Monday, June 6, 2022

வெடிக்கும் நிலையிலுள்ள எரிமலைமீது வீற்றிருக்கின்றோம். 10 வருடங்களுக்காவது வரப்பிரசாதங்களை தியாகம் செய்யுங்கள்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில், அரச சேவையின் சுமையினை தாங்க முடியாத நிலைக்கு நாடு வந்துள்ளதாகவும், எதிர்கால சந்ததியினராவது இந்நாட்டில் வாழக்கூடியதோர் நிலை உருவாக வேண்டுமாகவிருந்தால் இன்று நாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அரச ஊழியர்கள் வரை அனைவரும் தாங்கள் அனுபவித்து வருகின்ற வரப்பிரசாதங்களை குறைந்தது 10 வருடங்களுக்காவது தியாகம் செய்ய முன்வரவேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ளார், திவால் என தன்னை அறிவித்துக்கொண்டுள்ள இலங்கையின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள மாயாதுன்ன.

கடந்த 29 ம் திகதி இடம்பெற்ற அரச சேவையாளர்கள் சங்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், மொத்த அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 15 லட்சங்களை தாண்டிச் சென்று விட்டதென்றும் இலங்கையின் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு மேலே செல்லும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தினை 2004 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் எழுதிய கடிதத்தில் எச்சரித்ததாக நினைவுகூர்ந்த அவரது பேச்சின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகின்றது.

இந்த நாட்டில் உங்களுக்கு வாழமுடியாத வகையிலான அரச நிர்வாகமொன்றை உருவாக்கித்தந்த முன்னோர்கள் என்ற வகையில், நான் உங்களிடம் முதலில் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும். இன்றைய நிலையில் எமது அரச நிர்வாகத்தில் இருக்கின்ற இடைநிலை ஊழியர்களிலிருந்து அதற்கு கீழுள்ள சகல ஊழியர்களும் நாளாந்தம் வேலைக்கு வருவதே பாரிய பிரச்சினையாகியிருக்கின்றது. தை மாதத்தில் போக்குவரத்திற்கு பத்தாயிரம் செலவழித்தவர்கள் மார்ச்மாதமளவில் 15000 ரூபா செலவுசெய்யவேண்டியாகி இன்று அது இருபது இருத்திஐயாயிரம் வரை உயர்ந்துள்ளது.

40 ரூபா கொடுத்து பொதுப்போக்குவரத்தில் வந்த எமது காரியாலயங்களிலுள்ள சிற்றூழியர்கள் இன்று 120 லிருந்து 150 ரூபா வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களது போக்குவரத்து செலவினையும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் வருடத்திற்கு ஒருமுறையாவது தொழிலுக்கு வருவதற்கு ஒரு புதிய ஆடையையோ, பாதணியையோ கொள்வனவு செய்யமுடியுமா என்பது சந்தேகமே.

இது இவ்வாறிருக்கும் சூழ்நிலையிலும்கூட நான் நேற்று சில அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபொழுது, அரச சேவையில் இருப்பவர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்டு இன்று நாட்டில் எவ்வித சம்பளமும் எடுக்க முடியாமல் இருப்பவர்களிடம் எங்களையும் அடிவாங்க செய்யாதீர்கள் என்று அவ்விடத்தில் நான் கூறினேன். அத்துடன் முடிந்தால் அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு உதவும் வகையில் ஏதாவது சலுகையை பெற்றுக்கொடுக்கமுடிந்தால் உதவியாக இருக்குமென்றும் கூறினேன்.

எங்கள் எல்லோருடைய மனச்சாட்சியின் உணர்வுகளில் ஏற்றத்தாழ்வுகள் பலவாறு இருக்கலாம். ஆனால் முப்பது வருடங்களோ அதற்கு மேலோ அரச நிர்வாக சேவைகளில் நாங்கள் இருந்திருப்போமேயானால் நாங்களும் ஏதோவொரு வகையில் இன்றைய நிலைக்கு பொறுப்புக்கூறியேயாக வேண்டும். அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். நாங்கள் இங்கே பேசுகின்ற விடயங்கள் எல்லாவற்றையும் விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தியேயாகவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் இந்த நாடு அதாள பாதாளத்தை நோக்கி விழத்தான் போகின்றது. ஏனெனில் இம்முறைக்கான சிறுபோக விளைச்சல் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையிலிருந்து சாதரண நிலைக்கு தூக்கி நிறுத்த முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் எம்மிடமில்லை. வேறுகாலங்களாக இருந்தால் ஆகக்குறைந்தது பக்கத்து நாடுகளிலிருந்தாவது உணவை பெற்றுக்கொண்டிருக்க முடியும். கடனாகவோ அல்ல பிச்சையாகவே பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்று எமது நிலை அப்படியில்லை. பங்களாதேஷ; போன்ற ஒரு நாட்டின் உபரி உற்பத்தியாக இருக்கின்ற ஐந்து வீத உற்பத்தியானது, எமது நாட்டின் மொத்த உற்பத்திக்கு சமன் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

இன்று உலகத்தின் எல்லா நாடுகளிலும் உணவுற்பத்தி விகிதாசாரம் வீழ்சியடைந்துவருகின்ற காலம். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே உணவுத்தட்டுப்பாட்டு நிலை உருவாகியிருக்கின்றது. இன்னும் பல நாடுகள் அதை நோக்கி பயணித்துக்கொண்டும் இருக்கின்றது. எமது நாட்டில் சிறுபோக உற்பத்தியாளர்கள் 50-55 வீதத்தினரே தற்போது வயலில் சேற்றுக்குள் காலை வைத்திருக்கின்றார்கள். ஆகவே எமது உணவு நெருக்கடி என்பது மிக கடுமையாக இருக்கப்போகின்றது என்பது வெள்ளிடைமலை.

இந்த நெருக்கடி நிலையை இன்று இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கின்ற இளம் சமூகத்தினாரால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் எம்மை போன்ற 50 களிலும் 60 களிலும் பிறந்தவர்களுக்கு ஒரு றாத்தல் பாணை வாங்குவதற்கு பேக்கரிகள் முன்பாகவும் , புதிய ஆடையொன்றை தைப்பதற்கு துணிவாங்குவதற்கு கூட்டுறவு சங்ககடைகளின் முன்னால் பங்கீட்டு அட்டையுடனும் வரிசைகளில் நின்றது நினைவிருக்கின்றது. இதற்கு பிற்பட்ட இன்னொரு காலமிருந்தது, சிவில் யுத்தம் நடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் ஒருபோத்தல் மண்ணெண்ணை 800 -1000 ரூபாவிற்கு வாங்க வேண்டிய நிலையும் சாப்பிடுவதற்கு மூன்று நேர உணவு இல்லாத நிலையும் நிலவியது. நாம் இன்று எமது கையிலிருக்கும் கடனட்டைகளுக்கு கூட எந்தவித பெறுமதியுமற்றுப்போகும் நிலையை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் எரிபொருளுக்காக வரிசையிலே நின்று எரிபொருள் கிடைக்காமல் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு நடந்துவரும்காலம் எம்முன்னேயுள்ளது. எம் எல்லோரினது வீட்டிலும் ஆகக்கூடியது 10 கிலோ அரிசி மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலை உருவாகும். அப்படி அரிசி முடிகின்ற நேரத்தில் ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு கடையாக சென்று அங்கும் அரிசி கிடைக்காமல் திரும்பி வரவேண்டிய நிலை உருவாகும். மேல் மாகாணத்திற்கு தேவையான அரிசி பாவனையில் 10 வீதம் கூட மேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. 90 வீதமான அரிசி வெளியிலிருந்துதான் வந்தாகவேண்டும். நாம் அமர்ந்திருப்பது வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையில் மீது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வகையில் நேற்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அரச ஊழியர் சங்கத்தினால் முன்மொழியப்பட்டு முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் அச்சங்கமானது முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வற்கு தயார் என அறிவித்தனை நான் இங்கு மகிழ்சியுடன் அறியத்தருகின்றேன்.

எனவேதான் 15 லட்சத்திற்கு மேற்பட்டிருக்கின்ற அரச ஊழியர்கள் அனைவரும், தாம் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களிலோ அல்லது சொந்த இல்லங்களியோ ஒரு சிறுதுண்டு மரவள்ளித்தண்டையும் வற்றாளைக்கொடியின் சிறுதுண்டையும்கூட வீணாக்காமல் குறுகியகாலப்பயிராக ஊண்டுவோமென உறுதியெடுக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே எதிர்வரும் நெருக்கடியின்போது மூன்று நேர உணவு அல்லது இரண்டுநேர உணவு அதுவும் முடியாவிட்டால் ஒரு நேரத்திற்கு ஒரு கறியும் சோறுமாவது உண்ணும் நிலையில் இருப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் நாம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற நெருக்கடியின் உண்மையான நிலைமையாகும்.

இந்த நிலைமை புரியவில்லையானால் அவர்கள் எந்தவிதமான அறிவாற்றலும் அற்றவர்களென்றே கணிக்கப்படவேண்டும். மூன்று நான்கு மாதங்களுக்கு முன் அல்லது ஒரு வருடத்திற்கு முன்னர் காலையில் ஒரு கோப்பை பால்குடித்த நாம், அதை இன்று எமது பட்டியலிலிருந்து நீக்கியுள்ளோம். பாண் எமது பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மாலையில் வேலைமுடிந்து போகும்போது சிற்றுண்டியொன்றை வாங்கிச்செல்வது எமது பட்டியலிலிருந்து நீங்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியானது படிப்படியாக நெருக்கி கசக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எம்மை கொண்டுவந்துள்ளது. இது இதையும் தாண்டி இன்னும்போகும். வரவர நெருக்கடி கூடியே தீரும். எனவே நாம் இவ்விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு இது புத்தியில் உறைக்கவேண்டுமென்றால், இவ்வாறான அனர்த்தம் நிகழவே வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் திருந்தாத நாடு இது. இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஆகக்கூடியது 15 அமைச்சர்களுடன்கூடிய ஒரு நிர்வாக கட்டமைப்பில் அடுத்த ஆறு மாதத்திற்கு முன்நோக்கி போகலாம் என்பதுதான் எனது நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எங்களைப்போன்றவர்கட்கு மேலதிக செயலாளர்கள் நிலைக்குப்போவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆறு மாத காலமோ அல்லது ஒரு வருடகாலமோ அல்ல 6 வருடகாலமாயினும் இந்நாடு திருந்துமாக இருந்தால் எம்மால் அதனை தாங்கிக்கொள்ள முடியும்;. இந்த நாட்டை தூக்கி நிறுத்த முடியுமாக இருந்தால் நாம் இந்த பதவிகளை விட்டுப்போய் இதற்கு வேறுயாராவது வந்தாலும் பிணக்குகள் இல்லை. எது எப்படியோ, இந்த சிக்கலான அவசரமான சூழ்நிலைக்கு முகம்கொடுப்பதற்கென்றே ஒரு அவசரகால திட்டத்தை நாம் தயாரித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எம்மால் இதற்கு முகம்கொடுக்க முடியாது. சகல வரப்பிரசாதங்களையும் பின்போடத்தயாராக வேண்டும். உதாரணத்;திற்கு நேபாளத்தில் பின்பற்றப்பட்டதுபோல் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரத்தை எட்டும்வரை எவருக்கும் சம்பள உயர்வுகளோ நலன்களோ வழங்கப்படமுடியாது, கேட்கப்படமுடியாது என்ற நிலைக்கு நாம் வந்தேயாகவேண்டும்.

இன்று உங்கள் கையியுள்ள சொத்துக்களின் பெறுமதி வெறும் கடதாசித்துண்டுகளே. எனவே நாட்டின் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரம் என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் பின்பே இவை வழங்கப்படலாம் என்பதே ஜதார்த்தம். எனவே இந்த மீள்சீரமைப்பு நிகழ்சிநிரலின் கீழ் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் , பாராளுமன்றத்தில் தொடங்கி பிரதேச சபை மந்திரிகள் வரை மற்றும் அமைச்சின் செயலாளர்களில் தொடங்கி அவர் கீழிருக்கும்; சகல ஊழியர்கள் வரைக்கும் நீங்கள் ஏதாவது வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள மனதில் நினைத்திருந்தால் அதனை பத்துவருடங்களுக்கு பின்போட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமன்றி சகலரும் இந்த பொது நிகழ்சிநிரலுக்குள் பணியாற்ற தயாராகவேண்டும். அதாவது அரச பணியில் எந்த தரத்திலிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய வரிகளையும் , தங்களுடைய மின்சாரம்-நீர் பாவனைக்குரிய கட்டணங்கள் வரை சகலவற்றையும் உரியநேரத்தில் தவறாது செலுத்தவேண்டும்.

இது கேளிக்கைகளுக்கு செலவுசெய்யும் காலமும் அல்ல. சகல தொழல்சார் நிறுவனங்களும், நிபுணர்களும், சங்கங்களும் இந்த நிலைமையை இதயசுத்தியோடு திரும்பி பார்த்து இந்த அர்ப்பணிப்பை செய்யத்தாமாகவே முன்வருவதாக முன்மொழியவேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரச சேவையில் இருக்கின்ற நாமும் தெருவிலே மக்களிடம் உதை வாங்கவேண்டிவரும். இன்று நாடு ஓலமிட்டு வேண்டி நிற்கும் மீள்சீரமைப்பைப்பற்றித்தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றேன். இதை இந்த நாடு நீண்டகாலமாக வேண்டி நிற்கின்றது.

எம்மளவுக்கு படித்த , விடயங்கள் தெரிந்த ஆனால் எம்மளவுக்கு பொறுத்துப்பொறுத்துப்போகும் வழும்பல் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது. எனவே நாங்கள் பொறுத்திருந்தது போதும்! தொழில்சார் நிபுணர்கள் என்ற வகையில் நாம் இன்று கடுமையாக அழுத்திக்கூறவேண்டியது யாதெனில், உடனடியாக இந்த சீரமைப்பு திட்டங்கள் யாவும் சட்டமாக்கப்படவேண்டும். ஏனென்றால் இலங்கையில் வாய்கிழியப்பேசி உருவாக்கப்படுகின்ற தேசிய கொள்கைகத்திட்டங்கள் யாவுமே இறுதியில் குப்பைக்கூடத்தில் வீசப்படுவதைத்தான் நாம் பார்த்து வந்திருக்கின்றோம், பொறுத்து வந்திருக்கின்றோம். எனவே, இவை சட்டமாக்கப்படவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் நலன்கள் சலுகைகள் அனைத்தும் பாராளுமன்ற சட்டத்திற்கூடாக வரையறுக்கப்படவேண்டும். அரசாங்கத்தால் அனைத்து சட்டங்களும் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றப்படமுடியாதவாறு கொள்கையாக பிரகடனப்படுத்தப்படவேண்டும். படுமோசமான, எந்தவித பொறுப்புமற்று அபிவிருத்தித்திட்ட கொள்கைவகுப்புக்கள், நிர்வாக கட்டமைப்பு , ஆட்சேர்ப்பு போன்ற நீண்டகால அதிகார துஷ்பிரயோகத்தின் பிரதிபலனையே நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். இன்று அரச சேவையின் சுமையினை தூக்க முடியாத நிலைக்கு இந்த நாடுவந்திருக்கின்றது. இதற்கு பரிகாரம்தேடுவதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டியதில்லை.

2004ம் ஆண்டளவில் அரச நிர்வாக சேவை அதிகாரியாக இருந்த பொழுது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குக்கும் விடயத்தில் அன்றிருந்திருந்த ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் , இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவினை மாதமொன்றுக்கு வழங்கி அவர்களை வேறெங்காவது தொழில்புரிய பணிக்குமாறு அலோசனை வழங்கினேன் என்பது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது . அதற்கு காரணம் அன்று அறுபது ஆயிரம்பேரை அரசசேவையில் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது நான் ஓய்வுதியம் செல்லும்போது எனக்கு ஒய்வூதியம் கிடைக்காது என அச்சப்பட்டேன். அது இன்று நிஜமாகி, நேரடியாக முகம்கொடுத்து நிற்கின்றேன். இந்த அரச வேவையானது ஐந்து லட்சத்திலிருந்து ஆகக்கூடியது எட்டு லட்சமாக இருந்தால் மட்டுமே சாத்திமாக இருக்கும் என்பது அன்றே எனக்கு புரிந்துகொள்ளக்கூடியாதாக இருந்தது. இன்று எம்கண்முன்னே அந்த ஆபத்து நிதர்சனமாகியுள்ளது.

இன்று ஓய்வூதியம் பெறும்ஒருவர் வெறுமனே ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் எதுவுமின்றி வெறும் ஓய்வூதியம் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். இன்று இந்த ஊக்குவிப்பு பணத்தை யாரிடம் போய்க்கேட்கப்போகின்றீர்கள். அங்கே அலுவலகத்தில் அமர்ந்திருக்கின்றவர்களிடம் ஊக்குவிப்பு பணம் கொடு என்றா கேட்கப்போகின்றீhகள்? வெளியே தொழிற்சங்கங்கள் கோஷமிடுகின்றார்கள் என்பதற்காக பணத்தை கொடுப்பதற்கு அந்த ஊழியரிடம் பணமேதுமில்லை. சம்பளஉயர்வு கோரிக்கை வந்தவுடன் வங்கிகளில் ஓவர்ட்றாப்பில் பணத்தை பெறுவது, பின்னர் வங்கிகளின் பணத்தை கொடுப்பதற்காக பணத்தை அச்சடிப்பது போன்ற கோமாளித்தனத்தை தொடர்ந்து செய்யமுடியாது. எனவே இந்த தசாப்பதம் என்பது அனைவரும் தியாகங்களை மேற்கொள்ளவேண்டிய தசாப்தமாகும்.

இன்று சகல பன்சலைகளும் , கோவில்களும், பள்ளிகளும் , தேவாலயங்களும் வழிபாடுகளை நிறுத்திவிட்டு நிலத்தை கொத்தி விவசாயம் செய்யவேண்டும். சகல பாடசாலைகளும் சகல ஆசிரியர்-பெற்றோர் சங்கங்களும் விவசாயம் செய்யவேண்டும். சுகல அரச நிறுவனங்களும் விவசாயம் செய்யவேண்டும். கடந்த காலத்தில் தலைக்குள் கொண்டுதிரிந்த பாழாய்ப்போன எண்ணங்களை தூக்கி வைத்துவிட்டு நேரமில்லை , எரிபொருள்இல்லை , உடலை வளைக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிராமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். இதை உங்களால் செய்ய முடியாது விட்டால் உங்களுக்கு அருகிலுள்ள ஒருவருக்கு அந்த நிலத்துண்டை கொடுங்கள் எதாவது விதைக்கட்டும்.

அடுத்ததாக தங்களுக்கான மேலதிக நலன்களை 10 வருடங்களுக்கு பின்போடுமாறு எல்லோம் இணைந்து முன்மொழியுங்கள். தொழிற்சங்கங்கள் உட்பட சகல சங்கங்களும் முழுமையாக ஒரு றாத்தல் இறைச்சியைத்தாருங்கள் என கோரிக்கை வைக்கக்கூடிய காலமல்ல இது. எனவே இந்த நாட்டை சீரமைத்து தூக்கி நிறுத்த வேண்டுமென்றால், தூக்கிநிறுத்திய மாபெரும்பணியில் பங்காளர்கள் ஆகவேண்டுமென்றால் ஆகக்குறைந்தது பத்துவருடங்களுக்கு எமது நலன்களையும் நேரத்தையும் தியாகம் செய்யவேண்டியவர்களாகவுள்ளோம். அப்படியானால் மட்டுமே ஆகக்குறைந்தது எதிர்காலசந்ததியினராவது இந்த நாட்டில் தலை நிமிர்ந்து சுயகௌரவத்துடன் வாழமுடியும். எனவே நாம் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த நற்பணியில் கைகோர்த்து கொள்வோம்.

தமிழாக்கம் மனோரஞ்சன்


1 comments :

Anonymous ,  June 7, 2022 at 10:45 PM  

Please please collect all the looted money from those who took the govt funds and distribute to the people in need to avoid the troubles they are facing right now don't think it will come through the sky

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com