Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, May 21, 2020

நீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தமிழ் பெண்ணைக் காப்பாற்றச் சென்ற ரிஸ்வான் பலி! (VIDEO)

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த தமிழ்ப் பெண்மணியைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாக நீரில் பாய்ந்த ரிஸ்வான். பின்னர் சடலம் மீட்கப்பட்டது. காலஞ்சென்ற ரிஸ்வானின் மனிதாபிமானத்தை மதித்து, 'இலங்கைநெற்' இணையத்தளம் இந்தக் கவிதையை இங்கு பதிவேற்றம் செய்கின்றது.

அத்துடன், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது.

மனிதத்தை விதைத்துச் சென்றாயே நீ!

தன்னுயிரைத் துச்சமென மதித்தாய்...
தன்தாரம் பிள்ளைகளை மறந்தாய்...
மனிதாபிமானம் உன்னுள் ஓங்கியதால்
மதமேது இனமேது என்று எண்ணவில்லை....
மன்னுயிரைக் காத்திடவே...
சட்டென்று பாய்ந்தாய் நீருனுள்...
அவள் பிழைத்தாள்...
நீயோ மிதந்தே வந்தாய்...
மீளாத் துயரில் உன்குடும்பம்...

இறைவனிடம் நல்சுவனத்திற்காய்
இருபத்தேழாம் நோன்பில்
இருகரங்களையும் ஏந்தியவனாய்...
உன்னை டிஜிட்டலில் செதுக்கி
அழகு பார்க்கின்றேன்....

உனக்கும் எங்கட்கும் உள்ள உறவு
உன் மனிதாபிமானத்தால்
உன் உணர்வுகளால்
பின்னிப் பிணைந்ததே....

ரிஸ்வான்.....
தேஜுஸான உன்மதிவதனத்தோடு
மறுமையிலும் நீ உயிர்பெற்றெழ
பிரார்த்தனைகள் சகோதரனே...
உனக்கு உவமை சொல்ல
என்னிடம் வார்த்தைகளே இல்லையடா...

மனிதாபிமானத்தை
மண்ணில் விதைத்துச் சென்றாயடா?
மண் இனியேனும் பாடங்கள் படிக்குமா?
மதத்தைக் கடந்த மனிதம்
மண்ணில் இன்னும் வாழ்கின்றதென்று!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ் 


Read more...

Thursday, April 2, 2020

கொரானோவைப் பரப்பும் மதபோதகர்கள்...! ஹட்டனில் 800 பேர் தனிமைப்படுத்தலில்!

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் நேற்று (01) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்விடயம் தொடர்பிலான கவிதை

மதபோதகன் என்ற பேரில்
காம லீலைகள்
நாளுக்கு நாள்
அரங்கேறுகின்றன...
ஏமாறுபவர்கள் அதிகமாய் உள்ளதால்
ஏமாற்றும் காம தேவன்கள்
உலாவருகின்றனர்
கூடவே பிசாசுக் கூத்துடன்
கொரானாவையும் சுமந்து...
கட்டிப்பிடித்து
முத்தம் கொடுக்க
பாவங்கள் படையெடுத்தோடும்
கர்த்தர் ஆசிர்வதிப்பார்
என்றெல்லாம் சொல்லி
ஓரிரு புல்லுருவிகள்
நடிக்கிறார்கள்
கொரோன ஆட்கொல்லிகளாய்...

கேலிக் கூத்தினால்
ஒன்று பலவாக
பல கொரோனாக் குழந்தைகள்
பிரசவிக்கப்படுகின்றன
பலரைத் தனிமைப்படுத்த...
பலரைச் சுட்டுச்சாம்பராக்க....

புகழ்விரும்பா மதபோதகர்கள்
அட்டகாசமின்றி
அமைதியாக
பள்ளிகளில் ....

அவர்களையும்
விஞ்சியோராய்த் தன்னைக்காட்டி
நோட்டுக்கள் குவிக்கின்றனர்
இந்த நாதாரிகள்...

பாவப்பட்டோருக்காய்
சிலுவை சுமந்த இயேசு
இவர்களின் பாவங்களையும்
சுமந்துதான் நிற்கிறாரோ?

இயேசு பாவங்களை மன்னிப்பார்
என்றெண்ணித்தானோ
காற்றுப்புகா வண்ணம்
கட்டியணைக்கின்றனர்
பிசாசுகளை விரட்ட....

-----

இறைவா...!
இன்னுமே கொரானோ என்றால்
ஏதென்று தெரியாமல்
கண்மூடித்தனமாய்
கண்ணாம்பூச்சி பிடிப்போருக்கு
மெய்யறிவினைப் புகட்டு...

தள்ளிநிற்காவிட்டால்
சமுதாயம் மட்டுமல்ல
உலகே தள்ளிவைக்கும்
கொள்ளி வைக்கும் என்பதை
அவர்கள் உள்ளங்களில்
போட்டுவிடு...!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
2020.04.01

(குறிப்பு - இது மதத்தைப் புண்படுத்தும் பதிவன்று. மதத்தின் பேரால் சல்லாபிப்பவர்களுக்கானது.)

Read more...

Monday, October 14, 2019

கூசாக்கள் தூக்கியது போதும்... உங்கள் மூட்டுவலியில் அக்கறை எனக்கில்லை

ஆளுக்காள் கூசாதூக்கித் திரியும் ஆட்களே!
அயர்ந்து தூங்காது சொல்வதைக் கேளுங்கள்...
நாளுக்குநாள் எம்முதிரம் சிந்தியே உழைத்தோம்

நாட்டுக்கு எம்வரிகளையும் ஈந்தே யழிந்தோம்...

டும்டும்டும் எனவே வானுயர்கின்றன ஓலங்கள்
டும்டும்டும் என்தலைவன் இவனென்று ஆளுக்காள் டமாரம் அடித்து ஏதுபயன் கேளுங்கள்
தயவோடு சொல்கின்றேன் கூசா தூக்கியேதுபயன்?

சஜித் என்றும் கோத்தா அநுரவென்றும்
சிந்திக்காது நீங்கள் கூசா தூக்குகின்றீர்பாவம்
நாசுக்காகச் சொல்லவில்லை உங்கள் மூட்டுக்கள்
நன்றாக வலிக்கும் சிந்திக்காது நடந்தாற்றான்....

எங்கள் கைமூட்டில் இவனுக்கு என்னவென்று
என்னைச் சாடுவதில் ஏதுபயன் உங்கட்கு
உங்கள் கைமூட்டுக்கு மருந்துவாங்க
எங்கள் நாட்டு ஏழைகளின் உதிரந்தான் போகும்...

பசையை வாளிவாளியாகச் சுமந்தும் கைகடுக்க
பதாதைகளை தலைமேற் சுமந்தும் இக்கால்மட்டும்
நேசமான உங்கட்குக் கிட்டியதேது? சொல்லுங்கள்
நாமுண்டுவாழ நீதியான தேசமன்றோ தேவை!

நிறங்களைப் பற்றிப் பிடித்தது போதும்
நாட்டினுக்கு நேசமான நம்மவர்க்கு நேசமான
நல்லவரைத் தேர்ந்தெடுக்க உழைப்போம் நாம்
நிறங்கள் எலாம் வானுயரும்வரை மெத்தப்பேசும்...

நம்சிறுசுகள் நலமாகக் கல்விப்பால் அருந்துதற்கும்
நம்மிளையோர் நாளும் நற்றொழில் செய்வதற்கும்
எம்மூடகங்கள் அச்சமின்றி தொடர்ந் தெழுவதற்கும்
எம்கைகளைக் கோத்திடுவோம் கூசா தூக்காது...

உழைப்பாளின் வரிப்பணத்தைச் சுரண்டாமல்
உழைப்பாளியின் வியர்வையை வீணாக்காமல்
உழைப்பவனுக்கு முன்னுரிமைதர முன்வாருங்கள்
உழைக்காதவன் பின்சென்று அரோகரா பாடாமல்...

-கலைமகன் பைரூஸ்

Read more...

Tuesday, July 29, 2014

இலங்கைநெற் வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!


வருக ஈகைத் திருநாளே!

திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

- மதுராப்புர கலைமகன் பைரூஸ்

Read more...

Monday, April 14, 2014

இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!

-கவிஞர் கலைமகன் பைரூஸ்

இளவேனில் காலத்தே இனிதாய் பூத்து
இந்துவுக்கும் பௌத்தனுக்கும் மகிழ்வீந்து
இளமுகத்தொடு நாளும் மகிழ்ந்திருக்க
இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!

அதிகாலை துயிலெழுந்து இறையைப் போற்றி
அழகான ஆடைகள் எடுப்பா யணிந்து
சித்திரைப் புத்தாண்டீதில் சுற்றம் சூழ
சேர்ந்தே மகிழ்ந்திருக்க வந்தாள் சித்திரையாள்!

பட்டாசு பலவாக கொளுத்தி யின்று
பணியாரம் கொக்கீசொடு பழப்பாகும்
முட்டுகின்ற மணத்தோடு பண்டம்பலவும்
முனியாமல் வழங்கிட வந்தாள் சித்திரையாள்!

கோயில் விகாரையெங்ஙனும் மணியோசை
கேட்டே விரைந்து செல்வர் மனம்மகிழ்வர்
போயிடுமே துன்பமெங்கும் பண்டிகையீதில்
பந்தமாய் எல்லோரும் மகிழ்ந்திட சித்திரையாள்!

எத்திக்கும் புகழ்மணக்க வந்ததுகாண் சித்திரையாள்
எங்களுக்குள் இல்லை பிரிவினைதான் என்றிடத்தான்
நித்திலத்து இந்து - பௌத்தன் கைகோக்க
நலமாக வந்ததுகாண் சித்திரைப் பெண்ணாள்!

காவிதாவும் கமலாவும் கைகோத்துச் செல்கின்றார்
கமலனும் விமலதாசவும் மனம்மகழ்ந்து செல்கின்றார்
புவியினிலே மலர்ந்திட்ட இப்புத்தாண்டீது -நற்
பண்பினையே வளர்த்திட ஆசிப்போமே நாம்!

Read more...

Thursday, December 26, 2013

ஏன் ஜனனித்ததுவோ சுனாமி? (கவிதை)

சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க
சனனித்ததுவோ சுனாமி!

அழகான கடல்மீது
அழகான கையெழுத்தில்
அழகாக எழுதியெழுதி
அழகுபார்த்திருந்தோம் நாம்!

அடுக்கடுக்காய் ஞண்டுகள்
ஆழச் சென்று ஆழிமீதுவந்து
அதன்மீதே பார்வையெலாம்
அள்ளிச் சேர்ந்ததுவே…
அகத்தினின் துன்பம் களைந்து
ஆடிமகிழ்ந்திருந்தோம்
ஆழியின் கரைமீது நாமன்று!

விளம்பரங்கள் செய்யாது
ஆர்ப்பரிப்பது ஏதுமில்லாது
அடியவரின் பாவங்கள் பொறுக்காது
திரண்டு வந்ததுதான் பாரும்
ஆழிதிரண்டு பேரலையெழுந்து
ஆழிப் பேரலையாய்….
ஊரைச் சுருட்டிச் சென்றது
அலைநாவினால் சுருட்டி….!

அன்று பிறந்த பாலகரும்
அன்று கரம்பிடித்த தம்பதியும்
அன்றுதான் பட்டம் பெற்றவரும்
அன்றுதான் வம்பு செய்தவரும்
ஏன்?
இறையைத் துதித்து நின்றவரும்
அழிந்தனர் ஆழிப் பேரலையின்
அசமந்த சீற்றத்தினால்…
அந்தச் சீற்றம்
எதற்கு வந்தனையோ என
ஏங்குகின்றனர் இன்று….

அன்று
அழித்தது இல்லம்
அழித்தது மந்தைகள்
அழித்தது மீனவ வாடிகள்
அழித்தது எல்லாமே
அழிந்தன எல்லாமே

அன்று ஏன் ஆழிப் பேரலை
அப்படி வந்தது என
அடியார்கள் ஆண்டவனிடம்
அன்று ஒப்பாரியுடன்
ஆடியொடுங்கி கேட்டனர்!

அடுத்தவரை அண்டி
அடித்துச் சுருட்டி
அடிமையை உதைத்து
அரசன் ஆண்டி பார்த்து
அண்டாது விலக்கி
ஆர்ப்பரிப்புடன் நசுக்கி
அடிமைத் தளை சேர்த்து
ஆக்கிரமிப்புச் சிந்தனையுடன்
அயர்ந்து தூங்கியே இருந்து
ஆண்டவனை மறந்து
அடியார் இருந்ததனாலன்றோ
ஆழிப்பேரலை வந்தது
அடித்துச் சென்றது
அப்பாவிச் சனங்களையும்
அடப்பாவமே!
அற்பமான சாதித்துவத்தை
அத்தாணி மண்டபத்தில்
அரசோச்சச் செய்தவர்களை
அழுக்காகவே கண்டோம்
உருக்குலைந்தே கண்டோம்
உடல் அறியாது கண்டோம்
உடலிதுவா இவர் என்றோம்
உச்சாணி நின்றாலும்
உயர்வு தாழ்வினை
எண்ணித் தானும் பாரோம்
என்று எண்ணினோம்நாம்…

வங்கக் கடல்
வாங்கிச் சென்ற உடலங்கள்
வாங்கவில்லை ஊர்பேர்
வந்து ஓய்ந்த இடங்கள்
வாங்கின அவற்றிற்கு ஊர்!

ஆடிப் போயின உளங்கள்
ஆராத பெருந்துயரில் திளைத்தன
ஆண்டாண்டு சென்றாலும்
ஆழிப்பேரலை அணையாது
அகத்தில் ஆழநிற்கும்…
என்றனர் எலோரும்…!

ஒன்பது ஆண்டுகள் கழிந்தன..
ஒப்பாரி வைக்காத உளம்
இன்றுமில்லை…
என்றாலும்
தன்னை மாற்றாத மனிதன்
தரணியின் இன்றும் அன்றாய்
தன் தீய சிந்தையுடன்
திரிந்தே திரிகிறான்…

அன்றுதான் விட்டானா?
ஆழியின் சீற்றம்
ஆடியொடுங்கிய அக்கணத்து
அணைந்து போயின
உடலங்களில் சேர்ந்திருந்த
அருமந்த பொருட்கள்
அறுக்கப்பட்டன
அறுவறுக்கத் தக்கவர்களால்…
வந்திருக்க வேண்டியது
அவருக்குத்தான் என்றாலும்
ஆண்டவன் விட்டுப்பிடிக்கவே
ஓயச் செய்தான்…

ஆழியின் முரட்டு ஓவியம்
அழியாது உளது கண்களில்..

அழியாது விட்டால் நிச்சயம்
அரசோச்சும் சாதித்துவம்
முரட்டுத்தனமாய் மீளவும்
எங்களைச் சந்திக்கவரும்
மீண்டும் ஒரு ஆழிப்பேரலை
எல்லாம் அறிந்தவன்
எடுப்பினைக் காண்பரப்போ!

எல்லாமும் இழந்தே
ஆழிப் பேரலையால் தவித்த
எல்லோர்க்கும் எந்தனின்
பிரார்த்தனைகள்…!

“கவித்தீபம்”
கலைமகன் பைரூஸ்
26-12-2013

Read more...

Wednesday, October 23, 2013

இது இருபத்து மூன்றாம் ஐப்பசி... (கவிதை) - எஸ். ஹமீத்

இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் தீரவில்லை ஐயா பசி...!
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் மாறவில்லை ஐயா விதி!!

கைக்குழந்தையை மாரோடணைத்து
கவலைகளை மனதுக்குள் அடைத்து
கடல் கடந்த காமிலா உம்மாவின் கால்கள்
இந்த மணல் தொட்டு
இருபத்து மூன்றாண்டுகள்
இன்றோடு முடிகிறது...!

ஓர் ஒலிபெருக்கியின் வக்கிர அறிவித்தலில்
ஊரைவிட்டு விரட்டப்பட்டவள்...
துப்பாக்கிகளின் உக்கிர குறிவைத்தலில்
தனதான மண்ணை விட்டு
துரத்தப்பட்டவள்...

கழுத்துத் தங்கச் சரட்டோடு
கைக்காப்பு தோடுகளையும்
அவர்கள் கவர்ந்து கொண்டார்கள்...
கடும் உழைப்பால் சேமித்த காசையும்!

அவளின் கொல்லைப் புறத்தில்
ஆடுகளும் கோழிகளும் அனாதரவாயின..
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை
மேய்ச்சலுக்குப் போன மாடுகள்...!

முற்றத்தின் ஓரத்தில் அவள் வளர்த்த
முருங்கை மரங்கள் காய்த்திருந்தன...
காய்களைப் பறிக்கக்
காமிலாவுக்கு நேரமிருக்கவில்லை;
முற்றிச் சிவந்த பப்பாசிப் பழத்தையும்!

மல்லிகையும் மணிவாழையும்
பூத்திருந்தன...வரும்வரை
வாடாதிருக்க- ஒரு
வாளித் தண்ணீருக்கும் அவகாசமில்லை...!

பாரிசவாததில் படுத்துவிட்ட வாப்பாவையும்
அவருக்கு
பணிவிடை செய்தே களைத்துவிட்ட உம்மாவையும்
காலைப் படகொன்றில் அனுப்பியிருந்தாள்...

விசாரணைக்கெனச் சென்ற கணவன்
வீடு வருவானென
மூன்று மாதங்கள் முன்னாலவள்

காத்திருந்த கணங்களில் அந்தக்
கரியமிலச் செய்தி வந்தது...
'கம்பத்தில் அவள் கணவன்
தலை தொங்க மைய்யித்'தென...!

இத்தா முடிய இன்னும் நாட்களுள்ளன...

எந்த பத்வாவையையும்
ஏற்கும் நிலையிலவள்...

இந்து சமுத்திர முதுகேறி
இறங்கினாள் புத்தளத்தில்...!
அபலையாய்...அனாதையாய்...அகதியாய்...!

இப்போது காமிலாவின் மகளுக்கு
இருபத்து நான்கு வயது...

சங்கங்கள் தோன்றின...
இயக்கங்கள் எழுந்தன...

ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன....
ஊர்க் கூட்டங்கள் நடந்தன....

அறிக்கைகள் குவிந்தன...
அகிலமும் பறந்தன...

ஆட்சிக் கதிரைகள் மாறின...
அமைச்சுப் பதவிகள் கிடைத்தன...

ஆனால்....
காமிலாவும் மகளும்
காலைக் கக்கூசுக்கு
வரிசையில் வாளியுடன்
இன்னமும்....!

இது இருபத்து மூன்றாம் ஐப்பசி..
இன்னும் தீரவில்லை ஐயா பசி...!
இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...
இன்னும் மாறவில்லை ஐயா விதி!!

Read more...

Friday, August 16, 2013

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

பொய்ம்முகந் தரித்து பூதலத்து இன்னார்
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
செய்வரே தீங்கு ஒண்ணாதார் இன்னாரே!

Read more...

Sunday, March 31, 2013

மதவாதக் காவிகளும் மிதவாதத் தொப்பிகளும் (கவிதை)

தீக்குச்சி
தீண்டி
கதிரவன்தான்
கரையுமோ?

பூனைமோதி

யானைதான்

வீழுமோ?



பூமியழுது
வானம்தான்
நனையுமோ?

வானம் அழுதால்
பூமிதான்
தாங்குமோ?

காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!

அதற்கு
அரசு எனும்
அரக்கன்
துணையும் நிற்கலாம்!

பன்றிகள் சேர்ந்து
கூட்டமைக்கலாம்!

இனத்தையே
அடகுவைத்து
பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!

காற்று
அடிக்கலாம்!
புயல்
அடிக்கலாம்!!

ஆனால்,
கடலலைகள்
ஓய்வதில்லையே...!

- எம்.பீ.அன்வர்

Read more...

Sunday, February 10, 2013

எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?

இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதன் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன்கொண்டுசென்று, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள 13 வயதுச் சிறுமியின் கதைபற்றிவாசகர்கள் அறிவர். நாளுக்கு நாள் இந்த விடயம் சார்ந்த செய்திகள் இலங்கையின் எழுத்து மற்றும் மின்னூடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது சார்ந்த கவிதையொன்று இங்கே களம் காண்கிறது.

இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்
பூச்சிக்கென கொண்டுவா பணமென!

இல்லாமையால் தவழும் எனில்வெட்கம்
இன்று தராதுவிடின் பெரும்வெட்கம்
பொல்லா களவென்ன களவோ எனஉன்னி
பறித்த தேங்காயில் பறித்தேன் சில!

கண்டுவிட்டார் எனை விரட்டிவந்தார்
கூண்டுக்குள் அடைத்திட பாடாய்ப்பட்டார்
கண்டார் பெருமகிழ்ச்சி எனையுள்ளேதள்ளி
கண்டேன் சமூகத்தை அழுதேன் எண்ணி!

பேராறாய் நான் அழுதிட்டபோதும் பாரார்
பரிதவிக்கின்ற நிலையும் காணார்
ஊரவர் எல்லோரும் பகட்டாய் வாழ
ஊர்பள்ளியில் படிப்பதற்காய் செய்தேன்பிழை!

இனியும் வாராதார் யாருளர் திருட்டுக்குள்
இப்படி யநியாயங்கள் மலிந்தால் பாரில்
தீனியிலை எங்களுக்களுக்குள் அவர்க்கு
தேவை எம்பணம் மட்டும் - அதிலேகுறியவர்!

போதும் போதுமையா உங்கள் நன்மைகள்
பரிதவித்து மடிகின்றோம் வேண்டாம் கரம்
சூதும் வாதும் வேதனைசெயும் என்பார்
சத்தியமாய் எமைநோக்காயின் வருமிடரே!

கூண்டுக்கு ளடைத்து மானம்பறித்து
குற்றம்கண்டு பிணைக்குள் விடுதலைதந்து
ஈண்டு செய்த நல்லவரே நீங்கள் ஐயா!
இத்தலத்து அழித்திடவே வறுமை பாரும்!

-கலைமகன் பைரூஸ்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com