Saturday, June 19, 2021

தோழர் நாபா எனும் வரலாற்றுச்சுடர் 🕯

1990ஜுன் 19ம் நாள் எப்போதும் எமது நினைவுகளில் நிலைத்திருக்கும். எமது மக்களுக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பினைக் குறிக்கும் நாள் அந்நாள். 1990 ஜுன் 19 தோழர் பத்பநாபா அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

தோழர் பத்மநாபா சிறந்த மனிதர், ஆளுமை மிக்க தலைவர், அன்பு நிறை தோழர். வரலாற்றின் ஏடுகள் கறை படுத்தப்பட்ட அந்த கருப்பு நாளில் எமது இதயங்களை சோகத்தால் நிறைத்த அந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்த அந்த நிமிடங்களில், தன்னோடு இருந்த சக தோழர்களின் முன்னணியில் காப்பரணாக நின்று பாசிசப்புலிகளின் முதற் குண்டுமாரியைத் தன்நெஞ்சிலே ஏற்று, சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, அவர் மரணித்த பொழுது அந்த மரணத்திலும் அவரது ஆளுமையே வெளிப்பட்டது.

ஆம்... தோழர் நாபா அவர்களின் ஆளுமை, சகலரையும் கவர்ந்திழுக்கும் சிறப்பியல்புகள் மற்றும் தலைமைத்துவத் தனிப்பெரும் பண்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மற்றும் ஈழத்தமிழர் சமூகக் கட்டமைப்புக்குள்ளேயே சுரண்டலுக்கெதிராகவும், சாதீய ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும் நடைபெற்றுவரும் வர்க்கப் பேராட்டம், இவற்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வகித்து வரும் பிரத்தியோகமான பாத்திரம் போன்ற ஈழப்போராட்டக் களத்தின் பரந்துபட்ட சூழலில் அவரை இருத்தி வைத்து, வரலாற்றியல் ரீதியாக ஆய்வு செய்வது மிக மிக அவசியமாகும்.

ஏனெனில் தனது நாட்டு மக்களுக்காகவும், கட்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த அவர், இறுதியாகத் தன் இன்னுயிரையும் அதற்காகவே பலி கொடுத்தார். மக்களிலிருந்தும் கட்சியிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று அவருக்கு இருந்ததே இல்லை.

1951 நவம்பர் 19ம் நாள் காங்கேசன்துறையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் தோழர் பத்பநாபா பிறந்தார். நிலையானதும் வசதிமிக்கதுமான சிறந்த குடும்பச் சூழ்நிலைகள் அவருக்கிருந்த போதிலும் நடுத்தர வர்க்கத்திற்கே உரிய சுயநல வாழ்வியல் கண்ணோட்டத்தைத் தவிர்த்து பொதுவாழ்வில் நாட்டங்கொண்டார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டுகளின் இடைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாதீய எதிர்ப்பு இயக்கம்தான் தோழர் பத்மநாபாவின் ஆளுமையை வெளிக்கொணர்ந்த முதல் சமுதாய இயக்க நடவடிக்கை எனலாம். சாதீய வரட்டுப் பிடிவாதம் நிறைந்த யாழ்ப்பாண சமூகத்தின் பழமைவாதப் போக்கிற்கும், சமூகக் கட்டமைப்பின் பின்னடைந்த நிலைமைகளுக்கும் இந்த சாதீய எதிர்ப்பியக்கம் மாபெரும் சவாலாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

தோழர் நாபா அவர்களின் குடும்பம் மேலாதிக்கம் நிறைந்த வெள்ளாளர் சாதியைச் சேர்ந்ததாக இருந்தபோதிலும், மனிதப் பண்பற்ற சாதீயச் சீரழிவுகளை உள்ளியல்பாய்க் கொண்டிருந்ததும், பெருமளவில் சாதிப் பித்தும், பிடிப்பும் நிறைந்து விளங்கியதுமான சமுதாயத்தின் மீது உணவுமயமான வெறுப்பும் கொதிப்பும் உடையவராய் விளங்கினார் தோழர் நாபா.

பரந்துபட்ட இடதுசாரி மற்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அறிவுஜீவிகளை ஆட்கொண்டிருந்த இச்சாதீய எதிர்ப்பியக்கமானது, அந்த காலக்கட்டத்தில் இளைஞராய் இருந்த தோழர் நாபா அவர்களின் மீது பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த சாதீய எதிர்ப்பியக்கத்தின் முக்கியமான மையங்களில் ஒன்றான மாவிட்டபுரம் இந்து ஆலயம். நாபா வசித்து வந்த பகுதியில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடப்படுவது அவசியமாகும். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஆலயத்திற்குள் பிரவேசிப்பதை தடுத்து வந்த அபகீர்த்தி மிக்க ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

தோழர் நாபா அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் எழுபதாம் ஆண்டுகளின் ஆரம்பக் காலங்களிலும் கிளர்ந்தெழுந்த மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டார். உலகம் முழுவதும் மாணவர் இளைஞர் இயக்கங்கள் எழுச்சிபெறத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.

உலகெங்கும் இருந்த இளைஞர் இயக்கங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வியட்நாம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதே சமயம் அந்தந்த நாடுகளின் சமூகப் பொருளாதார பிரத்தியேகச் சூழலைப் பொறுத்து இவ்விளைஞர் மாணவர் இயக்கங்கள் உள்நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாய் இருந்தன.

சீறிலங்கா நிலைமைகளைப் பொறுத்தமட்டில் இத்தகைய இளைஞர் இயக்கங்கள் வேவைலயின்மை மற்றும் நிலம் இன்மை ஆகியவற்றின் நேரடி விளைவாகத் தோன்றின. தமிழ் இளைஞர்களைப் பொறுத்த மட்டில் இக்காரணங்களுடன் கூடவே, நிலப்பகிர்வு. கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் அரசு காட்டிய பாரபட்சமானது, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போல தமிழ் மாணவர் இளைஞர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களுக்குக் காரணமாய் அமைந்தன.

வரட்டுத் துணிச்சல், வீரசாகச இயல்புடைத்தாயினும், 1971ல் ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) சிறீலங்கா அரசியலில் ஆயுதமேந்திய போராட்டத்திற்கான அடிப்படைக் கூறுகளை முதன் முதலாகப் புகுத்தியது. தமிழ்த் தேசிய இயக்கத்தைப் பொறுத்தமட்டில் ஆயுதப் போராட்டத்தின் அறிமுகம் என்பது அதன் உருவாக்க நிலையிலேயெ இருந்தது. சாத்வீக ரீதியான போராட்டங்களுக்கே அதிகம் அழுத்தம் தரப்பட்டது. இந்தியாவின் நேரடி உதவியுடன் பங்களாதேஷ் விடுதலை பெற்ற சம்பவம் இந்திய அம்சத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்திருந்தது.

1972 வாக்கில் தோழர் நாபா மற்றும் அவர்தம் தோழர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவை தமிழ் மக்களின் எழுச்சிக்கும் மீட்சிக்குமான பக்குவமான உள்நாட்டுச் சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் தெளிவான கருத்துடன் செயற்பட்டது. சர்வதேசியக் கண்ணோட்டத்துடன் தேசியப் பிரச்சினைகளை அணுகும் கொள்கை வழியை இப்பேரவை கடைப்பிடித்தது. ஏனைய நாடுகளில் இருந்த தேசங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் இப்பேரவை அக்கறை காட்டியது.

சர்வதேச நிலைமைகளைப் பற்றி பெருமளவுக்கு தெளிந்த விடயஞானத்துடன் கூடிய, போர்க்குணமிக்க இளைஞர்கள் சமூக நடவடிக்கைகளில் பங்குபற்றத் தொடங்கியிருந்த காலகட்டமாகும் அது. மாணவர்கள், இளைஞர்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்ட மிருகத்தனமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலும், 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிகளைக் காணக் கூடியிருந்த தமிழ் மக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும்தான் தமிழ் இளைஞர்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஆயுதமேந்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஆரம்பக் கூறுகள் சேர்ந்திடக் காரணமாயிருந்தன.

இம்மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைப்புப் பணிகளைக் கவனிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொண்டர் படையில் தோழர் பத்மநாபா அங்கம் வகித்தார். நிராயுதபாணிகளாய் இருந்த மக்கள் மீது, அதிலும் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கூடியிருந்த மக்கள் மீது, அரசின் அதிகாரம் காட்டுமிராண்டித்தனமாக பிரயோகிக்கப்படுவதை நேரில் கண்டு கொதிப்படைந்தார் தோழர் நாபா.

தமிழ் மக்களுக்கெதிரான சிறீலங்கா ஒடுக்குமுறைக்கெதிராக ஆயதமேந்திய எதிர்ப்புப் போராட்டத்தின் அவசியத்தை தோழர் நாபா ஏற்றுக்கொள்ள இந்நிகழ்ச்சிகள் காரணமாயிருந்தன என்றால் அது மிகையாகாது. ஒருபுறம் வெறும் தனிமனித பயங்கரவாதத்திற்கும், மறுபுறம் சந்தர்ப்பவாத பாராளுமன்ற அரசியலுக்கும் மேலாகச் சென்று மக்களது நலன்களைப் பாதுகாக்கப் போராடக்கூடிய ஒரு சரியான தாபனத்தைக் கட்டியமைக்க எழுபதாம் ஆண்டுகளின் இடைக்காலத்திலிருந்து தோழர் நாபா தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். இம் முயற்சிகளின் விளைவாக ஈழ விடுதலை அமைப்பு| (ஈ.எல்.ஓ) உருவானது. தோழர் நாபாவுடன் சேர்ந்த இவ்வமைப்பினை உருவாக்கியவர்களில் தோழர் வரதராஜப்பெருமாள் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும் அரசின் ஒடுக்குமுறை காரணமாகவும், ஈ.எல்.ஓ.வின் இயல்பிலிருந்து பலவீனங்கள் மற்றும் அதன் குறிப்பிட்ட வரையறை காரணமாகவும் ஈழ விடுதலை அமைப்பு செயலற்றுப் போனது.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் நாபா விடுதலை செய்யப்பட்டவுடன் லண்டனுக்குச் சென்று விட்டார். தங்களது ஒரெ வாரிசான பத்மநாபா மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதில் அவரது பெற்றோர்கள் கவனமாய் இருந்த போதிலும், லண்டனில் இருக்க நேர்ந்த காலகட்டத்திலும் தோழர் நாபா தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

லண்டனை மைய இடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ஈழப் புரட்சிகர அமைப்பின் (ஈ.ரோஸ்) தலைவர்களுடன் தோழர் நாபா அவர்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இதே காலகட்டத்தில் இனவெறி எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தாருடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

தோழர் நாபா லண்டனில் இருந்த காலத்தில்தான் தற்போதைய செயலாளர் நாயகம் தோழர் பிரேமச்சந்திரன் அவர்களையும், எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தோழர் நாபாவுடன் பலியான சக தோழர்களில் ஒருவருமான தோழர் யோகசங்கரி அவர்களையும் சந்தித்தார்.

தோழர் நாபா லண்டன் சென்றடைந்த சில மாதங்கள் கழித்து, அவர் தோழர் பிரேமச்சந்திரன் உட்பட 13 தோழர்களுடன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் பயிற்சி பெறுவதற்காக லெபனான் புறப்பட்டுச் சென்றார். பயிற்சி முடிந்தவுடன் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த தோழர் நாபா இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அமைப்பு ரீதியாக இளைஞர்களைத் திரட்டி அவர்களை அரசியல் ரீதியாகப் பயிற்றுவித்து, சரியான அரசியல் - ராணுவ யுத்த தந்திரத்தை உருவாக்கி, சமுதாயத்தின் பரந்துபட்ட மக்கள் பிரிவினரையும் ஆட்கொள்ளத்தக்கதும், தனிமனித பயங்கரவாதத்திற்கும், பாராளுமன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் அப்பாற்பட்டு செயற்படக்கூடியதுமான ஒரு சரியான தாபனத்தைக் கட்டியமைத்திட அரும்பாடுபட்டு உழைத்தார். உழைக்கும் வர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் பற்றிய நேரடி அனுபவம் பெறும் பொருட்டு, இக்கால கட்டங்களில் தோழர் பத்பநாபா விவசாயக் கூலியாளாகவும் கல்லுடைக்கும் தொழிலாளியாகவும் தானே சென்று அவர்களுடன் சேர்ந்து உழைத்தார். பிற்காலத்தில் உருவாக்கப்பட இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு சரியானதும், வலுவானதுமான அடித்தளங்களை ஏற்படுத்த உதவியாக இருந்ததும், 70 ஆம் ஆண்டுகளின் இறுதிக்காலங்களில் நிகழ்ந்தவையுமான மேலும் இரண்டு அம்சங்களை இங்குக் குறிப்பிடுவது அவசியமாகும்.

1977ல் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கெதிரான படுகொலைகள், இதன் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறத் தொடங்கியது. மற்றும் குடியுரிமை மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பி தமிழ் நாட்டில் குடியமர்த்தப்பட்டது ஆகிய நிகழ்ச்சிகள் முதலாம் அம்சமாகும்.

1978ல் ஏற்பட்ட புயலும் அதனால் கிழக்கு மாகாணம், குறிப்பாக மட்டக்களப்பு பெரும் நாசத்திற்குள்ளானது இரண்டாவது நிகழ்ச்சியாகும்.

மலைநாட்டுத் தமிழர்களை பொறுத்தமட்டில் குடிபெயர்வதோ, தாயகம் திரும்புவதோ பிரச்சினை தீர வழியாகாது என்ற உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார். பாட்டாளி வர்க்கம் என்ற முறையிலும், தேசிய சிறுபான்மையினர் என்ற வகையிலும் மலைத்தோட்டத் தமிழ் மக்களின் உரிமைகள் காக்கப்படுவது என்பது பரந்துபட்ட தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பிரிக்கமுடியாத ஒரு உள்ளடக்கக் கூறாகவும் இருப்பதினூடாகவே சாத்தியம் என்ற கொள்கைநிலையைக் கொண்டிருந்தார் தோழர் நாபா.

தோட்டத் தொழிலாளர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்படுவதையும் எதிர்த்தார். ஏனெனில் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள் நில உடமையாளர்களால் கொத்தடிமைகள் ஆக்கப்படும் அவலமும், ஊழல் நிறைந்த அலுவலர்களால் துன்புறுத்தப்படுவதும், தாயகம் திரும்பியோரின் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாய் மாற்றிவிடுவதை அவர் நேரடியாக கண்டு உணர்ந்திருந்தார்.

தாயகம் திரும்பியவர்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலைமைகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள அதற்கென்று ஒரு அமைப்பினை ஏற்படுத்துவதில் தோழர் நாபா முக்கிய காரணியாக விளங்கினார். மலைநாட்டில் இருந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர் மத்தியில் செயற்பட்ட தொழிற்சங்கங்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட அறிவுஜீவிகளுடனும் தொடர்பு கொண்டு செயற்பட்டார். இதே காலக்கட்டத்தில்தான் சிங்கள இடதுசாரி சக்திகளுடனும் இவருக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. இடதுசாரிகளுடனும், தொழிற்சங்க இயக்கங்களுடனும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களின் திரட்சி, தோழர் பத்மநாபாவின் மீது பாராதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தோட்டத் தொழிலாளர் மத்தியில் அவராற்றிய அரசியல் கடமைகளின் கூடவே, கிழக்கு மாகாணத்தில் நிலவிய குறுகிய பிராந்திய வெறிக் கண்ணோட்டங்களுக்கெதிராகவும் தீவிரமாக செயற்பட்டார். 1978ல் ஏற்பட்ட புயலால் அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். தோழர் நாபா யாழ்பாணத்தில் இருந்து ஒரு தொண்டர் குழுவுடன் மட்டக்களப்புக்குச் சென்று மக்கள் துயர்துடைக்கும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

அகதிகள் மறுவாழ்வுப் பணிகளின் போதுகூட சிங்கள இனவெளறியின் கோர முகத்தையே அவரால் காண முடிந்தது. சகல அரசு சார்ந்த மறுவாழ்வு நிறுவனங்களும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டன. புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிங்களவர்களிடம் அதிக பட்சமான கரிசனம் காட்டப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கூட சிங்கள இனத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு திருப்பி விடப்பட்டது. இத்தனை கடினமான சூழ்நிலையிலும் தோழர் நாபாவும் அவரது தொண்டர் குழுவினரும் பலவகையிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவினர். இன்றைக்கும் கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கு நல்லதொரு தளம் இருக்கிறதென்றால், அதற்கு தோழர் நாபாவின் தன்னலமற்ற தொண்டும் சேவையும் பிராந்திய வெறிக்கெதிராக அவர் நடத்திய உறுதிமிக்க போராட்டங்களும் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் லண்டனில் மையங்கொண்டு இயங்கி வந்த ஈரோஸ் இன் தலைமை, உள்நாட்டில் உருவாகி வந்த தலைமையின் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. முதலாவது சிறீலங்காவில் நிலவும் பிரத்தியேகமான எதார்த்தங்களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சரியானதும் முழுமையானதுமான அரசியல் தாபன வேலைத்திட்டம் இல்லை என்பதும், தாபனக் கூட்டமைப்பிற்குள் ஜனநாயக மத்தியத்துவம் போன்ற உட்கட்சி ஜனநாயக தாபன நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதுமே பிரதான விமர்சனங்களாக எழுந்தன. இதன் காரணமாக ஒரு பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க தோழர் நாபா தன்னால் இயன்றதனைத்தையும் செய்தார். எனினும், லண்டன் தலைமையின் பிடிவாதப் போக்கினால் ஒரு சுமூகமான முடிவு ஏற்படுவது சாத்தியமற்றதாகிவிட்டது.

இதன் காரணமாக பெரும்பான்மையினரான மாற்றுக்கருத்தினர் ஈரோஸில் இருந்து பிரிந்து சென்று, 1981 அக்டோபரில் நடைபெற்ற அமைப்பாளர்கள் மாநாட்டில் தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்துவது என்று முடிவு செய்தனர் இதன் பலனாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது.

தன்னலமில்லா தகைமையாளராகவும் தனிப்பெரும் தலைமைத்துவப் பண்புகள் நிறைந்தவராகவும், தாபனக் கலைதிறன் மிக்கவராகவும் விளங்கிய தோழர் பத்பநாபா அதன் செயலாளர் நாயமாக தேர்வு செய்யப்பட்டார். 1981ல் நடைபெற்ற அமைப்பாளர்கள் மாநாட்டில்தான் தோழர் நாபா, கட்சிக்கும் அதன் வெகுஜன முன்னணிகளுக்கும் இடையிலான உறவு நிலை எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்தார்.

ஆரம்பக்கால கட்டங்களில் கட்சி தலைமறைவாக இருந்து கொண்டு வெகுஜன முன்னணி அமைப்புகளின் மூலம் தனது அரசியற் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் பிரிவினரையும், அறிவிஜீவிகளையும் ஒன்றுதிரட்ட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கிருந்தது. இந்தக் கருத்தினை கவனத்தில் கொண்டுதான் ஈழ மாணவர் பொது மன்றமும் ஏனைய வெகுஜன தாபன முன்னணிகளும் அமைக்கப்படுவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கீழ்க்கண்ட அமைப்புகளை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

(அ) கிராமிய தொழிலாளர் விவசாயிகள் முன்னணி, (ஆ) பெருந்தோட்டப் பாட்டாளிகள் முன்னணி, (இ) ஈழப் பெண்கள் விடுதலை முன்னணி, (ஈ) கடற்தொழிலாளர் சங்கம் முதலியன.

இராணுவ நடவடிக்கை பற்றிய திட்டம் உருவாக்கப்படும்போது தோழர் நாபா ஒரு தனியான ராணுவப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவான நிலை எடுத்தார். இதில் சேர்க்கப்படுவோர் குறிப்பிட்ட காலத்திற்கு அரசியல் ஸ்தாபன பணிகளில் ஈடுபட்டு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அவர்கள் வெகுஜன முன்னணி அமைப்புகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. பரந்துபட்ட அரசியல் சமூக லட்சியங்களுக்கு உட்பட்டதாகவே ஆயுதத்தின் முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஆயுதமேந்தியிருப்பவர்கள் நலன்களில் அக்கறையுடையவர்களாகவும், மக்களது உணர்வுகளை மதித்தும், மக்களது தேவைகளை உணர்ந்தும் செயற்படக்கூடியவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த அடிப்படையில் மக்கள் விடுதலைப் படை (பி.எல்.ஏ) அமைப்பது என்ற முடிவு செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். ஒரு பிரதானமான அரசியல் ராணுவ அமைப்பாக வெளிப்படத் தொடங்கி இருந்த காலகட்டத்தில் 1984ல் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில், மார்க்சீய சித்தாந்தத்தை ஈழக் களத்தில் சரியாக கையாளுவது எவ்வாறு என்பதை தோழர் பத்மநாபா தெளிவுபடுத்தினார்.

கட்சிக் காங்கிரசில் அவர் தலைமையுரையாற்றிய போது பின்வருமாறு குறிப்பிட்டார்: "எமது தேசத்தினதும், மக்களதுமான வரலாற்றை விஞ்ஞான பூர்வமாகவும், சரியானபடியும் விளங்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பதிலேதான் எமது போராட்டத்தில் மார்க்சிசம்-லெனினிசத்தின் பங்களிப்பு அடங்கியுள்ளது.......மார்க்சிசம் லெனினிசத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கிய தொடக்ககாலக் கட்டங்களில் நாங்கள் பல தவறுகளைச் செய்தோம் என்பது உண்மைதான். மக்கள் தொடர்பு இயக்கங்களினூடாகவும், விமர்சனம் சுயவிமர்சனம் என்ற நெறிமுறையைக் கடைப்பிடிப்பதினூடாகவும் இத்தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், அவை பெரிய வடிவமெடுத்துவிடாமல் தடுப்பதற்கும் எங்களால் முடியக் கூடியதாய் இருந்தது. இதனூடாகத்தான் இப்போதுள்ள அளவுக்கு எமது தாபனத்தைக் கட்டியமைக்க எம்மால் முடிந்தது..."

இலங்கை ஆட்சியாளர்கள் ராணுவத் தீர்வை தீவிரப்படுத்தியபோது, ஈழப் போராட்ட சக்திகளின் எதிர்ப்பு இயக்கம் ராணுவ வடிவம் எடுத்த சூழ்நிலையில், குறிப்பாக 1983 ஜுலைப் படுகொலைகளுக்குப் பிறகு, பல்வேறுபட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கிட தனது முழுக் கவனத்தையும் செலுத்தி உழைத்தார் தோழர் நாபா.

தொடர்ந்து நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 1984 ஏப்ரலில் ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.எல்.எப்) உருவாக்கப்பட்டது. பிரதானமாக ஈ.என்.எல்.எப். என்பது ஈரோஸ், டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவை அடங்கிய ஐக்கிய முன்னணியாக அமைக்கப்பட்டது. எல்.டி.டி.ஈ. அடுத்து வந்த ஆண்டில் ஈ.என்.எல்.எப். அணியில் சேர முடிவெடுத்து, 1985 ஏப்ரலில் ஈ.என்.எல்.எப். இன் ஒரு அங்கமாக ஆனது.

இது ஈழப் போராட்ட வரலாற்றை இரண்டாகப் பிரித்துக் காட்டும் ஒரு வரப்பாக அமைந்தது. இந்தியா மத்தியஸ்தராக இருந்து 1985ல் ஏற்பாடு செய்யப்பட்ட 'திம்பு' பேச்சு வார்த்தையின் போது ஈழப்போராட்ட சக்திகள் ஒரே குரலில் பேச முடிந்தது. தமிழர் பிரச்சினையில் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள இயலாத தீர்வை ஒரு தரப்பாக திணிக்க சிறீலங்கா அரசு செய்த முயற்சிகளை முறியடித்து அதன் முகத்திரையைக் கிழிக்க முடிந்தது. திம்புப் பேச்சுவார்த்தையில் தோழர் பத்மநாபாவின் பங்கு மகத்தானது அவர் பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும், அவரது வழிகாட்டுதலே அப் பேச்சுவார்த்தையில் எமது திசை வழியைத் தீர்மானித்தது எனலாம். சகோதர இயக்கங்களின் தலைவர்களுடன் இடைவிடாமல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு பேச்சு வார்த்தையிலும், பின்வரும் காலங்களிலும் ஒன்று பட்ட அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

தோழர் பத்மநாபா ஒற்றுமையை வலியுறுத்தி வந்தது என்பது, எல்.டி.டி.ஈ. சில சமயங்களில் பேசி வந்த ஒற்றுமை பற்றிய கருத்தைப் போல நடைமுறைத் தந்திரோபாயம் சம்பந்தப்பட்டதல்ல உண்மையானதும், உணர்வுப் பூர்வமானதுமாகும்.

ஈழப் போராட்டத்தில் வலுவான அடித்தளமாக ஒற்றுமைதான் விளங்க முடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தார் தோழர் பத்மநாபா. துரதிர்ஷ்டவசமாக எல்.டி.டி.ஈ. தனது மேலாதிக்கத்துக்கான பாதையில் ஈ.என்.எல்.எப். ஒரு தடையாக இருப்பதாக கருதியது. எனவே எல்.டி.டி.ஈ. அமைப்பு ஈ.என்.எல்.எப். இல் சேர எடுத்த முடிவு உள்ளிருந்து கொண்டே அதனைச் சீர்குலைத்து முடமாக்கும் நோக்கம் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் அமைப்புகளுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு தோழர் நாபா பிரதான முக்கியத்துவம் கொடுத்த போதிலும், ஒற்றுமைக்காக வேண்டி சில அடிப்படையிலான கொள்கை சம்பந்தப்பட்ட வேற்றுமைகளை விட்டுக்கொடுக்க அவர் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.

அனுராதபுரத்திலும் ஏனைய இடங்களிலும் எல்.டி.டி.ஈ. அப்பாவி சிங்களப் பொதுமக்களைப் படுகொலை செய்ததை வன்மையாகக் கண்டித்தார். அத்தோடு ஏனைய சில இயக்கங்களில் பெருகி வந்த உட்கொலைகளையும், சகோதரப் படுகொலைகளையும் கண்டிக்க அவர் ஒருபோதும் தயங்கியது இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்தொருமிப்பை உருவாக்குவதற்கும், ஜனநாயகம், சமத்துவம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாய மாற்றத்தை சிறீலங்கா மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கத் தக்கதும், குறுகிய தமிழ் தேசிய வாதக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதுமான ஒரு சரியான அரசியல் இராணுவ யுத்த தந்திரோபாயத்தை உருவாக்குவதற்காகவுமே ஈ.பி.ஆர்.எல்எப். ஆனது இந்த ஐக்கிய முன்னணியை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான கருத்துடையவராய் திகழ்ந்தார்.

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் செயற்படும் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளையும் ஆட்படுத்தக் கூடியதான ஒரு மதசார்பற்ற - ஜனநாயகத் தீர்வுக்கான கருத்தொருமிப்பை உருவாக்க வேண்டும் என்பதிலும் அவர் மிகவும் குறிப்பான அக்கறையுடன் செயற்பட்டார்.

இறுதியில் 1986ம் ஆண்டின் பிற்பகுதியில் ஈ.என்.எல்.எப். சீர்குலைந்த போது, தோழர் நாபா நம்பிக்கையை இழந்துவிடவில்லை. 1987ம் ஆண்டில் ஈழப் போராட்ட சக்திகளில் இருந்த இடதுசாரி பிரிவுகளை ஒற்றுமைப்படுத்த ஈ.பிஆர்.எல்.எப். எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தோழர் பத்மநாபா அவர்களே காரணமாவார். இடதுசாரி சந்தர்ப்பவாதம் மற்றும் வரட்டுச் சூத்திரவாதப் போக்குகளின் காரணமாக இம்முயற்சிகள் உடனடிப் பலனளிக்க இயலாது போனபோதிலும், எதிர்காலத்தில் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கான அடித்தளமிட்டுள்ளது இந்த வகையில் எமது அருமைத் தோழர் பத்மநாபா அவர்கள் எடுத்துக் கொண்ட முன் முயற்சிகள் சரியானவை என்பதை காலம் நிரூபிக்கும் என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான பின் வந்த கால கட்டங்களில்தான் தோழர் பத்மநாபா இந்திய அம்சம் என்பதன் சாராம்சத்தை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டினார். சாரம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையுடைய வெளியுறவுக் கெர்ளகையைக் கடைபிடிக்கின்ற காரணத்தால் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கென்று சில நியாயமான கடமைகள் உண்டு என்ற நிலையை தோழர் பத்மநாபா எப்போதும் உறுதிபடக் கூறிவந்தார். இந்த சாதகமான அம்சத்தை சிறீலங்கா இடதுசாரி, முற்போக்கு சக்திகள், துரதிர்ஷ்டவசமாக பயன்படுத்திக் கொள்ள முழுமையாகத் தவறிவிட்டன. சிங்கள இனவெறி சக்திகள் ஏற்படுத்திய நிர்பந்தமான சூழ்நிலைகளே இதற்கு காரணமாகும்.

தோழர் பத்மநாபா தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இந்தியாவின் பாத்திரத்தைப்பற்றி சரியான நிலை எடுத்தது. தோழர் பத்மநாபாவும் அவரது கட்சியும் லத்தீன் அமெரிக்க சாண்டினிஸ்டா இயக்கத்தவரோடும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தாரோடும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் பொலிசாரியோ இயக்கத்தாரோடும் கொண்டிருந்த ஈடுபாடும் தொடர்புகளுமே பெருமளவுக்கு இந்தியா குறித்த சரியான நிலை எடுக்க உதவின எனலாம்.

ஏனெனில் காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம், மற்றும் மதவெறி, இன-வெறிக்கெதிரான போராட்டங்களுக்கு இந்தியா காட்டிவரும் ஆதரவு குறித்து பாராட்டுதல் தெரிவித்து வருவதுடன் இந்தியாவின்பால் ஆழ்ந்த பற்றும் மதிப்பும் வைத்தள்ளனர் என்பது நடைமுறை உண்மையாகும்.

சிறீலங்காவில் உள்ள தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில் அந்நியத் தலையீடு தவிர்க்க இயலாததாயின், அது இந்தியாவாகவோ அல்லது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குள்ள நியாயமான கவலைகளை ஏற்றுக் கொண்டுள்ள சக்திகளின் குழுவாகவோதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியான தெளிவான கருத்துக் கொண்டிருந்தார் தோழர் பத்மநாபா.

இந்தியாவின் கூட்டாளிகள் என்றும், இந்தியாவின் உளவாளிகள் என்றும் எங்கள் மீது பட்டம் சூட்டி இழிவுபடுத்த சிலர் முயன்ற போதிலும் தோழர் நாபா அவர்களோ ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில், எங்களை இவ்வாறு விமர்சித்தவர்கள் தான் உண்மையில் ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளாகவும், கூட்டாளிகளாகவும் உள்ளனர் என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று ஈ.பி.ஆர்.எல்.எப் முடிவு செய்தபோது, தோழர் பத்மநாபாதான் மக்கள் தொடர்பு இயக்கத்திற்கான முழக்கமாக. "சமாதானம், ஜனநாயகம், ஒற்றுமை" என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

எல்.டி.டி.ஈ. யின் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது மக்கள் பெருமளவுக்கு வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களித்தபோது இம்முழக்கம் சரியானதுதான் என்பது நிரூபணமாயிற்று. தனியாகவே அரசமைக்கப் போதுமான பெரும்பான்மை ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கு இருந்த போதிலும் பல்வகைப்பட்ட சக்திகளையும் உள்ளடக்கிய மதச் சார்பற்ற அரசமைக்கும் நோக்கத்துடன் கூட்டு மந்திரி சபையே அமைக்கப்பட்டது. இது தேசம் முழுவதுக்குமே ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. வடக்கு-கிழக்கு மாகாண அரசின் முதன் மந்திரியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்ட போது தோழர் நாபா மறுத்து விட்டார் என்பது கவனிக்கத்தக்கது. ஈ.பி.ஆர்.எல்.எப். அமைத்துள்ள கூட்டரசின் செயற்பாட்டிற்கு எவ்வித தடங்கலும் ஏற்படுத்தாத வகையில், தாம் கட்சி கட்டும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இம்முடிவினை தோழர்; நாபா முழுமனதுடன் எடுத்து அந்தரங்க சுத்தியுடன் செயற்படுத்தினார்.

சிறிலங்கா அரசோடும், பாதுகாப்புப் படைகளோடும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, எல்.டி.டி.ஈ ஆனது ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையிலான அரசையும், அதிகாரப் பரவலாக்க நிகழ்வுப் போக்கையும் சீர்குலைத்தபோது கூட தனது இம்முடிவை தோழர் நாபா மாற்றிக் கொள்ளவில்லை.

இடைக்காலத் தீர்வு என்ற வகையில் வந்து போகிற அம்சமாகவே, 13வது சட்டத்திருத்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண அரசு என்ற ஏற்பாட்டை தோழர் நாபா புரிந்திருந்தார். எனவேதான் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். சிறிலங்கா அரசு, மற்றும் ஆளுங்கட்சியின் தன்மை, மற்றும் சிங்கள இனவெறிச் சக்திகளின் பலம் பற்றிய அவரது தெளிவான புரிந்துணர்வே இதற்குக் காரணமாகும். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுவது என்பது தவிர்க்க முடியாதபடி இலங்கை முழுமைக்குமான அடிப்படையான சமுதாயமாற்றத்துக்கான அவசியத்தடன் இணைந்துள்ளது என்பதில் தெளிந்த கருத்துக் கொண்டிருந்தார்.

அதேசமயம், கட்சியானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கும், தேவைப்பட்டால் அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்ளவும் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தோழர் நாபாவுக்குள் இருந்த தனிமனிதனை நாம் காணாது விடுவோமானால், அவருக்கு நாம் சூட்டும் புகழாரம் முழுமை பெற்றதாக இருக்க முடியாது.

அவர் சிறந்த மனிதப் பண்புகள் நிறைந்த மனிதர். சோஷலிசத்தின் சகல சிறப்பியல்புகளையும் தன் இயல்விலேயே கொண்டு விளங்கினார். எப்போதும் தன்னை அறியும் சுய சோதனையில் ஈடுபடுவார். தனது பரந்துபட்ட அரசியல் சமுதாய கடமைகளிலிருந்து பிறழாமலே அவரது சுயதேட்டம் அமைந்திருக்கும். வறுமை, வளமை இரண்டுமே அவரில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடிந்ததில்லை. எப்போதும் நிலை மாறாமல் ஒரே சீராகத் திகழ்ந்த சீர்மை நிறைந்தவர்.

அவரைப் பொறுத்தவரை வறுமை, வளமை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் மற்றவர் மகிழ்வோடும், திருப்தியோடும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதுதான் அவருக்கு அளவிலா மகிழ்ச்சி தரும். அதே போல மற்றவர்கள் துன்பப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டார்.

-பிறர் மகிழ மகிழும், துன்புறத் துன்புறும் பண்பாளர்-

அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சி ஊழியருக்கும் தனிப்பட்ட பாத்திரம் உண்டு என்று கருதினார். கட்சிக்காகவும், போராட்ட இயக்கத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாராயினும், தனது குடும்பத்தாரிடமிருந்து அவர் தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பாசமும், பரிவும் அரப்பணிப்புணர்வும் நிறைந்த மகனாக, சகோதரனாக, கணவனாக விளங்கினார். தன்னை சரியான வகையில் புரிந்துகொண்ட தாய், சகோதரியர் மற்றும் அன்பு நிறைந்த மனைவியையும் பெற்றிருந்தார் என்ற வகையில் அவர் அதிர்ஷ்டக்காரர் எனலாம். தோழர் பத்மநாபாவின் மறைவினால் ஏற்பட்டள்ள இழப்பு, மக்களுக்கும், கட்சிக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் அவரோடு தொடர்பு கொண்டிருந்த சகலருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

மாற்றீடு செய்ய முடியாத மாபெரும் இழப்புத்தான் அவரது மரணமென்ற போதிலும், நாம் கலங்கத் தேவையில்லை. ஏனெனில் அவரது மரணத்தில் நமக்கு திடஉறுதியையும், முடிவையும் கொடுத்துள்ளார். இனி இதனை அசைக்க எவராலும் முடியாது.

மரணத்தை வென்ற மனிதநேயம் பத்மநாபா நினைவு மலரிலிருந்து. நன்றி - எஸ். விமல்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com