாக கையெழுத்திடாமல் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா என்பன முக்கியமானவையாகும், பிரசங்கம் செய்பவர்கள் கூட அதைச் செயலில் காட்ட வேண்டும் இல்லையா? நிலக்கண்ணி வெடிகள் விஷயத்தில் இது நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அரண்மனையின் முன்னால் உள்ள பெரிய சதுக்கம் ஒரு விளையாட்டு மைதானம் (அது ஆக்கிரமிக்கப்படாது இருந்தால்) சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் நீர்த்தாரைகளைத் தவிர்ப்பதற்கு அல்லது அதை தவிர்க்காமல் இருப்பதற்காக வேகமாக அந்த இடத்தை சுற்றி வருவார்கள். அது அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிவில் ஆர்ப்பாட்டங்களுக்கான மேடையாகவும் ஆக்கிரமிக்கப்படுவதுண்டு. கடந்த வெள்ளியன்று (செப்ரம்பர் 14) ஒலிபெருக்கிகள் சகிதமாக அங்கு ஒரு பெரிய ஆர்ப்பாட்டம், தீபெத்தினை சீனா ஆக்கிரமித்ததை கண்டித்து தீபெத் கொடிகள் , தலாய்லாமாவின் புகைப்படங்கள்,என்பனவற்றுடன் இடம்பெற்றது, நன்கு பராமரிக்கப்பட்டுவரும் தோட்டங்களுக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் கட்டிடத்துக்கு கேட்கும் வண்ணம் தீபெத்திய பௌத்த கீதங்கள் ஒலிபெருக்கிகள் மூலம் சத்தமாக ஒலிபரப்பப்பட்டன. மறுபுறத்தில் தழிழ் இனஅழிப்பு பற்றிய சுவரொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, ஆனால் காட்சிப்படுத்தப்படவில்லை. எப்படியாயினும் அதற்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்…?

திங்கட்கிழமை (17ந் திகதி) மதியம் ஐநாவுக்கு தமிழ் இனப்படுகொலையை நினைவு படுத்தும் விதமான ஆா்ப்பாட்டங்கள் முழு ஊக்கத்துடன் ஆரம்பமாகின. இந்த விடயம் தொடர்பாக முன்பு நடந்த ஆாப்பாட்டங்களைப் போலில்லாமல் (அது ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது) இது ஒரு சுவிஸ் விவகாரமாகத் தோன்றியது, மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பேருந்துகள் எதுவும் வரவில்லை. அது ஒரு உள்ளக விவகாரமாகத் தோன்றியது பொதுவாக பேச்சுக்கள் யாவும் தமிழிலும் மற்றும் அவ்வப்போது சில ஆங்கிலத்திலும் இடம்பெற்றது. வழக்கமான தலைவரின் சுவரொட்டிகள் மற்றும் தேசத்தினை வாதிடும் வரைபடம் ஆகியன ஒதுக்கப்பட்டிருந்தன ஆனால் அவர்கள் கையில் அசைத்துக் கொண்டிருக்கும் பதாகைகள் செப்ரம்பர் மாதம் ஜெனிவாவில் காயும் அசாதாரண வெய்யிலுக்கு நிழல் தருவதற்கு ஏற்றபடி பயனுள்ள அளவில் இருந்தன. சில அம்சங்களில் அது ஒரு குடும்ப விவகாரம் போலத் தோன்றியது, பத்துவயதுள்ள மகள் ஒரு சிறந்த வைபவ ஆடையை அணிந்திருந்த அதேவேளை அவளது இளைய சகோதரன் வழக்கத்துக்கு மாறான ஒரு கழுத்துப்பட்டி அணிந்திருந்தான். சமூகத்தினைச் சேர்ந்த வர்த்தகர்களும் இதைக் கவனத்தில் எடுத்திருந்தார்கள் - சுவையான அரிசிப் பைகள் மற்றும் பிரச்சாரத்துக்குத் தேவையான சாதனங்கள் அங்கிருந்தன. அங்கு எழுப்பப்பட்டிருந்த மேடையில் உக்கிரமான பேச்சுக்கள் இடம்பெற்ற வேளையில், அங்கிருந்த கூட்டம் (சுமார் 2000 பேர் வரை) தங்கள் சுமுகமான சொந்த உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தபடி பேச்சாளர் உரத்த கருத்துக்களைத் தெரிவிக்கும்போது ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினார்கள். ஜெனிவா நகரக் காவல்துறை, இந்தக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் வெகு அரிது என மதிப்பிட்டிருந்தபடியால், ஏழு காவலர்களைக் கொண்ட ஒரு காவல்துறை வாகனம் மட்டுமே அங்கிருந்தது, சிலர் வெளியே நின்றிருந்த அதேவேளை மற்றவர்கள் வாகனத்தினுள் மெல்லிய உறக்கத்தில் இருந்தார்கள்.

பல தசாப்தங்களுக்கு முன்பு

சில மெல்லிய இளம் பெண்களினால் பிரச்சார சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன, ஒரு சின்னத்தை வாங்கும்படி அவர்கள் என்னிடம் கேட்டபோது, நான் ஒரு சிங்களவன் என்று மரியாதையாகத் தெரிவித்தேன், உடனே அவர்கள் என்னுடன் தொடர்பு எதுவும் கொள்ளாமல் வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். இந்தப் பெண்கள் வெகு காலத்தக்கு முன்பு எனது பல்கலைக்கழக நாட்களில் வழக்கமாக நான் உல்லாசமாகப் பேசிப்பழகும் எனது சக மாணவிகளாக இருந்த யாழ்ப்பாணத்துப் பெண்களை நினைவூட்டினார்கள். சமீபத்தில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற எங்கள் சகமாணவர்களின் மீள் சந்திப்பின்போது, இதே மாணவர்கள் அவர்கள் தற்போது வதியும் நாடுகளில் மதிப்பான தொழில் நிபுணர்களாக உள்ளார்கள். எங்களுடன் படித்தவர்களில் சிறுபான்மையானவர்கள் ஸ்ரீலங்காவில் எஞ்சியுள்ள அதேவேளை பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் பசுமை தேடிப் போய்விட்டார்கள், அது அவர்களை குடிபெயரச் செய்தவிட்டது - அது சிங்களவர்கள் மற்றும் தமிழர்களில் சம விகிதத்தில் உள்ளது.
சுவரொட்டிகளில் உள்ள சில முரண்பாடுகள்.

அங்கே வெளியிடப்பட்டிருந்த சுவரொட்டிகளில் யுத்தக் காட்சிகள் குறிப்பாக கடைசிச் சில வாரங்களில் இடம்பெற்ற காட்சிகள் காணப்பட்டன, மரணமும் அழிவுகளும் அதில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் அதில் ஓரவஞ்சனையான சில திருப்பங்கள் இடம்பெற்றிருந்தன - இரண்டு படங்களின் பின்னணியில் அரச இலச்சினையுடன் கூடிய சுகாதாரத் திணைக்களத்தின் அம்புலன்ஸ் வண்டி காணப்பட்டது. மற்றொரு படத்தில் நிலத்தில் அமரந்திருக்கும் ஒரு பெண்கள் குழுவினை படை வீரர்கள் காவல்காப்பது போல இருந்தது, அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகக் காட்சியளித்தார்கள். வேறு உள்நாட்டு போர்களில் எதிர் தரப்பான அரசாங்கம் தனது எதிரியான போராளிகளுக்கு சுகாதார சேவைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குமா? முரண்பாடான வகையில் பல படங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக் கட்டு கட்டியபடியும் உடைந்த கால்,கைகளுடனும் காணப்பட்டார்கள் மற்றும் அகதிகள் தீக்கனலுக்குள் விழுந்து கிடப்பதைப் போலும் காணப்பட்டது. முக்கியமான நபர்களின் “முன்னர்” மற்றும் “பின்னர்” (துப்பாக்கிச் சூடு பட்டபின்னர்) பிரபலமான படங்களும் இடம்பெற்றிருந்தன - அது எனக்கு போரின் கொடூரங்களை நினைவு படுத்தியதுடன் அனுராதபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் முன்னர் மற்றும் பின்னரையும் நினைவுபடுத்தியது.

அங்கு இடம்பெற்ற பேச்சுக்களில் ஒன்று ஆங்கிலத்தில் அமைந்திருந்தது, அது சர்வதேச விசாரணைகளுக்கான தரமான கோரிக்கை ஒன்றை வலியுத்தியது. அங்கு வழக்கமான கைதட்டல்கள் இடம்பெற்றன மற்றும் சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பேச்சாளரை நான் ஒருவாறு சந்திக்க முடிந்தது, தொடர்ந்து இடம்பெற்ற ஆக்ரோஷமான பேச்சுக்களுக்கு இடையில் அவருடன் ஒரு நீண்ட உரையாடலை சாதாரணமாக நடத்தமுடிந்தது. ஒரு சிங்களவருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் ஆங்கிலத்தில் நடக்கும் உரையாடல் அது என்று எங்களைச் சுற்றியிருந்தவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அதில் கருத்துக்களோ அல்லது மிரட்டும் சைகைளோ இருக்கவில்லை, அந்தப் பேச்சாளரின் நண்பர்கள் வந்து கைகுலுக்கி தமிழில் சில வார்த்தைகள் பேசியபிறகு சென்றார்கள்.

குற்றவாளிகள் யார்?

அந்தப் பேச்சாளரிடம் நான் கேட்டேன் - இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பயனுள்ளவையா அல்லது அது ஸ்ரீலங்காவுக்குள் மாற்றங்கள் ஏற்படுத்துவதைப் பற்றி வாதிடுவதற்கு ஆக்கபூர்வமானவையா? - புலம் பெயர்ந்தவர்கள் சுவிட்சலாந்தில் சௌகரியமாக இருப்பதால் அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள் ஆனால் தங்கள் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து வாதிடுவார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் என்கிற குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை - அது ஒரு சமூகத்தின் ஆன்மாவுக்கு இழைக்கப்பட்ட படுகொலை. எனினும் பின்னர் நாட்டைத் துண்டாடும் வாதத்துக்கும் மற்றும் ஆயுதங்கள் ஆயுதங்களுடன் சந்திக்க நேர்ந்ததையும் எந்த அரசாங்கத்தாலும் சகித்தக் கொள்ள முடியாதிருதந்தது. பேச்சு வார்த்தைகளுக்கான இடம் இருந்தது ஆனால் அரசாங்கம் அதைப் பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு - சாட்சியங்கள் தெரிவிப்பதிலிருந்து சமாதானத்துக்காக வழங்கப்பட்ட காலம் ஆயுதங்களைச் சேகரிப்பதற்காக எடுத்தக்கொள்ளப்பட்டது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் ( இது ஐதேக மற்றும் ஸ்ரீலசுக மட்டும் அல்லாது ஆனால் சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இரு தரப்பிலும்) குறுகிய காலத்தில் அரசியல் ஆதாயம் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள்தான் இதற்கான அடிப்படைக் காரணம் என்கிற் ஒரு விஷயத்தை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிறுபான்மையினரை வாழ அனுமதிக்க வேண்டும் - சமாதானத்தை மேலுயுயர்த்துவதில் பௌத்த குருமார்களின் பங்கு என்ன? ஆகக்குறைந்தது சமீபத்தில் பௌத்தபோதனைகளுக்கு மாறாக நடந்த சில நபர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை சரியான பாதைக்காக ஒரு படி என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் பௌத்த குருமார்களிடம் இருந்து தேசிய சமாதானத்துக்கான முக்கிய அழைப்பு வெளிவரும் என நான் எண்ணவில்லை.

ஆனால் திரும்பவும் பழைய கேள்விக்கு வந்தால் தனிநாட்டுக்கான இந்த வகையான ஆர்ப்பாட்டங்கள் பயனுள்ளவையா? அந்த பேச்சாளர் குறிப்பிட்டது இது பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு வேண்டியானது - பகிரப்பட்ட பொறுப்புக்களுடனான ஒரு கூட்டாட்சி நாடு உருவானால் தனிநாட்டு பிரச்சினை அடங்கிப் போகும். கொள்கையளவில் இது நல்லது, நாடு முழுவதிலும் உள்ள இந்த பகிரப்பட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாங்கள் கவலையடைந்துள்ளோம். மாகாணசபைகளின் கட்டுப்பாடு எங்கே?

வெளிப்படைத்தன்மை - வடக்கிற்கு மட்டும் அல்ல ஆனால் நாடு முழுவதுக்கும்

வடக்கில் உள்ள குடிமக்களின் பிரார்த்தனை இயல்பு வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே - அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றது ஆனால் காட்டு நிலங்களுக்கு எந்த முன்னேற்பாடும் இல்லை. குறைந்தபட்சம் அவற்றை சுத்தமாக்கி திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உரியது. அரசாங்கம் அதைச் செய்யுமா? நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலங்கள் கையேற்கப்பட்டிருந்தால், சுத்திகரிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டதா? வட மாகாண முதலமைச்சர் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக விசேட நிதி ஒன்றை வழங்குமாறு கேட்டிருந்தார், ஆனால் அது மறுக்கப்பட்டுவிட்டது, அப்போது நான் அவரிடம் கேட்டேன், அத்தகைய நிதி மாகாண சபைகளின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமா என்று? நிதி முறையான வகையில் செலவு செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி? ஒரு யோசனை - வடக்கிற்கு மட்டுமன்றி அனைத்து மாகாண சபைகளினதும் செலவு விபரங்களை இணையத்தில் வெளியிட்டால் என்ன? குடிமக்கள் செலவுகளைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.

சமீபத்தைய புத்தகம் - இரு தரப்பிலுமுள்ள போர் விதவைகளின் வருமானம்

அப்போது நான் அஜித் கனகசுந்தரம் எழுதிய சமீபத்தைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டேன், அவர் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை ஆனால் நான் இரு தரப்பிலுமுள்ள யுத்த விதவைகளின் வருமானம் பற்றிக் குறிப்பிட்டபோது, அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவேண்டும். மேலதிகமாக, அவரது பேச்சில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டதைப்பற்றிக் கேடடபோது, அது இரு தரப்பையும் சேர்ந்தவர்களுக்கா அல்லது இராணுவத்துக்கு மடடுமா என்று நான் கேட்டேன். இரண்டு தரப்பிலும் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர்களைப் பற்றி விசாரணை செய்வதில் அவருக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதற்கு மாறாக அந்தப் பக்கத்தில் விசாரணை செய்யப்பட்டால் வரிசையில் முதலில் நிற்கப்போகிறவர் தலைவராகத்தான் இருப்பார். உக்கிரமான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மிக மிக ஆரம்பத்தில்

அப்போது நான் 1970ம் ஆண்டின் உயர்தரப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் இடம்பெற்ற தரப்படுத்தல்தான் ஆயுத மோதலின் ஆரம்பம் என்பதைக் கவனத்துக்கு கொண்டு வந்தேன் - இது பெரும் எண்ணிக்கையிலான கல்விகற்ற தமிழ் இளைஞர்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்கை முன்னேற்றமடையும் வாய்ப்பினைக் குறைத்தது. எனினும் அவர்கள் நல்ல கல்வி வசதியுள்ள பாடசாலைகளில் படித்ததின் விளைவாகவே அவர்களால் நல்ல பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற முடிந்தது. கல்வி ரீதியாகப் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் கடுமையாகப் படித்தபோதிலும் அவர்களால் இதே மாதிரியான பெறுபேறுகளை அடைய முடியவில்லை. கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் சில “நேர்மறையான பாகுபாடு” உள்ளது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும், அது நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் செயல்படுத்தப்படுகிறது. கொழும்பு, கம்பகா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் அவர்கள் தமிழர் மற்றும் சிங்களவர் என்ற பேதமின்றி பல்கலைக்கழகத்துக்கு தேர்வாவதற்கு ஒரே அளவான உயர் தடையை தாண்டவேண்டி உள்ளது.

ஒக்ஸ்போட் மற்றும் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகங்கள் அரச பாடசாலைகளில் (அங்கு வசதிகள் குறைவு) உள்ள குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் அதேவேளை வசதியுள்ள தனியார் பாடசாலை மாணவர்களைச் சேர்ப்பதற்கு உயர்ந்த பெறுபேறுகளைத் தெரிவு செய்கிறார்கள். இளங்கலைப் படிப்பின் முடிவில் இறுதிப் பெறுபேறுகளை ஒப்பீடு செய்யும்போது, அரச பள்ளிகளில் இருந்து தெரிவானவர்கள் விகிதாசார ரீதியில் மிகவும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்திருப்பது, அரச பள்ளி மாணவர்களின் பரீட்சை முடிவுகளுக்கான கட்டுப்பாட்டு மட்டம் இன்னும் குறைவாக இருக்கவேண்டும் என்பதை அடையாளப் படுத்துகின்றது (ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழக ஆணைக்குழுவும் இதுபோன்ற முடிவுகளை ஸ்ரீலங்கா பல்கலைக்கழக முறையில் அறிமுகப்படுத்துமா?).

இந்த விடயத்தில் அதை ஒப்புக்கொள்ளும் மனநிலை பேச்சாளரிடம் இருக்கவில்லை - பரீட்சை முடிவுகள் மற்றும் நுண்ணறிவு இரண்டும் ஒரே திட்டமான அளவுகோலாக இருக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அதன்படி கிராமப்புற மாணவர்கள் ( இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட) பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கான வரிசையில் தொடர்ந்தும் பின்னுக்குத்தான் நிற்கவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆகவே போராட்டம் நடத்தப்பட்டது தமிழ் மாணவர்களுக்காகவா அல்லது தரப்படுத்தலால் அனுகூலம் அடைய முடியாதவர்களுக்காகவா?

தரப்படுத்தல் ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல - ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்தங்கிய பகுதிகளுக்கு ஆழ்ந்த வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றும் அதன்பின் உயர்தரப் பரீட்சை முடிவுகளின் முன்பு அனைவரும் சமமாக இருப்பார்கள். திரும்பவும் குறுகிய நோக்கை இலக்காகக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் குடியியல் மனப்பான்மையோடு இருக்கிறார்களா அல்லது அபராதம் என்கிற அச்சுறுத்தலுக்குப் பணிந்து உள்ளனரா?

பேச்சாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் மற்றொரு கூட்டத்துக்கு செல்ல இருப்பதால் உரையாடல் அத்துடன் முடிவுற்றது. நான் சுவரொட்டிகளைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன் அரிசிப் பைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன மற்றப்பக்கத்தில் வரலாற்றைப் பதிவு செய்திருந்த புத்தகங்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மோதலைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்வதற்காக நான் இந்தப் புத்தகங்களை கொள்வனவு செய்யலாமா அல்லது நடுநிலையான சுயாதீன விளக்கத்தை வெளிப்படுத்துவதில் ஆர்வம் அற்ற ஒரு காரணத்துக்கு அது பங்களிப்புச் செய்கிறதா என்கிற குழப்பம் ஏற்பட்டது. முடிவில் நான் புத்தகங்களைக் கொள்வனவு செய்யவில்லை. பின்னர் இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் மற்றும் எதிர்காலத்துக்கு என்ன பயன் என்று ஆச்சரியப்பட்டவாறே எனது அலுவலகத்துக்குத் திரும்பினேன். பின்னர் நான் பி.ப 7.30 மணியளவில் (ஆம் இன்னமும் பகல் வெளிச்சம் உள்ளது) திரும்பவும் அந்தச் சதுக்கத்தைக் கடந்து சென்றேன், அது, சுத்தமாக,நன்கு கூட்டப்பட்டு அடுத்த ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராக இருந்தது. ஒரு தரமான ஸ்ரீலங்காவாசியை (சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இருதரப்பினையும் சேர்த்து) விட புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் குடியியல் மனப்பான்மை கொண்டவர்களா அல்லது ஜெனிவா நகரசபை அதிகாரிகள் அபராதம் விதிப்பார்களே என்கிற அச்சம் காரணமாக இது செய்யப்பட்டதா?

எனவே நாங்கள் என்ன செய்ய முடியும்

மேலும் நாங்கள் என்ன செய்ய முடியும் - காயங்களை குணப்படுத்தி எங்களை ஒன்று சோ்ப்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளிலும் மற்றும் ஆட்சியாளர்களிலும் தங்கியிருக்கலாமா? அவர்களில் சிலர் அப்படிச் செய்வதற்கு முயற்சி செய்யலாம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நாம் பார்த்த வரலாறு மூலம் அவர்களது குறுகிய பார்வை மற்றும் தங்களைச் செழிப்பாக்குவது இன்னும் தொடரும். உயர்மட்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சி என்பனவற்றில் சிறிதளவு நம்பிக்கை உள்ளது.

கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறைக்கான சாத்தியம் உள்ளதா?

ஸ்ரீலங்கா கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறையை கொண்டிருந்தது அது விளைவுகளைத் தந்தது - 1956ல் வாக்குரிமையற்ற பெரும்பான்மை சிங்களவர்கள் சமூகத்தில் தங்களுக்குள்ள இடத்தை தேர்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரினர். 1970ல் கிராமப்புற இளைஞர்கள் தங்கள் கிளர்ச்சியின் மூலமாக, நில உரிமை, வளங்களை நியாயமாகப் பகிருதல் போன்ற பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். ஆனால் இது ஒரு தேர்தல் புரட்சி மூலம் உருவானதல்ல. இரண்டாவது ஒரு கிளாச்சி ஏற்பட்டால் தாங்கள் தப்பி பிழைக்க மாட்டோம் என அச்சமடைந்த அரசியல்வாதிகளின் சுயபாதுகாப்பு காரணமாக அது ஏற்பட்டது. 1990 களில் தெற்கில் அரசாங்கத்துக்கும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டஒரு சர்வாதிகார அரசியல் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஆனால் அது ஒரு சமூக அமைப்பு அல்ல. அந்தக் கட்சி தனது பாடங்களைக் கற்றுக்கொண்டது மற்றும் இப்போது அது கொள்கை மற்றும் நேர்மை என்பனவற்றைக் கொண்ட ஒரே அரசியல் கட்சியாக அது தோற்றம் பெற்றுள்ளது. உள்நாட்டு மோதல் 1980 களில் ஆரம்பித்து மூன்று தசாப்தங்களாக நீடித்தது - பெறுமதியான சில கொள்கைகளைக் கொண்டிருந்த ஒரு இயக்கம் (மற்றும் பெரிய அளவிலான சர்வாதிகாரத் தன்னமைகளையும் கூட) பேச்சுவார்த்தையில் அவர்களது இயலாமை காரணமாக இறுதியில் தோல்வியடைந்தது.

வாக்காளர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுள்ள ஆட்சியாளர்களைப் பெறுகிறார்களா?

தங்கள் பிரதிநிதிகளின் தகுதிகள் பற்றிச் சிறிதளவு கருத்தில் கொள்ள வேண்டும் - மக்கள் பிரதிநிதிகளின் கல்வித் தகைமைகளை கொண்ட சுயாதீனமான ஒரு வலைத்தளத்தை அமைத்தால் அது மிகவும் சுவராஸ்யமானதாக இருக்கும். கடந்து செல்லும்போது பிரித்தானிய அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு நபரும் பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர் - எங்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்சம் ஒரு முழுமையான இரண்டாம் நிலை கல்வித்தரத்தை பூர்த்தி செய்துள்ளார்களா என்று கேட்பதுகூட அதிகப்படியான ஒன்று - அதாவது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரு சில பாடங்கள் சித்தி அடைந்திருப்பது.

ஆகவே நாட்டிலுள்ள உயர்ந்த கல்வி கற்ற வாக்காளர்கள் தாங்கள் பெற்ற இலவசக் கல்விக்குத் துரோகம் செய்கிறார்கள் - அவர்கள் சுய நலனுக்காக வாக்களிக்கப்பட்ட அரசியல்வாதியைப் போன்றவர்கள் (வேட்பாளரிடம் இருந்து என்ன நலனை என்னால் பெறமுடியும்) மற்றும் அவர்கள் தேசிய நீண்டகாலத் தீர்வில் அக்கறையற்றவர்கள். குடிமகன் தனது கடமையைச் செய்து அவர்களைத் தெரிவு செய்த பின்னர் அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர்கள் குடிமக்களுடன் பெரிதாகத் தொடர்பு கொள்வதில்லை, அந்த நேரத்தில் எதிர்மறையான தாக்கங்கள் எதுவும் எழுவதில்லை ஆனால் தேர்தல் வரும்போது முழுப்பேரும் தள்ளி ஒதுக்கப்பட்டு புதிய தொகுதி ஒன்று வேரூன்றிவிடும். ஆகக்குறைந்தது 1977வரை அதுதான் வழமையான பாணியாக இருந்தது, விஷயங்களைக் கையாள்வதில் வல்லவரான ஒருவர் இந்த அச்சை உடைத்ததுடன் தேர்தலையும் வேறுவிதமாகக் கையாண்டார், அரசியல்வாதிகள் வழக்கமான பாணியை உடைத்து தசாப்தங்கள் நீண்ட வன்முறை, அழிவு, மற்றும் அரசியலில் இருந்த குடியியல் தன்மை மற்றும் பொதுவாக வாழ்வில் பலவீனம் என்பனவற்றை இந்த நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். மற்றும் இது உரிமை தொடர்பான உணர்வில் எழுச்சியைத் தந்ததா, யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது ஆகவே இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்களான நாங்கள், நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் உரிமை உள்ளவர்கள். இந்த யுத்தம் (பிரதானமாக கிராமப்புற இளைஞர்களால் நடத்தப்பட்டு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது), நாடும் மற்றும் சமூகமும் வழங்கும் நலன்புரி சேவை, கல்வி,மற்றும் வாய்ப்புகள் போன்ற அனைத்து நலன்களையும் பெறும் வகையில் நாட்டைப் பழைய நிலைக்கு கொண்டுவர் உதவியது.

தடையற்ற அதிகாரம் கொண்டு வரப்பட்டு மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் அகற்றப்பட்ட நிலையில் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதை நம்மால் காணமுடிகிறதல்லவா. நாங்கள் செலுத்திய விலை நிரந்தரக் குழப்பம் மற்றும் மூன்று படிகள் முன்னேறினால் இரண்டு படிகள் கீழிறங்கும் நிலை என்பன உருவாவதற்கா, ஒருவேளை அப்படியிருந்தால் அதுதான் ஜனநாயகத்தின் விலை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாத நச்சு விதைகள்.

அரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான வாக்கு வங்கிகளை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும்.

இந்த பிரதேசவாதம் என்னும் கொடூர நோயினால் சமூகத்துக்குள் ஒற்றுமை இழந்து பிளவுகளும், பிரிவினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து எமது சிறுபான்மை சமூகம் பலயீனம் அடைந்துவிடும் என்ற எந்தவித கவலைகளும் இந்த அரசியல்வாதிகளிடம் இல்லை.

சிலர் தனது பிரதேசவாத சிந்தனைகளை வெளிப்படைகாக தனது ஊர் மக்களிடத்தில் விதைப்பார்கள். ஆனால் வேறு சிலர் வெளிப்படைகாக சமூகம் என்று பேசினாலும் அவர்களது செயல்பாடுகள் மூலமாக பிரதேசவாத போக்கினை புரிந்துகொள்ள முடியும்.

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தனது பிரதேசவாத சிந்தனைகளை மிகவும் தந்திரமாக செயல்படுத்தி வருவது நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்த அக்கரைப்பற்று பிரதேசம் பின்னாட்களில் அங்கு மு.கா செல்வாக்கு இழப்பதற்கு பிரதேசவாத நடவடிக்கையே முதல் காரணமாகும்.

அன்று மர்ஹூம் அஸ்ரப் மீதுள்ள கோபத்தினால் கல்முனையான் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமரவிடகூடாது என்று சேகு இஸ்ஸதீனால் ஆரம்பிக்கப்பட்ட வெளிப்படையான பிரதேசவாத சிந்தனையை பின்னாட்களில் வந்த அதாஉல்லா மிகவும் கட்சிதமாகவும், தந்திரமாகவும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.

சேகுஇஸ்ஸதீன், அதாஉல்லா ஆகியோருக்கிடையில் அரசியலில் நீண்டகால பகைமையும், ஏட்டிக்கு போட்டியான அரசியல் காணப்பட்டாலும், பிரதேசவாத சிந்தனைகளை அக்கரைபற்று மக்கள் மத்தியில் விதைக்கின்ற விடயத்தில் அவர்களிடம் ஒற்றுமையே காணப்படுகின்றது.

அந்தவகையில் கல்முனையை பிரித்தாளும் மிகவும் தந்திரமான நடவடிக்கையை தனது சாதூர்யமான அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாக தொடர்ந்து அதாஉல்லாவினால் கையாளப்பட்டு வருகின்றது. அதற்காக எடுத்துக்கொண்ட துரும்புதான் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரமாகும்.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்ற தனியான உள்ளூராட்சிமன்ற விவகாரத்தினை பயன்படுத்தி, கல்முனையை பிரித்தாளும் தனது அரசியல் தந்திரோபாயத்துக்கு மிகவும் கட்சிதமாக அதாஉல்லா காய்நகர்த்துகின்றார் என்பது சாய்ந்தமருது மக்களினால் புரிந்துகொள்ள முடியாதது வேடிக்கைதான்.

மகிந்த ராஜபக்சவின் தம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அதாஉல்லா அவர்கள் மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சிமன்ற மாகாணசபைகள் அமைச்சராக இருந்தபோது, ஒரு பிரதேச சபையாக இருந்த தனது ஊரை இரண்டு சபைகளாக பிரித்து அதில் ஒன்றை மாநகர சபையாக தரம் உயர்த்தி தனது அதிகாரத்தை காண்பித்தபோது, சாய்ந்தமருதுக்கும் சேர்த்து தனியான சபையை வழங்கி இருக்கலாம். வழங்கி இருந்தால் அதனை தடுப்பதற்கு அன்று யாரு இருக்கவில்லை.

ஏனென்றால் 2012 ஆம் ஆண்டில்தான் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசுடன் இணைந்தது. 2010 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரைக்கும் உள்ளூராட்சி அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தபோது, முஸ்லிம் காங்கிரஸ் எதிர்தரப்பு வரிசையில் இருந்தது. சாய்ந்தமருதுக்கான தனியான சபையின் கோரிக்கை வலுப்பெற்று இருந்த காலம் அதுவாகும்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்ததன்பின்பு தேர்தல் ஆணையாளரிடம் அதிகாரம் இருந்த நிலையில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்றம் வழங்கப்படும் என்று அமைச்சர் அதாஉல்லா பகிரங்கமாக அறிவிப்பு செய்திருந்தார்.

இந்த அறிவிப்பினை உண்மை என்று நம்புவதற்கும் சில பிரமுகர்கள் சாய்ந்தமருதில் இருக்கத்தான் செய்தார்கள்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கல்முனையை நான்கு சபைகளாக பிரித்து அதில் மருதமுனைக்கும் ஒரு சபை வழங்கப்படும் என்று மருதமுனை மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டியிருந்தார். கல்முனையை துண்டாடும் அதாஉல்லாவின் அரசியல் தந்திரோபாயத்துக்கு வலு சேர்க்கும்விதமாக மருதமுனை மக்களையும் களத்தில் இறக்குவதுதான் அதன் நோக்கமாக கருதப்பட்டது.

தடயங்கள் தொடரும்..............................


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

பயங்கரவாதிகளே சிறையில் உள்ளனர். அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. நீதி அமைச்சர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது சம்பந்தமாக பேசி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தகவலறியும் சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரும் தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் பாதாள உலக குழுவினர் செயற்படுத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசு அதனை தடுத்திருப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

Read more...

Friday, October 5, 2018

இனவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிரான பங்கென்ன?

அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம்பெற்ற இடமாற்றங்கள், அதனூடான வெற்றிடம் , வெற்றிட நிரப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. அங்கே இனவாதம் ஒழிந்து நிற்கின்றது அல்லது நிமிர்ந்து நிற்கின்றது என்று கூறலாம்.

குறித்த இடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பில் சேவை மூப்பின் அடிப்படையில் வழங்கப்படவேண்டிய ஒருவருக்கு வழங்கப்படாமல் , அவரிலும் சேவையில் இளையவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சில அரசியல்வாதிகள் நீலிக்கண்ணீர்வடிக்க, அவற்றை தூக்கி செய்தியாக்கிய தமிழ் தேசிய ஊடங்கள் தமது தேசியத் தகமையை நிலைநிறுத்திக்கொள்கின்றன.

இடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பாக ஆளுநரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அங்கே திட்டமிட்படி நியமனங்கள் குறித்து ஆளுநரால் சந்திப்பில் கலந்து கொண்டிந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன் மற்றும் வியாழேந்திரன் உட்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் அனுபவத்தில் மூத்தவர் என்று சொல்லப்படுகின்ற குறித்த பெண்மணியை அவ்வாசனத்தில் ஏன் அமர வைக்க முடியாது என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்ட காரணம் யாதெனில் அவர் ஒரு பெண் என்றும் அவரால் நிலைமைகளை சமாளிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிட்டுக்காட்டவேண்டிய அயோக்கியத்தனம் யாதெனில், உலகிற்கு முதலாவது பிரதம மந்திரியை தெரிவு செய்துகாட்டிய இலங்கையில், ஒரு கல்வித்திணைக்களத்தில் பெண்ணை தலைமைக்கு அமர்த்த முடியாதா என்ற வாதத்தை முன்வைக்க முடியாதவர்களாக பெட்டிப்பாம்பாக உள்ளே அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேவந்து ஊடகங்கள் முன் இனவாத நஞ்சைக்கக்கியுள்ளனர்.

ஊடகங்கள் முன்னால் இவ்விடயத்தை பேச முடிந்தவர்களுக்கு ஆளுநரிடம் நேரடியாக விடயத்தை விவாதிக்க முடியாதிருந்துள்ளது.
இதில் மேலும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் பிரதிக் கல்விப் பணிப்பாளராவிருந்த சிவநேசனுக்கு குறித்த பெண்ணின் அனுபவம் மற்றும் நிர்வாக பலம் பலவீனம் தொடர்பிலும் தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் அவர்கள் விடயத்திற்கான தீர்வை பெறவேண்டிய இடத்தில் பெறுவதை தவிர்த்து , அதை இனவாதமாக்கி அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே முயலுகின்றனர்.

அரசியல்வாதிகளின் குறித்த பிச்சைக்காரன் கைப்புண் கைங்கரியத்தை எதிர்க்க திராணியற்ற ஊடகங்கள் ஒத்தோடுகின்றன.

இன்று அரச உத்தியோகத்தர்கள் இனரீதியான ஒதுக்கீட்டில் சில நிர்வாக கதிரைகளில் அமர்கின்றனர். இது மூவின மக்களும் வாழுகின்றதோர் நாட்டுக்கு பொருத்தமானதாகுமா? அவ்வாறு அமர்கின்றர்வர்களில் சிலர் தங்கள் இனம்சார்ந்து செயற்படுகின்றபோது மாற்று இனத்தை சேர்ந்தவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவது நியாயமானதா? என்ற கேள்விகளை எழுப்பும் ஊடகங்கள் அரிதாகவே காணப்படுகின்றது.

இனவாதக்கருத்துகளை தேடிப்பிடித்து முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்கள் அரச ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்ணால் கண்டு கொள்வதே இல்லை. மக்கள் இன்று அரச ஊழியர்களின் அடாவடித்தனங்களில் சிக்கித்தவிக்கின்றனர். ஆனாலும் ஊடகவியலாளர்கள் தங்களது சுயலாபங்களுக்காக அவற்றை சுலபமாக கடந்து செல்கின்றனர். ஏன் அவ்வாறானவர்களுக்கு வக்காலத்தும் வாங்குகின்றனர்.

சமூக அநீதி ஒழிக்கப்படவேண்டுமாக இருந்தால் ஊடகங்கள் அதிகார சக்திகளின் அடாவடித்தனங்கள், அடக்குமுறைகள் மற்றும் பாரபட்சம் போன்றவற்றிக்கு எதிராக மக்கள் நலன்சார்ந்து நிற்கவேண்டும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com