Saturday, June 4, 2022

கோட்டாவை தூக்கி எறிந்தால் மட்டும் போதாதாம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படவேண்டுமாம்.

இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறை சர்வாதிகார குணாதிசயங்களை கொண்ட ஜனநாயக விரோத ஆட்சிமுறையாகுமென முன்னிலை சோசலிஸ கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். டேய்லிமிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் ஒரு புதிய அரசியலமைப்பு தேவை என்றும், அது மக்கள் நட்புடன் இருக்க வேண்டும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஏற்பாடுகள் அதில் இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

கேள்வி: புதிய பிரதமர் நியமனத்திற்குப் பிறகு போராட்டம் சற்று மழுங்கியதாகத் தெரிகிறது. உங்கள் அடுத்த கட்ட செயற்பாடு என்ன?

பதில்: இதுவரை நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக ராஜபக்சே ஆட்சி ஒரு படி பின்வாங்க வேண்டியதாயிற்று. ஆம் போராட்டம் சில முடிவுகளைத் தந்துள்ளது. இருப்பினும் அதன் இறுதி இலக்கு அடையப்படும்வரை நாம் அதை முன்னெடுத்துச் சென்றாக வேண்டும்.
முன்னிலை சோசலிசக் கட்சி என்ற வகையில் இறுதி இலக்கை அடையும்வரை நாம் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நம்புகிறோம். போராட்டத்தின் செயல்பாட்டில் இடையில் சில முன்னேற்றங்கள் இருக்கலாம். இருப்பினும் இறுதியில் சோசலிசத்தை உணரும் வரை இது ஒரு பயணம். ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து தற்போதைய பொருளாதாரப் படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எண்ணியுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வது போதாது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி ராஜபக்சவே பெருமளவு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிலிருந்து தற்போதைய ஜனாதிபதி வரை நீண்ட காலமாக இழுக்கப்பட்ட செயல்முறையின் நெருக்கடியாகும். இது சர்வாதிகார குணாதிசயங்களைக் கொண்ட ஜனநாயக விரோத அரசியலமைப்பாகும்.
இந்த போராட்டத்தின் ஒரு நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது. அது நடக்க வேண்டும். மற்றபடி இது 21வது திருத்தம் அல்லது 21வது திருத்தக் கூட்டல் என்ற துண்டு துண்டான அணுகுமுறை அல்ல. தற்போதைய அரசியலமைப்பு அத்தகைய கடுமையான மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை என்றால் அவற்றைக் கொண்டுவருவதற்கு பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். பொது அங்கீகாரம் கிடைத்தவுடன் அத்தகைய முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் உத்தேச புதிய அரசியலமைப்பில் இணைக்கப்பட வேண்டும். அது முடிந்ததும் அடுத்த நகர்வை தொடரலாம்.

திரு ரணில் விக்கிரமசிங்கே இப்போது பிரதமர் பதவியை எங்கள் பார்வையில் இரண்டு அம்சங்களுடன் கைப்பற்றியுள்ளார் - ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பாதுகாப்பது மற்றும் போராட்டத்தை முடக்குவது.
கோட்டாபய - ரணில் கூட்டணியால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. மாறாக இந்த கூட்டணி நிலைமையை இன்னும் மோசமாகிவிடும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் செயற்பாட்டை திரு விக்ரமசிங்க சீர்குலைக்க முயற்சிக்கிறார். இப்போது பொருளாதார நெருக்கடியின் ஆழத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அதற்கான தீர்வுகள் அவரிடம் இல்லை.

கோட்டா - ரணில் புனிதமற்ற கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதன் பிறகு யாரேனும் தற்காலிக அரசு அமைத்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தும் மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அது ஒரு புதிய ஜனநாயக மக்கள் நட்பு அரசியலமைப்பை உருவாக்குவது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் அரசியலமைப்பிற்கு பொது அங்கீகாரம் பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைப்பதற்கான ஏற்பாடுகள் அதில் இருக்க வேண்டும். மேலும் மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இடமளிக்க வேண்டும்.

மிகவும் சிக்கலானதாகிவிட்ட தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இப்போதைய மக்கள் கிளர்ச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்க வேண்டும். இது காலி முகத்திடலில் மட்டும் நின்றுவிடக் கூடாது. இது நாடு முழுவதும் பரவி நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதிகார மையங்களுக்கு சவால் விட முடியும்.

கேள்வி: ஆனால் புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளன. மற்றவர்கள் ஒத்துழைக்காதபோது எப்படி நீண்ட போராட்டத்தை நடத்த முடியும்?

பதில்: போராட்டம் சில தடைகளை சந்தித்துள்ளது. இந்த நாட்டின் அரசியல் கட்சிகளும் சக்திகளும் ஒரு பொதுவான நோக்கத்துடன் இயங்கவில்லை. அவர்களிடம் வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது. மக்கள் சக்தி (SJB) தனியாக உள்ளது. மற்ற கட்சிகள் அவ்வாறு தனியாகதான் இருக்கின்றன. சிறீலங்கா பொதுஜன பெரமுனவினர் (SLPP) பாராளுமன்றத் தேர்தலைத் தவிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவுடன் பதவியில் இருக்க அதிபர் கோட்டபாய ராஜபக்சே விரும்புகிறார். போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கான சலுகைகளை அனுபவிக்க விரும்புகிறார்.
விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய பங்கு வகித்தன. அவர்கள் பதவியில் நம்பகமான விசுவாசமான கீழ்ப்படிதலுள்ள நண்பரை விரும்பினர். போராட்டத்தின் முக்கிய நோக்கம் இப்போது இங்கே சமரசம் செய்யப்படுகிறது.
இதுபோன்ற துரோகக் கூறுகளுக்கு எதிராக மக்கள் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். போராட்டத்தின் உண்மையான இலக்குகள் இன்னும் அடையப்படவில்லை. மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு குறைந்தபட்சம் இடைக்காலத் தீர்வுகள் உடனடியாக வேண்டும்.

கேள்வி: நெருக்கடியின் ஆழத்தைப் பற்றி மட்டுமே பிரதமர் பேசுகிறார் என்று சொன்னீர்கள். நெருக்கடிக்கு ஏதேனும் குறுகிய கால தீர்வு உங்களிடம் உள்ளதா?

பதில்: பிரச்சனைகள் பற்றிய அவர்களின் பேச்சுக்கும் நம்முடைய பேச்சுக்கும் வித்தியாசம் உள்ளது. அவர்களின் கண்ணோட்டத்தில் தற்போதைய சூழ்நிலையை நாங்கள் பகுப்பாய்வு செய்யவில்லை. எங்களுடையது பொதுநலன் சார்ந்த நிலைபாட்டின் அடிப்படையில் பொது ஊழியர்கள் தொழிலாளர்கள் குட்டி முதலாளிகள்; போன்ற சமூகத்தின் பரந்த பிரிவினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நாங்கள் பார்க்கிறோம்.

நாங்கள் முதலாளித்துவத்தை நம்பவில்லை. கோவிட்-19 தொற்று நோயிலிருந்தும் லாபம் ஈட்டிய நிறுவனங்களுடன் நாங்கள் நிற்கவில்லை. தேவையற்ற லாபம் ஈட்டும் அரிசி ஆலைகளின் மாஃபியாவுடன் நாங்கள் நிற்கவில்லை. எங்கள் முன்மொழிவுகள் அவர்களுக்கான தேவையற்ற பெரிய லாப வரம்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வருமானம் அல்லது அந்நியச் செலாவணியை எப்படிக் கொண்டு வருவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். இவர்களில் யார் வந்தாலும் இப்பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை கொண்டு வருவது கடினம்.
ஆயினும் சாதாரண மக்களின் நலனுக்காக இந்த இலாபம் ஈட்டும் நபர்களின் தேவையற்ற வகையில் குவிக்கப்பட்ட செல்வத்தை மீட்டெடுக்காத வரை இந்த பிரச்சினைகளில் எதற்கும் தீர்வு காண முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.
இத்தகைய சுழலில் விவசாயிகள் மட்டுமே நெல்லுக்கு உத்தரவாத விலையை முடிவு செய்வார்கள். அரிசி ஆலைகள் தங்கள் லாப வரம்புகளை குறைக்கலாம். வரிக் கொள்கையை மாற்ற வேண்டும். இன்று நேரடி வரிகள் 15 சதவீதமாகவும் மறைமுக வரிகள் 85 சதவீதமாகவும் உள்ளது.
நேரடி வரி விதிப்பை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். சாதாரண மக்களுக்குப் பயன்படுத்தப்படும் வரி விகிதங்களைக் குறைக்கும் அதே வேளையில் வசதியான வகுப்பினருக்கும் வரி விதிக்க வேண்டும். பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாயை சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்த வேண்டும். அரச வருவாயில் 6 சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டும்.
சோசலிசம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகான ஒரு தீர்வாகாது இது. தற்போதைய முதலாளித்துவ முறையிலும் இது ஒரு தீர்வாகும். முதலாளித்துவ வர்க்கம் தடையின்றி செல்வத்தை குவிக்கும் போது தீர்வு காண்பது கடினம். அதனால் போராட்டம் தொடர வேண்டும். காலி முகத்திடலின் எல்லையைத் தாண்டி ஒவ்வொரு நகரம் கிராமம் மற்றும் பணிவிடங்களை சென்றடையும் வகையில் போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
மக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். இது எல்லா நேரத்திலும் அவர்கள் உயரமான கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி தெருவில் அணிதிரள்வது என்று அர்த்தமல்ல. அதற்குப் பதிலாக தேவைப்படும்போது ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த அவர்கள் நிறுவன அதிகாரத்துடன் தயாராக இருக்க வேண்டும்.
பிரதிநிதித்துவ ஜனநாயகக் கொள்கைகளின்படி ஆட்சியாளர்களை மாற்ற ஐந்து ஆண்டுகள் மக்கள் காத்திருக்காமல் ஆண்டின் எந்த நேரத்திலும் இத்தகைய பொது அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

கேள்வி: சோவியத் ரஷ்யாவின் போல்ஷிவிக் புரட்சி போன்ற போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நீங்கள் இன்னும் நம்புகிறீர்களா?

பதில்: புரட்சி ஒரு இனிமையான அனுபவம். ஆயினும் கூட இது மோசமான ஒன்றாக வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றது மற்றும் ஒரு புத்திசாலித்தனமற்ற வன்முறை மற்றும் பேரழிவுகரமான செயற்பாடாக காட்டப்படுகிறது. ஒரு சோசலிசப் புரட்சியை விட இனிமையான எதையும் இந்த கிரகத்தில் உள்ள மனிதர்கள் அனுபவிக்க முடியும் என்று நான் நம்பவில்லை.
இலங்கையிலும் உலகிலும் சோசலிசத்தை நிலைநாட்டும் ஒரே நோக்கத்துடன் நாம் ஜே.வி.பியுடன் அரசியலை ஆரம்பித்து பின்னர் முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கினோம். இந்த உன்னத இலக்கிலிருந்து நாங்கள் விலகவில்லை. இலங்கையில் 45 வருடகால திறந்த சந்தைப் பொருளாதாரம் எவ்வளவு தோல்வியடைந்துள்ளது என்பதை இப்போது நாம் காண்கிறோம். நாங்கள் கடன்களை சுமந்து வாழ்ந்து வருகிறோம். இன்று உண்பதற்கு உணவின்றி தவிக்கிறோம். நாடு கடனில் ஆழ்ந்துள்ளது. உணவுக் கலவரங்கள் கண்டிப்பாக நடக்கும். உரம் இல்லாததால் பயிர்களை விளைவிக்க இயலாது போகும். இது நிஜம்.
தேசியப் பொருளாதாரத்தை அதிகபட்ச சாத்தியமான அளவிற்கு வலுப்படுத்துவதிலேயே தீர்வு உள்ளது. அந்த வலிமையின் அடிப்படையில் உலகின் பிற நாடுகளுடன் நாம் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

கேள்வி: முழு உலகமும் சோசலிசத்தை முழுமையாக அறிமுகப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. அது எப்படி இலங்கையில் உண்மையாக இருக்க முடியும்?

பதில்: உலகம் என்று சொன்னால் இன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வல்லமை என்று அர்த்தம். இது அவர்களின் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையைக் குறிக்கிறது. இல்லையெனில் அது வால் ஸ்ட்ரீட்டின் சக்தி. ஆனால் என்னைப் பொறுத்தவரை உலகம் என்பது பெரும்பான்மையான உலக மக்கள் தொகையைக் குறிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமூக நீதி வேண்டும். இன்று உக்ரைனில் போரினால் ஏற்பட்ட அழிவை நாம் காண்கிறோம்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆபத்தில் உள்ளது. தொற்றுநோய் இருந்தபோதிலும் உலகின் தலைசிறந்த பில்லியனர்களின் செல்வம் அதிவேகமாக அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் மட்டும் முதல் பத்து பில்லியனர்களின் சொத்து மதிப்பு 540 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.

உலகின் பிற பகுதிகள் உயிர் பொருளாதார மற்றும் வேலை இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் போது இவர்கள் பெரும் லாபம் பெற்றுள்ளனர். அதுதான் முதலாளித்துவம். இது உலகத்திற்கே ஆபத்தாக உள்ளது. இதனால் தொற்றுநோய்க்கு கூட பதிலளிக்க முடியாது. தற்போது சோசலிசம் நடைமுறையில் உள்ளதா என்று கேட்டீர்கள். அப்படியானால் தற்போதைய நடைமுறையில் உள்ள முறைமை சரியாக உள்ளதா? அது மனித நேயத்திற்கு ஒத்து வருமா? மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு தருகிறதா?
உலகில் 7.5 பில்லியன் மக்கள் உள்ளனர் அவர்களில் பெரும்பாலோருக்கு சிறந்த சமூக நீதி தேவைப்படுகிறது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். போராட்டத்தில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. இது தடையில்லாத மேல் நோக்கிய பயணம் அல்ல. 1917ல் சோவியத் ரஷ்யா தனி சோசலிச நாடாக உருவானது. பின்னர் அது உலகம் முழுவதும் சோசலிச நாடுகளின் குழுவின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அது பின்னர் சரிந்தது. அதற்கு காரணங்கள் உண்டு. மீண்டும் ஒருமுறை சோசலிசத்திற்கான ஆதரவு அலை உலகம் முழுவதும் எழுகிறது.
இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் போராட்ட சக்தி இன்று எம் முன்னால் உள்ள நேரடி உதாரணம். இந்த அதிகாரம் அரசியலமைப்பின் அளவுருக்களுக்குப் புறம்பாக மக்கள் சக்தி பலம் பொருந்தியதாக கட்டமைக்கப்பட்டதால் திரு மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு அருகில் உள்ள கடற்படைத் தளத்தில் தப்பி ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த மக்கள் சக்தியின் பலம் தான் அமைச்சரவையை ராஜினாமா செய்ய வழிவகுத்தது. இந்த மக்கள் பலமே 21வது திருத்தச் சட்டத்தை குறைந்தபட்சம் பெயரிற்காவது பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. இது நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட சக்தி. கேள்வி கேட்பதற்கு ஒன்றுமில்லை.
நடைமுறையிலுள்ள சட்ட மற்றும் நீதித்துறை செயல்முறை மூலம் சாத்தியமற்றதாக இருந்த ஒரு விடயம் மக்களின் பலத்தின் அதிகாரத்தால் அடையப்பட்டது. இந்த அதிகாரத்தை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்துவதற்கு நாங்கள் இப்போது முயற்சி செய்கிறோம். பாராளுமன்ற அதிகாரத்தை நம்பியிருப்பது அல்லது கூக்குரலிடுவதற்குப் பதிலாக மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு இதைத்தான் நாங்கள் முன்மொழிந்தோம். சோசலிசத்தை அடையும் வரை இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். உலகில் வெற்றியுடன் முடிந்த மற்ற போராட்டங்களின் பொறிகளை தற்போதைய போராட்டம் கொண்டுள்ளது. அந்த வகையில் இது ஒரு புதுமையான போராட்டம் அல்ல.
சோசலிசத்தை வெல்வதற்கான எந்தவொரு புதுமையான மாதிரியையும் உலகிற்கு அறிமுகப்படுத்த ஒரு கணம் கூட தயங்க மாட்டோம். அதை உலகிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் எதற்கும் பின்வாங்கமாட்டோம்.

கேள்வி: அத்தகைய வெற்றியில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

பதில்: தோழர் விளாடிமிர் லெனின் கூறியதை என்னால் தொடர்புபடுத்த முடியும். அவர் கூறினார் "எதுவும் நடக்காத பல தசாப்தங்கள் உள்ளன. பல பத்தாண்டுகள் நடக்கும் வாரங்களும் உள்ளன". பல பத்தாண்டுகள் நடக்கும் வாரங்கள் இவை. ஏழு தசாப்தங்களாக நம் தலையில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் சுமை இப்போது வெடிக்கப் போகிறது. நாடாளுமன்ற அமைப்பு சீர்குலைந்து போகிறது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர். இது எங்கள் கட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட கோஷம் அல்ல. இது மக்கள் மத்தியில் எழுந்த முழக்கம். தற்போதைய நாடாளுமன்ற ஆட்சிமுறையில் நமது பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்று அர்த்தம். நாடு முழுவதும் மக்கள் போராட்ட அமைப்பு அல்லது பொதுப் போராட்ட இயக்கங்களின் மையங்கள் உருவாகி வருகின்றன. இது ஏனைய சிவில் சமூக இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து எங்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கமாகும். இதுவே நாம் எதிர்நோக்கும் எதிர்கால சமுதாயத்தின் கட்டுமானப் பொருள். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக செய்யப்பட வேண்டிய ஒன்று.

கேள்வி: ஜே.வி.பி இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் மற்றொரு அரசியல் கட்சியாகும். ஜேவிபியுடன் இணைந்து செயற்பட தயாரா?

பதில்: நிச்சயமாக நாம் ஜேவிபியுடன் இணைந்து செயற்பட வேண்டும். இந்த இலக்கை அடைய இரு கட்சிகளும் ஒன்று சேரலாம். மக்கள் நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக முதலில் எங்களுடன் இணைந்து கொள்ள யாராவது இருந்தால் அது ஜே.வி.பியைத் தவிர வேறில்லை.

கேள்வி: ஜே.வி.பி.க்கும் உங்கள் கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

பதில்: சாத்தியம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஜே.வி.பி.யுடன் ஒரு சந்திப்பை நடத்தி எங்கள் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க முயற்சித்துள்ளோம். மற்ற கட்சிகளிடமும் அதைத்தான் செய்தோம்.
காலிமுகத்திடல் போராட்ட களத்திலும் நாம் ஜே.வி.பியின் இளைஞர் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

கேள்வி: ஜே.வி.பி.யின் செயற்பாடு உங்களுக்கு பிடிக்காத காரணத்தினால் நீங்கள் அதிலிருந்து விலகிச் சென்றீர்கள் அல்லவா?

பதில்: ஜே.வி.பி.யும் எமக்கும் இடையே அரசியல் பாதைகளில் வேறுபாடுகள் உள்ளன. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுடையது சோசலிசத்தின் சாதனையை இலக்காகக் கொண்ட இயக்கம். இருப்பினும் இந்த சரியான நேரத்தில் அனைத்து முற்போக்கு இடதுசாரி சார்பு மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்கள் வேறுபாடுகள் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்தச் சுழலில் ஜே.வி.பி.யுடன் நாம் இணைந்து செய்வதற்கு நிறைய இருக்கிறது.

கேள்வி: தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி நீங்கள் பேசினீர்கள். முன்னதாக ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீர பொருளாதார சமத்துவத்தின் அடிப்படையிலான தீர்வை முன்வைத்தார். ஆனால் வடக்கு கிழக்குத் தேர்தல் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் அதிகாரப் பகிர்வு அல்லது பகிர்வைக் கேட்கின்றன. அத்தகைய தீர்வை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

பதில்: எங்களுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை. அது மக்கள் நட்புடன் இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஏற்பாடுகள் அதில் இருக்க வேண்டும். இது திரும்ப அழைக்கும் உரிமை மற்றும் நீதித்துறை மதிப்பாய்வுகளை வழங்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும். துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சட்டப்பூர்வ விதிகள் மற்றும் அதற்கான நடைமுறை அணுகுமுறையும் இருக்க வேண்டும்.
இனவாதம் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்க முடியாது. பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இனரீதியாக உந்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
ஒருவரது மொழி அல்லது மத அடையாளத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்ட முடியாது. அனைத்து முக்கிய மொழிகளும் நாட்டின் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் ஒருவர் விரும்பும் மொழியில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்க யாருக்கும் உரிமை உண்டு. இவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டும். வெறும் அரசியலமைப்பு விதிகள் மட்டும் போதாது. நடைமுறை அர்த்தத்தில் அவற்றைத் தீர்க்க காலக்கெடுவுக்கான செயல்திட்டம் தேவை.
இலங்கை ஒரு தீவு அது ஒரே நாடாக இருக்க வேண்டும். இது உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட வேண்டும். அதற்கு மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமும் நிர்வாகமும் தேவை. அனைத்து இன மற்றும் மொழிவாரி மக்களுக்கும் பொருளாதார பலன்களைப் பெறுவதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் இலங்கை தேசத்தை பொருளாதார ரீதியாக மட்டுமன்றி சமூகவியல் ரீதியாகவும் உருவாக்க முடியும். எவரும் இலங்கையர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இருப்பினும் சில இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டால் சுயராஜ்யத்தின் அலகுகள் பற்றி நாம் சிந்திக்கலாம். இது சிங்கள அல்லது தமிழ் அடையாளங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள் உள்ளன.

கேள்வி: அந்த சுய ஆட்சி என்பது ஒரு கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் உள்ள அமைப்பைக் குறிக்குமா?

பதில்: அன்று தமிழீழத்திற்காக நின்றவர்கள் நிறைய பேர் இன்று அந்த சித்தாந்தத்தை கைவிட்டுள்ளனர். நாடு முழுவதுக்கும் பொதுவான பொருளாதாரப் பிரச்சனைக்காக வெவ்வேறு இன மத மற்றும் கலாசாரக் குழுக்கள் எவ்வாறு இலங்கையர்களாக தமது சொந்த அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு இணைந்து போராட முடியும் என்பதைப் பார்க்கிறோம்.
ஒரு சோசலிச கட்டமைப்பில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட இனவாதம் தடையின்றி செல்லும் தற்போதைய அமைப்பில் இதற்கு தீர்வு இல்லை.

கேள்வி: உங்கள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் (TNA) பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவு என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நட்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இது பாராளுமன்றத்திற்கு வெளியே உருவாக்கப்பட வேண்டும். இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இல்லாத அரசியலமைப்பாகும். இது மக்கள் தங்கள் எம்.பி.க்களை திரும்ப அழைக்கவும், நீதித்துறை மறுஆய்வு செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. இது இனவெறி மற்றும் துன்புறுத்தலைத் தடுக்கும் அரசியலமைப்பாகும்.

கேள்வி: புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நீங்கள் நிதி உதவி பெறுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் பதில் என்ன?

பதில்: 'டயஸ்போரா' என்ற வார்த்தை அதன் மொழியியல் அர்த்தத்தை விட மேலான ஒன்றைக் குறிக்கிறது. இது இன்று சமூகத்தில் ஒரு அரசியல் அர்த்தத்தைக் குறிக்கிறது. பொதுப் பொருளில் புலம்பெயர் என்றால் நாட்டிற்கு வெளியே வாழும் இலங்கையர்கள் என்று பொருள். சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் உள்ளனர். மூன்று குழுக்களிலும் இனம் சார்ந்த அரசியல் நாட்டிலும் வெளியிலும் காணப்படுகிறது. அதே சமயம் வெளிநாட்டில் இருந்து புதிய முற்போக்கு சக்திகள் வெளிவருகின்றன. இன எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்கவும் அனைத்து இலங்கையர்களுடனும் ஈடுபடவும் நாங்கள் விரும்புகிறோம். அனைவரிடமிருந்தும் உதவி பெறுகிறோம். இந்தப் போராட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

முற்றும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com