Thursday, April 21, 2016

ஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள். கலையரசன்

மறைந்த ஊடகவியலாளர் பாலா தொடர்பான நினைவுகள்.

சுவிட்சர்லாந்தில், 1992 - 1994 காலப்பகுதியில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஏடு எனும் மாதாந்த பத்திரிகையை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றில், எந்த அரசியல் சார்புமற்று நடுநிலையாக பத்திரிகை நடத்துவது ஒரு பெரிய சாதனை. அதே காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வந்து கொண்டிருந்த "சுவிஸ் தமிழர்", அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாக பல்சுவை அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

அந்த வகையில் தமிழ் ஏடு, புலம்பெயர்ந்த தமிழரின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளது. அது பற்றிய தகவல்கள், எதிர்கால சந்ததியினரின் அறிவுத் தேடலுக்கு உதவும் வகையில் பதிவு செய்யப் பட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகையின் ஆசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எனது ஊடகவியல் அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் மூலமாக அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சுவிட்சர்லாந்தில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த தமிழ் அரசியல் ஆர்வலரான பாலசுப்ரமணியம், கடும் சுகவீனமுற்று இலங்கைக்கு சென்றிருந்த நேரம் 10-4-2016 அன்று காலமானார். அவரது இறுதிக் காலங்களில், ஒரு சமூக ஆர்வலராக, அரசியல் ஆர்வலராக பலராலும் அறியப் பட்டவர்.

சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப் பட்ட முதலாவது தமிழ் செய்திப் பத்திரிகையை நடத்தியவர் என்ற பெருமையும் அமரர் பாலசுப்ரமணித்தையே சேரும். தமிழ் ஏடு என்ற அந்தப் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரதம ஆசிரியரும் அவர் தான். அமரர் பாலாவின் நினைவாக, தமிழ் ஏடு பத்திரிகை தொடர்பான நினைவுக் குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


"தமிழ் ஏடு" பத்திரிகையின் (உதவி) ஆசிரியர் என்ற வகையில், அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருந்துள்ளது. திரு பாலசுப்ரமணியம், நிர்வாகம், விநியோகம் சம்பந்தமான விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பத்திரிகையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன்.

அதன் முதல் இதழில் இருந்து, "எடிட்டோர் பக்கம்" என்ற பெயரின் கீழ் ஆசிரியர் தலையங்கம் எழுதி வந்தேன். அது மட்டுமல்லாது, "கலை, அநாமிகா, தரணியன், தான்தோன்றி, யூரேசியன்" போன்ற பல புனை பெயர்களின் கீழும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். உலகச் செய்திகள், உலக அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் நானே எழுதினேன்.

தமிழ் ஏடு, 1992 முதல் 1994 வரையில், இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக மாதமொருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. பொருளாதார கஷ்டம் காரணமாக இடையிடையே காலதாமதம் ஏற்பட்டு பின்னர் ஒரேயடியாக வராமல் நின்று விட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த அனைத்து தமிழ்க் கடைகளிலும் விற்பனைக்கு விடப் பட்டது. அது மட்டுமல்லாது, உலகம் முழுவதும் சந்தாதாரர்களுக்கு அனுப்பப் பட்டது.

தமிழ் ஏடு பத்திரிகையை, இந்திய, இலங்கை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். அதைவிட, ஐரோப்பாவில் வெளிவந்து கொண்டிருந்த முற்போக்கான சிற்றிதழ்களுடன் இதழ் பரிமாற்றம் செய்து கொண்டோம்.

மனிதம் (சுவிட்சர்லாந்து), தூண்டில் (ஜெர்மனி), சுவடுகள் (நோர்வே), ஓசை (பிரான்ஸ்) போன்ற பல சஞ்சிகைகள், தமிழ் ஏட்டுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தன. அந்தக் காலங்களில் இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த, நடுநிலை தவறாத முற்போக்கான சரிநிகர் பத்திரிகையுடன், தமிழ் ஏட்டை ஒப்பிட்டுப் பார்த்தவர்களும் உண்டு.

தமிழ் ஏடு, ஒரு காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப் பட்ட பிரபலமான பத்திரிகையாக இருந்தது. அது எந்த அரசையும், எந்தவொரு தமிழ் அரசியல் அமைப்பையும் சார்திருக்கவில்லை. அதனால், அனைத்து தரப்பினரினதும் கடும் விமரிசனங்களை சந்தித்து இருந்தது. நிதி விடயத்தில், கொடையாளிகள், முதலாளிகளின் பணத்தில் தங்கியிருக்கவில்லை. தமிழ் விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து வந்தாலும், பிற்காலத்தில் ஒரு சிலரின் பயமுறுத்தல் காரணமாக பின்வாங்கி இருந்தனர்.

வெளிநாட்டு சமூகத்தினரின் கலாச்சார ஏடு என்ற காரணத்தால், சுவிஸ் அரசு ஒரு சில நேரங்களில் சிக்கனமான நிதி வழங்கி இருந்தது. அது பத்திரிகை அச்சடிக்கும் செலவுக்கே போதவில்லை. அமரர் பாலசுப்ரமணியம், தனது சொந்தப் பணத்தை முதலிட்டு ஆரம்பித்த பத்திரிகை, கடைசியில் நஷ்டத்தையும், பெரும் செலவையும் உண்டாக்கியது. அப்படி இருந்தும் பாலா அண்ணா அதை ஒரு சமூக சேவையாக கருதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி மூலம் சுவிட்சர்லாந்து வந்த ஆரம்ப கட்ட தமிழ் அகதிகளில் பாலசுப்ரமணியமும் ஒருவர். அழகிய எழில் கொஞ்சும் ஸ்பீஸ் (Spiez) என்ற எரிக் கரை கிராமத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வதிவிட அனுமதி பெற்ற பின்னர், ஸ்பீஸ் கிராமத்தில் இருந்த வயோதிபர் மடத்தில் உதவியாளர் வேலை செய்து வந்தார். தனது தஞ்சக் கோரிக்கைக்கு, பேர்ன் நகரில் இருந்த பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபை உதவிய காரணத்தால், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.

பேர்ன் (Bern) நகரில் தமிழர்கள் ஒன்றுகூடும் கிறிஸ்தவ தேவாலயத்தில் தான், நான் பாலா அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது 40 கி.மி. தூரத்தில் உள்ள பீல் (Biel) நகரத்தில் வாழ்ந்த என்னையும், பிற தமிழ் இளைஞர்களையும், கூட்டிச் செல்வதற்கு தேவாலய ஊழியர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு, பயணச் சீட்டு கொடுத்து அழைத்துச் செல்வார்கள். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதாக இருந்தது. எமது நோக்கம் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதாக இருந்தது.

இலங்கையில் வவுனியாவில் பிறந்த பாலசுப்ரமணியம் ஓர் இந்து. அவரது (முதல்)மனைவி ஒரு கத்தோலிக்கர். இருப்பினும் பெந்தெகொஸ்தே சபையுடன் ஒத்துழைத்தனர். இதை நாங்கள் வெறுமனே மதம் சார்ந்த விடயமாக பார்க்க முடியாது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், திக்குத்தெரியாத அந்நிய நாடொன்றில் வந்திறங்கிய அகதிகள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறத் துடித்தனர். உண்மையில், அந்த கிறிஸ்தவ சபை தொடர்பு காரணமாக கிடைத்த சுவிஸ் வயோதிப நட்புறவுகள், தமிழ் ஏடு பத்திரிகை தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருந்தனர். அவர்களுடைய உதவியின் மூலம், சுவிஸ் அமைச்சர் வரையில் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

தொடக்கத்தில், தமிழ் எழுத்துரு மூலம் கணணி தட்டச்சு செய்யும் மென்பொருள் தொடர்பாகத் தான், எனக்கும் பாலா அண்ணாவுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் கணணி தொழில் நுட்பத்துடன் பரிச்சயம் உடையவர்கள் மிகக் குறைவு. ஸ்பீஸ் கிராமத்தில், பாலா குடும்பத்தினரின் வீட்டுக்கு நான் சென்றிருந்த நேரம், பத்திரிகை தொடங்குவது பற்றிய யோசனையை தெரிவித்தார். அப்போது இன்னும் பெயர் வைக்கவில்லை. நான் தமிழ் ஏடு என்ற பெயரை முன்மொழிந்தேன். பாலா அண்ணாவுக்கும் அது பிடித்து விட்டது.

தமிழ் ஏடு முதலாவது இதழுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. நான் கணனியில் தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகள், கதைகள், கவிதைகளை தட்டச்சு செய்து கொடுத்தேன். பாலா அண்ணா அவற்றை வெட்டி வெள்ளைத் தாளில் ஒட்டி வடிவமைத்தார். சிறிய அளவில், பதினாறு பக்கத்தில் தயாரான பத்திரிகையின் மூலப்பிரதியை அச்சகத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார். இரவு பகலாக உறக்கமில்லாமல் உழைத்து நாம் தயாரித்திருந்த தமிழ் ஏடு, சுவிட்சர்லாந்து முழுவதும் இருந்த தமிழ்க் கடைகளுக்கு அனுப்பப் பட்டது. அது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வரவேரப் பெற்ற நேரம், நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


அந்தக் காலகட்டத்தில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பிரான்சில் "பாரிஸ் ஈழநாடு", பிரிட்டனில் "தமிழன்" ஆகிய இரண்டு பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. இரண்டும் இலங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், எங்கோ ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக வெளிவரும்.

நாங்கள் அதற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாடுகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டோம். ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் விதத்திலும், தமிழ் ஏடு செய்திகள் அமைந்திருந்தன. அன்றைய காலத்தில், பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட புரட்சி அதுவெனலாம்.

தமிழ் ஏடு பத்திரிகையின் முதலாவது இதழில், சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்று முன்பக்கத்தில் பிரசுரமானது. அந்தப் பிரதி தற்போது என்னிடம் இல்லை. அதனால் என்ன எழுதியிருந்தது என்பதை சொல்ல முடியாமல் உள்ளது. ஆயினும், அன்று தமிழ் ஏடு வெளியிட்ட, யாரும் அறிந்திராத, குடியேறிகளுக்கு அவசியமான தகவல் காரணமாக, விற்பனைக்கு வைத்திருந்த கடைகளில் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது.



பத்திரிகை வெளியிட்டவர்கள் கைகளில் கூட ஒரு பிரதியும் மிஞ்சாத அளவிற்கு, அனைத்தும் விற்றுத் தீர்ந்தமை எமக்கும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த மாதம் வந்த இரண்டாவது இதழும் அனைத்தும் சுடச் சுட விற்கப் பட்டன. அன்றில் இருந்து தமிழ் ஏடு பத்திரிகையின் புகழ் சுவிட்சர்லாந்து முழுவதும் பரவியது. "பத்திரிகை அலுவலகத்திற்கு", அதாவது பாலசுப்ரமணியம் வீட்டிற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலர், தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வாசகர் கடிதங்கள் வந்து குவிந்தன. பலர் தாமாகவே முன்வந்து ஆக்கங்களை எழுதி அனுப்பினார்கள். இலங்கைக்கும் பத்திரிகை சென்றதால், அங்கிருந்தும் கடிதங்கள், ஆக்கங்கள் வந்தன. தமிழ் ஏடு பத்திரிகை, பல இலக்கிய ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை மக்கள் முன் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் நானும் ஒருவன் என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகைத் துறை அனுபவம், என்னை ஓர் அரசியல் ஆர்வலராக, எழுத்தாளராக உருவாக்கியது.

தமிழ் ஏடு மூலம் பிரபலமடைந்த பலர், இன்று தாமிருக்கும் நிலைமை காரணமாக அதை சொல்லிக் காட்ட விரும்புவதில்லை. இருப்பினும் பலருக்கும் தெரிந்த பிரபலங்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டாக வேண்டும். வவுனியாவில் இருந்து கொண்டு தமிழ் ஏட்டுக்கு இலங்கையின் உள்நாட்டு அனுப்பிக் கொண்டிருந்த மாணிக்கவாசகர், பிற்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர் பரிசு பெற்றார்.


தனது பூஸா சிறைச்சாலை அனுபவங்களை தொடராக எழுதிய கல்லாறு சதீஷ், இன்று வணிகத்துறையில் கொடி கட்டிப் பறக்கிறார். கோடம்பாக்கம் சினிமாத்துறை அனுபவங்களை எழுதிய அஜீவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற குறும்படத் தயாரிப்பாளர் ஆனார். அரசியல் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் அழகு குணசீலன். சுவிட்சர்லாந்தில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளில் பிரபலமான கஜேந்திர சர்மா, மற்றும் ஜெயக்கொடி இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.

1992 ம் ஆண்டு, இரண்டு பேரின் உழைப்பால் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் ஏடு பத்திரிகை பிரபலமான பின்னர், தாமாகவே விரும்பி பங்களிப்பை செலுத்துவதற்கு பலர் முன்வந்தார்கள். ஆசிரியர் குழுவில் மேலும் பலர் உள்வாங்கப் பட்டனர். பத்திரிகையின் உள்ளே வந்தவர்கள் தமது உழைப்பை மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் பரவாயில்லை. சிலர் கூடவே பிரச்சினைகளையும் இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆரம்ப கட்டத்தில், ஒரு நடுநிலைப் பத்திரிகை, முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது தவறல்ல என்று கருதப் பட்டது. ஆனால், சுயநலவாதிகளையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் சேர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானது என்பது போகப் போக தெளிவானது.


(தொடரும்)



Read more...

Wednesday, April 20, 2016

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

உலகம் எமது போராட்டத்தை தீண்டத்தகாத ஒன்றாக எப்பொழுது பார்க்க ஆரம்பிக்கிறது? எமக்குள் பல இயக்கம்களாகப் பிரிந்து நின்று எங்களுக்குள்ளேயே உயிர் வாழப் போராடுகிறோம்..ஆளையாள் போட்டுத்தள்ளி கொலைகளை செய்கின்றோம். இந்த அடிபிடிகளின் விளைவாக முக்கால் வாசிக் குழுக்கள் காவிவந்த கொள்கையை மறந்துவிட்டு யாரிடம் இருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்டதோ அவர்களிடமே போய் இணைந்துகொள்கிறன. மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரக்தியடைகின்றது. மதப்பிளவுவருகின்றது. இது இனப்பிரச்சனையா மதப்பிரச்சனையா என்ற கேள்வி வருகின்றது. பிரதேசவாதம் வருகின்றது. அரசியல் படுகொலைகள். பெருவாரி மக்கள் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். இது குழு மோதல். பயங்கரவாதம் என்று உலகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு சிங்களப் பேரினவாதம் என்ற புறநிலைக் காரணத்தை தவிர என்ன அகநிலை பதில் எம்மிடம் இருந்தது??

சாதியால்,பிரதேச வாதத்தால்,எம்மிடையே உள்ள உட்பிரிவுகளால்(வர்க்கம் மதம் போன்றன) தமிழர்களிடையே இன ஒற்றுமை நிகழவில்லை..இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை.பிரிவினை,மேலான்மை கொள்ளும் மற்றும் போட்டி மனப்பான்மை,சமூக வேறுபாடுகளால் நிகழாமல் இருந்த இன ஒற்றுமை என்பவற்றால் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாகப் போராடப் புறப்பட்ட போராளிக்குழுக்கள் மிகச்சரியாகப் போராட்டத்திலும் தாங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை குத்துப்பாடுகள்,தங்களுக்குள்ளேயே அடிபாடுகள்,பிரிவினைகளின் மூலம் நிரூபித்தனர்.இன ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பிரிவினைகளைத் தொடர்ந்து சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்கள் தமது இனவிடுதலைக்கு எதிராகச் செய்த துரோகங்கள்,அதைத்தொடர்ந்து அவர்கள் மேல் நடத்தப்பட்ட கொலைகள்,பொறாமை மற்றும் காழ்ப்புணர்வில் தமிழர்களே தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட பரப்புரைகள் என்பவற்ரைத்தொடர்ந்து எமது போராட்டத்தை இனவிடுதலைப் போராட்டமாகக் கருதாமல் குழுமோதலாக உலகின் மனதில் ஏற்பட்ட தப்பான அதிர்வலைகள்,இவற்றின் நீண்டகால விளைவுகளே மூன்றுதசாப்தங்களுக்குப் பின்னர் எம்மை நோக்கிய சர்வதேச எதிர்ப்பை அந்த நேரத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் கட்டிவந்து இறுதி அழிவிற்கு இட்டுச்சென்றன.

ஒரு போதும் நோய்க்கு நிரந்தரத்தீர்வு தேடுவதாக எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைவதில்லை..இது காலங்காலமாக எம்மவர்களிடையே உள்ள ஒரு மிகத்தவறான அணுகுமுறை ஆத்திரத்தில் தனி நபர்கள் மேல் மேற்கொள்ளும் வசைபாடல்களிலும் அவர்களைப் போட்டுத்தள்ளுவதிலுமே எங்களது போராட்ட காலங்களில் அமைந்த பெரும்பான்மையான நாட்கள் ஓடிப் பறந்து விட்டன...இது உலகத்தின் அதிர்ப்த்தியை எம்மேல் கட்டி வளர்க்க உதவியதே அன்றி எமது போராட்டத்திற்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை..ஒவ்வொரு தனிமனிதனையும் எச்சில் பொறுக்கி நாயாக திட்டும்போது அவன் இன்னுமின்னும் வேகமாக எதிரிக்கோ அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாகவோ தனது துரோகப் பந்தை எம்மை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்..அதே போல் ஒவ்வொரு தனிமனித அரசியல்க் கொலைகளின் பின்பும் இன்னொருவன் அதே கொள்கைகளைக் காவிக்கொண்டு இன்னும் வேகமாக முன்னையவன் செய்தவற்றை செய்துகொண்டிருந்தான்...இந்தப் படுகொலைகள்,வசைபாடல்கள்,சீண்டல்கள்,துரோக முத்திரைகள் ஒரு சதவீதம் தன்னும் எமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை..மாறாக பல மடங்கு பின்னோக்கி விழவே உதவியது..சிங்கள அரசியல் வாதிகள் மேல் நிகழ்த்த்தப் பட்ட கொலைகள் கொல்லப்பட்டவனின் கொள்கைகளைக் காவி வந்த அரசியலில் செல்லாக் காசாயிருந்த பின்னையவனுக்கு சும்மாயிருந்த மக்களின் ஆதரவையும் பெருக வைத்து முன்னையவனின் இன அழிப்புக் கொளகைகளை போருக்கு ஆதரவான நிலைப் பாட்டை இன்னமும் தீவிரமாக மேற்கொள்ள ஊக்குவித்தது..இந்தியாவின் மேலும் இதே கொள்கையையே நாம் கொண்டிருந்தோம்..தனி நபர்கள் ஏறி நிற்கும் அரசியல் தளங்களைப் பற்றி நாம் விமர்சிப்பதில்லை..அரசியல் வாதியையும் அவன் பொண்டாட்டியையும் விமர்சித்து விசிலடிப்பதில் எங்கள் சக்தியை விரயமாக்குகிறோம்..வெறுமனே சுப்பிரமணிய சுவாமியும்,சோ வும்,சோனியாவும் அழிந்து போய்விடுவதால் இந்த அரசியல் தளம் ஆட்டம் கண்டுவிடப் போவதில்லை..ராஜீவ் காந்தி இறந்ததால் இன்னொரு சோனியாகாந்தி வந்து ராஜிவ் நினைத்ததை செய்து முடித்தாள்...அடிப்படை பார்ப்பனிய சாதி அரசியலை இந்தியாவில் இருந்து ஒளித்துக்கட்டுவதாகவே எமது எதிர்ப்புகள் அமையவேண்டும்...அவைதான்,அந்தக் கொள்கைகளைக் காவிவருபவர்கள்தான் எமது ஈழப் போராட்ட நலன்களுக்கும் எதிரானதாக இந்தியாவில் மிகப்பெரும் தடையாக தொடர்ந்து இருக்கின்றன/ர்..இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சாதி அரசியலை எதிர்த்து ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் ஊடகங்களோ வாயைத்துறந்ததே மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூறலாம்..ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன,சாதிய அரசியல் தளத்திற்க்கு எதிராகப் போராடுபவர்களே ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

எங்களிடையே இருக்கும் ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..? எங்களுக்குள் நிகழ்ந்த குத்துப்பாடுகளும் பிளவுகளுமே இது சாத்தியமற்றது என்பத்ற்க்குப் போதும்போதும் என்கிற அளவுக்கு காரணங்களை கொண்டிருக்கின்றன..

தேசிய அளவில் பிரதேச வாதம் என்னும் மனநிலையுடன் தன் இனத்தையே பிரித்துப் பார்க்கும் இந்தச்சமூகம் பிரதேசத்துக்குள் ஊர் ரீதியாகவும் ஊருக்குள் சாதி ரீதியாகவும் குடும்பத்துக்குள் ஆண் ஆதிக்கத்தின் மூலமும் பிரிவினைகளின் வெவேறு வடிவங்களை கட்டமைத்து தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.எட்டுப்பேர் இருக்கும் சபையில் இருந்து எட்டுக்கோடி பேர் இருக்கும் சமூகம் வரைக்கும் தன்னை உயர்த்திப் பேசுவதற்க்காக மேலானவனாகக் காட்டுவதற்க்காக ஜாதி,மத,ஊர்,பிரதேச பிரிவினைகளை இந்தச்சமூகம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.வீட்டுக்குள்ளே இது ஆண் என்ற மேலாதிக்க செருக்கு மனநிலையையும் பெண்களை இயலாதவர்களாக ஆண்களுக்குக் கீழ்ப்படிவானவர்கள் என்ற கருத்தையும்,ஊருக்குள்ளே ஜாதிப் பிரிவுகளையும்,பிரதேசத்துக்குள் ஊர்ப்பிரிவினைகளையும்,தேசத்துக்குள் பிரதேசப் பிரிவினைகளையும் கற்றுக்கொடுத்து சமூகப்பிளவுகளை உருவாக்கி இன ஒற்றுமை என்ற ஒன்றை தமிழர்களுக்கு எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகக் கட்டமைப்பு.இந்த சமூகம் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்த பாடங்களே போராட்டம் என்று வந்த போது போராளிக் குழுக்களுக்கிடையேயும் தங்கள் மேலாதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் மற்றையவைகள் தங்களுக்குக் கீழானவையாக இருக்கவேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மையை அடக்கி ஆழும் எண்ணத்தை,போட்டி மனப்பானமையை ஏற்படுத்தி அழிவை,பிளவுகளை நோக்கி அவற்றை வழிநடத்தியது.

இதேவித சமுகப் பிளவுகள்தான் தமிழகத்திலும் இன ஒற்றுமை நிகழாமல் இருக்கக் காரணமாக இருக்கின்றன..ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்து முடியும் வரை தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகளும் சரி இதர கட்சிகளும் சரி ஈழப்போராட்டம் என்ற ஒரு விடயத்துக்காகவேனும் கடசிவரை ஒரு அணியில் நிற்கவில்லை.அழிவின் உச்சக் கட்டத்திலும் நிற்கவில்லை.ஒரு சின்ன உதாரணம்..தமிழ் நாட்டின் எத்தனை கிராமங்களில் மேல்சாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் தன் சக தமிழனை கீழ் சாதி என்று சொல்லி தன் சொந்த இனத்திற்க்கே தண்ணீர் தராமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்...ஏரியாக்களைப் பிரித்தும்..சாதிக்கொரு ஏரியாவை ஒதுக்கியும்..சுவர்களைப் போட்டுப் பிரித்துத் தடுத்து உள்ளே வரவிடாமலும் தன் இனத்திற்க்குள்ளேயே நிறையத் தனி நாடுகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..மலையாளி தண்ணி தரமாட்டேன் என்கிறான் என்பதற்க்கு எதிராகப் போராட ஒவ்வொரு தமிழனையும் ஒற்றுமையாக வரும்படி கூறும்போது ஒற்றுமை அங்கு எப்படி நிகழமுடியும்..?இப்படித்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதாரவாகவும் அவர்களால் ஒன்றுபடமுடியவில்லை..பார்ப்பணியம் அதற்க்கு மிகப்பெரும் தடையாக இருந்தது..இங்கேதான் சமூக விடுதலை இல்லாமல் இனவிடுதலை சாத்தியமற்றதென்பது நடைமுறச் சம்பவங்களுடன் விளக்கம் பெறுகிறது.

ஒவ்வொரு தனி மனிதன் மேலும் இந்த சமூகம் கடுமையான அழுத்தங்களையும்,கட்டுப்பாடுகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது.இந்த அழுத்தமே சமூகம் மீதான இந்தப் பயமே இந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் புரட்ச்சிகரமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துவைத்திருக்கின்றன.இந்த சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட சதவீதமான இளைஞ்ஞர்களே போராடப் புறப்பட்டார்கள்.அவர்களுக்குள்ளும் மிகச்சிறுவீதமானவர்களே சமூக அடக்குமுறைகளை உடைத்துக்கொண்டு புரட்ச்சிகரமான சிந்தனைகளுடன் போராடப் புறப்பட்டவர்கள்.ஏனையோர் அந்தந்த நேரங்களில் அவர்களின் வீடுகளில் நிலவிய குடும்பச்சூழல்,தனி மனித பிரச்சினைகள்,விரக்திகளில் இருந்து தப்புவதற்க்காகப் போராட்டத்தை ஒரு வழியாகத் தெரிவு செய்தவர்கள்.ஒரு மிகச் சிறு வீதத்தினரைத் தவிர மற்றையவர்களை புரட்ச்சிகரமாகச் சிந்திக்க முடியாதபடி,அப்படிச் சிந்தித்தாலும் அதை நடை முறைப் படுத்த முடியாதபடி அவர்கள் மேல் வெவேறு வடிவங்களில் இந்த சமூகம் மறைமுக அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தது(உதாரணம் - சாதி மாற்றத்தை எதிர்க்கும் ஒருவன் சாதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் சமூகம் எப்படிப் பட்ட அழுத்தங்களை அந்தத் தம்பதிகளுக்கு வழங்கும் என்பது).எமது சமூகம் தனி மனித சுதந்திரத்தை,சுயமாகச் சிந்திப்பதை நடைமுறைப் படுத்தும் சுதந்திரத்தை யாருக்கும் வழங்கவில்லை.இதனால் ஒவ்வொருவரும் ஒருவித சமூக மனநோயுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.சமூகச் சூழலே ஒரு மனிதனை உருவாக்குவதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இப்படிப் பட்ட சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.இவ்வித சமூகக் கற்பிதங்களைக் கற்று வளர்ந்தவர்கள் போராடப் புறப்பட்டால் எப்படி ஆகும் என்பதைத்தான் நாங்களே சாட்ச்சியாகவும் குற்றவாளிகளாகவும் நின்று பர்த்துக்கொண்டிருக்கிறோம்..

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் உலகை விமர்சனம் செய்து என்னபயன்..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படியான எமக்குள்ளே உயிர்வாழும் சமூகப் பிளவுகளே போராட்டத்தின் மிகமிக ஆரம்பகாலங்களில் போராட்டத்தின் தோல்விக்குரிய அத்திவாரங்களைப் பலமாகப் போட்டுவைத்தன.இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்..இதேவித இன ஒற்றுமையற்ற சமூகவேறுபாடுகளால் நமது சமூகம் நிறைந்திருக்கும் நிலையில் இந்தவித சமூக நோய்களுடன் இப்படியே இன்னொரு போராட்டத்தை ஆரம்பித்தால் அங்கேயும் முன்னர் எமக்குள் நிகழ்ந்த பிரிவுகள்,பிடுங்குப்பாடுகள்,குழுமோதல்கள் முளையிலேயே நிகழ்ந்து மீண்டும் மீண்டும் போராட்டத்தின் பெயரால் எங்களுக்குள்ளேயே மோதி அழிந்து கொண்டிருப்போம்.இறுதியில் இந்த இனம் இருந்த அடையாளமே இன்றி முற்றாக அழிந்து போய்விடுவோம்...

பெற்ற தோல்விக்கான காரணிகளாக புலிகளையோ,போராட்டக் குழுக்களையோ அல்லது உலகையோ வெறுமனே ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம். ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்..இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது....

நன்றி தீராநதி

Read more...

Monday, April 18, 2016

சந்திரகுமார் ஈபிடிபி யிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படப்போறாராம்!

ஈபிடிபி என்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். தனது வெளியேற்றம் தொடர்பில் அவர் தேசம்நெற் இணையத்திற்கு கருத்துரைக்கையில் „இனிமேல் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படப்போறாராம்'

தனது வெளியேற்றம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த பூர்வமாகச் செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழ்நிலைக்கு அமைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகிஇ தனித்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய உணர்வுகளில் தமக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலைப்பாடு மிக நீண்டகாலமாகவே இருக்கிறது. இதில் எந்தச் சமரசத்துக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவேஇ இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் சமூகங்களுக்கான சமத்துவஇ பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனூடான சுயநிர்ணய அங்கீகாரத்தை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். பன்மைத்துவம் என்பதுஇ இனங்களுக்கிடையே மட்டுமல்லஇ இனங்களுக்கிடையே காணப்படும் சமூகக் கூறுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே உண்மையாகும். இந்த அடிப்படையில் சாதியஇ பிரதேசஇ மதஇ பால்நிலை சமத்துவங்களையும் வேண்டி நிற்கின்றனர். இதனை அங்கீகரிக்கும் ஒரு சமூக நீதிக்கட்டமைப்புக்குள் மட்டுமே உண்மையான பன்மைத்துவமும் இனங்களுக்கிடையிலான பரஸ்பர அங்கீகாரமும் ஏற்படும். நலிவுற்ற மக்களுக்குரிய விசேட ஏற்பாடுகளும் நன்மைகளும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சூழலிலேயே பன்மைத்துவத்தின் ஊடான சமத்துவம் சாத்தியமாகும். இதுவேஇ சுய நிர்ணய உரிமையை அர்த்தமுடையதாக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் சமூக நீதியையும் உருவாக்குவதற்கான ஒரு சட்டவாட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைப்பது என்னுடைய இலக்காகும்.

இது ஒரு பாரிய பணி. பலருடைய அர்த்தமுள்ள பங்களிப்புகள் சேர்ந்தாலே இதைச் சாத்தியமாக்க முடியும். இன்று தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய அரசியல் தலைமைகளை ஐக்கியப்படுமாறு கோருகின்றனர். ஆனால்இ அந்த ஐக்கியம் என்பதுஇ எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுகின்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டுஇ சரியான தீ்ர்மானங்களை நோக்கிய விவாதங்களாக அமைய வேண்டும். இதன் மூலமே ஒரு உண்மையான ஐக்கியத்தை உருவாக்க முடியும். இந்த அடிப்படையில் இன்று ஐக்கியப்படும் நிலைப்பாட்டை வலியுறுத்திஇ ஒரு பொதுமைப்பாடுடைய அரசியல் தீர்மானத்தை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அத்தோடு கடந்த காலங்களைப்போன்று மக்களுடைய நலன்களை தேவைகளை நிறைவு செய்வதில் என்னால் ஆற்றக்கூடிய பங்களிப்பை எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பேன்.

என்னுடைய இளைய வயதில் (1980 களில்) கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலை உணர்வுஇ என்னை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (ஈபிஆர்எல்எப்) இணைய வைத்தது. அப்போதுஇ தேசிய விடுதலைக்கான ஒரு போராளியாகஇ தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுக்கான விடுதலைப்படையின் உறுப்பினர் என்ற அளவிலேயே என்னால் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்தது. இங்கேஇ தேசிய விடுதலையுடன் இணைந்ததான சமூக விடுதலையின் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவேஇ என்னுடைய அரசியல் பாதையை தீர்மானிக்கும் அடிப்படையாக அமைந்தது. தேசிய விடுதலைப்போராட்டத்தினுடைய நகர்வின் பரிமாணங்கள்இ பல்வேறு வகையாக மாற்றமடைகின்ற காலங்களில் இந்த அடிப்படையில் நின்றே நான் தீர்மானங்களை மேற்கொண்டேன். மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் வழிமுறையில் ஈடுபட்ட காரணத்தினால்இ நீண்டகாலம் ஆயுதப்போராட்டத்திலும் அதன் பின்னான ஜனநாயக நீரோட்டத்திலும் என்னுடைய தீர்மானங்கள் இருந்தன. இந்த அடிப்படையிலேயே நான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிஇ(ஈபிஆர்எல்எப்) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) என்பவற்றில் செயலாற்றி வந்திருக்கிறேன்.

கடந்த 2010 தேர்தலில் மக்கள் என்னைத் தமது பிரதிநிதியாக இரண்டாவது தடவையும் அங்கீகரித்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில் மிக மோசமான யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக்குள் சிக்குண்டுஇ ஏதுமற்றவர்களாக மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது. இந்த நிலையில் இந்த மக்களுடைய நலன்களுக்காகச் செயற்படுவது எனது தார்மீகப் பொறுப்பாகும் என உணர்ந்தேன். இதுவே எனது முதற்கடமையாகக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டு வரையறைக்குள் மிகக் கடினமாக இந்த மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்காக உழைத்தேன். இந்த மக்களும் என்னைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டமையை நான் உணர்ந்திருந்தேன். ஆனாலும் மக்களுடைய உணர்வுகளும் தெரிவும் வேறாக இருந்ததைத் தேர்தலில் உணர்ந்து கொண்டேன். இந்த நிலையில் மக்கள்இ என்னிடம் வேறு விடயங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே நான் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என்கிற ஒரு அவசியத்திற்குள் தள்ளப்பட்டேன். இன்றும் இந்த மக்கள் என்னுடன் மிகவும் சுமுகமான அன்பான ஒரு உறவைக்கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் நலன்களுக்காகஇ மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது எனக்கு அவசியமாயிற்று. எனவேதான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகி புதிய செயற்பாட்டைத் தொடர முன்வந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

Read more...

"வெல்வோம்-அதற்காக": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!

எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விட்டு, காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்.

சிங்கள பெருந்தேசியவாதிகளின் கொலைகளையும், சித்திரவதைகளையும் எதிர்த்து இயக்கங்களில் சேர்ந்தவர்களை அந்த இயக்கத்தலைவர்களே மரணத்தின் இருள்வெளிகளிற்கு மறுபடி தள்ளினார்கள். இயக்கத்தலைமைகளின் அராஜகத்தை, ஜனநாயக மறுப்பை எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் போராட்டத்தை நம்பாமல் ஆயுதங்களையும், அந்நிய சக்திகளையும் சார்ந்திருப்பதை கேள்வி கேட்டவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இன்னொரு தமிழ் இயக்கத்தின் ஆதரவாளனாக, உளவாளியாக இருக்கலாம் என்ற ஒரு சிறு சந்தேகமே பல அப்பாவிகளின் உயிரைப் பறித்தது. எந்த உயிரினதும் ஆதார உணர்ச்சியான காதல் மனதில் மலர்ந்தது என்ற காரணத்திற்காகவே மண்ணிற்குள்ளே பலர் புதைக்கப்பட்டார்கள்

மனதில் தமிழ்மக்களின் விடுதலைக்கனல் கொழுந்து விட்டெரிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் சேரும் சீலன் ஆயுதப்பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். பயிற்சி முகாமில் சித்திரவதைகளை கண்முன்னே காண்கிறார். பயிற்சிக்கு வந்த ஒருவரை உளவாளி என்று சந்தேகப்பட்டு சித்திரவதை செய்கிறார்கள். அவரது கையைக் கீறி அந்த வெட்டுக்காயத்திற்குள் வெடிமருந்தை நிரப்பி தீ வைக்கிறார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து லெபனானில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பயிற்சி எடுத்த விச்சு என்பவர் உமாமகேஸ்வரனுடன் முரண்பட்டதால் சீலன் இருந்த முகாமில் சிறை வைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பி பட்டுக்கோட்டையில் ஒருபண்ணையார் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். விச்சுவை பிடிக்கப்போன உமாமகேஸ்வரனின் அடியாட்களை தடுத்த பண்ணையாரை சுட்டுக் கொல்கிறார்கள். தமக்கு தளமாக இருந்த தமிழ் நாட்டில் வைத்து தமிழ்நாட்டு குடிமகனையே சுட்டுக் கொல்லுமளவிற்கு அராஜகம் செய்கிறார்கள்.

அவரது இயல்பான நேர்மையும், தோழர் தங்கராசா போன்ற தோழர்கள் மூலம் கற்றுக் கொண்ட விடுதலை அரசியலான பொதுவுடமை தத்துவமும் அவரை சித்திரவதைகள், ஜனநாயக மறுப்பு போன்றவைகளிற்கு எதிராக போரிட வைக்கிறது. அவரும் அவரை ஒத்த கருத்து கொண்டவர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அமைப்பிற்குள் ஜனநாயகம் வேண்டும். போராளிகளிற்கு அரசியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். அமைப்பின் தலைமை நீண்டகாலமாக தமிழ்நாட்டில் இருப்பதால் போராட்டத்திலிருந்தும், மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒரு போராட்ட அமைப்பின் இராணுவப்பிரிவு அரசியல்மயப்படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அந்த அறிக்கையில் வைக்கிறார்கள்.

"சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவொம்" என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கொள்கையாக சொல்லித் திரிந்த உமாமகேஸ்வரனும், அவரது அடியாட்களும் போராட்டத்தை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்றும், அமைபினுள் இருக்கும் அடக்குமுறைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும் எழுந்த குரல்களை வன்முறை மூலம் அடக்க முற்பட்டார்கள். தம்முடன் முரண்பட்டவர்களை கொலை செய்வதை தான் போராட்டம் என்று சொல்லி வந்த கொலைகாரர்களாகத் தான் எல்லா இயக்கங்களும் இருந்தன. "மக்களிற்கு அரசியல், பேச்சுரிமைகளைக் கொடுத்தால் நாம் அரசியல் அநாதைகளாகி விடுவோம்" என்று அறிக்கை விடுமளவிற்கு "அரசியல் அறிவு" உள்ளவர்களாகவே இயக்கங்கள் இருந்தன.

ஆனால் அவர்கள் எதிர் கொண்ட வன்முறைகள் அவர்களை மேலும் மேலும் உறுதி கொண்டவர்களாக வளர்த்து விடுகிறது. மிக இளம் வயதில் சிறு அளவில் கற்றுக் கொண்ட அரசியல் கல்வியுடன் அவர்கள் போராடும் போது நீண்ட கால போராட்ட அனுபவமும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட சில தோழர்கள் இயக்கத் தலைமைகளுடன் சேர்ந்து நின்றார்கள். சிலர் எந்தவித எதிர்ப்பையும் காட்டாது தாம் மட்டும் தப்பி போனார்கள் என்கின்ற விமர்சனத்தை சீலன் முன் வைக்கின்றார். அவர் சொல்வது போல சிலர் இருந்தார்கள். சில தோழர்கள் தம் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடுதலையையும், தாம் கட்டி வளர்த்த போராட்ட அமைப்புகளையும் உடைவுகள் பலவீனப்படுத்தி விடும் என்று பயந்து எதிர்க்காமல் இருந்தனர். ஆனால் அவ்வாறு இருந்த மக்களிற்காகவே வாழ்ந்த பல போராளிகளும் கூட இந்த கொலைகாரர்களால் கொல்லப்பட்டனர்.

மக்களை நம்பாமல், சக தோழர்களை நம்பாமல், விடுதலையின் அரசியல் கல்வியான பொதுவுடமை தத்துவங்களை நம்பாமல் ஆயுதங்களையும், வெளிநாட்டு கொள்ளையர்களையும் நம்பியவர்கள் இறுதியில் தாங்களும் அழிந்து மக்களையும் பலி கொடுத்தார்கள். இவ்வளவு அழிவின் பின்பு கூட மறுபடியும் மற்றவர்கள் வந்து மக்களை மீட்பார்கள் என்று ஏமாற்றுகிறார்கள். இந்த நேரத்தில் சீலன் போன்றவர்களின் போராட்ட அனுபவங்கள் எமது போராட்டங்கள் எந்தப் பாதையில் போக வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவி செய்கின்றன. அவரது இந்த பதிவுகளில் முரண்பாடுகள் இருக்கலாம். சில நகர்வுகளை வேறு விதமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றலாம். சில தோழர்களைப் பற்றிய விமர்சனங்களிற்கு வேறு பக்கங்களும் இருக்கக்கூடும். ஆனால் அவரது பதிவுகளும், அவர் போன்ற மக்களை நேசித்த தோழர்களின் பதிவுகளும் தமிழ்மக்களின் வருங்காலம் செல்ல வேண்டிய திசையை காட்டி நிற்கின்றன.

இயக்கங்களால் செய்யப்பட்ட கொலைகளும், சித்திரவதைகளும் தமிழ்மக்களின் வரலாற்றில் வெட்கித் தலை குனிய வைக்கும் பக்கங்கள். ஆனால் இந்த கொலையாளிகளிற்கு அஞ்சாமல் சீலன் போன்ற போராளிகள் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அராஜகங்களை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். மரணம் வரும் என்று தெரிந்தும் போராட்டத்தில் உறுதியோடு நின்றார்கள். அந்தக் குரல்களின், போராட்டங்களின் தொடர்ச்சியாகத் தான் இலங்கையின் இன்றைய இருள்வெளிகளிற்குள்ளும் மின்மினியின் மினுங்கலாய் என்றாலும் விளக்குகள் எரிகின்றன. கல் நிறைந்த பாதையில் கால்கள் களைத்தாலும் காற்றில் அசைந்தாடும் செங்கொடிகளை கைகள் ஏந்தியிருக்கின்றன. குரல்வளைகளை நெரிக்கும் கரங்களை மீறி நட்சத்திரங்களை வாரி இறைக்கும் வானம் எங்கும் எழுகிறது விடுதலையின் பாடல்.

Read more...

Sunday, April 17, 2016

தானும் செய்யான் தள்ளியும் படான் என்ற சிலையில் வட மாகாண சபை. சாடுகின்றார் ராஜபச்சா

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு பல துய­ரங்­களை எதிர்­கொண்­டுள்ள மக்­க­ளுக்கு வட மாகாண சபை எதுவும் செய்­வ­தாக இல்லை. மாறாக அவர்­க­ளுக்கு சேவை­யாற்ற மத்­திய அர­சாங்கம் முயற்­சிக்­கும்­போது அதற்கு மாகாண சபை எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றது. இது குறித்து நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம் என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அர­சாங்கம் முன்­வைத்­துள்ள 65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் உகந்­த­தாக இல்­லா­விடின் மாற்­றுத்­திட்­டத்தை வட மாகாண சபை முன்­வைக்­க­வேண்டும். ஆனால் மக்­களின் தேவை­களை மாகாண சபை நிவர்த்தி செய்­ய­வில்லை. வட மாகாண சபையின் முன்­னேற்றம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடிப்­ப­தற்கே வடக்கு முதல்­வ­ருக்கு நேரம் போதாமல் இருக்­கின்­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு வீட்­டுத்­திட்டம் மற்றும் அர­சாங்கம் வடக்கு கிழக்கில் முன்­னெ­டுக்­க­வுள்ள திட்­டங்கள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பி்ட்டார்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்

குறு­கிய காலத்தில் வடக்கு மக்­க­ளுக்கு வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்­கவே 65000 வீட்­டுத்­திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். இவ்­வாறு குறு­கிய காலத்தில் 65 ஆயிரம் வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்க உலகில் வேறு எந்த நிறு­வ­னமும் முன்­வ­ர­வில்லை. தற்­போ­தைய நிறு­வனம் அதற்கு முன்­வந்­துள்­ளது.

ஆனால் ஒரு வீட்­டுக்கு தற்­போது மதிப்­பி­டப்­பட்­டுள்ள செலவுத் தொகை அதி­க­மா­னது என்­ப­தனை நாங்­களும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் குறு­கிய காலத்தில் இந்த திட்­டத்தை முடிப்­ப­தற்கு யாரும் முன்­வ­ர­வில்லை. எனவே தான் இந்த நிறு­வ­னங்­க­ளுடன் நாங்கள் பணி­களை முன்­னெ­டுக்கத் தயா­ரா­கினோம். அது மட்­டு­மன்றி எவ்­வ­கை­யி­லா­வது மக்­க­ளுக்கு வீடுகள் கிடைக்­கின்­றன என்­பதே இங்கு முக்­கி­ய­மாகும். அப்­பாவி மக்­க­ளுக்கு எந்த வழி­யி­லா­வது வீடுகள் கிடைக்­கும்­போது அதனை புறக்­க­ணிக்­கக்­கூ­டாது. அதனை எதிர்த்­துக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை.

இந்­நி­லையில் வட மாகாண முத­ல­மைச்சர் இந்த திட்­டத்தை எதிர்த்­துள்ளார். வட மாகாண சபை மக்­க­ளுக்கு பய­ன­ளிக்­கக்­கூ­டிய இந்தத் திட்­டத்தை எதிர்த்­தமை தொடர்பில் நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம்.

இது­வ­ரையும் வட மாகாண சபை­யா­னது வடக்கு மக்­க­ளுக்கு உரிய முறையில் சேவை­யாற்­ற­வில்லை. அந்த மக்­க­ளுக்குத் தேவை­யான வச­தி­களை செய்­து­கொ­டுக்­க­வில்லை. மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்­ய­வில்லை.

அதா­வது வட மாகாண சபை கடந்த காலங்­களில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிக்­காட்­ட­வில்லை. அவர்கள் முன்­னேற்­றத்­தையே ஏற்­ப­டுத்­த­வில்லை என்றே கூற­வேண்டும். இந்த நிலையில் மத்­திய அர­சாங்கம் துய­ரப்­படும் மக்­க­ளுக்கு விரைவில் வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்க இந்த 65 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கும்­போது அத­னையும் தற்­போது எதிர்க்­கின்­றனர். இவர்கள் என்ன நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்று தெரி­ய­வில்லை.

எனவே வட மாகாண சபை மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்யும் விட­யத்தில் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். அப்­பாவி மக்­களின் தேவைகள் குறித்து பொறுப்­புடன் செயற்­ப­டுங்கள். ஆனால் வட மாகாண சபை மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்­வ­தற்கு மாறாக கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடிப்­ப­தற்கே வடக்கு முதல்­வ­ருக்கு நேரம் போதாமல் இருக்­கின்­றது.

அர­சியல் தெரி­யா­த­வர்­களை பத­வியில் அமர்த்­தினால் என்ன நடக்கும் என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் தற்­போது கிடைத்­துள்­ளது. மக்­களின் உட­னடி மற்றும் அடிப்­படைத் தேவைகள் குறித்து கூட்­ட­மைப்பு சிந்­திக்­க­வேண்டும். இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருந்தால் அது தொடர்பில் பேச்சு நடத்­தலாம். மாறாக இதனை எதிர்ப்­பதில் பய­னில்லை.

மேலும் இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்­டத்­துக்கு பதி­லாக மாற்­றுத்­திட்டம் இருந்தால் வடக்கு முதல்வர் அதனை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கலாம். நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம். வடக்கு கிழக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை விரை­வாக தீர்க்­க­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். ஆனால் இந்த விட­யத்தில் வடக்கு மாகாண சபையும் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எதிர்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தை­வி­டுத்து மாற்­றுத்­திட்­டங்­களை முன்­வை­யுங்கள்.

இதே­வேளை இந்த 65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் தொடர்­பான அமைச்சர் சுவா­மி­நா­தனின் அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக கூறுவதில் உண்மையில்லை. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இந்தத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடிவிட்டு விரைவில் முடிவெடுப்போம் என்றுதான் ஜனாதிபதி கூறினார். அதற்கு குழு ஒன்றையும் அமைத்தார். அதாவது இந்தத் திட்டத்தை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஜனாதிபதி இருக்கின்றார். ஆனால் அதனை நிராகரித்துவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்றார்

Read more...

Saturday, April 16, 2016

எல்லாளன் யார் ? டக்களசிடம் கேட்கின்றார் சகாதேவன்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாங்கள் தெரிவித்த ஒரு கருத்து தொடர்பாக பரபரப்பாக பேசப்படுகிறது.............

அதாவது யுத்தத்தால் இறந்த சகலரையும் நினைவு கூறுவதற்கு பொதுவான நாள் ஒன்றும் , நினைவு கூறுவதற்க பொதுவான தினம் ஒன்றும் ஏற்படுத்த வேண்டும் என்றும் , இதற்கான தனிநபர் பிரேரணணை ஒன்றை தாங்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டுவர போவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

அவ்விடத்தில் தொடர்ந்து தாங்கள் கருத்து தெரிவிக்கும் போது எல்லாளன் துட்டகைமுனு , உதாரணத்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள்...

மேலும் தாங்கள் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது " எல்லாளன் யார் என்றும் துட்டகைமுனு யார் என்றும்" நேரடியாக பதிலளிக்காவிட்டாலும் அதை ஊகப்படுத்தியே பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தாங்கள் கையாளும் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.

இறந்தவர்களை நினைவு கூறுவதற்றகு மேற்கொள்ளும் சகல விடயங்களும் வரவேற்கத்தக்கது இதில் எந்த தடையும் வரக்கூடாது.

ஆனால் தாங்கள் குறிப்பிட்ட " எல்லாளன் துட்டகைமுனு " உதாரணம் " இரு புறமும் கருக்குள்ள பட்டயம் " போன்றதாகும் இல்லை, அதனையும் விட பயங்கரமானது .

ஏனென்றால் தமிழ் மக்களில் 90% ஆனவர்கள் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இன்னும் நம்புவதில்லை இனியும் நம்பப்போவதில்லை , பிரபாகரனுக்கு கௌரவம் வழங்க சிங்கள மக்களும் , சிங்கள அரசியல் தலைவர்களும் வரலாற்றில் எப்போதும் இடங்கொடுக்கப்போவதில்லை

இடையில் தமிழ் தேசிய அரசியலை தமது சுய இலாபத்துக்காக மட்டுமே செய்து கொண்டிருக்கும் " அலி அரசியல்வாதிகள் " பலர் இருக்கிறார்கள் . இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

இவர்களுக்கு பிரபாகரனின் பெயர் " ஊறுகாய் " மாதிரி அதிகம் உணவில் சேர்க்காதது ஊறுகாய் .

ஆனால் குடிகாரர்கள் போதை ஏற ஏற சுவைக்காக தானும் நக்கி.... நக்கி அருகிலுள்ளவனின் போதைக்கும் எவ்வாறு பரிமாறுவானோ , அதுபோலவே எமது சில தமிழ் தேசிய அரசியல்வாதிகள் .
தேர்தல் அரசியல் காலங்களில் பிரபாகரனின் பெயரை ஊறுகாயாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு தேர்தலில் தாங்கள் வெல்ல மட்டுமே பிரபாகரன் தேவை.

இவர்களை போய்க் கேட்டால்.????????????????????????????????

ஒரு படத்தில் , என்னாத்தை கன்னையா விடம் ஒருவர் போய்க் கேட்பார் "வண்டி வருமா " என்று அதற்கு அவர் " வண்டி வரும்ம்......................... ஆனா.... வராது.........? " என்று பதில் சொல்லுவார்..

அதுபோல தான் எமது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் .

உங்கள் முயற்சிக்கு எளிதாக வெற்றி கிடைக்கும் என்றால், உங்களை அதிஸ்டசாலி என்பேன்.

தமிழ் மக்களின் மிக நீண்டகால மன உளைச்சலுக்கும் மருந்து தடவியது போல இருக்கும்.

இறுதியாக ஒரு வேண்டுதல். அவ்வாறு ஒரு சிலைவைத்து அவர்களுக்கு பூ போட்டு பூசை செய்யும் வாய்ப்பு கிட்டினால், உங்களோட இருந்து புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்ற ஐயர் தொடக்கம் அனைவரது குடும்பங்களையும் ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு போய் வருடா வருடம் வரிசையில நின்று பூப்போட்டு தவறாக கும்பிட வையுங்கள்.. ஏனென்றால் அவர்களின் உயிர் பலி கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் உங்கட முகத்திரை கிழிந்திருக்குமல்லோ.



Read more...

யூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்.. -விஜயகுமாரன்-

இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான் என்று மார்க், மத்தியு என்ற சீடர்கள் எழுதிய ஆகமங்கள் (கொஸ்பல்) குறிப்பிடுகின்றன.

இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) அன்று கல்லறையில் இருந்து வெளி வருகிற கதையின் நம்பியாராக யூதாஸ் இருக்கிறான்.

நமது ஈழக்கதைகளிலும் துரோகிகள் இன்று வரையும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டாயிரம் வருடக்கதை என்று சொல்லப்படுகிற பைபிளின் துரோகியான யூதாசின் கதையிலும், இந்த நூற்றாண்டின் ஈழக்கதையின் துரோகிகளையும் ஒப்பிட்டுப் பார்த்த போது என் சிற்றறிவிற்கு தென்பட்ட சில ஒற்றுமைகளையும் அதையொட்டி எழுந்த சில கேள்விகளையும் இங்கு பதியா விட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதனால் பென்னெழுத்துக்களால் எனது ஆய்வை இங்கு பொறிக்கிறேன்.

துரோகிகளைப் பற்றி எழுதுவதால் நானும் துரோகிகள் பட்டியலில் இடம்பெறும் அபாயம் இருந்தாலும் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற நம்பிக்கையுடன் எழுதி மேல் செல்கிறேன்.

இஸ்ரேலின் வடபகுதியான கலிலீயின் நசரேத்தில் இருந்து தன்னை “கடவுளின் குமாரன்” என்று சொல்லி வந்த இயேசு கிறிஸ்து, இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலமிற்கு கழுதையில் ஏறி வருகிறார்.

கீபுரு மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் பைபிளில் “ஒரு ரட்சகன், யூதர்களை காப்பாற்ற வருவான்” என்ற தீர்க்கதரிசனத்தை மெய்யாக்க்குவதற்காக வேண்டுமென்றே அவர் ஜெருசலம் செல்கிறார்.

அவரின் மேல் பற்றுக் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. இயேசு ஜெருசலமின் பெரிய யூதக் கோவிலிற்கு சென்று கடவுளுடைய இல்லத்தை சந்தையாக மாற்றுகிறீர்கள் எனச் சண்டை பிடிக்கிறார்.

யூத மத குருமார்கள் இயேசு “தேவகுமாரன்” என்று தன்னைச் சொல்லி வந்தது யூத மதத்திற்கு எதிரானது என்பதாலும், அவரால் தங்களினுடைய இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள்.

இஸ்ரேலை ஆண்டு வந்த ரோமர்களும் அவருடைய கவர்ச்சி (charisma) யூதர்களிடையே ஒரு எழுச்சியை உண்டாக்கி ரோமப்பேரரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை உருவாக்கக் கூடும் என்று பயந்தார்கள்.

மேலும் உலக மக்களின் பாவத்தின் தண்டனைக்காக தன்னைப் பலி கொடுக்கும் இயேசுவின் முதலாவது வருகைக்கான தருணத்தை நிறைவேற்றப்பட வேண்டிய காலமும் நெருங்கி விட்டது என கொஸ்பெல்கள் தெரிவிக்கின்றன.

யூதாஸ் பேராசையினால் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுக்கிறான். மேலும் இயேசு மனிதர்களின் பாவங்களிற்காக தன்னை பலி கொடுக்க வேண்டும் என்று தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மையான தந்தையான தேவ அப்பாவின் சித்தத்தின் படி இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்.

ஆதலால் தேவ அப்பாவின் நாடகத்தில் தன்னையறியாமலே ஒரு பாத்திரமாகி யூதாஸ் காட்டிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை எல்லாம் வல்ல தேவ அப்பா ஜூதாசை படைக்கும் போதே தலையில் எழுதி விட்டார்.

அப்படி என்றால் தன் மகனை தியாகியாக்க இன்னொரு தாயின் மகனை வேண்டுமென்றே துரோகியாக தேவ அப்பா படைத்திருக்கிறார். ஒரு கடவுள் செய்கிற வேலையா இது?

யூதாஸ் துரோகி என்றால் அவனை துரோகியாக படைத்த எல்லாம் வல்ல தேவ அப்பாவை என்னவென்று அழைப்பது?

சாதாரண மனிதர்கள் செய்தது பாவமென்றால் எல்லாம் வல்ல கடவுளான தேவ அப்பா செய்த தேவ பாவத்தை என்னவென்று சொல்வது?

மனிதர்களின் பாவங்களிற்காக இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டுமென்றால் இப்படி ஒரு மனிதனை துரோகியாக வேண்டுமென்றே தேவ அப்பா படைத்த பாவத்திற்காக ஒருத்தரும் தங்களைப் பலி கொடுக்கத் தேவையில்லையா?

இயேசு யூதர்களின் பெரிய கோவிலிற்குப் போய் பகிரங்கமாக வியாபாரிகளோடு சண்டை போடுகிறார். அவரைக் கண்டதும் மீட்பர் வந்திருக்கிறார் என்று பெரிய கூட்டம் கூடுகிறது.

அவரும் அவரது பன்னிரு சீடர்களும் ஒளித்திருக்கவில்லை. இயேசுவை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவரை யூத குருமாரோ, ரோம படையினரோ நேரே போய்ப் பிடிக்க வேண்டியது தானே?

எம்.ஜி.ஆர் கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டை மட்டும் ஒட்டி விட்டு மாறுவேசத்தில் எதிரிகளிற்கு அடையாளம் தெரியாதாம் என்று தமிழ்ப்படங்களில் எதிரிகளின் கோட்டைக்குள் போவது போல இயேசு ரோமர்களின் கோட்டையான ஜெருசலத்திற்குள் போகவில்லை.

பிறகு ஏன் யூதாஸ் மினக்கெட்டு இயேசுவின் கன்னத்தில் கொஞ்சி அடையாளம் காட்ட வேண்டும்?

இயேசுவை யூதாஸ் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் என்ற பைபிள் புராணக் கதையைப் போல ஈழப்போராட்டமும் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு வல்லரசுகளின் துணையோடு இலங்கை அரசால் அழிக்கப்பட்டது என்று சில ஈழப்புராணங்கள் உலா வருகின்றன.

இந்தியா கொடுத்த இராணுவப்பயிற்சியை எல்லா இயக்கங்களும் இரு கை நீட்டி ஏற்றுக் கொண்டன. மேற்கு நாடுகளின் அரசாங்கங்களும், உளவாளிகளும் புலம்பெயர்நாடுகளில் இருந்த “தேசபக்தர்களுடன்” நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தன.

“ஒபாமாவிற்கான ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு” என்று உலக மகா கொலைகாரர்களான அமெரிக்க ஜனாதிபதிக்காக சங்கம் வளர்த்த அல்லக்கைகள் உலக வரலாற்றிலேயே இவர்களாகத்தான் இருக்கும். இப்படி உளவாளிகளுடனும், வல்லரசுகளுடனும் இரண்டறக் கலந்து விட்டு “எங்களை துரோகிகள் காட்டிக் கொடுத்து விட்டார்கள்” என்கிறார்கள்.

ஈழப் போராட்டத்தில் முதலே உட்கொலைகள் பற்குணம், கண்ணாடி பத்மநாதன் என்று தொடங்கியிருந்தாலும் புலிகளில் இருந்து விலகி புளொட் அமைப்பைக் கட்டி இயங்கிக் கொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் கொலை செய்து துரோகியாக்கியது தான் துரோகி என்று அறிவிக்கப்பட்ட முதலாவது கொலை.

சுந்தரம் புலிகளை விட்டு விலகி தனிப்பட்ட வாழ்க்கை வாழவில்லை. வெளிநாடு போய் வசதி வந்த பிறகு தேசபக்தி பேசவில்லை.

அவரது அரசியலின் சரி, பிழைகளிற்கு அப்பால் அவர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால் வெளிநாடு போகாமல், தனிப்பட்ட வாழ்வு வாழாமல் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது தான் துரோகமா?

ஜே. ஆர். ஜெயவர்த்தனா என்ற ஐக்கிய தேசிய கட்சியின் இனவெறியன் திட்டமிட்டு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளினால் அல்லல்பட்டு வன்னிக்கு வந்த மலையகத்தின் ஏழை தோட்டத் தொழிலாளர்களின் துயர் துடைக்க டேவிட் அய்யா, ராஜசுந்தரம் போன்ற காந்தியம் அமைப்பினைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து செயற்பட்டவர் சந்ததியார்.

வங்க தேசத்திலும், முக்தி பாகினி விடுதலை அமைப்பிலும் இருந்த முற்போக்காளர்களை கொன்று இந்தியா எப்படி தனது கைப்பாவைகளைக் கொண்டு வங்கதேச புரட்சியை அழித்தது என்பதை “வங்கம் தந்த பாடம்” என்று தனது புத்தகத்தின் மூலம் விளக்கி இந்திய வல்லரசை ஈழப்போராட்ட அமைப்புகள் சார்ந்திருப்பதன் அபாயத்தை ஆரம்ப நாட்களிலேயே அறிய வைத்தவர்.

அவர் இணைந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பின் அராஜகங்களையும், ஜனநாயக மறுப்பையும் எதிர்த்தினால் துரோகியாக்கப்பட்டு தலைமையினால் கொல்லப்பட்டார்.

மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து வந்து மக்களிற்காகவே வாழ்ந்த அந்த போராளியை கொன்று விட்டு தலையை ஓரிடத்திலும், உடலை இன்னொரு இடத்திலும் போட்டிருந்தார்கள். மக்களை நேசித்தது தான் அவன் செய்த துரோகமா?

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைமையுடன் முரண்பட்டு ஆனால் அமைப்பை விட்டு விலகாமல் குறிப்பிட்டளவு போராளிகளுடன் அவ்வமைப்பின் இராணுவப்பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவரான தாஸ் வடமராட்சியில் தங்கியிருந்தார்.

பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவரை வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு வரவழைத்து நோயாளிகளின் முன்னிலையில் தாசையும் ஐந்து போராளிகளையும் சுட்டுக் கொன்றது ரெலோவின் தலைமை.

நீண்ட நெடுங் காலமாக ரெலோவின் தலைமை தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது தளத்தில் இருந்து போராடிய தாஸ் துரோகியாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மற்ற இயக்கங்கள் வெறும் இராணுவக் கண்ணோட்டம் கொண்டவை என்றும் தாங்கள் மக்கள் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) என்பனவும் தங்கள் பங்கிற்கு போராளிகளையும், பொது மக்களையும் துரோகிகளாக்கிக் கொன்றார்கள்.

இங்கு இலங்கை அரசுகளுடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில் நீச்சலடித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P.D.P) கருணா, பிள்ளையான் குழுக்கள் செய்த கொலைகளைப் பற்றி குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லை என்னுமளவிற்கு அவை நீண்டு செல்கின்றன.

இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என்பவை நடத்திய கொலை வெறியாட்டத்தால் மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். பல்துறை நிபுணத்துவம் மிக்கவர்களும் வெளியேறினர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கு உடற்கூறியல் துறைக்கு பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜினி திரணகம ராஜசிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்து பேராசிரியராக பணி புரிந்தார்.

போரினால் தாய், தந்தையரை இழந்த பெண்குழந்தைகளிற்காக ஒரு இல்லத்தை மருதனார்மடத்தில் தொடங்கி நடத்தி வந்தார்.

ராஜினி திரணகம, ராஜன் கூல், தயா சோமசுந்தரம். சிறிதரன் ஆகிய பேராசிரியர்கள் சேர்ந்து Broken Palmyra என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அது பின்பு “முறிந்த பனை” என்று தமிழில் வெளிவந்தது.

இலங்கை அரசு, இந்திய அரசு, ஈழ விடுதலை இயக்கங்கள் என்று அத்தனை பேரும் தமிழ்மக்களைக் ஆயுதங்களால் கொடுமைப்படுத்திய அநியாயங்களை ஆவணப்படுத்தினார்கள்.

அந்த முறிந்த பனை என்ற தலைப்பில் வெளியான ஆவணத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களும் பட்டியலிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை விமர்சன நோக்கிலேயே வெளியாகியிருந்தன.

புலிகளின் தலைமை கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டதில்லை. நூறுகருத்துக்கள் மோதினால் நூறு பூக்கள் மலரும் என்பார்கள். புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகள் மோதினால் ஒரு துப்பாக்கி ரவை போதுமானது என்பதே கோட்ப்பாடாக முன்வைக்கப்பட்டது.

அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆயுதங்களிற்கு அஞ்சி பலரும் வாய் மூடி இருந்த அந்த பயங்கரமான நாட்களில் அராஜகத்தை எதிர்த்த ஒரே காரணத்திற்காக ராஜினி கொலை செய்யப்பட்டார்.

ஒரு இராணுவமுகாமை தாக்க செல்வதற்கு முன் செய்யப்படும் நடவடிக்கைகளைப் போல ராஜினியை கொலை செய்ய ஆயத்தங்கள் செய்தார்கள்.

உடல்கூறியல் பேராசிரியர் இல்லை என்பதால் தனது வசதியான பிரித்தானிய வாழ்க்கையை விட்டு வந்த ராஜினியை அவரிடம் கற்றுக் கொண்டிருந்த மாணவர்களில் இருவரைக் கொண்டே உளவு பார்த்தார்கள்.

தெருவில் மிதிவண்டியில் போய்க் கொண்டிருந்த ராஜினியை ஒரு மாவீரன் பின்னால் போய் துப்பாக்கியால் சுட்டான். கீழே விழுந்த அந்தப் பெண்ணை, இரு குழந்தைகளின் தாயை அந்தக் கோழை மறுபடியும் சுட்டு விட்டு ஓடி மறைந்தான்.

ஏன் சுட்டோம் என்றோ, நாங்கள் தான் கொன்றோம் என்றோ மாவீரர்கள் சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்?

மனச்சாட்சி உள்ள மனிதர்கள் என்றால் தமது குற்றங்களிற்காக துக்கித்து, வெட்கித்து மனம் திறந்து மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் கொலை செய்வதையே இயக்க வரலாறாக கொண்டவர்களிற்கு மனம் என்ற ஒன்று இருந்தால் தானே மனச்சாட்சி என்ற ஒன்று இருந்து அவர்களை உறுத்தும், மன்னிப்பு கேட்க சொல்லும்.

தேவ அப்பா தனது தேவகுமாரனாகிய இயேசுவைத் தியாகியாக்க ஒரு மனிதனை துரோகியாக படைத்தார். நமது இயக்க கொலைகாரர்கள் தம்மை தலைவர்களாக்க போராளிகளை துரோகிகள் என்று பொய் சொல்லிக் கொன்றார்கள்.

இயேசுவையாவது விசாரித்து விட்டு சிலுவையில் ஏற்றியதாக கதைகள் சொல்லுகின்றன. ஆனால் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எல்லாம் ஈழம் என்று சொல்லிக் கொண்ட இயக்க தலைமைகள் ஒரு சக மனிதனை, ஈழத்திற்காக, மக்களிற்காக போரிட வந்த மகத்தான மனிதர்களை எந்த விதமான விசாரணைகளோ, தயக்கங்களோ இன்றி கணமும் தயங்காது கொன்றார்கள்.





“அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள், பிதாவே அவர்களை மன்னியும்” என்று இயேசு சொன்னதாக பைபிள் வசனங்கள் சொல்கின்றன. “இவர்கள் தெரிந்தே கொன்றார்கள், மக்களே இவர்களை மன்னியாதிரும்”.

-விஜயகுமாரன்-

Read more...

மு.காவுக்கு எதிரான சதியும் மத்திய குழுக்களின் நிலைப்பாடும் - எம்.ஐ.முபாறக்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைத் தொடரர்ந்து அக்கட்சி சதிகளுக்குள் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கின்றது. கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கட்சிக்குள் பதவிகளுக்குக் குறி வைத்திருந்தவர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும் சேர்ந்து முன்னெடுத்த சதித் திட்டங்களால் கட்சி கடந்த காலங்களில் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் உள்ளானது.

தேர்தல்களில் மு.காவில் போட்டியிட்டு-வெற்றி பெற்று-கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களின் அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக கட்சி மீதும் கட்சியின் தலைமைத்துவம் மீதும் எவ்வாறெல்லாம் சேறு பூசினார்கள்; எவ்வாறெல்லாம் கதை கட்டினார்கள் என்பதை நாம் அறிவோம்.

கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு இந்தக் கட்சியை அழிப்பதற்கும் அதன் ஊடாக தங்களை தேசியத் தலைவர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் ஓடித் திரிபவர்களின் அட்டகாசம் இப்போது அதிகரித்துள்ளதால் மு.கா மீண்டும் பிளவுக்குள்ளும் சதிக்குள்ளும் சிக்கியுள்ளது.

ஆனால், இந்தச் சதிகளின் வீரியம் கடந்த காலங்களை விடவும் குறைந்ததாகும். ஆட்சி, அதிகாரங்கள் இல்லாமலும்-அரசுடன் இணைந்திருந்து எதிர்க்கட்சிபோல் இருந்தும் ஒரு காலத்தில் மு.கா இவ்வாறான சதிகளை எதிர்கொண்டது.nஇப்போது முழுமையான ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இப்போதைய சதியைச் சந்திக்கின்றது.

மு.காவைப் பிளவுபடுத்துவதற்கு அப்போது அதிகம் அக்கறைகொண்ட மஹிந்தவின் அனுசரணையுடன் அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி மரத்தை அழிப்பதற்கு அதன் உடைந்த-அழுகிய மரக்கிளைகள் முயற்சி செய்தன. கட்சியை அழிக்கத் துடித்த மஹிந்தவின் பக்கத்திலேயே போய் நின்று கட்சியைக் காப்பாற்றுவதற்கு மு.காவின் தலைமைத்துவம் வகுத்த வியூகத்தால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.

மரத்தின் உடைந்த பழைய கிளைகளும் தற்போதும் மரத்தினுடனேயே இருக்கும் கிளைகளும் சேர்ந்து நகர்த்திய சதித் திட்டம் மேற்படி வியூகத்தால் முறியடிக்கப்பட்டபோதிலும், இப்போது அந்தச் சதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் குறி வைத்து மு.காவின் தவிசாளர் பஸீர் சேஹுதாவூதும் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலியும் போராட்டத்தில் குதித்தனர். மு.கா தற்போது எதிர்நோக்கும் புதிய தலையிடி; புதிய சதி இதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின் கட்சி பெற்ற பெறுபேறுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இவர்களின் இந்தப் போராட்டம் எந்தவகையிலும், நியாயமற்றது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களில் கட்சி எதிர்பாராத வகையில் தோல்வியைச் சந்தித்தது. அந்த மாவட்டங்களில் கட்சி கொண்டிருந்த தலா ஒவ்வொரு ஆசனமும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பறி போனது.

இதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கட்சி தள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது திருகோணமலை மாவட்டத்துக்கு ஓர் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வன்னிக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. அத்தோடு, கையில் இருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களும் முடிந்துவிடும்.

கட்சியின் இந்த இக்கட்டான நிலைமையை அறிந்தும்கூட, தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவது எந்தளவு சுயநலமிக்கது என்பதை விளக்கிச் சொல்லத் தேவை இல்லை. அந்த இரண்டு ஆசனங்களையும் இவர்களுக்குக் கொடுத்துவிட்டால் வன்னியையும் திருகோணமலையையும் மு.கா மறந்துவிட வேண்டியதுதான். அந்த இரண்டு மாவட்டங்களிலும் மு.காவுக்கு எதிராக தலா இரண்டு எம்பிக்கள் உருவாகி இருக்கின்ற நிலையில், ஓர் எம்பியும் இல்லாமல் மு.காவால் அந்த மாவட்டங்களில் எழும்ப முடியாது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு அறிந்திருந்தும், அவர்கள் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கோருகிறார்கள் என்றால் அவர்களுக்கு கட்சி நலன்கள் மீது சிறுதும் அக்கறை இல்லை என்றே அர்த்தம்.

அதுபோக, பசீர் சேஹுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை வளர்க்காமல் மூன்று தடவைகள் தேசியப் பட்டியல் ஆசனங்களை அனுபவித்திருக்கின்றார். ஹசன் அலி இரண்டு தடவைகள். கட்சி மேற்படி வீழ்ச்சியைச் சந்திக்காவிட்டாலும் கூட, இவர்கள் இருவருக்கும் தொடர்ந்தும் தேசியப் பட்டியல் வழங்குவது நியாயமாகுமா? கடந்த காலங்களில் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவதற்கு இவர்களுக்குத் தொடர்ச்சியாக ஆசனங்கள் கொடுக்கப்பட்டமையும் ஒரு காரணமாகும்.

ஆகவே, இந்த பதவி ஆசையால் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு-சதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் இப்போது வித்தியாசமான நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. தேர்தல் தொகுதி மட்டத்தில் இருக்கின்ற கட்சியின் மத்திய குழுக்களின் ஆலோசனைகளை கட்சியின் தலைவர் இது தொடர்பில் திரட்டத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், இந்த மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய தொகுதிகளின் மத்திய குழுக்களைக் கூட்டி அந்தக் குழுக்களின் ஆலோசனைகளை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின்படி, கட்சியின் தலைமைத்துவத்துக்கு செயலாளர் நாயகம் விசுவாசமாக இல்லை. 99 வீதம் விசுவாசமாக இருந்து ஒரு வீதம் எதிராக இருந்தாலும் அந்த 99 வீதமும் விசுவாசமாக ஆகாது என்று சாரப்பட்ட கருத்துக்கள் அந்த கூட்டங்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டன. அதாவது ஒரு லீற்றல் பாலுக்குள் ஒரு துளி விசம் வீழ்ந்தால் பால் முழுவதும் விசமாகிவிடும் என்ற அர்த்தத்தோடு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஏனையவர்களை விடவும் தலைமைத்துவத்துக்கு மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் பதவி இனி ஹசன் அலிக்கு வழங்கப்படக் கூடாது என்றும் அவரை மதித்து கட்சியின் வேறு பதவிகளைக் கொடுக்கலாம் என்றும் அங்கு மேலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

ஹசன் அலி மு.காவின் எதிரிகளின் வலையில் சிக்கி இருப்பதால் மிகவும் அந்தரங்கமான-கட்சிக்கும் கட்சியின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் போன்ற பதவியை வகிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்றும் மத்திய குழு உறுப்பினர்கள் அங்கு கூறினார்.

அத்தோடு, செயலாளர் நாயகம் பதவியை கட்சியின் தலைவர் வைத்திருப்பதுதான் மிகவும் நல்லது என்றும் சிலர் அங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர். அதற்கான காரணத்தையும் தேவையையும் அவர்கள் விளக்கிக் கூறவும் தவறவில்லை.

அடுத்து,பஷீர் சேஹுதாவூதைப் பொருத்தவரை மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தனர். அவர் கட்சிக்கு எதிராகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மீண்டும் நினைவூட்டினர். அவருக்கு எதிராக கட்சியின் தலைவர் எவ்வாறான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு அவர்களின் பூரண ஆதரவு கிடைக்கும் என்பது அவர்களின் கூற்றுக்களில் இருந்து தெரிந்தது.

ஆகவே,இவ்வாறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த இருவருக்கும் எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


[எம்.ஐ.முபாறக் ]

Read more...

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் திரிபோஷா பதுக்கிய சுகாதாரபணிமனை ஊழியர்கள்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சுகாதாரபணிமனையில் மக்களுக்காக கொடுக்கப்பட்ட திரிபோஷாவை ஊழியர்கள் பதுக்கி வைத்துள்ளதாக பயனாளர்கள் மிகவும் விசனம் தெரிவிக்கின்றனர். இத்திரிபோஷா பக்கட்டுக்கள் குழந்தைகள், கற்பவதிகள், நிறைகுறைந்தபிள்ளைகள், பாலுட்டும்தாய்மார் வழங்கப்படவேண்டியவை.

பொருட்களை பதுக்குதல் பின்னர் அவற்றை கறுப்புச் சந்தையில் விற்றல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

குறித்து மோசடிச் செயல் அண்மையில் திணைக்கள உயர் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் , சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.



Read more...

காசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி.

இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா மறைந்த நேரம் காசி ஆனந்தன் "இலங்கையின் சுதந்திர நாளை பகிஸ்கரிக்க வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு மட்டக்களப்பு கல்லூரிக்கு மிதிவண்டியில் தானும் பாலு மகேந்திராவும் சென்று வெடிகுண்டு வீசியதாக" குறிப்பிட்டார். அன்று கல்லூரிக்கு வெடிகுண்டு வீசியவர் இன்று "இந்தியாவை எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருக்க வேண்டுமென்று ஆசையுடனும், அவாவுடனும் கேட்டுக் கொள்ளுவதாக" கேட்டு இலங்கைத் தமிழ்மக்களின் மேல் வெடிகுண்டு வீசுகிறார்.

இந்தியாவின் துணை, தமிழ்நாட்டின் ஆதரவு என்று இவரும், இவர் போன்றவர்களும் குறிப்பிடுவது பெரும்பான்மையான இந்திய ஏழை மக்களின் துணையை அல்ல, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதரவை அல்ல. பெருமுதலாளிகளுடன் சேர்ந்து தமது இலாப வேட்டைக்காக தமது சொந்த நாட்டின் கோடானுகோடி மக்களையே வறுமையில் வாழ விதித்திருக்கும் இந்தியாவை ஆளும் கொள்ளைக்கார அரசுகளிடம் தான் தான் அவர் உதவி கேட் கிறார். நதிகளையும், காடுகளையும், மலைகளையும், கடல்களையும், கழனிகளையும் அன்னியப் பெருமுதலாளிகளிற்கு விற்று நாட்டை அழிக்காதே, இயற்கையை சிதைக்காதே என்று போராடும் ஏழை மக்களிற்கு எதிராக படைகளை கட்டவிழ்த்து விட்டு கொலை வெறியாடும் கொடிய அரசியல்வாதிகளிடம் தான் இலங்கைத் தமிழ்மக்களிடம் கருணை காட்டச் சொல்கிறார்கள்.

தமது ஊழல்களினால் உலகப்புகழ் பெற்ற தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளிடம் தான் அவர் உதவி கேட்கிறார். இந்திய மத்திய அரசு அகில இந்திய அளவில் கொள்ளை அடித்தால், கொலை செய்தால் நாங்கள் மாநில மட்டத்தில் தமிழ் மண்ணை கொள்ளை அடிப்போம், தமிழ் மக்களை கொலை செய்வோம் என்கிற கயவர்களின் காலில் விழுந்து எழுகிறார்கள். தண்பொழில் தாமிரபரணியை கொக்கோ கோலாவிற்கு விற்று தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போகச் செய்யும் தன்னினம் தின்னிகள் கடல் தாண்டி வந்து நம் மக்கள் கண்ணீர் துடைப்பார்களாம். தம் அடங்கா பணப்பசிக்காக சாராயம் விற்று ஏழைக் குடும்பங்களைக் கொல்லும் தமிழ்நாட்டின் கொலைகார பேய்கள் நம் மக்கள் துயர் துடைப்பார்களாம் உணர்ச்சிக்கவிகள் உளறுகிறார்கள்.

"நாங்கள் இன்றைக்கில்லடா, அன்றைக்கிருந்தே ரெளடிகள் தான்" என்பது போல அண்ணன் ஒரு அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்து விடுகிறார். அவர் 1963 இல் சென்னையில் இலங்கைத் தூதரகத்தின் முன் உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்ட போது அதை முடித்து வைப்பதற்கு ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை அழைத்தாராம். காங்கிரஸ் என்ற கயவர்களின் கட்சியில் இருந்து விட்டு நேரு காட்டிய போலி முற்போக்கு முகத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் முன்னாள் மன்னர்களுடனும், தீவிர வலதுசாரிகளுடனும் சேர்ந்து "சுதந்திரா கட்சியை" தொடங்கிய ராஜாஜியை தான் அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க கூப்பிட்டாராம். "குலக்கல்வித் திட்டம்" என்று அவரவர் சாதித்தொழிலை செய்ய வேண்டும் என்ற பார்ப்பனிய நஞ்சை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது கல்வித் திட்டமாக கொண்டு வர முயற்சித்த குல்லுக பட்டரைத் தான் அவர் கூப்பிட்டிருக்கிறார்.

இவர் உண்ணாவிரதம் இருந்த ஆண்டில் ஈரோட்டுக் கிழவன் ராமசாமி உயிரோடு தான் இருந்தான். தளர்ந்த உடலுடன் ஆனால் தளரா நெஞ்சுடன் மக்களின் விடுதலையையும், பச்சைப் பொய்யர்களிற்கு எதிரான பகுத்தறிவையும் தன் தோழர்களுடன் பேச்சிலும், செயலிலும் பரப்பி வந்தான். இந்திய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் வேண்டி போரிட்ட எத்தனையோ முற்போக்காளார்கள் இருந்தார்கள். காங்கிரசில் இருந்தாலும் ஏழை மக்களிற்காக குரல் கொடுத்த, செயற்பட்ட காமராசர், கக்கன் போன்றவர்கள் இருந்தார்கள். "தமிழ்த் தேசியத்தின் தந்தை" என்று அழைக்கப்பட்ட பெருஞ்சித்திரனார் இருந்தார். ஆனால் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்ல இவர்களை எல்லாம் விட்டுவிட்டு பார்ப்பன வெறியரும், படுபிற்போக்காளருமான ராஜாஜி தான் அண்ணனின் கண்ணில் பட்டார். இந்தி மொழியை தமிழ்நாட்டில் கட்டாயப்பாடமாக கொண்டு வந்தவரைத் தான் "சிங்களம் மட்டும்" என்ற சிங்கள இனவாதசட்டத்தை இலங்கைத் தமிழ்மக்களின் மேல் கொண்டு வந்தவர்களிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க மிகப் பொருத்தமாக கூப்பிட்டாராம்.

"சக்கரவர்த்தி திருமகன்" என்று ராஜாஜி ராமாயணத்தை கல்கியில் வாராவாரம் எழுதி இந்துத்துவ நஞ்சை பரப்பினார் என்றால் அண்ணன் காசி ஆனந்தன் "இந்து தமிழீழம்" அமைத்துத் தாருங்கள், நாங்கள் ஒத்துழைக்கிறோம்; நாங்க ரெடி, நீங்க ரெடியா என்று டீல் போடுகிறார். "இன்று டெல்கியில் உள்ள உண்மையான இந்து சமய உணர்வுள்ளவர்களிடம் அவர் உணர்வுபூர்வமாக கேட்கிறாராம், என்ன கொடுமை இது காசி அண்ணா. குஜராத்தில் கொலை செய்த உண்மையான இந்து சமய உணர்வாளர் மோடியிடம், இன்று இந்தியா முழுவதும் முற்போக்காளர்களைக் கொலை செய்யும் இந்துவெறியர்களிடம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களையும், சிறுபான்மை மதத்தினரையும் கொலை செய்யும் இந்துவெறியர்களிடம், இந்த மதவெறியர்களிற்கு எதிராக போராடும் மாணவர்களை "தேச விரோதிகள்" என்று சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா பண்டாரங்களிடம் அண்ணன் கேட்கிறார் "இந்து தமிழீழம்" அமைத்து தாருங்கள்.

அம்பேத்காரும் அவரது இயக்கத்தினரான ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த இந்துமதத்தில் இருந்து விலகினார்கள் என்று அண்ணனே அவரது பேச்சில் குறிப்பிடுகிறார். அவர்கள் எதற்காக இந்து மதத்தை விட்டு விலகினார்கள் என்று அண்ணன் ஒரு நிமிடமாவது யோசிக்கக் கூடாதா? பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதர்களை பிரிக்கும், இழிவுபடுத்தும் இந்த இந்து மத சாக்கடையில் இருந்து அவர்கள் கரையேற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மதம் மாறினார்கள் என்பது அண்ணனிற்கு தெரியவில்லையா?

பார்ப்பனிய இந்துமதத்தின் பாதிப்பு இல்லாததாலேயே காசி ஆனந்தனின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் சாதிக்கொடுமை ஒப்பீட்டளவில் இல்லை. வேடுவரும், வேளாளரும், முக்குவரும், திமிலரும், தட்டாரும், அம்பட்டரும், சேணியரும் சமமாக வாழும் சமுதாயத்தை அழித்து பிராமணன் பிரமனின் தலையில் தோன்றினான் எனவே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்ற முட்டாள்தனத்தை சொல்லும் மக்கள்விரோத இந்துசமயத்தை கொண்டுவர வேண்டும் என்று அழிவு அரசியலை சொல்லும் இவர்களை கவிஞர்கள், தமிழ் மக்களிற்காக பேசுபவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு படை தமிழ் மக்களை கொலை செய்தது. எம் பெண்களை கொடுமைப்படுத்தியது. தாய்மாரை, தந்தையரை இந்தக் கொலைகாரர்கள் கொன்றதினால் எம் குழந்தைகள் தனியே விடப்பட்டார்கள். கணவரை, காதலரை இழந்து பெண்கள் இன்று வரைக்கும் கண்ணீரில் வாழ்கிறார்கள். ஊர்கள் கொளுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. மக்கள் அகதிகளாக்கப்பட்டு தம் மண்ணை விட்டு தவிக்க விடப்பட்டனர்.

நேரில் வந்து இவ்வளவு கொடுமைகளைச் செய்தவர்கள் மகிந்த ராஜபக்ச என்ற இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனிற்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும் கொடுத்து வன்னிப் படுகொலையை செய்து முடித்தார்கள். இவர்களைத் தான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க காசி ஆனந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் "தேச பக்தர்கள்" போன்ற காட்டிக் கொடுப்பாளர்கள் மறுபடியும் வந்து தமிழ் மக்களைக் கொல்லுங்கள் என்கிறார்கள். விடுதலையின் பாடலை பாடும் துரோகிகளின் குரலை கண்டு கொள்வோம். கூப்பிய கரங்களிற்குள் கொடு வாட்களை ஒளித்திருக்கும் கொடியவர்களின் முகமூடிகளை கிழித்தெறிவோம்.

Read more...

Friday, April 15, 2016

சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் உலக போருக்கு அச்சுறுத்துகிறது- By Andre Damon

நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்கா சீனாவுடனான அதன் இராணுவ மோதலைச் சமீபத்திய வாரங்களில் கூர்மையாக தீவிரப்படுத்தி உள்ளது.

வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஒரு தலையங்கத்தில் அறிவிக்கையில், தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் கடல் எல்லையில் 12 கடல் மைல்களுக்குள் போர் கப்பல்களைச் செலுத்தி, விரைவிலேயே அமெரிக்கா மூன்றாவது "சுதந்திர கப்பல் போக்குவரத்து" ஒத்திகையை நடத்துமென அறிவித்தது.

அக்டோபர் 2015 மற்றும் ஜனவரி 2016 இல் நடந்த அத்தகைய முதல் இரண்டு சம்பவங்களில், "எவ்விதமான ஆயுதங்களுடன் எந்தவித ஒத்திகையை அல்லது நடைமுறையை தடுக்கும்" “தீங்கின்றி கடந்து செல்வதற்கான" விதிமுறைகளுக்கு இணங்க என்ற பெயரில், அமெரிக்க கடற்படை சீனாவின் கடல் எல்லைகளுக்குள் ஏவுகணை தாங்கிய சிறுபோர்க்கப்பல்களை அனுப்பியது.

Navy Times இன் செய்திப்படி, அமெரிக்க பசிபிக் படைகளின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் சீன வசமிருக்கும் கடல் எல்லைகளைச் சுற்றி 12 மைல் தூர பிரத்யேக மண்டலத்திற்குள் மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அழுத்தமளித்து வருகிறார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற கடற்படை நடவடிக்கைகளுக்கான தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஹொன் கிரீனெட்டின் ஒரு முன்னாள் மூத்த ஆதரவாளர் Navy Times க்குத் தெரிவிக்கையில், ஹாரீஸ் "நிஜமான [கடற்போக்குவரத்து சுதந்திர] நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறார். அவர் ஒரு பகுதியினூடாக சென்று இராணுவ நடவடிக்கைகளை"—அதாவது போர்விமானங்களைச் செலுத்துதல் மற்றும் ஆயுத உபகரண அமைப்புமுறைகளைப் பிரயோகித்தல் போன்றவற்றை "மேற்கொள்ள விரும்புகிறார்,” என்றார்.

தீவிரமடைந்துவரும் பதட்டங்களின் விளைவாக, நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம், அச்சுறுத்தும் விதத்தில், “ஒருவிதமான மோதல் அதிகரிக்கக் கூடுமென தெரிகிறது,” என்று நிறைவு செய்தார்.

அமெரிக்கா அதன் சீன-விரோத மூலோபாயத்தை முன்னெடுப்பதில், ஆசிய-பசிபிக்கில் உள்ள முன்னணி சக்திகளை, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை, அத்துடன் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளை நியமித்துள்ளது, இவை அவற்றின் கடற்படை பலத்தை வேகமாக அபிவிருத்தி செய்து வருவதுடன் தாங்களாகவே சீனாவிற்கு எதிராக அதிகரித்தளவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு மையத்தால் இவ்வாரம் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டாளிகள் பரந்தளவில் இராணுவச் செலவினங்களை அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டியது. பிலிப்பைன்ஸ் ஒரே வருடத்தில் 25.5 சதவீத அளவிற்கு செலவினங்களை அதிகரித்தது, அதை அடுத்து இந்தோனேஷியா 16.5 சதவீதத்தில் இருந்தது, அதேவேளையில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் வியட்நாம் ஒவ்வொன்றும் ஐந்து சதவீதத்திற்கு அதிகமாக செலவினங்களை அதிகரித்தன.

இந்த சீன-விரோத கூட்டணி அதன் கடற்போக்குவரத்து உரிமைகோரல்களை அதிகரித்தளவில் வலியுறுத்தி வருகிறது. டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “கடந்த வாரம் வியட்நாம் அதன் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக ஒரு சீனக் கப்பலை சிறைபிடித்தது, இந்தோனேஷியா அதன் சொந்த உரிமைகோரல்களை பாதுகாக்க F-16 போர்விமானங்களை கொண்டு அச்சுறுத்தியது.”

பிலிப்பைன்ஸ் உடன் நடந்துவரும் பிரதான இராணுவ ஒத்திகைக்காக அமெரிக்க கடற்படை மற்றும் கப்பல்படை இந்த வாரம் 5,000 துருப்புகளை அனுப்பியது. Foreign Affairs பின்வருமாறு குறிப்பிட்டது: “இந்த வாரம் நடந்த இராணுவ பயிற்சிகளில், பிலிப்பைன்ஸ் கடற்கரையில் கடல் வழியாக நிலத்தில் இறங்கும் ஒத்திகை மற்றும் ஒரு எண்ணெய் அகழ்வாலை மீதான ஒரு போலியான தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது, அவற்றில் ஆஸ்திரேலிய படைகளின் ஒரு சிறிய படைப்பிரிவும் பங்கெடுத்தது.” செவ்வாயன்று ஜப்பான் அறிவிக்கையில் அந்த ஒத்திகைகளில் பங்கெடுக்க தென் சீனக் கடல் வழியாக ஹெலிகாப்டர்கள்-தாங்கி சிறுபோர்க்கப்பல் ஒன்றை அனுப்ப இருப்பதாக அறிவித்தது.

நவீன வரலாற்றில் சீன மக்களுக்கு எதிராக சில மிகப்பெரிய போர் குற்றங்களை நடத்தி உள்ள ஜப்பான் வேகமாக மீள்இராணுவமயமாகி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஜப்பான் அரசின் பாசிசவாத அரசியலமைப்பு மீள்பொருள்விளக்கம் ஒன்று "கூட்டு தற்காப்பு" என்ற போலிச்சாக்கில், ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து சண்டையிடுவதைச் சட்டபூர்வமாக்கி, நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதற்கும் மேலாக, பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இவ்வார ஆரம்பத்தில் கூறுகையில், 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா குண்டுவீசியதில் ஒரு கால் மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், அணுஆயுதங்களை வைத்திருப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு ஜப்பானை அனுமதிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே சீன ஆட்சி அமெரிக்க ஆக்ரோஷத்திற்கு மிகவும் பலமாக விடையிறுக்க அதிகரித்த அழுத்தத்தின் கீழ் உள்ளது. பெக்கிங் பல்கலைக்கழகத்தின் (Peking University) பெருங்கடல் ஆய்வு மையத்தின் ஓர் ஆய்வாளர், ஹூ பொ, இந்த மாதம் Diplomat இல் வெளியான ஒரு கட்டுரையில் வலியுறுத்துகையில், “தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் முன்னால், சீனா இயல்பாகவே இராணுவரீதியில் தயாராக இருக்க வேண்டும்,” என்றார். “இத்தகைய இராணுவ நடவடிக்கைகளைக் கொண்டு அமெரிக்கா அமைக்கும் பொறிகளை அம்பலப்படுத்த மற்றும் எதிர்கொள்ள சீனா சகல வாய்ப்புகளையும் பரிசீலித்து பயன்படுத்த வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இருதரப்புகளில் இருந்தும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சுதந்திர கடல் போக்குவரத்திற்கான அமெரிக்க நடவடிக்கை, அல்லது பெரிதும் செய்திகளில் வெளிவராத தென் சீனக் கடலில் இராணுவ மற்றும் மீன்பிடி படகுகளுக்கு இடையிலான மோதல்களே கூட, அல்லது சீன கடல் எல்லைப் பகுதியில் சமீபத்தில் அணுஆயுதம் ஏந்தக்கூடிய அமெரிக்க B-52 குண்டுவீசி விமானம் பறக்க விடப்பட்டதைப் போன்ற ஒரு "விபத்தே" கூட, சாத்தியமான அளவிற்கு அணுஆயுதங்கள் உள்ளடங்கிய ஒரு முழு அளவிலான இராணுவ மோதலுக்குத் துரிதமாக இட்டுச் செல்லக்கூடும்.

“வல்லரசுகளுக்கு" இடையிலான இராணுவ மோதலின் சாத்தியக்கூறு வேகமாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய முன்னீடுபாடாக மாறி வருகிறது. ஓர் அசாதாரணமான அறிக்கையில், இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லே வியாழனன்று செனட் சபையின் ஆயுத சேவைகள் கமிட்டிக்குக் கூறுகையில், “சாத்தியமான வல்லரசு மோதல்... மற்றும் விலை கொடுக்கப்படும் பாதிப்புகள்" ஆகியவற்றால் அமெரிக்கா "மிகப் பெரும் ஆபத்தில்" இருக்கிறது என்றார்.

முன்னணி இராணுவ அதிகாரிகளின் இத்தகைய வெளிப்படையான அறிக்கைகள் மற்றும் நியூ யோர்க் டைம்ஸின் "வல்லரசு" இராணுவ மோதல்—அதாவது உலக போர்—அபாயம் ஆகியவற்றிற்கு இடையே, இத்தகைய பிரச்சினைகள் 2016 ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் அடிப்படையில், அமெரிக்காவும் சீனாவும் ஒரு பகிரங்கமான இராணுவ வெடிப்புக்கு முன்பினும் நெருக்கமாக வந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒருவரால் ஒருபோதும் அறிய முடியாது.

தேர்தல்களுக்கு பின்னர் உடனடியாக பிரதான இராணுவ தீவிரப்பாடுகள் ஏற்பட்ட அமெரிக்க வரலாறு உள்ளது. “அவர் போரைத் தவிர்ப்பார்" என்ற முழக்கத்துடன் 1916 மறுதேர்தலில் ஜெயித்த உட்ரோவ் வில்சன் ஏப்ரல் 2, 1917 இல் அமெரிக்காவை முதலாம் உலக போருக்குள் எடுத்துச் சென்றார். 1964 தேர்தலில் சமாதான வேட்பாளராக போட்டியிட்ட லிண்டன் பி. ஜோன்சன் அவர் பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் பரந்தளவில் வியட்நாம் போர் தீவிரப்பாட்டை நடத்தினார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி ஒரு ஜனநாயக கட்சி வேட்பாளரோ அல்லது குடியரசு கட்சி வேட்பாளரோ யாராக இருந்தாலும், அதற்கு முன்னதாக இல்லை என்றாலும், அந்த தேர்தலுக்குப் பின்னர், ஒரு நிஜமான ஆபத்து உடனடியாக இருக்கிறது. சீனா, ரஷ்யா மீது அல்லது மத்திய கிழக்கில் ஒரு பிரதான இராணுவ மோதலில் அமெரிக்கா ஈடுபடும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரச்சினையை 2016 தேர்தல்களின் மத்தியில் நிறுத்தி ஆழ்ந்த போர் ஆபத்தைக் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கையூட்ட தீர்மானகரமாக உள்ளது.

Read more...

13வது திருத்த அரசியல்- அ. வரதராஜப்பெருமாள்

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே!

1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன.

2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நாள் தொடக்கம் எப்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென 2010ம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் 2012ம் ஆண்டுக்கிடையில் இலங்கையில் நான் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்தவர்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களிடம் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். இந்தியாவிலும் அதே கருத்தை பல்வேறு மட்டத்திலும் வலியுறுத்தி வந்தேன்.

தெற்கில் எப்போதும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சிக்கு வருவது இதுவரை வழமையாக உள்ளது. 2007ம் ஆண்டு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று திரு பிள்ளையான் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்த போதும் அது அரசியல் யாப்பு ரீதியில் அதற்குரிய அதிகாரங்களோடு செயற்பட முடியாமற் போன காரணங்களும் நெருக்கடிகளும் அங்கு இருந்தன. எனவே வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்து மாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும் என நம்பியதே அதற்குக் காரணம்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் நிலைமை ஆரம்பித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றைப் பார்த்த போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறப் போகிறதோ – எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் எப்போதும் முன்னணி வகிக்கப் போகிறதோ – ஆளும் அரசியலிலும் தமிழர்களுக்கு உரிமைப் பங்குண்டு என்பது எக்காலத்தும் நிறுவப் படாது போகுமோ என்ற சந்தேகமே எழுந்தது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குவேட்டை அரசியலை நடத்தினாலும் ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட முடியும் – செயற்பட முயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கை என்னிடம் பல சந்தேகங்கள் மத்திலும் இருந்தது. அதிலும் குறிப்பாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவங்களும் கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்று உட்கட்சி எதிர்ப்புக்களையும் மீறி அவர் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற போது தனக்கு சரியெனப்பட்டதை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள் முரண்பாடுகள், வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் யாழ்ப்பாண மையத் தளங்களில் நிலவும் சிங்கள விரோத மற்றும் அரச விரோத அரசியலின் செல்வாக்கு போன்றனவற்றின் காரணமாக அவர் பல சிக்கலை எதிர்நோக்குவார் என்ற கணிப்புகளின் மத்தியிலும் சம்பந்தர் சுமந்திரன் போன்றோரின் ஆதரவுடன் திரு விக்கினேஸ்வரன் அதிகாரப் பகிர்வு விடயங்களை யதார்த்த பூர்வமாக நகர்த்துவார் என்ற எதிர்பார்க்கையும் அதைச் செய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் உடையவர் என்ற நம்பிக்கையும் எனக்குள் இருந்தன.

அவர் தனக்குத் துணையாக தமிழர்கள் மத்தியில் இருக்கும் அனுபவங்கள் நிறைந்த நிர்வாகிகளின் துணையைத் திரட்டிக் கொள்வார், இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான அனைத்து இன சட்ட வல்லுனர்களினதும் துணையைப் பெற்றுக் கொள்வார், இலங்கையின் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர்களின் அணைவைத் திரட்டிக் கொள்வார், தமது கூட்டமைப்புக்காரர்களின் மத்தியில் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான யதார்த்த அணுகுமுறைகளைப் புரிய வைத்து தம்மோடு முன்கொண்டு செல்வார் என்ற நம்பிக்கைகள் என்னுள் பல வகைப்பட்ட சந்தேகங்களுக்கு இடையேயும் நடமாடிக்; கொண்டிருந்தது.
1988ல் நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண சபைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் அந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்த தற்றுணிபுகளையும் சாதித்தே ஆக வேண்டும் என்ற ஓர்மத்தையும் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அன்றைக்கு நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை எற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம். நாங்கள் எதிர்நோக்கிய பயங்கரவாத எதிர்ப்புகள் உயிர் ஆபத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உள்நாட்டிலும் தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் இருந்த அளவுக்கு ஆதரவுகள் இருக்கவில்லை. சோவியத் யூனியன் அன்றைக்கு உயிரோடு இருந்த உலகசூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் நாம் மாகாணசபையை நடத்தியதால் வெள்ளைக்கார மேலைத்தேச நாடுகளின் ஊடகங்களும் அவற்றின் பல நிறுவனங்களும் எங்களுக்கு எதிராக செயற்பட்டன. எங்களைவிட மிகப் பல மடங்கு அதிகமான இந்திய ஆதரவு மற்றும் உலக நாடுகளின் ஆதரவு இவர்களுக்கு உண்டு. ஒப்பிட்டால் இன்னும் பல வேறுபாடுகள் – இடைவெளிகள்.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைமையை எமது அன்றைய நிலைமைகளோடு பொருத்திப் பார்த்தால் திரு விக்கினேஸ்வரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பல பத்து மடங்கு ஆதரவுத் தளங்களை எங்கும் கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய அளவு நெருக்கடிகளே இவர்களுக்கு உண்டு. எங்களுடைய நிலைமையேர் முற்றமுழுதாக வேறாக இருந்தது. அன்று எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் இவர்களுக்கு அரச படையினர் உத்தியோக பூர்வமாக பாதுகாப்பையும் வழங்கிக்கொண்டு அவ்வப்போது இவர்களின் பொதுக் கூட்டங்களில் புகுந்து குழப்பம் விளைவித்தல், இருட்டில் வீட்டு யன்னல்களுக்கு கல்எறிதல், சாணியடித்தல், எஞ்சின் ஒயில் அடித்தல் ஆக மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் படுத்தால் சரியாகிவிடும் கணக்கில் புறமுதுகில் தடியடி நடத்திவிட்டு ஓடிவிடுதல் என நடத்தும் நாடகங்களைத் தவிர சரீரரீதியான ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு கிடையாது. அரசபடைகளின் குழப்ப நாடகங்கள் உண்மையில் இவர்களுக்கு சர்வதேச புகழையும் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசியற் செல்வாக்கையும் குவித்துக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டவையோ என்று சந்தேகம் கொள்ளும் வகையாகவே சம்பவங்கள் உள்ளன. இவ்வாறாக பல சாதகமான வாய்ப்;புகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதுவும் திரு விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சராகக் கொண்டுள்ள நிலையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சாதனைகளை நகர்த்துவார்கள் அதற்கான அரசியலை ஆக்கபூர்வமாக முன்னோக்கி உருட்டுவார்கள் என நான் எதிர்பார்த்ததில் தவறேதும் இருக்க முடியாது.

வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. எங்களுக்குக் கிடைத்ததோ ஆறு மாதங்கள் மட்டும்தான்; அதற்குப் பிறகு பிரபாகரனுக்கும் பிரேமதாசாவுக்கம் இடையே அரசியற் தந்திரோபாய தேன்நிலவு தொடங்கியதால் அதற்கு மேல் எல்லாம் தடைப்படத் தொடங்கி விட்டன. அந்த ஓராண்டுகளில் நாம் செய்தவைகள் இன்றும் பேசப்படும் பொருளாக உள்ளன. நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டதாக கவலைப்பட்டோரை இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும் கண்டிருக்கின்றேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கே ஆறு மாதங்களில் இவ்வளவு தூரம் சமாதானமான பாதுகாப்பான சூழல் இருந்தும் வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியிருப்பவை என்னென்ன என்ற கேள்வி எழுகின்றது. மாகாணசபையின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத சில தீர்மானங்கள் மற்றும் 2013ம் ஆண்டுக்காக அரசு வழங்கிய நிதியை ஆளுநர் செலவழிப்பதற்கான சட்ட அங்கீகாரம் வழங்கியது என்பவற்றைத் தவிர வேறெதனையும் செய்ததாக என்னால் அறிய முடியவில்லை.

அரசாங்கம் நிதி எதுவும் தரவில்லை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது. கொழும்பு அரசாங்கம் ஒதுக்கிய 1700 கோடி ரூபாயில் 500 கோடி ரூபா மூலதன செலவுகளுக்கு உரியது. ஒதுக்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எந்தெந்த திட்டங்களுக்காக அவை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின் நிறைவேற்று நிலைகள் இப்போது என்ன நிலையில் உள்ளன என்பதற்கான திட்ட நிறைவேற்று மதிப்பு அறிக்கையை யாரும் பார்த்ததாகவும் என்னால் அறிய முடியவில்லை. நான் தூர உள்ளவன் என்பதால் என்னால் அறிய முடியாமல் இருக்கவும் கூடும். மாகாண சபையின் இணையத் தளமாவது அனைத்து தகவல்களையும் தாங்க வேண்டும்.

மாகாண அமைச்சர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக என்ன செய்கிறார்கள். ஒரு சாதாரண அரசசார்பற்ற தொண்டு நிறுவன அளவுக்காயினும் அவர்களால் ஏதாவது செய்யப்படுகின்றனவா? இவற்றிற்கும் பதில் ஆளுநர் எந்த அதிகாரங்களையும் அமைச்சர்களுக்குத் தரவில்லை என்பதுவும் அரசாங்கம் அமைச்சுக்களுக்கு போதிய அளவு நிதி எதுவும் தரவில்லை என்பதுவும் மாகாணசபையின் செயலாளர்களும் மற்றும் அதிகாரிகளும் ஆளுநரின் சொற்படி மட்டுமே நடக்கிறார்கள் அமைச்சர்களின் கட்டளைகளுக்க உட்பட்டவர்களாக அவர்கள் செயற்படுகிறார்கள் இல்லை என்பவைதான் பதில்களா? ஐந்து வருடங்கள் முடிய இதைத்தான் மக்களுக்குச் சொல்லப் போகின்றார்களா?

இங்கு நான் யாரையும் விமர்சிக்கவோ அல்லது யாருக்கும் வழிகாட்டவோ புத்தி சொல்லவோ முயலவில்லை. மாறாக இலங்கையில் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்த அரசியல் யாப்பு ஆகியன தொடர்பாக எனக்குள் எழுந்துள்ள சில கேள்விகளையே முன் வைக்கவுள்ளேன். அவற்றிற்கு விடை கிடைத்தால் அவை தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு பயன்படும் என்று கருதியே இக்கேள்விகளை எழுப்புகிறேன்.

நான் தமிழர்களின் அரசியற் தலைவன் அல்ல. தமிழர்களின் அரசியலில ஒரு சிறிய தலைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதியோ திறமையோ கூட எனக்குக் கிடையாது. அதிலும் இப்போது தமிழர்களின் அரசியலில் பங்காளனாக இருக்கும் வாய்ப்பற்றவனாக என்னை நானே ஆக்கிக் கொண்டுள்ளேன். இது என்னுடைய நிலை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கிற பல லட்சக்கணக்கானவர்களின் நிலையும் அப்படித்தான். எவ்வாறாயினும் தமிழர்களின் நலனில் எனக்குள்ள அக்கறையில் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு தொடர்பாக சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பை அதிஷ்டவசமாக எனக்கு வரலாறு தந்தது. அந்த அக்கறை அனுபவத்திலிருந்தே இதை எழுத முற்பட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்த வரையில் கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்றும் மாகாண சபைகளுக்கு போதிய அளவு வழங்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம்.

இருப்பினும் கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே எனது நோக்கம்.

திரு விக்கினேஸ்வரனின் அறிவாற்றல் பற்றியோ அனுபவ ஆழம் பற்றியோ கேள்வி எழுப்பும் அளவுக்கு நான் அறிவோ அனுபவமோ உடையவன் அல்ல. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13வது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான அவர்களது பாத்திரத்தை – சரியாக முழுமையாக – கடமை தவறாமல் – பொறுப்போடும் அக்கறையோடும் – ஆற்றுகிறார்களா? என்ற கேள்வியே என்னை ஆண்டு கொண்டிருக்கின்றது அதிலிருந்தே எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.
அவை அடுத்த கடிதத்தில் தொடரும்

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

Read more...

முடிச்சிடப்பட்ட கைறுகளுக்கு முன்னால் நிற்கும் மாணவர்களுக்கு பதில் கூறுமா இலங்கை அரசு - நிரோஸா இஸ்ஸதீன்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாக்கிற்கமைவாக இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூக வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பு செய்யும் அம்சமாக கல்வியும் அதனோடு இணைந்ததான அரச பதவிகளும் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையில் உயர் கல்வியையும் பயிற்சியையும் அதன் நிறைவாக அரச ஆசிரிய நியமனங்களையும் வழங்கும் நிறுவனங்களாக தேசிய கல்வியியற் கல்லூரிகள் மிளிர்கின்றன.

பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக் கல்வியைப் பயின்று அதன் நிறைவாக ஒவ்வொரு வருடமும் தேசிய ரீதியில் இலங்கைப்பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற உயர்தரப் பரீட்சையில் உயர்ந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற திறமையான மாணவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு ஆசிரிய பயிற்சிகளை வழங்கி சிறந்த ஆசிரியர்களாக அவர்களை பிரசவிக்கும் மகத்தான பணியை இக்கல்வியியற் கல்லூரிகள் ஆற்றி வருகின்றன.

இலங்கையில் தேசிய கல்வியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த வருடம் வரை அதற்கான பயிலுனர்கள் தெரிவு என்பது இன. மத. மொழி. பால். பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி உயர்தரப்பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகள் மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு தகுதியான திறமையான மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இலங்கையிலுள்ள 18 கல்வியியற் கல்லூரிகளும் இத்தெரிவை முறையாக மேற்கொண்டு செயற்பட்டமையினால் கடந்த வருடம் வரை தேசிய கல்வியியற் கல்லூரிகள் எதற்காகவும் யாராலும் விமர்சிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் இவ்வருடம் இக்கல்வியியற் கல்லூரிகள் பெரும் விமர்சனத்துக்கு ; உள்ளாகியிருப்பது நிகழ்கால நிதர்சனமாகும். இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது இவ்வருடம் பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டவிதமாகும். அதாவது இதுவரை காலமும் பயிலுனர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முறை இவ்வருடம் மாற்றப்பட்டு ஆசிரிய நியமனங்களுக்கான வெற்றிடங்களை கொண்ட பிரதேசங்கள் கணிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆசிரிய நியமனங்களுக்கான வெற்றிடங்கள் இல்லாத பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சையில் உயர்ந்த வெட்டுப்புள்ளிகளைப் பெற்ற திறமையான மாணவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர் தெரிவில் இவ்வருடம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விடயமாகும்

இலங்கையின் கல்வித்திட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு இறுக்கமான திட்டமென்றே பலராலும் விமர்சிக்கப்பட்ட வருவதுண்டு அதன் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2016 ஆம் ஆண்டு மே மாதம்தான் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்குள் உள்வாங்கப்பட இருக்கிறார்கள். எனின் ஏற்கனவே இரண்டு வருடங்கள் 'கல்லூரிகளின் அனுமதிக்கான காத்திருப்பு' என்ற பெயரில் மாணவர்களது பொன்னான காலத்தை வீணடித்துவிட்ட இலங்கை அரசாங்கம் தற்போது இம்மாணவர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் தெரிவில் புறக்கணிப்பதானது மிகப்பெரிய நம்பிக்கை துரோகமாகும். இவ்விரண்டு வருட காலப்பகுதியில் இலங்கையிலுள்ள அரச சார்பற்ற உயர் தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களில் பாடநெறிகளை பயின்று வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால்கூட இம்மாணவர்கள் அங்கு உயர் தொழில் வாய்ப்புக்களை பெற்று வெற்றியடைந்திருப்பார்கள். இதற்கு இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும். மாணவர்களை காத்திருக்கச் செய்துவிட்டு தற்போது புறக்கணித்துவிடப்பட்டிருப்பதன் உள்நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.

மேலும் கடந்த காலங்களுக்கு மாற்றமாக இவ்வருடம் மாணவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள தேர்தல் வாக்காளர் இடாப்பிலிருந்து பெறப்படுகின்ற படிவம் கச்சேரிகளில் இருந்து பெறப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்வருடம் தேசிய கல்வியியற் கல்லூரிகளின்; நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்த அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கச்சேரிகளில் கால்கடுக்க காத்து நின்றதுடன் கையறு நிலையிலுள்ளவர்கள்கூட அதனை பணம் செலுத்தி பெற்றுக்கொண்டமையும் அத்தகைய மாணவர்கள் இன்று கைவிடப்பட்டுள்ளமையும் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கல்விக்கல்லூரிகளுக்கு திறமைகள் புறக்கணிக்கப்பட்டு வெற்றிடங்களை மையப்படத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் அப்பிரதேசங்களுக்கு வெற்றிடங்களை நிவர்த்தி செய்வது என்பது அரசின் எதிர்கால நோக்காக இருந்தாலும் இம்முறையின் முலம் இலங்கை திறமையற்ற ஒரு கல்விச் சமூகத்தையே கண்டுகொள்ளும் என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. அதுமட்டுமன்றி ஒவ்வொரு வருடமும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற ஆசிரியர்கள் அவர்கள் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக கஸ்டப்பிரதேசங்களுக்கே நியமிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் மறுக்கின்ற போது அவர்களது நியமனம் இரத்துச்செய்யப்படுவதும் அதற்கான நஸ்டயீட்டை பயிலுனர்கள் செலுத்துவதும் உண்மையாகும். இவ்வாறான ஒரு நிலை காணப்படும் போது பயிலுனர்கள் தமது நியமனங்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர். எனவேதான் வெற்றிடங்கள் உள்ள இடங்களில் இருந்துதான் பயிலுனர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது ஒரு தேவையற்ற விடயமாகும்.

ஒரு நாட்டில் உரிமைகளைப்போராடி பெறவேண்டிய நிலை காணப்படுமாயின் அந்நாட்டில் நல்லாட்சி மிளிர வாய்ப்பில்லை. அந்த வகையில் இலங்கையில் மாணவர்கள் தமது கல்வி உரிமைக்காக போராட வேண்டியதொரு நிலை தற்போது எழுந்துள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். மேலும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு திறமையானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். இவ் அடிப்படையில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட பயிலுனர் தெரிவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொறுப்புவாய்ந்த தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கையாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com