Tuesday, May 9, 2023

“மாய”க் கதையாடல் கண்ணன். கற்சுறா

உண்மையில் இந்தப் பக்கத்தினை எழுதத் தொடங்கு முன் நான் நீண்ட பெரும் மூச்சுக்களை விடவேண்டியதாக இருந்தது. இடையிடையே சிரிப்புத் தோன்றினாலும் எழுதத் தொடங்கும் வரை மண்டை கனத்தது. விறைத்தது. இதனை எழுதுவதற்காக நான் நமது யுத்தகாலத்தில் சேகரித்து வைத்த கட்டுரைகளில் சிலவற்றை வாசிக்க முனைந்தேன். அதனால் ஏற்பட்ட உடல் உள மாற்றமே இது.

கடந்த ”ஈழப் போராட்ட காலம்” என்று அடையாளம் கொண்ட காலம் முழுவதும் நம்மிடையே இருந்த ஒவ்வொரு தற்குறிகளும் தமக்குச் சார்பாகக் கதை சொல்லிக் கதை சொல்லி வந்ததில் நம் அனைவரிடமும் ஏராளம் ஏராளம் கதைகளுள்ளது. நீங்களும் அறிந்த கதைகளை எழுதுங்கள்.

இவ்வாறான தற்குறிகள் சொன்ன கதைகளையே ஒவ்வொரு யுத்தவெறியர்களும் தமது பத்திரிகைகளில் அவற்றை முதன்மைப்படுத்தி வெளியிட்டார்கள். இந்தத் தற்குறிகளும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் “முதன்மை”க்காகவும் பணத்திற்காகவும் எந்தப் பித்தலாட்டக் கதைகளையும் ஆய்வின் பெயரில் அறுதியிடத் தொடங்கினார்கள். அதுதான் காலாகாலமும் ஈழத்தில் நடந்தது. இன்றுவரை நடக்கிறது.

இவ்வாறு நமக்கிடையே இருந்த தற்குறி கலைஞர்களும் ஆய்வாளர்களும் சனத்தின் மீது மயக்கச் சொற்களால் வீசி எறிந்த நஞ்சினைப் பிரித்து அடையாளம் காட்டப் பெருங்காலம் தேவை. நமக்குக்கிடைத்த அலைவுக்காலம் அவற்றை முழுமையாகப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்க விடவில்லை. கிடைத்த தரவுகளையும் பல்வேறு இடங்களில் கைவிட்டுக் கைவிட்டு போகத்தான் நேர்ந்தது.

ஒரு பொது நோக்காகவேனும் நம் வாழ்காலத்தைப் பதிவிடும் நோக்கத்தோடு யாருமே எதையும் சேகரித்து வைக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தமக்கு எதிரானதைத் தெருவில் போட்டு நெருப்பிட்டுக் கொழுத்திவிடும் மனநிலை கொண்டவர்களாகவே வாழப் பழக்கப்பட்டிருந்தார்கள். நமது சமூகத்தில் கிடைத்த இடங்களிலெல்லாம் அழிக்கப்பட்ட ஆவணங்கள் அளவற்றவை. சமூகத்தில் தமது நிலை குலைந்த பொழுது தமது ஆவணங்களைத் தாமே அழித்துவிடும் தற்கொலை மனம் கொண்ட சமூகமாக நமது சமூகம் வழிநடத்தப்பட்டதும் இதற்கு ஒரு முதன்மைக் காரணம்.

ஈழத் தெருக்களில் இன்று வாழும், குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்களும் தந்தைகளும் மட்டுமன்றிப் அந்தப் பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகளும் ஒரு வாய்ச் சோற்றைக் கண்ணீரோடு சேர்த்து உண்ணவைத்த கொடூர நிலைக்குக் கொண்டு வந்து விட்டவர்களில் பெரும் பங்கைச் சுமக்க வேண்டியவர்கள் நமது எழுத்தாளப் பெருந்தகைகள். இவர்கள் காட்டிய அம்புக்குறிகள்தான் பலரது கண்ணீருக்குக் காரணமாகியது.


இந்தக் காரணங்களை நான் தொடர்ந்து அடையாளம் காட்டி எழுதிவருகிறேன். இங்கே எழுதுவதில், இந்தக் கட்டுரையில், நாம் கவிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் அதற்கும் மேலாய் அன்புடன் “நிலா” என்றும் அழைக்கும் நிலாந்தன் அவர்களது எழுத்துக்கள் குறித்தே நான் அடையாளம் காட்டுகிறேன்.

வெறுமனே குலைத்துக் கலைத்து வரும் நாயிற்கு நின்று ஒரு கல்லை எடுத்து எறிவதினூடாக நாயைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று தோன்றும் போது, எறிய வேண்டிய கல் இது. அதை எழுத வேண்டிய சொல் என்று நினைத்துத் தான் நிலாந்தன் குறித்து எழுதுகிறேன்.

“கடலம்மா… நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
‘குமுதினி’ குருதி வடிய வந்தாள்.”


என்று நெடுந்தீவுக் கடலைப்பற்றி எழுதுவதினூடாக குமுதினிப் படுகொலையைப் பற்றி எழுதிய ஆரம்பகால நிலாந்தன் கடைசியில் நந்திக்கடலைப்பற்றி எழுதிக் கஞ்சிப்பாடலாய் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எழுதியிருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

“இதையருந்துங்கள்
பாலற்றது
பசியாற்றாது
உலைகொதிக்காக்
காலமொன்றின்
பசியிது தாகமுமிது.

பாலற்ற கடற்கரையில்
பசித்திருந்தாய் நாடே
இதையருந்து.”


…. என்றெழுதி முடிவில்

“உலகமே அவர்களைக் கைவிட்டது
உதவிக்கு யாரும் வராத
ஒரு யுக முடிவில்”
பல தலைமுறைகளுக்காகச்
சிந்தப்பட்ட
கடைசித்துளி
ரத்தமிது.”


என்று சொல்லிப் போகிறார்.

இவ்வாறு உசுப்பேத்தி எல்லாம் எழுதி முடித்து அனைத்திற்கும் மொத்தமாய்ப் பாடை கட்டிவிட்டு கடைசியில் “உதவிக்கு யாரும் வராத யுகம் முடிவில் உலகமே அவர்களைக் கைவிட்டது” என்று அவர் எழுதும் கழிவிரக்கக் கவிதையில் எனக்கு எள்ளளவும் நாட்டமில்லை. யுத்த முடிவின் பின் பேசும் நிலாந்தனின் எந்தக் கருத்துக்கள் குறித்தும் எனக்குப் பெரிதும் கரிசனையில்லை. பெரிதும் கரிசனையில்லை என்று சொல்வதை விடக் கரிசனையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அது தாம் கடந்து மிதந்து வந்த களிசடைத் தனத்தை கடலிலேயே கழுவித் தொலைக்க எடுக்கும் எத்தனங்கள். அவரவர் தாம் பட்டிருந்த பாடுகளின் படி கடக்க முனையும் வேளை, நிலாந்தனுக்கு அதுவும்கூட முடியாதிருக்கிறது. ஏனெனில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய அவலக் கதைகளுக்கும் அந்தக் கதைகளின் பின்னிருக்கும் கஞ்சிக் கதைகளுக்கும் அவரது எழுத்துக்களும் காரணமாக இருந்த கதையை நீங்கள் யாருமே கவனியாது போகலாம். நாளைய வரலாறு அதனைக் கவனியாது விட்டுப் போகவே போகாது. அவரை மன்னித்துப் போகவே போகாது. அந்தச் சனத்தின் அழுகையும் கண்ணீரும் அவர்கையினை நனைத்துச் செல்வதனை அன்றாடம் அவர் அறிந்து கொண்டுதான் இருக்கிறார். அதன் பிறகும் அவர் அறியவில்லை என்றே சொல்வாராயின் அவர் மானிடரே அல்ல.

ஜோர்ஜ் குருசேவ் அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “முட்டாள்த் தனத்திற்குப் புத்திசாலித்தனமான விளக்கம் கொடுப்பவர்கள்” என்பது. அந்த வார்த்தைக்குரிய சிறப்பான அடையாளங்களில் ஒருவர்தான் நிலாந்தன். இவரைப் போல் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி வருங்காலங்களில் கணக்கிடலாம்.

தாங்கள் பிடித்திருந்த பொய்யின் அழுங்குப்பிடித் தனத்திலிருந்து பொய்யுறை கழன்ற போது கையை அவர்களால் வெளிப்படையாகக் கைவிடவோ, பிடியிலிருந்து உதறிவிடவோ அவர்களால் முடியாதிருக்கிறது. அப்படித்தான் இருக்கும். அவர்கள் பற்றியிருந்த பிடி அப்படியானது. அவர்கள் கடந்த காலம் முழுவதும் யாருக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்களோ அவர்களால் திடீரெனத் தாங்கள் கைவிடப்பட்டுவிடுவோம் என நிலாந்தன் போன்றவர்கள் அஞ்சுவதாலேயே இன்றுகூட உண்மையைப் பேச நினைப்பதில்லை.

நிலாந்தனுக்கு போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அனைத்து விடயங்களைப் பற்றியான முழு உண்மைகளும் எப்பொழுதும் நன்கு தெரியும். நிலாந்தனுக்கு மட்டுமல்ல நிலாந்தன் போன்றவர்களுக்கும் நன்கு தெரியும். அவற்றை அறியாதிருக்க அவர்கள் முட்டாள்களல்ல. அறிந்தும் முட்டாள்கள் போல நடிப்பவர்கள். தமது இருப்பிற்கும் வாழ்விற்குமாக அவர்கள் பொய்சொல்லத் தொடங்குகிறார்கள். இந்தப் பொய் ஒரு இனத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிவிடும் என்ற எந்த அறிவும் அவர்களை ஒருபொழுதிலும் இடையூறு செய்வதில்லை என்பதுதான் மிக மிக ஆபத்தானது.

ஒரு முதலாளி உணவுக்குள் கல்லையும் மண்ணையும் நஞ்சையும் கலப்பதினூடாக ஒரு சமூகத்தில் ஏற்படும் அவலத்தைக் கணக்கிடாது எவ்வாறு தன்னுடைய இலாபத்தை மட்டும் கணக்கிடத் துடிக்கிறானோ அந்த முதலாளி என்பவனுக்கும் நிலாந்தன் போன்ற ஆய்வாளர்களுக்கும் செய்யும் அயோக்கியத் தனத்தில் ஒருவித வேறுபாடும் இல்லை.

ரொரண்டோவில் ஒரு நிகழ்வில் நிலாந்தன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சபையைப் பார்த்து “உங்கள் அனைவரிடமும் பல்வேறு கதைகள் இருக்கும். உங்கள் உறவுகள் குறித்த கதைகள் இருக்கும். அப்படியான கதைகளை நீங்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்வு முழுதாகப் பதிவு செய்யப்படும்.” என்பதாகப் பேசிக் கொண்டிருந்தார். நிகழ்வின் முடிவில், உரையாடல் நேரத்தில், அவரை நோக்கி, எல்லாம் சரி நிலாந்தன், உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை நீங்கள் எப்போது வெளியில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், தான் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் கோழி முட்டையை அடை காப்பது போல் காத்து வருகிறேன். சந்தர்ப்பம் வரும் போது அது உயிராகும் என்றார். நிலாந்தனுடைய இந்தச் சுத்துமாத்துப் பேச்சுத்தான் பலருக்கு அவரின் உண்மையான முகத்தைக் கண்டடையத் தடையாக இருப்பது. அறிவார்ந்துதானே பேசுகிறார் என்பதைப் போல் பாவனையிடும் அவரைக் கண்டு கொள்ள, சாதராண “தமிழ்த் தேசிய மனநிலை”யிலுள்ள தமிழ் வெறிகொண்டலையும் மனநோயாளர்களுக்கு எந்தச் சந்தர்ப்பங்களும் கிடைக்கப் போதில்லை.

இன்றைய சூழலில் ஒருவித உணர்ச்சி கொந்தளிக்க எழுதிவரும் அவரைப் புதிய காசியானந்தனாக நாம் உருவகப்படுத்திவிட அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. அவ்வாறான நிலையில் தான் அவரது இருப்பு இன்றும் தமிழ்த்தேசிய மனநோயாளிகளுக்குள் நிலைத்து நிற்கிறது. ஆனால் பல இடங்களில் அந்த எழுத்துக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் நிலையையும் தாண்டி சமூகத்தைச் சீரழிக்கக் காரணமாய் இருந்திருக்கின்றன.

அவர் புலம்பெயர் தமிழர்களுக்காக புலம்பெயர் புலிகளது ஊடகங்களில் பதிவு செய்த சில பதிவுகளை ஊடறுத்துக் காட்டுவதினூடாக அவற்றைப் புரியவைக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

2003 யூன் 6ந்திகதி வெளியான ரொரண்டோ “உலகத்தமிழர்” பத்திரிகையில் “ரணில் விக்கிரமசிங்க நழுவத் தொடங்கிவிட்டாரா” என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதில்

சமாதானத் தூதுவர்களில் ஒருவரும் வன்னிக்கு வந்து சென்றவருமான கெல்ஹெசன் அவர்களிடம் “புலிகளின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டபோது, நான் யாரையும் ஆதரிக்கவில்லை… யாரையும் எதிர்க்கவும் இல்லை. நான் இப்பொழுதும் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன். என்று செகஸ்லோவாக்கிய ஜனாதிபதியின் கூற்றைச் சொல்லி அடையாளம் காட்டியதை எழுதுகிறார்.

ரோக்கியோ மாநாட்டில் புலிகளை அழைக்காத ரணில் அரசினை விமர்சித்து எழுதிய கட்டுரை அது.

அதில் “கெல்ஹெசன் இப்பொழுது நம்பிக்கையோடுதான் இருக்கிறாரோ இல்லையோ தொயிவில்லை. ஆனால் புலிகள் பங்குபற்றாத ரோக்கியோ மாநாடு நம்பிக்கைகளைச் சோரச் செய்வது மட்டுமல்ல, இனி அடுத்தது யுத்தமா என்ற பயங்கலந்த ஊகங்களையும் தூண்டுவதாய் உள்ளது.” என்கிறார்.

“அத்தோடு மீண்டும் பகிரங்கமாக ஆட்சேர்ப்பில் இறங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு எதையோ கூராகவும் தெளிவாகவும் கூற விரும்புவது போலத் தெரிகறது. ஆயின் அடுத்தது என்ன?” என்று எழுதுகிறார்.

இதே காலத்தின் முன் கிடைத்த சமாதான காலமெல்லாம் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்த எந்தக் கதையையும் குறித்து அவர் மவுனமாக இருப்பதுவும், அதன்பின் தொடங்கப்பட இருக்கும் யுத்தத்திற்கு புலிகளின் பக்கமிருந்து நியாயம் தெண்டுவதைத் தவிர இந்த எழுத்தில் வேறு எதனை அறிவுபூர்வமாக நாம் பெற்றுக் கொள்ள முடியும்?

“சமாதானத்துக்காக அவர்(ரணில்) தியாகம் செய்யாது விட்டால் தொடங்கப்பட இருக்கும் யுத்தத்தில் அரசு தனது சிப்பாய்களைத் தியாகம் செய்ய வேண்டிவரும் என்கிறார்”. இந்தக் காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் யுத்ததிற்காக கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் புலிகளுக்கான கருணை மனுவே இதுவல்லாது நிலாந்தனுக்கிருந்த எவ்வித புத்திசாலித்தனமான எழுத்துமல்ல இது. தமிழ்த்தேசிய மனநோயாளிகளை முன்நிறுத்தி ஒரு இனத்தை குழிதோண்டிப் புதைத்த தற்குறித்தன எழுத்தே அவருடையதாகத் தொடருகிறது.

“புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ள பொறுப்பு” என்று ஒரு கட்டுரை இதனை.26 மே 2006இல் எழுதுகிறார். அதில்

”புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் பலமான ஒரு நிதித்தள வலையமைப்பையும் புலனாய்வுக் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறார்கள். இனமான உணர்வுகள் மற்றும் தாய் நிலத்தைப் பிரிந்திருப்பதான சோகம், குற்ற உணர்ச்சி, போன்றவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட நன்கு நிறுவனமயப்பட்ட கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை யாவும் புலம்பெயர்ந்த சமூகத்திற்குள்ளேயே நிகழ்ந்த வளர்ச்சிகள்தான். பதிலாக அந்த சமூகத்திற்கு வெளியே தமிழருக்கும் வெள்ளைக்காரர்கள் மற்றும் தமிழர்கள் அல்லாத சமூகங்களிற்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை திருப்திப்படும் அளவிற்கு நிலைமையில்லை. அந்தந்த நாடுகளில் உள்ள அபிப்பிராயத்தை உருவாக்கவும் பரப்பவும் வல்ல சக்திமிக்க தனிநபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவற்றுடனான ராஜ்ஜிய மற்றும் புலமைசார் தொழல்சார் உறவுகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டியெழுப்பத் தவறிவிட்டார்கள். அங்குபோய் குட்டி அரியாலை குட்டி யாழ்ப்பாணங்களை உருவாக்கியதில் காட்டிய அக்கறையை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ராஜதந்திரக் கட்டமைப்பை உருவாக்குவதில் காட்டத் தவறி விட்டார்கள்.”

என்று எழுதும் நிலாந்தன் தொடர்ந்து….

“அதே சமயம் சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது மேற்சொன்ன வகையிலான ராஜ்ஜிய உறவுகளையே அதிகம் விருத்தி செய்து வைத்திருக்கிறது. மரபு ரீதியிலான அரசுக்கிடையிலான பாரம்பரிமான உறவுகளின் அடிப்படையிலும் கதிர்காமர் போன்றோரின் கடும் உழைப்பு, கெட்டித்தனம் காரணமாயும் இத்தகைய ராஜ்ய உறவுகள் மிகவும் நெருக்கமானவைகளாக க் காணப்படுகின்றன. அதாவது புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே வெற்றிடத்தை விட்டிருக்கிறார்களோ அங்கே அரசாங்கம் தன்னை நன்கு ஸ்தாபித்து வைத்திருக்கிறது. இதுதான் கனடிய மற்றும் ஐரோப்பிய யூனின் தடைகளுக்கான காரணம் என்கிறார்.

நிலாந்தன் எழுதிய இந்த எழுத்திற்குச் சில மாதங்களின் முன்னர் தான் புலிகளால் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக, புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நீங்கள் கவனமற்று இருக்கும் சந்தர்ப்பங்களால் நாங்கள் கதிர்காமர் போன்றவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டியிருக்கிறது என்று லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களது கொலைக்குப் புலிகளின் பக்கமிருந்து நியாயம் தெண்டுவதாகத்தானே இருக்கிறது இது. ஐரோப்பிய யூனியன் தடைக்கு கதிர்காமர் போன்றவர்களின் கெட்டித்தனமும் செயற்பாடுமே காரணம். ஆக அவரைக் கொல்வதே சரியானது என்ற கதையை நிலாந்தன் அறுதியிடுகிறார்.

அதிலும் கவிஞர் சேரனுடனான உரையாடலைத் தொட்டுச் செல்லும் நிலாந்தன் அவர்கள், “நாலிலொரு தமிழர் புலம்பெயர்ந்துள்ளார்கள்” என்று சேரன் சொன்னதாகச் சொல்லி

குறைந்தபட்சம் காற்பங்குத் தமிழ்ச் சனத்தொகை புலம்பெயர்ந்துள்ளது. அது ஏன் தடைகளைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது? என்று விடுதலைப் புலிகளது தடை நிகழ்ந்த விடயம் குறித்து ஆதங்கப்பட்டு எழுதுகிறார்.

“கனடாவில் ஏறக்குறைய மூன்று இலட்சம் தமிழர்கள் உண்டு. வன்னியில் ஏறக்குறைய மூன்று இலட்சத்திற்கும் குறையாத சனத்தொகை உண்டு. வன்னியில் உள்ள தமிழர்கள் உலகத்தின் மூக்குக்குள் விரலை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேயளவு தொகையுடைய கனேடியத் தமிழர்களால் தமது நாட்டில் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமற் போயிற்று.”

என்று கோபப்படுகிறார். இந்த முட்டாள் புலி ஆய்வாளனின் சிந்தனையைக் கொஞ்ச நேரம் இருந்து கூர்ந்து கவனியுங்கள். இந்த எழுத்திற்குள் அடங்கியிருக்கும் அயோக்கியத்தனம் குறித்து இன்று வரை நீங்கள் யாருமே கவனியாது செல்லும் தலைவிதி எது? வன்னியிலுள்ள முழுத் தமிழர்களையும் கனடாவிலுள்ள முழுத் தமிழர்களையும் தன்னைப்போல் புலிக்கு தொழில் செய்யத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் போல் அவர் கண்ணுக்குத் தொிவது ஒருவித மனநோயல்லாது வேறு என்னவாக இருக்கும்.

இன்னொரு இடத்தில் (2006 மே) “அவர்கள் விரும்பும் போரைப் புலிகள் தொடங்கப் போவதில்லை. என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. ஆனால் அதேசமயம் அவர்கள் எதிர்பார்க்க முடியாத அல்லது ஊகிக்க முடியாத யுத்தத்தைப் புலிகள் தொடங்கப் பார்கிறார்கள் என்பதையே கடந்த கிழமை நிகழ்ந்த தாக்குதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. கருணாவின் உடைவினால் வலுச்சமநிலை கொழும்புக்குச் சாதகமாக மாறியிருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு யுத்தகளம் இது. ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்கும் வரை அல்லது வலுச்சமநிலை தளம்பக் காரணமாக இருந்த சக்திகளின் வேகம் தீரும் வரை இது தொடரப் போகிறது. அல்லது குறைந்த பட்டசம் வலுச்சமநிலை என்பதைக் கண்டுபிடிக்கும் வரையாவது இது தொடரும்.”

என்று சொல்கிறார்.

இந்த நிலாந்தன் என்ற ஆய்வாளரின் சிந்தனை எதைக் குறித்து நிற்கிறது எனக் கவனியுங்கள். கருணா தலைமையில் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற கிழக்குப் போராளிகள் குறித்துக் கவனப்படுத்தும் வரிகள் இவை. வடக்குப் புலிகள், கருணாவின் கிழக்குப் படைபலத்தின் இழப்பினை பேரிழப்பாகக் கருதிக் கொண்டிருக்கும் காலத்தில் புலிகளுக்கு நெஞ்சுரம் கொடுக்கிறார். ஒரு யுத்தத்தைத் தொடங்கி எங்களுக்கு எந்த இழப்புமில்லை நாங்கள் வலுச்சமநிலை கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக கொடுமையான யுத்தத்தைத் தொடங்குவதற்கு நியாயம் கற்பிக்கிறார்.

இவரின் விருப்புக்களும் அந்த விருப்பத்தின் பின்னிருக்கும் நச்சு மனமும் மக்களின் வாழ்வு பற்றிய கரிசனையில் எழுவதல்ல. ஒரு கொடிய யுத்தம் தொடங்கப்பட்டால் மக்களது அன்றாட வாழ்வின் சீர்குலைவு, குழந்தைகளின் எதிர்காலம், என்று எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, தனியே புலிகளின் வலுச்சமநிலையைச் சோதிக்க அந்த யுத்தம் தொடங்கப்படவேண்டும் என்றே கணக்கிடுகிறார்.

ஆக, நிலாந்தன் என்ற கொடிய மனம் கொண்டலைந்த ஆய்வாளனைக் “கடலம்மா” என்று எழுதிய கவிதைக்காகப் பலர் கொண்டாடுகிறார்கள். அவரைக் “கவிஞன்” என்கிறார்கள். அந்த அரைக் கவிஞன் இறுதியில் கஞ்சிக் கவிதை எழுதுகிறார். “வன்னியில் உள்ளவர்கள் உலகத்தின் மூக்கிற்குள் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்” என்றெழுதிய சில காலத்திற்குள்ளேயே உலகமே எங்களைக் கைவிட்டுவிட்டது என்று கஞ்சிப் பாடல் எழுதுகிறார். சர்வதேசத்திற்குத் தங்கள் வலுவை எதுவென்று காட்ட சண்டை தொடங்குகிறது என்று எழுதிய இந்த நாசம் கெட்ட ஆய்வில் சனம் நாசமாய்ப் போனது பற்றி இன்று வரை எந்தக் கவலையுமில்லாது அவர்களை இன்னும் மொட்டையடித்துக் கழுவில் ஏற்றக் கதை விடுகிறார். இந்தக் கதைகளைத் தமிழ்த் தேசிய மனநோயாளிகள் இன்னும் காவியலைந்து எதிர்காலத்தை நாசம் செய்கிறார்கள்.

நிலாந்தன் என்ற “மாயக் கதையாடல் மன்னன்” அவர்கள் இந்தச் சனத்தை நாசம் செய்ய இதற்கு மேலும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று அடுத்த இதழில் பார்ப்போம். அதற்கிடையில் உங்கள் கஞ்சிப் பானையை அடுப்பில் ஏற்றி வைத்துவிட்டு அவரைக் கஞ்சிப்பாடல் பாட அழையுங்கள்.

இருக்கும் வரை உங்களை நாசம் செய்து விட்டுவிட்டுப் போக இன்னும் அவருக்குச் சில தேவைகள் இருக்கின்றன.

நன்றி
அபத்தம் மே, 2023



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com