Saturday, November 11, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதன் வெள்ளிவிழாவை 1999ம் ஆண்டு கொண்டாடியது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ‘பாசிஸப் புலிகளின்’ அதிகாரத்தின் கீழ் தமிழ் அரசியலும், தமிழ் சமூகமும் முழுமையாக ஆட்பட்டுக் கிடந்ததினால், யாழ்.பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு தொடர்பாக எந்த தமிழ் ஊடகமும் எழுதத் துணியவில்லை அல்லது அதுபற்றி எழுதாமல் கள்ள மெளனம் காத்தன என்றும் கூறலாம்.

அந்தக் கள்ள மெளனத்தை உடைத்து யாழ். பல்கலைக்கழக வரலாற்றின் உண்மையை வெளிக்கொணர "அமுது" சஞ்சிகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு என்னும் கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அடுத்து வரும் 2024ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் அதன் பொன்விழாவை (50ஆண்டு) கொண்டாட வேண்டும். ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு முன் சட்டத்தரணியும், முன்னனி சமூகச் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கத்தின் கருத்துரை வழங்கும் நிகழ்வொன்றுக்கு அங்கு தடை விகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என இன்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, இன்றுள்ள தலைமுறையினருக்கு யாழ். பல்கலைக்கழகம் உருவான வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நோக்கில் 2001 "அமுது" சஞ்சிகையில் வெளிவந்த அந்த தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

- அமுது - பிரதம ஆசிரியர் எஸ். மனோரஞ்சன் –
2023 – November.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தனது 25 வருட பூர்த்தியை வெள்ளி விழாவை அண்மையில் கொண்டாடியது. இவ்விழாவை முன்னிட்டு விழா மலர் ஒன்றும் (ஆங்கிலத்தில் மட்டும்) வெளியிடப்பட்டதுடன் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்தின் கடந்தகால பன்முக வளர்ச்சி பற்றியும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பல கட்டுரைகள் அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டன. எல்லாம் நல்லபடியாக நடந்த போதும் இந்நிகழ்ச்சிகளின் போது, யாழ். பல்கலைக்கழகம் பற்றி வெளிவரத் தவறிய முக்கிய விடயம் ஒன்று தொடர்பாக அதன் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் மத்தியில் விசனித்து இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதாவது-
இப் பல்கலைக்கழகம் எவ்வாறு பலத்த போராட்டங்களின் மத்தியில் உருவானது என்பது பற்றிய அதன் வரலாறகும். வெள்ளிவிழா ஏற்பாட்டாளர்கள் அதன் வரலாற்றை வெளிக்கொணர தவறியது அவர்களது அசட்டையீனம் மட்டுமன்றி, ஒரு திட்டமிட்ட இருட்டடிப்பு என்று கருதுவதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு தனிமனிதனும் சரி, ஒரு ஸ்தாபனமும் சரி, ஒரு நாடும் சரி தனது தோற்றத்தை அறிந்திருக்க வேண்டும், என்ற ஒரு சாதாரண விடயம் கூட தமிழ்ச் சமூகத்தின் உயர் தன்மை வாய்ந்த புலமைச் சமூகமொன்றின் புலனுக்கு எட்டாமல் போனது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. இன்னொரு பக்க உண்மையும் இந்த விடயத்தில் உண்டு. இன்றைய தலை முறையைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்றி, இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற அநேக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் கூட இது தோற்றம் பெற்ற வரலாறு தெரியாது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

ஒவ்வொரு தமிழ் மகனும் இப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை அறிந்து இருப்பது வெறும் தகவல்களுக்காகவோ புலமைத்துவத்துக்காகவோ அல்ல. நமக்கு அன்றைய காலகட்டத்தில் தலைமை வழங்கிய தமிழ் தலைமைகள் தமது அப்புக்காத்து தொழிலிலும், சுயநல அரசியல் தேவைகளிலும் செலுத்திய அபரிமிதமான அக்கறையை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டவில்லை என்பது மட்டுமன்றி, அதற்கு எதிராகவும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவுமே. அவர்கள் தொடக்கி வைத்த தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான இந்த அழிவுப் பாதை அரசியல் இன்றும் தொடரப்படும் துரதிர்ஷ்டத்தையும் நாம் பார்க்கிறோம். இப் பல்கலைக்கழகத்தை இயங்க விடாதிருக்க எடுத்த முயற்சிகளும், இளம் சமுதாயத்தை கல்வியறிவற்றவர்கள் ஆக்கி கொடிய யுத்தத்தில் அவர்களை பலிக்கடாக்கள் ஆக்குவதிலும் இருந்தும் இதை நாம் புரிந்துகொள்ள முடியும் எனவேதான் இப் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவனும் ஏனையவர்களும் இதன் தோற்றத்தைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளுவது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்ற தமிழ் மக்களின் அவா இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ல் சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே உருவான ஒரு விடயமாகும். ஆனால் அக்கோரிக்கையை தமது அரசியல் கோஷங்கள் ஆக்கியவர்கள் யாரெனில், மூத்த தமிழ் அரசியல் கட்சியான திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்ற திரு. எஸ். ஜே. வீ. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியுமே. ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கீரியும் பாம்புமாக எதிரெதிரான அரசியலை நடத்தி வந்த இந்தக் கனவான்கள், இந்த யாழ் பல்கலைக்கழக விவகாரத்திலும் ஏட்டிக்கு போட்டியான நிலையிலேயே செயல்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு தேவையானது "இந்து" பல்கலைக்கழகம் என பொன்னம்பலம் கோர, செல்வநாயகமோ தமிழ்ப் பல்கலைக்கழகமே அமைக்க வேண்டும் என கூறினார். இவர்கள் இருவரினதும் புத்திசாலித்தனமற்ற, தவறான, பிடிவாதமான நிலைப்பாடு தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் கடமையை தட்டிக் கழிப்பதற்கு அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது. இரண்டு தமிழ் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு தமிழ் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தினால் சாதகமான நிலைமை உருவாகும் என்றும், அவ்வாறுஅமைக்கப்படும் பல்கலைக்கழகத்தில் இயல்பாகவே தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரவிடயங்களின் அபிவிருத்திக்கு களம் ஏற்படும் என்றும், பல தமிழறிஞர்களும் முற்போக்கு அரசியல்சக்திகளும் அன்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இரு தலைவர்களும் தமது நிலைப்பாட்டிலேயே அழுங்குப் பிடியாக நின்று காரியம் கை கூடாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியினரோ ஒருபடி முன்னே சென்று தமது கற்பனைத் "தமிழரசுராஜ்யத்தின் தலைநகரான" திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியிலும் இறங்கினார்கள். இதற்கென பல்வேறு குழுக்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து அன்பளிப்பாகவும் மலிவு விலையிலும் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபா நிதியையும் சேகரித்தனர். ஆனால் இன்றுவரை அம்முயற்சிகைகூடவில்லை அதற்கென பெற்ற காணிகளுக்கும் நிதிக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.

இந்து - தமிழ் பல்கலைக்கழகத்திற்காக இழுபறிப்பட்ட கனவான்கள் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து கொண்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் தான் 1965 ஆம் ஆண்டு திரு. டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தீவிர சிங்கள இனவாதிகளான கே. எம். பி. ராஜரத்ன, ஆர்.ஜி. சேனநாயக்க போன்றவர்களையும் உள்ளடக்கி இருந்த அந்த ஏழு கட்சி கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளும் இணைந்து கொண்டன. தமிழ் காங்கிரஸ் சார்பாக திரு. மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவும், தமிழரசு கட்சி சார்பாக திரு. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றனர். தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இவ்விரண்டு கட்சிகளும் டட்லியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததாகவும் கூறப்பட்டது. டட்லி செல்வா உடன்படிக்கை ஒன்றின் மூலம் மாவட்ட சபைகள் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. 1947ல் அமைந்த டட்லியின் பிதா டி. எஸ். சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மந்திரிப் பதவி பெற்று, அவ்வரசு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்ததற்காக, அவரை விட்டு பிரிந்து சென்று தமிழ் அரசு கட்சி அமைத்த செல்வநாயகம் அவர்கள் இப்பொழுது பொன்னம்பலத்துடன் டட்லி அரசில் இணைந்து கொண்டதே மக்களின் இந்த நம்பிக்கைக்கு காரணம் ஆகும்.

தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் ஏதாவது நடக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். புதிய அரசாங்கம் அமைத்ததும் நடாத்திய முதலாவது கொள்கை விளக்க உரையான சிம்மாசன பிரசங்கத்தில் மகாதேசாதிபதி கவர்னர் ஜெனரல் திரு. வில்லியம் கோபல்லாவ யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக பத்து ரூபா ஒதுக்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசின் மனப்பூர்வமான ஒரு அறிவிப்பு அல்ல என்றாலும், இரண்டு கட்சிகளும் நினைத்திருந்தால் அதை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தபடியே விவகாரம் அவர்களுக்கு சாதகமாக முடிந்தது.

இரண்டு தமிழ் கட்சிகளும் வழமை போலவே "இந்து" பல்கலைக்கழகம் "தமிழ்" பல்கலைக்கழகம் என்ற குஸ்தியில் இறங்கி காரியத்தை கெடுத்துக் கொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சி குரங்குக்கு அப்பம் பங்கிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. நாலரை ஆண்டுகள் டட்லி அரசுடன் இணைந்திருந்தும், தமதும் தமது நெருங்கிய உறவினர்களின் சகபாடிகளினதும், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட காங்கிரஸ், தமிழரசு தலைமைகள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவில்லை மாவட்ட சபைகளும் பல்கலைக்கழக கோரிக்கையும் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டன. இந்த முக்கிய விடயங்களை விடுத்து "திருகோணமலையை புனித நகராக பிரகடனம் செய்யவில்லை" என்ற நொண்டிக் காரணத்தை கூறி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் அரசு கட்சி அரசிலிருந்து விலகிக் கொண்டது.

தமிழரசும் காங்கிரசும் மண் கவ்வினர்.

ஆனால் "சிங்களத் தலைமை வழமைபோல் எங்களை ஏமாற்றிவிட்டது" என்று ஒப்பாரி வைத்து அடுத்த தேர்தலில் வாக்குக்காக இக்கட்சிகள் ஆடிய கபட நாடகத்தை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டதை பின்னர் 1970 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. 1970 பொதுத்தேர்தலில் திருமதி சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர, சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பல்கலைக்கழகம் பற்றிய நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக சம சமாஜக், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பிடக் கூடிய செல்வாக்கு இருந்தது. அதனால் அந்தக் கட்சிகளின் தலைமைகள் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த இடத்தில் 1970 பொதுத்தேர்தலில் வட பகுதியில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒன்றாகும். தமிழரசுக் கட்சியின் தளபதி என வர்ணிக்கப்பட்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியுற்றதுடன், அது தனது கோட்டைகளாக இருந்த நல்லூர், கிளிநொச்சி தொகுதிகளையும் இழந்தது. அதேபோல உடுப்பிட்டி தொகுதியில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட "உடுப்பிட்டிச் சிங்கம்" முன்னாள் உபசபாநாயகர் திரு. மு. சிவசிதம்பரம் தோல்வி கண்டதுடன், கட்சியின் தலைவர் முடிசூடா மன்னன் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

தமிழரசு கட்சியின் சார்பில் டட்லி அரசின் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த திரு. மு. திருச்செல்வம் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்படாது செனட் சபை என்னும் மூதவை மூலம் கொல்லை வழியாக அமைச்சர் ஆனபடியால் 1970 தேர்தலில் போட்டியிடாது வந்த வழியே தப்பிக்கொண்டார்.

இந்த பாரதூரமான தோல்விகளுக்கு காரணம் இந்த இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது மட்டுமல்லாமல், வட பகுதி தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பிரிவான தாழ்த்தப்பட்ட மக்கள் இக்காலகட்டத்தில் நடாத்திய ஆலய பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம், பொது இட சமத்துவ போராட்டங்களை அடக்க முற்பட்டமையுமேயாகும். தேர்தலின் பின்னர் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததைத் தொடர்ந்து அது நிறைவேற்ற எண்ணிய வேலை திட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அமைவும் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றது. வட பகுதியில் அக்காலகட்டத்தில் இயங்கிய மக்கள் நலன் மீது அக்கறையும், செல்வாக்கும், தீர்க்கதரிசனமும், திறமையும் வாய்ந்த இடதுசாரித் தலைமைகளும் பிற ஜனநாயக சக்திகளுமே இதற்கு காரணமாகும்.

யாழ் பல்கலைக்கழக கனவை நிறைவேற்ற திட்டம் வகுக்கப்பட்டது. கனகநாயகம் தலைவராக தெரிவு

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதை துரிதப்படுத்துவதற்காகவும், அதன் செயற்பாடுகளை விசாலப் படுத்துவதற்காகவும் மக்கள் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக சேர். பொன். இ,ராமநாதனின் மருமகனும் பிரபல சட்டத்தரணியும், தமிழ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செனட்டருமான ஆர். கனகநாயகம் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் வடக்கின் பிரபல இடதுசாரித் தலைவர்களான மு. கார்த்திகேசன், அ. வைத்திலிங்கம், அ. விசுவநாதன், வீ.ஏ. கந்தசாமி, எம். சி. சுப்ரமணியம், பத்மா சிவகுருநாதன், டாக்டர் சு.வே. சீனிவாசகம், ஐ.ஆர். அரியரத்தினம், ஆர். தர்மரத்தினம், மாதகல் வ.கந்தசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

வட பகுதி மக்களின் நீண்டகால அபிலாசையை பிரதிபலித்து நின்ற இந்த இயக்கத்திற்கு தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பல்வேறு பிரிவினரிடம் இருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் இந்த முயற்சிக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்து இந்த இயக்கத்தின் கூட்டங்களில் திரண்டனர். ஆசிரியர்களை பெருமளவு கொண்ட இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவும் ஏனைய தொழிற்சங்கங்களும் இம் முயற்சிக்கு உறுதுணையாக நின்றன.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக தமது ஆதரவை பிரகடனம் செய்தனர். யாழ்ப்பாண கல்வித்துறையின் தூண்களாக அக்காலத்தில் விளங்கிய ஒரேடர் சி. சுப்ரமணியம், எஸ். சிவபாதசுந்தரம், என். சபாரத்தினம், எஸ். கனகரத்தினம், வீ. மகாலிங்கம், க.ந. வேலன் உட்பட பல கல்விமான்களும் கல்விச் சேவை அதிகாரிகளும் சமயப் பெரியார்களும் பல்கலைக்கழக இயக்கத்தின் உந்து சக்திகளாக விளங்கினர்.

மறுபக்கத்தில் பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களின் பிரசித்திபெற்ற விரிவுரையாளர்களான பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. இந்திரபாலா, கா. சிவத்தம்பி, எஸ். சிவஞானசுந்தரம் (நந்தி), அ. சந்திரசேகரம், எஸ். தர்மரத்தினம், கே. கைலாசநாதக் குருக்கள், எஸ். ராமகிருஷ்ணன், எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மௌனகுரு போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழக அமைவில் கரிசனையுடன் பங்காற்றினர்.

அரசாங்க தரப்பை பொறுத்தவரை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத், அமைச்சரும் முன்னாள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவருமான கே. பி. இரத்னாயக்கா மற்றும் அமைச்சர்கள் பீட்டர் கெனமன், செல்லையா குமாரசூரியர் ஆகியோரும், அப்போது கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவிருந்த பிரேமதாச உடகம போன்றோரும் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர்.

இவ்விடயத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்ட இன்னொருவர் சிறிமாவோவின் மூத்த புதல்வி சுனேத்ராவின் கணவராக இருந்தவரும், ஜனவேகய பத்திரிகையின் ஸ்தாபகருமான திரு. குமார் ரூபசிங்க அவர்களாவார். அவர் யாழ். பல்கலைக்கழகம் அமைவதை அரசாங்க வட்டாரத்தில் தீவிரமாக வலியுறுத்தியதுடன், அதன் திறப்பு விழா ஒழுங்குகளுக்காக பல நாட்கள் முன்னதாகவே வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1977 ல் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தன அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த குமார் ரூபசிங்கவை யாழ் பல்கலைக் கழகத்துக்கு மாற்றம் செய்த சுவாரசியமும் நிகழ்ந்து.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழிபறிப்பு தொடர்கிறது.

தமிழ் மக்கள் தரப்பில் இருந்தும் அரசாங்க தரப்பிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கு இவ்வளவு ஆதரவு இருந்தபோதிலும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்கள் தமது எதிர்ப்பை கைவிடவில்லை. தமது கடந்தகால சுயநல, போட்டி அரசியலால் சாதிக்க முடியாமல்போன கைங்கரியத்தை ஏனையவர்கள் அதுவும் குறிப்பாக இடதுசாரிகளும், தம்மால் தமிழ் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களும் சேர்ந்து சாதித்தால், அது வரலாற்றில் பதிவாகி தமக்கு ஒரு நிரந்தர இழுக்காக போய்விடும் என்ற அச்சமே கூட்டணி தலைவர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாகும்.

எனவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் இந்தக் காரியத்தை, நமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிரான தமது காரணங்களாக மிக சிரிப்புக்கிடமான பல கதைகளை மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டனர்.

அதில் ஒன்று சேர். பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள பரமேஸ்வரா கல்லூரியில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அக்கல்லூரி இல்லாது போய்விடும் என்பதாகும். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பது போல் ஏராளமான கட்டிடங்களை கட்டி ஆரம்பிக்காமல், சும்மா வெறுமனே ஒரு பாட சாலையில் பெயர் பலகையை மாட்டிவிட்டு இதுதான் பல்கலைக்கழகம் என அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது என்றும் கூறினர்.

இதற்கு பதிலளித்த திரு. எஸ். ஆர். கனகநாயகமும் ஏனையோரும், பரமேஸ்வரா கல்லூரியையும், மருதனாமடத்தில் நிறுவப்பட்டுள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் எதிர்காலத்தில் மிக உயர்நிலை கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுப்பதே இராமநாதன் தம்பதியினரின் நோக்கமாக இருந்தது என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு எடுத்துக் கூறினர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவை கூட ஒரு குதிரைப் பந்தய திடலில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், பேராதனைப் பல்கலைக்கழகம் கூட பல கட்ட வளர்ச்சிக்கு ஊடாகவே இன்றைய நிலையை அடைந்தது என்பதையும் எடுத்துக் கூறினர்.

கூட்டணியினர் முன்வைத்த மற்றோரு காரணம் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் சேஷ்டைகளைப் பார்த்து இதர பாடசாலை மாணவர்களும் கெட்டு போய்விடுவார்கள் என்றும், அயலில் உள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பிணக்குகள், மோதல்கள் உருவாகும் என்பதுமாகும். அத்துடன், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் வழக்கத்திலுள்ள பகிஸ்கரிப்பு, மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவும் மாணவர்களை அதிகம் ஆகர்சிக்கின்ற இடதுசாரி அரசியல் கருத்துக்கள் யாழ்ப்பாணத்திற்கு தொட்டுவிடும் என்ற அச்சமும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களால் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மோதலை தவிர பொது மக்களுடன் யாழ். பல்கலைக்கழகத்துடன் எந்தவித மோதலும் நடைபெறவில்லை.

அது மட்டுமில்லாமல் அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு எதிராகவும், பின்னர் விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் மாணவர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்களே முன்னணியில் நின்று போராடி வந்துள்ளதை, போராடி வருவதை வரலாறு நிரூபித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது எதிர்ப்புக்காக முன்வைத்த மற்றொரு காரணம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு சிங்கள மாணவர்களுக்கும் கற்பதற்கு வருவார்கள், அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆதிக்கம் வந்து விடும் என்பதாகும்.

இந்த "சிங்கள பூச்சாண்டியும்" அங்கு எடுபடவில்லை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக இருந்த பேராதனை, கொழும்பு, கட்டுப்பத்தை, வித்யோதய, வித்யாலங்கார என்பவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்று வந்தனர். இன்றும் கூட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.

விடுதலைப் புலிகளினதும் சில பல்கலைக்கழக கல்விமான்களினதும் "யாழ்ப்பாண தமிழ் இனவாத" கொள்கை காரணமாக பின்னர் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி முஸ்லிம் மாணவர்களும் யாழ். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி பல்வேறு பிரச்சாரங்களையும் தந்திரோபாயங்களையும் கைக்கொண்ட போதும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதில் உறுதியுடன் செயல்பட்டது. இச்சூழ்நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு தற்காலிக ஏற்பாடாக விஞ்ஞான பீடத்திற்கென அமெரிக்கன் மிஷனரிகளால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டடங்களை அரசாங்கம் சுவீகரித்தது. இந்த நடவடிக்கை யாழ்ப்பாண கல்லூரி நிர்வாகமும் அதனுடன் சம்பந்தப்பட்ட மதத் தலைமையும் கடுமையாக ஆட்சேபித்தனர். இந்த ஆட்சேபனை தமிழ் மக்களுக்கு வியப்பை அளித்தது. ஏனெனில் அமெரிக்கன் மிஷனரியினர் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவே யாழ்ப்பாணக் கல்லூரியையும் இதர பாடசாலைகளையும் தமிழ் பகுதிகளில் நிறுவினர். உண்மையாக இருந்தால் அவற்றை விட சிறப்பான உயர்வான பல்கலைக்கழகத்தின் வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்றல்லவா இருக்க வேண்டும், என அன்று மக்கள் தக்க பூர்வமாக வினவியதில் வியப்பில்லை.

ஓடுற வெள்ளத்தில் அள்ளத்தீர்மானித்த தமிழரசு சுக்கானை பிடிக்க முஸ்தீபு

இது சம்பந்தமாக யாழ்ப்பாணக் கல்லூரியின் சம்பந்தப்பட்ட மத நிர்வாகத்துடன் திருவாளர்கள் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்றோர் ஆலோசனைகளை நடத்தியதுடன், குருநாகலில் உள்ள சில சிங்கள இன மதத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்று, அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அமைச்சரான திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மூலம் தங்கள் எதிர்ப்புக்களை நிறைவேற்ற முயன்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எப்படியும் அரசாங்கம் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தே தீரும் என்ற நிலை உருவானதால் ஓடுற வெள்ளத்தில் அள்ளுவது மிச்சம் என்ற நிலைப்பாட்டை கூட்டணியினர் எடுக்கத் தீர்மானித்தனர்.

பல்கலைக்கழகத்தில் தமக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குவதற்காக அதன் சுக்கானைப் பிடிக்கும் முக்கிய பதவியான தலைவர் பதவிக்கு தமிழரசு கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் நீண்டகால தீவிர ஆதரவாளரான பேராசிரியர் சு.வித்தியானந்தனை நியமிப்பதற்கு "அலுவல் பார்க்கும்" கைங்கரியத்தில் இறங்கினர். ஆனால் அதுவும் அவர்களுக்கு கை கொடுக்க தவறிவிட்டது. அரசாங்கம் திரு. க.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக நியமித்து தன்னையும், கைலாசபதியையும், தமிழையும் பெருமைப்படுத்திக் கொண்டது.

இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச உறுப்பினர்கள் சிலர், அதிலும் குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் சொந்த ஊரான கரவெட்டி வடமராட்சியை சேர்ந்த சிலர் திரு. கா. சிவத்தம்பியை (இப் பேராசிரியர் நீண்டகாலமாக கம்யூனிஸ்ட் மாஸ்கோ சார்பு பிரிவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த காரணத்தால்) யாழ். பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக அவரை நியமிக்கும் படி அரசாங்கத்துக்கு தந்திகளையும் கடிதங்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் அரசாங்கத் தலைமை ஏகோபித்த முறையில் கைலாசபதியையே முதலாவது தலைவராக நியமனம் செய்தது.

கைலாசபதியின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்

திட்டமிட்டபடி 74 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது இரண்டு நாள் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரல்களும் வகுக்கப்பட்டன. தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி உடனடியாக யாழ்ப்பாணம் சென்றார். நிலைமைகள் நல்ல முறையில் உருவாகி வந்த போதிலும் எதிர்ப்பாளர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் மூர்க்கத்தனமாகவே இருந்தனர் அகிம்சையைப் பேசிக்கொண்டே வன்முறையில் ஈடுபட திட்டம் வகுத்தனர். முதலாவதாக வன்முறை பேராசிரியர் கைலாசபதி மீது காட்டப்பட்டது. அவர் யாழ்ப்பாணம் வந்து தங்கிய முதல் இரவு அன்றே நாட்டு வெடிகுண்டு ஒன்றை அவரின் வீட்டின் மீது எதிர்ப்பாளர்கள் வீசினர் ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேராசிரியர் யாழ்ப்பாணம் வந்த ஆரம்ப நாட்களில் வண்ணார்பண்ணை தபாலகத்திற்கு அருகில் இருந்த தமது மைத்துனர் (பிற்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்த திரு. கே.பொன்னம்பலம்) வீட்டிலேயே தங்கியிருந்தார்.

குண்டுவீசிய செய்தியை காலையில் உள்ளூர் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அவரை நலம் விசாரிக்க சென்ற நண்பர்கள் இருவரிடம் திரு. கைலாசபதி சிரித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் அவர் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. "நானும் பனங்காட்டு நரிதான் என்பதை இந்த மடையன்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது" என பேராசிரியர் அப்பொழுது கிண்டலாக கூறியதாக அவரை பார்க்கச் சென்றவர்கள் பின்னர் குறிப்பிட்டனர்.

திறப்பு விழாவுக்கு முன்னர் எல்லா ஒழுங்குகளையும் கைலாசபதி நேரடியாக கண்காணித்து செய்து முடித்தார். தினசரி காலை முதல் இரவு ஆகும்வரை பல்கலைக்கழகம் அமைய இருந்த பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு சிறிய அறையில் (இப்போது பாதுகாப்பு அதிகாரியின் காரியாலயமாக இருக்கிறது) எவ்வித வசதிகளுமற்ற நிலையில் கடுமையாக உழைத்தார். கட்டிட வேலை, வர்ணம் பூசுதல், நீர், மின்சார விநியோகம், தளபாட அமைப்பு, துப்புரவு வேலை என எல்லா வேலைகளையும் நேரடியாக தானே முன்னின்று கவனித்து செய்வித்தார்.

இரவில் அவர் வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் தலையில் சுண்ணாம்பு தூசிகளுடன் ஒரு மேசன் தொழிலாளியை போலவே வீடு திரும்பினார். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்ட சூழ்நிலையில் தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் மங்களகரமான நிகழ்வுக்காக, அதாவது யாழ் பல்கலைக்கழக வளாகத்தை (அப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகங்களும் Campus களாகவே இருந்தன) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தனது சிரேஷ்ட அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சகிதம் வருகை தந்தார். மறுபக்கத்தில், தமது எதிர்ப்பு முயற்சிகள் அனைத்திலும் தோல்வி கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்" போல தமது அடுத்தகட்ட எதிர்ப்பு நடவடிக்கையை பெரும் ஆராவாரத்துடன் அறிவித்தனர்!

சிறிமாவோவின் வருகையும் தமிழரசின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இரண்டு நாட்களையும் குடா நாட்டுத் தமிழ்மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்தனர். அந்த இரண்டு நாட்களும் பிரதமர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், கடைகள் யாவற்றையும் பூட்ட வேண்டும் எனவும் தெருக்களில் மக்கள் நடமாடாது மயான அமைதி நிலவ வேண்டும் எனவும் கூட்டணியினர் அறிவித்தனர். பிரதமர் சிறிமாவோ யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட பின்னரே மக்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினர். தனது உணர்ச்சியூட்டும் வசனங்களால் தமிழ் மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி விடுவதற்கு தமிழரசு கட்சியின் பிரச்சார ஏடான "சுதந்திரன்" படாத பாடுபட்டது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் உண்ணாவிரதம் ஒன்றையும் இரு நாட்களுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு எதிராக கூட்டணியினர் செய்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டு மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்த அதே வேளையில் இன்னொரு வதந்தியும் வேகமாக பரவியது.

அதாவது உண்ணாவிரதம் இருப்பவர்களை போலீசார் தாக்கப் போகிறார்கள் என்பதே அந்த வதந்தியாகும். அது 1974ல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு குழப்பத்தில் பெற்ற அரசியல் இலாபம் போல், இந்த நிகழ்விலும் அவ்வாறு ஒரு இலாபத்தை உருவாக்கிக் கொள்ள எண்ணிய கூட்டணியினர், போலீஸ் தாக்குதல் பற்றிய வதந்தியை முன்னதாகவே பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க முயன்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் மக்களை பொறுத்தவரையில் இவர்களது கூத்துக்களால் மிகவும் வெறுப்புற்ற நிலையில் உண்மையிலேயே போலீஸ் வந்து "இவர்களுக்கு ரெண்டு போட்டால் என்ன" என்று எண்ணும் நிலையிலேயே இருந்தனர். ஆனால் நடந்த வேடிக்கை என்னவென்றால், சில கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு பரப்பிய இந்த வதந்தியினால் கூட்டணியின் இன்னொரு பகுதியினர் உண்மையிலேயே அச்சத்திற்கு உள்ளாகினர். விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர். அவர்களில் முக்கியமானவர் அப்போதைய கோப்பாய் தொகுதி எம். பி. யாக இருந்த சிந்தனைச் சிற்பி திரு.சி. கதிரவேற்பிள்ளை ஆவார்.

திரு கதிரவேற்பிள்ளை உடனடியாக காரியத்தில் இறங்கினார். தான் மிகவும் மதிப்பு வைத்திருந்த, அத்துடன் சகல தரப்பினரதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து கொண்டிருந்த திரு. மு. கார்த்திகேசன் அவர்களை அழைத்து வரும்படி தனது காரை அனுப்பி வைத்தார். திரு. கார்த்திகேசன் அப்பொழுது பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்தார். கார்த்திகேசன் தனது இலட்சியத்தில் மிகவும் உறுதியான பற்று உள்ளவர் என்பதை அறிந்திருந்த கதிரவேற்பிள்ளை, அவர் தனது காரில் ஏறி வருவதற்கு வசதியாக தனது காரில் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் கூட்டணியின் உதயசூரியன் கொடியையும் கழட்டி வைத்துவிட்டுதான் காரை அனுப்பி வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய முன்றலை கார்த்திகேசன் சென்றடைந்த பொழுது, போலீசார் தங்களை தாக்கி கலைக்காது இருக்க கார்த்திகேசன் அரசாங்க தலைவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் கதிரவேற்பிள்ளையினால் விடுக்கப்பட்டது. கார்த்திகேசன் அவ்வாறான பிரத்தியேக செல்வாக்கு எதுவும் அரசுடன் தனக்கு இல்லை என்பதை விளக்கியதுடன், அரசோ போலீசாரோ உண்ணாவிரதிகள் மீது அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தாம் நம்பவில்லை என்று தமது ஊகத்தை தெரிவித்தார் உண்மையும் பின்னர் அவ்வாறே அமைந்தது. இருந்தும் மாலையில் உண்ணாவிரதம் முடிவடையும்வரை சில கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கார்த்திகேசன் அங்கேயே தங்க நேர்ந்தது.

வாள் ஏந்தி நின்று போர்பிரகடணம் செய்தார் அமிர்தலிங்கம்.

ஆனால் மாலையில் உண்ணாவிரத முடிவில் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம் "சங்கிலி அரசனின் வாள்" என்று சொல்லி ஒரு வாளை ஏந்தி அரசுக்கு எதிரான போர் பிரகடனம் ஒன்றை விடுத்து தன் வீரத்தை வெளிப்படுத்திக்கொண்டார்.

இவை ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பலவித எதிர்ப்புகளையும் மீறி திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி அமைந்திருந்த இடத்தில் திட்டமிட்டவாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மிகவும் கோலாகலமான முறையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் அரசாங்க தலைவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு தூதுவர்களும், உள்ளூர் கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என்போரும் கலந்து கொண்டனர். இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் குடாநாட்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கா சென்ற இடமெங்கும் மக்கள் வீதிகளில் இரு மருங்கிலும் நின்று வரவேற்பு கொடுத்ததை யாழ்ப்பாணம் முன்னொருபோதும் கண்டிருக்கவில்லை.

தமிழ் மக்களின் இந்த செயற்பாடானது தமிழர் விடுதலைக் கூட்டணி இழைத்த மிகப் பெரும் குற்றத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையாக வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதன் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு முயன்று வந்தனர். பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. அயலில் உள்ள மக்களையும் மாணவர்களையும் மோத வைப்பதற்கும் பல முறை முயன்றனர். எல்லாமே தோல்வியில் முடிந்தன.


1977ல் ஜே. ஆர். அரசு பதவிக்கு வந்ததும் அதுவரை பேசி வந்த தீவிர தமிழ் தேசியவாதத்தை கைவிட்டு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் அரசியல் ஒற்றுமைகாண கூட்டணியினர் முயன்றனர். தமிழரசு, காங்கிரஸ் பழைய தலைமைகளின் துரோகத்தனத்துக்கு எதிராக பிற்காலத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் யாழ் பல்கலைக்கழகமே ஊற்றுமூலமாக இருந்தது. பின்னர் இயக்கங்கள் வழிதவறி அராஜக நடவடிக்கைகளில் இறங்கிய பொழுதும் பல்கலைக்கழக சமூகமே அவற்றைத் தட்டிக் கேட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், இயக்க அராஜங்களுக்கு எதிரான ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற மிகச் சரியான திசையில் யாழ் பல்கலைக்கழக சமூகம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டது. புலிகளின் காலத்தில் இப்போராட்ட முனைப்பு மழுங்கடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த இருவகை போராட்டங்களிலும் பல நல்ல மனிதர்களை யாழ். பல்கலைக்கழக சமூகம் இழந்தது. குறிப்பாக கேதீஸ்வரன், ரவிசேகர், ராஜனி திராணகம, செல்வி, விஜிதரன், விமலேஸ்வரன், மனோகரன், தில்லைநாதன், சிவரமணி, தர்மலிங்கம், ரமணி இப்படி எத்தனையோ பேர் தமது வாழ்வை தியாகம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களுக்காக யாழ். பல்கலைக்கழக சமூகம் சிந்திய செந்நீர் துளிகள்.

இத்தகைய பாரம்பரியத்தை கொண்ட யாழ். பல்கலைக்கழகம் இன்று பகிடிவதை என்கின்ற அநாகரிகமான செயல்களிலும், ஜனநாயக செயற்பாடுகள், கருத்து சுதந்திரம் என்பவற்றை மறுதலிக்கும் அரசியல் செயல்பாடுகளில் தன்னை வீழ்த்தி இருப்பது கவலைக்குரியது. இதை தடுத்து நிறுத்தி பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இடையூறின்றித் தொடர மீண்டும் களத்தில் இறங்க வேண்டியவர்கள் தமிழ் பொது மக்களும் முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ் கல்விமான்களுமேயாவர்.

இன்று தமிழ் மக்கள் ஒருபுறம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தால் இன உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன நிலைமை, இன்னொரு பக்கத்தில் விடுதலைக்கு போராட புறப்பட்டவர்களிடம் இருந்து அடிப்படை மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இழந்துள்ள அவலம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஒரு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட முடியாது. இரண்டு கண்களையும் திறந்து, இரண்டு கைகளையும் வீசி, இரண்டு கால்கலாலும் நடந்து முன்னைய காலங்களைப் போல் முழு மனிதனாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com