Tuesday, June 13, 2023

வெந்தும் தணியாத மோடுகள். ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

புலிகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். 'அண்ணை, அடிச்சுப் பறிப்பார்' என்ற கனவில் யாழ்ப்பாணிகள் திளைத்திருந்த காலம். புலிகள் கட்டாயமாக ஆட் சேர்க்கிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதை ரொறன்ரோவில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு கனடாவில் பிரபலமான அரசியல்வாதியான முன்னாள் ஒன்ராறியோ மாநில முதல்வர் பொப் ரேயும் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் சமாதான காலத்தில் வன்னிக்குப் போய், புலிகளோடு பெரும் தொடர்பாடலைச் செய்திருந்தவர். அவர் சிறப்புப் பேச்சாளராக இருந்த அந்தக் கூட்டத்தில், இன்றைக்கு கனடாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கரி ஆனந்தசங்கரி தலைமையில், புலி ஆதரவாளர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.

ஒரு கனடிய அரசியல்வாதியை கனடாவில் பேசுவதற்கு அனுமதி மறுக்க முயலும் அளவுக்கு புலி வால்களின் அறிவு இருந்தது. அந்தச் சிறார்கள் தாங்களாகவே விரும்பிச் சேர்கிறார்கள் என்ற புலிப் பொய்யை உண்மை ஆதாரங்களோடு இந்த அறிக்கை மறுக்கிறது என்பது இவர்களுக்குப் பிரச்சனை.

இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாகப் போயிருந்த நான் அதைப் பற்றி தாயகம் இணையத்தளத்தில் எழுதியிருந்தேன். இது தான் புலிகளுக்கு கனடாவில் அடிக்கப்படும் கடைசி ஆணி என்று. அதைப் போலவே, கொஞ்ச நாட்களில் கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்டார்கள். அதன் பின்னால் புலிகளின் அழிவு படிப்படியாகவே ஆரம்பித்தது.

முட்டாள் யாழ்ப்பாணிகளுக்கு தங்களின் யாழ்ப்பாணித் தேச வழமைச் சட்டம் உலகம் எல்லாம் செல்லும் என்ற நினைப்பு. கனடிய பெரும் அரசியல்வாதியை கனடாவில் பேச அனுமதிக்க மாட்டோம் என்று குழப்பம் விளைவித்தது, யாழ்ப்பாணிகள் மந்தை முட்டாள்கள் மட்டும் அல்ல, அவர்களை உசுப்பேத்திய படித்த முட்டாள்களும் தான்.

பொய்களைச் சொல்லி புலிகளுக்கு முட்டுக் கொடுக்க அங்கே நின்றவர்களில், ஒரு வணக்கத்துக்குரிய குருவானவரும் இந்தச் சபை குழப்பலில் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல், பங்காளராக இருக்கும் அளவுக்குத் தான் அன்று நிலைமை இருந்தது. குறைந்த பட்சம் உங்கள் கருத்தைப் பண்பாகச் சொல்லுங்கள் என்றாவது அவர் வழி நடத்தவில்லை. (அப்படி நடத்தியிருந்தால், இந்த மூர்க்கர் கூட்டம் கேட்டிருக்குமா? என்பது பெரும் கேள்வி!) அண்ணை துவக்கைக் காட்டிற மாதிரி, வெருட்டிக் காரியம் சாதிக்கலாம் என்பதைத் தவிர, வேறு எந்தச் சிந்தனையும் அவர்களுக்கு இருக்கவில்லை.

'அண்ணையின் துவக்கை மீறி கருத்துச் சுதந்திரம் இல்லை' என்ற யாழ்ப்பாணிகளின் சிந்தனை இன்றைக்கு இந்த அறப் படிச்ச யாழ்ப்பாணிகளைக் கூழ்ப்பானைக்குள் தள்ளினாலும், இன்றைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான மதிப்பை புலிவால்கள் உணர்ந்ததில்லை. இந்த முட்டாள் மந்தைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களும், அவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் ஊடகக் கோமாளித் தரகர்களும், இந்த மந்தைகள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலோ, இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு இனத்தின் மீட்சிக்கு ஆபத்தானதாகவே இருக்கும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதையோ விரும்புவதில்லை.

அவர்களுக்குப் புத்தி வந்தால் தாங்கள் பிழைப்பு நடத்த முடியாது என்ற, தங்களின் சுயலாபத்திற்காகத் தான் இந்த அயோக்கியர்கள் தங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்பதை இந்த மந்தைகள் உணராததை, அங்கே குழப்பம் பண்ணியவரை பாராளுமன்றம் அனுப்பினால் ஈழம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் 'தமிழன் தமிழனுக்கு வோட் போட்டதை' வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

புலிகள் இருந்த காலத்திலேயே, தாயகம் வெளிவந்த போது, அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும், இந்த புலிவால் முட்டாள்களின் கோமாளித் தனங்களும் நாங்கள் கண்டு வந்தவை தான். தலைமை தொடங்கி வால்கள் வரையிலான இந்த முட்டாள் தனத்தினால் முள்ளிவாய்க்காலில் மண் கவ்விய பின்னாலும், இவர்கள் தங்கள் கோமாளி நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதும் இல்லை.

இன்றைக்கும் கனடாவில் மாவீரர் தின, முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் மாதங்களில் எந்தக் கலைநிகழ்ச்சி நடந்தாலும், அதை இந்த மந்தைக் கூட்டத்திற்கு உசுப்பேத்தி குழப்புவதில் இந்த அயோக்கியர்கள் பின்நிற்பதேயில்லை. அதற்கான காரணம், இழப்பை நினைவு கூருவதல்ல. பிழைப்பு நடத்த முடியாது என்பது தான். அந்த நேரம் இந்தியக் கலைஞர்களையும், திரைப்படங்களையும் இங்கே காட்டி பணம் சம்பாதித்தவர்கள் புலிகளுக்குப் பணம் சேர்த்த அயோக்கியர்களே. இவர்கள் இந்த நிகழ்ச்சிகளை குழப்புவதின் முழு நோக்கமுமே, அங்கே கூட்டம் சேர்ந்தால் இங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பது மட்டும் தான். மாவீர தினத்தின் போது, கட்டாயப்படுத்திக் கடைகளைப் பூட்ட வைத்து, வர்த்தகர்களின் பிழைப்பில் மண் போடுவதன் காரணமே, அன்று வேறெங்கும் போகாமல் வந்து சேரும் மந்தைக் கூட்டத்திடம் றிசைக்கிள் மாலைகளையும், விளக்குகளையும் விற்றுப் பணம் பண்ணுவது தான்.

இப்படி யாழ்ப்பாணிகளின் மனவியாதி அவ்வப்போது கொண்டெழும்பும். இதனால் தான் இலங்கைக்கு எந்த இந்திய கலைஞர்கள் போனாலும், 'இரத்தம் காய முன்னம் கொண்டாட்டமா?' என்று யாராவது ஒரு முட்டாள் குரங்கு பற்ற வைத்தவுடன் தீப் பற்றுகிறது. முள்ளிவாய்க்கால் மண் கவ்வலின் பின்னாலும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இவர்களை உசுப்பேத்தும் அயோக்கியர்கள் மகிந்த முதல் இலங்கை அரசு வரைக்கும் டீல் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த மந்தைக் கூட்டம் உணர்ந்து கொள்வதில்லை.

இலங்கைப் பிரச்சனை குறித்து எடுக்கப்பட்ட படமான Demons in Paradise படம் புலிகளை விமர்சிக்கிறது என்று அறிந்த கேள்விச்செவியர்கள் அந்தப் படம் திரையிடப்படுவதற்கு ரொறன்ரோ முதல் யாழ்ப்பாணம் வரைக்கும் பெரும் களேபரம் பண்ணினார்கள். அதைத் தடை செய்ததன் மூலம் சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்திய புளகாங்கிதம் அடைந்தார்கள்.

யாழ்ப்பாணிகளுக்கு ஒரு கதை உண்டு. தாங்களே சொல்லி தாங்களே நம்புகிற கதை. மனநோய்க் கூட்டம் நம்பி விட்டுப் போகட்டுமே என்று நீங்கள் அமைதியாக இருக்கவும் முடியாது. அதை நீங்கள் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கும். அதை நம்ப மறுத்தால் உங்களைத் துரோகியாக்கும். தேசியத் தலைவரைப் பார்த்து சர்வதேசம் திணறுகிறது என்று சொன்ன அதே யாழ்ப்பாணி தான் இன்றைக்கும் 47 நாடுகள் சதி செய்து போராட்டத்தைத் தோற்கடித்தது என்கிறான். இவனுக்கு அந்தந்த நேரத்தில் என்ன பொய் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ, அது எவ்வளவு முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், அதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும்... அகதிக் கோரிக்கைக்குச் சொல்லும் கதை மாதிரி!

அந்தக் கதையில் குறைந்தபட்ச உண்மையோ, தர்க்க நியாயமோ இருக்க வேண்டிய அவசியமேயில்லை., 'உங்களுக்குப் புலிகள் பயங்கரவாதிகளாக இருக்கலாம், எங்களுக்கு அவர்கள் விடுதலைப் போராளிகள்' என்று இன்றைக்கும் இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சர்வதேசம் நம்புமா? அட, குறைந்த பட்சம் நம்பும் அளவுக்காவது சொல்ல வேண்டாமா? என்ற கவலையெல்லாம் யாழ்ப்பாணிக்குக் கிடையாது. நான் சொல்றன், நீ நம்பு அவ்வளவு தான்.

அண்ணை சமாந்தரமான அரசாங்கம் நடத்துகிறார், விமானப்படை வைத்திருக்கிறார், சமாதானப் பேச்சுவார்த்தை என்று எல்லாரையும் பேய்க்காட்டி, சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, 'தலைவர் திட்டம் வைச்சிருக்கிறார், சாமான் கொண்டு வந்து அடிக்கப் போகிறார்' என்று நம்பிக் கொண்டு, அதை நாங்களும் நம்ப வேண்டும் என்று அடம் பிடித்தவர்கள் தான் இந்த யாழ்ப்பாணிகள்.

Demons in Paradise ஐ தடுத்ததன் மூலம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த பெருமை. இதைப் போல, புதியவன் இராசையாவின் ஒற்றைப்பனைமரம் வெளியிடப்பட்ட போதும், அதைத் தடை செய்ய வேண்டும் என்று அதே 'அண்ணையின்ரை துவக்குச்' சிந்தனையோடு கிளம்பினார்கள். அவ்வாறானதொரு படம் வெளியாவதை, தமிழ் தேசிய உணர்வாள பிலிம் காட்டல்காரர்கள் கூட எதிர்ப்புத் தெரிவித்ததுதான் அந்தக் கோமாளித் தனத்தின் உச்சம்.

அண்ணையின்ரை துவக்குக்குப் பிறகு, ஒரு கமெராவை வைச்சு ஈழம் எடுக்கலாம் என்ற நினைப்பில் தான் இந்த பிலிம் மேக்கர்ஸ் உள்ளார்கள். வன்னியில் புலிகளுக்கு வால் பிடித்து பிலிம் மேக்கர்ஸ் ஆன இந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் இப்போது தணிக்கையாளர்களாகக் கூட மாறியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு இன்னொரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிந்தனை இல்லாமல், தாங்களே இந்தப் படத்திற்கு எதிராக 'உருக்' கொண்டு எழும்பியது தான் இங்கே ஹைலைட்.

இந்த கோமாளிகளின் எதிர்ப்பையும் மீறி ஒற்றைப் பனைமரம் வெற்றிகரமாக இங்கே திரையிடப்பட்டது. முன்பு வன்னியின் பின்னணியில் சேட்டைகள் பண்ணியவர்கள் எல்லாம் கடிக்க முடியாத வெறும் குலைநாய்களாகவே மாறி விட்டிருந்தார்கள். தாங்கள் ஏவி விட்ட பில்லி சூனியப் பேய் திரும்பி வந்து இரத்தம் தா என்று மிரட்டுவது போல, தற்போது ஒரு சுவாரஷ்யம் நிகழ்ந்திருக்கிறது. மதி சுதா இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தைப் புலிகள் உலகெங்கும் 'தடை செய்திருக்கிறார்கள்!'. இலங்கையில் திரையிடப்பட்டு பாராட்டுகள் பெற்ற இந்தப் படத்தை திடீரென்று 'புலம் பெயர் தேசமெங்கும் திரையிடுவதில்லை என்ற முடிவை, தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்புகள் எடுத்துள்ளன'.

அந்த அமைப்புகள் எவை என்று இந்த யாழ்ப்பாணியும் கேட்கப் போவதில்லை. யாழ்ப்பாணியின் பகுத்தறிவு தமிழ்த் தேசிய உணர்வாளருக்கும் துரோகிக்கும் இடையிலானது மட்டும்தான். அதற்கு அப்பால் எதையும் பகுத்தறிந்து கொள்ள வேண்டிய தேவை யாழ்ப்பாணிக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்தது யாரோ தற்குறி ஒன்று. இந்த தற்குறியும் இந்தப் படத்தால் தான் லாபம் பெறலாம் என்று முயன்று அது கை கூடாததால் தான் இப்படித் தமிழ்த் தேசிய வேடம் போட்டதாகத் தான் தெரிய வருகிறது.

இன்றைய சூழலில் எந்தத் தற்குறியும் யாரையும் துரோகி ஆக்க முடியும். ஒரு காலத்தில் எங்களைப் போன்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்திய எல்லாத் தற்குறிகளுமே, மாட்டுக்கு குறி சுட்ட மாதிரி, தங்களுக்குள்ளேயே துரோகிகளாகக் குறி சுடப்பட்டு, கட்டாந்தரைகளிலும் காடுமேடுகளிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி, எந்த ஒரு அயோக்கியத் தற்குறியும் கிளம்பி வந்து யாரையும் துரோகி ஆக்கலாம். திரைப்படத்தைத் தடை செய்யலாம். தன்னை ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளராகப் படம் காட்டினாலே போதும். இந்த மந்தைக்கூட்டம் தானாகவே உசுப்பேறும். அதில் உண்மை இருக்குமா? அல்லது அந்தப் படத்தைப் பார்த்த பின்பு உண்மையை அறிந்து விட்டாவது கருத்துச் சொல்வோமே? என்று கூட நினைப்பதில்லை. வெறும் கேள்விச் செவிச் சமூகம் இது. இதை வைத்து எந்த அயோக்கியனும் பிழைப்பு நடத்தலாம். இன்றைய நிலை இது தான்.

இந்தக் கேவலத்தில், தங்களைப் பிலிம் மேக்கர்ஸ் என்று சொல்லிப் பீற்றிக் கொள்கிறவர்களும் கருத்துச் சுதந்திர மறுப்பும் தணிக்கையும் தடையும் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது தான் பெரும் சிரிப்புக்குரிய விடயம்.

தமிழ்க் குறும்புப்பட பிலிம் மேக்கரும்,Tamil avant garde cinema activist ம் ஆன ஞானதாஸ் காசிநாதர் சொன்ன கருத்துத் தான் என்னைச் சிரிக்க வைத்தது. இந்த self-proclaimed avant garde cinema activist அப்படி தமிழீழ சினிமாவில் என்ன புதுப் புரட்சி பண்ணியிருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் தான் ஒரு சில புலி வால்களுக்கான தற்போதைய புத்திஜீவி. அவர்களுடைய தகுதிக்கு இவரே போறும்!

'ஈழம் சினிமா என்பது இலங்கை அரசின் தமிழின அடக்குமுறைக் கொள்கைகளுக்கும் எமது மக்களின் சுதந்திர வேட்கைக்கும் இடையிலான ஒரு போராட்டம் ஆகும்.'. ஆக, அண்ணை துவக்கை வைச்சுக் கொண்டும், வான் படை, ஈரூடகப் படை எல்லாம் வைச்சு அடிச்சுப் பறிக்கப் போய் முள்ளிவாய்க்காலில் மண் கவ்விய பின்னாலும், ஒரு கொஞ்சப் பிலிம் மேக்கர்கள் செல்போன் கமெராவை வைச்சுக் கொண்டு, ஈழத்தைப் படைச்சுப் பறிக்கப் போகிறார்கள்.

'தேர்தல் அரசியல் செய்பவர்கள் மட்டுமில்லை, வெகுஜன ஆதரவு வேண்டுபவர்கள் எல்லாரும் இனவழிப்புக்கு எதிராகவும், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகவும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அந்த நிலையை உருவாக்கியது தான் எமது போராட்டத்தின் வெற்றி.... (இதெல்லாம் ஒரு நாடகம் தானே!?) ஓம்... It is a theatre, ஆற்றுகை. இந்த ஆற்றுகைகள் தொடர்ந்து நடக்க வேண்டும். நடக்கும்... இந்த ஆற்றுகைகள் எமது விடுதலைக்கான வேட்கையை, வெறியை தலைமுறை கடந்தும் கடத்தும். எமது அடுத்தடுத்த தலைமுறைகளின் நினைவிலி மனதில் பதிய வைக்கும்... அது தான் அந்த நாடகத்தின் பலம்' என்று இந்த பிலிம் மேக்கர் வேறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இவர் சொன்னது எதற்கு?
தற்போது புத்தவிகாரை எதிர்ப்பு நாடகத்தில் கஜேந்திரனின் கூத்துப் பற்றி. அதாவது, நீங்கள் உண்மையாக இருக்கத் தேவையில்லை. நடித்தால் போதும். இது தான் இவர்கள் சொல்வது. தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்பும் சமூகத்திற்கு, அது கேட்க விரும்பும் பொய்களைச் சொல்வதற்கு எப்போதும் அயோக்கியர்கள் குறைவில்லாமலேயே கிடைக்கிறார்கள்.

விசில் அடிப்புக்காய் நடிக்கும் ஈழத்துச் சிவாஜி சார் நடிகர் திலகங்களுக்கு குறையா இருக்கப் போகிறது? இந்தப் பொய்களும் நாடகமும் நடிப்பும் அந்த மந்தைக் கூட்டத்தை எப்போதும் கனவுலகில் வைத்திருக்கும். அந்த மந்தைக் கூட்டத்தை தனது நடிப்பின் மூலம் படம் காட்டி ஏய்த்துப் பிழைப்பு நடத்த இவர் போன்ற குறும்புப்படப் பிலிம் மேக்கர்ஸ்க்கும் என்றைக்கும் குறைவும் இருக்காது.

இது அமைப்புகளுக்கும் பொருந்தும். தீபா மேத்தாவின் Funny Boy படம் திரையிடப்பட்ட போது, அது ஈழத்தமிழரைப் பற்றியும் அதன் போராட்டம் பற்றியும் கொச்சைப்படுத்துகிறது என்று புலி வால் அமைப்புக் கிளம்பியிருந்தது. அது ஒரு வெறும் நாடக நடிப்புத் தான். அதே அமைப்பு துரோகிகள் எனக் குறி சுடப்பட்ட கூட்டமைப்புடனும் சிங்கள அரசுடனும் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். கனடியப் புலிவால் அமைப்பின் மீதான இலங்கை அரசின் தடை நீக்கம் தற்செயலானது என்று நம்புவது யாழ்ப்பாணி முட்டாளாகத் தான் இருக்கும்.

ஆனால், ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் பற்றி ஆட்சேபம் தெரிவிக்க பல வழிகள் இருக்க, தங்களது ஆட்பலத்தைக் காட்டி மிரட்டும் இவர்களுக்கு...
நானாக இருந்தால் நடுவிரலைக் காட்டியிருப்பேன் என்று பேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.
யார்ரா நீங்கள்லாம்? என்று!

அதைப் பார்த்த, அந்த புலிவால் கூட்டத்தின் வாலில் பிழைப்புக்காக தொங்கி, தரகு மாமா வேலை பார்க்கும் கோமாளி ஒன்று, புலிவால்களைக் குஷிப்படுத்த என்னைப் பற்றி பேஸ்புக்கில் குறும்பு பண்ணியிருந்தது. தங்களைக் கோமாளிகளாக்கியே தீருவது என்று அடம் பிடிக்கும் இந்த குறும்புப் பட பிலிம் மேக்கர்ஸின் நடிப்பும், நாடகமும் பற்றி நான் கணக்கெடுப்பதேயில்லை.

ஆனால், இது எங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஆபத்தான விளைவுகள் பற்றி முன் கூட்டிய தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டி இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால், துப்பாக்கி வைத்திருந்த பிரபாகரன் என்ற தற்குறியை பெரும் பிம்பமாகக் கட்டி எழுப்புவதை, யாழ்ப்பாணத்து பிராங்கன்ஸ்டைன் என்று வர்ணித்து, கடைசியில் புலி தன்னையும் அழித்து யாழ்ப்பாணிகளையும் அழிக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தேன்.

அது என் கண் முன்னாலேயே, எங்கள் வாழ்நாளிலேயே நிகழ்ந்தது. இன்றைக்கும் ஒவ்வொரு தற்குறிகள் ஆங்காங்கே தோன்றி, தன்னையும் ஒரு தேசிக்காய் தலைவர் என்ற நினைப்பில், உசுப்பேத்தும் நடவடிக்கைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது வெறும் திரைப்படத் தடையுடனோ, கலைஞர்கள் வருகைக்கான எதிர்ப்புடனோ நிற்கப் போவதில்லை. தன்னை அந்தப்படத்தை வினியோகித்து லாபம் பார்க்க விடவில்லை என்றதும் ஒரு தற்குறி தோன்றி, அமைப்புகள் கூடி முடிவெடுத்ததாக ஒரு கதையை அவிழ்த்து விட முடிகிறது. அதை இந்தச் சமூகம் கேள்விக்குள்ளாக்குவதுமில்லை. அதற்குப் பொறுப்பான ஊடகங்கள் அதை அம்பலப்படுத்துவதுமில்லை.

இதைப் போல, இலங்கையின் இனப்பிரச்சனை எந்த சிறு வழியில் கூட தீர்வு பெற்று விடக் கூடாது, அங்கே அது நீறு பூத்த நெருப்பாக இருந்தால் தான் இங்கே 'அடுத்த கட்ட நடவடிக்கை, முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புலன் பெயர்ந்தவர்களிடம் தலைவர் கையளித்த போராட்டம்' என்றெல்லாம் உசுப்பேத்திப் பிழைப்பு நடத்த முடியும் என்று, போராட்டத்துக்கான பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட கூட்டம் தொடர்ந்தும் பணத்தைக் கபளீகரம் பண்ண வழிகள் தேடிக் கொண்டிருக்கிறது.

அது அங்கே எந்த விதமான தீர்வு கிடைக்க விரும்பாதது மட்டுமல்ல, அங்கே நாடகம் காட்டி நடிக்கும் தற்குறிகளின் பைனான்சியர்களாக இருந்து அங்கே பிரச்சனைகளை தொடர்ந்தும் உருவாக்க வழி கோலிக் கொண்டே இருக்கும்.

ஒரு இனத்தின் அழிவில் தாங்கள் தலைவர்களாகவும் லாபம் பார்க்கவும் துடிக்கும் இந்த அயோக்கியர்கள், அவர்களுக்கு தரகர் மாமா வேலை பார்க்கும் கோமாளிகள், ஊளையிடலாளர்கள், அரசியல் புலநாய்வாலர்கள், இவ்வாறு அடிக்கடி கிளம்பி உசுப்பேத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளத் தற்குறிகளை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தா விட்டால், அனாவசியமாக உயிரைக் கொடுத்த கரும்புலிகள் மாதிரி, இது ஒரு சமூகத்தின் கூட்டுத் தற்கொடையாகத் தான் முடியும்.

நன்றி
அபத்தம் ஜூன், 2023

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com