Sunday, November 20, 2022

மகாவலி , LRC காணி அதிகாரங்களை பி. செயலாளர்களுக்கு வழங்குவது கோழியை பிடித்து நரியிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பா.உ ஹேஷா வித்தானகே சீற்றம்! அமைச்சர் அஷோக பிரியந்த அந்தரத்தில் !! 

  வரவு செலவு திட்டு விவாதத்தின்போது பிரதேச செயலாளர்களின் ஊழல்களை போட்டுடைத்த பாராளுமன்ற உறுப்பினரிடம், குறித்த பிரதேச செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்க எடுப்பதாக உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்.

அப்பட்டியலில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவனையும் இணைத்துக்கொள்ளும் அமைச்சரே!


நேற்றுமுன்தினம் 18.11.2022 பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே, மகாவலி அபிவிருத்தி மற்றும் எல்ஆர்சி எனப்படுகின்ற காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் இருக்கின்ற காணிகள் குறித்த நிறுவனங்களால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முறைமைக்கு அப்பால் அக்காணிகள் பிரதேச செயலாளர்களால் பகிர்ந்தளிக்கப்படக்கூடியவாறு, பிரதேச செயளார்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது. இவ்விவகாரங்களுக்கு பொறுப்பான எனது நண்பரும் அமைச்சரும் இச்சபையிலே அமர்ந்திருக்கின்ற நிலையிலே, இம்முயற்சியானது கோழியை பிடித்து நரியிடம் கொடுக்கும் முயற்சியாகும் என்பதுடன் நான் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நான் அம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவன். நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ற விடயத்தை முழு அம்பிலிப்பிட்டியும் இரத்தினபுரியும் அறியும், ஆனால் கௌரவ அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது. அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகம் என்பது முழு இலங்கையிலுமிருக்கின்ற ஊழலுக்கு பெயர்போன பிரதேச செயலகங்களில் முன்னணி வரிசையில் முதல் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கக்கூடும். அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக லஞ்சம் பெறப்படுகின்றது. மண் எடுப்பதானாலும் , கல் எடுப்பதானாலும் ஏன் எந்த சேவையை பெற்றுக்கொள்வதானாலும் பிரதேச செயலாளருக்கு லஞ்சம் வழங்கவேண்டும். இந்த பிரதேச செயலாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களை இந்த சபையிலே கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதன்போது சபையிலே எழுந்த உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவீர்களாயின் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்பதை இவ்விடத்தில் உறுதி கூறுகின்றேன் என்றார்.

மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதேச செயலாளர்கள் மற்றும் எமது அமைச்சுக்குட்பட்ட உத்தியோகித்தர்களின் ஊழல், மோசடிகளை தெரிவிக்கும் பொருட்டு நான் அமைச்சராக பாரமேற்றதன் பின்னர் 1905 என்ற இலக்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். மோசடி புரிகின்றவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குங்கள், நாங்கள் தாமதமின்றி விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.

இலங்கையில் இவ்வாறான பல்வேறு இலக்கங்கள் காலத்திற்கு காலம் அறிவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இவ்வாறான இலக்கங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு என்ன நடைபெற்றது , நடைபெற்று வருகின்றதென்பதையும் நாட்டு மக்கள் நன்கறிவர். இலங்கை வரலாற்றில் இன்றும் TELLIGP என்று ஒரு முறைப்பாட்டுக்கான வழி இருக்கின்றது. ஒரு காலத்தில் Tellpresident , Tellprimeminister என்றும் முறைப்பாட்டு வழிகள் இருந்தது. மேலும் எத்தனையோ முறைப்பாட்டு வழிமுறைகள் இருந்தது. ஆனால் அங்கு கடமையாற்றுகின்றவர்களும் குற்றஞ்சுமத்தப்படுகின்ற அரச ஊழியர்களும் நண்பர்கள். இவ்வாறான நிறுவனங்களிடம் முறையிட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் வரலாற்றில் பாதிவாகவில்லை என்பதையும் அவர்கள் அனைவரும் கூட்டுக்கொள்ளையர்கள் என்பதையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

2020 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தேர்தலில் குதித்தபோது, பலர் நம்பிய விடயம் யாதெனில், ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதாகும். கோத்தபாய ராஜபக்ச கடமையேற்று சிறிது நாட்களில், அரச அலுவலகங்களில் கடமை தவறுகின்ற ஊழியர்களை புலனாய்வுத்துறையினர் சிவில் உடையில் உளவு பார்த்து வருகின்றனர் என கோத்தபாய தரப்பால் கூறப்பட்டது. இப்பிரச்சாரத்தை நம்பியவர்கள், பிலிப்பீன் ஜனாதிபதியாகவிருந்த Rodrigo Duterte (ரொட்றிகோ டுரேர்ரே) ஊழலை ஒழிப்பதற்காக ஊழலுக்கு துணைபோன அரச உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தது போன்றதொரு நிகழ்வு நிறைவேறப்போகின்றது, இலங்கையில் மக்கள் பணத்தை மோசடி செய்து தங்களது வயிற்றை வழர்த்துள்ள அரச ஊழியர்களின் வண்டி கிழிக்கப்பட்டு அவர்களது கழுத்துப்பட்டியால் கம்பத்தில் கட்டப்படப்போகின்றார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர். ஆனால் இலங்கையில் துருப்பிடித்துக்கிடக்கும் அரச இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூட கழட்டி பூட்ட கோத்தபாயவாலும் முடியாது போனது.

இந்நிலையில் அமைச்சர் புதிதாக உருவாக்கியிருக்கும் 1905 என்ற இலக்கத்திற்கு தகவல் கொடுத்து மாற்றம் நிகழப்போகின்றது என்றோ நீதிகிடைக்கப்போகின்றது என்றோ மக்கள் நம்பப்போவதில்லை. அவ்வாறு அமைச்சருக்கு அதிசயம் ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், மட்டக்களப்பு மண்முனை-வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் என்பவனின் காணி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில், இங்கே வைக்கப்படுகின்ற பகிரங்க முறைப்பாட்டினை வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை செய்து அவனுக்கு தண்டனை வழங்கி தாங்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்ற பொறிமுறை இத்தனை காலமும் கூறப்பட்டு மறைந்த பத்தோடு ஒன்று பதினொன்றுதான் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு இலங்கைநெட் கோருகின்றது.

ஆரையம்பதி பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜெயபூமி அளிப்பொன்றை அந்த அளிப்பின் நிபந்தனைகளை மீறி தனது சகோதரனின் பெயருக்கு மாற்றி பின்னர் காத்தான்குடி வர்த்தகர் ஒருவருக்கு பலகோடி ரூபாய்களுக்கு விற்பதற்கு வ. வாசுதேவன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மோசடி புரிந்திருக்கின்றான் என பிரதேச மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவிலிருந்து சென்ற விசாரணையாளர்கள் (!) வாசுதேவனுடன் விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு விசாரணையை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திடம் பாரம்கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களுடன் நாம் கடந்த வருடம் கேள்வி எழுப்பியிருந்தபோதும் எமது கேள்வி அமைச்சின் விசாரணைப் பிரிவின் காதுகளுக்கோ அன்றில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கருணாகரின் காதுகளுக்கோ கேட்கவில்லை. எனவே அமைச்சரின் புதிய விசாரணைப் பிரிவினரின் காதுகளுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் குறித்த மோசடி தொடர்பான ஆவணங்களுடனான கட்டுரையை மீண்டும் இங்கு இணைத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ!

மேலும் 2018.07.24 ம் திகதி அன்றைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவன், காணிகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், „தமது பிரிவில் 2011 ம் ஆண்டு தொடர்க்கம் 2017 ம் ஆண்டு வரை இடம்பெற்ற காணிக் கச்சேரிகளில் காணி அற்றோராக பலர் தோற்றி அவற்றிலிருந்து 3247 பேர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் காணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக காணி அற்றோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்திருக்கின்றான்.

தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமை புரியும் வ. வாசுதேவன் என்பவன் அவனுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற முறைப்பாடு ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள 2022.01.28 ம் திகதிய கடிதத்தில், „இதுவரை நடைபெற்ற காணிக் கச்சேரிகள் மூலம் காணியற்றவர்களாக 3247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கின்றான்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக வாசுதேவன் கடமையேற்றதிலிருந்து இன்றுவரை நூற்று மேற்பட்ட நபர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் காணியற்றோராக இனங்காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3247 ஆகவே காணப்படுகின்றது. எனவே எவ்வாறு பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்? காணிகள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்குவதற்கு என ஏற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து ஏன் பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை? என்ற விசாரணை இங்கு அவசியமாகின்றது. (விசாரணைக்கு தேவையான சகல ஆவணங்களும் வழங்கப்படும்)

அம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகம் இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு பிரதேச செயலகங்களில் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சுமத்தியபோது குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றேன் என உறுதி வழங்கிய அமைச்சரின் அந்த ஆர்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு இலங்கையில் ஊழல் மிகு பிரதேச செயலகங்களில் முதலாவது இடத்தில் காணப்படும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதே செயலாளரின் மோசடிகள் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அது தொடர்பான மேலதிக தகவல் வேண்டின் இலங்கைநெட் இன் ஆசிரியர் குழுவினை ilankainet@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

ஜெகன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com